நிஹாரி-14

IMG-20211003-WA0016-e92031e0

நிஹாரி-14
சக்கரவர்த்தி அமைதியாய் அமர்ந்திருந்தார்.

நேற்று, பேத்தி விரைவில் திருமணம் என்று பத்திரிகையாளர்களிடம் பேட்டி அளிக்க, அவருக்கு கோபமோ எதுவோ எழவில்லை.

மாறாக, ரிஷ்வந்த் தன்னிடம் அன்று கண்களாலேயே உணர்த்திய செய்தியை சாதித்துவிட்டான். அதுவும் பேத்தியின் வாயிலாகவே என்று நினைத்து அவரின் மனம் அவனை மெச்சித் தீர்த்தது. அவரின் பங்காரத்திற்கு திருமணம் என்றதும் அவருக்கு பத்து வயது குறைந்தது போலக் குஷியாகியது. உடலில் வயதின் முதிர்வால் புதிய விருந்தினராய் வந்து இருக்கும், சிறு வலிகள் கூட பறந்தது போல இருந்தது.

நடிப்பில் புகழ்பெற்று முடி சூடா மன்னனாக வாழ்ந்து, இன்று பேத்தியின் திருமணத்தில் வந்து அவர் வாழ்க்கை நிற்பது, ஏதோ பிறந்ததின் பலனை அடைந்ததைப் போன்ற உணர்வை அவருக்குக் கொடுக்க, அவரின் முகத்தில் சாதித்த திருப்தி.

தன் வாரிசுடைய வாரிசின் திருமணத்தைப் பார்க்கும் பாக்கியத்தை எண்ணிக் கொண்டவர், தன் அறையில் உள்ள மனைவியின் ஆளுயர படத்தின் முன் சென்று நின்றார்.

‘நீ இருந்திருக்கலாம்டி. நீ இருந்திருந்தா கண்டிப்பா பங்காரமுக்கு எல்லாம் புரிய வச்சிருப்ப. ஒரு தாத்தாவா என்னால பங்காரம் கிட்ட எல்லாத்தையும் சொல்லவும் முடியல. யாரையும் அந்த விஷயத்துல பக்கதுல நெருங்கவே விட மாட்டிது’
‘இந்தக் கல்யாணத்துனால ஏதோ மனசுக்குள்ள, எல்லாம் சரி ஆகும்னு தோணுது. பழைய மாதிரி மறுபடியும் இந்த வீடு மாறும். ஆனா, நீ இல்லாம தான், என்னால இன்னும் தாங்கிக்கவே முடியல. தினமும் காலைல சாப்பிட உட்காரும்போது என் பக்கத்துல வந்து, நீ பரிமாற மாட்டியான்னு இருக்கு. வயிறு நிறைய சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சுடி’ அவர் மனதுக்குள் பேச, அவரின் மனைவியோ ஜன்னலின் வழியே தென்றலாய் மூச்சுக் காற்றாய் வந்து அவரைத் தீண்டினார்.

‘மனைவியின் மூச்சுக் காற்றில்                                                                                              அவரின் முதுமை தெரிந்துகொண்டது
காதல் எப்போதும்                                                                                                                  சுவாரஸ்யம் குறையாதது என்று!’
முகத்தில் மோதிய தென்றலை உணர்ந்து மெய் சிலிர்த்தவர், மனைவியின் புகைப் படத்தைப் பார்த்துவிட்டு, “ஆனா, இன்னிக்கு நம்ம பங்காரம்னால மனசு நிறைஞ்சிடுச்சு” என்று வாய்விட்டே சொன்னவர் முகம் முழுதும் மகிழ்ச்சியை எடுத்து பூசிக் கொண்டு அறையைவிட்டு வெளியே வந்தார்.

அவரின் முகம் ஏதோ புது மாப்பிள்ளையைப் போல ஆவலைத் தத்தெடுத்து இருந்தது. ரிஷ்வந்தைத் தவிர நிஹாரிகாவை யாராலும் புரிந்துகொள்ள முடியாது என்று அசைக்க முடியாத கடலளவு நம்பிக்கை வந்தது அவருக்கு.

அந்தநேரம் சரியாக நிஹாரிகா வீடு வந்து சேர, சக்கரவர்த்தி புன்னகையுடன் பேத்தியைப் எதிர்நோக்க, “அவன் கூட சேர்ந்து கூட்டுக் களவாணி வேலை பண்றீங்கன்னு எனக்குத் தெரியும் தாத்தையா”

“இல்லைனா அன்னிக்கு அவார்ட் பங்ஷன்ல அப்படி எல்லாரு முன்னாடியும் அவனை ஹக் பண்ணியிருக்க மாட்டிங்க. அன்னிக்கே டவுட் ஆச்சு..” என்று அவனின் மேலிருந்த கோபத்தை, தாத்தாவின் மேல் சிறிது காட்டியவள், படியில் தன் அறையை நோக்கி ஏற, அவளின் கால்கள் சக்கரவர்த்தியின் வாக்கியத்தில் நின்றது.

“என் பேத்தியோட செலக்ஷன் நல்லாதான் இருக்கு” என்று அவர் டிவியில் கண்களைப் பதித்தபடிச் சொல்ல, திரும்பிப் பார்த்தவளின் கண்களில், தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருந்த அவளின் பேட்டி தெரிந்தது.

அதில் அவள் பத்திரிகையாளர்களிடம் பேசிக் கொண்டிருக்க, ரிஷ்வந்த் அவளின் பின்னால் காரவனின் படியில் நின்றுகொண்டு, இதழில் புன்னகையை நெளியவிட்டு, அவளையும் பத்திரிகையாளர்களையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தான். அவனின் விழிகளில் எதையோ சாதித்த திருப்தி! பெருமிதம்!

“ஜோடிப் பொருத்தம் கூட சூப்பர் பங்காரம்” பேத்தி நின்றிருப்பதை உணர்ந்து, அவளிடம் திரும்பி சக்கரவர்த்தி சொல்ல, பேத்தியின் பார்வையில் மனதுக்குள் சிரித்தபடி தன் அறைக்குள் புகுந்து கொண்டார் அவர்.

“அவன் கூட சேர்ந்துட்டு இவரும் நம்மள சீண்டராரு. ச்ச..” என்று பல்லைக் கடித்தவள் அறைக்குள் புகுந்துகொள்ள கீழே சக்கரவர்த்தியின் அலைபேசி அடித்தது.

அலைபேசியை எடுக்கும் முன்னே, அவருக்கு யாரென்று தெரிந்தது.

ஃபோனை எடுத்துக் காதிற்கு கொடுத்தவர், “சொல்லுங்க, மாப்பிள்ளை” என்றார்.

“என்ன சொல்ல? இங்க உங்க பொண்ணு பண்ற டார்ச்சர்ல நான் ஒப்பாரி வைக்காதது தான் பாக்கி” என்றார் மகாதேவன் சிரிப்புடன்.

அவரின் குரலில் சிறிது கூட பதட்டமோ, கோபமோ இல்லை. வழக்கம் போல இருக்கும் கலகலப்பும், புத்துணர்ச்சியும் தான் இருந்தது. சொல்லப்போனால் வழக்கமாக இருப்பதை விடத் ததும்பிக் கொண்டிருந்தது.

“நியூஸ் பாத்தீங்களா?” சக்கரவர்த்தி மெதுவாய விஷயத்திற்கு வர,

“பார்த்தேன் மாமா” என்றார்.

“ரிஷ்வந்த் நல்ல பையன் தான்..” எதையோ புரிய வைத்துவிடும் விதமாக சக்கரவர்த்தி பேசினார்.

‘என்னதான் நிஹாரிகவை வளர்த்தவர் என்றாலும், அவளின் மேல் முழு உரிமை பெற்றவர்களுக்கு அல்லவா இருக்கிறது’ என்பது அவர் மனதில் எழுந்தது.

“நம்ம வீட்டுல தங்கி இருக்கிறதா நீங்க அன்னிக்கு சொன்னபோதே நான் விசாரிச்சுட்டேன் மாமா. எல்லாத்தையும். அதாவது ஸ்கூல் டைம்ல இருந்தேன்னு தான் காதுக்கு வந்துச்சு” என்று குரலைத் தாழ்த்தி சொன்னவர்,

“ரிஷ்வந்த் பத்தியும் விசாரிச்சேன். நல்ல பையன் தான். இதுவரைக்கும் நம்ம சினி இன்டஸ்ட்ரீஸ்லையும் சரி, பர்சனல் லைஃப்லயும் சரி எந்த ப்ளாக் மார்க்கும் இல்லை” என்றார். அவரின் மன நிறைவு அவரின் குரலிலும் வெளிப்பட்டது.

மருமகனைப் பற்றி, அவர் அலசி ஆராய்ந்து அறிந்துகொண்ட சான்றிதழ் அவரை மகள் விஷயத்தில் அவ்வாறு தைரியமாகவும், தெளிவாகவும் பேச வைத்தது.

“நிஹாரிகா மேல கோபம் இல்லியே உங்களுக்கு?” சக்கரவர்த்தி மீண்டும் பேத்தியை தவறாக நினைத்துவிடக் கூடாதே என்று கேட்டார்.

அனைவரின் சூழ்நிலையிலும் இருந்து யோசித்தவர், அங்கு இங்கு என்று அல்லாடிக் கொண்டிருந்தார் பாவம்.

“எதுக்கு மாமா கோவப்படனும். அவ என் பொண்ணு. எந்தத் தப்பான முடிவையும் எடுக்க மாட்டானு எனக்கு நம்பிக்கை இருக்கு” என்றவர்,

“ஏன் மாமா டிவிலையே ஜோடிப் பொருத்தம் சூப்பரா இருக்குல்ல?” என்று வினவ, மகாதேவனின் கைகளில் இருந்த அலைபேசியை பறித்தார் விவாஹா.

“நானா! என்ன நானா இது?” என்று விழிகள் கலங்கி, எப்போது வேண்டுமானாலும் வழியத் தயாராய் இருக்கும் குளமாய் கண்ணீர் நிற்க, தவிப்போடு கேட்டார் விவாஹா.

“என்னடா?” சக்கரவர்த்தி சாதாரணமாக வினவ,

“என்னவா? என்ன நானா நீங்க. இவரு மாதிரியே பேசறீங்க?” அருகில் இருந்த கணவனை முறைத்தபடி பேசிய விவாஹா,

“நானா அவ சின்னப் பொண்ணு” என்றார் நடுங்கிய விரல்களை கட்டுப்படுத்தியபடி.

“நா பங்காரம் சின்ன அம்மாயி காது(என் தங்கம் சின்னப் பொண்ணு இல்ல).. அவளுக்கு 25 ஆச்சுடா. எப்படியும் கல்யாணம் பண்ணி வைக்கத் தானே போறோம். அது பங்காரம் லவ் பண்ண பையனுக்கே தந்திடலாம்” என்றார் சக்கரவர்த்தி முடிவாக.

“அந்தப் பையன் எப்படி? அவளை நல்லா பாத்துப்பானா? இரண்டு பேரும் ஸ்கூல்ல இருந்தே பழக்கம்னு இவரு சொல்றாரு. அப்புறம் எப்படி பிரிஞ்சாங்க. ஏதோ சண்டையா தானே இருந்திருக்கும் நானா? அந்தப் பையன் மறுபடியும் அதை வச்சு அவளை ஏதாவது சொன்னா?”

தாய்க்குரிய பயத்திலும், தவிப்பிலும் திக்கித் திக்கி பேசிய விவாஹா இறுதியில் அழுதேவிட்டார்.

தன் மகளுக்கு ஏதாவது என்றால் அவர் உயிரையே விட்டுவிடுவார்.

“டேய், குட்டி..” தந்தை அழைக்க, அலைபேசியை காதில் வைத்தபடியே அருகிலிருந்த கணவரை கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தார் விவாஹா.
மகளின் திருமணத்தை, மூன்றாவது மனுஷியைப் போல் தொலைக் காட்சியில் பார்த்து தெரிந்து கொள்ளும் நிலையில் இருந்ததை உணர்ந்தவர், மேலும் கணவரின் மார்பில் புதைந்து அழ, விவாஹாவின் தலையை தட்டிக் கொடுத்த மகாதேவனுக்கு மனைவியின் மனம் புரியாமல் இல்லை.

மனைவியின் கையில் இருந்த அலைபேசியை வாங்கியவர், “மாமா, நான் கூப்பிடறேன்” என்று அலைபேசியை வைத்துவிட்டு,

“விவாஹா, லுக் அட் மீ” என்று அவரின் இரு கன்னங்களையும் கையில் தாங்க, விழிகளை தரையை நோக்கி தாழ்த்தி அழுது கொண்டு இந்தவரோ, விழிகளை கணவரை நோக்கி நிமிர்த்தினார்.

கன்னத்தை தாங்கி இருந்தவர், மனைவியின் அழகிய விழியில் இருந்து கண்ணீர் பெருகி வழிவதை பொறுக்காமல் தன் பெரு விரல்களால் துடைத்துவிட்டவர்,

“இவ்வளவு கஷ்டம் எதுக்குடா. நிஹாரிகா கிட்ட உண்மையை சொல்லிடலாம்” மகாதேவன் எடுத்துச் சொல்ல, அவரின் செவியில் அது ஏறவில்லை.

“வேண்டாம். வேண்டவே வேண்டாம் தேவ். அவளுக்கு தெரிஞ்சா ரொம்ப கஷ்டப்படுவா. அவனால அத தாங்கிக்கவே முடியாது. ப்ளீஸ், அவளுக்கு அது தெரியவே வேண்டாம்” என்று தன் கன்னத்தைப் பற்றியிருந்த கணவனின் கைகளைப் பிடித்தபடி விவாஹா கதற,

மனைவியின் தோளை அணைத்து ஆறுதல் படுத்தியவர், “இங்க பாருடா. நிஹி வாழ்க்கையை நினைச்சு நீ கவலையே படாத. அப்படி ரிஷ்வந்த் தப்பான பையனா இருந்திருந்தா, அவங்க இரண்டு பேரும் பிரிஞ்சப்ப அவ சும்மா விட்டிருக்க மாட்டா”

“அவங்களுக்கு உள்ளது மிஸ் அன்டர் ஸ்டான்டிங் தான். நானும் நல்லா விசாரிச்சுட்டு தான் சொல்றேன். அப்படி தப்பான பையனா இருந்திருந்தா, உங்க அப்பா கண்ணுல என் கண்ணுல மாட்டாம போயிருக்குமா” அவர் சிறுபிள்ளைக்கு சொல்வது போலச் சொல்ல தலையை ஆட்டியவர்,

“நாளைக்கு அப்பா வீட்டுக்குப் போகலாமா?” கண்களை துடைத்தபடி விவாஹா ஆர்வத்துடன் வினவ,

“நம்ம பொண்ணை பார்க்க அவ்வளவு ஆசையா?” விலகி அமர்ந்த மனைவியை மீண்டும் நெஞ்சில் சாய்த்தபடி அவர் வினவ,

“மகளை இல்ல.. மருமகனை” விவாஹா சிரித்தபடிச் சொன்னார்.
மகாதேவன் அத்தனை சொல்லியும், தாயின் மனம் சாந்தம் அடைய மறுத்தது. நேரில் ரிஷ்வந்த் ஒரு முறை பார்த்துவிட எண்ணியது அவர் மனம்.

“ஏற்கனவே அவரு பாடு நம்ம பொண்ணுக்கிட்ட சிக்கிட்டு முழிக்குது. இதுல மருமகனும், மாமியாரும் பேசி, அது மட்டும் நிஹி கண்ணுல பட்டுச்சு. தி ரியல் வார்(war) தான்” என்று கேலி பேசிச் சிரிக்க, கணவனை பொய்யாய் முறைத்தர், அன்றிரவு மருமகனை காணப்போகும் ஆவலில் கண்களை மூடினார்.

***

அடுத்த நாள் காலை மகாதேவனும், விவாஹாவும் தந்தையின் வீட்டிற்குச் செல்ல, வரவேற்பறையில் தந்தையுடன் அமர்ந்திருந்த ரிஷ்வந்தைத் தான் முதலில் விவாஹா கண்டது.

மாநிறத்துக்கும் வெளீர் நிறத்துக்கும் இடையில், பேசும்போது ஆணின் இலட்சணமாக கேசம் அசைந்தாட, நெடுநெடுவென்று ஆறடி உயரத்தில், சினிமாவில் நுழைந்ததின் தாக்கத்தால் பராமரிப்பில் சிறிது சிவந்திருந்த உதட்டில் புன்னகையை தவழவிட்டபடி, கம்பீரமாக தந்தையுடன் பேசிக்கொண்டிருந்த ரிஷ்வந்தை, மனதில் மகளுடன் நிற்க வைத்துப் பார்த்த விவாஹாவிற்கு மனம் பாதி நிறைந்தது.

இவர்கள் உள்ளே நுழைய, அவர்களைப் பார்த்த சக்கரவர்த்தி வரவேற்க, வருங்கால மாமனார் மாமியாரைப் பார்த்த ரிஷ்வந்த், அவர்கள் இருவரும் ஜோடியாக தன்னருகே நிற்க, அவர்களின் பாதத்தைத் தொட்டான்.

மருமகனின் செயலில் பாதி நிறைந்திருந்த மனம், முழுதும் நிறைய, இருவரும் அவனை ஆசிர்வதிக்க எழுந்தவனின் பார்வை இருவரின் அன்னியோன்யத்தையும், ஜோடியையும் கண்டு மனதுக்குள் சிலிர்த்தவனுக்குத் தெரியும் அவன் ஆசி வாங்க காலில் விழவில்லை.

தான் செய்த தவறின் விளைவால், நிஹாரிகாவின் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்கவே அவர்களின் பாதங்களைத் தொட்டது என்று.

ஆறடி ஆண் மகனாய், தமிழ்நாடே உச்சரிக்கும் உயரத்தில் இன்று அவன் இருந்தாலும், அன்று அவன் செய்த தவறுக்காகவே அவன் இதைச் செய்தது.
சக்கரவர்த்தி அன்று உண்மைகளை கூறிய பின், அவன் மனம் கரையானுக்கு இறை ஆனது போல் அரித்துக் கொண்டே இருந்தது.

அவன் வாய்விட்டுக் கேட்கவில்லை என்றாலும், கடவுளுக்குத் தெரியும் அவனின் செயல் எதற்காக என்று.

அவர்கள் அனைவரும் அமர்ந்து பொதுவாகப் பேசிக் கொண்டிருந்த போதுதான் நிஹாரிகா வந்தது.

அவள் வந்ததில் அனைவரும் அமைதியாகி விட, தாத்தாவின் அருகில் வந்து அமர்ந்தவள், “என்ன தாத்தையா? என்ன விஷயம்? எதுக்காக வந்திருக்காங்க?” ஏளனமாக அவளுக்கும் அவர்களுக்கும் சம்மந்தம் இல்லை என்பதுபோல நிஹாரிகா பேச, அவர்களோ இதற்குப் பழகி இருக்க,

ரிஷ்வந்திற்கு நிஹாரிகாவின் செயலிலும், பேச்சிலும் எரிச்சல் வந்தது. அவளின் செயல் அவமதிப்பது போன்றது தானே. அதுவும் பெற்றோரை, என்னதான் தான் அவளின் வருங்காலக் கணவனாக இருந்தாலும், அவளின் பேச்சு அவனுக்குப் சுத்தமாகப் பிடிக்கவில்லை.

சக்கரவர்த்தியும் அமைதியாக அமர்ந்திருக்க, ‘இவளுக்கு போய் பாவம்னு பதில் பேசாம உக்காந்திருக்காரு பாரு’ என்றவன் ஒரு முடிவை எடுத்தவனாக,

“இனிமேல்.. ஐ மீன்.. இப்ப இருந்து இவங்க இங்க தான் இருக்கப் போறாங்க” என்று ஹாமில்டன் ஷோபாவில் நன்றாக சாய்ந்து அமர்ந்து தகவல் போல ரிஷ்வந்த் அவளிடம் சொல்ல,

நிஹாரிகா தாத்தாவைப் பார்க்க அவரோ, ‘ஆமாம்’ என்று தலை அசைத்தார்.
அவன் சொன்னதில் சக்கரவர்த்தி, மகாதேவன், விவாஹா மூவருமே அதிர்ந்தாலும், ரிஷ்வந்த் முகத்தில் எதையும் காட்டாமல் புன்னகையை மட்டும் உதிர்த்து அதே சமயம், இதற்கு மேல், ‘நீ பேசக்கூடாது’ என்று முடித்த தொணியில் அனைவரும் அவனைத்தான் கண் இமைக்காமல் பார்த்திருந்தனர்.
ஆனால், யாருக்கும் அடங்கமாட்டாளே நம் கதாநாயகி!

அப்படி அடங்கினால், அதுவும் ரிஷ்வந்தின் பேச்சை எதிர்த்து அவள் பேசாவிட்டால், இமைய மலையே இன்னும் அதிர்ச்சியில் உறைந்து விடுமே!

“இது என் வீடு” என்றாள் அவனை நேராய்ப் பார்த்து.

அவளின் பதிலை அசட்டை செய்தவன், “அத்தகாரு, நீங்க இங்க வரும்போது மாமாவை என்னன்னு கூட்டிட்டு வந்தீங்க” அவன் மாமியாரை நோக்கிக் கேள்வியை எரிய, அவருக்கோ அவனின் கேள்வி புரியவில்லை.

“சொல்லுங்க மாமாவை என்ன சொல்லி அழச்சிட்டு வந்தீங்க” அவன் மீண்டும் கேட்க,

“எங்க அப்பா வீட்டுக்கு போகலாம்னு..” விவாஹா சொல்ல, தலையைத் திருப்பி நிஹாரிகாவைப் பார்த்தான் அவன்.

அத்தனை நக்கல் தொக்கி நின்றது அவனின் பார்வையில்!

அதாவது, ‘உன் அன்னைக்கு இது அவரின் தந்தை வீடு என்றால், உனக்கு இது உன் தாத்தாவின் வீடு’ என்று சொல்லாமல் சொல்லி இருந்தான். உனக்கு எந்தளவு உரிமை இருக்கிறதோ, அதைவிட ஒரு படி அதிக உரிமையே அவருக்கு இருக்கு என்பதும் அதில் அடங்கி இருந்தது.

அதற்குள் இன்னொரு மறை பொருளும் இருந்தது. ‘இனி உன்னுடைய வீடு என்பது என்னுடைய வீடு’ என்பது. அதை யாரும் அறியவில்லை.

நிஹாரிகாவைத் தாண்டி அமர்ந்திருந்த சக்கரவர்த்தியை ரிஷ்வந்த் சிறிது தலை சாய்த்து எட்டிப் பார்க்க, அவரோ பேத்திக்கும் பேரனுக்கும் நடுவே மாட்டிக்கொண்டு, யார் பக்கம் நிற்பது என்று தெரியாமல் விழித்தபடி இருந்தார்.
நிஹாரிகா அதன் பிறகு எதுவும் பேசாமல் அமர்ந்து கொள்ள, அவளின் கையை அழுத்திக் கொடுத்தார் சக்கரவர்த்தி. எங்கே பேத்தி தனக்கு இங்கே உரிமை இல்லை என்று நினைத்துவிட்டு மனதை வருத்திக் கொள்வாளோ என்ற பயம் அவருக்கு.

அவரின் பார்வையில் இருந்த அர்த்தத்தைப் புரிந்து கொண்டவள், அவரின் கையைத் தட்டிக் கொடுத்தாள்.

‘அய்யோ, இப்படி ஆளாளுக்கு தட்டிக் கொடுத்தே கதையை போர் அடிக்க வச்சிடுவாங்க போலேயே.. இவள எப்ப கல்யாணம் பண்ணி..’ என்று பெருமூச்சு விட்டவன், அடுத்த கட்ட பேச்சிற்குத் தயாரானான்.

‘ஆக்கப் பொறுத்தவனுக்கு, ஆறப் பொறுக்கவில்லை’ என்று விதி தலையில் அடித்துக் கொண்டது.

அன்று காலை விமானத்தில் கிளம்பிய ரிஷ்வந்தின் பெற்றோர் அங்கு பத்தரை மணி அளவில் வந்து சேர, சுடச்சுட தினையரிசி பாயசம் செய்ய ஆரம்பித்தார் சந்திராமா.

அவருக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு, விவாஹா இங்கேயே தங்கப் போவதாக காதுக்கு வந்த செய்தியில் கை கால்கள் பரபரத்தது. இந்த வீட்டில் அன்னை தந்தையுடன் நிஹாரிகாவை விட, ஒரு காலத்தில் ராணியாக வலம் வந்தவர் ஆயிற்றே விவாஹா.

இங்கு அவர் அவ்வப்போது வருவதும், சின்ன ராணி கண்டு கொள்ளாமல் செல்வதும், அதை ஏற்று விவாஹா வலியுடன் கூடிய புன்னகையோடு, வெளியே செல்வதை எத்தனை நாள் கண்டு மனதுக்குள் இவரும் வேதனைக் கொண்டிருப்பார்.

அப்படி இருக்க, கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கழித்து அவரை இந்த சமையில் அறையில், சின்னப்பெண் போல் இங்கு இருக்கப் போகும் மகிழ்ச்சியில், சுறுசுறுப்புடன் தன்னுடன் இணைந்து, அதை இதை என்று செய்து கொண்டிருப்பதில் அவர் மனமும் நிறைந்தது.

அரை கோப்பைத் தினையை கழுவிய சந்திராமா, கட்டியாய் இருந்த சுத்தமான பசு நெய்யை உருக்க, சமையல் அறையே நெய் மணத்தில் கமகமத்தது.

உருக்கிய நெய்யை வறுத்து 1:2 என்ற விகிதத்தில் நீர் சேர்த்து, குக்கரில் வேக வைத்தவர், வெந்ததும், நாவில் சுவை அரும்பில் பட்டவுடன் கரையும் வெல்லத்தையும் சேர்த்து கொதிக்க வைக்க, அதன் மணம் நிஹாரிகாவை, ‘வா’, ‘வா’ என்று அழைத்தாலும், அன்னை உள்ளே இருப்பதால் வீம்பின் காரணமாக அவள் அங்கே எட்டிக்கூடப் பார்க்கவில்லை.

பால் விட்டு இறக்கிய சந்திராமா இறுதியா மணமணக்கும் ஏலத்தூளை அதில் சேர்த்து, நெய்யில் வறுத்து சிவந்திருந்த முந்திரி, திராட்சைகளை கொட்ட, ‘அடடடாஆஆஆ’ என்றிருந்தது அதைப் பார்த்துக் கொண்டிருந்த விவாஹாவிற்கு.

அழகிய குட்டிக் குட்டி வெள்ளிக் கின்னங்களில் பாயாசத்தை ஊற்றியவர், அதற்கு அழகிய ஸ்பூன்களை இட்டு விவாஹாவிடம், “நீங்க போய் பாப்பாவை அனுப்புங்க மா” என்றிட,

வெளியே வந்த விவாஹா தந்தையின் காதைக் கடிக்க, அவரோ நிஹாரிகாவை உள்ளே செல்லச் சொல்ல, அத்தனை நேரம் அவளுடன் பேசிக் கொண்டிருந்த கயல்விழிக்கு அவர்களின் செயல் விசித்திரமாய் பட்டது.

எழுந்து சென்ற மருமகளை யோசனையாய் பார்த்தவர், அடுத்து எதிரில் இருந்த மகனைப் பார்க்க, அவனின் பார்வையை உணர்ந்தவர் எதுவும் கேட்கவில்லை.

தன் அருகில் இயல்பாய் அமர்ந்த விவாஹைப் பார்த்தவர் புன்னகைக்க, விவாஹாவும் அவருடன் கலந்து உரையாட, கயல்விழிக்கு வரும்போது நிஹாரிகாவின் குடும்பத்தைப் பற்றி இருந்த தயக்கம் நீங்கியது.

கனகராஜும் மகாதேவனுடன் இயல்பாக பேசிக் கொண்டிருக்க, ரிஷ்வந்த் பெருமூச்சு ஒன்றை விட்டான்.

அவனுக்கு, ‘ஹப்பப்பாஆஆ’ என்றிருந்தது. அத்தனை எளிதில்லையே அனைவரையும் காதல் திருமணத்தில் ஒன்று சேர்ப்பது.

அதுவும் தன் கதாநாயகியே தனக்கு வில்லியாக இருக்கும்போது!

ரிஷ்வந்தின் முகத்தில் தெரிந்த உணர்வுகளைக் கண்ட சக்கரவர்த்தி அவனின்

கரத்தைத் தட்டிக் கொடுத்து, ‘இதுக்கேவா.. இன்னும் கல்யாணம் ஆகி.. குழந்தை எடுத்து.. அதுக்குக் கல்யாணம்’ என்று அவர் சொல்லச் சொல்ல,

‘ம்கூம், பண்ணுன வேலைக்கும் பேசிய பேச்சுக்கும் பக்கத்துல விடுவாளான்னே தெரியல. இதுல இவரு வேற’ என்று தன்னவளைப் பற்றி அறிந்தவனாய், அவன் தாத்தாவைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிடு போட, அவரோ அவனின் தோளைத் தட்டிச் சிரித்தார்.

அந்தநேரம் சமையல் அறையில் இருந்து, காலை நேரத்தில் சூரியன் உதிக்கும் நிறத்தில் ஆரஞ்சு வண்ண பட்டுப் புடவையில், கழுத்தில் மயில் டிசைன் வைத்த தங்க ஆரமும், அதே டிசைனில் தோடும், கை நிறைய தங்க வளையல்களையும் அணிந்து, கூந்தலை தளரப் பிண்ணி அதில் சந்திராமா கொடுத்த பூவைச் சூடிக்கொண்டு, புயலாய் இருந்தவள் பூந்தென்றல் அவதாரத்தில்,

வெள்ளித் தட்டில் பாயாசத்தை எடுத்து வந்து அனைவருக்கும் (பெற்றொருக்கும். மாமானார் மாமியார் இருப்பதால்) தர, அவளின் பேரழகு அங்கிருந்த அனைவரின் விழிகளிலும் அழகாய் ஒட்டிக் கொண்டது.

இறுதியாக ரிஷ்வந்திடம் அவள் தட்டை நீட்ட, அவனின் விழிகளோ தடம் மாறிக் கொண்டிருந்தது.

தினமும் சிங்கள் ப்ளீட்ஸில் இருப்பவள், இன்று ஆறு ப்ளீட்ஸை எடுத்துக் கட்டியிருக்க, பிரம்மன் பார்த்துப் பார்த்து செதுக்கிய அவள் வெண்ணிற இடை, பளபளப்பாக மின்னி, அமர்ந்திருந்தவன் கண்ணுக்கு நேராகத் தெரிந்து அவனை சித்தம் தடுமாறச் செய்தது.

பாயாசக் கின்னத்தை எடுக்கச் சென்றவனின் கைகள், இடைக்கு அவனையறியாமல் போக, அவனின் பார்வை செல்லும் இடத்தை ஏற்கனவே கண்டிருந்த அவனின் ஜிலேபி, யாரும் அறியாமல் அவனின் ஒரு காலை நிலுத்துக்குள் புதைந்து செல்லும் அளவிற்கு மிதிக்க, அவனின் முரட்டுக் காலக்ளுக்கோ அது எரும்பு கடிப்பதைப் போல் அல்லவா இருக்கும்.

நிமிர்ந்து அவளின் விழிகளைப் பார்த்தவன், மீண்டும் அவளின் இடையைக் கண்களால் மேய்ந்துவிட்டு, “சூப்பர்!” என்று வாய்விட்டே மெச்ச, நிஹாரிகா அனைவரின் முன்னால் நடந்த தாக்குதலில் விதிர்விதிர்த்துப் போனாள்.

பதட்டத்தில் அவன் அருகில் அமர்ந்திருந்த சக்கரவர்த்தியை நிஹாரிகா பார்க்க, அவரோ பாயாசத்தில் இருந்து கண்களை எடுக்காமல் தலையை கவிழ்த்து வைத்திருந்தார், அருகில் நடக்கும் எதையும் பார்க்கா வண்ணம்.

அவள் இடது பக்கம் திரும்ப, சிறிது தள்ளி அமர்ந்திருந்த மகாதேவனும், கனகராஜும் அதே நிலையே!

‘ஏடுகுண்டாலவாடா’ மனதுக்குள் கத்தியவள் அவனை முறைக்க, அவனோ பாயாசத்தை எடுத்துவிட்டு வசீகரப் புன்னகையுடன் அமர்ந்துவிட, மாமியாரின் இடது புறம் சென்று அமர்ந்து கொண்டாள் நிஹாரிகா.

அடுத்து என்ன என்பதை இரு குடும்பமும் ஆலோசிக்க அமர்ந்து, கல்யாண வேலைகளை பார்க்கத் தொடங்கினர்.

இங்கு அவர்களின் திருமண செய்தியை அறிந்த ஒரு ஜோடிக் கண்களில் அத்தனை ஆக்ரோஷமும், ஆத்திரமும்.

நிஹாரிகாவை அடைய நினைத்து, தோல்வியைத் தழுவியதை அவனின் மனதால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. குரூரத்துடன் காத்திருந்தது வன்மத்தைக் கக்கிக் கொண்டிருந்த விழிகள்!