நிஹாரி-16

IMG-20211003-WA0016-701d23d9

நிஹாரி-16

ஏசி காற்றால் குளுமையும், உயர் ரகத்தில் ஓரமாக வைக்கப்பட்டிருந்த விதவித மலர்களும், சுழ்ந்து, அந்த அறையில் அமைதி நறுமணமாய் நிலவி இருந்தது. அந்த மௌனத்தின் அர்த்தமும், உணர்வும் அறையின் கண்களுக்கு நன்கு புரிந்தது.

கோட்டையில் உள்ள மகாராணியின் அறை அது.

அந்த அறையின் குளியலறைக்குள் இருந்து, தன் கால்களைக் கட்டி, பாதங்களை முத்தமிட்டுக் கொண்டிருந்த தங்கக் கொலுசின் கீர்த்தனைகளோடு, கழற்றியிருந்த புடவை மாராப்பு, பெட்டிக் கோட்டின் மேலே, மேக்கப் ரோப் அணிந்து, புன்னகையோடு வெளியே வந்தாள் நிஹாரிகா.

இருமனங்கள் இணைந்து, உணர்வுகள் சங்கமித்து, சுமுகூர்த்தம் கோலாகளமாய் முடிந்தவுடன், மணமகன் மணமகளை பெரியவர்கள் ஆசிர்வதித்து, அடுத்த வைபவத்திற்காக உடைகளை மாற்ற, அவரவர் அறைக்கு அனுப்பி வைத்திருந்தனர்.

லாவண்டர் நிற மேக்கப் ரோபுடன் முதுகுப் புறம் தங்கத்தில், ‘Bride’ என்ற வார்த்தை பொறிக்கப்பட்டு, மனம் இன்னும் சுமுகூர்த்த வைபவத்தில் இருந்தே வெளியே வராமல், வார்த்தைகளால் வடிக்க முடியாத மனநிலையோடு வந்த நிஹாரிகா, தனது மேக்கப் ஸ்டைலிஸ்டை அழைக்க, உள்ளே வந்தவர் ஒப்பனைகளைச் செய்யத் தயாரானார்.

அவர் தயாராக, நிஹாரிகா டிஷ்யூவால் முகத்தை ஒற்றி எடுத்தபடி அமர்ந்திருக்க, “நிஹாரிகா..” என்றழைத்தபடி உள்ளே வந்தாள் சக்தி.

“ஹே, சக்தி.. இப்பவே சொல்றேன் கல்யாணம் முடிஞ்சு இரண்டு நாள் இருந்துட்டுப் போங்க. பேசவே டைமில்ல பாரு இப்ப எல்லாம். ஸோ, நம்ம கேங் கிட்ட சொல்லிடு. டூ டேஸ் இருந்தே ஆகணும்” நிஹாரிகா கண்டிப்பாய்ச் சொல்லிக் கொண்டு இருக்க தலையை ஆட்டியவள், அவள் முன் ஒரு பெரிய கிப்ட் பெட்டியை நீட்டினாள்.

கிப்டை பார்த்தவள், “இந்த பார்மாலிட்டிஸ் எல்லாம் எதுக்குடி?” என்று கடிய,

“கல்யாணப் பெண்ணே.. இது உன்னோட ஆள் குடுத்துவிட்டது. இப்பவே நீ இதைப் பார்க்கணுமாம்” என்று சக்தி இதழில் நகையோடு சொல்ல, நிஹாரிகாவின் வெண்தந்தக் கரங்கள், தாமாய் முன் வந்து சக்தியின் கைகளில், சிகப்பு நிறத்தில் தங்க ஜரிகைகள் சமச்சீராக சுற்றப்பட்டிருந்த பெட்டியை வாங்கி, அதை விரல்களால் தடவிக் கொடுத்தன.

சக்தி உள்ளே நுழைந்தபோதே நிஹாரிகாவின் அனுமதியோடு உள்ளே நுழைந்த வீடியோ மற்றும் போட்டோ கிராபர்ஸ், நிஹாரிகாவை மட்டும் ஜூம் செய்து போகஸ் (focus) செய்ய, நிஹாரிகாவிடம் சக்தி கிப்டை கொடுத்ததில் இருந்து அவளின் முக பாவணைகளையும், உணர்வுகளையும் கேமிரா உள் வாங்கிக்கொண்டிருந்தது.

பெட்டியைத் திறக்க, தங்க நிறத்தில் பழைய காலத்து தாழ் போன்று இருக்க, தன்னை அறியாமல் நிஹாரிகாவின் கண்கள் கண்ணீர் முத்தோடு பளபளத்து விழவா என்ற நிலையில் நின்றிருந்தது.

பெட்டியைத் திறந்து உள்ளே இருந்ததைக் கண்டவளின், மீதம் புதைந்து இருந்த காதல் வெடித்துச் சிதறி, மனதில் காதல் என்னும் உணர்வு அலையாய்ப் பரவத் துவங்க, அதரங்களில் இதழ் விரிக்காமல் மின்னல் கோடாய் புன்னகை உதிர்த்தவளின், வலது விழியில் ததும்பி இருந்த கண்ணீர் முத்து, கன்னங்களில் வழியத் தொடங்கியது.

அன்று அவன் பிறந்தநாளன்று அவள் களிமண்ணால் தன் கையால் அவனுக்கு செய்து கொடுத்த பரிசு. பிரிந்த அன்று, ‘பரிசைப் போல தன் காதலும் மண்ணாய்ப் போய்விட்டது’ என்று அழுதது நிஹாரிகாவுக்கு நினைவு வர, இன்று ரிஷ்வந்த் அதை அனுப்பிய விதம் ஆயிரம் ஆயிரம் காதல் கவிதைகளை அவளுக்கு எடுத்துச் சொல்லியது.

பெட்டியின் உள்ளே கருப்பு நிறம் ஆக்கிரமிப்பு செய்திருக்க, உள்ளே முழுதும் தங்கக் காகிதங்கள் நிறைந்து, அதன் நடுவே இருவரும் இருக்கும் கண்ணாடியால் மூடப்பட்ட களிமண் சிலை.

அன்று அவள் கொடுத்ததிற்கு மேலாக, அந்தச் சிறய அழகிய உருவங்கள் மணக்கோலத்திற்கு மாற்றப்பட்டிருந்தான் ரிஷ்வந்த்.

ரிஷ்வந்த் பட்டு வேஷ்டி சட்டையில், கையில் மாங்கல்யத்தோடு இருக்க, நிஹாரிகா தங்க நிற புடவையிலும், அந்தக் குட்டி நெற்றியில் அந்த உருவத்திற்கு ஏற்றவாறு, தெலுங்கு திருமண முறைப்படி வைத்திருந்த திலகமும், என்று அத்தனை பாந்தமாய் அத்தனை அழகாய் அவர்களின் காதல் சின்னத்தை அலங்கரித்திருந்தான் நிஹாரிகாவின் காதல் கணவன்.

அதன் அழகிலும், நேர்த்தியிலும், அது எடுத்துரைத்த தன்னவனின் காதலிலும் நிஹாரிகாவின் இமை முடிகள் கண்ணீரால் நனையத் தொடங்க, டிஷ்யூவை எடுத்தவள் நடுங்கும் அதரங்களை மறைத்தபடி வைத்துக் கண்ணீர் உகுத்தாள்.

மேலும், அதற்கு அருகில் இருந்த தங்கமும் மஞ்சள் நிறமும் கலந்த அட்டையை எடுத்தவள், அதைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினாள்.

‘As we step into
our new phase of life,
I want me to be
right by my side.
The good and bad times we’ve had,
the friendship we’ve been
through this journey,
we’ve have made incredible memories
And hidden love.
With the promise to be, ‘TOGETHER FOREVER’
in all responsibilities,
I enter this step with you.
So will you HAPPILY marry me?’

என்ற தன்னவனின் காதல் வரிகள், அவனின் அன்பின் ஆழத்தை பறைசாற்ற, அதை மெய்சிலிர்க்க ஐம்புலன்கள் மறக்க, படித்து முடித்த நிஹாரிகா, தன்னைப் படம் பிடித்துக் கொண்டிருந்த கேமிராவைப் பார்த்து மாதுளையாய் சிவந்த வதனத்தோடு, “யெஸ்” என்று கண்ணீரோடு தலையசைத்தாள்.

டிஷ்யூவினால் முழுதாக முகத்தை ஒற்றி எடுத்தவள் மீண்டும் குளிர்ந்த நீரினால் முகத்தைக் கழுவிக்கொண்டு வர, நடக்கும் அனைத்தையும் சக்தியின் கரத்திலுருந்த அலைபேசியின் மூலம், வீடியோ காலில் பார்த்துக் கொண்டிருந்த ரிஷ்வந்துக்கு,

‘பெண்ணின் அன்பின் அடைய
முதலில் அவளை முழுதாய்
உணர வேண்டும்’

என்று எங்கோ பார்த்த வரிகள், ரிஷ்வந்தின் மனதில் கீறிச்சிட்டு வந்து சொல்லியது.

தன்னவளின் முக மாற்றங்களும், விழிகளில் வழிந்த கண்ணீரும், அதரத்தில் தோன்றிய சிரிப்பும், விரல்களில் மெல்லியதாகத் தோன்றிய நடுக்கமும், அவனுக்கு சொல்லாமல் சொல்லியது இனித் தாங்கள் வாழப்போகும் வாழ்க்கை எளிது என்று. தங்களுக்குள் இருக்கும் பிரச்சனை முழுதாக முடிவுக்கு வரவில்லை என்றாலும், அதை முடிப்பது வெகு எளிதாகவே தோன்றியது ரிஷ்வந்திற்கு.

முகத்தைக் கழுவிவிட்டு வந்த நிஹாரிகா, ஃபோட்டோ கிராபர்ஸை அனுப்பிவிட்டு தனது மேக்கப் ரோபை மாற்ற அவிழ்க்க, ‘அய்யயோஓஓ!’ என்று மனம் அடிக்க, அலைபேசியை சக்தி அணைக்கும் முன் அணைத்துவிட்டான். தலையை அழுந்தக் கோதி சிலுப்பியவன், தன்னுடைய காஞ்சிப்பட்டு வேஷ்டி சட்டையைக் கையில் எடுத்தான்.

அடர் பன்னீர் ரோஜா நிற பட்டு நூலிலும், தங்க நிற பட்டு நூலிலும் பார்த்துப் பார்த்து இந்தியாவின் தலை சிறந்த ஒருவரால் பட்டுப்புடவை நெய்யப்பட்டிருக்க, புடவையின் முந்தானை முழுதும் அடர் பன்னீர் ரோஸில், அதில் ரிஷ்வந்த் நிஹாரிகா இருவரும் இருந்த களிமண் உருங்கள், தங்கத்தை உருக்கி அதில் ஜரிகையாய் நெய்யப்பட்டிருக்க, டாஸ்லிங் டோலி டிசைன் ப்ளவுஸ்(dazzling doli blouse) அணிந்து,

வீரர்கள் பல்லக்கில் ராணியைத் தூக்கி வருவதுபோல தங்கத்தில் ஆன்டிக் நெக்லஸும், அதே டிசைனில் காதில் ஆடும் கம்மல்களும், கரம் நிறைய ஆண்,பெண் கரம் இணைந்தது போல வடிவமைப்பில் வளையல்களும், இடையை இறுக்கி பிடித்திருந்த ஒட்டியாணத்தில், மணமகன் மணமகள் இருவரும் அமர்ந்த நிலையில் உள்ள டிசைனும், கையில் வங்கியும், நெற்றியில் சமத்தாய் அமர்ந்திருந்த நெற்றிச் சுட்டியும் என்று சாமுத்திரிகா லட்சணத்தின் மொத்த உருவமாய், சங்க காலப் பாடல்களின் உவமையாய், தன்னவன் தனக்காக மங்களசூத்ர முறைக்காக எடுத்துத் தந்த அணைத்திலும், அழகின் அபூர்வமாய் தயாராகி நின்றிருந்தாள் நிஹாரிகா.

அடுத்து விவாஹாவுடன் உள்ளே வந்த கயல்விழி, மருமகளின் அழகில் நெட்டி முறிக்க, விவாஹாவின் கண்கள் ஆசையாய் மருகளை வருடியது. விவாஹாவை அல்லவா ரிஷ்வந்த் அனைத்தையும் வாங்கவும், செய்ய ஆர்டர் கொடுக்கவும் அழைத்துச் சென்றது.

இரு பெண்களும் புறப்பட, அடுத்து அர்ஜூன் கொனிடெல்லாவின் மனைவி சுரேகா உள்ளே வர, அவரிடம் சிறு வயதில் இருந்தே அவரின் வீட்டுப் பெண்ணாய் இருந்தவளுக்கு, அவரைப் பார்த்தவுடன் கண்கள் கரித்தது.

வந்தவர் அவள் இன்னும் நெற்றியில் பொட்டு வைக்காததைப் பார்த்துவிட்டு, தெலுங்கு முறைப்படி திருமணத் திலகத்தை வைத்துவிட, உணர்ச்சிகளை இத்தனை வருடங்களாக எளிதில் கட்டுக்குள் வைத்திருந்தவளுக்கு, உணர்ச்சி வசப்பட்டு குழந்தைபோல அழுகை வரப் பார்க்க, சுரேகாவும் அவளைத் தன் வீட்டுப் பெண் போல அல்லவா பார்த்திருந்தார். அவருக்கும் கண்கள் கரித்தது.

அனைத்து ஒப்பனைகளும் முடிய, அவளை ஃபோட்டோ எடுக்க வந்தவர்கள் யாராவது சகோதரன் முறையில் இருப்பவர்களை அழைத்து, ஏதாவது அணிகலன்களை சரி செய்வது போல செய்யச் சொல்ல, அப்போது அங்கு வந்த கவினை அழைத்த சுரேகாவும், சக்தியும் அழைக்க, அருகில் வந்தவனிடம் ஃபோட்டோகிராபர்ஸ் செய்யச் சொன்னதை அவன் செய்ய, முதலில் அவனிடம் வம்பளந்து சிரித்துக் கொண்டிருந்தவளுக்கு, இறுதியில் கண் கலங்கினாள்.

எதற்கு இவ்வளவு உணர்ச்சி வசப்படுகிறோம் என்று அவளுக்கே அறியவில்லை.

ஒருவேளை இத்தனை நாள் இருந்த ஏக்கமும், தவிப்பும் அனைவரையும் ஒரே இடத்தில், அதுவும் தன்னுடயை திருமண வைபோகத்தில் கண்டதால் ஏற்பட்ட தாங்க முடியாத மகிழ்ச்சியோ என்னமோ!

“ஏய், என்ன டேம்ஐ கண்ணுல கட்டி வச்சிருக்கியா?” அவளை சிரிக்க வைக்கும் பொருட்டு கவின் கேலி செய்ய,

“போடா!” என்று அவனை அடித்தவள், எழுந்து நிற்க இருவரும் நட்பாக அணைத்து விலகினர்.

அங்கு ரிஷ்வந்த் மணமகன் அறையில் காஞ்சிவரம் பட்டு வேஷ்டி சட்டையில், அங்கவஸ்திரத்தை இரு பக்கமும் போட்டு, அந்தக் கோட்டையே ஆளும் கம்பீரத்துடன், தேகத்தில் தேஜஸுடனும், முகத்தில் மலர்ச்சியுடனும் நின்றிருந்தான்.

மதுபரக்கம் (சுமுகூர்த்தம் முடிந்து உடை மாற்றச் செல்லும் முறைக்குப் பெயர்) முடிந்து, மங்கலசூத்ரம் முறைக்கு அனைவரும் கோட்டைக்குள் வர, கோட்டையே பல வண்ண விளக்குகளால் ஜொலித்துக் கொண்டிருக்க, எதிர் எதிரே இருவரும் அமர, தன்னவளின் மேலிருக்கும் விழிகளை ரிஷ்வந்த் வசியம் செய்தது போல நகர்த்தாமல் இருக்க, நிஹாரிகாவுக்கு என்றும் இல்லாத நாணம் வந்து, வதனம் செவ்வானமாய்ச் சிவக்க தலை குனிந்துகொண்டாள்.

வெள்ளித் தட்டில் வைத்திருந்த பச்சை இளநீரில், மஞ்சள் கயிற்றில் இரு தங்கப் பொட்டுக்கள் கோர்த்த மாங்கல்யம் வைக்கப்பட்டிருக்க, ப்ரோகிதர் மந்திரங்களை சொல்லி முடித்தவுடன், நிஹாரிகாவின் அத்தை மாங்கல்யத்தை அவர்களின் முறைப்படி, அனைத்து மணமான பெண்கள் கழுத்திலும் படுமாறு வைத்து எடுத்தவுடன், எழுந்து நின்ற ரிஷ்வந்தின் கரத்தில் பெரியவர்களால் மாங்கல்யம் தரப்பட,

அந்த கணம், அந்த நொடி, அந்த விநாடி எழுந்து நின்றவனுக்கும் சரி, தலை குனிந்து அமர்ந்திருந்தவளுக்கும் சரி, தங்களைச் சுற்றி இருந்த அனைத்தும் மாயமாய் மறைந்தது.

[“பிரண்ட்ஸ்?” ரிஷ்வந்த் அன்று முதல் நாள் பள்ளியில் கரம் நீட்டியதும்,
“டில் வென்?”(Till when?) அவள் கேட்டதும்,
“ம்ம்” யோசிப்பதுபோல பாவனை செய்தவன், “மே பி டில் அவர் லைப் என்ட்ஸ்”(may be till our life ends) ]

என்று பள்ளியில் சந்தித்த முதல் நாள், இருவருக்கும் நினைவில், நெஞ்சில் பொத்தி வைத்திருந்த பொக்கிஷமாய் எழ, சன்னை மேளங்கள் இம்முறை கோட்டையைத் தாண்டி விண்ணைத் தொடும் அளவுக்கு கொட்டப்பட,

அனைவரும் அட்சதையைக் கையில் வைத்து தயாராய் நிற்க, தன்னவள் அமர்ந்திருக்கும் எழிலை மனதுக்குள் சேமித்துக் கொண்டவன், அவளை நோக்கிக் குனிந்து, சங்குக் கழுத்தைத் தன் கரங்களால் கோர்த்து, தூய்மையான எண்ணத்தோடும் செயலோடும் தன்னவளின் கழுத்தில் மூன்று முடிச்சைக் கட்ட,

அதுவரை அடக்கி வைத்திருந்த நிஹாரிகாவின் கண்கள் கலங்கி, நாசி சிவந்து, அதரங்கள் சிறிது பிதுங்கி, கண்களில் இருந்து பொட்டு பொட்டாய், இனம் புரியாத உணர்வு ஆட்கொண்டதால் கண்ணீர் விழ, சிறிது அழுகையிலும் சிறிது புன்னகையிலும் விரிந்த இதழுடன் கண்ணீரோடு, மூன்றாவது முடிச்சு போட்டுக் கொண்டிருந்த கணவனை நிமிர்ந்து அவள் பார்க்க,

அவளின் கண்ணீரையும் புன்னகையையும் ஒருசேரப் பார்த்தவன், மூன்றாவது முடிச்சை போட்டு முடித்தவுடன், விழிச் சிமிட்டி அவளின் கன்னங்கள் பற்றி, தன் இதழ்களை அழுத்தமாய் நிஹாரிகாவின் கன்னங்களில் பதிக்க, “ஹோஓஓஓ!” என்று அலறியது நண்பர்கள் படையும், கசின்ஸ் கூட்டமும்.

அடுத்து, ‘தாலம்பரலு’ என்ற வேடிக்கையான சடங்கு வந்தது. இச்சடங்கில் மஞ்சளுடன் கலந்த அரிசியை மாப்பிள்ளையும் பெண்ணும் அடுத்தவர் தலையில், முறைப்படி மழையாய்ப் பொழிய வேண்டும். அதற்குப் பின் விளையாட்டு ஆரம்பமாக, யார் அதிகம் பொழிகிறார்கள் என்பதே போட்டி.

முதல் மூன்று முறைகள் இருவரும் சமத்தாய் முடிக்க, ரிஷ்வந்த் நிஹாரிகாவின் தலையில் அதிகப் படி அரிசையை போட, அவள் தன் கைகளில் அரிசியை அள்ளியவுடன் அவனோ போக்குக் காட்ட ஆரம்பித்தான் தன் மனைவிக்கு.

நண்பன் அன்பை கண்களாலே நிஹாரிகா ஜாடை செய்ய, ரிஷ்வந்தின் பின்னால் நின்றிருந்தவன், அவனை லேசாய் இடித்துவிட முன்னால் தடுமாறியவனின் சட்டையை அவனை நகரவிடாமல் பற்றிய நிஹாரிகா, அனைத்தையும் தன்னவனின் தலையில் கொட்டி முடித்து விளையாட்டை முடிக்க, அங்கு இருந்த சிரிப்புகளும், கரகோஷங்களும் வானை நோக்கிப் பறந்தது.

ரிஷ்வந்திற்கோ தன்னவளின் குறும்பிலும், சிரிப்பிலும், முகத்தில் தாண்டவமாடிய மகிழ்ச்சியிலும், உள்ளம் பதினேழு வயது ரிஷ்வந்தாய் மாறி, மனைவியை ரசிக்க ஆரம்பித்தது.

அடுத்த சடங்குகளாய் மாலை மாற்றப்பட்டு, மெட்டி அணிந்து, ஏழு முறை சுற்றி, நிஹாரிகாவின் முந்தானையில் பணத்தை சுற்றி, ‘பிரம்மமுடி’ முடிய, வெள்ளிக் குடத்தில் மோதிரத்தைப் ப்ரோகிதர் போட, மூன்று முறையும் நம் மகாராணி அல்லவா வென்றாள்.

இருவரையும் ஒன்றாய் வெளியே அழைத்து நிற்க வைத்து, ப்ரோகிதர் அருந்ததி நட்சத்திரம் பார்க்க வைக்க, ரிஷ்வந்த் கைகாட்ட நிஹாரிகா கணவன் காட்டிய திசையை நோக்கி, கை குவித்து கண் மூடி கும்பிட்டாள். இருவரும் மணக்கோலத்தில் ஜோடியாய்க் கோட்டைக்கு மத்தியில் உள்ள, வான் பார்த்து இருக்கும் இடத்தில், அவன் கை காட்டியும் அவள் கை குவித்து கும்பிட்டு நின்றிருந்த விதமும் அத்தனை இராஜரீகமாக இருக்க, இருவருக்கும் திருஷ்டி கழித்தார் ஒரு வயதான பெண்மணி.

அடுத்து உள்ளே வந்தவுடன் சம்பிரதாயப்படி, ரிஷ்வந்தின் காலில் விழுந்து நிஹாரிகா வணங்க, அவளுக்கு எந்தக் குறையும் வரக்கூடாது என்று மனதுக்குள் வேண்டி அவளை ஆசிர்வதித்தான் அன்று அதிகாலை அவளின் கைபிடித்த மணாளன்.

கடைசி சடங்காக நிஹாரிகாவின் குடும்பம் அவளின் கை பிடித்து, ரிஷ்வந்தின் கைகளிலும் அவன் குடும்பத்தின் கைகளிலும் வைத்து, சாஸ்திரப்படி அவளை ஒப்படைக்க, திருமண வைபோகத்தின் சடங்குகள் அனைத்தும் பிரம்மாண்டமாக முடிவடைந்தது.

***

அன்றைய இரவிற்காக நிஹாரிகாவின் அறையை தயார் செய்து கொண்டிருந்தது நண்பர்கள் படைகள். ஒருவருக்கொருவர் அறைக்குள் போவதும், எதைஎதையோ பேசிச் சிரித்தபடி வெளியே வருவதும் என்று இருந்தனர்.

ரிஷ்வந்த் கீழே அமர்ந்தபடி அவர்கள் சென்று வருவதைப் பார்த்தாலும் யாரும் அவனிடம் எதுவும் சொல்லவில்லை. கவினை அழைத்துப் பிடித்து வைத்து ரிஷ்வந்த் என்ன நடக்கிறது என்று கேட்டதுக்கு அவன் லொள்ளு பேசினான்.

“அங்க தான போகப்போற.. ஏன் இவ்வளவு அவசரம்” என்றவன் அவன் அருகில் அமர்ந்து, “அப்புறம் நைட் விடிய விடிய மஜா பண்ண போற.. நம்ம பார்த்த படம் எல்லாம் ஞாபகம் இருக்குல்ல” என்று நண்பனின் காதைக் கடிக்க, அவன் கேலி செய்தது ரிஷ்வந்தின் மனதில், அவர்கள் பார்த்தது பலது ஞாபகத்தில் கொண்டு வந்து, ஏதேதோ செய்ய ஆரம்பித்தது.

“டேய், கம்முனு இருடா..” ரிஷ்வந்த் அவனை அடக்க, அது வெட்கம் என்று எண்ணிக்கொண்ட கவின்.. அன்பு, தமிழ் இருவரையும் கூப்பிட்டு, ரிஷ்வந்தை அழைத்துக்கொண்டு தனியாக சென்றான்.

வீட்டின் யாரும் இல்லா இடத்திற்கு சென்ற நண்பர்கள், ரிஷ்வந்திற்கு மூவரும் அறிந்தது, தெரிந்தது, கற்றது என எல்லாம் சொல்லித்தர, அதில் அவனுக்கு தெரியாதது எதுவும் இருக்கிறதா என்ன? அவன் அலைபேசியில் பார்க்காததா? படிக்காததா?

எல்லாக் கலையும் தெரிந்த கன்னிப்பையன் அல்லவா நம நாயகன்!

ஆனால், அவர்களின் அறிவுரைகள் அவனின் காமத்தீயை பற்ற வைக்க, உள்ளே வந்தவனின் காமத்தீயை தூபம் போடும் விதமாய், யாருடனோ பேசியபடி அவனுக்கு முதுகுக்காட்டி நின்றிருந்தாள் நிஹாரிகா.

அவளின் டாஸ்லிங் டோலி ஜாக்கெட் டிசைனில், அவளின் முதுகில் இருந்த மச்சம், அவனை அசுர வேகத்தில் சுழற்றியடிக்க, ஏற்கனவே தாபத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தவன் விரகதாபத்தில் சிக்கித் தவிக்கத் தொடங்கினான்.

“என்ன நிஹா. உன் ஹப்பி கண்ணாலேயே முழுங்கிடுவாரு போல” நிஹாரிகாவுடன் பேசிக் கொண்டிருந்த கசின் ஒருத்தி, ரிஷ்வந்தின் பார்வை நிஹாரிகாவை கபளீகரம் செய்வதை உணர்ந்து, அவளின் காதைக் கடிக்க, கணவனின் பார்வை முதுகைத் துளைப்பதை உணர்ந்தவள், கசினை இழுத்துக்கொண்டு சமையலறைக்குள் புகுந்து கொள்ள அங்கு சந்திராமா, விவாஹா, கயல்விழி செய்து கொண்டிருந்ததைப் பார்த்தவளுக்குத் திக்கென்று இருந்தது.

வெந்நீரில் முப்பது நிமிடங்கள் குங்குமப்பூவை ஊற வைத்து எடுத்து, கொதிக்க வைக்க, வெயிலில் காய வைத்து அரைத்திருந்த இருநூறு கிராம் பாதாம் பருப்பை, ஒரு லிட்டர் பாலில் கலந்து, அதில் வேக வைத்த குங்குமப்பூவையும் கலந்து, அரை லிட்டர் அளவிற்கு பாலை சுண்டக் காயச்சி, பின் ஏலக்காய் தூவ, மணமோ அமோகமாக இருந்தது.

அடுத்து ரோஸ் எசெசன்ஸ் கலந்து முடித்து, சிறிதுநேரம் கழித்து அடுப்பில் இருந்து இறக்கி, சந்திராமா தங்க நிற கேசர் பாதாம் பாலை வெள்ளி டம்ளரில் ஊற்ற, நிஹாரிகாவுக்கு தொண்டை கவ்வியது.

அதே நேரத்தில் உள்ளே நுழைந்த சுரேகா, “நிஹா, போய் ரெடியாகு. அந்த ரெட் கலர் சாரியையும், சில்வர் கலர் ஸ்லீவ்லெஸ் ப்ளவுஸும் தான் எடுத்து வச்சிருக்கேன். அதுவே போட்டுக்க” என்றிட,

‘அய்யோ! அவன் பார்வையே ஒரு மாதிரி இருக்கு. இவங்க வேற என்னை ஃபுல் பார்ம்ல அனுப்ப பாக்கறாங்களே’ என்று மனதுக்குள் முணுமுணுத்தவள் தலையை ஆட்டிவிட்டு, கீழே இருந்த அறைக்குள் புகுந்தாள்.

அணைத்து அணிகலன்களையும் கழற்றியவள், தாலி, ஒரு தங்கச் சங்கிலி, தோடு, வளையல் தவிர எதையும் அணியவில்லை. ஒப்பனைகளும் அவ்வளவாக செய்யவில்லை. செய்யமால் இருப்பது நல்லது என்று தோன்றியது அவளுக்கு. இதில் கயல்விழி வேறு தலையில் மல்லிகை சரத்தை வைத்துவிட்டுச் சென்றிருந்தார்.

கண்ணாடி முன் நின்றவள், “அய்யோ! என்ன இதுக்கே நல்லா இருக்கு. பேசாம சுடிதார் போட்டுட்டு போயிடலாமா” என்று அவள் வாய்விட்டு முனக, அங்கிருந்த சக்தி, பிருந்தா, அபர்னா, ‘ஙே’வென முழித்தனர்.

***

அங்கு நிஹாரிகாவின் அறையில் இருந்த ரிஷ்வந்தோ அறையில் எதையோ தேடிக் கொண்டிருந்தான்.

“டேய், என்ன ப்ரஷ்னர்டா வச்சிட்டு போனீங்க. என்ன என்னமோ பண்ணுது” என்று தலையில் அடித்துக் கொண்டவன் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு, சின்ஸியராக இளமையைத் தூண்டும் ரூம் ப்ரெஷ்னரை தேடிக் கொண்டிருந்தான். அவன் எங்கு தேடியும் கிடைக்காததால், ‘இது சரிப்பட்டு வராது’ என்று நினைத்தவன், இரண்டு ஜன்னல்களையும் திறந்துவிட்டான்.

‘கடவுளே என்ன எப்படியாவது காப்பாத்தீடு’ என்று மனதுக்குள் கடவுளிடம் வேறு வேண்டினான். ஏனெனில், இன்று எதுவும் நடக்கப்போவது இல்லை என்று அவனுக்குத் தெரியும்.

ஆனால், தன்னவள் என்ன செய்யக் காத்திருக்கிறாளோ என்று நினைத்து அவனின் மனம் ஓடும் குதிரையைப் போலத் துடி துடித்தது. வெளியே தைரியமாய் அமர்ந்திருந்தவன், மனதுக்குள் பலவாறு யோசித்துக்கொண்டிருந்தான் பாவம்.

‘நான் நல்ல பிள்ளையா இருந்தாலும், எதுவும் கண்ணுக்கு அப்படி இப்படின்னு எதுவும் தெரிஞ்சு..’ அவன் வேண்டிக் கொண்டிருக்கும் போதே ஸ்லீவ்லெஸ் வெள்ளி நிற ப்ளவுஸில், இரத்த நிற புடவையில், தலையில் மல்லிகைச் சரங்களைச் சூடி, உள்ளே நுழைந்தவளைக் கண்டனின் இதயம் தொபக் என்று ஸ்தம்பித்து விழுந்தது.

தனியறையில் கணவனாக அவளைப் பார்த்தவனுக்கு நண்பர்கள் சொன்ன கண்டதும் வந்து மூளையை மங்கச் செய்யத் துவங்கியது. நடிப்பில் பலதைக் கண்டவன் என்றாலும் தான் கட்டிய மாங்கல்யத்துடன், தனக்கு உரிமையானவள், தனிமையில் தன்னுடன் இருக்க, அவனின் இரத்த அழுத்தம் அதிகரித்து ஆற்று வெள்ளமாய் ஓடியது.

‘மனுஷன சிரமப்படுத்தவே.. நல்லா மசாலா தடவுன தந்தூரி சிக்கன் மாதிரி இவ்வளவு செக்ஸியா வந்து நிக்கறாளே’ மனதுக்குள் மோகத்துடன் நினைத்துக் கொண்டு எழுந்தவன், தன்னை சமன் செய்ய ஜன்னலின் அருகே சென்று வெளியே வெறித்தபடி நின்றான்.

அங்கிருந்த மேசையில் பாலை வைத்த நிஹாரிகா அங்கிருந்த கட்டிலின் மீது சாய்ந்தபடி நின்றாள்.

இருவருக்கும் காதலும் காமமும் போட்டி போட்டுக்கொண்டு எழுந்தாலும், எதையோ ஒன்று மனம் அழுத்திக் கொண்டு, தனிமையில் இருவரையும் இயல்புக்கு வரவிடாமல் செய்தது.

வெளியே தெரிந்த நிலவைப் பார்த்து பலதை நினைத்துக் கொண்டிருந்த ரிஷ்வந்தின் மனதிலும், கட்டிலின் மீது சாய்ந்து அவனின் முதுகை வெறித்தபடி நின்றிருந்த நிஹாரிகாவுக்கும் பழைய நினைவுகள் வந்து தீண்டத் தொடங்கியது.