நிஹாரி-17

IMG-20211003-WA0016-0de827c9

நிஹாரி-17

“ஆக்ஷன்” என்று தனது கரத்தில் இருந்த மைக்கில், இயக்குனர் உரக்கக் கத்த, ஒரு பெரிய நடிகரின் வாரிசு, கதாநாயகனாக நடிக்கும் படத்தின், சண்டைக் காட்சிகளின் படபிடிப்பு நடந்து கொண்டிருந்தது, அந்த கே.வி ப்ரொடக்சனில்.

“கட்” என்று கத்திய இயக்குனர்,

“ஸீ நிரூப், இது பைட் சீன். ஸோ, ஐட் வான்ட் சம் அரோகன்ஸ் இன் யுவர் ஃபேஸ் (So, I want some arrogance in your face)” என்று அவர் விளக்க, அவன் உள்ளுக்குள் சலித்தது அப்பட்டமாக அவருக்குத் தெரிந்தது.

அவனின் செய்கையில் மண்டைக்குள் வெடித்த பிரளயத்தைக் கட்டுப்படுத்தியவர், “டேக் சம் டைம், நான் வர்றேன்” என்று அவர் கேரவனைக் காட்ட, அவனோ, ‘எப்போதுடா சும்மா உட்காரலாம்’ என்று காத்திருந்தவன் போல உற்சாகத்துடன் காரவனை நோக்கி நடந்தான்.

அவன் சென்றவுடன் தலையைப் பிடித்துக்கொண்டு சிகரெட்டுடன் அமர்ந்த பிரகாஷிற்கு, அருகில் இருந்த மேசையில், ஆவி பறக்க மணக்க மணக்க ஏலக்காய் டீ வைக்கப்பட, அது யாரென்று நிமிராமலேயே தெரிந்துகொண்டவர், அந்த நபர் அமர தன் அருகில் இருந்த ப்ளாஸ்டிக் சேரை இழுத்துப்போட்டார்.

வழக்கம்போல அவர் மரியாதையுடன் அமராமல் நிற்க, “உட்காருங்க ண்ணா” என்றார் பிரகாஷ்.

“இல்ல பரவாயில்ல சார்” கனகராஜ் சொல்ல,

“அட உட்காருங்கணே” பிரகாஷ் மீண்டும் வற்புறுத்த கனகராஜ் அமர்ந்தார்.

பிரகாஷ் நாற்பதை எட்டிய இயக்குனர். சிறிய வயதிலேயே தாயை பறிகொடுத்தவர், பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து, பதினெட்டு வயதுவரை சித்தியின் கையால் இடிசோறு சாப்பிட்டு வளர்ந்தவர், ஒரு கட்டத்திற்கு மேல் சித்தியின் கொடுமைகளையும், தந்தையின் கொடுஞ்சொற்களையும் தாங்கமுடியாமல் சென்னைக்கு ஓடி வந்தார்.

வந்தவர் அங்குஇங்கு என்று வேலை செய்து, வயிற்றுப் பசிக்காக நான்கு மாதங்களைக் கழித்தார். சிறு வயதில் இருந்தே படம் பார்ப்பதில் பைத்தியம் போல இருந்தவர், சாப்பிடும் காசு போக மீதமிருக்கும் காசை சேர்த்து வைத்து, வார இறுதியில் ஒரு மொக்கை திரையரங்கிற்கு சென்று, படத்தை வாய்பிளந்து கண்டுவிட்டு வருவார்.

அப்படியிருப்பவர் ஒரு நாள் கே.வி ப்ரொடக்சன் பக்கம் வர, பிரகாஷுடன் இருப்பவன், “இங்க தான்டா சினிமா சூட்டிங் எல்லாம் நடக்கும். எல்லா நடிகர் நடிகைகளும் வருவாங்க” என்று சொல்ல, ஏனோ தன் கண் முன்னே பிரம்மாண்டமான முறையில் நிமிர்ந்து நிற்கும் அந்தக் கட்டிடத்தைக் கண்டு நின்றார் அவர்.

ஏனோ அவரின் மனதுக்குள் ஒரு பாசிட்டிவ் ஆரா எழுந்து உடல் முழுதும் பரவியது. ‘அங்க போ.. உனக்கு வாழ்க்கைல எல்லாம் கிடைக்கும்’ என்று அவரின் மனம் சொல்லி, அவரை மேலே நடக்கவிடாமல் செய்ய, அதற்குள் நடக்கப் பார்த்தவரை, “அங்க எங்கடா போற?” என்று அவருடன் வேலை செய்பவன் இழுத்தான்.

“இனிமேல் நான் வேலைக்கு வரமாட்டேன்டா.. முதலாளி கிட்ட இத்தனை நாள் எனக்கு வேலை குடுத்ததுக்கு நன்றி சொன்னேன்னு சொல்லிடு. நானே ஞாயித்துக்கிழமை வந்து பாக்கறேன்” என்றவர் கே.வி ப்ரொடக்சனுக்குள் தனது பதினெட்டு வயதில் காலை எடுத்து வைத்தார்.

முதலில் அவரை அங்கு இருக்கும் காவலாளி உள்ளே கூட அனுமதிக்கவில்லை. அவரின் அழுக்கு படிந்த உடையும், பரட்டை தலையும் காவலாளியை முகம் சுளிக்க வைத்தது. அவர் எவ்வளவோ கேட்டுப் பார்த்தும், கெஞ்சிப் பார்த்தும் காவலாளி உள்ளே அனுமதிக்கவில்லை. மேலும் பிரகாஷின் உடையையும், தலையையும் கேலிசெய்து எடுத்தெறிந்து பேசினான் அவன்.

கோபத்தோடு காவலாளியை முறைத்துவிட்டு வந்தவர், ‘ஒருநாள் நீ எனக்கு கதவு திறந்துவிடற மாதிரி பண்றேன்டா’ என்று மனதுக்குள் கறுவிக்கொண்டு வந்தவர், தங்கியிருக்கும் இடத்திற்கு சென்று, சேர்த்து வைத்திருந்த காசை எண்ணிப் பார்த்தார்.

அவர் கையில் இருந்த பணத்தில் நல்ல உடை வாங்கி, அதில் முடி வெட்ட முடியாது என்று எண்ணியவர், பதினைந்து நாட்கள் ஒரு இடத்தில் வேலை செய்து தி-நகரில் உள்ள ரோட்டோரக் கடையில், ஒரு நல்ல சட்டை பேண்ட்டை வாங்கிக்கொண்டு, முடியையும் சீராக வெட்டிவிட்டு மீண்டும் அங்கே சென்றார்.

காலை நேரத்தில் கூட்டமாக சிலர் செல்லும்போது காவலாளியின் கண்களில் இருந்து தப்பி ப்ரொடக்சனுக்குள் புகுந்தார்.

அன்று ஒவ்வொருவரிடம் சென்று விசாரிக்க, அவரை அறியாத பலரும் அவரை விரட்டியடிக்காத குறைதான். அதுவும் அங்கு எடுபிடி வேலை செய்யும் ஒருவன் பிரகாஷை அடிக்கப் பாய, அப்போது வந்து அவனின் கை பிடித்துத் தடுத்தார் கனகராஜ்.

“ஸ்பாட்ல இந்த மாதிரி கை கலப்பு ஆனா, கேஸ்ட் மெம்பர்ஸ் டிஸ்டர்ப் ஆவாங்கன்னு தெரியாதா?” என்று கடிந்தவர் அவனை அனுப்பிவிட்டு பிரகாஷைப் பார்த்தார்.

“என்ன தம்பி வேணும். காலைல இருந்து பார்க்கறேன். இங்கையே சுத்திட்டு இருக்க?” கனகராஜ் கேட்க,

“அண்ணா.. எனக்கு வேலை மட்டும் இங்க வாங்கித் தர்றீங்களா?” கேட்ட பிரகாஷைக் காண அவருக்குப் பாவமாக இருந்தது.

பதினைந்து நாள் இரவு பகல் பாராமல், உடை வாங்கவும், முடி வெட்டவும் பணம் சேர்க்க சிறிதாக சாப்பிட்டு இருந்ததில் அவரின் முகம் தொய்வாக இருந்தது.

“தம்பி இங்க எந்த வேலையும் இல்லப்பா” கனகராஜ் சொல்ல,

“எடுபிடி வேலை இருந்தாக் கூட தாங்க ண்ணா.. ப்ளீஸ்” என்று கேட்க கனகராஜால் அதற்கு மேல் மறுக்க முடியவில்லை. அங்கிருந்த நபரிடம் அழைத்துச் சென்று, தனக்குத் தெரிந்த பையன் என்று சொல்ல அப்போது இருந்து கேவி ப்ரொடக்சன் பிரகாஷின் இல்லம் போல ஆனது. அங்கே தான் சாப்பிடுவது, தங்குவது, தூங்குவது அனைத்தும்.

தனது இருபத்தி இரண்டு வயதுவரை, அங்கு நடக்கும் அனைத்தையும் ஊன்றி கவனித்து உள்வாங்கிக் கொண்டு இருந்தவர் ஒருநாள், “அண்ணா, எனக்குப் படம் எடுக்கணும்னு ஆசையா இருக்கு. முடியுமா?” அவர் கனகராஜிடம் தனது ஆசையைச் சொல்ல,

“நீ அதுக்கு ADயா (ASSISTANT DIRECTOR) சேரணுமே.. அதுக்கு முன்னாடி அதுக்கு இப்ப எல்லாம் படிக்கறாங்க. அது படியேன். அது உனக்கு யாராவது கிட்ட ஏடியா சேர்றதுக்கு மட்டும் இல்ல, உனக்கு நல்ல அறிவையும் தரும்ல” கனகராஜ் சொல்ல,

“அடப் போங்க ண்ணா. படிக்கிறதுக்கு எல்லாம் காசு வேணும்ல” என்றவனை முறைத்த கனகராஜ்,

“அப்ப வெறும் வார்த்தைக்கும் தான் என்னை அண்ணான்னு கூப்பிடறியா?” அவர் கோபித்துக்கொண்டு அமர்ந்த இடத்திலிருந்து எழ, “அண்ணா!” என்று அவரின் கையைப் பிடித்த பிரகாஷ்,

“உங்களுக்கு எதுக்கு செலவுன்னு பார்த்தேன். உங்களுக்கும் ஒரு பையன் இருக்கான்ல” என்று தயங்கினார் பிரகாஷ். தன்னுடைய ஆசைக்காக கனகராஜை அடகு வைக்கக்கூடாது என்று எண்ணினார் அவர். கனகராஜின் மேல், அவரின் குடும்பத்திற்கு பிறகு அதிக அன்பு வைத்திருப்பது என்றால் அது பிரகாஷ் தான். தன்னை ஒரு இடத்திலும் விட்டுத்தராது, நல்ல நாட்களில் சகோதரனைப் போல வீட்டிற்கு எல்லாம் அழைத்துச் சென்று பார்த்துக் கொள்பவரை அவர் தன் மனதில் எங்கோயோ வைத்திருந்தார்.

“நீங்க எனக்கு அண்ணா தான். ஆனா, ஒரே ஒரு கண்டிஷன்” என்று திட்டவட்டமாக பிரகாஷ் சொல்ல, கனகராஜ் புருவம் சுருக்கினார்.

“நீங்க படிக்க கட்டுற ஃபீஸை. நான் சம்பாரிச்சு திருப்பித் தரும்போது வாங்கிக்கணும்” பிரகாஷ் உறுதியான குரலில் சொல்லிமுடிக்க, கனகராஜ் சரி என்றார்.

அடுத்து பிரகாஷ் படிப்பதற்கு சம்மதம் தெரிவிக்க, அவரை ஒரு நல்ல கல்லூரியில் சேர்த்துவிட்டார் கனகராஜ். காலை கல்லூரி செல்பவர் மாலை ப்ரொடக்சனுக்கு வந்து கனகராஜுக்கு உதவியாக இருப்பார்.

அவ்வப்போது கனகராஜ் அவரை வீட்டிற்கும் அழைத்துச் செல்வது வழக்கம். கயல்விழியை மனதில் இருந்து, ‘அண்ணி’ என்றே விழிப்பவர் ரிஷ்வந்தை இத்தனை வருடங்களில் கண்டது மட்டும் ஒரு ஐந்து முறை மட்டுமே. எப்போதும் விளையாட்டு, நண்பர்கள் என்று இருப்பவனை அவருக்கு அதிகம் பார்த்துப் பேச வாய்ப்புக் கிட்டியது இல்லை.
ஆனால், தந்தைக்கு நெருக்கமானவர் என்று மட்டுமே ரிஷ்வந்திற்குத் தெரியும்.

மூன்று வருடத்தில் படித்து முடித்தவர் இருபத்தைந்து வயதின் முடிவில் ஏடியாக ஒரு பெரிய டைரக்டரிடம் சேர்ந்து, ஐந்து வருடத்திற்குப் பிறகு ஒரு குறைந்த பட்ஜெட் படத்தை இயக்கி அதில் வெற்றியைக் கண்டார்.

கனகராஜ் மறுக்க மறுக்க அவரின் கையில் படித்ததிற்கான தொகையையும் தந்தார். அவருடனே வந்துவிட பலமுறை கேட்டும் கனகராஜ் வேண்டாம் என்று உறுதியாய் மறுத்துவிட்டார். கயல்விழியிடம் பிரகாஷ் சொன்னபோது கூட, “அவரின் முடிவு எதுவா இருந்தாலும் நல்லதா தான் தம்பி” என்று முடித்துவிட்டார். அதற்கு பிறகு அவரும் வற்புறுத்தவில்லை.

அவர் நினைத்ததுபோல கே.வி ப்ரொடக்சன் காவலாளியை அவருக்கு கதவையும் திறக்க வைத்தார்.

அடுத்து இரண்டு வருடங்களில் அவரின் படங்கள் ஹிட் அடித்து பாக்ஸ் ஆபிஸை அள்ள, தனது முப்பத்தி இரண்டு வயதில் ஒரு நல்ல பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களின் வாழ்க்கைக்கு அழகாக அழகு சேர்த்த வைரம் அவர்களின் ஒரே மகள், ‘ஸ்வாதிகா’. மகளின் மீது உயிரையே வைத்திருந்தார் பிரகாஷ். தன் அன்னையே தனக்கு வந்து பிறந்தது போல அவருக்கு ஒரு நினைப்பு.

அடுத்து வந்த படங்களும் அவருக்கு வெற்றியை அள்ளிக் கொடுத்தது.

தன் அருகில் அமர்ந்திருந்த பிரகாஷை பார்த்த கனகராஜுக்கு அவரை, சந்தித்ததில் இருந்து இன்றுவரை அவர் எட்டிய உயரத்தை நினைத்துப் பார்த்து, சற்று பெருமையாக இருந்தது. எங்கிருந்தவன் எங்கு வந்துவிட்டான் என்று. அவனின் உழைப்பும், விடா முயற்சியும் தானே அனைத்திற்கும் காரணம். முதல் படத்தை இயக்கி முடிப்பதற்குள் அவன் பட்டபாடு கனகராஜுக்குத் தானே தெரியும்.

சிகரெட்டை அணைத்த பிரகாஷ், “அண்ணா, இந்தப் படத்தை ட்ராப் பண்ண போறேன்” என்றிட, கனகராஜிற்கு பகீரென்று இருந்தது.

“என்ன சார்” அவர் தொடங்க, “ண்ணா!” பிரகாஷின் அடக்கபட்ட விழிப்பில் அவர் புரிந்துகொண்டார்.

“ரூமுக்குப் போய் பேசலாமா?” கனகராஜ் கேட்க, இருவரும் அங்கிருந்த அறைக்குள் நுழைந்தனர்.

“எத்தனை தடவை சொல்றது சார் மோருன்னு கூப்பிடாதீங்கனு” அறைக்குள் நுழைந்தபின் பிரகாஷ் பல்லைக் கடிக்க,

“நீ இருக்க இடம் அப்படி. என்னதான் நம்ம க்ளோஸா இருந்தாலும் நான் மரியாதையா கூப்பிடலைன்னா.. மத்தவனுகளுக்கு அது தொக்கா போயிடும்” என்ற கனகராஜ், “சரி அதை விடு.. ஏன் படத்தை ட்ராப் பண்ற?” வினவ,

“அவன் சரியான மட்டி ண்ணா. அப்பன் காசுல நல்லா உடம்பை மட்டும் வளத்து வச்சிருக்க மலமாடு. ஒரு எக்ஸ்பிரஷனும் மூஞ்சில வரமாட்டிது” என்றவர், “அன்னிக்கு லவ்வோட ஹீரோயினை பாக்க சொன்னா கற்பழிக்கற மாதிரி பாக்கறான்” என்று தலையில் அடித்துக் கொண்டார்.

“பெரிய நடிகர் பையன் நல்லா நடிப்பான்னு தப்புக் கணக்குப் போட்டுட்டேன். இவனை வச்சு படம் எடுத்தா, நான் என் பேரையும் கெடுத்து, ப்ரொடியூசருக்கும் நாமம் போட வேண்டியதுதான்” என்றார் எரிச்சல் மிகுந்த குரலில்.

“ஆனா, இப்ப அவனைத் தூக்கிட்டு நீ வேற யாராவதைப் போட்டா பிரச்சனை வருமே” கனகராஜ் இதற்குள் இருக்கும் அரசியலை அறிந்தவராய் சொல்ல,

“எனக்கும் அதான் ண்ணா புரியல. இந்த மீடியா, அப்புறம் ஒரு சில அரை வேக்காடு ஃபேன்ஸ் வேற நடந்தது தெரியாம ஆடுவானுக” என்று எரிச்சலை சமன் செய்யும் பொருட்டு தலையை அழுந்தக் கோதினார் பிரகாஷ். இங்கு வீட்டைக் காக்க சில இளைஞர்கள் போராடுகிறார்களோ இல்லையோ. சினிமாவில் நடிக்கும் நடிகனை தலைவனாக நினைத்துக் கொண்டு அவர்களுக்காக அடித்துக் கொண்டு வாழ்க்கையை மறந்து விடுகிறார்கள்.

பிரகாஷின் உள்ளுணர்வு ஏதோ கெட்டது வந்து நல்லது நடக்கப்போகுது என்று உந்த, அவரின் இதயம் காரணம் இல்லாமல் படபடத்தது. நல்லது நடக்கும் முன் என்ன கெட்டது என்று நினைத்தவரை, ஏதோ ஒன்று உயிர் வரை சென்று ஆட்டியது.

அவர் தன் முதல் படத்திற்குப் பிறகு, தன் உள்ளுணர்வுகள் சொல்லும் எதையும் மறுப்பதில்லை. அன்று அது உந்தியதால் தானே அவர் கே.வி ப்ரொடக்சனுக்குள் நுழைந்தது.

அவரின் உள்ளுணர்வை உண்மையாக்கும் பொருட்டு அறைக்கு வெளியே சிலரின் பதறும் குரலும், சிலரின் அலறும் குரலும் கேட்க இருவரும் அறையைவிட்டு அவசர அவசரமாக வெளியே வந்தனர்.

அறையின் கதவை தள்ளிக்கொண்டு எரிச்சலும், கோபமுமாக வெளியே வந்த பிரகாஷ், ஒரு நிமிடம் தன் உயிர் உறைந்து நின்றார். அவரின் உயிர் அல்லவா ஆபத்தின் விளிம்பில் இருந்தது.

சண்டைக் காட்சிக்காக போடப்பட்டிருந்த செட், மேலிருந்து கீழே பாதி விழுந்து தொங்கிக் கொண்டிருக்க, அதற்கு கீழே நேராக, பிரகாஷின் ஆறு வயது மகள், ‘ஸ்வாதிகா’ அவரைத் தேடிக்கொண்டு, அங்கு நடப்பது அறியாமல் கையில் பிஸ்கட்டை மென்றபடி நின்று கொண்டிருக்க,

அங்கிருந்த அனைவரும் பயத்தில் அருகே செல்லக் கூட பயந்து நான்கு பக்க சுவரின் ஓரத்தில் ஒட்டி நின்றிருந்தனர். இன்று மகள் தன்னுடன் வர அடம்பிடித்து அழுததால் அழைத்து வந்து ப்ரொடக்சனில் இருக்கும் பூங்காவில் ஒரு பெண்ணின் பாதுகாப்பில் விட்டுவிட்டு உள்ளே வந்திருந்தார் அவர்.

அந்தப் பெண்ணுடன், ஒளிந்து விளையாடிக் கொண்டிருந்தவள், தந்தையின் ஞாபகம் வந்தவளாய் ஒளிந்து இருந்த இடத்தில் இருந்து தந்தையைத் தேடி சண்டைக் காட்சிகளுக்கான செட் போட்டிருந்த இடத்திற்கு தானே வந்துவிட்டாள். அதை அறியாத பெண்ணோ சிறியவளை பூங்கா முழுக்க தேடிக் கொண்டிருந்தாள்.

கடந்த ஒரு வாரமாக அயராது உழைத்து அமைக்கப்பட்ட, சுமார் இருநூறு கிலோ எடையுள்ள இரும்பு செட். அதில் பாதி உடைந்து தொங்கிக் கொண்டிருந்தது. அது மட்டும் உடைந்து யாராவது மேல் விழுந்தால், அந்த நபர் சட்னிதான்.
பெரியவர்கள் அங்கு நின்றாலே அப்படி என்றால், அங்கு இப்போது நிற்பது ஆறு வயதுக் குழந்தை.

புலன்கள் மரத்துப் போய் ஒரு விநாடி நின்ற பிரகாஷ், , “ஸ்வாதிகா!” தொண்டை கிழியக் கத்தியபடி ஓட, கனகராஜும் அவருடன் ஓடினார்.

அதற்குள் பாதி கழன்று அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த இரும்பு செட், கீழே விழ, அங்கிருந்த பலர் தங்களது இரு கைகளைக் கொண்டு முகத்தை மூடிக்கொள்ள, பிரகாஷிற்கு, ‘வாழ்க்கை முடிந்தது’ என்று இதயம் துடிதுடிக்க, குழந்தை மேலே வரும் இரும்பைப் பார்த்தபடி பிஸ்கட்டுடன் என்ன நடக்கிறது என்று தெரியாமல் நிற்க, முடிந்தது அவ்வளவு தான் எல்லாம் முடிந்தது என்றானது அனைவருக்கும்.

‘டமார்’ என்ற சத்தத்தோடு குழந்தையின் அலறலும் கேட்க, பிரகாஷ் மண்டியிட்டுத் தரையில் அப்படியே இருகைகளாலும் தலையைப் பிடித்தபடி அமர்ந்துவிட்டார்.

இரும்பு விழுந்த இடத்தில் இருந்து புழுதி கிளம்பி அந்த இடமே புகை மண்டலமாய் காட்சித் தர, பிரகாஷ் சிலை போல அமர்ந்துவிட்டார். கனகராஜ் பிரகாஷைப் பிடித்து உலுக்க, அவரோ அங்கேயே தான் கண்களைப் பதித்து இருந்தார்.

கண்கள் கலங்க மகளை காப்பாற்ற இயலவில்லையே என்று அவர் தலைகுனிய, “டாடி!” என்ற மகளின் குரலில் அவர் உயிர் வந்ததைப் போல பாசத்தின் உச்சியில் ஆவேசத்தோடு தலை நிமிர, குழந்தையைக் கையில் தூக்கியபடி எழுந்தான் ரிஷ்வந்த்.

குழந்தையின் மேல் இரும்பு விழும் இறுதி விநாடி, குழந்தைக்கும் இரும்பிற்கும் ஒரு இன்ச் இடைவெளியே இருக்கும் கடைசி நொடி, அங்கு தந்தையைப் பார்க்க வந்த ரிஷ்வந்த் மின்னலெனப் பாய்ந்து ஸ்வாதிகாவை இழுக்க, இருவரும் இருபது மீட்டர் தள்ளி, ‘பொத்’தென்று விழுந்தனர்.

இரும்பு அருகில் வந்தவுடன் அலறிய குழந்தை, தன்னைக் காக்க வந்தவனை பயத்தில் நடுநடுங்கி இறுகப் பிடித்துக் கொண்டது. இரும்பின் சிறு துண்டு உடைந்து வந்து ரிஷ்வந்தின் நெற்றியில் அடித்து, அதன் பதத்தை பார்த்திருக்க, அழையா விருந்தாளியாய் இரும்பு வந்து சென்றதில் இரத்தம் கசியத் தொடங்கியது அவனுக்கு.

மகளை பார்த்ததில் மீண்டும் உயிர்பெற்ற பிரகாஷ் பாய்ந்து சென்று மகளை வாங்கி, செல்ல மகளின் முகம் முழுதும் முத்தமிட்டார். அவரின் உயிர் அல்லவா அவரின் மகள். தான் சிறு வயதில் இழந்த அனைத்தையும் அவளுக்கு தன் பாசத்தால் தந்துகொண்டிருக்க, நடந்த முடிந்த சம்பவத்தில் அவரின் சப்த நாடியும் ஆடிவிட்டது.

“டாடி!” மகள் அவரை அழைத்து அவரின் மீது சாய்ந்துகொள்ள, ரிஷ்வந்தைப் பார்த்தவர், “ரொம்ப நன்றி ரிஷ்வந்த்” என்று கை கூப்ப அவரின் கையைப் பிடித்து இறக்கினான்.

அவனின் தலையில் கசிந்த இரத்தத்தைப் பார்த்தவர், “பர்ஸ்ட் எய்ட் கிட் எடுத்துட்டு வரக்கூட சொல்லணுமா” என்று கூட்டத்தைப் பார்த்து பிரகாஷ் ஆத்திரத்தில் கத்த, நடந்த காட்சியையும், நடந்து கொண்டிருக்கும் காட்சிகளையும் பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் அவரின் கோபத்தில் ஆளுக்கொரு பக்கம் சிதறி ஓடினர்.

“பாருங்க. உங்களால தான் அண்ணாக்கு அடி பட்டுச்சு. இனிமே அப்படி எல்லாம் வந்து நிக்கக் கூடாது சரியா?” என்றவர், “அண்ணாக்கிட்ட ஸாரி கேளுங்க” பிரகாஷ் சொல்ல,

“ஸாரி அண்ணா” என்றது அரை மணி நேரத்திற்கு முன் அனைவரையும் பயத்தின் எல்லையில் கொண்டு சென்று நிறுத்திய வாண்டு.

“இட்ஸ் ஓகே டா.. பை, இனிமேல் கேர் ஃபுல்லா இருங்க.. பை ஸார்” என்றவன் நெற்றியில் கொஞ்சம் பெரிய ப்ளாஸ்டருடன் எழ, கனகராஜும் எழுந்தார்.

மகன் கல்லூரி நேரத்தில் தன்னைப் பார்க்க வந்திருக்கிறான் என்பது அவருக்கு நினைவு வந்தது. ஏதாவது முக்கியமான விஷயமாகத் தான் இருக்கும் என்று புரிந்து கொண்டவர் மகனுடன் வெளியே வந்தார்.

“என்ன விஷயம் ரிஷ்வந்த்” கனகராஜ் வினவ,

“காலேஜ்ல ஃபீஸ் கட்டலைனா வராதன்னு சொல்லி அனுப்பிட்டாங்க ப்பா” அவன் தந்தையின் முகத்தைப் பார்க்க இயலாமல் எங்கோ பார்த்தபடி சொல்ல, கனகராஜிற்கோ சங்கடமாக இருந்தது.

ரிஷ்வந்த் இப்பொழுது விஸ்காம் இறுதி வருடத்தில் இருந்தான். கடைசி செமஸ்டர். இந்த வருடத்தின் தொடக்கத்தில் இருந்தே அவருக்கு பணம் சிறிது கையைக் கடித்துக் கொண்டிருந்தது. ரிஷ்வந்திற்கு அவர் குறையாமல் செலவிற்கு தந்தாலும், கல்லூரியில் ஏற்கனவே கட்ட வேண்டி இருந்த முப்பதாயிரமும், இப்பொழுது கட்ட வேண்டிய முப்பதாயிரமும் சேர்ந்து அறுபதாயிரம் என்று ஆகியிருந்தது.

மகனைப் பார்க்க முடியாமல் அவரும் எங்கேயோ பார்வையை பதிக்க, தந்தை மகன் இருவருக்குமே முகம் காண முடியவில்லை. வலியின் உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருந்தனர் இருவரும்.

“திட்டுனாங்களா ப்பா?” அவர் தொண்டையை சரி செய்துகொண்டு வினவ,

“அதெல்லாம் இல்ல ப்பா” என்று ரிஷ்வந்த் சமாளிக்க, அவருக்குத் தெரிந்துவிட்டது மகன் பொய் உரைக்கிறான் என்று.

பணத்தை முன் வைத்து வாழ்க்கையில் முதல்முறை அடி வாங்கிய வலி ரிஷ்வந்தின் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது. ‘ஃபீஸ் கட்ட முடியாம எதுக்கு காலேஜ்ல வந்து படிக்கறீங்க. எங்க உயிரை வாங்கவா?’ ஆபிஸ் ரூமில் ஃபுல் மேக்கப்பில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் அவனிடம் எகிறயிருக்க, தான் கையாலாகாத நிலையில் நின்றிருந்தது ரிஷ்வந்தின் மனதில் ஓடியது.

முதல்முறை தொண்டையில் ஏதோ அடைப்பதுபோல இருந்தது. அதுவும் அவர் கேட்ட கேள்வியில், அந்த அறையே அதிரும் அளவுக்கு வாய்விட்டுக் கத்த வேண்டும் என்று தோன்றியது ரிஷ்வந்திற்கு.

அவனின் எண்ணம் அவன் முகத்தில் தெரிந்ததோ எண்ணமோ, “போய் ஃபீஸ் கட்டிட்டு அப்புறம் வந்து க்ளாஸ் அட்டென்ட் பண்ணு” என்று கல்லூரியின் முதல்வர் போல அமர்ந்துகொண்டு அந்த பொம்பளை பேச, அவள் பேசிய விதத்தில், அந்த இடத்தில் ஒரு ஆண் நின்றிருந்தால் கண்டிப்பாக ரிஷ்வந்த் அடித்திருப்பான்.

தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு வகுப்பிற்கு வந்தவன், எதுவும் பேசாமல் தன்னுடயை சைட் பேக்கை மாட்டிக்கொண்டு, வகுப்பைவிட்டு வெளியேற, இதையெல்லாம் பல வருடங்களாக பார்த்திருந்த ப்ரொபசருக்கோ, என்னவென்று புரிய, அவர் எதையும் கேட்டு அவனை சங்கடப்படுத்தவில்லை.

அவனுடைய படையினராலும் எழுந்து செல்ல முடியவில்லை. நிஹாரிகா எழ முயல, அவளின் கையைப் பிடித்த கவின் அவளை நகரவிடாமல் செய்தான். ஆபிஸ் ரூமிலிருந்து வரும் வழியிலேயே, தன் அலைபேசியில் இருந்து என்ன நடந்தது என்று குறுஞ்செய்தியை கவினிற்கு அனுப்பிவிட்டான் ரிஷ்வந்த். மேலும் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று வேறு அனுப்பியிருந்தான்.

“விடு கவின்.. நான் போகணும்” அவள், அவன் கையிலிருந்து தன் கரத்தை அமர்ந்தபடியே கிசுகிசுத்து உருவ முயல,

“அவனுக்கு ஏதோ ஸ்காலர்ஷிப் சர்டிபிகேட் வந்திருக்காம். அதை வாங்கப் போறான். நாளைக்கு வந்திடுவான்” என்று கவின் பொய்யை நன்கு நம்பும்படி சொல்ல, “ஹோ, அப்ப சரி” என்றவள் ப்ரொபசர் எடுக்கும் பாடங்களில் மூழ்கினாள்.

தந்தையைப் பார்க்க வழி முழுதும் எதை எதையோ யோசித்தபடி வந்தவனுக்கு முதல்முறையாய், நிஹாரிகாவுக்கும் தனக்கும் சரி வருமா என்றிருந்தது.

அவளின் நிலைக்கும் தன் நிலைக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது என்று நினைத்தவனுக்கு, ‘காலம் கடந்து வரும் ஞானோதயம்’ என்று வெறுப்பாக இருந்தது. 

அதுவும் தற்போது தந்தை தான் கூறியதை நம்பவில்லை என்று உணர்ந்த ரிஷ்வந்த், தலையை அழுந்தக் கோதினான். அவரின் நிலையில் இருந்து யோசித்தவனுக்கு, முதல்முதலாய் ஏன் இந்தக் கல்லூரியை தேர்ந்தெடுத்தோம் என்று இருந்தது.

அவருக்கோ முதல்முறையாக, வாழ்க்கையில் பணத்தை நாடி ஓடாமல், இதுபோதும் என்று இருந்தது தவறோ என்று தோன்ற, அவமானத்தில் நெஞ்சில் உசியாய் ஏதோ வலி குத்துவது போல இருந்தது. வலித்த இடத்தில் அவர் நெஞ்சைத் தேய்த்துக்கொள்ள, ரிஷ்வந்திற்கு தந்தையின் செயல் பகீரென்று ஆக்க, இரத்த அழுத்தம் வேறு ஏற்கனவே அதிகம் உள்ளவரிடம் வீட்டிற்கு வந்த பின் சொல்லாமல், இங்கேயே வந்து சொன்னது தவறோ என்று எண்ணினான்.

“அப்பா, நான் வீட்டுக்குப் போறேன். நீங்க எதையும் நினைக்காதீங்க பாத்துக்கலாம். இல்லைனா இப்பவே வாங்க. இரண்டு பேரும் வீட்டுக்கு போலாம்” என்றிட, மகனின் எண்ண ஓட்டம் புரிந்தவராய், மெலிதாய் புன்னகைத்தவர்,

“நீ வீட்டுக்குப் போ. அம்மாகிட்ட நான் சொல்றேன். நாளைக்கு ஃபீஸ் கட்டிடலாம்” என்றவர் மகனின் தோளில் தட்டிவிட்டுச் செல்ல, தந்தையின் யோசனை தெரியாமல் வீட்டிற்கு நடக்க ஆரம்பித்தான் அவரின் மகன்.

கனகராஜ் நினைத்தால் பிரகாஷிடம் வாங்கலாம். ஆனால், அவருக்கு பிரகாஷிடம் வாங்க விருப்பமில்லை. அவர் எதுவும் நினைத்துக்கொள்ள மாட்டார் என்றாலும், கேட்டால் அனைத்தையும் அவரே பார்த்துக் கொள்வார் என்றாலும், நல்ல நிலையில் பிரகாஷ் உயர்ந்த பிறகு அவரிடம் கேட்பது கனகராஜுக்குப் பிடிக்கவில்லை. பண மாற்றை இருவரின் பாசத்துக்கு நடுவில் கொண்டு வர விரும்பாதவர், அலைபேசியை எடுத்து மனைவிக்கு அழைத்தார்.

ஏதோ சொல்ல முடியாத வலி அவருக்கு நெஞ்சில் குத்துவது போல எழுந்தது.

வீட்டிற்கு வந்து அன்னையிடம் எதுவும் சொல்லாமல் ரிஷ்வந்த் அமர, அவனிடம் வந்து தனது மூன்று பவுன் மெல்லிய தங்க நெக்லஸைத் தந்தவர், “இதை போய் சேட்டு கடைல வச்சு பணத்தை வாங்கிட்டு வா ரிஷிப்பா” அவர் சொல்ல, சடாரென எழுந்தவன், வெளியே செல்ல எத்தனிக்க, அவனின் கையைப் பிடித்துத் தடுத்தவர், மீண்டும் அதையே சொல்ல அன்னையை கோபமாக முறைத்தான் ரிஷ்வந்த். 

“அம்மா ஏன்மா இப்படி எல்லாம் பண்ணி கஷ்டப்படுத்தறீங்க.. ச்சை!” என்று தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்தவன், “தயவு செஞ்சு எடுத்துட்டுப் போங்க இதை” என்று பல்லைக் கடிக்க அவனின் கழுத்து நரம்புகள் புடைத்து எழுந்தன.

கண்கள் எல்லாம் அவமானத்தாலும், இயலாமையாலும் அவனுக்கு கோவைப்பழமாய் சிவந்தது. கோபத்தால் கண்கள் கூட சிறிது கலங்கியது. 

“நீ சம்பாரிச்சு அம்மாக்கு எடுத்துக்குடு ரிஷிப்பா. இப்ப நான் சொன்னதை செய்” அவர் சொல்ல அவரின் மகனோ அதை வாங்கவேயில்லை.

“இப்ப நீ இதை வாங்கலை. நான் சாப்பிடமாட்டேன்” என்று அவர் மகனிடம் வாதாட, அன்னையின் பிடிவாதம் அறிந்தவன் அவன். தந்தையிடம் சண்டையிட்டால் மூன்று நாட்கள் கூட சாப்பிடாமல் இருப்பவர் அவர் என்று அவனுக்கு நன்கு தெரியும். 

வேறு வழி இல்லாமல் வேதனையோடு அதை வாங்கினான்.

தந்தை சிறுவயதில் இருந்து சொல்லி வளர்த்தது வேறு அவனுக்கு ஞாபகத்தில் வந்து தொலைத்தது. ‘இங்க பாரு ரிஷ்வந்த். வீட்டுப் பொண்ணுங்களை அழ வைக்கவே கூடாது. அப்படி பண்ணா நம்மள தான் அது பாதிக்கும். அதே மாதிரி எந்தப் பொண்ணையும் வேதனை படுத்தவே கூடாது.’

‘அப்புறம் எந்தக் கஷ்டம் வந்தாலும் வீட்டுக்கு வர பொண்ணு நகைல கை வைக்கக் கூடாது நீ. அது உன்னோடதும் கிடையாது. எங்களோடதும் கிடையாது. அது அந்தப் பொண்ணோடது. அந்தப் பொண்ணுக்காக அவங்க அம்மா அப்பா போட்டு அனுப்பறது. அதுல கை வைக்க நமக்கு உரிமை இல்ல’ என்று சொல்லிச் சொல்லி வளர்த்த தந்தை இன்று அன்னையிடம் நகையை கொடுக்கச் சொல்லி இருக்கிறார் என்றால், எந்தளவு பணக் கஷ்டத்தில் இருக்கிறார் என்று புரிந்துகொண்டான் அவன்.

வீட்டின் நிலை முன்பு ஓரளவு புரிந்திருந்தாலும், இப்போது முழுதாக அவனுக்குப் புரிந்தது.

கனத்த மனதுடன் அடகு கடைக்குச் சென்றவன், நகையை வைத்துவிட்டு பணத்தை வாங்க, அவனுடைய அலைபேசி அடித்தது. புருவ மத்தியில் கோடுகள் விழ அதைக் கண்டவன் எடுத்துக் காதில் வைக்க, எதிர்முனையில் வந்த செய்தியில் அடுத்தநொடி புயலின் சீற்றத்தோடு எழுந்தான்.