நிஹாரி-19

IMG-20211003-WA0016-154e1898

நிஹாரி-19

“அவ இன்னும் வரலையா?” என்று கவினின் அருகில் அமர்ந்த ரிஷ்வந்த், எப்போதும் கவினிற்கும் தனக்கும் இடையில் அமரும் நிஹாரிகா காணாமல் இருக்கக் கேட்டான்.

“ஏன்? காலேஜ் பேக் சைட் கூட்டிட்டு போகப் போறியா?” கவின் அவன் காதருகில் முணுமுணுக்க, கையில் வைத்திருந்த நோட்டை நண்பனின் வாயில் ரிஷ்வந்த் விசிற, நோட் அவன் வாயைப் பதம் பார்த்தது.

“கம்முனு இருடா” என்று தலைகுனிந்து சிகையை அழுத்தமாய்க் கோதியவனின் வெட்கம், கவினின் கண்களில் படாமல் இருக்கவில்லை.

“ஹம்ம்ம்” என்ற வாயைத் தேய்த்துவிட்டபடியே பெருமூச்சை விட்ட கவின், “நீயே ஃபோன் பண்ணிக் கேளு” என்றான் பெஞ்ச்சைத் தட்டியபடியே.

அவனை முறைத்த ரிஷ்வந்திற்கோ நிஹாரிகாவுக்கு எப்படி அழைப்பது என்று இருந்தது. இத்தனை வருடங்களாக காதல் என்பது இருவருக்கும் இடையில் அழகிய பந்தம் போல இருந்தாலும், இருவருமே அதைப் பற்றி வாய்விட்டுப் பேசிக்கொண்டது இல்லை. இருவரின் உணர்வும் இருவருக்குப் புரிந்தாலும், ஏனோ வாய்விட்டுச் சொல்லிக்கொள்ள எண்ணம் வரவில்லை. மனமும் மிகவும் நெருங்கி காதலில் கட்டுண்டு இருக்க, மனதின் அருகாமையே இருவருக்கும் அத்தனை சுகத்தைக் கண்டது.

நேற்றுதான் தங்களது காதலை வாய்விட்டு பரிமாறிக் கொண்டனர். தங்கள் இதழ் யுத்தத்தால். கோபத்தில் தொடங்கிய சம்பாஷனைகள் இறுதியில் மறக்க முடியாத, எப்பொழுது நினைத்தாலும் உடல் சிலிர்த்து நாணத்தில் பூரிக்கும் நினைவோடு முடிந்திருந்தது.

நேற்று வீட்டிற்கு சென்ற இருவருமே, தினமும் ஒரு மணிநேரம் ஆகாமல் அலைபேசியை வைக்கும் பழக்கத்தை விட்டிருந்தனர். இருவருக்குமே நடந்து முடிந்த நீயா நானா என்று பரிமாறிய ஒன்றில், வெட்கம் வேறு வந்து இருவரையும் பேசிவிடவில்லை.

அன்று இரவு பெட்டில் தூக்கம் வராமல் இருவரும் புரண்டு புரண்டு, உருண்டு உருண்டு அவர்களின் படுக்கைகளைத் தூங்கவிடாமல் இம்சித்துக் கொண்டிருந்தனர்.

ரிஷ்வந்திற்கோ, ‘நாளைக்கு உன்னை எப்டிடி ஃபேஸ் பண்ணுவேன். உனக்கு என்ன.. என்னைவிட தைரியமானவதான். உன்னைவிட எனக்கு தான்டி ஷையா இருக்கு’ என்று மனதுக்குள் புலம்பியவன், குப்புறப் படுத்து தலையணையில் முகம் புதைத்து, தனக்குள் இருந்த இளமை உணர்வு எழுந்ததிலும், அதை சிறிதே சிறிது அவளிடம் முதல் படியில் காட்டிய விதத்தில் ஆணின் கர்வத்தோடு உறங்கிப் போனான்.

அடுத்தநாள் கல்லூரிக்கு வந்து முதல் வேலையாக ஃபீஸைக் கட்டியவன், தலையைக் குனிந்தபடியே வகுப்பிற்குள் வர, தன்னவளைக் காணாமல் தவித்துத்தான் போனான் ரிஷ்வந்த். இதில் கவின் வேறு அவனைக் கேலி செய்திருக்க, தன்னவளின் அலைபேசிக்கு குறுஞ்சிரிப்போடும், அவளைக் காணாமல் போன சிறிது கோபத்தோடும் அழைத்தான்.

இவன் இரண்டு முறை அழைத்தும், அவள் எடுக்கவே இல்லை. அவன் வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பியும் பலன் இல்லை. அவள் இறுதியாக வாட்ஸ் ஆப் வந்திருப்பது, நேற்று இரவு பத்தரை பணி என்று லாஸ்ட் சீனில் அவனுக்குக் காட்டியது.

“டேய் கவின், நிஹி ஃபோனும் எடுக்கல. மெசேஜும் பார்க்கல” என்று ரிஷ்வந்த் புலம்ப, கவினுக்கோ நண்பனின் அலப்பறையில், சிங்கிளாக இருந்த வெறுப்புநிலை கடுப்பைக் கிளப்பியது.

‘நான் இரண்டு நாள் வரலைன்னா.. என்ன மச்சா செத்துட்டியா.. நான் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடிக்க சொல்லிடவான்னு கேக்கற வெண்ணை. இன்னிக்கு அலப்பறை பண்றானே ஆண்டவா..’ மனதுக்குள் வெதும்பியவன், எரிச்சலுடன்,

“ஆங்! நீ பண்ண வேலைல கெய்லி ஜென்னர் மாதிரி வாய் வீங்கி இருக்கும். அதான் லீவ் போட்டிருப்பா” கவின் புகைய, அவனின் வாயை அடைத்த ரிஷ்வந்த், “மெதுவாடா ****” என்று கடிந்தான்.

யாருக்காவது கேட்டால் கல்லூரி முழுக்க பரவிவிடும் என்று அவன் அறிந்தது. அதுவும் அவர்கள் படிக்கும் கல்லூரியில் காட்டுத் தீயைப் போல, எந்தவொரு செய்தியும் பரவிவிடும் என்று யாராலும் மறுக்க முடியாது. வேறு ஏதாவதாக இருந்தால் கண்டு கொள்ளமாட்டான். ஆனால், தன்னவளின் பெயரும் சேர்ந்து அடிபடுவதை அவனால் அனுமதிக்க முடியாதே!

அதனாலேயே நண்பனை அடக்கினான். ஆனால், அவனையும் அந்த இடத்தில், ‘உன்னை விட அவள் முக்கியம்’ என்று ரிஷ்வந்த் காட்டிக் கொள்ளவில்லை. நண்பர்கள் இருவரும் அவ்வப்போது இப்படி மாற்றி மாற்றி திட்டிக்கொள்வது வழக்கம் தானே.

“மச்சி, என்னவா இருக்கும்” ரிஷ்வந்த் ஆயிரமாவது முறையாக மதிய இடைவேளையில் கவினை இம்சிக்க, அவன் இனிக்கேட்டால் அழுதுவிடுவேன் என்னும் நிலையில் அவனை ஒரு பார்வை பார்த்தான்.

“பேசாம போய் நேர்ல பாக்கலாம் வாடா” ரிஷ்வந்த் முன்னே சென்று கொண்டிருந்த கவினின் தோளைப் பிடித்து இழுக்க, “டேய்! டேய்! ஏன்டா அலப்பறை பண்ற.. அவளே கால் பண்ணுவாடா. நீ அப்பப்ப ஆவேசம் ஆகி, என் தோளைப் பிடிச்சு இழுக்காதடா சாமி. சட்டை கிழிஞ்சு வந்திரும் போல அப்படியே” என்று கவின் பேசிவிட்டுச் செல்ல ரிஷ்வந்த் மீண்டும் நிஹாரிகாவுக்கு அழைத்துப் பார்த்துவிட்டு, கவினின் அருகில் சலிப்புடன் அமர்ந்தான்.

வகுப்பில் அமர்ந்துகொண்டு, ஆசிரியர் பாடம் நடத்தும் போது கூட, ரிஷ்வந்த் ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை ஃபோனை எடுத்துப் பார்ப்பதைக் கண்ட கவினிற்கு, நண்பனைக் காணும்போது பாவமாகக் கூட இருந்தது.

மாலை கல்லூரி முடிய இருவரும் நிஹாரிகாவைத் தேடி அவளது இல்லத்திற்குச் சென்றனர். வீடு என்பதை விட பெசன்ட் நகரில், கடலோரம் இருந்த பெரிதும் இல்லாத சிறிதும் இல்லாத வில்லா அது. கல்லூரி சேர்ந்த புதிதில் நண்பர்கள் அனைவரும் ஒரு ஞாயிறு அங்கு சென்றது.

வில்லாவிற்கு வந்த ரிஷ்வந்தையும் கவினையும் அறிந்த வாட்ச் மேன் உள்ளே அனுமதிக்க, தன்னவளைப் பார்க்கும் ஆர்வத்தில், தலையை அழகாய்க் கோதிவிட்டு, உதட்டில் புன்னகையுடன், காலிங் பெல்லை சரியாக ரிஷ்வந்த் அழுத்தும் முன், வில்லாவிற்குள் ஒரு பிஎம்டபிள் யூ கார் வழுக்கிக்கொண்டு வந்து நின்றது.

இருவரும் கார் வந்த சத்தத்திலும், வேகத்திலும் திரும்பிப் பார்க்க, நிஹாரிகா சிரித்தபடி காரில் இருந்து இறங்க, மறுபக்கம் காரை ஓட்டி வந்தவன் ஸ்டைலாக பணத்தின் செழிப்பு உடையிலும், உடல் மொழியிலும், தோற்றத்திலும் நிரம்பி வழிய இறங்கினான்.

இருவரையும் கண்ட ரிஷ்வந்திற்கு சந்தேகமோ, கோபமோ எதுவுமே வரவில்லை. மாறாக மனதின் ஓரத்தில் தன்னவள் மற்ற ஆணுடன் சிரித்துப் பேசுவதைக் கண்டு, சுருக்கென்று ஒரு பொசசிவ்நஸ் உண்டானது. இருந்தாலும் தன்னவளைப் பற்றி அறிந்தவனாக மனதை கட்டுப்படுத்தி தன்னைத் தானே சமாதானப் படுத்திக்கொண்டிருந்தான்.

ரிஷ்வந்தைக் கண்ட நிஹாரிகா தன் முத்துப் பற்கள் மின்ன, “ரி..” என்று குதூகலமாகத் தொடங்கியவள், நவ்தீப் தன்னை உற்று கவனிப்பதை உணர்ந்து முக மாற்றத்தை மாற்றிக்கொண்டாள். அவன் எதையாவது சென்று அர்ஜூனிடம் உளறினால் அவர் தாத்தாவிடம் கண்டிப்பாக சொல்லிவிடுவார் என்று அவளுக்குத் தெரியும்.

“நவ்தீப், இவங்க தான் என் பிரண்ட்ஸ்.. இது ரிஷ்வந்த்.. இது கவின்” என்று இருவரையும் அறிமுகம் செய்தவள், “நான் சொல்லுவேன்ல அர்ஜூன் அங்கிள்னு. இவன் அவங்க பையன் நவ்தீப். சின்ன வயசுல இருந்து என்னோட பிரண்ட்” நிஹாரிகா மூவருக்கும் மூவரையும் அறிமுகம் செய்து வைக்க,

“ஹாய்” என்றான் நவ்தீப் தன் ரேபான் கூலர்ஸை கழற்றியபடி. கவின் பதிலளிக்க, ரிஷ்வந்த் சிரிப்பை மற்றும் உதிர்த்தான்.

“வாங்க உள்ள போகலாம்” நிஹாரிகா ரிஷ்வந்தை வேண்டும் என்றே உரசியபடி காலிங் பெல்லை அழுத்த, ‘சரியானவடி நீ’ என்று தன்னவளை நினைத்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.

உள்ளே நுழைந்தவர்களை அமர வைத்தவள் கிட்சனுக்குள் நுழைய, தன் எதிரே கால் மேல் காலிட்டு அமர்ந்திருந்த நவ்தீப்பின் பார்வையில் ரிஷ்வந்தின் புருவங்கள் சுருங்கின. நவ்தீப்பின் பார்வை தன் முதுகுக்குப் பின், சமையல் அறைக்குள் சென்று கொண்டிருந்த நிஹாரிகாவை, காதலும் ஆசையுமாகப் பார்ப்பதை உணர்ந்த ரிஷ்வந்திற்கு திக்கென்று இருந்தது.

அவனின் பார்வைகள் ஆயிரம் ஆசைகள் சொல்ல, ஒரு ஆண் மகனிற்குத் தெரியாதா இன்னொரு ஆணின் பார்வை. முகத்தில் எந்தவொரு உணர்வையும் காட்டாமல், நிஹாரிகாவைத் தொடர்ந்த நவ்தீப்பின் பார்வையைப் புரிந்தவனுக்குத் தெள்ளத் தெளிவாகத் தெரிந்து போனது, நவ்தீப்பிற்கு நிஹாரிகா மேலுள்ள ஆசை.

கவினோ அங்கிருந்த மேகசினை புரட்டிக் கொண்டிருக்க, அவன் இருவரையுமே கவனிக்கவில்லை. நிஹாரிகா உள்ளே வேளையாளிடம் ஏதோ செய்யச் சொல்லிக்கொண்டு இருக்க, நவ்தீப்பின் விழிகள் நண்பர்கள் இருவரையும் மேலிருந்து கீழ் அளந்தது.

இருவரையும் கண்களால் ஆராய்ச்சி செய்தவனுக்கு, ‘லோக்கல்ஸ்’ என்றே மனதில் எழுந்தது. இத்தனைக்கும் அவர்கள் ஒன்றும் அவன் இழிவாக நினைப்பது போல இல்லை. நாகரிகமாக உடை உடுத்தி பார்க்க பண்பான இளைஞர்களாகவே தோற்றத்தில் இருந்தார்கள். நவ்தீப்பின் லட்சக் கணக்கு பெறுமதி பெற்ற ப்ரான்டட் உடைகள், கடிகாரம், பிளாட்டினம் செயின் அனைத்தின் முன்னால், அவனுக்கு அனைத்தும் தனக்குக் கீழே தெரிந்தது.

நவ்தீப்பை ரிஷ்வந்த் கவனிக்கவில்லை என்றாலும், அவனின் பார்வை அவன் நினைப்பதை மொழியாய்க் கக்க, ரிஷ்வந்திற்கு கை முஷ்டிகள் இறுகியது. அடக்கிய எரிச்சலுடன் அமர்ந்திருந்தான் நிஹாரிகாவின் காதலன்.

சமையல் அறையில் இருந்து வெளியே வந்த நிஹாரிகா, இருவருக்கும் மிஸ்க் ஷேக்கைத் தர, நவ்தீப்பிற்கு மட்டும் ப்ரஷ் ஜூஸைத் தந்தாள்.

“உங்க பேவ்ரைட் மில்க் ஷேக்” என்று இருவரிடமும் மில்க் ஷேக்கை நீட்டியவள், “நவ்தீப், உனக்கு கூலா எதுவும் ஆகாது தானே” என்று ஜூஸை நீட்ட, மூவருக்கும் நாசுக்காக, ‘நான் யாருக்கும் பாகுபாடு பார்க்கவில்லை சாமி’ என்று சொல்லிவிட்டாள்.

நவ்தீப்பிடம் ஜூஸைத் தந்தவள் அங்கிருந்த ஒற்றை ஆள் அமரக்கூடிய ஷோபாவில் அமர எத்தனிக்க, அவளின் மணிக்கட்டைப் பற்றிய நவ்தீப், “இங்கையே உட்காரு” என்றிட, அவன் இன்று உரிமையாய் கை பிடித்ததில் நிஹாரிகாவுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், அவனின் மனதை அறியாதவள், அவளின் கரத்தை நாசுக்காக உருவிக்கொண்டு, நவ்தீப் அமர்ந்த ஷோபாவிலேயே, சற்று நகர்ந்து அமர்ந்து ரிஷ்வந்தை ஓரக்கண்ணால் பார்த்தாள்.

தன்னுடைய மொத்த கோபத்தையும், ஆங்காரத்தையும் அடக்கி முகத்தில் எதையும் காட்டாமல், அவன் அவளைப் பார்த்திருக்க, அவனின் பார்வை எதையும் சொல்லாது இருக்க, குழம்பியவளுக்கு சிறிது அச்சமாகவும் இருந்தது. சண்டை போடுவானோ அல்லது திட்டுவானோ என்று எல்லாம் அவளுக்கு என்றும் பயம் இல்லை. தன்னைப் பற்றி தவறாக நினைத்து விடுவானோ என்றுதான் அவளுக்கு அச்சம்.

மேலும் நவ்தீப்பின் மனம் அறியாமல், அவள் நிலையில் இருந்து பார்த்தவளுக்கு, அவனையும் குறை கூற முடியவில்லை. நான்கு வருடங்களுக்கு முன் வெளிநாடு பறந்து சென்று படித்து முடித்தவன், நான்கு நாட்களுக்கு முன்தான் இந்தியா திரும்பி இருந்தான்.

நான்கு வருடங்கள் கழித்து தன் நட்பு மறக்காமல் பார்க்க வந்தவனையும் அவளால் கடிய முடியவில்லை.

கவினோ ரிஷ்வந்தின் முகத்தையும், நிஹாரிகாவின் முகத்தையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான். ரிஷ்வந்தின் அமைதி அவனுக்கு ஏதோ ஒன்று சரியில்லாமல் நடக்கப் போவதை உள்ளுக்குள் உணர்த்த, அவனின் இதயத் துடிப்பு பந்தயக் குதிரையின் வேகத்திற்கு ஈடு கொடுத்து துடித்தது.

“ஏன் ஃபோனை எடுக்கல?” ரிஷ்வந்தின் குரல் சற்றுக் காட்டமாக ஒலித்ததோ என்னமோ.

“காலைல நான் காலேஜ் கிளம்பி கீழே வந்தேன். சர்ப்ரைஸா வந்து ஹால்ல உக்காந்துட்டு இருந்தான் இவன். நாலு வருசம் கழிச்சு பாக்கறேன். செம ஷாக் எனக்கு. வெளிய கூப்பிட்டான், ஸோ ஃபோனைக் கூட மறந்துட்டு கிளம்பிட்டேன்” நிஹாரிகா இலகுவாக சொல்வது போல தன்னவனுக்கு முழு விளக்கத்தையும் தந்திருந்தாள். அவள் அவனிற்குத் தந்த முழு விளக்கத்தை நவ்தீப்பும் கவனிக்கத் தவறவில்லை.

“யெஸ்.. நாலு வருஷம் கழிச்சு இவளைப் பாக்கறேன்” என்று நவ்தீப் நிஹாரிகாவின் தலையில் கொட்ட, ரிஷ்வந்த் எழுந்துவிட்டான்.

ரிஷ்வந்த் எழுந்ததில் கவினும் எழ, “சரி.. நாங்க வர்றோம். இன்னிக்கு ஆளையே காணோமா. அதான் பாக்க வந்தோம்” என்றவன் கிளம்ப எத்தனிக்க, நவ்தீப்பிடம் சொல்லிட்டு ரிஷ்வந்துடனும், கவினுடனும் வெளியே வந்தவள், “ஸாரி” என்றாள் பொதுவாக.

ரிஷ்வந்த் அவளைக் கேள்வியாய்ப் பார்க்க, “உனக்கு அட்லீஸ்ட் மெசேஜாவது பண்ணிட்டு போயிருக்கணும்” என்றாள் தன் மேலுள்ள தவறை உணர்ந்து உதடுகளை லேசாய்க் குவித்தபடி.

“ம்ம்” என்ற ரிஷ்வந்த், “உன்கிட்ட இன்னொன்னு சொல்லணும்டி. நான் பார்ட் டைம் ஜாப் மாதிரி அண்ணா நகர்ல இருக்க டாமினோஸ்ல சேர்ந்து இருக்கேன்” என்றான் உணர்வில்லாத குரலில். அவனுக்கு ஏனோ முதல் பார்வையிலேயே நவ்தீப்பைப் பிடிக்கவில்லை.

“அதுக்கு ஏன்டா மூஞ்சிய இப்படி வைக்கற. பெருமையா சொல்லு. நான் பார்ட் டைம்ல சம்பாரிக்கறேன்னு” என்று அவனின் தோளைத் தட்டியவள், “ஐம் ஸோ ப்ரௌட் ஆப் யூடா” என்றவள், வீட்டிற்குள் தன் வெண் பாதங்களைத் தூக்கி, ஒரு நிமிடம் எட்டிப் பார்த்துவிட்டு கவினின் கண்களை ஒற்றைக் கையால் மூடி, ரிஷ்வந்தை தைரியமூட்டும் விதமாய் அணைத்து விலகினாள். தன்னவன் என்ன செய்தாலும், அவளுக்கு ஒரு கவுரவக் குறைச்சல் இல்லை. அது அவளுக்கு எப்போதும் பெருமையே.

“அய்யோ, நான் எதுமே பார்க்கல” கவின் கேலி செய்ய, அதைக் கூட உணராத ரிஷ்வந்த், இன்னும் முகத்தில் பல வித சிந்தனைகளுடனும், குழப்பங்களுடனும் நின்றிருந்தான்.

“என்ன யோசிக்கற?” நிஹாரிகா ஒருவித வாட்டத்துடன், அவனின் முகம் காண சகிக்காதவளாய் வினவ, “மச்சி” என்று கவினும் அவனின் தோளை அழுத்த, சுயநினைவிற்கு வந்தவன், “நத்திங்” என்று நிஹாரிகாவிற்காக புன்னகை செய்தான். அந்தப் புன்னகை எப்போதும் இருக்கும் ரிஷ்வந்த் இது இல்லை என்று நிஹாரிகாவுக்குப் புரிந்தது.

அவனின் விழிகளை நேராகச் சந்தித்தவள், எதையோ உணர்த்திவிடும் நோக்கத்தோடு, “எதுவும் யோசிக்காத டா” என்றாள். அவளுக்கு ஏதோ அவனின் முகம் சரியில்லாமல் இருப்பதைப் பார்த்து, மனதுக்குள் இனம் புரியாத பதட்டம் எழுந்தது.

“ரிஷ்வந்த் இந்தா இதை போட்டுக்க. டெய்லி நைட். தழும்பு விழாம இருக்கும்” என்று நேற்று, அவனின் தலையில் இருந்த அடியைப் பார்த்தவள், கவினிடம் விசாரித்திருக்க, இன்று நவ்தீப்புடன் சென்றிருந்தவள் மறக்காமல் தன்னவனுக்கு நெற்றியில் தழும்பு விழாமல் இருக்க, ஒரு மருந்தை வாங்கி வந்திருந்தாள்.

அவள் பட்டு விரல்களோடு தன் முரட்டு விரல்களைக் கோர்த்தவன், “நீ எதையும் யோசிச்சு மனசைக் குழப்பிக்காத” என்றவன், கோர்த்திருந்த தன் விரல்களை அவளின் விரல்களில் தட்டிக் கொடுத்துவிட்டு, கவினுடன் அவளிடம் தலையாட்டி விட்டுக் கிளம்பினான்.

அவர்களை அனுப்பிவிட்டு உள்ளே வந்தவள் நவ்தீப்பிற்கு எதிரே அமர, “நீ ஏன் இந்த மாதிரி பசங்க கூடப் பழகுற நிஹாரிகா” நவ்தீப் வினவ அவனை புரியாமல் பார்த்தாள் நிஹாரிகா.

“..”

“நம்ம ஸ்டேடஸுக்கு தகுந்த மாதிரி இருக்கவங்க கூட பழகு நிஹி. இந்தப் பசங்களைப் பார்த்தா ரொம்ப லோக்கலா தெரியறாங்க” என்றான் முகத்தைச் சுளித்தபடி. அவனின் பேச்சில் நிஹாரிகாவுக்கு கோபம் சுர்ரென்று எகிறியது. என்னதான் சிறிய வயதில் இருந்து அவளின் நண்பன் என்றாலும், அவர்களை அப்படிப் பேசுவதை நிஹாரிகாவால் அனுமதிக்க முடியாது.

“ஸ்டாப் இட் நவ்தீப். அவங்களும் மனுசங்க தான். அவங்கனால தான் நான் இன்னிக்கு இவ்வளவு ஹாப்பியா இருக்கேன். நீ அவங்களை இன்சல்ட் பண்ணா என்னை இன்சல்ட் பண்ற மாதிரி. நான் கிட்சன்ல இருந்தப்ப நீ அவங்கள மேல இருந்து கீழ பாத்ததை கவனிச்சேன் நவ்தீப். அவங்க நம்மள மாதிரி அப்பா, தாத்தா சம்பாரிச்ச காசுல சுகமா வளர்ல. அவங்க எல்லாம் அவங்களா சம்பாரிச்சு ஒரு நாள் முன்னுக்கு வரப் போறவங்க” என்று தன்னவர்களை விட்டுக் கொடுக்காமல், கண்டிக்கும் குரலில் பேசியவள், “டோன்ட் டாக் அபௌட் மை பிரண்ட்ஸ் (DON’T TALK ABOUT MY FRIENDS)” என்று முற்றுப்புள்ளி வைத்தாள்.

“ஓகே நிஹி. எனக்கு அவங்களைப் பத்தி தெரியாது. ஜஸ்ட் உன்னை ஜாக்கிரதையா இருக்கச் சொல்லி வார்ன் பண்றேன். அவ்வளவு தான்” என்றவன் எழ,

“ஸாரி நவ்தீப். நீ அவங்கள சொன்னதை என்னால ஏத்துக்க முடியல. அதான்” என்று சின்னக் குரலில் சொன்னவள், “சாப்பிட்டு போ” என்றிட,

“இல்ல நிஹி. இங்க இருக்க பிரண்ட்ஸ் கூட நைட் பார்ட்டிக்கு போறேன். ஸோ, இன்னொரு நாள் வர்றேன்” என்றவன் கிளம்பிவிட, நிஹாரிகா நெற்றியைப் பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டாள்.

அன்று இரவு பன்னிரெண்டு மணிக்கு வீடு வந்து சேர்ந்த ரிஷ்வந்துக்கு கோபம் இன்னும் அடங்கிய பாடில்லை.

படுக்கையில் ஆக்ரோஷத்தோடு அமர்ந்தவன், கட்டிலை ஆத்திரமாகக் குத்த, அவனின் கையில், இரும்புக் கட்டிலில் உடைந்து இருந்த கூர் பாகம் பட்டு வெட்டு விழுந்தது. அதன் வலியைக் கூட அவனால் உணரமுடியவில்லை. அந்தளவு அவனைக் கோபம் ஆட்கொண்டு பேயாட்டம் போட்டுக் கொண்டிருந்தது.

நிஹாரிகாவுக்கு அழைக்கலாம் என்று நினைத்தவன், தன் முழுக் கோபத்தையும் அவளிடம் காட்டிவிடுவோம் என்று எண்ணி அதையும் கைவிட்டான்.

அடுத்த நாள் கல்லூரிக்கு வந்த நிஹாரிகா அவனின் அருகில் அமர, அவனோ, அவளைப் பார்க்காமல் சுத்தமாக அழிக்கப்பட்டிருந்த கரும்பலகையை வெறித்துக் கொண்டிருந்தான். நிஹாரிகாவைப் பார்க்கக் கூட அவன் அஞ்சினான். தன் முழுக் கோபத்தையும் அவளிடம் காட்டி, அவளை வார்த்தையால் வதைத்துவிடுவோமோ என்று பயந்தான் அவன். அவள் மறுபடியும் மன உளைச்சலுக்கு ஆளவதை அவன் விரும்பவில்லை.

ஆனால், அவன் முடிவிலும் அவன் தெளிவாய் இருந்தான்.

அவனருகில் அமர்ந்து அவனையே பார்த்திருந்தவள், அவன் இஞ்சி தின்ற குரங்கைப் போல அமர்ந்திருப்பதைக் கண்டுவிட்டு, ‘ப்ச்’ என்று சலித்துக் கொண்டு வேண்டுமென்றே கவினிடம் திரும்ப, “நிஹாரிகா!” என்ற ரிஷ்வந்தின் அதிகாரக் குரல் அவளைத் திரும்ப வைத்தது.

அவனை, அவள் கேள்வியாகப் பார்க்க அவனோ, அவளைப் பார்க்காமல் கரும்பலகையையே, இருந்த நிலை மாறாமல், வெறித்துக் கொண்டு இருந்தான். நிஹாரிகாவுக்குப் புரிந்தது, அவன் எதையோ சொல்ல நினைக்கிறான் என்று. உள்ளுக்குள் காரணம் இல்லாமல் ஏதோ உதறியது அவளுக்கு. இருந்தும் மனதை கட்டுப்படுத்தி அவன் பேசக் காத்திருந்தாள்.

“அவன் எப்ப கிளம்பறான்” ரிஷ்வந்த் மொட்டையாக வினவினாலும் நிஹாரிகாவுக்கு புரிந்தது அவன் யாரைக் கேட்கிறான் என்று.

“அதை அவன் கிட்ட தான் கேக்கணும்.. என்னை நேத்து பார்க்க வந்தான்.. கிளம்பிட்டான்” என்றாள்.

“இனிமேல் நீ நவ்தீப் கூட பேசக் கூடாது.. வெளியவும் போகக்கூடாது” என்று ரிஷ்வந்த் அழுத்தமாக, அதே சமயம் அதிகாரமுமாக தன் கையில் வைத்திருந்த பால் பாயின்ட் பென்னை, கோபத்தைக் கட்டுக்குள் வைத்து, பெஞ்ச்சில் தட்டியபடியே சொல்ல, நிஹாரிகாவுக்கு அவனின் செய்கையில் கோபமும், ஆதங்கமும் எழுந்தது.

“சந்தேகப்படறியா டா என் மேல” அவள் தொண்டை அடைக்க வினவ,

“எனக்குப் புடிக்கல” என்றான்.

அவனுடைய உரிமை அவளுக்குப் புரிந்தது. சினிமா உலகில் இருந்தாலும் பாட்டியின் வளர்ப்பிலும், அன்னையின் வளர்ப்பிலும் யாரையும் தன்னிடம் நெருங்க விட்டதில்லை அவள். ரிஷ்வந்தைத் தவிர.

அவளுக்கே நவ்தீப் திடீரென, அவள் கரத்தைப் பற்றியது பிடிக்கவில்லை தான். இருந்தாலும் தன்னைப் பார்க்க ஓடி வந்தவனைத் திட்டவும் அவளுக்கு மனம் வரவில்லை. அப்படி இருந்தவள் தன் நண்பர்களை, அவன் இழிவாய் பேசியதும் அவனைத் தன்னை மறந்து கண்டித்தாள்.

ரிஷ்வந்திடம் புரிய வைக்கும் நோக்கத்துடன், “இங்கப் பாரு ரிஷ்வந்த். அவன் சின்ன வயசுல இருந்து என் பிரண்ட். அன்டர்ஸ்டான்ட் பண்ணிக்க. பேமிலி பிரண்ட் கூட. எப்படி அவாய்ட் பண்ண முடியும். அன்ட் இப்படி எல்லாம் சொல்லாதடா. உனக்கு புடிக்கல அப்படிங்கறது எல்லாம் ஒரு காரணமா?” அவள் அவன் கைகளைப் பிடித்தபடி வினவ,

“நான் சொல்றதைக் கேக்கணும்னு நினைக்கறியா இல்லியா. இல்ல உன் இஷ்டத்துக்குத் தான் இருப்பேனா இருந்துக்க” ரிஷ்வந்த் அவள் கைகளில் இருந்து, தன் கைகளை விலக்கியபடி சொல்ல, இத்தனை வருடத்தில் பார்க்காத ரிஷ்வந்தைப் பார்த்த நிஹாரிகாவுக்கு யாரோ நெஞ்சில் அடித்ததைப் போல இருந்தது. அவனின் பாரா முகம் அவளை ஏதேதோ செய்தது. சொல்ல முடியாத உணர்வு. அழவும் இல்லை. சண்டையும் இடவில்லை. ஆனால், தாங்கிக்கொள்ள முடியாத உணர்வு.

இருந்தாலும் தன் விளையாட்டுத் தனத்தை விடாதவளாக, அவனுடன் நெருங்கி அவனை இடித்தபடி அமர்ந்து, “இந்தப் பொசசிவ்நஸ் எல்லாம் கூடாது கண்ணா. இவ்வளவு பொசசிவ்நஸ் வருமா நா(என்) பாவாக்கு” என்று தன் போக்கில் பேசியவள், இறுதியில் நாக்கைக் கடித்துக் கொள்ள, அவளின், ‘பாவா’ என்ற அழைப்பில் அத்தனை நேரம் கோபத்தில் விறைத்து நேராய் அமர்ந்திருந்தவன், விழிகள் விரிய அவளை நோக்கித் திரும்பி,

“ஹே.. பாவான்னா உங்க பாஷைல..” என்று அவன் உதட்டில் புன்னகையை நெளியவிட்டு, கண்கள் மின்னக் கேட்க வர, அதற்குள் கரடியாய் வகுப்பிற்குள் நுழைந்தார் முதல் வகுப்பு எடுக்கும் ஆசிரியர்.

மாலை நண்பர்கள் படை கல்லூரியில் இருக்கும் குட்டி சாண்ட்விச் காண்டினில் வயிறு வலிக்க, சிரித்துப் பேசி சாப்பிட்டுவிட்டு வெளியே வர, நிஹாரிகாவின் அலைபேசி அடித்தது. ஃபோனை எடுத்தவள் திரையைப் பார்க்க, “நவ்தீப்” என்று திரையில் ஒளிர, அவளின் கைகளைத் தன் கைகளுக்குள் அழகாய் பிடித்து வைத்திருந்த ரிஷ்வந்த், அதைப் பார்த்துவிட்டு அவளின் கையை உதறிவிட்டு முன்னே கோபமாகச் செல்ல,

“ரிஷ்வந்த்!” நிஹாரிகாவின் கோபக் குரலில் முன்னே நடந்தவன் நின்றான். ஆனால், திரும்பவில்லை. அவனும் மற்றவர்களைப் போல், தன் கையை உதறிச் செல்வது போலிருந்தது அவளுக்கு. அதன் ஏமாற்றம்தான் கோபத்தின் உருவாக சீற்றத்தோடு வெளியே வந்தது.

இருவருக்கும் இடையில் பத்தடி இடைவெளி இருக்க, விதியோ காற்றின் உருவில் இருவருக்கும் நடுவில் வந்து நின்று, அந்த இடைவெளியை இன்னும் பெரிதாக்க ஆரம்பித்தது.

அவன் அமைதியாய் நிற்க, “இப்ப எதுக்கு இப்படி பிஹேவ் பண்ற?” நிஹாரிகா குரலை உயர்த்த, நண்பர்களோ இருவரையும் சமாதானம் செய்ய வகையறியாது நின்றனர். ஆனால், இருவரும் யாரையும் கவனிக்கும் நிலையில் இல்லை.

“இப்ப நீ அவனை கட் பண்ணப் போறியா இல்லையா?” திரும்பாமல் ரிஷ்வந்த் அழுத்தமாக வினவ, அவனுக்குத் தன் மேல் நம்பிக்கை இல்லையோ என்று நினைக்க ஆரம்பித்தவளுக்கு, ஆயிரம் பேரிடிகளாய் ஆத்திரம் உள்ளுக்குள் எழுந்தது.

“முடியாது!” என்று நிஹாரிகா குரலை உயர்த்தி, முடிவாக தன் முடிவைச் சொல்ல, கோபமும், ஆத்திரமும், ஆக்ரோஷமும், ஆங்கரமுமாக திரும்பியவனைக் கண்ட நிஹாரிகா, முதல் முதலாக அவன் முகத்தில் கண்ட அனைத்தையும் உணர்ந்து வேறோடி ஸ்தம்பித்து நிற்க, அவன் அழுத்தமானக் காலடியோடு அவளை நோக்கி வந்தான்.