நிஹாரி-20

IMG-20211003-WA0016-f031c5bf

நிஹாரி-20

“உனக்கு நான் முக்கியமா, இல்ல அவன் முக்கியமா?” ரிஷ்வந்த் இறுகிய முகத்துடன், தாடை கடினமாகக் கேட்க நிஹாரிகாவுக்கு, ‘இவனுக்கு என்ன சொல்லி புரிய வைப்பது?’ என்று இருந்தது.

“ரிஷ்வந்த்.. நான் எத்தனை தடவை சொல்றது. அவன் எங்க பேமிலி பிரண்டுன்னு. ஏன் புரிஞ்சிக்க மாட்டிறே?” நிஹாரிகா சலிப்புடன் கேட்க, அவளின் சலிப்பும், பதிலும், அவனின் கோபம் அனைத்தையும் அணு உலையைப் போல வெடிக்கச் சிதறச் செய்தது.

“இதையே சொல்லாதடி. உனக்கு நான் முக்கியமா இல்ல அவன் முக்கியமா?” அவளின் வலது தோளை பலமாகப் பிடித்து ரிஷ்வந்த் உலுக்க, நிஹாரிகாவிற்கு அவன் கோபத்தில் பிடித்த பிடி அதீத வலியைக் கொடுத்தது.

“நீதான் ரிஷ்வந்த் முக்கியம். போதுமா. ஆனா, அதுக்காக நீ பேசக் கூடாதுன்னு சொன்னா நான் ஏன் பேசாம இருக்கணும். நீ மட்டும் இல்ல.. யார் என்ன சொன்னாலும், எனக்கு பிடிச்சா தான் ஒருத்தங்கட்ட பேசுவேன் பழகுவேன். இல்லனா ஐ நெவர் மைன்ட். யாரும் என்னை இப்படி ரூல்(RULE) பண்றது எனக்குப் பிடிக்காது. அதான் என் கேரக்டர். என் மனசு சுத்தமாதான் இருக்கு. ஆனா, உன்..” என்று அவள் முடிக்கவில்லை,

“போதும் நிஹாரிகா. இதுக்கு மேல நான் இந்த கான்வர்சேஷனை பெருசு பண்ண விரும்பல. நீங்க உங்களோட பதிலை தெளிவா சொல்லிட்டீங்க. நானும் புரிஞ்சிக்கிட்டேன். உங்களோட கேரக்டரை நீங்க எனக்காக மாத்திக்க வேணாம். ஸோ, நானும் என்னோட முடிவை உங்கள மாதிரி தெளிவா சொல்லிடறேன்” என்று நிதானமாக வார்த்தையாலேயே விலகலைக் காட்டி அவளை வதைத்தவன், அவளின் தாடையை இறுகப் பற்றி நிமிர்த்தி, அவளின் விழிகளைப் பார்த்து,

“நீ எப்போ அவனை கட் பண்றியோ அப்ப வந்து என்கிட்ட பேசு. அதுவரைக்கும் பேசாத. ரிமெம்பர், நாட் ஈவன் எ சிங்கிள் வோர்ட் (REMEMBER, NOT EVEN A SINGLE WORD)” என்று அடிக்குரலில் கர்ஜிக்க, நிஹாரிகா அவனின் விலகலிலும், பேச்சிலும் சிலையாகி நின்றிருந்தாள். எதையும் திருப்பிப் பேசும் மனநிலையில் கூட அவள் இல்லை. அவனிடம் இவ்வளவு கடுமையையும் அவள் எதிர்பார்க்கவில்லை.

இந்த மாற்றத்தை ஏற்க முடியாமல் மனம் தவிக்க, அவனிடம் இருந்து மெல்ல விலகியவள், அவனின் விழிகளை ஊன்றி கவனிக்க, அதில் அத்தனை தேவையில்லாத கோபம் தான் தெரிந்தது அவளுக்கு. இனி பேசினால் வார்த்தைகள் தடித்து, அவனைக் காயப்படுத்தி விடுவோம் என்று அவளுக்கு நன்கு புரிந்தது.

அவனையும், அங்கிருந்த மற்ற நண்பர்கள் யாரையும் திரும்பிப் பார்க்காமல் நடக்க ஆரம்பித்தாள். நாசி விடைத்து சிவந்திருக்க, ‘அழுகாத நிஹாரிகா’ என்று மந்திரம் போல உள்ளுக்குள் சொல்லிக்கொண்டே வந்தவளுக்குத் தெரியவில்லை, இன்னும் சிறிது நாட்களில் இந்தப் பிரச்சனை பூதாகரமாக வெடித்து, அவன் அவளை வார்த்தையால் கொன்று, கதறவிட்டு இருவரின் காதலையும் புதைக்கப் போகிறான் என்று.

“மச்சி, ஏன்டா இப்படி..” கவின் கோபமாக, சென்று கொண்டிருந்த நிஹாரிகாவை உணர்வில்லாத பார்த்துக்கொண்டிருந்த ரிஷ்வந்திடம் பாய,

“விடுடா” என்றான் ரிஷ்வந்த். அத்தனை சலிப்பு அவன் குரலில்.

மற்ற நண்பர்களோ எதுவும் புரியாமல் கவினிடம் என்னவென்று கேட்க, நேற்று நடந்ததை மேலோட்டமாகச் சொன்னவன், ரிஷ்வந்த் நவ்தீப்பிடம் பேசியதை மட்டும் வாய் திறக்கவில்லை.

அவன் பேசியது கவினிற்கே அத்தனை ஆத்திரம் வந்தது. பணத்திமிரை அல்லவா இருவரிடமும் மொத்தமாகக் காட்டி சென்று இருந்தான் அவன்.

***
நேற்று நிஹாரிகாவின் வீட்டிலிருந்து வெளியேறிய இருவரும் சிறிது தூரம் நடந்து சென்ற பின், ரிஷ்வந்த், “கவின் நீ போ” என்றான்.

“ஏன்டா?” கவின் புரியாமல் வினவ,

“இல்லைடா. கொஞ்சம் வேலை இருக்கு. நீ கிளம்பு” ரிஷ்வந்த் சொல்ல கவின் அவனைச் சந்தேகமாய்ப் பார்த்தான்.

“என்ன ரிஷ்வந்த். என்ன பண்ணப் போற?” கவின் வினவ, நண்பனிடம் இனி மறைக்க முடியாது என்று நினைத்த ரிஷ்வந்த், “அவன்கிட்ட பேசிட்டு வர்றேன்” என்றான்.

“யாருடா? என்ன பேசப்போற?” கவின் புரியாமல் வினவ,

“ப்ச்” நண்பனின் கேள்வியில் ஏற்கனவே எரிச்சலில் இருந்தவன் சலித்துக்கொண்டு தொடங்கினான்.

“நவ்தீப் டா. அவன் நிஹாரிகாவை லவ் பண்றான். ஆனா, அது இந்த லூசுக்குத் தெரியல. அவன் பார்வையே சொல்லுது, அவன் அவளை பல வருஷமா லவ் பண்றதா” என்றான். ரிஷ்வந்துக்கு இப்போது மீண்டும் அதே போல தவிப்பாக இருந்தது. முதலில் தன்னவளுக்கும் தனக்கும் உள்ள ஸ்டேடஸ் வேறுபாடு இருந்தது. இப்போது அவள் தனக்கு கிடைக்காமல் போய்விட்டால் என்ற தவிப்பு.
நிஹாரிகாவை இப்போதும் அவன் தவறாக எண்ணவில்லை. அவள் நவ்தீப்பின் பின் சென்றுவிடுவாளோ என்று. ஆனால், அவனுக்கு இருக்கும் வசதிக்கும் நிஹாரிகாவின் குடும்பத்தோடு அவனுக்கு இருக்கும் நட்புக்கும், அவளை தன்னிடம் இருந்து, அவனின் செல்வாக்கைப் பயன்படுத்தி தங்களைப் பிரித்துவிடுவானோ என்று மனம் சஞ்சலத்தில் ஊசலாடியது. தன்னிடம் இருக்கும் பொம்மையை புதிதாக வந்தவன் பறித்துவிடுவானோ என்ற பயம் அது.

“மச்சி, அது ப்ரண்ட்ஷிப்பா கூட இருக்கலாம்” கவின் சொல்ல, “நானும் நினைச்சேன் மச்சி. பட் வெளிநாட்டுல இருந்து நாலு வருசம் கழிச்சு வந்தவன், குடும்பத்தை விட்டுட்டு, நாலு நாள்ல இவளை பாக்க ஓடி வரமாட்டான் டா. அன்ட் அவன் நிஹியோட கையை பிடிச்சது எல்லாம் ஏதோ, நம்ம முன்னாடி அவன் உரிமையா காட்டுறா மாதிரி இருந்துச்சு” ரிஷ்வந்த் சொல்ல அனைத்தையும் யோசித்துப் பார்த்த கவினுக்கு நண்பன் சொல்வது அனைத்தும் உள்ளுக்குள் மெய்யாகவே தோன்றியது.

இந்த வழியில் தான் எப்படியும் நவ்தீப் வந்தாக வேண்டும் என்று இருவரும் நின்றிருக்க, பத்து நிமிடத்தில் வந்தது நவ்தீப்பின் பிஎம்டபிள் யூ.

நிஹாரிகா யாரோ இருவருக்காகத் தன்னிடம் காட்டமாகப் பேசியதில், நவ்தீப்பிற்கு எரிச்சலாக இருந்தது. ஏன் ரிஷ்வந்த் கவினின் மீது கோபம் கூட வந்தது. ‘போயும் போயும் இவனுகளுக்காக என்னை ஏன் நிஹி இன்சல்ட் பண்ண?’ என்று தனக்குள் கேட்டுக் கொண்டவனுக்கு, ரிஷ்வந்தின் பார்வையும் நிஹாரிகாவின் பார்வையும் அவ்வப்போது அவரவர் மீது படிந்து மீண்டதை உணர்ந்தான்.

நிஹாரிகா ஹைதராபாத்தில் இருந்தபோதே யாரையும் வீட்டிற்கு அழைக்கமாட்டாள். என்னதான் நட்பு பாராட்டினாலும், யாரையும் வீட்டிற்கு அழைக்கும் பழக்கம் அவளுக்குக் கிடையாது. அப்படி இருப்பவளைத் தேடி இவர்கள் இங்கு வந்திருக்கிறார்கள் என்றால், ஏற்கனவே இங்கு இவர்கள் வந்திருக்க வேண்டும் என்று சரியாக ஊகித்தவன், ரிஷ்வந்தை மனதில் கொண்டுவந்து நிறுத்தி அவனை மேலிருந்து கீழே அளந்தான்.

‘ப்ளடி லோக்கல்’ என்று மனதுக்குள் ஆத்திரத்துடன் திட்டியவன், நிஹாரிகாவை தன்னிடம் தக்க வைத்துக்கொள்ள வழிகளை வகுக்க, மனதுக்குள் யோசிக்க ஆரம்பிக்க, கார் ஓட்டியபடி வந்தவனுக்கு ரிஷ்வந்தும் கவினும் நிற்பது தெரிய, ரிஷ்வந்திடம் பேச நினைத்து காரை ஓரமாக நிறுத்தினான்.

இன்று ரிஷ்வந்திடம் பேசும் முடிவில் அவனும் இறங்கினான். தோரணையாக நவ்தீப் இறங்க, சிறிதும் அலட்டாமல் நின்றிருந்தான் ரிஷ்வந்த். நவ்தீப்பிடம் சொல்ல எந்த ஒரு பயமும், பதட்டமும் இல்லாமல் ரிஷ்வந்த் நிற்க, அவனருகில் வந்து நேர் எதிராய் நின்றான் நவ்தீப்.

இருவரின் பார்வையும் சளைக்காமல் இருவரையும் ஏதிர்நோக்கி நின்றது. எதிர் எதிரே மோதிக்கொள்ள தயாராய் நிற்கும் சிங்கங்கள் போல.

இருவரின் உடல் விறைப்பையும், சீறும் மூச்சுக் காற்றையும் பார்த்த கவினுக்கோ, இருவரும் அடித்துக்கொள்ளாமல் இருந்தால் சரி என்று மனதுக்குள் வேண்டியபடி நின்றிருந்தான்.

“ஸீ ரிஷ்.. வாட் எவர்” என்று தோளைக் குலுக்கிய நவ்தீப், “நீயும் நிஹாரிகாவும் லவ் பண்றீங்களா?” வினவ,

அதே சமயம் ரிஷ்வந்தும், “நீ நிஹாரிகாவை லவ் பண்றியா?” என்று இருவரும் ஒரே சமயத்தில் கேட்க, வானம் கருகருவென்று அவ்விடத்தை சூழ்ந்து பேரிடியாய் மண்ணில் விழுந்தது.

இருவரின் கேசமும், உடையும் காற்றில் ஒரு பக்கமாய் இழுத்தபோதும் இருவரின் பார்வையும் மாறவில்லை.

ரிஷ்வந்தோ, “நாங்க லவ் பண்றோம். ஸோ, நீ வேற எந்த எண்ணம் இருந்தாலும் விட்டிரு நவ்தீப்” என்றுவிட்டுத் திரும்ப எத்தனித்தக்க, வாய்விட்டுச் சிரித்து அவனைத் தடை செய்து நிறுத்தினான் நவ்தீப்.

சிரித்து முடித்தவன் ரிஷ்வந்தின் முகத்திற்கு நேராக, “நல்ல ஜோக் ரிஷ்வந்த்.. அவ உனக்கு பாவம் பார்த்தா, அவ வீட்டுக்குள்ள கால் எடுத்து வைக்கப் பாக்கிற நீ.. உன்னை மாதிரி இருக்கவனை எல்லாம் அவ வீட்டுல, உள்ள கூட விடமாட்டாங்க” நவ்தீப் சிரித்துக் கொண்டே இகழ்ச்சியாய்ப் பேசி ரிஷ்வந்தைத் தூண்டவிட ஆரம்பித்தான்.

“நவ்தீப், நீ சொல்றது எல்லாம் சரி. பட் நாலு வருசம் கழிச்சு வந்த நீ ஒண்ண மறந்துட்ட. இங்க இருந்த இத்தனை வருசத்துல அவ உன் அப்பாவைப் பத்தி சொல்லி இருக்காளே தவிர, உன்னைப் பத்தி ஞாபகம் வந்த மாதிரி கூட இல்ல. பட், உன்கூட வந்தும் அவ சத்தியமா என் பேச்சை எடுக்காம இருந்திருக்க மாட்டா இந்த ஒரு நாள்ல” கர்வப் புன்னகையோடு ரிஷ்வந்த் சொல்ல, நவ்தீப்பிற்கு சுருக்கென்று இருந்தது.

அவள் இன்று முழுவதும் அவனிடம் சென்னை வந்ததிற்குப் பிறகு நடந்த அனைத்தையும் அல்லவா மூச்சுவிட மறந்து கூறி இருந்தாள். அதில் பத்து வார்த்தைக்கு ஒரு வார்த்தை ரிஷ்வந்த் என்று அல்லவா இருந்தது.

மனதில் தோன்றியதை முகத்தில் காட்டாதவன், “டாமினோஸ்ல வேலை செய்யற உனக்கு நிஹாரிகா?” ஒற்றைப் புருவத்தை உயர்த்தி இகழ்ச்சியாகக் கேட்டவன், “அவ வீட்டுல இருக்க வேலைக்காரனுக்குக் கூட உன்னை விட அதிக சம்பளம் தெரியுமா?” என்றான் உதட்டில் கேலிப் புன்னகையை தவழவிட்டு.

அவனின் பேச்சில் வெகுண்டு எழுந்தது ரிஷ்வந்தை விட கவின் தான். தன் நண்பனின் நல்ல குணம் அறிந்தவன் அவன். அவனின் பண்பும் அவன் அறிந்தது. அப்படி இருக்க, இன்று சற்று நேரத்திற்கு முன்னால் பார்த்த எவனோ ஒருவன் தன் உயிர் நண்பனைப் பேச, கோபத்தோடு பொங்கி எழுந்தவன்,

“நிஹாரிகா லைப்பை டிசைட் பண்ண நீ யாரு. இவன் உன்னோட அளவுக்கு பணம் இல்லாதவனா இருக்கலாம்” என்று தன் நண்பனை அவன் பேசியதில் ஒருமைக்கு மாறியவன், “ஆனா, நிஹாரிகாவும் இவனும் லவ் பண்றதை டிசைட் பண்ண வேண்டியது இவங்க இரண்டு பேரு தான். நாலு வருசம் காணாம போயிட்டு, இப்ப திடீர்னு திரும்பி வந்த நீ இல்ல” கவின் வார்த்தைகளை கவனமாக அதே சமயம் அழுத்தமாக வீசினான்.

அது உண்மை தானே. நிஹாரிகாவின் குடும்பத்தோடு நட்பு உள்ளவன் என்பதால், அவள் வாழ்க்கையை கையில் எடுக்கும் உரிமை இவனுக்கு இல்லையே.

ஆனால், இப்போது விட்டால் ரிஷ்வந்தைக் குழப்ப மறுபடியும் முடியாது என்று எண்ணிய நவ்தீப் தந்திரமாய் சிந்தித்தான்.

“ஓகே நான் ஒத்துக்கறேன். நிஹாரிகாவோட லைஃப் அவ கைலன்னு” என்றவன், “பட் ரிஷ்வந்த், உன்கிட்ட ஒண்ணு சொல்றேன். நிஹாரிகா யாருக்காகவும் என்னோட பிரண்ட்ஷிப்பை விட மாட்டா. அது நீயே சொன்னாலும் சரி” என்று கடைசி வாக்கியத்திற்கு அழுத்தத்துடன் புன்னகைத்தவன், “உன்னோட லவ் ட்ரூன்னா ஜஸ்ட் ட்ரை பண்ணி பாரேன்” என்று சவால் விட்டவன், அடுத்து அவன் அதற்கு பதில் பேசுவதற்கு முன் காரில் ஏறிப் புறப்பட்டான்.

“மச்சி, அவ கிடக்கிறான். நீ எதையும்..” கவின் நண்பனின் தோள் தட்டித் தொடங்க,

“ப்ச் விடு. எனக்கு டைமாச்சு. பர்ஸ்ட் டேவே லேட்டா போக விரும்பல” என்ற ரிஷ்வந்த், வேலைக்குக் கிளம்பினான்.

அவன் மனதில் நவ்தீப் தன்னை இழிவாக பேசியது கூட அவ்வளவு பாதிக்கவில்லை. ஆனால், நிஹாரிகா தான் சொன்னால் கேட்பாளா என்றே ஓடிக் கொண்டிருந்தது.

அப்போது ஒன்றை மறந்துபோனதும், அறியாமல் போனதும் ரிஷ்வந்தின் விதிதான். நிஹாரிகா எவர் சொன்னாலும் அந்த மாதிரி விஷயங்களில் கேட்கமாட்டாள் என்று அப்போது மறந்தான். மேலும், ஏற்கனவே அவள் ஹைதராபாத்தில் இருந்த போது, நவ்தீப் யாருடனோ பேச வேண்டாம் என்று சொல்ல, அவனிடம், ‘இது என் இஷ்டம்’ என்று சொன்னவளை மனதில் நிறுத்தி, நன்கு அறிந்தவனாக நவ்தீப் கூறிவிட்டுச் சென்றிருக்க, அதை ரிஷ்வந்த் அறியவில்லை.

நவ்தீப்பின் தந்திரம் தெரிந்திருந்தால் வரவிருக்கும் கடினமான பிரிவை தடுத்திருப்பானோ என்னவோ.

***

அடுத்த நாள் கல்லாரிக்கு வந்த நிஹாரிகா, ரிஷ்வந்திடம் எவ்வளவோ பேச முயற்சித்தும், அவன் அவளிடம் பேசவில்லை. நவ்தீப் அவனிடம் சவால் விட்டதை அவனால் கூறியிருக்க முடியும். ஆனால், அப்படிச் சொல்லி நவ்தீப்பை வெல்வது அவனுக்கு கேவலமாகத் தோன்றியது.

மேலும், நிஹாரிகா தான் சொல்றதைக் கேட்க மறுக்கிறாள் என்ற கோபம் வேறு அவனை உடும்பாக இறுக வைத்தது.

அன்று மாலை அவனின் குறுக்கே நின்று வழி மறுத்தவளிடம், “கட் பண்ணிட்டியா?” ரிஷ்வந்த் வினவ, “இல்லை” என்றாள்.

கேலியும் விரக்தியுமாக தன் உதட்டை வளைத்தவன், அவளிடம் எதுவும் பேசாமல் அவளைச் சுற்றி கடந்து சென்றுவிட்டான். அவன் சென்ற திசையையே வெறித்துக் கொண்டிருந்தவளுக்கு மனம் கனத்தது. அவனின் பாராமுகமும், அவளிடம் அவன் பேசாமல் இருப்பதும் அவளை கொல்லாமல் கொன்று கொண்டிருந்தது.

அன்று மாலை வீட்டிற்கு வந்தவள் சக்கரவர்த்தியிடம் பேச, “ஏன் பங்காரம். குரலே ஒரு மாதிரி இருக்கு?” அவர் வினவ, அவரின் அக்கறையிலும், குரலிலும் மேலும் ஏற்கனவே ரிஷ்வந்துடன் இருந்த ஊடலிலும், அவளுக்கு கண்கள் லேசாகக் கரித்தது.

தன் செவ்வரளி இதழ்களைக் கடித்து, காயப்படுத்தி அழுகையை அடக்கியவள், “காலேஜ் வொர்க் அதிகம் தாத்தையா?” என்றவள்,

“தாத்தையா! எனக்கு உங்களைப் பார்க்கலாம்னு இருக்கு. ஹோம் சிக்கா இருக்கு. நான் அங்க வரட்டா?” கரகரத்த குரலில் பேத்தி வினவ, அவருக்கு ஏதோ சரியில்லை என்று புரிந்தது.

“என்ன பங்காரம் இது. இதெல்லாம் கேக்கணுமா. நான் நைட்டே ப்ளைட்டுக்கு டிக்கெட் போடறேன். நீ கிளம்பி வா” என்றவர் அடுத்த பதினைந்து நிமிடத்தில் டிக்கெட்டை பதிவு செய்துவிட்டு, பேத்திக்கு தெரிவிக்க, நிஹாரிகாவுக்கு அழுகை முட்டிக் கொண்டு வரப் பார்த்தது.

அவளிடம் ரிஷ்வந்தைத் தவிர மற்ற அனைவரும், கலகலப்புடன் பேசிய போதும், ரிஷ்வந்த் தன்னிடம் பேசாமல் இருப்பதில் மிகவும் தனிமையை உணர்ந்தாள். அவளின் நிழலும் நிஜமும் அவன் தானே. அதுவே இப்போது தன்னை ஒதுக்குகிறது என்றபோது அவளால் அதை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.

அதுவும் இன்று வகுப்பில், அவள் அவனருகில் அமர்ந்ததும், எழுந்து சென்று பிருந்தாவின் அருகில் அவன் அமர, நிஹாரிகா முகத்தை மறைத்து தலை குனிந்து அமர்ந்துவிட்டாள். அழுகையை அடக்க நினைத்து, தொண்டை அடைக்க அதை சிரமப்பட்டு விழுங்கிக் கொண்டிருந்தாள் ரிஷ்வந்தின் காதலி.

தன்னுடைய ஒவ்வொரு செயலிலும் அவளை ஒதுக்கிக் கொண்டிருந்தான் அவன். அவளோ, ‘நான் மத்தவங்களை வெறுத்த மாதிரி உன்னையும் வெறுத்திடக் கூடாது ரிஷ்வந்த்’ என்று கடவுளிடம் வேண்டியவளுக்குத் தெரியவில்லை, அது நடக்கப்போகும் நாள் வெகு தூரம் இல்லை என்று.

விமானத்தில் ஏறும் முன் நண்பர்கள் அனைவரும் இருந்த வாட்ஸ் ஆப் குரூப்பில், “ஊருக்கு போயிட்டு வந்திடறேன்” என்ற குறுஞ்செய்தியை அவள் தட்டிவிட, அடுத்த நொடியே கவினிடம் இருந்து அவளுக்கு மெசேஜ் வந்தது.

“என்ன நிஹி திடீர்னு ஊருக்கு. இஸ் எவ்ரிதிங் ஓகே?” அவன் அனுப்பியிருக்க,

“நத்திங் டா. ஹோம் சிக்கா இருக்கு” என்று அனுப்ப, அங்கு கவினின் அலைபேசியை கையில் வைத்து இருந்த ரிஷ்வந்துக்குப் புரிந்து போனது, அவள் தன் செய்கையால் தான் ஊருக்குச் செல்கிறாள் என்று.

அவனின் மனம் பாறாங்கல் வைத்ததைப் போல கனத்துப் போனது. அவனும் அவளிடம் பேசாமல் நிம்மதியாக இருக்கவில்லையே. அதுவும் தான் தவிர்க்கும் போது, தன்னவள் முகம் கசங்குவதையும், தலை குனிந்தபடி அவள் அமர்ந்திருப்பதையும் கண்டவனுக்கு உள்ளுக்குள் வலித்தாலும், தன் முடிவில் இருந்து அவன் இறங்கி வரத் தயாராக இல்லை.

‘ஸாரிடி. நீ ஹர்ட் ஆனாலும் என்னால அதை மறுபடியும் சரி பண்ண முடியும். ஆனா, அவனோட நீ பேசறதை மட்டும் அனுமதிக்க முடியாது’ என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டவன், கவினிடம் அவன் அலைபேசியைத் தந்துவிட்டு, பால்கனியில் சென்று பெருமூச்சுடன் நின்றான்.

நண்பனைப் பார்த்த கவினிற்கு நிஹாரிகாவிடம் உண்மையை சொல்ல மனம் விழைந்தது. நிஹாரிகா சென்னை திரும்பியவுடன் அவளிடம் உண்மையை சொல்லிவிட கவின் முடிவு செய்ய, விதியோ வேறு விதமாய் யோசிக்க ஆரம்பித்தது, சென்னை திரும்புபவளை மொத்தமாய் ஹைதராபாத்திற்கே ஓட வைக்க.

அன்று மாலை ரிஷ்வந்தின் வீட்டிற்கு வந்த ஒருவர் ரிஷ்வந்தின் தந்தைக்கு தான் கொடுத்த கடனைக் கேட்டு, அதற்கு கெடுவும் வைத்துவிட்டுப் போனார். கடன் கொடுத்தவர், அவர் பாட்டுக்கு வீட்டுக்குள் நுழைந்ததும், கால் மேல் காலிட்டு அமர்ந்ததும், ஏதோ கடன் வாங்கியதால் இவர்களைப் பார்த்து அடிமை போலப் பேசியதும், மூவரையும் யார் முகத்தையும் யாரும் பார்த்துக்கொள்ள முடியாமல் செய்தது.

ரிஷ்வந்தை பணம் என்ற ஒன்று எல்லாப் பக்கங்களிலும் இருந்து பந்தாடிக் கொண்டிருந்தது. ஏனோ வாய்விட்டுக் கத்த வேண்டும் என்று தோன்றியது அவனுக்கு. யாரையும் குறை கூற அவன் நினைக்கவில்லை. ஆனால், தனக்கு ஏன் இந்த இழி நிலை, அதுவும் பணத்தாலேயே ஒவ்வொரு பக்கமும் என்று நினைத்தவனுக்கு வேதனையே மிதமிஞ்சி இருந்தது.

அன்று இரவு தன் அறைக்குள் படுத்திருந்தவனுக்கு வெளியே அன்னை தந்தை பேசுவது தெளிவாகக் கேட்டது. “அதுனால என்ன நீங்க ஒண்ணும் தப்பு பண்ணிடலையே. நம்ம ரிஷ்வந்த் பிறந்தப்ப பாக்காத பணக் கஷ்டமா. என்னோட எல்லா நகையையும் வித்திடலாம்” கயல்விழி சொல்ல,

“கம்முனு இரு கயலு. அது உன் நகை. எனக்கு கை வைக்க உரிமை இல்லை” என்று உள்ளே போன குரலில் வேதனையுடன அவர் நெஞ்சைத் தேய்த்தபடி சொல்ல,

“ஏன் இப்ப எல்லாம் நெஞ்சைத் தேச்சுட்டே இருக்கீங்க. அங்க ஏதாவது பண்ணுதா” கயல்விழி பதட்டத்துடன் கணவரின் உடல் நிலையை எண்ணிக் கேட்க,

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல. உன் நகை வேணாம். வேற ஏதாவது நான் முயற்சி செஞ்சு பாக்கறேன்” என்றவர் நெஞ்சில் அவ்வப்போது உருவாகும் வலியை மனைவியிடம் மறைத்தார். இங்கு பல ஆண்கள் அதற்கு செலவு ஆகும் என்று நினைத்துக் கொண்டு பெரிய பிரச்சனையை இழுத்துக் கொள்கிறார்கள். இதில் இறுதியில் பெரிய பக்கவிளவை இழுத்துக் கொள்ளப் போவதும் தானும் தன் குடும்பமும் என்பதை மறந்துவிடுகின்றனர். அதில் இவரும் ஒருவர்.

“ஏங்க பிரகாஷ் கிட்ட கேக்கலாமே?” கயல்விழி வினவ, கணவர் பார்த்த கண்டிப்பான பார்வையில் வாயை மூடிக்கொண்டார் அந்தக் குடும்பத் தலைவி.

அன்னை தந்தை பேசியதைக் கேட்ட ரிஷ்வந்திற்கு அன்றைய இரவு தூக்கம் காணாமல் போனது. அடுத்த நாள் கனகராஜ் எங்கு அலைந்தும் பணத்தைப் புரட்ட முடியாததால் மனைவியின் நகையை மனமே இல்லாமல் வாங்கிச் சென்றிருந்தார். சேர்த்து வைத்திருந்த அனைத்தையும் ஒருவனை நம்பி ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ததால் அவருக்கு வந்த பலன் இது.

ரிஷ்வந்த் ஏதோ கல்லூரிக்கு செல்கிறோம் என்ற நிலையில் சென்று கொண்டிருக்க, அவனின் முகம் கலையிழந்து உயிர்ப்பே இல்லாது இருப்பதைப் பார்க்க முடியாத கவின், நிஹாரிகாவுக்கு அழைத்தான்.

“ஹலோ” நிஹாரிகா ஃபோனை எடுக்க,

“நிஹி எப்ப வர்ற?” என்றான் கவின்.

“தெரியலடா. நாங்க இங்க ஹரித்துவார் வந்திருக்கோம். எப்ப வருவேன்னு தெரியல” என்றவள், “ஏன்டா?” என்றாள். ஒருவேளை ரிஷ்வந்த் தன்னை கவின் மூலமாக அழைக்கிறானோ என்ற ஏக்கத்தோடு அவள் நண்பனிடம் வினவ,

“சீக்கிரம் வா நிஹி. நீ இல்லாம போர் அடிக்குது. நான் சொன்னேன்னு சொல்லிடாத. இங்க ஒருத்தன் நீ இல்லாம அவனாவே இல்ல” என்றிட, அதில் ஆயிரம் பூக்கள் உடம்பில் மலர, முகத்தில் ஆர்வத்தையும் பிராகசத்தையும் தத்தெடுத்தவள், ‘டேய் பாவா! ஏதோ பேசாம இருந்த. இப்ப மட்டும் நான் இல்லாம இருக்க முடியல போலையே’ என்று மனதுக்குள் தனக்குள் பேசியவள்,

“நான் இரண்டு நாள்ல அங்க இருப்பேன்டா. அவன்கிட்ட நீ சொல்லாத” என்று நண்பனிடம் பேசிவிட்டு வைத்தவளுக்குத் தெரியவில்லை, தான் படப்போகும் நரக வேதனையைப் பற்றி.