நிஹாரி-21(1)

IMG-20211003-WA0016-1b4295a3

நிஹாரி-21(1)

கவினிடம் அன்று பேசிவிட்டு ஃபோனை வைத்த நிஹாரிகா, நேராக ஹரித்துவாரில் இருந்து, அடுத்த நாள் மாலையே சென்னை திரும்பியவள், ரிஷ்வந்தின் பிறந்தநாள் இன்னும் இரண்டு நாட்களில் என்றிருக்க, அவன் மறக்க முடியாத அளவிற்கு பரிசை அளிக்க வேண்டும் என்று எண்ணியவள், கடை கடையாக ஏறி இறங்கினாள். முட்டாள் பெண், நவ்தீப்பை அழைத்துக்கொண்டு.

“நவ்தீப், பசங்களுக்கு என்ன பிடிக்கும்?” நிஹாரிகா நச்சரித்துக் கொண்டே இருக்க, அவனுக்கு அத்தனை எரிச்சலாக இருந்தது. அவளை அடித்துவிடலாம் என்று கூடத் தோன்றியது அவனுக்கு.

ஆனால், அவள் மேல் கை வைப்பது நடக்கிற காரியமா. அப்படி வைத்தால், அவன் யாரிடமும் தப்பிக்க முடியாது. அவன் தந்தை அர்ஜூன் கொனிடெல்லா உட்பட. அதுவும் நிஹாரிகாவின் மேல் உயிரையே வைத்திருக்கும் சக்கரவர்த்தி, அவளின் காதலை உணர்ந்து ரிஷ்வந்தையே தேர்ந்தெடுத்து விட்டால் என்ற பயம் வேறு.

“ப்ச். நானும் வாட்ச், ட்ரெஸ், சன் க்ளாஸ், ஷூஸ் எல்லாமே சொல்லிட்டேன். ஆனா, நீ எதைப் பார்த்தாலும் வேணாம்கிற” நவ்தீப் எரிச்சலை அடக்கியபடி சொல்ல, அவனை முறைத்தவள்,

“நீ சொல்றது எல்லாம் சாதாரணமா எல்லாரும் கிப்ட் பண்ணுவாங்க. நான் ஏதாவது ஸ்பெஷலா கேக்கறேன்” அவள் அவனருகில் நின்று கொண்டு ஒவ்வொரு கடையாய் பார்த்தபடிச் சொன்னாள். அவனின் பார்வையை அப்போது கூட அவள் அறியவில்லையே. ரிஷ்வந்தின் மேல் அவனுக்குப் பொறாமையும், குரோதமும் கொப்பளித்துக் கொண்டிருந்தது.

“அவன் என்ன அப்படி ஸ்பெஷல்?” நிஹாரிகாவின் வாயில் இருந்தே, அதை வரவைக்கும் பொருட்டு நவ்தீப் தணிவான குரலில் அவளிடம் நாசூக்காக வினவ,

“சிலது எல்லாம் சொல்ல முடியாது. நீயும் தான் அப்ராட்ல இருந்தப்ப, நல்லா டேட்டிங் போனேன்னு கேள்விபட்டேன். நான் கேட்டனா?” அவள் சிரித்துக்கொண்டே வினவ, நவ்தீப் வாயைப் பொத்திக் கொண்டான். அவள் மெய்யாகவே விளையாட்டாகத் தான் கேட்டாள். ஆனால், நிஹாரிகாவை மட்டும் நினைத்து இருந்தவன், தன் மேல் விழுந்த பல பெண்களை தள்ளியே நிறுத்தினான்.

அப்படி இருப்பவனுக்கு ரிஷ்வந்திடம் நிஹாரிகாவை எளிதாகத் தூக்கிக் கொடுக்க முடியவில்லை.

அவனின் கோபம் புரிந்ததோ என்னமோ, நிஹாரிகா, “சரி சரி மூஞ்சிய அப்படி வைக்காத. நான் விளையாட்டுக்கு சொன்னேன்” என்றாள்.

அவளின் கெட்ட நேரமா, இல்லை ரிஷ்வந்தின் கெட்ட நேரமா, இல்லை நவ்தீப்பின் நல்ல நேரமா என்று தெரியவில்லை.. வீட்டில் இருக்க முடியாத ரிஷ்வந்த், அன்று காலை தனியாக எங்காவது சென்று வரலாம் என்று, நிஹாரிகா நவ்தீப்பை அழைத்துக்கொண்டு வந்த அதே மாலிற்குள் நுழைந்தான்.

கண்கள் வேடிக்கை பார்க்கத் துவங்கினாலும், அவனின் மனமோ ஒருபக்கம் வீட்டில் இருக்கும் கஷ்டம், மற்றொரு பக்கம் தன்னவள் என்றே சுற்றிக்கொண்டிருந்தது.

ஒரு நீண்ட பெருமூச்சை விட்டவன் திரும்ப, நிஹாரிகாவும், நவ்தீப்பும் ஒன்றாக, அவனுக்கு எதிரில் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். அவர்களைக் கண்டவன் அவர்களை பார்த்தபடி நின்றிருக்க, நிஹாரிகா தன் அலைபேசியில் தலையைப் புதைத்துக்கொண்டு, ஆண்களுக்கு மிகவும் பிடித்தமான பரிசை மும்முரமாக இன்டர்நெட்டில் தேடியபடியே நவ்தீப்புடன் நடந்து வந்துகொண்டிருந்தாள்.

ஆனால், நவ்தீப்பின் கண்கள் ரிஷ்வந்தைக் கண்டுவிட்டது. அவனின் கண்களில் மின்னல் வெட்டியது. இது திட்டமிட்டு நடக்கவில்லை என்றாலும், கிடைத்த வாய்ப்பை அவன் தவறவிட எண்ணவில்லை.

நிஹாரிகாவின் கையைப் பிடித்தவன், அவளைத் தன்னுடன் இழுத்துச் செல்ல, தலையைக் குனிந்து இருந்தவளுக்கு, அவன் தான் ஏதாவதில் இடித்து விடாமல் இருக்க அப்படிச் செய்கிறான் என்றே தோன்றியது. அவனின் இழுப்புக்கு இலகுவாக ஃபோனில் தலையைப் புதைத்துக் கொண்டே சென்றவள், தன்னவனைத் தான் கடந்து வந்ததைக் கூட கவனிக்கவில்லை.

அனைத்தையும் பார்த்த ரிஷ்வந்திற்கு மனமோ உலைக்கலமாய் கொதிக்க ஆரம்பித்தது. ‘அவன் தொட்டா இவளுக்கு அறிவில்ல. தள்ளி நடக்கமாட்டா. அப்படி என்ன ஃபோன் வேண்டி கிடக்கு’ மனதுக்குள் ஆத்திரத்துடன் நிஹாரிகாவைத் திட்டியவன், தான் அவளிடம் பேசாமல் இருப்பதையும் மறந்து, அவளின் அலைபேசிக்கு அழைத்தான்.

நிஹாரிகாவை இழுத்துச் சென்ற நவ்தீப் அங்கு இருந்த ஒரு கடையின் அருகே அவளை நிறுத்தி பேசிக்கொண்டிருந்தான். வேண்டும் என்றே ரிஷ்வந்தின் கண்களில் படுவதுபோல. ரிஷ்வந்திற்கு முதுகுகாட்டி நிஹாரிகாவை இயல்பு போல நிற்க வைத்தவன், ரிஷ்வந்தின் பார்வை தங்களின் மேல் இருப்பதை உணர்ந்தும், கண்களை அங்கும் இங்கும் துளியும் அசைக்காது, நிஹாரிகாவின் சந்தேகமும் எழாமல் பார்த்துக் கொண்டான். அதுவும் பரிசு வாங்கும் மும்முரத்தில் இருந்தவளுக்கோ எதுவும் கண்களில் படவில்லை.

திடீரென தன் அலைபேசி அலறுவதை உணர்ந்தவள், ரிஷ்வந்த் அழைப்பதைப் பார்த்துவிட்டு, கண்கள் குஷியில் மின்ன ஃபோனை எடுக்க நினைத்தவள், நவ்தீப்பிடம் அமைதியாக இருக்கும்படி தன் ஒற்றை விரலை வைத்து சைகை செய்ய, அவளின் முதுகை மட்டும் பார்த்திருந்த ரிஷ்வந்திற்கு, அவளின் முகம் உணர்த்திய செய்தி கண்களில் படாமல் போக, அவளின் செய்கை ஏதோ உணர்த்தியது.

‘ச்சி என்ன இது. ரிஷ்வந்த் அவ உன் நிஹாரிகா. அவ அப்படி இல்லன்னு உனக்கு நூறு பெட்சென்ட் தெரியும் தானே’ அவன் மனம் அடித்துச் சொல்ல, பொறுமையாக அவள் காதில் அலைபேசியை வைப்பதை பார்த்துக் கொண்டிருந்தான்.

நிஹாரிகா, “ஹலோ” என்றிட, “எங்க இருக்கே?” என்றான்.

எடுத்தவுடனே ரிஷ்வந்த் அப்படிக் கேட்க, மனம் உறுத்த நிஹாரிகா திருப்பி சுற்றியும் முற்றியும் பார்க்க, ரிஷ்வந்த் அதற்குள் ஒரு கடையின் பின் மறைந்தான்.

“நான் சும்மா வெளிய கடைக்கு வந்தேன். ஏன் ரிஷ்வந்த்?” நிஹாரிகா சொல்ல,

“எந்த கடைக்கு?” அவள் தன்னிடம் உண்மையை சொல்ல மாட்டாளா என்று ரிஷ்வந்த் மீண்டும் கேள்விகளை அடுக்க,

“பக்கத்துல இருக்க கடைக்குத் தான்” என்றவள், “சரி. நான் கூப்பிடறேன் ரிஷ்வந்த். கொஞ்சம் பிசி” என்றவள் ஒரு அலட்டலோடு வேண்டுமென்றே வைத்தாள்.

‘என்கிட்டையா பேசாம இருக்க. இப்ப அனுபவிடா மகனே. இரண்டு நாள்ல நான் தரப்போற சர்ப்ரைஸ்ல ஷாக் அடிச்சு நிக்கப்போற’ என்று விதி தனக்குக் காத்திருப்பதை அறியாமல், நவ்தீப்புடன் நிஹாரிகா வெளியேற, ரிஷ்வந்த் அங்கு ஆங்காங்கே அமருவதற்கு போடப்படும் கல்மேடையில் அமர்ந்தான்.

அவள் ஏமாற்றுபவள் அல்ல. ஆனால், ஏன் இப்படி நடந்து கொள்கிறாள் என்று யோசிக்க ஆரம்பித்தவனுக்கு விடை தெரியவில்லை. அவன் இருக்கும் பிரச்சனைகளில் தன் பிறந்தநாளையே மறந்திருந்தான். யோசித்துக் கொண்டே அமர்ந்திருந்தவன், கடற்கரைக்குச சென்றான். தன்னிடம் இருந்த ஒன்று, இனி தன்னிடமே நிலைத்து இருக்குமா இருக்காதா என்ற ஒரு கேள்வியே அவன் மனதில். ஏன் பொய் உரைக்கிறாள் என்றும் அவனுக்குத் தெரியவில்லை.

‘ஒருவேளை அவளுக்கு நம்மைப் பிடிக்கவில்லையோ. என்னுடைய இந்த நிலை, அதாவது இந்த மிடில் கிளாஸ் பையன் அவளுக்கு வேணாமோ. அப்படியாத்தான் இருக்கும்’ என்று அவன் மனம் கிறுக்குத் தனமாக யோசித்துக் கொண்டிருக்க, அவனின் அலைபேசி வைப்பரேட் ஆனது.

ஃபோனை எடுத்து அவன் பார்க்க, நவ்தீப் அவனுக்கு முகநூலில் பிரண்ட் ரிக்வஸ்ட் அனுப்பி இருந்தான். எரிச்சலுடன் ஃபோனை பார்த்திருந்தவன், அவனை ப்ளாக் செய்ய, அவனின் முகநூலுக்குள் செல்ல முதலில் அவன் கண்களில் பட்டது, அவன் கவர் ஃபோட்டோ.

கண்கள் இடுங்க, ஆங்காரத்துடன் அதைப் பார்த்தவன் அனைத்தையும் ஆராயாத் தொடங்கினான். ஹரித்துவார் சென்றது சக்கரவர்த்தி, நிஹாரிகா மற்றும் அர்ஜூனின் குடும்பம்.

நிஹாரிகாவுடன் எடுத்த அனைத்து புகைப்படங்களையும் அவன் பதிவிட்டு இருக்க, ரிஷ்வந்தின் நெஞ்சில் வன்மங்கள் கூடிக்கொண்டே போனது. ஒவ்வொரு புகைப்படத்திற்கு மேலும் கேப்ஷனில்(caption) அவன் இதயத்தை வைத்திருக்க, ‘இதையெல்லாம் இவ பாத்திருக்க மாட்டாளா. பிரண்டா இருந்தா இப்படி ஒத்த ஹார்ட்டை மட்டும் போடணுமா. ***k’ என்று உள்ளுக்குள் கெட்ட வார்த்தையில் அவனைத் திட்டினான். அவனின் பண்பே இப்போது, இந்த நொடி மாறிப்போனது. தந்தை சொல்லி வளர்த்த அறிவுறைகள், பண்புகள் அனைத்தையும் கோபமும், ஆத்திரமும் மறைக்க, வன்மமும், குரோதமும் மட்டுமே அவன் மனதில் நிறைந்திருந்தது.

அங்கிருந்து கிளம்பியவன் வீட்டிற்குச் சென்று தன்னுடைய அறைக்குள் முடங்கிக் கொண்டான். நவ்தீப்புடன் மாலில் இருந்து காரில் ஏறிய நிஹாரிகா, அவனை அவன் வீட்டில் விட்டுவிட்டு நேராக வீட்டிற்குச் செல்லாமல், வரும்போது வழியில் பார்த்த சென்னையிலேயே மிக பிரத்தியேகம் பெற்ற டாட்டூ ஸ்டுடியோவிற்குள் புகுந்தாள்.

வரும்வழியில் டாட்டூ ஸ்டுடியோவைப் பார்த்தவளுக்கு, இதைவிட ஒரு நல்ல பரிசு கிடைக்கும் என்று தோன்றவில்லை

அங்கு அவளை வரவேற்றவர்கள் அவளிடம் எந்த மாதிரி டிசைன் என்று விசாரிக்க, தன் நெஞ்சில் டாட்டூவைக் குத்த வேண்டும் என்று சொல்லியவள், “நான் சொல்ற நேம் குத்துங்க. பான்ட்(Font) ஸ்டைலிஷா இருக்கணும்” என்று விளக்க, அவள் கேட்டது போலவே அவர்கள் டிசனை உருவாக்கி அவளிடம் காண்பித்தனர்.

ரிஷ்வந்த் என்பதை ஆங்கிலத்தில், “RISHWANTH” என்று எழுதியிருந்தனர். முதல் எழுத்து ஆர் முடியும் இடத்தில், அவர்கள் அதை மேலே நோக்கி நன்கு இழுத்து விட, அது முதலில், ‘R’ போலவும் முடியும் போது, ‘N’ போலவும் இருந்தது. முதல் எழுத்து, ‘ஆர்’ உம், ‘என்’ உம் கலந்து இருப்பது போலக் கேட்டிருந்தாள் அவள்.
ரிஷ்வந்தும், நிஹாரிகாவும்!

மீத எழுத்துக்கள் மிகவும் நேர்த்தியாக டிசைன் செய்யப்பட்டிருக்க, டபள்யூவின் கீழே சிறிய இதய வடிவம் வரைத்திருந்தனர். இதயத்திற்கு இரத்த சிவப்பு நிறம் கொடுப்பது போல வேறு கேட்டிருந்தாள் நிஹாரிகா.

அங்கிருந்த பெண், “அந்த இடத்துல டாட்டூ குத்தும்போது நல்லாவே பெய்ன் இருக்கும். யூ கேன் பேர் தட் ரைட்?(YOU CAN BEAR THAT RIGHT?)” என்று வினவ, உள்ளுக்குள் சிறிது பயந்தாலும் வெளியே துளியும் காட்டாமல் தலையை ஆட்டிவிட்டு உள்ளே நுழைந்தாள் நிஹாரிகா.

ரொட்டேட்டரி மோஷன் டாட்டூ மிஷினை (ROTATORY MOTION TATOO MACHINE) அந்தப் பெண் ஓடவிட, அதிலிருந்த ஊசிகள் பத்தாயிரம் ஆர்பிஎம் வேகத்தில் ஓட, அந்த கூரிய ஊசிகள் ஏறி இறங்குவதைப் பார்த்த, நிஹாரிகா கண்களை மூடி அமைதியாகப் படுத்துக்கொண்டாள்.

முதலில் குத்தும்போது சுருக் சுருக்கென்று தொடங்கிய வழி அடுத்தடுத்து பரவ, நிஹாரிகாவால் வலியைப் பொறுக்க முடியாமல், அவளின் விழிகள் கண்ணீரை சிந்த, டாட்டூ போட்டுக் கொண்டிருந்த பெண்ணோ, “மேம், உங்களுக்கு வேணும்னா ஸ்டாப் பண்ண சொல்லுங்க” என்றிட,

“இல்ல வேணாம். நீங்க கன்டின்யூ பண்ணுங்க” என்றவள் பல்லைக் கடித்துக் கொண்டு, வலியை அடக்கிக் கொண்டிருந்தாள். சிறிய வயதில் இருந்து, வலி என்பதை உடல் அளவில் காணாமல் இருந்தவளுக்கு இதை தாங்கிக்கொள்ளவே இயலவில்லை.

தன்னவனுக்குத், தான் கொடுக்கப் போகும் மதிப்பில்லாத பரிசு என்பதால் அவள் தன் வலியை முனகிக்கூட காட்டவில்லை. பல்லை அவள் கடித்திருக்க, அவள் விழியின் இரண்டு பக்கமிருந்து கண்ணீர் மட்டும் பொட்டு பொட்டாக சொட்டிக் கொண்டிருந்தது.

முழுதாக முடிய, அந்தப் பெண் டிஷ்யூவை வைத்துத் துடைத்து எடுக்க, ரிஷ்வந்தின் பெயர் நிஹாரிகாவின் மார்புக்கு மேல், அழகாக வந்திருக்க கண்களைத் திறந்த நிஹாரிகாவின் விழிகள் சிவந்து இருந்தது. அங்கிருந்த டிஷ்யூவை எடுத்து கண்களில் ஒற்றி எடுத்தவள் கண்ணாடியில் பார்க்க, ஒருமணி நேரம் இருந்த வலி சென்று, அவள் முகம் எதையோ சாதித்த திருப்தியோடு புன்னகைத்துக் கொண்டது.

அந்த இடம் சிறிது வலியைக் கொடுத்தபோதும், ஏனோ தன்னவன் இனி எப்போதும் தன்னுடன் இருப்பான் என்ற கர்வ உணர்வு அவளுக்கு. தனது சர்ட் பட்டனை அணிந்துகொண்டவள், அவர்கள் கூறிய அறிவுரைகளைக் கேட்டுக்கொண்டு வீட்டிற்கு வந்து சேர, அடுத்த நாள் அவளைக் காய்ச்சல் பிடித்துக் கொண்டது.

உடல் அடித்துப் போட்டதைப் போலிருக்க, ‘சரி, நாளைக்கு பர்த்டேக்கே போயிக்கலாம்” என்று உறங்கிப் போனாள்.

இங்கே ரிஷ்வந்தோ அவள் கல்லூரி வராததில் நிம்மதியாக இருந்தான். அவளின் நடத்தையை அவன் தவறாக நினைக்கவில்லை. ஆனால், அவள் தான் சொல்லியும் நவ்தீப்பை தவிர்க்காமல் இருப்பதும், தன்னிடம் பொய் உரைத்ததும் அவனை உறுத்திக் கொண்டும், அதே சமயம் நவ்தீப் அவளைப் பிடித்தது என்று ஆத்திரத்தின் சிகரத்தில் இருந்தான்.

ரிஷ்வந்தின் முகத்தை கவனித்த கவின், “ஏன்டா ஒரு மாதிரி இருக்க?” என்று வினவ, எதுவும் பேசாமல் வந்தான் ரிஷ்வந்த்.

கவின் அலைபேசியை எடுக்க, “யாருக்கு கால் பண்ண போற?” ரிஷ்வந்த் வினவ, “நிஹி தான்” என்றான்.

“ஹோ! உங்க பிரண்ட் மிஸ்.நிஹாரிகாவுக்கா?” ரிஷ்வந்த் வினவ, நிஹாரிகாவுக்கு அழைக்கலாம் என்று சென்ற கவினின் விரல் நின்றது. ஏனெனில், அவளிடம் ஒதுக்கத்தைக் காட்டிய நண்பன், அவ்வப்போது அவள் முக வாட்டம் தாங்காமல் தலையைக் கோதுவதும், மீண்டும் முகம் இறுகுவதும், அவள் ஹைதராபாத் சென்ற பிறகு எதையோ இழந்தது போலத் திரிந்ததும் என்று பார்த்தவனுக்கு, நண்பனின் இந்தப் பேச்சு சரியாகப் படவில்லை.

“ஏன் ரிஷ்வந்த் இப்படி பேசறே?” கவின் கண்டிக்க,

“உண்மைதான். ஷீ இஸ் நாட் மைன் எனிமோர் (SHE’S NOT MINE ANYMORE)” என்றிட, “ரிஷ்வந்த் நீ கோவத்துல இருக்க. எப்பவும் போல வர்ற கோபம் மாதிரி இல்ல. நார்மலா நீ இருக்க மாதிரியும் தோணல எனக்கு. உன்னோட எதுவும் நிஹியை ஹர்ட் பண்ணாம பாத்துக்க. எதுவா இருந்தாலும் உக்காந்து பேசுங்க” என்றான். அவனின் மனம் எதையோ நினைத்து இப்போதே அபாய எச்சரிக்கை விடுக்கத் தொடங்கியது. நண்பனின் வேதனையும், கோபமும் எதனால் என்று அவனுக்கு புரிந்தும் புரியாமல் இருந்தது. நேற்று நடந்ததை ரிஷ்வந்த் சொல்லி இருந்தால், கவின் நிச்சயமாக நிஹாரிகாவுக்கு அழைத்து விசாரித்திருப்பான்.

ரிஷ்வந்திற்கு கோபம் இருந்தாலும், நேற்று நடந்ததை யாருக்கும் தெரிவிக்கும் எண்ணம் அவனுக்கு இருக்கவில்லை. அவனால் மற்றவர்களிடம் அவளை தவறாக சித்தரிக்க முடியாது. ஏன் அவனாலேயே அதை ஏற்றுக்கொள்ள முடியாதே.

ஆனால், இப்படி இருப்பவன் அறியவில்லை, தான் நாளை அவளை குத்திக்குதறப் போவதைப் பற்றி!

கண்களை இறுக மூடித் திறந்த ரிஷ்வந்தை அணைத்த கவின், “அட்வான்ஸ் ஹாப்பி பர்த்டே மச்சி” என்றான்.

ஒரு வெற்றுப் புன்னகையை உதிர்த்தவன், “அது ஒண்ணு தான் கேடு” என்று சின்னக் குரலில் சொல்லிவிட்டு வேலைக்கு நடக்க ஆரம்பித்தான்.