நிஹாரி-21(2)

IMG-20211003-WA0016-d8eea2ab

நிஹாரி-21(2)

அடுத்தநாள் வழக்கம்போல எழுந்த நிஹாரிகாவுக்கு, வழக்கத்திற்கு மாறாக உற்காசம் உவகையாய் ஊற்றத் தொடங்கியது. உடலில் சிறிது அசதியும், வாயில் காய்ச்சலினால் துளி கசப்பும் தெரிந்தபோதும் தன்னவனின் பிறந்தநாள் இன்று என்றே அவளின் மனதில் பதிந்திருக்க, தனது வார்ட்ரோபைத் திறந்தவள் இன்று என்ன அணியலாம் என்று தனது கீழுதட்டை அழகாய் கடித்தபடியே தேட அவளுக்கு எதிலுமே மனம் திருப்தியாகவில்லை.

‘ப்ச்’ என்று நினைத்தவனுக்கு, ‘உனக்கு சேரி கட்டுனா செமையா இருக்கும்டி” என்று வருடா வருடம் கல்லூரி கல்சுரஸ் விழாவில் ரிஷ்வந்த் சொன்னது, அவளின் மூளையில் உதித்து, நெஞ்சில் இறங்க, தான் வைத்திருக்கும் ஒரே ஒரு புடவையை வார்ட்ரோபில் இருந்து எடுத்தாள்.

இந்த வருடம் இறுதி பரீட்சை முடிந்த பிறகு வரும் கல்லூரி கலை விழாவில் கட்டலாம் என்று நிஹாரிகா வாங்கி வைத்தது, யாரும் அறியாமல். ரிஷ்வந்திற்கு கூட சொல்லவில்லை அவள். அன்று அவன்முன் திடீரென சென்று புடவையில் நின்று சர்ப்ரைஸ் செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தாள்.

ஆனால், ஏனோ இன்று அதைக் கட்ட நினைத்தவள், விரைவாக குளித்து முடித்து, யூ டியூப்பின் உதவியோடு ஆசை ஆசையாக புடவையை நேர்த்தியாக குறையில்லாமல் கட்டி முடித்தாள்.

புதிதாக பிடுங்கப்பட்ட கேரட் ஆரஞ்சு நிறத்திலுள்ள காட்டன் ப்ளெயின் சில்க் சேரி, கச்சிதமாய் ஒரு சுருக்கு இல்லாமல் அவளின் பொன் நிற மேனியை பிடித்திருக்க, வெள்ளி நிற ரவிக்கையில் ஆங்காங்கே இலை பச்சையும், மஞ்சள் நிறமும் அழகாய் அச்சடித்து, பின்னால் முடிச்சுகளால் மட்டும், க்ரிஸ் க்ராஸ் செய்து முடிவில் முடிச்சிடப்படும் ப்ளவுஸை அவள் அணிந்திருக்க, விதியோ அவளைப் பார்த்து, ‘உச்’ கொட்டி நக்கல் சிரிப்பு சிரித்தது.

ஆளுயரக் கண்ணாடியின் முன் நின்றவள் லேசாக சேலையை இறக்க, ரிஷ்வந்தின் பெயர் அழகாய் அவளின் உடலிலும் சரி மனதிலும் சரி பதிந்திருக்க, அத்தனை நாணமாய் இருந்தது பெண்ணவளுக்கோ.

தன்னவனுக்கு முதன்முதலாக, தன் கழுத்திற்குக் கீழ் மார்புக்கு மேல் குத்திய அவன் பெயரை காட்டப் போவதை நினைத்து அவள் உடல் சிலிர்த்தது.

பெண்ணுக்கே உண்டான நாணமும், ஒரு வயதுக்கு வந்த பின் வெயில் கூட படாத இடத்தை அவனிடம் இன்று காட்டப் போகிறோம் என்ற தயக்கமும் அவளை ஆட்கொள்ளச் செய்தாலும், அவன் தானே தன் எதிர்காலம் என்று நினைத்துக்கொண்டவள், தனது தயக்கத்தை ஒதுக்கி வைத்தாள். இருந்தும் நாணத்தை ஒதுக்கி வைக்க முடியாமல் துடித்தவளுக்கு தன்னவனை நினைக்க நினைக்க வதனம் செம்பருத்தி நிறத்தில் சிவந்து போனது.

கீழே வந்து தனது காரை அவள் எடுக்க, அது வேலையைக் காட்டியது. ‘இன்னிக்குன்னு பாத்து வேலையை காட்டுதே இது’ என்று அதன் மேல் சிறிது கோபத்தைக் காட்டியவள், வீட்டிற்குள் வந்து வரவேற்பறையில் அமர்ந்தபடி மணியைப் பார்த்தாள்.

கேப் புக் செய்தாலும் அவளால் நேரத்திற்கு செல்ல முடியாது. புடவை கட்ட நேரம் எடுக்க படாத பாடு பட்டிருந்தாள் அவள். அலைபேசியை எடுத்தவள், “நவ்தீப், என் கார் எடுக்க மாட்டிது. நீ இன்னும் ஹைதராபாத் கிளம்பல தானே. என்ன வந்து ட்ராப் பண்ண முடியுமா?” நிஹாரிகா வினவிக்கொண்டே வெளியே வர, நிலவுப்படியில் புடவை தட்டி கீழே விழப்பார்த்தவள், சுதாரித்துக் கொண்டு விழாமல் நின்றாள்.

“ச்சு” என்று வலியில் காலைத் தேய்த்துக் கொண்டவளுக்குத் தெரியவில்லை, இருமுறை பாவப்பட்டு விதி தன்னைத் தடுத்ததைப் பற்றி.

முதல்முறை கார் வேலை செய்யாமல் இருக்க, இரண்டாவது முறை அவளது காலைத் தட்டிவிட்டது. இதை அறியாதவள் நவ்தீப்பை வரச் சொல்லிவிட்டு அவனுக்காக காத்திருந்தாள்.

“நவ்தீப் இங்கேயே இறக்கி விட்டுரு. நான் போயிப்பேன்” நிஹாரிகா கல்லூரி வாயிலின் முன்பே, அவனை நிறுத்தச் சொன்னாள். அவனுடன் வந்ததைப் பார்த்தால் ரிஷ்வந்த் கத்துவான் என்று அவளுக்குத் தெரியும். அவன் பிறந்தநாளன்று எதற்கு தேவையில்லாத வேலை என்று நினைத்தவள் நவ்தீப்பிடம் அவ்வாறு சொல்ல,

“இவ்வளவு தூரம் வந்து விட்டிருக்கேன். உள்ள வராதா என் கார்” என்றவன் சிரித்தபடியே அவளை கல்லூரியின் வளாகத்திலேயே இறக்கிவிட்டான்.

காரிலிருந்து இறங்கியவள், “தாங்க்ஸ் நவ்தீப். பை” என்று வகுப்பிற்கு ஓட்டமும் நடையுமாக ஓடினாள். எப்போதும் அவள் வரும் நேரத்தை விட பதினைந்து நிமிடங்கள் தாமதமாக வந்திருந்தாள் நிஹாரிகா. ‘ச்ச எவ்வளவு ஸ்பீடா வந்தும் பர்ஸ்ட் வந்து பர்த்டே விஷ் பண்ண முடியலையே’ என்று மனதுக்குள் நொந்தவள், புடவை சிறிதும் கசங்கமால் பார்த்துப் பார்த்து குட்டி ஓட்டம் ஓடினாள்.

வகுப்பிற்குள் முதல் முதலாக புடவை கட்டி ஒயிலாக வந்தவளை ஆவென அனைவரும், கண் எடுக்காமல் பார்க்க, அவளோ சங்கோஜமாக நெளிந்து கொண்டு, ரிஷ்வந்த் அமரும் இடத்தைக் கண்டாள். முகத்தில் படர இருந்த நாணம் சட்டென்று விலகிச் சென்றது அவளிடம் இருந்து.

அவனுக்கும் கவினுக்கும் இடையில் எப்போதும் அவள் அமரும் இடத்தில் பிருந்தா அமர்ந்திருக்க, ரிஷ்வந்தோ அவளின் அரவம் உணர்த்தும் அவளை நிமிர்ந்தும் பார்க்காமல், அலைபேசியில் விளையாடிக் கொண்டு அலட்சிய பாவத்தோடு அமர்ந்திருந்தான்.

தன் முகம் மாறுவதை உணர்ந்தவள், சடுதியில் தன்னை மறைத்துக் கொண்டு அவள் இடத்திற்கு செல்ல, அவள் அருகே வர வர பிருந்தா எழப் பார்க்க, ரிஷ்வந்தின் கை பிருந்தாவின் கரத்தை இறுகப் பற்றி அவளை எழ விடாமல் செய்தது.

பிருந்தாவின் நிலையோ லாரி சக்கரத்தில் சிக்கிய எலி போல இருந்தது. 

நிஹாரிகா ரிஷ்வந்தின் செயலைப் பார்த்துவிட்டு, “நான் இங்க உக்காரக் கூடாதா ரிஷ்வந்த்?” அவள் வினவ, அவன் தோளைக் குலுக்கிவிட்டு தன் அலைபேசியில் மூழ்கினான்.

பிருந்தா பார்வையாலேயே நிஹாரிகாவிடம், ‘ஸாரி’ என்று கெஞ்ச, கண்களைச் சிமிட்டி புன்னகைத்த நிஹாரிகா, பிருந்தாவின் இடத்தில் சென்று சக்தியுடன் அமர்ந்து கொண்டாள்.

நண்பனின் செயலில் கவினிற்கு கோபம் வந்தாலும், அவன் எதையும் கேட்கவில்லை. கேட்டால் மேலும் கோபம் அதிகரித்து நிஹாரிகாவை காயப்படுத்தி விடுவானோ என்று எண்ணினான். அதனால் கவினும் வாயைத் திறக்கவில்லை.

மதிய இடைவேளையில் நிஹாரிகாவை அழைத்த கவின், “நிஹி, ஈவ்னிங் அவனுக்கு நம்ம ப்ளாக் மாடில கேக் வெட்டலாம்” என்றிட, “ம்ம்” என்று புன்னகைத்தாள்.

“நல்லா சிரிடி. இப்படி இருக்கிறப்போ உன்னையும் பார்க்க சகிக்கல. அவனை சுத்தமா பார்க்க சகிக்கல” என்றவன், “பேசாம இரண்டு பேரும் ஈவ்னிங் எங்காவது தனியா பேசிட்டு போங்க” என்றான் ஆறுதலாக.

“ஆமா, அவனுக்கு என்ன கிப்ட் வாங்கிட்டு வந்திருக்க?” திடீரென ஞாபகம் வந்தவனாய் கவின் கேட்க, அவளின் வதனமோ கோவைப் பழமாய் சிவந்தது.

பதிலளிக்காமல் திருதிருவென முழித்துக்கொண்டு நின்றவளைக் கண்டவனுக்கு, ‘ரைட் ரா.. என்னமோ கேடி ரெடி பண்ணியிருக்கா’ என்று நினைத்தவன், “க்கூம்” என்று செருமிவிட்டு, “ஓரமா நின்னு வெக்கப்படு. நான் கிளம்பறேன்” என்றிட,

“போடா லூசு” நண்பனின் கேலி தாங்க முடியாமல் ஓடினாள் நிஹாரிகா. “தனியா இதுக சிரிச்சுட்டு நம்மள லூசுன்னு சொல்லுதுக” என்றவன் சிரித்தபடியே, கேக் ஆர்டர் கொடுத்த கடைக்கு அழைத்தான்.

வகுப்பில் அவ்வப்போது நிஹாரிகா ரிஷ்வந்தைத் திரும்பிப் பார்த்தும் ரிஷ்வந்த் சிறிதும் அசையவில்லை. அவளின் கண்களில் தெரிந்த ஏக்கம் புரிந்தும், அவன் கரைக்க முடியாத கல் நெஞ்சக்காரனாகவே அமர்ந்திருந்தான்.

வாயைத் திறந்தால் அவளை அவன் காயப்படுத்தப் போவது உறுதி.

அன்று மாலை ரிஷ்வந்த் அந்த சாக்கோ ட்ரபிள் கேக்கை வெட்ட, அவர்களது கும்பல் எட்டு பேர் மட்டும் வாட்ச் மேனை கரெட்க் செய்துவிட்டு, அங்கு மொட்டை மாடியில் மாலை ஐந்தரை மணிக்கு இருந்தனர். கேக்கை வெட்டி முதல் துண்டை ரிஷ்வந்த் எடுக்க, நிஹாரிகாவுக்கு புரிந்தது, கடந்த இரண்டு வருடங்களாக தனக்கு முதலில் ஊட்டியவன் இன்று அவ்வாறு செய்யமாட்டான் என்று.

இன்று அவன் தனக்கு முதல் உரிமை தரப்போவது இல்லை என்று மனம் அறிந்தாலும், அதை ஏற்றுக்கொள்ள முடியாமல், அவளுக்கு கண்கள் கரிப்பது போல இருந்தது. முயன்று கண்ணீரை அடக்கிக் கொண்டு, மலர்ந்த வதனத்துடன் பார்வையாளராக நின்றிருந்தாள்.

முதல் துண்டை கவினுக்கு ஊட்டியவன் அனைவருக்கும் அடுத்தடுத்து ஊட்ட, நிஹாரிகாவுக்கு மட்டும் முகத்தில் அடிப்பதுபோல அவன் கேக்கை ஊட்டவே இல்லை. அவன் தன்னை அவமானப்படுத்துகிறான் என்பதை உணர்ந்தும், அவள் அதை தாங்கிக்கொண்டே நின்றாள். பழைய நிஹாரிகாவாக இல்லாமல், அவனின் நிஹாரிகாவாக இருந்தவளுக்கு அதை ஏற்றுக்கொள்ளும் தன்மை இருந்தது. அவனுக்காக மட்டுமே. அதற்காக தன் சுய மரியாதையையும் கழற்றி வைத்தாள். 

“மச்சி..” கவின் இழுக்க, ரிஷ்வந்த் பார்த்த பார்வையில் கவின் மேலே பேசவில்லை. நிஹாரிகாவோ, ‘எதுவும் கேட்காதே’ என்று சிரித்த முகத்துடனே கவினிடம் புன்னகையுடன் கண் சிமிட்டினாள்.

அங்கிருந்தவர்களுக்கோ நிஹாரிகாவின் நிலை சங்கடத்தை அளித்தது.

கவின் கேக்கை வெட்டி நிஹாரிகாவிடம் நீட்ட, கவினை உணர்ச்சியற்ற பார்வை பார்த்தவள், “இல்லடா பசியில்ல” என்று சுண்டிய முகத்தை மறைத்து மறுத்துவிட்டாள். அதைக் கேட்டும் கேட்காதது போல ரிஷ்வந்த் நின்றுவிட்டான். அவள் கேக்கை  மறுத்ததில், கோபம் வேறு வந்தது அவனுக்கு.

அனைத்து கேக்கும் முடிந்த பிறகு, மாடியிலேயே ஓரமாய் வைக்கப் பட்டிருந்த காலேஜ் பேக்கை அனைவரும் எடுக்கச் செல்ல, “ரிஷ்வந்த்” என்று அழைத்தாள் நிஹாரிகா. அதுவும் அத்தனை தயக்கத்துடன். அத்தனை மெல்லிய குரலில். அவன் தன்னைத் தவிர்ப்பது அவளுக்கு நரகத்தில் நிற்பதுபோல கொடுமையாக இருந்தது அவளுக்கு. 

ரிஷ்வந்திற்கு தன்னிடம் இருக்கும் பொம்மையை நவ்தீப் பறித்துவிடுவான் என்ற பயமும், ஆங்காரமும் என்றால், நிஹாரிகாவோ தனி மனுஷி என்ற ஒன்றை மறந்து, சுயம் இழந்து  மொத்தத்தில் ரிஷ்வந்தின் கையில் இருக்கும் பொம்மை போல இருந்தாள்.

அவளின் குரலை உணர்ந்த அனைவரும் நிஹாரிகாவைப் பார்க்க, அவள் யாரை அழைத்தாளோ அவன் மட்டும் திரும்பவே இல்லை.

“மச்சி, அவ தான் கூப்பிடறால” அன்பு கூடக் கடிய,

“ப்ச்” என்று சலித்த ரிஷ்வந்த், நிஹாரிகாவிடம் திரும்பி, “என்ன?” என்று கடினமான குரலில் கேட்டான்.

“தனியா பேசணும்டா” என்றாள். ரிஷ்வந்த் பதில் அளிக்காமல் எங்கேயோ பார்க்க, நண்பர்கள் அனைவரும் அங்கிருந்த படியில் இறங்கி, மாடிக்கும் கீழ் தளத்திற்கும் இருக்கும் திருப்பத்தில் நின்றனர். அவர்கள் நிற்பது இவர்களுக்கும் தெரியாது, இவர்கள் நிற்பது அவர்களுக்கும் தெரியாது.

அவர்கள் சென்ற பின் ரிஷ்வந்தை நிமிர்ந்து பார்த்தவள், “ஹாப்பி பர்த்டே ரிஷ்வந்த்” என்றிட, “தாங்க்ஸ் ஃபார் யுவர் விஷ்(THANKS FOR YOUR WISH)” என்றவன் நகரப் பார்க்க, “உனக்கு ஒரு கிப்ட் கொண்டு வந்திருக்கேன்டா” என்றவள் அவன் கரத்தைப் பற்றி நிறுத்த, அவளின் கண்களை கடினத்துடன் பார்த்தபடி, தன் கைகளை உறுவிக்கொண்டவன், “ஸாரி, எனக்கு வேண்டாம்” என்றான் பேச்சை  வெட்டுவதுபோல. 

“ரிஷ்வந்த், ப்ளீஸ் என்னை அவாய்ட் பண்ணாத” நிஹாரிகா அவன் கைகளை மறுபடியும் பிடித்தபடிக் கெஞ்சினாள். அவள் இப்படியெல்லாம் யாரிடமும் கெஞ்சியதில்லை. பழக்கமும் இல்லை. அன்னையைத் தவிர.

“நான் உனக்கு யாரு. ஜஸ்ட் ஒரு பிரண்ட். ஆனா, அதுவும் இனிமேல் இல்லைன்னு நான் எப்பவோ முடிவு பண்ணிட்டேன்” சிறிதும் இரக்கம் இல்லாமல் ரிஷ்வந்த் சொல்ல, அவனின் கரத்தைப் பற்றியிருந்த நிஹாரிகாவின் கை அவளறியாமல் நடுங்கியது.

‘என்ன என்ன சொல்கிறான்? எப்படி எப்படி பேசுகிறான்? எப்படி மாறிப்போனான் இவன்? ஏன் இப்படி தன்னை வதைக்கிறான்?’ என்று அவளுக்குள் பல கேள்விகள்.

“நாம ஜஸ்ட் பிரண்ட்ஸா?” நிஹாரிகா அழுத்தமாக அதரங்கள் நடுங்க வினவ,

“அதுல சந்தேகம் வேறயா?” என்றான் அவன் அலட்டாமல்.

“அப்ப எதுக்கு என்னை கிஸ் பண்ணே? யாராவது ஜஸ்ட் பிரண்டை கிஸ்..” நிஹாரிகா சிறிது கோபத்தோடு வினவ, அவளை அவன் முடிக்க விடவில்லை.

“எக்ஸ்க்யூஸ் மீ? நீதான் எனக்கு இப்ப வேணும்னு கிஸ் பண்ண” அவளின் கேள்வி அவனை சீண்டிவிட, அவன் திருப்பித் தந்த பதில் அவளை சரியாய் குறி வைத்து அடித்தது. அன்று தன் காதலைக் காட்ட நினைத்து அவள் எடுத்து வைத்த முதல் படி இன்று அவளை கூனிக் குறுக வைத்தது.

இங்கு நிறைய ஆண்கள் தப்பித்துக்கொள்ள பயன்படுத்துவதை ரிஷ்வந்தும் பயன்படுத்தினான்.

இங்கு அவர்களுக்கு வரும் உணர்வுகள் சரி. பெண்களுக்கு எழும் உணர்வு தவறு என்று சில ஆண்களின் மனநிலை எப்போது மாறுமோ! 

“ஏன்டா இப்படி பேசற.. நான் என்ன தப்பு பண்ணேன்னு என்னை இப்படி ஹர்ட் பண்ற?” நிஹாரிகா கோபமும், இயலாமையும் தாங்கமால் கேட்க, ரிஷ்வந்தின் கோபம் எல்லையைக் கடந்தது.

அவளின் கையை வெடுக்கென்று உதறியவன், “யாரு யாரடி ஹர்ட் பண்றா. நீதான்டி என்கிட்ட பொய் சொல்லிட்டு எவனோ ஒருத்தனோட ஊர் மேஞ்சிட்டு வந்து என்னை உயிரோட சாகடிக்கற” ரிஷ்வந்த் கத்த நிஹாரிகாவுக்கு புரிந்துபோனது அவன் மாலிற்கு வந்திருக்கிறான் என்று. நவ்தீப்புடன் தன்னைப் பார்த்தும் இருக்கிறான் என்று. ஆனால், அவன் இப்போது உதிர்த்த வார்த்தைகள் அவளுக்கு மிகக் கேவலமாகத் தோன்றியது.

“சரி, அதை என்னன்னு கேளு” என்றவள், “ஆனா, ரொம்ப சீப்பா பேசாத ரிஷ்வந்த். நீ பேசறதுக்கு வேற மாதிரி அர்த்தம் வருது. யோசிச்சு பேசு” என்றாள் சிறிது எச்சரிக்கும் தொணியில். வார்த்தைகளை சிதறவிட்டால் அள்ள முடியாது என்பது அவளின் எண்ணம். 

“எது நான் சீப்பா பேசறேன்னா. நீ பண்ணுன வேலைக்கு வேற எவனாவதா இருந்தா இந்நேரம் வாயால பேச மாட்டான்” ரிஷ்வந்த் கோபத்தில் அறிவிழந்து பேசிக் கொண்டிருக்க, நிஹாரிகா கண்களில் நீர் கோர்க்க, ‘இனிப் பேசி பயன் இல்லை’ என்று அங்கிருந்து நகரப் பார்த்தாள்.

“ஏய் பேசிட்டு இருக்கேன்ல. நீ போன என்னடி அர்த்தம்” என்றவன் ஆக்ரோஷமாக அவளின் தோளைப் பிடித்துத் திருப்ப,

“நீ நீயா இல்ல ரிஷ்வந்த். உனக்கு என் மேல நம்பிக்கை இல்ல. நான் எவன் கூடயோ போயிடுவேன்னு நீ நினைக்கற மாதிரி இருக்கு. ஸோ இதுக்கு மேல இதை பேசி யூஸ் இல்லை” என்றிட, அவனோ மிருகமாய் மாறும் நிலையில் இருந்தான். எதையும் புரிந்து கொள்ளும் நிலையில் அவன் இல்லை.

‘வேண்டாத மாமியார் கை பட்டால் குத்தம் கால் பட்டால் குத்தம்’ என்பது போல இருந்தது அவனுக்கு நிஹாரிகா எது பேசினாலும்.

“அப்ப.. எப்ப இவன் நம்மளை விட்டுப் போவான்னு காத்திருந்தியா, இத்தனை நாள்” என்று ரிஷ்வந்த் அடுத்த கேள்வியைக் கேட்க, நிஹாரிகாவுக்கு அவன் கேள்விகளின் உக்கிரம் தாங்காமல் தலை சுற்றுவது போல இருந்தது.

‘எத்தனை கனவுடன் ஆசை ஆசையாய் இன்று கிளம்பி வந்தேன். தான் காண்பிக்கப் போகும் பரிசில், அவன் முகம் மாற, அந்த நொடியை மனதுக்குள் சேமித்துக்கொள்ள எத்தனை ஆசையாய் வந்தேன்? ஆனால், நடந்து கொண்டிருப்பது என்ன?’ என்று நினைத்தவளுக்கு மனதில் வலிகள் எழுந்து குத்த ஆரம்பிக்க, வாய்விட்டு அழ வேண்டும் போல இருந்தது நிஹாரிகாவுக்கு. 

“நான் சீப்பா பேசறேன்னு சொன்னியே. அப்ப உன் கேரக்டருக்கு என்னடி அர்த்தம் சொல்லு. என்னை மாதிரி ஒண்ணும் இல்லாதவனோட வாழ முடியாது அதானே” என்றவன் அவளைப் பிடித்து உலுக்க, தன் நடத்தையை அவன் இவ்வளவு இழிவாகப் பேசுவதைக் கேட்ட நிஹாரிகா பொறுமை இழந்து புயலாய் உருமாறினாள்.

அவனைத் தன்னிடம் இருந்து உதறித் தள்ளியவள், ஆங்காரமாக, “ஆமாடா. அப்படித் தான் நினைச்சேன் போதுமா” என்று இரு கைகளையும் தலையில் வைத்துக்கொண்டு கத்த, அவ்வளவு தான் இவனின் ஆங்காரம் அதற்கு மேல் தலை தூக்கிச் சென்றது.

கேள்வி கேட்டுக்கேட்டு அவளை இப்படிப் பேச வைத்ததே இவன்தான் என்பதை மறந்து, அவளின் கேள்வியில் எரிமலையாய் சீற்றம் கொண்டவன், எரிமலையில் வெடிக்கும் அக்னித் துகல்களை அவள் மேல் கொட்டினான் அவன் வார்த்தையால். அந்த வார்த்தையில் நிஹாரிகாவின் இதயத் துடிப்பு நின்றுதான் போனது. 

“ஆமாடி. உனக்கெல்லாம் உன் அம்மா மாதிரி ஒருத்தன் பத்தாது” என்று ரிஷ்வந்த் கத்த, தீப்பிழம்பிற்குள் விழுந்தவள் போல, தன்னவனின் உயிர்க்கொள்ளி வார்த்தைகளில், உருக்குலைந்து போனாள் ரிஷ்வந்தின் காதலி. அதற்கு அவன் தன்னை இரண்டு துண்டாக வெட்டிப் போட்டிருக்கலாம் என்றிருந்தது அவளுக்கு.

நெஞ்சின் மீது கை வைத்திருந்தவள், அவன் வார்த்தைகளில் சிலையாகிவிட, கண்கள் மட்டும் சரம்சரமாய் கண்ணீரை உதிர்த்தது. எந்த வார்த்தைகளைத் தாங்க முடியாமல் ஓடி வந்தாளோ, அதே வார்த்தை அவளை மீண்டும் அடித்தது. அதுவும் தன்னவனின் வாயில் இருந்து வந்து அவளை வலிக்க வலிக்க அடித்தது.

இப்படிக் கேட்டவனை அவளால் திருப்பி அடிக்காமல் விடமுடியுமா?

அவன் வார்த்தையையும் அதன் வலியையும் அவனுக்குக் கொடுக்க நினைத்தவள், “ஆமாடா எனக்கு பத்தாது தான். உன்னை மாதிரி ஒண்ணு இல்லாதவனை, சந்தேகம் புடிச்சவனை கல்யாணம் பண்ணா அதான் நடக்கும் போல” என்று உரக்கக் கத்தியவள் திரும்பச் செல்ல எத்தனிக்க,

“என்னடி சொன்ன?” என்று உறுமியவன் அவளைப் பிடித்து இழுக்க, க்ரிஸ் க்ராஸ் என்ற டிசைனில் முடிச்சுகளால் முதுகு முழுதும் ப்ளவுஸை அவள் இழுத்துக் கட்டியிருக்க, அவன் ஆத்திரத்தில் பிடித்து இழுத்ததில், அவளின் முதுகுப்புறம் இருந்த ஒரு முடிச்சு பிரிந்து அனைத்தும் பிரிந்து அவிழ்ந்தது.

அவன் தெரிந்தே செய்யவில்லை தான். அவனின் ஆக்ரோஷத்தாலும், கண்ணை மறைத்த கோபத்தாலும் நடந்த விஷயம் இது. அவனே அதில் அதிர்ச்சியின் உயர்நிலையை எட்டினான். 

பெண்ணவளோ அவனின் செயலில் விதிர்விதிர்த்துப் போய் விட்டாள். உடல் நடுங்க மாராப்பைப் பிடித்தபடித் திரும்பியவள், அவனைக் கண்டு பயந்தபடி அங்கிருந்த சுவற்றில் ஒன்றி நின்றாள். காலையில் இருந்து மனதில் இடிகள் ஒவ்வொன்றாய் இறங்க, மனம் அடித்துக்கொள்ள தரையில் முழங்காலிட்டு அமர்ந்தவள் அத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த அனைத்திற்கும் விடுதலை அளித்து கதற ஆரம்பித்தாள்.

“இன்னும் என்ன எல்லாம் பண்ணி என்னை சாவடிக்கலாம்னு இருக்கடா” என்று வதனம் கசங்க, மரக்கட்டை போல நின்றிருந்தவனிடம் நிமிர்ந்து கதறலோடு அவள் கேட்க, அவள் அமர்ந்திருந்த நிலையிலும், கதறிய நிலையிலும், அவள் கேட்ட கேள்வியிலும் உள்ளுக்குள் செத்து மடிந்தான் அவளவன். 

அவளின் கதறல் அவனை உயிருடன் கொல்ல ஆரம்பித்தது. 

அவளின் கதறல் சத்தத்தில் மேலே வந்த நண்பர்கள் இருவரின் நிலையைக் கண்டு திகைத்தனர். நிஹாரிகாவிடம் சென்ற சக்தியும், பிருந்தாவும் அவளை எழ வைக்க, அவளோ மறுப்பாய் தலையாட்டினாள்.

“என்னாச்சு நிஹி. எழுந்திரு” சக்தி சொல்ல,

“ப்.. ப்ள.. ப்ளவுஸ் நாட் முழுசா பிஞ்சிருக்குடி” என்றவள் உதட்டைக் கடிக்க, அவள் கடித்த இடத்தில் இருந்து இரத்தம் கசிய ஆரம்பித்தது.

நிஹாரிகா பேசியதைக் கேட்ட கவின், அன்பு, தமிழ் மூன்று பேரும் ரிஷ்வந்தைத் திட்டிக் கொண்டிருக்க, “நாங்க இன்னும் பேசி முடிக்கல.. எல்லாரும் போறீங்களா?” என்று நண்பர்களை அங்கிருந்து ரிஷ்வந்த் அதிகாரத்துடன் அகற்ற,

அவர்கள் சென்ற பின்னும் அழுது கொண்டிருந்த நிஹாரிகா, புடவை முந்தானையை எடுத்து பின்புறம் தெரியாமல் இருக்க தன்னைப் போர்த்திக் கொண்டு எழ, “உன்கிட்ட பேசணும்” என்றான் ரிஷ்வந்த்.

அவனின் பேச்சில் பத்ரகாளி அவதாரத்தை எடுத்தவள், “பொறுக்கி நாயே. இனிமேல் என்கிட்ட பேசாதடா. உனக்கு எனக்கும் அவ்வளவு தான். எல்லாம் முடிஞ்சுது. இட்ஸ் ஓவர். மீறியும் வந்து பேசுன..” இடையிடையே கேவலோடு கத்தியவள், அணிந்திருந்த செருப்பை கழற்றி தூரத்தில் நின்றிருந்த அவனின் மேல் யோசிக்காமல் வீசிவிட்டு, மற்ற ஒரு செருப்பை கழற்றி எறிந்துவிட்டு அங்கிருந்து அழுது கொண்டே  விடுவிடுவென நகர்ந்தாள்.

வீட்டிற்கு கேப் பிடித்து வந்தவள், தன் அறையில் தரையில் மடங்கி கதற ஆரம்பித்தாள். இத்தனை நாள் அழகாய் வளர்ந்திருந்த காதல், அவனின் வார்த்தைகளில் முழுதாக அழிந்துவிட்டது. தன் காதல் மண்ணோடு மண்ணாய் மாண்டுவிட்டதை எண்ணியவளுக்குத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அவன் அவளுக்கு வாங்கிக்கொடுத்த பொருட்கள், பரிசுகள் அனைத்தையும் எடுத்து கோபத்தோடும், வேதனையோடும் விசிறி அடித்தவள், இரு கைகளையும் தலையில் வைத்தபடி அறையின் சுவற்றில் சாய்ந்து கண்ணீருடன் அமர்ந்திருந்தாள்.

அவள் முடிவு எடுத்துவிட்டாள். இனி அவன் முகத்தில் விழிக்கவே கூடாது என்று.

முகத்தைத் துடைத்துக் கொண்டு நள்ளிரவில் வீங்கிய முகத்துடனும், சிவந்த விழிகளுடனும் எழுந்தவள், ஹைதராபாத்திற்கு அதிகாலை விமானத்தில் பறந்துவிட்டாள், அவள் தாத்தையாவிடமே.

இங்கு நிஹாரிகா சென்றபின் வீட்டிற்கு வந்த ரிஷ்வந்தை அழைத்த கயல்விழி, “ரிஷிப்பா.. வா வந்து சாப்பிடு” என்று அவனுக்கு வாயில் குலோப் ஜாமூனைத் தள்ள வர, அவனோ அதைத் தட்டிவிட்டான். பிறந்த நாளை இந்த வருடம் கொண்டாட முடியாது என்றாலும், அவனுக்கு பிடித்ததைச் செய்திருந்த அன்னைக்கு அவனின் செய்கையில் மனம் இரண்டாக உடைந்தது.

“இது ஒண்ணு தான் கேடு எனக்கு” ரிஷ்வந்த் கத்த,

“ஏன் ரிஷ்வந்த் இப்படி பேசறே?” கயல்விழி கண்ணீர் கீற்றுடன் கேட்க,

“பின்ன எப்படி பேச சொல்றீங்க. அப்படியே ராஜ வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்கோம் பாருங்க. ஏன்டா பிறந்தோம்னு இருக்கு. இப்படியொரு வாழ்க்கை வாழ்றதுக்கு வாழாமையே இருக்கலாம். இத்தனை நாள்ல என்ன சேத்தி வச்சிருக்கீங்க. எதுவும் தெரியாம நஷ்டத்துல முடிஞ்சது தான் மிச்சம். என்னை காலேஜ்ல அசிங்கப்பட வச்சதுதான் மிச்சம். பணம் இல்லனா வெளிய ஒரு பையன் மதிக்க மாட்டான் தெரியுமா. உங்கனால எனக்கு கிடைச்ச பேரு ஒண்ணும் இல்லாதவன் ங்கிறது” வீட்டிலும் கோபமாய்க் கத்தியவன் சுவற்றில் கையைக் குத்திவிட்டு சாய்ந்து நிற்க,

“என்னங்க!” என்ற அன்னையின் அலறலில் ரிஷ்வந்த் திரும்ப, அன்று மகனின் பிறந்த நாள் என்பதால் விரைவாகவே வந்திருந்த கனகராஜ், அனைத்தையும் கேட்டிருந்தார். மகனின் வார்த்தையில் சிறிதாய் மனதுக்குள் குத்திக் கொண்டிருந்த வலி, இதயம் முழுதும் பரவ நெஞ்சைப் பிடித்தபடி விழுந்தார்.

தந்தையின் அருகில் ஓடி வந்தவன், அவரை ஹாஸ்பிடலில் சேர்க்க, அவரை ஐசியூவில் அனுமதித்த பின், அவரைப் பரிசோதித்த டாக்டர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டு சென்றார்.

மகனிடம் திரும்பிய கயல்விழி, “உன் கால்ல வேணாலும் விழுகறேன் ப்பா. என் புருஷனை காப்பாத்தி என்கிட்டையே தந்திடு” என்று அங்கிருந்த அத்தனை பேரின் முன்னால் கயல்விழி, ரிஷ்வந்தின் காலில் விழப்போக, அன்னையின் செயலில் ஆடிப்போனவன் கண்கள் கலங்க,

“நீங்க ஆபரேஷனுக்கு ரெடி பண்ண சொல்லுங்க ம்மா” என்றவன் பிரகாஷை நாடிச் செல்ல, அவரோ கனகராஜை வேறொரு மல்டி ஸ்பெஷலிட்டி மருத்துவமனைக்கு மாற்ற, அங்கு அவரின் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.

அதன் பிறகு கல்லூரிக்கு வந்த ரிஷ்வந்த், நிஹாரிகா ஹைதராபாத்தே சென்றுவிட்டதை அறிந்து, தனக்குள் இறுகி மாறிப்போனான். எப்படியும் இறுதித் தேர்வு எழுத வருவாள் என்று ரிஷ்வந்த் நினைத்திருக்க, நிஹாரிகாவின் சுவடையே அவன் கல்லூரியில் காணவில்லை.
அவள் யாருமறியாமல் தனியறையில் விரைவாக பரீட்சையை முடித்துக்கொண்டு சென்றதை யாரும் அறியவில்லை. இடையில் இருந்த இரண்டு மாதங்களில் உருக்குலைந்து, கருவளையம் விழுந்து, நிறம் மங்கி இருந்தவளை பார்க்கவே நோயாளி போல இருந்தாள். சக்கரவர்த்தி விசாரித்து தான் ரிஷ்வந்தை பற்றி அறிந்து கொண்டது. ஆனால், எதுவும் அவருக்கு முழுதாகத் தெரியவில்லை. தனது பங்காரம் ஒரு நாள் தன்னிடம் மனம் விட்டுப்பேசும் என்று அவர் நினைத்திருக்க அது கடைசி வரை நடக்கவேயில்லை.

நிஹாரிகாவோ ரிஷ்வந்தின் நினைவில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டிருக்க, அவளின் மனதை திசை திருப்பும் பொருட்டு, அவளை ப்ரொடக்சனிற்கு அனுப்பி வைத்தார் சக்கரவர்த்தி.

***

இங்கு..

ரிஷ்வந்த் கல்லூரி முடித்துவிட்டு நிஹாரிகாவை தொடர்ப்பு கொள்ள ஒரு முறை முயற்சிக்க, அவளோ அவளின் எண்ணை மாற்றியிருந்தாள். தன் அதிகபட்ச பேச்சால் தந்தை, அன்னையின் முகம் பார்க்கவே சங்கடப்பட்டவன், பிரகாஷுடன் அவருக்கு உதவியாக இருந்தான். மாலை வந்து டாமினோஸில் வேலை செய்தான். தன்னை முழு நேரமும் ஓய்வில்லாமல் வைத்துக் கொண்டிருந்தான் அவளை மறக்க. அதையும் மீறி அவளின் கதறிய முகம் அவனுக்கு ஞாபகம் வர குடிக்க ஆரம்பித்தான்.

அன்று பிரகாஷ் அந்த ஹீரோவை வைத்து எடுத்துக் கொண்டிருந்த படம், செட் கீழே விழுந்ததில், சகுனம் சரியில்லை என்று அந்த நாயகனின் தந்தை மகனை இழுத்துக் கொண்டு சென்றிருக்க, அந்தக் கதைக்கு நாயகன் கிடைக்காமல் இடையில் வேறொரு படத்தை முடித்த பிரகாஷ், ஸ்வாதிகாவுடன் விளையாடிய படி வந்த ரிஷ்வந்தைக் கண்டார்.

மனதில் யோசனை துளிர்க்க, ரிஷ்வந்திடம் அவர் தன் எண்ணத்தைப் பகிர, “எனக்கு ஒத்து வருமா சார்” என்றான் தயக்கமாக.

“உன்னை செலவு பண்ணி நான் ட்ரெயின் பண்றேன். நீ நடிக்கறியா?” அவர் கேட்க, தனக்கு வந்த வாய்ப்பை விட மனமில்லாமல் பயன்படுத்திக் கொள்ள எண்ணினான்.

அதன்பிறகு சினிமாத் துறையில் ரிஷ்வந்த் பிரகாஷின் உதவியோடு வளர்ந்தான். அவனின் திறமையும், கடின உழைப்பும் அவனுக்கு பல ரசிகர்களை உருவாக்கிக் கொடுத்தது. கிட்டத்தட்ட அவனின் குரு பிரகாஷ். சினிமாவில் சம்பாரித்ததை ஷேர் மார்க்கெட்டில் போட்டு வேறு அள்ளினான். தந்தையின் அறுவை சிகிச்சைக்கு பிரகாஷ் தந்த தொகையை அவர் மறுக்க மறுக்க தந்தான்.

அன்னை, தந்தையை சொந்த வீட்டிற்கு குடியேற்றினான்.

இத்தனையை சாதித்த பிறகும் அவனின் மனதில் ஒரு வெறுமை. அது தன்னவள் இல்லாமல் இருப்பது.

இருவரின் பிரிவிலும் இருவரும் துடித்துக் கொண்டிருந்தனர்.

அவளை மனம் தேடிய போதும் அவள் அவனைத் திட்டிய வார்த்தையும், செருப்பை கழற்றி அவன் மீது வீசியதும் அவனை கோபத்தில் வைத்திருந்தது. ஆனால், அவள் அன்னையை வைத்து உண்மை அறியாமல் அவளை வதைத்ததை நினைத்தவன், அதுக்காகத்தான் அன்று இருவரின் காலில் விழுந்தது. அது ஆசிர்வாதம் என்று அனைவரும் நினைத்திருக்க, அவன் மனம் மட்டுமே அறியும் அது மன்னிப்பு என்று.

நிஹாரிகாவும் தன்னவனின் வளர்ச்சியை யாரும் அறியாமல் கவனித்துக் கொண்டிருந்தாள். மனதின் ஓரத்தில் அவன் இப்போது இருக்கும் உயரத்தைக் கண்டு மெச்சினாலும், அவனின் பேச்சிலும், செயலிலும் அவள் தன் கோபத்தில் இருந்து சிறிதும் இறங்கவில்லை.

அப்படி இருந்தவர்களை விதியின் வசத்தால் சேர்க்க வந்தவன் தான் அருண். தன் படத்தின் மூலம்.

கடந்த காலத்தில் இருந்து வெளியே வந்த ரிஷ்வந்த் நிலவை வெறித்தபடியே நின்றிருந்தான். திருமணம் ஆனாலும் இருவரின் மனமும் அப்படியே தான் இருந்தது. இருவரின் மனமும் வெகு தொலைவில் இருக்க, ‘எங்க இரண்டு பேர் லைஃப் எப்படி இருக்குமோ’ என்று நினைத்தவன், திரும்ப, நிஹாரிகா கட்டிலில் அமர்ந்து எதிரே இருந்த சுவரை வெறித்தபடி அமர்ந்திருந்தாள்.