நிஹாரி-23

IMG-20211003-WA0016-c159cafb

நிஹாரி-23

“வேட்டி கழண்டு போனதுகூட தெரியாம தூங்கிட்டு இருக்க?” நிஹாரிகா தன்னையே தூக்கக் கலக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தவனிடம் வினவ, அவ்வளவு தான், தூக்கக் கலக்கத்தில் இருந்தவன் பதறியடித்து எழுந்து தன்னை பரிசோதிக்க, வேட்டி அவன் இடையில் தான் இருந்தது.

‘நல்லவேளை’ என்று மனதுக்குள் நினைத்தவன், ‘எப்படி எல்லாம் பேசறா பாரு’ என்று நினைத்தபடி அவளை முறைக்க, நிஹாரிகாவோ அதற்குள் லிவ்விங் அறையை அவனைப் பார்த்தபடியே பூட்டிவிட்டு, படுக்கை அறையை ஒட்டியிருந்த ட்ரெஸிங் அறைக்குள் புகுந்து, தனது பாத் ரோபை எடுத்துக்கொண்டு ஏதோ பாடலை வாயில் முணுமுணுத்தபடி குளியலறைக்குள் சென்றாள்.

மனைவி செல்வதையே பார்த்திருந்தவன், எழுந்து தண்ணீரை அருந்த வயிறு கலக்க ஆரம்பித்தது. தன்னவள் வெளியே வர பத்து நிமிடங்கள் ட்ரெஸிங் அறைக்குள் நின்றபடி காத்திருந்தவன் சிறிது சிறிதாக பொறுமையை இழந்தான். குளியல் அறையின் கதவைத் தட்டியவன், “நிஹி, சீக்கிரம் வா” என்றிட, உள்ளே பதிலில்லை. அவளோ உள்ளே இருந்த கதிரையில் அமர்ந்து தூக்கத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தாள்.

உள்ளிருந்து எந்த பதில் வராமல் இருக்க, “ஏய்! ஏதாவது பேசுடி” என்று அவனுக்கு இருக்கும் அவசரத்திற்கு, கதவை அவன் பலம்கொண்டு தட்ட அதில் முழித்தவள், “நான் வரதுக்கு தெர்ட்டி மினிட்ஸ் ஆகும்” என்று மீண்டும் தூக்கத்தைத் தொடர, இவனுக்கு அதைக் கேட்டு நெஞ்சே வெடித்து விடும்போல ஆனது.

“ஏய்! விளையாடத டி. எனக்கு அர்ஜென்ட்டா இருக்கு” அவன் அவளிடம் கெஞ்சத் துவங்க, அவளோ உள்ளே இருந்தபடி அதைக் கேட்டாளே தவிர, பதில் அளிக்கவில்லை.

படிக்கும் போதும், கேட்கும்போதும் இதெல்லாம் சாதாரண விஷயம் தான் என்றாலும், அந்த சூழ்நிலையை அனுபவித்தவனுக்குத் தான் தெரியும். அது எவ்வளவு கடினமான விஷயம் என்று. ஐ விரல்களையும் மடக்கியவன் கைகளைக் கோர்த்துக் கொண்டு, மூச்சை இழுப்பதும் விடுவதுமாக நிற்க, அப்போதுதான் அவனுக்கு லிவ்விங் அறையின் ஞாபகம் வந்தது.

அவசர அவசரமாக அங்கு சென்றவனுக்கு அப்போது தான் தனது ராட்சசி அதைப் பூட்டி வைத்ததும் நினைவில் வந்தது. ‘அடிப்பாவி இதுக்கு தான் பூட்டி வச்சியா.. மத்த நாளா இருந்தா கூட வெளிய போய் வேற ரூமுக்கு போயிடுவேன். இன்னிக்கு போகவும் முடியாதே’ என்று நினைத்தவன் ட்ரெஸிங் அறைக்குள் வந்து சுவற்றில் கையைக் குத்திக்கொண்டு நின்றிருந்தான்.

‘அய்யோ ஆண்டவா முடியலையே’ என்று கடவுளை எல்லாம் இந்த விஷயத்திற்குக் கூப்பிட்டவன், “நிஹி!” என்று முடியாமல் கத்த, “என்ன?” என்றாள் விட்டேத்தியாக.

“முடியலடி. ஏன்டி இப்படி எல்லாமா டி பழி வாங்குவே?” வெளியே நின்றபடி திட்டியவன், “ஏய்! ப்ளீஸ்டி” என்றிட இரு நொடிகள் கழித்து குளியலறை திறந்தது.

வெளியே பாத் ரோபுடன் பளபளவென்று மின்னிய கால்கள் தெரிய வந்தவளைக் கண்டு அவனால் ரசிக்கக் கூட முடியவில்லை. ஒரு நிமிடம் கூட தாமதிக்காதவன், “மனுஷனை நிம்மதியா பாத்ரூம் கூட போக விடமாட்டா. இந்த பாவம் எல்லாம் உன்னை சும்மா விடாதுடி” என்று முணுமுணுத்துக் கொண்டே சாபம் விட்டுச் செல்பவனைக் கண்டு அவள் தோளைக் குலுக்கினாள்.

அவன் வருவதற்குள் இலை பச்சை நிறத்தில் மெல்லிர கரை கொண்ட பட்டுப் புடவையையும், அதற்கு கான்ட்ராஸ்டாக கிளியின் கொஞ்சும் நாசி நிறத்தில் ப்ளவுஸையும் அணிந்தவள், தலையை உலர்த்திக் கொண்டிருக்க, பாத்ரூமில் இருந்து வெளியே ஒரு வித நிம்மதியுடன் வந்த ரிஷ்வந்த் அவளை முறைத்தான்.

குளித்து முடித்து இடையில் ஒரு வெள்ளை நிற டவலை மட்டும் சுற்றியபடி, முறுக்கேறிய உடலில் ஆங்காங்கே நீர்த்துளிகள் சிதறிக் கிடக்க வந்திருத்தான்.

அவனின் முறைப்பை அசட்டை செய்தவள், திரும்பி தன்னுடைய கப்போர்டில் இருந்து, அணிந்திருக்கும் சேலைக்கு ஏதுவான நகைகளைத் தேட, அவளின் பின் வந்து இரு கைகளையும் அவளின் இரு பக்கமும் வைத்து சிறை செய்தபடி நின்று, அவளின் கழுத்து வளைவில் அழுத்தமாய் மீசை குத்த  முத்தம் கொடுக்க, நிஹாரிகாவுக்கு ஒரு நொடி மூச்சு முட்டியது.

அவனின் மேல் வந்த வாசனையும், அவனின் மேல் தனக்கு இருக்கும் உரிமையையும் நினைத்தவள் மனம் கிறங்கினாலும், ‘எப்படி வந்து நிக்கறான் பாரு எருமை.. பெரிய ரொமான்டிக் ஹீரோனு நெனப்பு’ என்று மனதுக்குள் நினைத்தவள், தலையை மட்டும் திருப்பி அவனை முறைக்க, அவனோ இப்போது அவளின் நகைகளை மும்முரமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனின் கவனம் நகையில் இருப்பதை உணர்ந்தவள், தலையைத் திருப்பி நகைகளைப் பார்க்க, சிறிது மெல்லிய வைர நெக்லஸையும் அதற்கான கம்மலையும் எடுத்தவன், அவள் கையில் அதைத் தர நிஹாரிகாவோ, ‘நீ சொன்னா நான் கேக்கனுமா?’ என்ற பார்வை பார்த்தாள்.

அவளின் பார்வை புரியாதவனா அவன். “எனக்கு இது புடிச்சிருக்கு” என்றவன் அவளைப் பார்த்துச் சொல்ல, “உனக்கு ஓகேன்னா போடு. இல்ல இது..” என்று தன்னைச் சுட்டிக் காட்டுவது போல பேசியவன், “உனக்கு எப்படி புடிக்குதோ அப்படி போட்டுக்க” என்றுவிட்டு புன்னகையுடன் நகர்ந்துவிட்டான்.

அவன் இரு அர்த்தத்தில் சொன்னது அவளுக்குப் புரியாமல் இல்லை.

வெளியே வந்தவன் விரைவாக கிளம்பி முடிக்க, நிஹாரிகா அப்போது தான் தலையை உலர்த்தி முடித்திருந்தாள்.

அதேநேரம் கதவு வேறு தட்டப்பட, சென்று திறந்தவன், நின்று கொண்டிருந்த மாமியாரைக் கண்டு புன்னகைத்தான். “அப்பா, உங்களை கீழ வர சொன்னாரு தம்பி.. உங்கள பார்க்க டைரக்டர் பிரகாஷ் வந்திருக்காரு.. அப்படியே நல்ல நேரம் முடியறதுக்குள்ள நிஹாவையும் வரச் சொல்லுங்க” என்றவர் சென்றுவிட, பெருமூச்சுடன் ரிஷ்வந்த் திரும்ப, நிஹாரிகா தயாராகிக் கொண்டிருந்தாள்.

அவளிடம் வந்தவன், “நான் நேத்து சொன்னேன்ல பிராகஷ் சார். அவரு வந்திருக்காரு. நான் கீழ போறேன். நீயும் சீக்கிரம் வா” என்றிட,

“எனக்கு நல்லாவே காது கேக்கும். அதுவும் நீயும் உன் மாமியாரும் பேசுனா ரொம்ப நல்லாவே கேக்கும்” என்று தலையை ஸ்டைலாக பின்னியபடியே சொன்னவள், தன்னவன் தேர்வு செய்த நகையை எடுத்து மாட்டத் தொடங்கினாள்.

‘திமிரு புடிச்சவ’ என்று மனதுக்குள் திட்டியவன், தனது சிவப்பு நிற சட்டையை கை முட்டி வரை மடித்துக்கொண்டே கீழே இறங்க, கம்பீரம், வசீகரம், ஆளுமை என அனைத்தோடும் முழு ஆண்மகனாய் இறங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்து அங்கிருந்த அனைவருக்கும் புன்னகை அரும்பியது.

கவினோ, ‘இவனை பேசுவனங்க எல்லாரு மூஞ்சிலையும் கரியை பூசி.. கடைசியா லவ் பண்ணவளையே கல்யாணம் முடிச்சுட்டானே’ என்று நண்பனை மனதுக்குள் மெச்சினான்.

கீழே வந்தவன் பிரகாஷ் சாரை அணைக்க, “கங்கிராட்ஸ் ரிஷ்வந்த்” என்றபடி அவனை அணைத்தவர், அவனிடம் ஒரு பரிசைக் கொடுத்தார். நேற்று இரவு தான் படபிடிப்பிற்காக அமெரிக்கா சென்றவர் இந்தியா திரும்பி இருந்தார். ரிஷ்வந்தின் குடும்பம் அவருக்கு அழைப்பை விடுத்த போதே அவர்களை ஏமாற்ற மனமில்லாமல் உண்மையைத் கூறியவர், “நான் அடுத்த நாள் காலைலயே உங்களை வந்து பாக்கறேன்” என்றவர் சொன்ன வார்த்தை மாறாமல் குடும்பத்தோடு இங்கு வந்தும்விட்டார்.

அவர் கொடுத்த பரிசைக் கண்ட ரிஷ்வந்த் அவரைப் பார்க்க, “என்னோட நெக்ஸ்ட் ஸ்டோரிக்கு நீதான் ஹீரோ.. ப்ரொடக்சன்ல கேட்டுட்டு சொல்லு” அவர் கேலியாக சொல்ல, ரிஷ்வந்த் குறுஞ்சிரிப்பு புரிந்தான்.

“உங்க படம்னா கதை கூட கேக்காம ஓகே சொல்லலாம் அண்ணா” என்றபடி வந்த நிஹாரிகா அவரைப் பார்த்து புன்னகைக்க, இருவரும் பிரகாஷிடமும் அவர் மனைவியிடமும் ஆசிர்வாதம் வாங்கினர்.

“இவ்வளவு வருசம் இருந்தும் நீ தர்றாத ஒண்ணை நிஹி தந்திருக்கா ரிஷ்வந்த்” பிரகாஷ் அவனின் தோள் தட்ட, அவரின் கூற்று புரியாமல் ரிஷ்வந்த் அவரை நோக்க, “இத்தனை நாள் கூடவே இருந்தும் நீ சார்னு தான் கூப்பிடறே.. ஆனா, இப்ப பாத்த உன் வைஃப் அதாவது என் சிஸ்டர் அண்ணான்னு கூப்பிடுது” என்றவர் நிஹாரிகாவின் பக்கம் செல்ல,

“வேணாம். அப்புறம் இரண்டு பேரும் ஃபீல் பண்ணுவீங்க” ரிஷ்வந்த் பொய்யாய் மிரட்ட,

“இப்படித் தான் இந்தப் பொண்ணையும் மிரட்டறியா?” பிரகாஷ் வினவ, ரிஷ்வந்தின் மனமோ, ‘எது நான் இவள மிரட்டுறனா?’ என்ற பார்வையில், பிரகாஷைப் பாவமாகப் பார்க்க அங்கிருந்த அனைவருக்குமே அது சிரிப்பை வரவழைத்தது.

அன்று காலை அனைவரும் ஒன்றாய் உணவு அருந்தி முடிக்க, அனைவரிடமும் சொல்லிக்கொண்டு பிரகாஷ் கிளம்பத் தயாராக, “இருந்துட்டுப் போங்களே சார்”, “இருந்துட்டுப் போங்களே ண்ணா” என்று கணவன் மனைவி இருவரும் ஒருசேர சொல்ல, இருவரின் ஊடலையும் ஓரளவு ரிஷ்வந்த் சொல்லி அறிந்திருந்தவர், “இரண்டு பேரும் நெக்ஸ்ட் வீக் அங்க விருந்துக்கு வாங்க” என்றிட, அவரின் மனைவியும் அதையே தான் இருவரிடமும் கூறினார்.

நிஹாரிகாவின் சிறியவயது விளையாட்டு அறையில் இருந்த, ஸ்வாதிகாவை சிரிப்புடன் ஏதோ பேசியபடி அழைத்து வந்த நிஹாரிகா, அவளிற்கு ஒரு சிறிய பொம்மையை பரிசாக கையில் கொடுத்தாள். ஏனோ தெரியவில்லை அவளுக்கு ஸ்வாதிகாவை மிகவும் பிடித்திருந்தது. குண்டுக் கன்னங்களும், துறுதுறு விழியும், சேட்டை செய்யும் கை கால்களும் என்று அவளைப் பார்க்க பார்க்க நிஹாரிகாவுக்கு இனம் புரியாத ஓர் உணர்வு.

அன்னையையும் தந்தையையும் திரும்பிப் பார்த்த ஸ்வாதிகா, “தாங்க்ஸ் ஆன்ட்டி” என்று பொம்மையை சிரித்தபடி வாங்கிக் கொள்ள, சிறுமியைக் கண்ட நிஹாரிகாவுக்குத் தெரியவில்லை, தன்னை ஒரு நாள், ஒருவன் சிறைபிடிக்கும் போது அவளுக்குப் பிடித்த சிறியவளும், தன்னால், தன்னுடன் சிக்கப் போகிறாள் என்று.

உள்ளே வந்த ரிஷ்வந்தையும், நிஹாரிகாவையும் தனித்தனியாக பிடித்து வைத்த நண்பர்கள் கூட்டம் இருவரையும் ஒரு வழி செய்து கொண்டிருந்தனர்.

“மச்சி.. உங்களுக்கு தெரியாதுடா. இன்னிக்கு நிஹாரிகா அப்பா எதையோ எடுத்து வரதுக்கு, என்னை இவங்க தங்கியிருக்க ரூமுக்கு பக்கத்துல இருக்க ரூமுக்கு போக சொன்னாரு. அப்ப க்ராஸ் பண்ணும் போது இவன், ‘ஏய் விளையாடத டி.. எனக்கு அர்ஜென்ட்டா இருக்கு’ அப்படின்னு சத்தம். நேத்து நைட் ஒண்ணும் புரியாதவன் மாதிரி இருந்துட்டு..” கவின் பேசிக்கொண்டே போக, ரிஷ்வந்த் தலை சாய்த்து நண்பனை எரிச்சலுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

‘நான் என்ன அர்ஜென்ட்ல இருந்தேன்னு தெரியாம, இந்த நாய் வேற ஒரு கதை கட்டறானே ஆண்டவா’ என்று உள்ளுக்குள் அவனைத் திட்டிக் கொண்டிருந்தவன் அமைதியாகவே அமர்ந்திருந்தான். கவின் அவனாகவே யூகித்து கதை சொல்வது கூட அவனுக்கு சுவாரஸ்யமாக இருந்தது.

இங்கு சக்தியும், பிருந்தாவும், அபர்னாவும் நிஹாரிகாவிடம், அதுஇது என்று கேள்விளை வீசிக்கொண்டே இருக்க, நிஹாரிகாவுக்கோ அவர்கள் கேட்ட கேள்வியில் காதில் புகை வராத குறைதான். இங்கு ஆண்களை விட பெண்கள் தான் இதில் ஆர்வமாக கேள்விகளை வீசுகிறார்கள்.

சக்தியின் கேள்விகளைத் தாங்க முடியாத நிஹாரிகா, “ச்சி.. ச்சி.. போங்கடி..” என்று முடியாமல் எழந்தவள் வெளியே வரவேற்பு அறைக்கு ஓடி வர, நவ்தீப்பின் கார் உள்ளே நுழைந்தது. அர்ஜூனும், சுரேகாவும் நிஹாரிகாவின் வீட்டில் தான் இருந்தனர்.

நீண்ட நாட்கள் கழித்து நவ்தீப்பைக் கண்டதில், நிஹாரிகா அவனை வரவேற்க, மனதில் வலியுடன் அவளைப் பார்த்து புன்னகைத்தவன், அங்கு கால் மேல் காலிட்டு அமர்ந்திருந்த ரிஷ்வந்தைப் பார்த்து, “கங்கிராட்ஸ்” என்றான்.

கவினிற்கு முதலில் அது யாரென்று தெரியவில்லை என்றாலும், தெரிந்தவுடன் அவன் நண்பனைப் பார்க்க, ரிஷ்வந்தோ அவனை வரவேற்கவும் இல்லை, புன்னகைக்கவும் இல்லை. ஏன் அவன் வாழ்த்து சொன்னதிற்கு கூட அவன் பதிலளிக்கவில்லை.

அதற்கென்று அவன் முகத்தையும் காட்டவில்லை. அவன் அவனாக அங்கிருந்தான். நவ்தீப்பை சக்கரவர்த்தியுடன் அமரச் செய்த நிஹாரிகா, கணவனை யாருமறியாமல் முறைத்துவிட்டு சமையல் அறைக்குள் நடந்தாள். ‘வீட்டுக்கு வந்தவங்களை வாங்கன்னு கேக்கற பழக்கம் கூட இருக்காது இவனுக்கு’ என்று திட்டிக்கொண்டே நவ்தீப்பிற்கு பழச்சாறை எடுத்து வந்தவள், அவனிடம் தந்துவிட்டு, மாமனார் மாமியாரை அழைத்து நவ்தீப்பிற்கு அறிமுகம் செய்து வைத்தாள்.

சிறிது நேரம் அனைவரிடமும் பேசியவன், “நிஹி, உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்” என்றான். அப்போது அங்கிருந்த சக்கரவர்த்தி, அர்ஜூன், மகாதேவன் அனைவருக்கும் அது அதிர்ச்சியாக இருந்தது.

மகாதேவன், ‘இந்த பையன் என்ன இப்படிப் பேசறான் எல்லாரு முன்னாடியும். பெர்சனலா பேசணும்னா எப்படியும் ஷூட்டிங் அப்ப போய் பேச வேண்டியது தானே. இல்ல ஃபோன்ல அழைச்சு பேச வேண்டியது தானே. இங்க இத்தனை பேர் முன்னாடி..’ அவர் நினைக்க அதையே தான் அர்ஜூனும் நினைத்தாரோ என்னமோ, மகனை மனதுக்குள் திட்டியபடி முறைத்தார்.

கணவனை திரும்பிப் பார்த்த நிஹாரிகா, அவன் சாதாரணமாக மேகசினை அமர்ந்து புரட்டிக் கொண்டிருப்பதைக் கண்டாள். அவளுக்குத் தெரியும் இதே நவ்தீப் கேட்டது பிடிக்காமல் இருந்திருந்தால் கணவன் ஏதாவது பேசியிருப்பான் என்று.

நவ்தீப்பைப் பார்த்தவள், சக்கரவர்த்தியிடம் திரும்பி, “தாத்தையா, உங்க ஆபிஸ் ரூமை யூஸ் பண்ணிகிட்டா?” என்று வினவ, அவரோ தலையசைத்தார்.

நவ்தீப்பைப் பார்த்தவள் அங்கிருந்த ஆபிஸ் அறைக்குள் நுழைய, அவள் பின்னே சென்றவனை டேபிளில் சாய்ந்தபடிப் பார்த்தவள், “என்னாச்சு நவ்தீப்.. எனி ப்ராப்ளம்?” என்று தோழமையுடன் அவள் வினவ, அவன் கண்கள் சிறிது கலங்கியது.

அவன் கலங்குவதை முதல்முறை கண்டவள், “நவ்தீப்.. ஏன்..?” அவள் முடிக்கவில்லை. அடுத்து அவன் கேட்ட கேள்வியில் யாரோ தலையில் பாறாங்கல்லைத் தூக்கிப் போட்டது போல இருந்தது அவளுக்கு.

கண்ணீருடன் அவளை நிமிர்ந்து நோக்கியவன், “உனக்கு என் மேல லவ்வே வந்தது இல்லியா நிஹி?” அவன் கேட்க, நிஹாரிகாவின் அதரங்கள் அசைய மறத்தது. அவள் இதை எதிர்பார்க்கவே இல்லையே. தன் தோழன் என்றே அவனை அவள் நினைத்திருக்க, அவனின் இந்தக் கேள்வி அவளுக்குக் கோபத்தை விளைவித்தது. அதுவும் திருமணமான அடுத்த நாளே வந்து, அவன் அதைக் கேட்க நிஹாரிகாவுக்கு அவனை அறைந்தால் என்ன என்று இருந்தது.

“வாட் ஆர் யூ டாக்கிங் நவ்தீப்?” அவனின் கண்ணீரைக் கண்டு நிஹாரிகா சிறிது குரலைத் தணித்துக் கேட்க,

“நான் பேசறது ரொம்ப தப்பு நிஹி. அது எனக்குத் தெரியும். ஆனா, சின்ன வயசுல இருந்தே உன்னை லவ் பண்ற என்னால முடியல. நீ பிறந்தப்ப நானும் ரொம்ப சின்ன பையன் தான். உன்னை, என்னை ஹாஸ்பிடல் கூட்டிட்டு வந்து காமிச்சாங்க. அப்பவே எனக்கு உன்னை ரொம்ப ரொம்ப பிடிக்கும். அது எப்ப லவ்வா மாறுச்சுன்னு எல்லாம் எனக்கு தெரியாது. இத்தனை வருசமா உன்னை தவிர நான் யாரையும் அந்த இடத்துல வச்சது இல்ல. உனக்கும் அப்படி தான்னு நினைச்சேன். நீ ரிஷ்வந்தை விட்டு வந்த அப்புறம் கூட, கொஞ்ச நாள் அப்புறம் உன்கிட்ட இதை பேசலாம்னு நினைச்சேன். பட் எனக்கு பேசறதுக்கு சரியான சூழ்நிலை அமையல”

“மறுபடியும் ரிஷ்வந்தை பாத்த அப்புறம் கூட எனக்கு பயம் தான். ஆனா, நீ அவன் மேல இருக்க கோபத்துல கண்டிப்பா அகைன் அவன் பக்கம் போக மாட்டேன்னு நம்பிக்கை இருந்துச்சு. பட் நீயா ப்ரெஸ்கிட்ட கல்யாணம்னு சொன்னப்ப முடியல நிஹி. இத்தனை நாள் நீ எனக்குன்னு நினைச்சுட்டு இருந்தேன். என்னால இந்த வலியை சத்தியமா தாங்கிக்க முடியல. உன்னோட சந்தோஷத்தைக் கெடுக்கவும் மனசு வரல. அதான் நான் பாரிஸ் போயிட்டு உன் கல்யாணத்துக்குக் கூட வரல” என்று கண்கள் கலங்க கூறியவன்,

“இப்ப.. இந்த நேரத்துல இதை சொல்லக் கூடாது தான். இதைப்பத்தி பேசக் கூடாது தான். ஆனா, என்னால சொல்லாம இருக்க முடியல நிஹி. செத்திடுவனோன்னு பயமா இருக்கு” என்று அங்கிருந்த கதிரையில் அமர்ந்து இரு கைகளால் தலையைத் தாங்கியபடி அவன் சொல்ல, அவனின் தோற்றத்தைப் பார்த்த நிஹாரிகாவுக்கு பாவமாக இருந்தது.

சிறிய வயதில் இருந்து அவனை எதற்கும் ஏங்க விடாமல், அவனை எதற்கும் அழ வைக்காமல், அவன் கேட்டது அனைத்தையும் நிறைவேற்றிக் கொடுத்த அர்ஜூன், சுரேகா அவர்களை நினைத்தவளின் மனம் கனத்தது. அவர்களுக்காக அவனின் மேல் எழுந்த சிறிது கோபத்தையும் ஒதுக்கியவள் அவனின் அருகே சென்றாள்.

அவனின் தோளில் அழுத்தமாக கை வைத்தவள், “நவ்தீப்” என்றாள். அவன் நிமிரவே இல்லை.

மீண்டும் நிஹாரிகா, “நவ்தீப், என்றழைக்க அவளை நிமிர்ந்து பார்த்தவனின் விழிகள் சிவந்து இருந்தது.

முகத்தை மறைத்து புன்னகைத்தவள், “என்னை பார்த்து உனக்கு லவ் வரக்கூடாது டா” என்று சிரித்தவள் அவனைக் கொட்டிவிட்டு வந்து தாத்தாவின் கதிரையில் அமர்ந்தாள். கம்பீரமாக.

“நவ்தீப், பர்ஸ்ட் நான் உனக்கு ஒண்ணு சொல்லிடறேன். எனக்கு உன் மேல ஒரு தடவை கூட அந்த ஃபீலிங் வந்தது இல்ல. நீ எனக்கு பிரண்ட் மட்டும் தான். ஐ நோ இது உனக்கு ஹர்ட் ஆகும். பட் நான் உண்மையை சொல்லியே ஆகணும்ல” என்றவள்,

“நானும் ரிஷ்வந்தும் நாங்க 12th முடிக்கும் போது இருந்தே லவ் பண்றோம். ஆனா நாங்க ஐ லவ் யூ சொல்லிக்கிட்டது கூட இல்ல. பட் எங்களுக்குத் தெரியும் எங்களுக்குள்ள லவ் இருக்குன்னு. சப்போஸ் உனக்குள்ள உண்மையாவே.. ஸாரி எப்படி சொல்றதுன்னு தெரியல அதான் நவ்தீப். தப்பா நினைச்சுக்காத. நீ ரொம்ப ரொம்ப என் மேல லவ்ல இருந்திருந்தா கண்டிப்பா நீ, அப்ராட் போனதுக்கு அப்புறம் என்கிட்ட ஃபோன் பேசாம இருந்திருக்க மாட்டே.. அதுக்குன்னு உனக்கு என்மேல இருக்க பாசத்தை நான் பொய்யுன்னு சொல்லல. அது உண்மை தான். பட் அது லவ் இல்லடா. புரிஞ்சுக்கோ. உனக்கு நாங்க எல்லாரும் இருக்கோம். இன்னும் கொஞ்ச நாள்ல மனசை மாத்திக்க. உன் கல்யாணத்தைப் பத்தி அன்னிக்கு அங்கிளும், தாத்தையாவும் பேசிட்டு இருந்தாங்க” என்றவள், புன்னகையுடனே அனைத்தையும் முடித்திருந்தாள். இடையில் பேசும்போது முகத்தை சுளிக்கவோ அல்லது கோபத்தைக் காட்டவோ இல்லை அவள்.

முழுதாக பேசி முடித்த தோழியையே பார்த்திருந்த நவ்தீப், “நான் வர்றேன் நிஹாரிகா” என்றபடி எழுந்தான். அவன் சிரிக்கவும் இல்லை. முகத்தைக் காட்டவும் இல்லை. எந்த உணர்வும் இல்லாமல் இருந்தது அவனின் முகம்.

அவனின் வலி சரியாக நேரம் எடுக்கும் என்று நினைத்த நிஹாரிகா, “ஓகே டா. சூட்டிங்கை இன்னும் இரண்டு நாள்ல ஸ்டார்ட் பண்ணிடலாம்” என்றிட, தலையை ஆட்டியவன் வெளியே வர இருவரும் வெளியே வந்தனர்.

கால் மேல் காலிட்டு ஷோபாவின் இரு புறமும் கம்பீரமாக ரிஷ்வந்த் அமர்ந்திருக்க, அனைவரிடமும் சொல்லிய நவ்தீப் ரிஷ்வந்திடமும் சொல்ல, அவனிடம் ஒரு தலை அசைப்பு மட்டுமே ரிஷ்வந்த். அதில் நிஹாரிகாவுக்கு சிறிது கோபம் வந்தாலும் வெளியே காட்டவில்லை.

அர்ஜூனும், சுரேகாவும் கூட மகனுடன் கிளம்ப எழ, அவர்களை மரியாதையுடன் வழியனுப்ப வெளியே வந்த ரிஷ்வந்தான். ரிஷ்வந்த் அர்ஜூனிடம் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் விஷயமாக ஏதோ பேச, நிஹாரிகாவிடம் வந்த நவ்தீப், “நிஹி, உனக்கும் ரிஷ்வந்துக்கும் இடைல நடந்த பிரச்சனைக்கு நானும் ஒரு காரணம்” என்றவன் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் நடந்ததை சொல்லி முடித்தவன், “ஸாரி நிஹாரிகா. அன்னிக்கு நான் இருந்த மென்டாலிட்டில..” நவ்தீப் இழுக்க,

“இட்ஸ் ஓகே நவ்தீப். லீவ் இட்” என்றாள். இவன் தான் பேசினான் என்றால் இவனுக்கு எங்கு சென்றது அறிவு என்று தன்னவனின் மேல் மேலும் கோபத்தை வளர்த்துக் கொண்டாள் நிஹாரிகா.

“இன்னொன்னு..” நவ்தீப் தொடங்க, அடுத்து என்ன என்றிருந்தது இவளுக்கு.

“அந்த ஆத்விக் ரெட் கார்டு இஷ்யூக்கு காரணம் நீயா?” நவ்தீப் வினவ, கைகளைக் கட்டியபடி தாடையை நிமிர்த்தி தன்னைப் பார்த்துக் கொண்டே, நிற்கும் நிஹாரிகாவைக் கண்டே அவனுக்கு புரிந்து போனது அதற்கு காரணம் யாரென்று. ஆனால், அவளின் வாயால் இருந்து விஷயத்தை வாங்க வேண்டும் என்றால் அது நடக்காத காரியம் அல்லவா.

“இங்க பாரு நிஹி. இது என்ன தேவையில்லாத வேலைன்னு நான் கேக்க மாட்டேன். அது உன் இஷ்டம் தான். ஆனா, இப்ப ஆத்விக் அடிபட்ட பாம்பு. எப்ப உன்னை என்ன பண்ணலாம்னு காத்திருப்பான். உன் நல்லதுக்காக சொல்றேன். கொஞ்ச நாள் ரொம்ப கவனமா இரு” என்று அவன் சொல்ல தலையை ஆட்டியவள், அர்ஜூனும் சுரேகாவும் அழைக்க அவர்கள் அருகில் சென்றான்.

அவளை அழைத்தவர்கள் அவளை அறிவுரை மழையில் நனைய வைத்துவிட்டுச் செல்ல, நிஹாரிகா கணவனுடன் மூவருக்கும் தலையசைத்து வழியனுப்பி வைத்தாள்.

அவர்கள் சென்றபின் திரும்பியவளின் மென் விரலோடு, ரிஷ்வந்த் தன் விரல்களைக் கோர்க்க, அவனை முறைத்தவள் அவனிடம் இருந்து கையை உருவப் பார்த்தாள். ஆனால், அவளின் நாயகன் அதற்கு விட்டால் தானே. அத்தனை இறுக்கமாய் உறுதியாய் தன்னவளின் விரலை பிடித்திருந்தான்.

“என்ன சொன்னான் உன் பிரண்டு..” ரிஷ்வந்த் அந்த, ‘பிரண்டு’இல் அழுத்தம் கொடுக்க நிஹாரிகாவுக்கு அவனை சீண்டும் எண்ணம் வந்தது.

“அவன் என்னை முன்னாடி லவ் பண்ணானாம். அதைத் தான் இப்ப சொல்லிட்டு போறான்” நிஹாரிகா வேண்டுமென்றே நவ்தீப் சென்ற திசையைப் பார்த்தபடிச் சொல்ல, ரிஷ்வந்துக்கோ மனைவியின் பதிலில் அவனுக்குள் இருந்த சூறாவளி எழுந்தது.

தன்னையறிமால் அவனின் கை அவளின் விரல்களில் அழுத்தம் கொடுக்க, அவனின் முகமோ இறுகியது. இது மனைவியின் மேல் வந்த கோபம் அல்ல. நவ்தீப்பின் மேல் வந்த கோபம். என்ன தைரியம் இருந்தால் தன் மனைவியிடம் வந்து இவ்வாறு பேசியிருப்பான் என்ற ஆத்திரம்.

ஏதோ ஒன்று உறுத்த மனைவியிடம் திரும்பியவன், “அதுக்கு நீ என்ன சொன்ன?” என்று வினவ, நிஹாரிகாவுக்கு தான் சொன்ன பதில் நினைவில் வர, அதை மறைக்க எண்ணியவள் முன்னே செல்ல எத்தனிக்க முடிந்தால் தானே?

அவளின் விரல்கள் அவனின் விரலோடு அல்லவா பிணைந்து இருந்தது.

மனைவியின் செயலிலேயே தெரிந்துகொண்டான் அவன், அவள் என்ன சொல்லி இருப்பாள் என்று. சிரித்தபடியே அவளைத் தன்னிடம் அவன் இழுக்க, அவனின் மேல் வந்து மோதியவளின் இடையை மற்றொரு கரம் கொண்டு சுற்றிப் பிடித்தவன், “மிஸஸ்.நிஹாரிகா ரிஷ்வந்த்.. நீங்க சொல்லாம நான் உங்களை நகர விடமாட்டேன்” என்றிட, அவனிடம் இருந்து விலக திமிறிக் கொண்டிருந்தாள் அவனவள்.

முயற்சி செய்து செய்து தோற்றவள், “யாராவது பார்க்க போறாங்க விடுடா” என்று பல்லைக் கடித்தவள் அவனிடம் இருந்து விலகப் பார்க்க, அவனோ விடாக்கண்டனாக இருந்தான். மேலும் அவனின் கரம் வேறு இறுகிக் கொண்டே சென்றது.

“நீ அவன்கிட்ட என்ன சொன்ன சொல்லு” உதட்டில் மென்னகையை குறும்புடன் நெளியவிட்டுக் கொண்டு, ரிஷ்வந்த் ஒற்றை புருவத்தை உயர்த்தி, கண்களை கூர்மையாக்கி வினவ, நிஹாரிகா தன்னவனின் அழகில் வெகுநாட்களுக்குப் பின் தொலைந்து போனாள்.

தன்னையே விழியசைக்காமல் பார்த்திருக்கும் மனைவியைக் கண்டவன், “அப்புறமா என்னை உன் மடில போட்டுட்டு ரசிச்சுக்க.. இப்ப சொல்லு” என்றிட, கோபம் வந்தவள், “ஆன்ட்டி!” என்று குரல் கொடுக்க, ‘இதுக்கெல்லாம் பயந்திடுவனா நான்’ என்னும் பாணியில் அவன் சிறிதும் அசையாது மேலும் தன்னவளுடன் நெருங்கி நின்றான்.

மருமகளின் குரலில் வந்த கயல்விழி, மகன் மருமகள் இருவரும் நிற்பதைப் பார்த்துவிட்டு, “ச்சை.. விவஸ்தையே இல்ல இந்தக் காலத்து பசங்களுக்கு” என்று சிரித்துக்கொண்டே சென்றுவிட்டார்.

மாமியார் வந்ததையும், தங்களைப் பார்த்ததையும், சிரித்துக் கொண்டே சென்றதையும் பார்த்தவள், “டேய் அறிவு கெட்டவனே.. ஆன்ட்டி பாத்துட்டாங்க. வேற யாராவது வரதுக்குள்ள விட்டுத்தொலை” என்றிட, அவனோ பதில் கிடைக்காமல் உன்னை விடமாட்டேன் என்னும் ரீதியில் நின்றான்.

அவனின் விழியோடு விழி கலந்து நின்றவள், “ஐ டோல்ட் அபவுட் அஸ்(I TOLD ABOUT US)” என்று சொன்னவுடன் அவனின் முரட்டுக் கரங்கள் அவளின் சிறுத்த இடையை விடுவிக்க, அவ்வளவு தான், அவன் கரம் பிடித்த பிடியில் வலியை உணர்ந்தவள், “தடிமாடு” என்று அவனைப் பார்த்து நேராகச் சொல்லிவிட்டே சென்றாள்.

அடுத்த நாளும் அது இது என்று கழிய, நண்பர்கள் படைகளும் கிளம்பியது. மீதமிருந்த உறவினர் படைகளும் கிளம்பியது. அதற்கு அடுத்த நாள் இருவரும் ஓய்வு எடுப்பதிலேயே முழுதாகக் கழித்தனர்.

அதற்கு அடுத்த நாள் வழக்கம் போல நிஹாரிகா தயாராகி கீழே வந்து சந்திராமா மற்றும் மாமியாருடன் பேசிக் கொண்டிருக்க, ரிஷ்வந்தும் தயாராக கீழே வந்தான்.

கீழே வந்தவன் சக்கரவர்த்தி, மகாதேவன், கனகராஜ் மற்றும் விவாஹாவுக்கு காலை வணக்கத்தைத் தெரிவித்துவிட்டு அமர்ந்து, அவர்களுடன் செய்தியை பார்க்க ஆரம்பித்தான்.

திடீரென ஒளிர்ந்த ப்ளாஷ் நியூசில் வந்தாள் அனன்யா நாயர். ரிஷ்வந்த் புருவம் சுருங்க அச்செய்தியை கவனிக்க, பத்திரிகையாளர்கள் முன் நின்றிருந்தவள், “நடிகர் ரிஷ்வந்த். என்னை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்லி, என் கூட பிசிக்கல் ரிலேஷன்ஷிப்பும் வச்சிட்டு.. இப்ப பெரிய இடத்துல இருந்து எல்லாம் அமைஞ்சோன என்னை விட்டுட்டுப் போயிட்டாரு..” என்று கண்ணீர் விட அனைவருக்கும் அங்கு அதிர்ச்சியாக இருந்தது. திருமணம் முடிந்து இரண்டு நாளில் பிரச்சனை முளைக்கிறது என்றிட அனைவரும் ரிஷ்வந்தைப் பார்க்க அவனோ செய்தியை சுவாரஸ்யமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

அதேசமயம் சமையல் அறையில் இருந்து வெளியே வந்த நிஹாரிகாவும் இதைப் பார்க்க, அனைவரும் அவளையே தான் பார்த்திருந்தனர். ஏனெனில் இந்த செய்தி அவளை நன்கு பாதிக்கும், அவளை மட்டும் தான் நன்கு பாதிக்கும் என்று அனைவரும் பார்த்திருக்க அவளோ தொலைக்காட்சியையே வெறித்திருந்தாள்.

“மேடம்.. நீங்க சொல்றதை எப்படி நாங்க நம்பறது?” அங்கிருந்த ஒரு நிருபர் கேட்க,

“சாட்சி இல்லாம எந்த பொண்ணும் எதுவும் சொல்ல மாட்டா.. நாளைக்கு ஈவ்னிங் எல்லாத்தையும் உங்க பார்வைக்கு கொண்டு வர்றேன்” என்றுவிட்டு அவள் பத்திரிகையாளர்களிடம் விடைபெற்றுவிட்டு செல்ல, நிஹாரிகாவோ இருந்த நிலை மாறாமல் டிவியை பார்த்தபடி இருந்தாள். அவளின் முகம் கொண்டு யாராலும் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

ரிஷ்வந்தும் டிவியையே பார்த்தபடி புருவ முடிச்சுடன், கால் மேல் காலிட்டு நெற்றியில் ஒரு விரலை வைத்து யோசனையுடன் அமர்ந்திருக்க, நிஹாரிகா தலையைத் திருப்பி கணவனைப் பார்க்க, இருவரின் பார்வைகளும் கவ்விக் கொண்டது.

இருவரின் பார்வையும், அமர்ந்திருந்த நிலையும் சுற்றி இருந்தவர்களுக்கு பயத்தைக் கொடுக்க, விவாஹா பிரச்சனை எதுவும் வந்துவிடக் கூடாதென, மனதுக்குள் கடவுளை வேண்டியபடி அமர்ந்திருக்க, அங்கிருந்த அமைதியைக் கலைத்தபடி கோபத்தோடு நிதானமாக எழுந்தாள் நிஹாரிகா.