நிஹாரி-24

IMG-20211003-WA0016-60382e22

நிஹாரி-24

கணவனின் விழிகளைப் பார்த்தபடியே எழுந்த நிஹாரிகா, “தாத்தையா! சூட்டுக்கு டைம் ஆச்சு.. நாங்க கிளம்பறோம்” என்று கணவனின் விழி மேல் வைத்திருந்த தன் விழிகளை விலக்காமல், சக்கரவர்த்தியிடம் சொல்லியதுபோல அனைவருக்கும் ஏதோ ஒன்றை உணர்த்தியவள், மேலே அறைக்குச் செல்ல, அவளைப் பார்த்தபடியே அமர்ந்திருந்த ரிஷ்வந்தின் விழிகள் மட்டும் புன்னகையை நெளியவிட்டது.

மனைவி சென்றபின் தானும் எழுந்தவன், “ம்மா! ப்ரேக் பாஸ்ட் எடுத்து வைங்க” என்றுவிட்டு மேலே செல்ல, நிஹாரிகா தன்னுடைய கப்போர்டில் எதையோ தேடியபடி இருந்தாள்.

சந்தன நிற சல்வாரில் ஆங்காங்கே சிகப்பும் பச்சையும் கலந்துவைத்த வேலைப்பாடுகள் நெய்யப்பட்டிருக்க, பீட்ஸும் ஸ்டோன்ஸும் பதித்திருந்த கட் வொர்க் துப்பட்டா அவளின் உடலின் வளவளப்பு தாளாமல் நழுவிக் கீழே வந்து கொண்டிருக்க, அவளைப் பார்த்தபடியே அவளை நெருங்கிய ரிஷ்வந்த் துப்பட்டாவை சரிசெய்து அவளின் கழுத்தில் அதை மீண்டும் போட்டுவிட, அவனைத் திரும்பிப் பார்த்தவள், முறைத்துவிட்டு, அங்கிருந்த ஒரு ஃபைலை எடுத்துக்கொண்டு அகன்றாள்.

அங்கிருந்த மேசை மேல் அதை வைத்து எதையோ சரி பார்த்தவள், “கிளம்பலாம் டைம் ஆச்சு.. அருண் வெயிட் பண்ணிட்டு இருப்பாரு” என்றுவிட்டு அவள் கீழே இறங்க, அவளுடன் ஒருவித இதமான நல்ல மனநிலையில் இறங்கினான் அவளின் கணவன்.

“சாப்பிட்டு போயிடுங்க” சக்கரவர்த்தி சொல்ல, தாத்தாவின் பேச்சை தட்ட முடியாதவள், ரிஷ்வந்துடன் சென்று தன் யோசனையில் உழன்ற படியே அமர்ந்தாள்.

சமையலறைக்குள் விவாஹா மகளுக்கு பிடிக்கும் என்று தன் கையால் பூரியை சுடச்சுட எண்ணையில் போட்டு, மொசுமொசுவென எடுத்துக் கொண்டிருந்தார். அவர் பார்த்துப் பார்த்து தயார் செய்த பன்னீர் பட்டர் மசாலாவுடன், கயல்விழி மருமகளுக்குப் பிடிக்கும் என்று செய்த சன்னா மசாலாவையும் இரு பாத்திரத்தில் மாற்றிய சந்திராமா, அதை மணமணக்க எடுத்து வந்து டைனிங் டேபிளில் வைக்க, நிஹாரிகாவோ வேறு ஒரு மனநிலையில் இருந்ததால் அவளால் எதையும் உணர முடியவில்லை.

ரிஷ்வந்திற்கு தற்போது சென்று கொண்டிருக்கும் படம் முடியும் வரை, உடலை பராமரிக்க அவன் கேட்ட வேறொரு உணவுகளை சந்திராமா பரிமாற, நிஹாரிகாவின் தட்டில் உப்பிய இரண்டு குண்டு குண்டு பூரிகளை வைத்த கயல்விழி, மருமகளுக்கு ஆவி பறக்க, பன்னீர் பட்டர் மசாலாவுடன் சன்னா மசாலாவையும் பரிமாற, நிஹாரிகாவின் சிந்தனையோ சுற்றி இருந்த எதிலுமே இல்லை.

மருமகளின் தோற்றத்தைக் கண்ட கயல்விழி, அவளின் தோளில் கை வைக்க, அதில் சுயநினைவு அடைந்தவள் மாமியாரைப் பார்க்க, “சாப்பிட்டு இன்னும் நல்லா யோசி” என்றவர், அவளுக்கு தண்ணீரை ஒரு கண்ணாடி கோப்பையில் ஊற்றி வைத்துவிட்டு, சந்திராமாவுடன் மதியத்திற்கு செய்ய வேண்டியதை பேசிக் கொண்டிருக்க, பூரியை ஒற்றை விரலால் குத்தி பஞ்சர் ஆக்கியவளை சமையல் அறைக்குள் நின்று பார்த்த விவாஹாவுக்கு மகளின் சிறிய வயது நினைவு.

ஆசையாய் மகளை விழி நிறைய பார்த்துக் கொண்டிருந்தவருக்கு, சிறிய வயதில் இதேபோல் பூரியை உடைத்து மகள் அதை அரிசி பற்கள் தெரிய சிரித்துக் கொண்டே உண்ணும் அழகை நினைத்துப் பார்த்தவருக்கு, மனம் நிறைய லட்சம் பாசமும், கோடி பூரிப்பும். முதன் முதலாக சமைத்து பதினேழு வயதில் தந்தைக்கு வைத்தபோதும், திருமணத்திற்குப் பிறகு கணவனுக்குச் சமைத்து பரிமாறியபோது கூட அவருக்கு இத்தனை ஆர்வமும், பூரிப்பும் எழுந்தது இல்லை.

பூரியை பிட்டு பன்னீரையும், சன்னாவையும் சேர்த்து எடுத்தவள் வாயில் வைக்க, அது தந்த ருசியைக் கண்டு அதை யார் சமைத்தது என்று புரிந்துவிட்டது நிஹாரிகாவுக்கு. அன்னையின் கை பக்குவமும், சுவையும் அறியாதவர்வளா அவள். எத்தனை நாட்கள் சமையல் கட்டிற்குள்ளேயே அன்னை சமைக்கும் போது குடி இருந்திருக்கிறாள்.

அன்னை தன்னைப் பார்ப்பது போலத் தோன்ற, சந்தேகத்துடன் நிஹாரிகா சாப்பிட்ட படியே நிமிர்ந்து, சமையல் அறைக்குள் சாதாரணம் போல பார்க்க, அங்கு மகளை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த விவாஹா பட்டென்று தலையை இழுத்துக்கொள்ள அன்னையிடம் கோபமாக இருந்தாலும், பேசாமல் இருந்தாலும், அன்னையின் செய்கை அவளுக்கு சிரிப்பை வரவழைத்தது.

சிரமப்பட்டு சிரிப்பை அடக்கியவள் அடுத்த வாயை பிட்டு சாப்பிடத் தொடங்க, அவளைக் கவனித்துக் கொண்டிருந்த சந்திராமாவும், கயல்விழியும் அர்த்தம் பொதிந்த பார்வையை சிரிப்புடன் பரிமாறிக் கொண்டனர்.

வயிர் நிறைய உண்டு முடித்தவள் தனது கார் கீயை எடுக்க, ரிஷ்வந்தும் தனது கார் கீயை எடுத்திருந்தான். இருவரின் பார்வையும் இருவரையும் பார்க்காமல் இருக்க, நேராக நடந்து சென்றவர்கள் தங்களது கார்களுக்குள் ஏறிக்கொள்ள, நிஹாரிகா தனது சிவப்பு நிற ஜாக்குவாரை உறும விட, ரிஷ்வந்த் தனது மெர்சிடிஸ் பென்ஸை கர்ஜனையுடன் இயக்க, இருவரின் காரும் பறந்தது.

அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்த மொத்த குடும்பத்திற்கும் பெரு மூச்சு ஒன்று வெளிப்பட்டது.

“ஆனாலும், உன் மகனுக்கு அவன் மேல தப்ப வச்சிட்டு.. இந்த திமிரு ஆகாது” கனகராஜ் மனைவியிடம் ரகசியமாகக் கதைக்க கணவரை முறைத்தவர்,

“உங்களுக்கு அவனை சொல்லலைனா தூக்கம் வராதே..” என்று கயல்விழி வாதாடினாலும் அவருக்குத் தெரியும் யார் மேல் தவறு என்று. மகன் அன்று இருந்த அமைதியிலேயே அவருக்குத் தெரிந்து போனது மகன்தான் ஏதோ செய்திருக்கிறான் என்று. ஆனால், கணவர் சொன்ன வார்த்தைகளுக்காக அவர் இன்றுவரை மகனிடம் எதுவும் கேட்கவில்லை.

இங்கு விவாஹாவோ மகள் தான் செய்ததை ஒதுக்காமல் வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டுச் சென்றதில், கை கால்கள் இறக்கை கட்டி பறப்பது போல மகிழ்ச்சியில் மிதந்து கொண்டிருந்தார். அதே பூரிப்புடன் சமையல் அறையில் மதிய உணவை, பரபரப்புடன் தயார் செய்ய விழைந்தவரின் தோளில் கை போட்டபடி வந்து நின்றார் மகாதேவன்.

“என்ன மேடம் மூஞ்சில ஒரே பல்ப் எரியுது?” மகாதேவன் மனைவியின் அருகே நின்றுகொண்டு அவரின் தோளில் அழுத்தம் கொடுத்து வினவ, தலையை குனிந்தபடி காளானை நறுக்கிக் கொண்டிருந்தவர், தலையை நிமிர்த்தி நெருங்கி நிற்கும் கணவரை பார்த்தார்.

அதுவும் கண்கள் மின்ன ஒரு புன்னகையுடன் பார்த்துவிட்டு மீண்டும் வேலையை அவர் தொடங்க, மகாதேவனுக்கு அத்தனை நிம்மதி. மனைவியின் கண்களில் நீண்ட நாட்களுக்குப் பிறகு தெரிந்த மகிழ்ச்சியில் அவருக்கு அத்தனை ஆனந்தம்.

எத்தனை நாட்கள் தன் கண்களில் கூட படாமல் தனியே கண்ணீரை சிந்தியிருப்பாள் மனைவி என்று அவருக்குத் தெரியும். மேலும் நல்ல நாட்களில் மகளை அருகிலேயே வைத்துக்கொள்ள முடியாத தவிப்பும். மனைவியின் மொத்த மகிழ்ச்சியும் தங்கள் மகள் என்று அவருக்கு தெரியும்.

எத்தனை தினங்கள் தன் தோளிலும், மார்பிலும் சாய்ந்து இந்த முகம் கதறியிருக்கும் என்று மனைவியின் முகத்தை பார்த்தபடியே நினைத்தவருக்கு, இருவரும் காதல் புரிந்த நாட்களில் மனைவியின் மதி முகம் நினைவில் வந்தது. ஒருவித அபார அழகு விவாஹா. நடிகைகளையும் மிஞ்சும் அழகு.

முதலில் காதலை சொன்னது விவாஹா தான். மகாதேவன் மறுத்த போதும் தைரியமாய் விடாமல் அவரைத் துரத்தித் துரத்தி விவாஹா தன் பாசத்தைப் பொழிய, விவாஹாவின் காதலை ஏற்றுக்கொண்டார் மகாதேவன். பணக்கார அலட்டல் இல்லாமல், ஆளுமை இல்லாமல், அதிகாரம் இல்லாமல், தன்னை தனக்காக மட்டும் காதல் செய்த விவாஹாவை அவர் தன் உயிராக நேசிக்க ஆரம்பித்தார்.

ஆனால்…?

உயிராய் இருந்த இரண்டு பேர் வாழ்விலும் விதி விளையாடியது.

விவாஹாவையே அவரை வேண்டாம் என்று தூக்கி எறிய வைத்தது.

ஒரு நொடி அனைத்தையும் நினைத்தவர் பழைய நினைவுகளை மனதில் அழித்துவிட்டு மனைவியைப் பார்க்க அவரோ காளான் பிரியாணி செய்வதற்கு அனைத்தையும் தயாரித்துக் கொண்டிருந்தார். சிறு பெண்போல பரபரப்படன் கால்களில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு வேலைகளைப் பார்க்கும் மனைவியைக் கண்டவருக்கு உதட்டில் புன் சிரிப்பு எட்டிப் பார்த்தது.

குளிர்சாதனப் பெட்டியில் எதையோ எடுத்துக் கொண்டிருந்தவரின் கரத்தைப் பற்றி அவர் இழுக்க, கணவரின் செயலில் அவரின் இழுப்புக்கு தடுமாறி அவரின் மேலேயே வந்து விழுந்தார் விவாஹா.

விவாஹா என்ன என்று கேட்பதற்குள் அவரின் கரம் மனைவியின் கன்னத்தைப் பற்ற, கணவனின் செயலில் விதிர்விதிர்த்துப் போனவர், “என்ன பண்றீங்க.. சின்னப் பையன்னு நினைப்பா தேவ்?” என்று யாராவது வந்துவிடுவார்களோ என்று பயந்துகொண்டே கிசுகிசுக்க,

“நிஹாரிகா அம்மா மாதிரி இரு விவாஹா.. இப்படி பயந்தா உன்னை யாரும் நிஹாரிகா அம்மான்னு நம்ப மாட்டாங்க..” மகாதேவன் மனைவியின் தலையில் முட்டியபடி கேலி செய்ய, அதில் கணவரின் தோளில் அடித்தவர்,

“எது நானா.. அவ இப்ப வந்தா நீங்களே தெரிச்சு ஓடிருவீங்க.. நீங்க சொல்றீங்களா?” என்றிட, மனைவியை கண்களைக் கூர்மையாக்கிப் பார்த்தவர், சமையலிலேயே காலையில் இருந்து மூழ்கி இருப்பதால், அவரின் நெற்றியில் அரும்பியிருந்த வியர்வையைத் துடைத்துவிட்டு, மனைவியின் நெற்றியில் அவர் இதமாய் இதழ் பதிக்க, கணவனின் காதல் பிழையற்ற நெற்றி முத்தத்தில் விழிளை மூடிய விவாஹா, கணவரின் நெஞ்சில் சாய்ந்து நின்ற சமயம், உள்ளே வந்த சக்கரவர்த்தி இருவரையும் கண்டு உள்ளுக்குள் அதிர்ந்துவிட்டு, கண்டும் காணாதது போல வந்த வழியே வெளியே சென்றுவிட்டார்.

மாமனார் செல்வதையே பல் வரிசை தெரிய சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த மகாதேவன், “உங்க அப்பா ஷாக் ஆகிப் போறாரு” என்று மனைவியிடம் தாழ்ந்த குரலில் சொல்ல, “ஐயோ!” சிறிய படபடப்புடன் விலகிய மனைவியின் கரத்தை பிடித்தவர்,

“லவ் பண்ணும் போது பயந்த ஓகே.. இப்பவுமா?” என்று ஒற்றைப் புருவத்தை உயர்த்தி அவர் கேட்க, “அதெல்லாம் எங்க அப்பானா எனக்கு எவ்வளவு பாசமோ அதே அளவுக்கு பயமும் மரியாதையும் தான் இப்பவும்” என்று கணவரிடம் இருந்து கரத்தை விடுவிக்க போராடியபடி வாதாடினார் விவாஹா.

“நான் இருக்கும் போது பயம் எதுக்கு..” மகாதேவன் இழுக்க,

“தேவ் நீ பெரிய ரொமான்டிக் ஹீரோதான்.. நான் ஒத்துக்கறேன்.. பட் கையை விடுங்க.. அப்பா வந்த மாதிரி.. மாப்பிள்ளையோட அப்பா, அம்மா இல்லனா சந்திராமா யாராவது வந்து வைக்கப் போறாங்க” என்று சொல்ல மனைவியின் பயத்தை அறிந்தவராய் அவரின் கரத்தை விட்டவர், வெளியே செல்ல எத்தனிக்க, கணவரின் முதுகில் லேசாய் அடி போட்டவர், அவரை கண்களால் மிரட்டியபடியே வெளியே அனுப்பி வைத்தார்.

***

சூட்டிங்கில் வந்து இறங்கிய நிஹாரிகாவையும், ரிஷ்வந்தையும் பத்திரிகையாளர்கள் சூழப் பார்க்க, அதற்குள் அவர்களை வந்து காத்த பாதுகாவலர்கள் இருவரையும் உள்ளே அழைத்துச் சென்றனர்.

உள்ளே வந்தபின் ஒரு பெருமூச்சை விட்டவள், ‘ஒரு நியூஸ் வந்திடக் கூடாது.. சும்மா அதுஇதுன்னு ஈ மொய்க்கிற வந்திட வேண்டியது’ என்று மனதுக்குள் அவர்களைத் திட்டியவள் அங்கிருந்த இருக்கையில் அமர, ரிஷ்வந்த் படபிடிப்புக்குத் தயாராக வேண்டி கேரவனிற்குள் ஏறிவிட்டான்.

மொத்தத்தில் அங்கிருந்த அனைவருமே, கணவன் மனைவி செய்கையில் அதிர்ந்தனர். இருவருக்கும் திருமணம் முடிந்த இரண்டு நாளில், இன்று காலை அனன்யா நாயர் கொடுத்த செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இன்று எப்படியும் படபிடிப்பு ரத்து ஆகும் என்று அனைவரும் நினைத்திருக்க கணவனும், மனைவியும் சாதாரணமாக வந்திருப்பது மொத்த பேருக்கும், இன்று தாங்கள் கண்ட செய்தி நிஜம்தானா என்றிருந்தது.

அத்தனை சாதாரணமாக, முகத்தில் எதையும் சிறிதளவு கூட காட்டாமல் வந்திருந்தனர். அனைவரின் வியப்பிலும், சூட்டிங் ஸ்பாட்டே அமைதியாக இருக்க, வேலை செய்யும் சத்தமே இல்லாமல் இருப்பதில், அமர்ந்து கொண்டிருந்த நிஹாரிகா சிம்மத் தோரணையுடன் தலையை நிமிர்த்த, அவளின் பார்வையிலும், தலை நிமிர்த்தலிலும் தன்னால் அனைவரின் கை கால்களும் வேலையைத் தொடங்க ஆரம்பித்தது.

அதேநேரம் ரிஷ்வந்தைத் தேடிப் போன அருண், “ரிஷ்வந்த், ஆர் யூ ஓகே?” என்று வினவ, ராஜா கதாபாத்திரத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தவனோ, “ஐம் பெர்பக்ட்லி ஓகே அருண்” என்று பிசிரில்லாத குரலில் ரிஷ்வந்த் சொல்ல அவனுக்குத் தான் தலை குழம்பியது.

“என்ன புருஷனுக்கும் பொண்டாட்டிக்கும் பைத்தியம்கீது புடிச்சிருச்சா?” என்று நினைத்தவன், தலையை சொரிந்துகொண்டே கேரவனில் இருந்து வெளியில் வந்தான்.

அதேநேரம் அங்கு வந்த நவ்தீப் நிஹாரிகாவுக்கு அடுத்து இருந்த இருக்கைக்கு, அடுத்த இருக்கையில் அமர்ந்தவனிடம், அவள் வழக்கம் போல அவனிடம் பேச, அவனும் தலையைப் பிடிக்காத குறைதான். தனக்கு அருகில் இருந்த அருணை நவ்தீப் பார்க்க, அவனோ உதட்டைப் பிதுக்கிவிட்டு கேமரா மேனிடம் எழுந்து சென்றான்.

“நிஹி, ஆர் யூ ஓகே?” நவ்தீப் வினவ, அமர்ந்திருந்தபடியே தன்னை கீழிருந்து மேல் ஆராய்ந்தவள், “ம்ம், ஓகே நவ்தீப்” என்றாள் ஒரு நக்கல் சிரிப்புடன்.

“லூசு லூசு.. நேரம் காலம் இல்லாம விளையாடறா பாரு” என்று கோபம் கொண்டவன் தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டான்.

அடுத்து ஸ்டுடியோவின் முன் அனன்யாவின் கார் வழுக்கிக் கொண்டு வந்து வெளியே நிற்க, அவளை வந்து சூழ்ந்து கொண்ட பத்திரிகையாளர்கள், “இன்னிக்கு நீங்க சூட்டிங்கு வந்த காரணம் என்ன மேம்?” கேட்க,

“இது என்னோட வேலை.. இதையும் வாழ்க்கையையும் நான் மிக்ஸ் பண்ணிக்கமாட்டேன்.. அதுவும் இல்லாம எனக்கு இது ஒரு வாய்ப்பு.. ரிஷ்வந்தைப் பார்க்க” என்று கண்கள் கலங்க சீரியல் வசனத்தை அள்ளி விட்டவள், உள்ளே நுழைய நிஹாரிகா தீவிரமாக அமர்ந்து தனது அலைபேசியில் கேம் விளையாடிக் கொண்டிருந்தாள்.

அவள் பேசியது நிஹாரிகா காதிற்குக் கூட அவள் பிஏ நந்தினி மூலம் அவளின் எட்டியது. கேட்டபோது சிரிப்பு தான் வந்தது நிஹாரிகாவுக்கு.

அனன்யா கேரவனுக்குள் ஏறப்போன அதேசமயம் ரிஷ்வந்த் கேரவனில் இருந்து இறங்க, அவளைப் பார்த்தவன் நிதானமாக, ஏளனமாக உதட்டை வளைத்து, “அப்புறம் குழந்தை எல்லாம் உண்டாகலையா?” என்று புன்னகைத்துக் கொண்டே கேட்க, அவனின் கேள்வியில் அடி வயிற்றில் இருந்து குளிரெடுக்கத் திரும்பியவள், சிறிது தடுமாறினாள்.

முயன்று தன்னை சாதாரணமாக வைத்தவள், “வாட் டூ யூ மீன்?” என்று சீற,

“இல்ல எப்படியும் அடுத்த எவிடென்ஸ் நீ அதானே தரப்போற.. எப்படியும் நீ ப்ரெக்னன்ட் ஆகி இருப்ப.. அதை நான் உன்னை போர்ஸ் பண்ணி கலைக்க வச்சிருப்பேன்.. அதானே” என்று இளக்காரமாகக் கேட்டவன், அனன்யா பேய் அறைந்ததுபோல வியர்த்து நிற்பதைத் திருப்தியுடன் பார்த்துவிட்டு, “அது ஓல்ட் கான்செப்ட் அனன்யா.. நான் வேணா ஒரு ஐடியா தரனே.. உன்னோட ஒரு வீடியோ இருக்குன்னு சொல்லிப் பாரு.. இப்ப அதுதான் ட்ரென்ட்ல இருக்கு.. யூ வில் பி தி ஹாட் நியூஸ்.. அப்புறம் எல்லாரும் உன்னை கூப்பிடுவாங்க” என்று இறுதி வாக்கியத்தில் அழுத்தம் கொடுத்து பல்லைக் கடித்து, “கூப்பிடுவாங்க” என்று ரிஷ்வந்த் வார்த்தையை புன்னகை மாறாமல் துப்ப, அனன்யா விதிர்விதிர்த்துப் போய் ரிஷ்வந்தைப் பார்த்தாள்.

“படத்துக்கு சான்ஸ் குடுக்க ம்மா.. நீ வேற எதுவும் நினைச்சுக்காத” என்று தன் சிம்மக் குரலாலும், வார்த்தையாலுமே அவளை உள்ளுக்குள் அலறவிட்டவன், வன்மமாக புன்னகைத்தபடி தலையைக் கோதிக் கொண்டு அருணிடம் சென்றான்.

ரிஷ்வந்திற்கு முன்னால் வந்திருந்த நவ்யாவும் தயாராகி வந்து நிற்க, அனன்யா தயாராகி வந்தபின், அருண் மூவருக்கும் காட்சியை விவரிக்கத் தொடங்கினான். அன்று முழுவதும் படபிடிப்பிலேயே கழிய, சலிப்புடன் எழுந்த நிஹாரிகா நந்தினியை அழைத்துக் காதில் ஏதோ சொல்ல, “ஓகே மேம்” என்றவள் குடுகுடுவென்று ஓடினாள்.

படபிடிப்பு முடிந்து அனைவரும் கிளம்ப ஆயத்தமாக, உடையை மாற்றிக்கொண்டு வந்த ரிஷ்வந்திடம் சென்ற நிஹாரிகா, “ஒரு வேலை இருக்கு.. கூட வா” என்றிட, அவளின் கற்றைக் கூந்தலை ஓரமாக ஒதுக்கிவிட்டவன், “நீ கூப்டா நான் எங்க வேணாலும் வரத் தயார்” என்று ரிஷ்வந்த் குறும்புடன் அவனின் மனையாளிடம் இரட்டை அர்த்தத்தில் பேச, அவனை முறைத்தவள், “இடியட்” என்று அடிக்குரலில் விழியை மட்டும் மேலே உயர்த்தி தன்னவனைத் திட்ட, அவனோ அத்தனை பேர் முன்னிலையிலும் அவளின் இடையைச் சுற்றிக் கை போட்டான்.

அவனின் செயலில் ஒரு விநாடி அதிர்ந்து விழித்து நெளிந்தவளை சட்டை செய்யாதவன், அவர்கள் இருவரையும் வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருக்கும் கூட்டத்தை அசட்டை செய்துவிட்டு, “எங்க போகணும்?” என்று அவளின் உயரத்திற்கு ஏற்றவாறு தலையை மட்டும் தாழ்த்தி அவளின் காதில் மீசை குறுகறுக்க வினவ, அவனை முறைத்துக்கொண்டே அவள் சொன்ன இடத்திற்கு தன்னவளை இடையோடு பற்றியபடிச் சென்றான்.

அங்கிருக்கும் ப்ரொடக்சனுக்கு உள்ள இரகசிய அறைக்குள் இருவரும் நுழைய, அனன்யா அங்கு அமர்ந்திருந்தாள். நிஹாரிகாவின் பாதுகாவலர்கள், அருண் மற்றும் நவ்தீப்பும் உள்ளே நின்றிருந்தனர்.

கணவனுடன் உள்ளே நுழைந்தவள், தன் இடையில் இருந்த கணவனின் கரத்தை மென்மையாய் விலக்கிவிட்டு, “அப்புறம் அனன்யா.. ஏதோ ஈவ்னிங் எவிடென்ஸ் காட்டுறேன்னு சொல்லியிருக்க ப்ரெஸ் கிட்ட.. இல்லாததை எப்படிக் காட்டுவே?” நிஹாரிகா அங்கிருந்த மேசையில் ஒற்றைக் காலைத் தொங்கிவிட்டபடி அமர்ந்துகொண்டு, இரு கைகளையும் மார்புக்குக் குறுக்காகக் கட்டியபடி, அனன்யாவிடம் ஆழமான குரலில் வினவ, அவளோ நிஹாரிகாவின் தோரணையிலும், கண்களில் தெரிந்த கோபத்திலும், முகத்தில் தெரிந்த இறுக்கத்திலும் எச்சிலை விழுங்கினாள்.

“இல்ல உண்மையா தான் நா..” அவள் துவங்க,

“இங்க பாரு.. நீ ஒரு ஹீரோயின்னு தான் உனக்கு கொஞ்சம் மரியாதை தந்திருக்கேன்.. கை நீட்ட வச்சிடாத.. காட் இட்” நிஹாரிகா கட்டியிருந்த ஒரு கரத்தை மட்டும் நீட்டி அழுத்தமாக எச்சரிக்க, அனன்யா பயத்தில் உடம்பில் அனல் ஏறுவதை உணர்ந்தாள்.

ரிஷ்வந்தோ மனைவியின் செயலை சேர் போட்டு அமர்ந்து, ஒரு கன்னத்தில் கை வைத்து சுவாரஸ்யமாய் பார்த்துக் கொண்டிருந்தான். ‘அடடா நம்ம ஆளு பின்றாளே’ என்றிருந்தது அவனின் பார்வை.

தந்திரமாய் யோசித்த அனன்யா ரிஷ்வந்திடம் திரும்பி, “ரிஷ்வந்த், உண்மையை ஒத்துக்க ப்ளீஸ்.. நீ என்னை எத்தனை வருசமா லவ் பண்ற.. நம்ம சின்ன வயசுல இருந்து லவ் பண்றோம்.. என்னால தான் உனக்கு நடிக்கவே சான்ஸ் கிடச்சுது.. இப்ப என்னை இப்படி விட்டுட்டு போனதும் இல்லாம.. இப்படி மிரட்டுறியே.. என்ட குருவாயூரப்பா” என்று அவள் கண்ணீருடன் போலியாகப் பிதற்ற, ரிஷ்வந்தோ தலையில் அடித்துக் கொண்டான்.

கால் மேல் காலிட்டு நிமிர்ந்து அமர்ந்தவன், “அனன்யா, உனக்கு தமிழ்ல ஒரு பழமொழி இருக்கு தெரியுமா..” என்று இரண்டு கைகளையும் கோர்த்தபடி, சிறிது முன் சாய்ந்து டெவிலின் புன்னகையை சிந்தியபடி அவன் கேட்க அனன்யாவோ முழித்தாள்.

அனன்யா விழிப்பதைக் கண்டவன், “தவளை தன் வாயால் கெடும்” என்று தன் கனீர்க் குரல் அறை முழுதும் பட்டுத் தெறிக்கக் கூறினான்.

புரியாமல் அவனைப் பார்த்தவள், மேலும் எப்படியாவது நிஹாரிகாவை குழப்ப வேண்டும் என்று தொடர்ந்தாள். “ரிஷ்வந்த், ப்ளீஸ்.. என்னை கை விட்ற மாட்டேன்னே நினைச்சு தானே நான் உன்கூட…” என்று கண்ணீரை உகுத்தவள், “ப்ளீஸ் ரிஷ்வந்த், டோன்ட் டூ திஸ் டு மீ” என்று கத்தினாள்.

நிஹாரிகாவுக்கோ அவளின் அழுகையும், கண்ணீரும், பேச்சும் அத்தனை எரிச்சலை உண்டு பண்ணியது. முன்னே விழுந்த தன் கூந்தலை ஒதுக்கியவள், தன் பாதுகாவலனிடம் சைகையாலேயே ஏதோ சொல்ல, அவளிடம் தலையாட்டிவன் வெளியே செல்ல, தன்னை ஏதும் செய்துவிடுவார்களோ என்று பயந்த அனன்யா, “ரிஷ்வந்த்..” என்று மீண்டும் ஆரம்பிக்க, அவ்வளவு தான் நிஹாரிகாவின் பொறுமையை வெள்ளம் போல் அடித்துச் சென்றது அனன்யாவின், “ரிஷ்வந்த்” என்ற விழிப்பு

“ஏய்!” கர்ஜனையோடு அவளின் கழுத்தைப் பிடித்து எழுப்பியவள், “என்னடி ரிஷ்வந்த்.. என்ன ரிஷ்வந்த்..” என்று அவளின் கழுத்தைப் பிடித்துத் தள்ளிக்கொண்டே சென்றவள், இறுதியாக அவள் சுவற்றில் இடித்து நிற்கவும், “நானும் பாத்துட்டே இருக்கேன்.. பேர் சொல்லி சொல்லி கூப்பிட்டு இருக்க.. அதுவும் என் முன்னாடியே.. இருக்க இடமே தெரியாத அளவுக்கு தொலைச்சிருவேன் ஜாக்கிரதை” என்று நிஹாரிகா அடிக்குரலில் கோபம் கனன்ற விழிகளோடு உறும, அவளின் செய்கையை இருந்த இடத்திலிருந்து சிறிதும் நகராமல் ரிஷ்வந்த், சீறிப்பாயும் வேங்கையாய் பாய்ந்து கொண்டிருக்கும் தன் மணவாட்டியை, ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்க நவ்தீப்பும், அருணும்தான் சென்று அவளை அனன்யாவிடம் இருந்து வலுக்கட்டாயமாக பிரித்து எடுத்தனர்.

அனன்யாவோ நிஹாரிகாவின் திடீர்ச் செய்கையில் பயந்து போய் நடுநடுங்கி நின்றிருந்தாள். எவனோ ஒருவன் தந்த பணத்திற்கு ஆசைப்பட்டு வந்த தன் மடமையை, நினைத்து உள்ளுக்குள் தன்னைத் தானே திட்டியும் கொண்டாள்.

நிஹாரிகா கழுத்தைப் பிடித்து அழுத்தியதில் வலியெக்க, கழுத்தை கண்ணீருடன் நீவிவிட்டுக் கொண்டிருந்தவளிடம், “யார் சொல்லி இப்படி பண்ற? இல்ல ஃபேம்காக பண்றியா?” அருண் கடுகடுப்புடன் வினவ,

“இவ யாருன்னு சொல்லாமையே எனக்குத் தெரியும் அருண்.. லீவ் ஹெர்” என்றாள் நிஹாரிகா. மனைவியின் ஆழுமையையும், அதிகாரத்தையும், படைப்பை பார்த்து அணுஅணுவாய் ரசித்துக் கொண்டிருந்த அவளின் கணவன் மனைவிடம் மொத்தமாய் விழுந்தான் என்றுதான் கூற வேண்டும்.

நிஹாரிகாவின் தைரியத்தை ரசித்தான். உண்மையை அழகு பார்த்தான். அதுவும் தனக்காக ஒருவளின் கழுத்தை அவள் பிடிக்கும் போது அத்தனை பெருமை. தன்னவளின் முன் அனைவரும் அவனின் மனதில் ஒரு படி இறங்கித்தான் சென்றனர்.

‘என்ன பொண்ணுடி நீ!’ என்று முழு மனதாக மனைவியை கூரான விழிளுடன் மெச்சி, இதழில் புன்னகையை குறுகலாய் நெளியவிட்டவனுக்கு, அவளின் அவளவன் என்று நினைக்கும் போதே கர்வமாக இருந்தது.

தோழியாய் இருந்து அதன் பாசத்தையும், சேட்டையையும் அவனிடம் காட்டியவள், காதலியாய் மாறி காதல் எனும் விதையை விதைத்து, அதன் ஆழத்தையும், அது தரும் மென் உணர்வையும் உணரவும் வைத்திருக்கிறாள். ஏன் அவனின் ஆண் என்கின்ற மோகத்தை எழ வைத்திருக்கிறாள். பிரிவில் அதன் வலியையும், விலகிய போது காதலின் ஏமாற்றத்தையும் வலிக்க வலிக்க உணர வைத்திருக்கிறாள்.

ஆனால், இப்போது மனைவியாய் நம்பிக்கை என்னும் வலிமையான ஆயுதத்துடன், அவன் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தும் விட்டாள் அவனின் மகாராணியாய்.

நினைக்கும் போதே ரிஷ்வந்தின் உடல் ரோமங்கள் சிலிர்த்து எழுந்தன. கணவனின் பார்வையை கண்ட நிஹாரிகா கூட புருவத்தை சுருக்கிப் பார்த்துவிட்டு யோசனையுடன் நின்றுவிட்டாள்.

நிஹாரிகாவின் பாதுகாவலன் வரும்போதே, கையில் ஒரு பத்திரத்துடன் வர, அதைப் பார்த்த அனன்யாவிற்கு புரிந்து போனது அது என்னவென்று.

அதைக் கையில் வாங்கிய நிஹாரிகா, “இது என்னன்னு உனக்கு நான் சொல்லணும்னு இல்ல” என்று நீட்ட அதை வாங்கிய அனன்யா மூச்சுக்கூட விடாமல் கையெழுத்தை இட்டுத் தர, அதை வாங்கிய நிஹாரிகா, “கேர் ஃபுல்லா இருந்துக்க மிஸ்.அன்னயா.. இன்னிக்கு மாதிரி உன்னை காப்பாத்த யாரும் இருக்க மாட்டாங்க” என்று மிரட்ட, அவளின் தலை தன்னால் சரியென்று ஆடியது.

அது வேறொன்றும் அல்ல.. அனன்யா நிஹாரிகாவிடம் கோடிக்கணக்கில் பண மோசடி செய்தது போலான பத்திரம். அதை அவளே ஒற்றுக்கொள்வதாக இப்போது கையெழுத்து இட்டிருந்தாள் அனன்யா. அதை ஒருமுறை சரிபார்த்த நிஹாரிகா வெளியே செல்ல, அனைவரும் அவளைத் தொடர, ரிஷ்வந்தும், அனன்யாவும் மட்டும் தனித்து விடப்பட்டு இருந்தனர்.

மனைவி செல்லும் அழகையே உடலை வளைக்காமல் கழுத்தை மட்டும் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்த ரிஷ்வந்த், “நானும் அவளும் ஸ்கூல்ல இருந்து லவ் பண்றோம். அவ கிட்ட போய் நீ சின்ன வயசுல இருந்து லவ் பண்றோம் அப்படின்னா நம்புவாளா? ஸில்லி கேர்ள்” என்று அறையின் கண்ணாடிக்கு வெளியே மனைவி செல்வதையே பார்த்தபடி கேலியாகக் கேட்ட ரிஷ்வந்த், ஒரு பெருமூச்சுடன் எழுந்தான்.

அவனின் பழமொழி இப்போது அனன்யாவிற்குப் புரிய, தான் எவ்வளவு பெரிய முட்டாள் என்று அவளுக்குப் புரிந்தது. அதுவும் அவார்டு பங்ஷனில் அவர்களது கல்லூரி ஃபோட்டோ ஒளிபரப்பு ஆகியதும் இப்போது நினைவில் வர, முகம் கறுத்து தலைகுனிந்து நின்றாள் அவள்.

தனது ஆறடி உயரத்திற்கும் நிமிர்ந்து நின்றவன் ஒருவித கர்வத்துடன், தலையை நிமிர்த்தி, “எங்க கதையை யார் எழுதுனதுன்னு தெரியல.. பட் எங்க கதைல அவ தான் ஹீரோ” என்றவன் அதே நிமிர்வுடன், தெளிவாக அதேசமயம் கம்பீரமாகக் தனது கூலர்ஸை அணிந்தபடி வெளியே செல்ல, அனன்யா தான் பட்ட அடியில் நிமிரவே முடியாமல் நின்றிருந்தாள்.

வீட்டிற்கு வந்த இருவரும் குளித்துமுடித்து கீழே வர, அனன்யா தனது ட்விட்டரில் ஒரு பதிவை இட்டிருந்தாள். “நான் நேற்று பேசியது ஒருவர் மிரட்டி பேச வைத்தது.. தெரியாமல் பேசிவிட்டேன்.. என்னால் ஒரு நல்ல மனிதர் பாதிக்கப்பட்ட விரும்பவில்லை.. அவருடைய குடும்பம் மற்றும் ரசிகர்களுக்கு என்னுடைய மன்னிப்பை வேண்டுகிறேன்.. தயவு செய்து என்னை யாரும் இதை பற்றி கேட்டு தொந்திரவு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று பதிவிட்டு இருக்க, நிஹாரிகா, எதுவும் நடக்காதது போல சென்று டைனிங் டேபிளில் அமர்ந்தாள்.

அவளைத் தொடர்ந்து அமர்ந்த ரிஷ்வந்துக்கும் நிஹாரிகாவுக்கும் இரவு உணவை பரிமாறிய கயல்விழி, “மதியம் குடுத்துவிட்ட சாப்பாடு எப்படிமா இருந்துச்சு” என்று மெதுவே வினவ, நிஹாரிகாவின் விழிகள் சமையல் அறைக்குள் நின்றிருந்த அன்னையை பார்த்துவிட்டு, மாமியாரிடம் திரும்பியது.