நிஹாரி-25

IMG-20211003-WA0016-4c97bbd8

நிஹாரி-25(1)

மாமியாரின் முகத்தை அமர்ந்திருந்த படியே நிமிர்ந்து நோக்கியவளின் விழிகள் சிறிது வலியைக் பிரதிபலித்தது. மருமகளின் விழிகள் கூறிய மொழியில், அது உணர்த்திய பரிதவிப்பில், அது வெளிப்படுத்திய ஏக்கத்தில் கயல்விழி ஆதரவாக மருமகளின் தோளைப் பற்ற, ஒரு வெற்றுப் புன்னகையை சிந்தியவள் தன் முன்னிருந்த தட்டை வெறித்தாள். 

தன் தோளில் பதிந்திருந்த மாமியாரின் கரத்தின் மேல் தன் கரத்தை வைத்தவள், தன் முன்னிருந்த தட்டை வெறித்தவாறே, “அது அது அந்தந்த வயசுல நடந்தா தான் ஆன்ட்டி உண்மையாவே திருப்தியா இருக்கும்.. அதுக்கு அப்புறம் சிலது இன்னும் எவ்வளவு அழகா நடந்தா கூட அதை மனசு ஏத்துக்காது” என்று தொண்டையடைக்கக் கூறியவள், வதனம் கூம்ப சாப்பிடாமல் எழ, “சாப்பிட்டு போடா” என்றார் கயல்விழி. 

‘ஏன் இந்தக் கேள்வியை கேட்டோம்’ என்றிருந்தது கயல்விழிக்கு. மருமகள் செல்வதையே பார்த்திருந்தவர், சமையல் அறைக்குள் நின்றிருந்த விவாஹாவிடம் திரும்பி பார்வையாலேயே மன்னிப்பை வேண்ட, அவரோ இடமும் வலமும், ‘இல்லை’ என்பது போல் தலையசைத்துவிட்டு, சுற்றி இருந்தவர்களுக்காக ஒரு புன்னகையை சிந்திவிட்டு சந்திராமாவுடன் சில வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தார். 

கயல்விழி மகனைப் பார்க்க, அவனோ மனைவியை சமாதானம் செய்வதா, இல்லை மாமியாரை சமாதானம் செய்வதா, இல்லை அன்னையை சமாதானம் செய்வதா என்ற யோசனையில் ஒரு கரத்தை கதிரையில் கொடுத்து சாய்ந்து அமர்ந்து ,மறுகரத்தை மேசை மேல் வைத்து டைனிங் டேபிளில் இருந்த டம்ளரை ஸ்டைலாக ஒற்றை விரலால் சுழற்றியபடி இருந்தான். 

கயல்விழி நகர எத்தனிக்க, “அம்மா” என்று மென் குரலில் அவன் அழைக்க, மகனின் அழைப்பில் திரும்பியவர், “சொல்லு ரிஷிப்பா” என்றார். 

“இங்க வாங்க.. வந்து உக்காருங்க” என்று தனக்கு அருகில் இருந்த இருக்கையை அவன் கண்களால் காட்ட மகனின் அருகில் அமர்ந்தவர் மகனைப் பார்க்க, சிறிது நிமிடங்கள் யோசனையிலேயே கடத்தியவன், “ம்மா.. உங்களுக்கு நான் சொல்ற விஷயம் அதிர்ச்சியா இருக்கும்.. உங்ககிட்ட இத்தனை நாள் நான் மறைக்கனும்னு நினைக்கல.. நிஹிக்கு தெரிஞ்சா சங்கடப்படுவான்னு தான் சொல்லலை.. அப்பாக்கும் சினில இருந்தனால முன்னாடியே இது தெரியும்” என்று தொடங்கிய மகனை கலக்கத்துடன் பார்த்தார் கயல்விழி. 

கணவரும், மகனும் சேர்ந்து மறைக்கும் விஷயம் என்றால் எவ்வளவு பெரியதாக இருக்கும் என்று அவருக்கு புரிந்தது. ஏதோ பெரிதாக இருக்கிறது என்று நினைத்தவர், உள்ளுக்குள் படபடத்தாலும் தன்னை திடப்படுத்திக் கொண்டவர், “ம்ம் சொல்லு ரிஷிப்பா” என்றார்.

இத்தனை நேரம் விரலால் சுழற்றியபடி இருந்த கண்ணாடியால் ஆன தண்ணீர் கோப்பையை இறுக்கிப் பிடித்த ரிஷ்வந்த், “மாமா.. அதாவது மகாதேவன் அங்கிள் நிஹியோட சொந்த அப்பா கிடையாது” என்று ரிஷ்வந்த் உண்மையை அன்னையிடம் உடைக்க, “ரிஷ்வந்த்!” என்று விழிகள் விரிய, நெஞ்சம் ஒரு நொடி விட்டுத்துடிக்க அதிர்ந்தவர், மகனின் மேலிருந்த விழியை அகற்றவில்லை. 

எவ்வளவு பெரிய விடயம் இது! 

நடந்த அனைத்தையும் அன்னையிடம் கூறியவன், தொண்டையை சிரமப்பட்டு விழுங்கி தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, “நிஹி, அதை கண்ணால பாத்துட்டா ம்மா.. அதுல இருந்து அவ இன்னும் முழுசா வெளியவே வரல.. அதுனால அவளை யாரும் எதுவும் கேக்காதீங்க.. நான் சீக்கிரம் எல்லாத்தையும் சரி பண்ண பாக்கறேன்” என்று அழுத்தமாக, தான் நினைத்ததை செய்து முடிக்கும் பிடிவாதத்துடன் கூறியவன், அங்கிருந்த சுவற்றை வெறிக்க, கயல்விழிக்கோ திடீரென மகன் தூள் தூளாக போட்டு உடைத்த உண்மையில் தலை பாரமாகக் கனத்தது. 

மருமகளின் மேல் தாய்ப்பாசமும் அந்த மாமியாருக்கு எழுந்தது என்னமோ உண்மைதான்.

அன்னையின் முகத்தை வைத்தே அவரை கணித்த ரிஷ்வந்த், “நீங்க போய் தூங்குங்க ம்மா..” என்று அனுப்பி வைத்தவன், மாமியாரை நாடி சமையல் அறைக்குள் நுழைந்தான். விவாஹா அங்கு ஏதோ சிந்தனையோடு சமையல் அறையை ஒதுக்குவதைக் கண்ட ரிஷ்வந்திற்கு மாமியாரைக் காண பாவமாக இருந்தது. 

ஒரு பெருமூச்சை விட்டவன், “அத்தைகாரு” என்றழைக்க மருமகனின் குரலில் திரும்பியவர், புன்னகைத்தபடி, “சொல்லுங்க தம்பி” என்றார். 

அன்னையை எளிதில் சமாதானம் செய்ய முடிந்தவனுக்கு மாமியாரிடம் எவ்வாறு தொடங்குவது என்றே தெரியவில்லை. தன்னவளின் விழி போல அச்சு அசலாக இருக்கும் மாமியாரின் விழிகளைக் கண்டவன், அதுவும் பாவமாக தன்னை நோக்கும் விழிகளைக் கண்டு பேச முடியாமல் நின்றான். 

தலைகுனிந்து சிகையைக் கோதி தன்னை சமன் செய்தவன், “அத்தை.. நிஹி..” என்று அவன் முடிக்கவில்லை விவாஹா சொன்ன சொல்லில் உறைந்து போனான் நிஹாரிகாவின் கணவன். இதுதான் தாய்ப்பாசமா என்றிருந்தது அவனுக்கு. 

“நிஹி எதுவும் சாப்பிடலை. நீங்க கொண்டு போறீங்களா?” என்று விவாஹா மகளைப்பற்றிய கவலையில் கேட்க, ரிஷ்வந்த் உள்ளுக்குள் ஆடித்தான் போனான். தன் மனைவியின் உதாசீனத்தையும், வெறுப்பையும் அறிந்தவன் அவன். அதுவும் அவள் தன் அன்னை மேல் அதைக் காட்டுவதை அவன் நன்கு அறிந்திருந்தான். 

தன் உயிருக்குள் சிறு புள்ளியாய் உதித்த உயிரை பொத்தி பொத்தி அடைகாத்து, உதிரத்தை உணவாக்கி, நெஞ்சத்தை மஞ்சமாக்கி தாலாட்டி, பல இரவுகளை தூக்கமில்லாமல் தொலைத்து, இறுதியாய் மகளுக்காக வாழ்க்கையையே தொலைத்து நிற்கும், தன்னவளின் அன்னையை நினைத்துப் பார்த்த ரிஷ்வந்திற்கு, விவாஹாவின் தாய்ப்பாசம் சொல்ல முடியாத உணர்வைக் கொடுத்தது.   

‘ஒரு பெண்ணால் இவ்வளவு சுயநலமற்று இருக்க முடியுமா’ என்று உள்ளுக்குள் நினைத்து ஒவ்வொரு முறையும் வியந்து கொண்டிருப்பவனுக்குத் தெரியும் விவாஹாவிற்கு தன் மனையாள் மேல் உள்ள அளவு கடந்த பாசமும், அன்பும்.

விவாஹாவின் கரத்தை எடுத்துத் தன் கரங்களுக்குள் வைத்தவன், “அத்தைகாரு, என்னை உங்க பையன் மாதிரி நினைச்சுக்கங்க.. சீக்கிரம் உங்க இரண்டு பேரையும் சேர்த்தி வைக்கிறது என் பொறுப்பு. நானும் நீங்க இங்க வந்ததுக்கு அப்புறம் கவனிச்சுட்டு தான் இருக்கேன்.. அவ உங்கள அவாய்ட் பண்றது எனக்கு புரியுது.. ஆனா, அவளுக்குக் கொஞ்சம் டைம் தாங்க” என்றவன், விவாஹாவின் விழிகளைச் சந்திக்க இயலாமல், “அவ இன்னும் எதையும் மறக்கல.. அதைக் கண்ணால பாத்ததுனால என்னவோ அவனால அதுல இருந்து வெளிய வரவே முடியல.. அதைத்தான் உங்க மேல கோவமா காட்டிட்டு இருக்கா.. நீங்க இதுக்கு பீல் பண்ணாதீங்க.. நான் எல்லாத்தையும் பாத்துக்கறேன்” என்று மாமியாருக்கு உறுதி அளித்தான் விவாஹாவின் அருமை மருமகன். 

மகன் போல நினைக்கச் சொன்னவன் மெய்யாகவே மகனாய் பொறுப்பாய் பேச, விவாஹா மருமகனின் பேச்சில் மட்டுமில்லை, பொறுமையிலும் வீழ்ந்துதான் போனார். இப்படி ஒரு மருமகன் எங்கு தேடினாலும் கிடைக்க வாய்ப்பில்லை என்பதை மனதின் அடி ஆழத்தில் இருந்து உணர்ந்தவர், மருமகனிடம் பார்வையாலேயே நன்றியுரைத்து புன்னகைக்க, “அத்தகாரு, என் பொண்டாட்டி பசியில் இருப்பா..” ரிஷ்வந்த் சிறிது வெட்கத்துடன் இழுக்க, ‘அச்சச்சோ’ என்று நினைத்தவர் மகளுக்கு அனைத்தையும் தட்டில் வைத்துத் மருமகனிடம் தந்தார். 

தட்டை கையில் வாங்கியவன், “தாங்கஸ் அத்தைகாரு” என்க, மருமகனிடம் ஒற்றை விரலைத் தூக்கி மிரட்டியவர், “அப்படி பாத்தா நான் உங்களுக்கு என் வாழ்க்கை ஃபுல்லா நன்றி சொல்லணும்” என்றார். 

மாமியாரின் கூற்றில் பக்கென்று தட்டைக் கையில் வைத்துக்கொண்டு சிரித்தவன், “பின்ன உங்க பொண்ணை தாங்கிக்கறது அவ்வளவு சாதாரண விஷயமா?” என்று கூறி மாமியாரிடம் முறைப்பை வாங்கியவன் சிறிதடி நடிந்து, மீண்டும் தலையை மட்டும் திருப்பியவன், “அத்தைகாரு! ஒண்ணு சொன்னா தப்பா நினைக்க மாட்டிங்களே..” என்று குறும்புடன் கேட்க, விவாஹாவோ புருவங்கள் சுருங்க, என்னவென்பது போல் மருமகனைப் பார்த்தார். 

“ஆக்சுவலி யூ லுக் ஸோ பியூட்டி ஃபுல் (ACUTALLY YOU LOOK SO BEAUTIFUL)” என்று ரிஷ்வந்த் மாமியாருக்கு புகழாரம் சூட்ட, மருமகனின் எதார்த்தமான பேச்சில் விவாஹா, ‘ஙே’ என்று முதலில் விழித்தவருக்கு, கன்னங்கள் இரண்டும் சிறிது வெட்கத்தில் சிவந்துதான் போனது. 

“ம்கூம்” என்ற மகாதேவனின் செருமலில் ரிஷ்வந்த் திரும்ப, அவர் சமையலறையின் முன் நின்றுகொண்டு, இருவரையும் பார்த்தபடி கையை கட்டிக்கொண்டு நின்றிருந்தார். 

ரிஷ்வந்தைப் பார்த்தபடியே அவனைத் தாண்டிச் சென்றவர், மனைவியின் தோளில் கை போட்டு, “ஐ நோ மை வைஃப் இஸ் ஸோ ஸோ பியூட்டி ஃபுல் (I KNOW MY WIFE IS SO SO BEAUTIFUL)..” என்று, ‘என் மனைவி’ என்பதை அழுத்தமாக பொசசிவ்நஸ்ஸுடன் மகாதேவன் கூற, மாமனாருக்கு இந்த வயதிலும் எகிரும் பொறாமைத் தன்மையைக் கண்டு தனக்குள் சிரித்தவன் மேலும் அவரை சீண்ட நினைத்தவனாய், 

“யெஸ்.. என்னோட மாமியார் க்யூட் தான்” என்றவன் வேண்டுமென்றே, “அத்தைகாரு உங்க மக தான் சாப்பிடாம போனா.. அனா, நான் வந்து உங்க கையால நீங்க செஞ்ச சாப்பாடை சாப்பிட்டுதான் போவேன்..” என்றவன் மாமனாரை பார்த்து விழிகளைச் சிமிட்டிவிட்டுச் செல்ல, மகாதேவன், விவாஹா இருவருக்கும் மருமகனின் குறும்புத்தனத்திலும், சேட்டையிலும், துடுக்குத்தனத்திலும் சிரிப்புதான் வந்தது. 

அறையை மெல்லத் திறந்த ரிஷ்வந்த், உள்ளே கண்களைச் சுழற்ற, அவனின் மனைவி அங்கிருத்த மேசையில் தலையைச் சாய்த்து வைத்து, அவன் திருமணத்தன்று அவளுக்கு கொடுத்த பரிசை விழியசைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு கரத்தைத் தலைக்குக் கொடுத்து, மற்றொரு கரத்தால் இருவரும் இருக்கும் பரிசை ஏக்கத்துடன் தடவிப் பார்த்தவளுக்குத் தெரியவில்லை கணவனின் வருகை. 

சொல்லப்போனால் அதை உணரும் நிலையில் அவள் இல்லையே.

அங்கிருந்த மேசையில் ப்ளேட்டை ஓசையில்லாமல் வைத்தவன், காதலையும் காமத்தையும் தாண்டிய பாசத்தோடும், அன்போடும் மனைவியை நெருங்கி, அவள் பின்னால் நின்றபடி அவளின் தோளில் ஆறுதலாக கையை வைத்தான். கணவனின் ஐ விரலின் தொடுகையையும், அது அழுத்தத்துடன் கூறிய ஆறுதலையும் உணர்ந்தவள் தலையை மட்டும் நிமிர்த்தி தன்னவனைப் பார்த்தாள். 

தன்னவளின் முன் தன் ஈகோ அனைத்தையும் கழற்றி வைக்க முடிவெடுத்த நிஹாரிகாவின் கணவன், “தாங்க்ஸ்” என்க, அவளோ அவனின் விழிமேல் இருந்த தன் விழிகளை அகற்றவில்லை. 

அவனின், ‘தாங்க்ஸ்’ எதற்கு என்று அவளுக்கு புரியாமல் இல்லை. ‘ஆனால், இன்று தனக்கு இருந்த நம்பிக்கை ஏன் அன்று இவனுக்கு இல்லை? அப்படி நம்ப முடியாத அளவுக்கு நான் என்ன தவறு செய்துவிட்டேன்?’ என்று யோசித்தவள், அவனின் கை மேல் கை வைத்து தன் தோளில் இருந்து அகற்றிவிட்டாள். 

வெள்ளை நிற பைஜாமாவிலும், சட்டையிலும் ஆங்காங்கே சிறிய சிறிய இதய வடிவம் சிவப்பு நிறத்தில் அச்சடிக்கப்பட்டிருக்க, தலை முடியை பின்னால் இழுத்து பான்ட் போட்டிருந்தவள் எழுந்து செல்ல முயல, அவளின் கரத்தைப் பற்றி அமர வைத்த ரிஷ்வந்த், மனைவியின் முன் மண்டியிட்டு அமர்ந்து, தன் மனையாளின் இரு கரத்தின் மென் விரல்களோடு தன் விரல்களை மென்மையாய் கோர்த்துக் கொண்டு அவள் வதனத்தை நோக்கினான். 

அவன் எதையோ பேசத் தொடங்கும் முன், “நான் உன்ன மாதிரி இல்ல ரிஷ்வந்த். எனக்கு எப்போமே உன் மேல நம்பிக்கை அதிகம்” என்று இறுகிய குரலில் சொன்னவளின் வதனத்தையே பார்த்திருந்தவன், “அன்னிக்கு எனக்கும் உன் மேல சந்தேகம் வரலடி..” என்றவனை நம்ப முடியாமல் நிஹாரிகா பார்க்க, அவனோ மனைவியின் பார்வையில் ஒரு பெருமூச்சை வெளியிட்டான். 

“நீ இப்படி பாத்தாலும் அதான்டி உண்மை.. இங்க பாரு நிஹி.. அன்னிக்கு நவ்தீப்..” ரிஷ்வந்த் தொடங்க, “எனக்கு எல்லாம் தெரியும்.. அன்னிக்கு வந்தப்ப எல்லாம் நவ்தீப் சொல்லிட்டான்” நிஹாரிகா எங்கோ பார்த்தபடி சொல்ல, ரிஷ்வந்திற்கோ, ‘எப்படி ஸ்டார்ட் பண்ணாலும் என்ட் கார்ட் போடறாளே’ என்றிருந்தது. 

இருந்தாலும் இன்று அவன் விடுவதாய் இல்லை. “அதான் நிஹி.. உன் மேல இருந்த ஓவர் பொசசிவ்நஸ்ஸும், அவன் மேல இருந்த கோபமும் அன்ட் நீ என்கிட்ட அவன் கூட மால்ல இருந்துட்டு பொய் சொன்னது எல்லாம்தான் என்னை அப்படி உன்கிட்ட பேச வச்சிடுச்சுடி. நான் என் மேல சரின்னு சொல்லலை. அதுக்கு நான் உன்கிட்ட மன்னிப்பு கேக்கறேன். நீ என்னோட அன்றைய நிலையையும் கொஞ்சம் புரிஞ்சுக்க” ரிஷ்வந்த் அவளின் கரத்தோடு கோர்த்திருந்த இடத்தில் அழுத்ததைக் கூட்டிச் சொல்ல, அவளோ அவனை உணர்வற்ற பார்வை பார்த்தாள். 

அவள் எளிதில் மறக்கக் கூடிய வலியையா அவன் தந்தான்? அனைத்தையும் அவள் மறப்பதற்கு! 

ஒருவித இயலாமையோடு அவனைப் பார்த்தவள் அதரங்கள் நடுங்க, “அதேமாதிரி நீயும் என் நிலைல இருந்து யோசிச்சு பாரேன் ரிஷ்வந்த்.. இங்க எல்லாரும் பேசுனத தாங்க முடியாம, ஊர் விட்டு ஊர் வந்து உன்கூட க்ளோஸ் ஆகி.. நீ மட்டும் தான் அப்படின்னு இருந்தேன். சொல்லப்போனா உன்னோட நினைப்பு தவற வேற எதுவுமே இல்ல எனக்கு.. தாத்தையாவைக் கூட சிலசமயம் மறந்திருக்கேன்.. நீ, நீ, நீன்னு இருந்து நான் நானாவே இல்ல ரிஷ்வந்த் அப்ப..” என்றவள் கரகரக்கும் தன் குரலை கஷ்டப்பட்டு தலை குனிந்து விழுங்கி சரி செய்தாள். 

கண்களில் நீர்க் கோர்க்காமல் தன்னை சமன் செய்து நிமிர்ந்தவள், “அன்னிக்கு நான் எதுக்காக நவ்தீப் கூட போனேன் தெரியுமா உனக்கு. உன் பர்த்டேக்கு கிப்ட் வாங்க. எனக்கு எதுவும் பிடிக்கலன்னு தான் அவனை வீட்டுல விட்டுட்டு யாருக்கும் தெரியாம போய்..” என்றவள் தன்னவனின் கைகளில் இருந்த ஒரு கரத்தை உறுவி, தனது நெஞ்சை சுட்டிக் காட்டினாள். 

அவளின் சொற்களும், அவள் அழுகையை கட்டுப்படுத்தும் விதமும், அவள் வதனம் காட்டிய வலி, ஒவ்வொன்றும் ரிஷ்வந்தின் நெஞ்சின் அடி ஆழம்வரை ஆணி அடித்தது போன்று இறங்க, அவளின் வலியை உணர்ந்தவனுக்கு கண்கள் லேசாகக் கலங்கியது. 

தன்னவனின் விழிகள் கலங்குவதைக் கண்டவளுக்கு அதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீர், விழிகளில் ரேகையாய் உருவாக, “அதுக்காகத் தான் அன்னிக்கு சாரி கட்டிட்டு வந்தேன் உன்கிட்ட இந்த டாட்டூவைக் காட்ட. ஆனா, நீ.. நான் எதையெல்லாம் மறக்கணும்னு நினைச்சனோ அதை ஒரு வார்த்தைல..” என்றவள் தலை குனிந்து கொள்ள ரிஷ்வந்தோ மண்டியிட்டபடியே, அமர்ந்திருந்த தன்னவளை இறுக அணைத்தான். அவளை அடித்து வீழ்த்திய அவனின் வார்த்தைகளின் வலி இப்போது அவனை பலமாய் அடித்துக் கொண்டிருந்தது.

“ஸாரிடி.. நான் எதுவும் வேணும்னு பண்ணல” என்றவன் அவளை இறுக்கி, அவனுக்கு நேர் எதிராக இருந்த அவளின் நெஞ்சில் முகம் புதைக்க, அவனின் தவிப்பு காண முடியாதவள் தன்னைக் கட்டுப்படுத்த இயலாது, அவனைச் சுற்றி கை போட்டுக் கொண்டாள். 

“எனக்கு இப்பவும் உன் மேல லவ் இருக்குடா. இப்ப நீ ஹர்ட் ஆகறதைக் கூட தாங்க முடியல. ஆனா, கோபமும் போகமாட்டிது ரிஷ்வந்த். ஐ நீட் சம் டைம் டூ ஹீல்(I NEED SOME TIME TO HEAL)” என்றவளை அவன் நிமிர்ந்து பார்க்க, இருவரின் முகமும் அருகருகே இருக்க, நிஹாரிகாவின் விழிகள் தன்னவனின் இதழ்களின் மேல் பதிந்தது. 

ரிஷ்வந்தோ அதை உணர்ந்தும், “சாப்பிடறியா?” என்று வினவ, அவனின் இதழைப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கோ ஒரு நிமிடம் அவன் எதைக் கேட்கிறான் என்று புரியவில்லை. 

அவனின் சிகைக்குள் கை நுழைந்தவள் மனதில் உள்ள அனைத்தையும் அவன் இதழ் மேல் வன்மையாகக் காட்ட, ரிஷ்வந்தோ தன்னவளின் திடீர் அழுத்தத்திற்கு பதில் கொடுக்க முடியாமல் திணறித்தான் போனான். அவளாகக் கொடுக்கும் மூன்றாவது இதழ் முத்தம் அல்லவா அவனுக்கு. முதல் முறை கல்லாரியில். ஆசை ஆசையாய் இருவரும் பிழையோடு பரிமாறிக் கொண்ட முத்தம்.

இரண்டாம் முத்தம், அவார்ட் பங்ஷன் முடிந்து வரும்போது காரில். மது போதையில் இருந்தவள் அடி மனதில் உள்ள காதலை வெளிப்படுத்தி தன்னவனின் மேல் உள்ள காதல் அழியவில்லை என்று சிறிது தடுமாற்றத்துடன் கொடுத்த முத்தம். 

இப்போது மூன்றாவது முத்தம் மனைவியாய் அறைக்குள் கொடுக்கிறாள். 

இப்போது உரிமையுடன் கோபமும் சேர்ந்து கொள்ள, தன்னவனின் அதரத்தைக் கடித்து, அவள் யுத்தம் செய்ய, ரிஷ்வந்த் அனைத்தையும் தன்னவளுக்காக தாங்கிக் கொண்டு அவளின் வலிக்கு மருந்தாக நிலை மாறாமல் தன்னவளுக்கு ஒத்துழைத்தபடி இருந்தான். 

சிறிது நொடிகளில் தன்னவனை விட்டுப் பிரிந்தவள் நடந்ததை எண்ணி தலை குனிய, அவளின் எண்ணத்தைப் படித்தவனுக்கு சிரிப்பு வர, “கெஞ்சம் கையை எடுக்கறீங்களா மிஸஸ்..” ரிஷ்வந்த் அந்த, ‘மிஸஸ்’இல் ராகம் இழுக்க, அவனை விட்டு நகர்ந்தவளைப் பார்த்து புன்னகையுடனே எழுந்தவன், “நான் உனக்கு டின்னர் இங்கையே எடுத்திட்டு வந்துட்டேன்..  அதை தான் சாப்பிடறயான்னு கேட்டேன்” என்றவன் தனது குரலில் கேலியை தொக்கிக்கொண்டு, அவள் கடித்த இடத்தைத் தொட்டுப் பார்த்தபடிக் கேட்க, நிஹாரிகா அவனை முறைத்தாள்.  

‘அய்யோ நிஹி.. சும்மாவே அவன் அலப்பறை தாங்காது.. இதுல வேற..’ என்று தன்னைத் தானே திட்டிக்கொண்டவளின் முன் தட்டுடன் நின்ற ரிஷ்வந்த், “எனக்கு ஊட்டி விடத்தான் ஆசை.. ஆனா, உனக்கு அது ஓகே வா?” ரிஷ்வந்த் இரு புருவங்களையும் உயர்த்திக் கேட்க, நிஹாரிகாவோ தட்டை வாங்கி அமைதியாக சாப்பிடத் தொடங்கினாள். 

‘ம்கூம்’ என்று நினைத்துக்கொண்டவன், அவள் சாப்பிட்டு முடிக்கும் வரை அமைதியாய் இருந்தான். 

சாப்பிட்டுவிட்டு வந்தவள் அந்த கிங் சைஸ் பெட்டின் மறுபக்கம் படுக்க ஆயத்தமாக, “எனக்கும் நீ என்னை பேசுனதும், செருப்பை தூக்கி மேல அடிச்சிட்டு போனது எதுவும் மறக்கல நிஹி. எனக்கும் அது ஞாபகம் அப்பப்ப வரும். இதையே நினைச்சுட்டு இருந்தோம்னா கண்டிப்பா இரண்டு பேரும் வாழ முடியாது. உனக்கு எவ்வளவு வேணாலும் டைம் எடுத்துக்க. ஆனா, காலம் கடந்திடாம பாத்துக்க. பிகாஸ் வீ நோ ஹவ் மச் வீ லவ் ஈச் அதர் ( BECAUSE WE KNOW HOW MUCH WE LOVE EACH OTHER). லட்டு மாதிரி ஒருத்திய பக்கத்துல வச்சிட்டு சும்மா இருக்க நான் முற்றும் துறந்த முனிவர் இல்ல” என்றவன் முதுகைக் காட்டிப் படுத்துக்கொள்ள, “எனக்கு ஓகே” நிஹாரிகா சொன்ன மாத்திரத்தில் புயலென எழுந்தவன் அவளைப் பார்த்து, “என்ன?” என்று கேட்க, 

“இல்ல டைம் எடுத்துக்கிறதுக்கு ஓகே சொன்னேன்” என்று பாவம்போல முகத்தை வைத்து அவனவள் நக்கலாக உரைத்துவிட்டு, அவனுக்கு முதுகைக் காட்டிப் படுத்துக்கொள்ள, ரிஷ்வந்தோ நடு மண்டையில் ஆணி அடித்தைப் போல அமர்ந்திருந்தான். 

‘ச்சை.. இவ எல்லாம் என்ன டிசைனோ.. மனுஷனா நல்லா வச்சு செய்யறா’ என்று உள்ளுக்குள் புகைந்தவன் மீண்டும் படுத்துக்கொண்டான். 

அடுத்தநாள் காலை எழுந்து குளித்து முடித்துத் தயாரானவன், கண்ணாடி வழியே குளித்து முடித்து தலையைத் துவட்டிக் கொண்டு வந்த மனையாளை கண்களாலேயே ரசித்துபடியே, “இந்த சாட்டர்டே, சண்டே நம்ம சென்னை போறோம் நிஹி.. பிரகாஷ் சார் வீட்டுல சண்டே லன்ச் நமக்கு” என்க, “சரி” என்றாள் நிஹாரிகா, அவளுக்கு சென்னை வைத்திருக்கும் விளையாட்டை அறியாமல். 

****

மணியோ சனிக்கிழமை அதிகாலை மூன்று. 

மஸ்டர்ட் நிற ஜம்ப்ஸூட் அணிந்து, வட்டவடிவ ப்ரேம் கொண்ட டிடா ப்ரான்ட் சன் க்ளாஸை அணிந்து, லூஸ் ஹேரில் நிஹாரிகா சென்னை விமான நிலையத்தில் தன்னவனுடன் கையில் ஒரு ஹேண்ட் பேக்குடன், அழகும் நிமிர்வும் சேர்ந்த பாணியில் நடந்து வர, அவளுடன் அவளுக்கு இணையாக வெள்ளை நிற டி சர்ட் அணிந்து அதற்கு லட்சம் மதிப்புள்ள பில்ப் ப்ளெயின் கருநீல ஜீன்ஸை அணிந்துகொண்டு, தன்னவளின் கையைப் பற்றிபடி, சதுர வடிவ ரெக்கயென் சன் க்ளாஸஸ் அணிந்து தன்னவளை விட இரண்டு மடங்கு அதிக நிமிர்வோடும், கம்பீரத்துடனும் நடந்து வந்து கொண்டிருந்தான் ரிஷ்வந்த். 

அவர்களுடன் கனகராஜும், கயல்விழியும். ஒரு வாரம் அங்கு இருந்தவர்கள் மகன், மருமகளுடன் சென்னைக்கே  தங்களது இல்லத்திற்கு திரும்பிவிட்டனர். 

முன்னே நடந்து வந்த ரிஷ்வந்தும், நிஹாரிகாவும் நிரூபர்களை தவிர்த்துவிட்டு வர, கயல்விழி கனகராஜுடன் தங்களுக்காக நின்றிருந்த கருப்பு நிற பிஎம்டபிள்யூ X5Mஇல் நால்வரும் எறினர். 

சிறிது தூரம் சென்றபின் யாருமற்ற சாலையில் காரை நிறுத்திய ரிஷ்வந்த் நிஹாரிகாவைப் பார்த்து, “இறங்கு!” என்க, புரியாமல் விழித்தவள் காரிலிருந்து இறங்க, அவளுக்கு முன் இறங்கியவன் தங்கள் இருவரது லக்கேஜையும் எடுத்தான்.

அவனின் செயல் புரியாமல் நின்றிருந்தவள், எதுவும் அவனிடம் கேட்கவில்லை. சில நொடிகளில் அங்கு ஒரு சன் ப்ளிம் ஒட்டிய சாதாரண கார் வந்து நிற்க, அதிலிருந்து இறங்கிய ட்ரைவரிடம், கார் கீயைத் தந்தவன், “அப்பா, அம்மாவை வீட்டுல விட்டிருங்க” என்றுவிட்டு அவரின் கையிலிருந்த கார் கீயை வாங்கிக்கொண்டான். 

நிஹாரிகா மாமியார், மாமனாரைப் பார்க்க அவர்களோ மருமகளைப் பார்த்து புன்னகையுடன் தலையசைத்தனர். அவர்களைப் பார்த்து புன்னகைத்தவள் ரிஷ்வந்துடன் காரில் ஏறினாள். 

வழிமுழுதும், ‘எங்கே செல்கிறோம்’ என்ற கேள்வி மனதை அரித்தாலும் நிஹாரிகா வாய் திறந்து கேட்கவில்லை. இருந்ததும் மூலையை யோசனைகள் வண்டாய்க் குடைய, “ஆன்ட்டி, அங்கிள் நம்ம கூட வீட்டுக்கு வரலையா?” என்று நாசூக்காக வினவ, அவளின் கேள்வியின் அர்த்தம் புரிந்தவன் ரோட்டில் கண்களை வைத்தபடியே புன்னகையை நெளியவிட்டான். 

“அவங்கதான் வீட்டுக்கு போறாங்க” என்றவனின் அதரங்கள் மீண்டும் ஒட்டிக்கொண்டன.

‘எங்க கூட்டிட்டு போறான் நம்மள’ என்று அவள் மூலையைக் கசக்க, அவன் செல்லும் வழியைக் கண்டவளுக்கு ஓர் அளவுக்கு புரிந்து போனது எங்கே அழைத்துச் செல்கிறான் என்று. 

அவனை திரும்பிப் பார்த்தவள், ‘ஏன்டா இப்படி பழசு எல்லாத்தையும் ஞாபகப்படுத்தற..’ என்று உள்ளுக்குள் நினைக்க, ரிஷ்வந்த் தன்னவளின் பார்வையை உணர்ந்தாலும் அவளைத் திரும்பிப் பார்க்கவில்லை. சிறிது நேரத்தில் அவர்கள் தங்கும் இடம் வர காரை நிறுத்திய ரிஷ்வந்த் தன்னவளைப் பார்க்க, அவளோ தன் சிப்பி இதழ்களை சிறிது திறந்து வைத்தபடி, தன்னவனையும் அவ்விடத்தையும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டிருந்தாள். 

இந்த இடம் இருவருக்கும் மறக்க முடியாத நினைவுகளைத் தரப்போகிறது என்று இருவருமே அறியவில்லை.