நிஹாரி-26
காரின் டாஷ் போர்ட்டைத் திறந்து, உள்ளே இருந்த இரண்டு மாஸ்க்கை எடுத்த ரிஷ்வந்த், அதில் நிஹாரிகாவிடம் ஒன்றைத் தந்து, “இந்தா இதைப் போட்டுக்க” என்றான்.
உதடுகள் பிரிந்து மங்கையவள் தன்னவனையே பார்த்திருக்க, அவளின் தோளைப்பற்றி உலுக்கியவன், “இறங்குடி.. இப்பவே டைம் ஃபோர் டென் ஆச்சு பாரு.. யாராவது பாக்க போறாங்க” என்றிட, அவனின் கையைத் தட்டிவிட்டவள், “டோன்ட் டச் மீ” என்று தலையை சிலுப்பிக்கொண்டவள், மாஸ்க்கை அணிந்துகொண்டு காரிலிருந்து இறங்கினாள்.
‘ம்கூம்! டச் பண்ணாதன்னு சொல்லுவா.. அப்புறம் வாய புடிச்சு கடிச்சு வப்பா’ உள்ளுக்குள் தன்னவளின் வேட்கையை எண்ணி செல்லமாகத் திட்டியவன் மாஸ்க்கை அணிந்துகொண்டு லக்கேஜுடன் இறங்கி நடக்க, நிஹாரிகா அவனைத் தொடர்ந்தாள்.
அவன் அழைத்து வந்தது வேறு எங்குமல்ல. ரிஷ்வந்த் முதலில் தங்கியிருந்த வீடு. எத்தனை புகழ் பெற்று, ஊரார் பேச எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும், அவனால் பழசை மறக்க முடியவில்லை. அதுவும் சிறிய வயதிலிருந்து இங்கேயே பெற்றோரின் அரவணைப்பில் வளர்ந்து, தன்னவளுடன் இருந்த சில நினைவுகள் அவனின் அடி மனதில் இன்னும் அழியாமல் பதிந்திருக்கும் இடம் இது.
அத்தனை எளிதில் மறக்கக்கூடயதா அனைத்தும்?
அதைவிட்டுச் செல்ல மனம் வராதவன், அந்த வீட்டின் உரிமையாளரிடம் பேசி கனிசமான தொகை கொடுத்து, தானே அதை வாங்கியிருந்தான். மனம் தன்னவளை நினைத்து மருகும் போதெல்லாம், இங்கு வருபவன் தன்னவளின் நினைவுகளுடன் தனிமையில் இருக்கும் இடம் இது. நள்ளிரவு தாண்டி யார் கண்ணிலும் படாமல் வருபவன், அடுத்தநாள் நள்ளிரவில் கிளம்பிச் சென்றுவிடுவான்.
எப்போதும் ஒற்றை ஆளாக வந்து தனிமையில் தன்னவளின் நினைவுகளுடன் ஒரு தினத்தை கழித்துவிட்டுச் செல்பவன், இன்று மனையாளுடன் வருகை தந்திருந்தான்.
கோடிக்கணக்கில் வீட்டை அரண்மனைபோல பிரம்மாண்டமாகக் கட்டி வைத்திருந்தவனுக்கு, ஏனோ அதில் தன்னவளுடன் தங்க விருப்பமே இல்லை. அதற்கு சில காரணங்களும் உண்டு. பழைய நினைவை தன் காதல் மனைவிக்கு கிளறிவிட நினைத்தான் அவன். ரணமாய் இருக்கும் அவள் மனதை பழைய நினைவுகளையும், அது தந்த இதத்தையும், அது கொடுத்த அனைத்தையும் மொத்தமாய் கொடுத்து தன் தவறை சரி செய்ய விழைந்தான்.
படிகளில் ஏறியவன் சாவியைக் கொண்டு வீட்டைத் திறக்க, அவனின் பின் நின்றிருந்த நிஹாரிகாவுக்கோ, ரிஷ்வந்த் எதை நினைத்து அவளை அழைத்து வந்தானோ அது வேலை செய்ய ஆரம்பித்தது. அவன் பிறந்தநாளன்று இங்கு முதன் முதலாக வந்தது நினைவில் வர, அன்று அவனுக்குக் கொடுத்த பரிசும், மின்சாரம் தடைபட்டபோது அவனுடன் தனிமையில் வீட்டிற்குள் நின்றிருந்தது என்று அனைத்தும் மனக்கண்களில் வலம் வர, அவளின் வதனம் மலர்ந்து இதழோரத்தில் சிறு கீற்றாய் மெல்லிய புன்னகை!
கணவனின் பின் நுழைந்தவள், வீட்டைச் சுற்றி பார்வையை ஓட விட, அன்று எப்படி இருந்ததோ இன்றும் எதுவும் மாறாமல் அதே போலிருந்தது. வீட்டைச் சுற்றிப் பார்த்தவள் ரிஷ்வந்தின் அறைக்குள் நுழைய, கதவைத் திறந்தவள், அங்கு கண்ட காட்சியில் ஸ்தம்பித்துப் போய் நின்றுவிட்டாள். அவளின் பாதங்கள் நகர மறுத்து ஏனோ தனக்குக் கீழ் உள்ள அனைத்தும் உடைந்து வேறு பிரபஞ்சத்தில் மிதப்பது போல சிலிர்ப்பாய் இருந்தது அவளின் நெஞ்சுக் கூட்டில்.
அதிர்ச்சியிலும், இனம் புரியாத பரவசத்திலும் ஆடவளுக்கு, தான் கண்ட காட்சி பதமாய் இதயத்தில் பதிய, காளையவனை நோக்கி அவள் தன் விழிகளைத் திருப்ப, மனையாளையே அங்கிருந்த சுவற்றில் சாய்ந்து கைகளைக் கட்டிக்கொண்டு பார்த்திருந்தவன், ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்க, அவனைக் கண்டு மெலிதாகப் புன்னகைத்தவள், தன்னையும் மீறி விழிகளைச் சிமிட்டினாள்.
தன்னவளின் விழிச் சிமிட்டலில், சிறிதடி இடைவெளியில் நின்றிருந்த ரிஷ்வந்த், மனைவியின் புன்னகையை தன் இதயத்திற்குள் ஆழமாய் சேமித்துக்கொண்டே, அவளருகில் சென்று அவளை பின்னிருந்து, கழுத்தைச் சுற்றி கை போட்டு அணைக்க, தன் முதுகுப் புறம் அவனின் நெஞ்சில் சாய்ந்தபடி வாகாக நின்றவள், “ரொம்ப அழகா இருக்குடா” என்றாள், அறையில் இருந்த புகைப்படத்தைப் பார்த்து.
ஆம்! கல்லூரியில் அவர்கள் இருவரும் நடனமாடி அனைவரையும் உறைய வைத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம். நடனத்தின் முடிவில் நிஹாரிகா ரிஷ்வந்தின் நெஞ்சில் விழிமூடி சாய்ந்திருக்க, ரிஷ்வந்த் ஒரு கரத்தால் தன்னவளை அணைத்து, மற்றொரு கரத்தால் அவளின் தலையை தன் நெஞ்சில் புதைத்திருந்தான்.
இருவரும் சிவப்பு நிற உடையை அணிந்திருக்க, இருவரின் பின்புறமும் வெண் புகையும், இதய வடிவிலான சிவப்பு நிற ஹீலியம் பலூன்களும் மிதக்க, பேரெழிலாய் அமைந்திருந்தது அந்தப் புகைப்படம்.
“எப்ப வாங்குன இந்த ஃபோட்டோவை?” நிஹாரிகா தலையை மட்டும் திருப்பி தன்னவனின் வதனத்தைப் பார்த்து வினவ, தன்னை ஒட்டியபடி நின்றிருந்த தன்னவளின் மிளிரும் வதனத்தைத் தலைகுனிந்து பார்த்தவன், “நான் அந்த டான்ஸ் முடிஞ்சு ஒரு வாரத்துல வாங்கிட்டேன். பட் யாருக்கும் தெரியாம வச்சிருந்தேன்” என்றவன், புகைப்படத்தைப் பார்த்துக்கொண்டே, “இந்த வீட்டை விட்டுட்டு புது வீட்டுக்கு மாறும்போதே, இதை ப்ரேம் போட்டு இங்க மாட்டிட்டேன்” என்றான்.
“ம்ம்” என்றவளின் செவியின் அருகே குனிந்தவன், “நிஹி!” என்று மெல்லிய குரலில் அழைக்க, தன்னவனின் மூச்சுக்காற்று செவி மடல்களைத் தீண்ட, நெளித்தவள், “ம்ம்?” என்று வினவினாள்.
மேலும், அவளின் கழுத்தை வளைத்துச் சுற்றியிருந்த தன் கரங்களை மென்மையாக இறுக்கியவன், “நாளைக்கு தான் பிரகாஷ் ஸார் வீட்டுக்கு போறோம்.. இன்னிக்கு எங்கேயும் போக மாட்டோம்.. ஃபுல்லா இங்கதான்.. ஸோ, இன்னிக்கு ஒரு நாள்.. ஒரே ஒரு நாள் எல்லாத்தையும் மறந்துட்டு பழைய மாதிரி இருப்போமா?” ரிஷ்வந்த் ஏக்கத்துடன் அவள் தலைமேல் தன் நாடியை வைத்தபடி வினவ, கணவனின் குரலில் திரும்பியவளுக்கு, அவனின் கண்களில் நட்பை மட்டும் யாசித்த ரிஷ்வந்த் தெரிந்தான்.
அவளின் வலி அவனின் வலியாக இருக்க, இப்போது அவனின் வலி அவளின் வலியாக மாறியது. தன்னுடைய பிரிவு அவனை எத்தனை துயரில் ஆழ்த்தி இருக்கிறது என்பதை அவனின் விழிகள் சொன்ன மொழியில் மூலம் அவளால் வலிக்க வலிக்க உணர முடிந்தது. அவனை ஏற்க முடியாமல் ஒதுக்குபவளால் அவனின் வேதனையையும் தாங்க முடியவில்லை.
அளவு கடந்த காதலை தன்னவன் மீது வைத்திருக்கும் அவள் காதலின் முன்னும், உயிராய் தன்னவனுடன் நேசத்துடன் கழித்த கடந்தகாலத்தின் முன்னும், அவளின் மலையளவின் கோபம் சற்று குறைந்து தான் போனது.
“ம்ம்” என்றவளை விடுவிடுத்தவன், “போய் ரெஸ்ட் எடு” என்றான்.
குளியலறைக்குள் புகுந்து உடையை மாற்றியவள், உறக்கத்தை தழுவ, ரிஷ்வந்தின் அலைபேசி அலறியது. வரவேற்பறையில் உள்ள பால்கனியில் நின்றிருந்தவன், திரையில் ஒளிரும் எண்ணைப் பார்த்தவுடன் முகம் இறுக, கண்களை கடினத்துடன் மூடி கோபத்தை சமன் செய்து அழைப்பை ஏற்றவன், “சொல்லு செந்தில்” என்றான் தனது உதவியாளனிடம்.
“ஸார், அந்த ஆத்விக்கை வாட்ச் பண்ண சொன்னீங்கள்ள.. அவன் ஃபோனைக் கூட ட்ராக் பண்ணி பாத்துட்டோம் ஸார்.. எதுவும் சிக்கல.. அவனையும் நீங்க சொன்னீங்கன்னு வாட்ச் பண்ணிட்டு தான் இருக்கேன்.. பட் ரொம்ப தெளிவா இருக்கான் போல.. எதுவுமே சிக்கமாட்டீது” என்று செந்தில் தனது முதலாளியிடம் அனைத்தையும் ஒப்பிக்க, “ப்ச்” என்று சலித்தான் ரிஷ்வந்த்.
“ஓகே செந்தில்.. நீ எப்பவும் அவன் மேல ஒரு கண்ணா இரு.. கொஞ்சம் கூட கேர்லெஸ்ஸா இருந்திடாத.. அவனோட ஒவ்வொரு மூவையும் அப்சர்வ் பண்ண சொல்லு.. ஒரு சின்ன டவுட் வந்தா கூட அலெட்ர் மீ” என்று அவனுக்கு அதிகாரத்துடன் கட்டளையிட்ட ரிஷ்வந்த், ஃபோனை அணைத்து சிறிதுநேரம் வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தான். அவனின் கண்முன் இரு தினங்களுக்கு முன் நடந்ததே படமாய் தோன்றியது.
இரண்டு நாட்களுக்கு முன் ஷூட்டிங்கை முடித்தவன் தன்னவளைத் தேட, அவள் தெரிந்த ஒருவரை அருகில் இருந்த செட்டில் பார்க்க செல்வதாகக் கூறினாள் நந்தினி. உடையை மாற்றிவிட்டு சிறிதுநேரம் நிஹாரிகாவுக்காகக் காத்திருந்த ரிஷ்வந்த் நேரம் ஆக, சென்று பார்க்க, அங்கு நிஹாரிகா யாருடனோ பேசிக் கொண்டிருப்பது அவனுக்குத் தெரிந்தது. அதுவும் முறைத்தபடி.
‘யாரோட இவ காரசாரமா பேசிட்டு இருக்கா..’ என்று யோசித்தபடியே சென்றவன் அருகில் செல்லச்செல்லத் தான் தெரிந்தது அது ஆத்விக் என்று.
ரிஷ்வந்த் வந்தவுடன் அவனைக் கேலியாக நோக்கிய ஆத்விக், “உங்க வைஃப் பத்திரம் மிஸ்டர் ரிஷ்வந்த்” என்று தனது தலையை லேசாக துடுக்காக அசைத்துச் சொல்ல, அவனை அலட்சியப் பார்வை பார்த்த ரிஷ்வந்த், “நீங்க பத்திரமா இருங்க ஆத்விக்” என்று ரிஷ்வந்த் அவன் முகத்திற்கு நேராகவே கூலாக உரைத்தான்.
ஆனால், ரிஷ்வந்தின் விழிகள் சொன்ன செய்தியே வேறு. என்னவள் மேல் கை வைத்தால், நீ உயிரோடு இருக்க மாட்டாய். உயிரை எடுத்து மண்ணோடு மண்ணாக புதைத்துவிடுவேன் என்று ரிஷ்வந்தின் விழிகள் ஆத்விக்கை அனலைக் கக்கும் பளபளப்புடன் எச்சரித்தது.
கணவனையும் மனைவியையும் உதட்டை வளைத்து நக்கலாகப் பார்த்தவன், “நான் சொன்னது ஞாபகம் இருக்கட்டும்” என்று நிஹாரிகாவிடம் தாடையைத் தடவியபடி சொல்லிவிட்டுக் கிளம்ப, ரிஷ்வந்த் கேள்வியாய் மனையாளைப் பார்க்க அவளோ, அவனின் பார்வை புரிந்தவள், ‘ஒன்றுமில்லை’ என்பது போல தலையை யோசனையுடன் ஆட்டினாள்.
அன்று முழுதும் யோசனையில் இருந்தவளை, அவனும் நச்சரித்து தொல்லை செய்யவில்லை. அவள் அவ்வளவு எளிதில் எதையும் வெளியில் சொல்பவள் இல்லை என்று அவனுக்குத் தெரியாதா என்ன?
ஆனால், அதிலிருந்து ஆத்விக்கை கவனிக்க ஆரம்பித்துவிட்டான் ரிஷ்வந்த். அவனின் ஒவ்வொரு அசைவும் ரிஷ்வந்திற்கு தினமும் வந்து கொண்டே இருந்தது. இடையில் அவன் நிஹாரிகாவுக்கு இருமுறை அழைத்ததும், நிஹாரிகா அவனின் அழைப்பை நிராகரித்ததும், அதை யாரிடமும் சொல்லாமல் நிஹாரிகா அசால்ட்டாக இருந்ததும் என அனைத்தையும் கவனித்துக்கொண்டு தான் இருந்தான் அவளின் கணவன்.
‘ஆனாலும் உனக்கு இவ்வளவு தைரியும் ஆகாதுடி’ என்று மனைவியை மனதுக்குள் திட்டியும் கொண்டான்.
ஆனால், ஒன்று ரிஷ்வந்திற்கு தெரியாமல் போனது. மறுபடியும் ஆத்விக் நிஹாரிகாவை சந்தித்தது. அது தெரிந்திருந்தால் பின்னால் வரவிருக்கும் அனைத்தையும் முன்னமே புரிந்திருக்குமோ என்னமோ!
ஐந்தரை மணிவரை பால்கனியில் நின்றிருந்தவன், சில வீடுகளில் வெளிச்சம் வருவதும், சில வீடுகளில் கதவு திறக்கும் ஓசையையும் உணர்ந்தவன், வீட்டிற்குள் வந்து தண்ணீரை அருந்த வீட்டின் அழைப்பு மணி அடிக்கப்பட்டது.
யோசனையுடன் ரிஷ்வந்த் செல்ல அவனின் அலைபேசிக்கு ஒரு மிஸ்ட் கால் வர புரிந்து கொண்டவன், கதவைத் திறந்தான். உள்ளே வந்த ஒருவன், “ஸார், நீங்க கேட்டது எல்லாமே வாங்கிட்டேன்” என்க, “எல்லாத்தையும் கிட்சன்ல வச்சிட்டு நீங்க கிளம்புங்க” என்றவன் அவரை அனுப்பிவிட்டு தன்னுடைய அறைக்குள் நுழைந்தான்.
எலுமிச்சை பழ நிற நைட்டியில் ஒருக்களித்து படுத்து, கன்னத்திற்கு கை கொடுத்து, உதடுகள் பிரிந்து அவனின் மனையாள் குழந்தையாய் ஆழ்ந்த உறக்கத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்க, அந்த சிறிய பெட்டின் அருகே நடந்து சென்றவன், அதன் ஓரத்தில் அமர்ந்து, நித்திராதேவியின் மடியில் இருப்பவளைக் கண்ணிமைக்காமல் பார்த்தான்.
எப்போதும் எச்சரிக்கை உணர்வுடன் இருப்பவள், இன்று தன்னவனின் அருகாமையில் தன்னை மறந்து, பாதுகாப்பு உணர்வில் தாயின் மடியில் அரவணைப்புடன் உறங்கும் சிறு குழந்தையைப் போல உறங்கிக் கொண்டிருந்தாள்.
ஆசையும், காதலுமாக தன்னவளைப் பார்த்தவன், அவளின் முகத்தின் முன் விழுந்திருந்த சிறிய சிறிய முடிகளை காதோரம் ஒதுக்கிவிட்டு, அவளின் பட்டுக் கன்னத்தை மென்மையாக வருடினான். மனம் நிறைய காதலை சுமப்பவனுக்குத் தெரியும் மனையாளுக்கு தன் மேல் இருக்கும் காதலும், கோபமும். அது இரண்டையுமே அவள் சரியாகக் காட்ட முடியாமல் திண்டாடுவதையும் அவன் அறிவான்.
அவளின் தலையை மிருதுவாகக் கோதியவன், அவளை நெருங்கி வதனம் நோக்கிக் குனிந்தவன், தன் இதழ்கள் குவித்து அவளின் பிறை நெற்றியில் தன் முத்திரையைப் பதிக்க, தூக்கத்தில் புன்னகைத்தவள், திரும்பி நேராகப் படுக்க, அவளின் நைட்டியோ முட்டிவரை ஏறி அவளின் வெண் கட்டிக் கால்களை காளையவனுக்கு வெளிச்சம் போட்டது.
தூங்கிக் கொண்டிருந்தவளை முறைத்தவன் பின் சிரித்துக்கொண்டே, ‘எப்படி தூங்கனும்னு தெரியாமா ஏன்டி நைட்டி எல்லாம் போடற?’ என்று உள்ளுக்குள் சிறிது சிரிப்பும், சிறிது அவஸ்தையுமாக உணர்ந்தவன் அவளின் நைட்டியை கீழே இழுத்துவிட்டு போர்வையை போர்த்திவிட்டு நகர்ந்தான்.
காலை எட்டுமணி போல கண் விழித்த நிஹாரிகா, எழுந்து பல்லை துலக்கிவிட்டு வெளியே வர, சமையல் அறைக்குள் இருந்து, ‘டக்’, ‘டக்’ சத்தம் வந்துகொண்டிருந்தது.
ஆர்வத்துடன் சமையல் அறைக்குள் நுழைந்தவளுக்கு கணவனைப் பார்த்து ஆச்சரியத்தில், விழிகள் சுழலாக விரிந்து சிரிப்புதான் வந்தது. கருப்பு நிற கையில்லாத டி சர்ட்டும், முட்டிவரை இருந்த த்ரீ போர்த்தும் அணிந்திருந்தவன், தோளில் ஒரு பக்கம் ஒரு குட்டி துண்டைப் போட்டுக்கொண்டு வெங்காயத்தை நறுக்கிக் கொண்டிருந்தான்.
சிரிப்பை அடக்கியபடி அங்கிருந்த சுவற்றில் சாய்ந்தபடி நின்றிருந்தவளைக் கண்டவன், “குளிச்சுட்டு வா டி.. இன்னும் டென் மின்ட்ஸ்ல ரெடி ஆகிடும்” என்க, “அதெல்லாம் முடியாது.. அப்புறம் குளிக்கறேன்.. இப்ப பசிக்குது” என்றவள் அவனருகில் சென்று நின்று தன் கண்கள் விரிய அவன் செய்வதை ஆர்வமாய்ப் பார்க்க ஆரம்பித்தாள்.
பளபளத்த பச்சை புதினா மற்றும் சிறிதளவு உப்பை சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்தவன், தோசைக் கல்லை அடுப்பில் வைத்தான்.
கட்டியாய் இருந்த வெண்ணெய்களை கல்லில் வைத்து உருகவிட்டவன், நான்கு பக்கமும் தோலை வெட்டிய பிரட்டை கல்லில் வைத்து, இரு பக்கமும் மணக்க மணக்க வெண்ணெயில் பிரட்டி எடுக்க, கணவன் சமைக்கும் அழகை இடுப்பின் இருபக்கங்களிலும் கை கொடுத்து நின்று பார்த்துக் கொண்டிருந்தாள் நிஹாரிகா. அவன் செய்யும் அழகில் அவளின் சுவை அரும்புகள் தூண்டப்பட்டு, வயிற்றில் அமிலம் சுரக்க ஆரம்பித்தது.
இரண்டு முட்டையை ஸ்டைலாக எடுத்தவன் ஒரு கப்பில் விட்டு உப்பு, நன்கு மிளகை பரபரவென்று தூவி விட்டவன், தோசை கல்லில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய்விட்டு, அதில் முட்டைக் கலவையை வட்டமாக ஊற்றி, அதன் மேல் பிரட்டை முக்கி, பிறகு திருப்பி வைத்தவன், பிரட் துண்டு மீது புதினா மழையைத் தூவி, மீண்டும் வெண்ணெய் சேர்த்து நான்கு பகுதிகளையும் கச்சிதமாக மடக்கி விட்டான்.
நிஹாரிகாவோ வாய் பிளந்து கணவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். சமையல் விஷயத்தில் பூஜ்ஜியமாக இருந்தவளுக்கோ, கணவன் படபடவென்று செய்யும் ஒவ்வொன்றையும் காணக்காண அதில் லயித்தே போனாள்.
சுடச்சுட பிரெட் ஆம்லெட்டை தட்டில் வைத்து பரிமாறி மனைவியிடம் அவன் நீட்ட, தட்டை வாங்கியவள், சமையல் மேடையிலேயே ஏறி உட்கார்ந்தபடி பிரெட் ஆம்லெட்டை எடுத்து வாயில் வைத்தாள். அதன் சுவையை உணர்ந்தவள், ‘நிஹி, உனக்கு கடவுளா பாத்து நல்லா சமைக்க தெரிஞ்ச ஹஸ்பன்டா தந்துட்டான்டி.. இல்ல உன் பாடு திண்டாட்டம் தான்’ என்று மனதுக்குள் நினைத்தவள், பிரெட் ஆம்லெட்டை கபளீகரம் செய்தபடியே தன்னவனைக் கண்டாள்.
அடுப்படியில் நின்றதால் அடிக்கடி வியர்வை முத்துக்கள் அரும்பிக் கொண்டே இருக்க, அவ்வப்போது அதை துண்டால் ஒற்றிக்கொண்டே வேலையை செய்தவன், அடுத்த பிரெட் ஆம்லெட்டை அவளுக்கு வைக்க, “போதும்” என்றவள் அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
மனைவியின் பார்வையை உணர்ந்தவன் முதலில் கண்டும் காணாமல் இருந்தாலும், அவளின் குறுகுறு பார்வை அவனிக்குக் கூச்சத்தைக் கொடுக்க, வெடுக்கென்று நிமிரிந்து அவளைப் பார்த்தவன், “எதுக்கு இப்ப சைட் அடிச்சிட்டு இருக்க?” அவன் தோசைத் திருப்பியை வைத்து மிரட்டியபடி கேட்க, அதற்கெல்லாம் பயந்துவிடுவாளா நம் கதாநாயகி. (இல்ல இல்ல இவ ஹீரோ)
கடைசித் துண்டை எடுத்து வாய்க்குள் அடைத்தவள், “ஸ்ட்ராங்கா டீ வேணும்” என்று வாயில் வைத்துக்கொண்டு பேச முடியாமல் தலையை தூக்கியபடிச் சொல்ல, அவனோ எதுவும் பேசாமல் கல்லில் இருந்த பிரெட் ஆம்லெட்டை தன்னுடைய தட்டில் வைத்துவிட்டு, மனைவி கேட்ட டீயை போட ஆரம்பித்தான்.
அவன் தட்டை எடுத்தவளைப் பார்த்தவன், எதுவும் பேசாமல் டீயைப் போட, அவனின் முன் அவளின் கரம் நீண்டது. அவளுக்குத் தெரியும் தன்னவன் பசி தாங்கமாட்டான் என்று. பிரெட் ஆம்லெட்டை சிறிது துண்டாக எடுத்தவள் தன்னவனுக்கு ஊட்ட கையை நீட்ட, ரிஷ்வந்த் தன்னவளின் கரத்தையும், அவளையும் மாறி மாறிப் பார்க்க, அவனின் எண்ணத்தைப் படித்தவளோ, “பொண்டாட்டியா இல்ல.. பிரண்டா ஊட்டறேன்” என்று சொல்லியவள், அவனின் வாயில் பிரெட் ஆம்லெட்டை திணிக்க, மறுக்காமல் வாங்கிக் கொண்டான் அவளின் ஆருயிர் நண்பன்.
அவள் கேட்ட தேனீரை அவன் போட்டு முடிப்பதற்குள், தன்னவள் ஊட்ட ஊட்ட உண்டு முடித்தவன், தேனீரை இருவருக்கும் ஆவி பறக்க இரு கோப்பையில் ஊற்றினான்.
வரவேற்பறையில் தொலைக்காட்சியை பார்த்தபடி தேனீரை அருந்தி முடித்தவர்கள், சேனலை மாற்ற, “ஆமாஆஆஅ.. நீ யாரையோ கல்யாணம் பண்ணிக்கப் போறதா சொன்னியே.. யாரு அவ?” ரிஷ்வந்திடம் நிஹாரிகா கேட்க, அவனுக்கோ, ‘இப்ப எதுக்கு இத கேக்கறா?’ என்று பக்கென்று இருந்தது.
அவளைப் பார்த்து வழிந்துகொண்டே சிரித்தவன், “சும்மா சொன்னேன்” என்க, ஒன்றைப் புருவத்தை உயர்த்தி தலை சாய்த்து அவனை முறைத்தவள், “என் கிட்டையே நீ கதை சொல்ற? ஆன்ட்டி கூட சொன்னாங்க நீ கல்யாணத்துக்கு ரெடி பண்ண சொன்னேன்னு” நிஹாரிகா அவனை நோக்கி ஊசி போன்ற கூர் பார்வையை வீசியபடிக் கேட்க, ‘ஆத்தாஆ கவுத்துட்டியே’ என்று நினைத்தவன் அவளிடம் பம்மியபடியே உண்மையைக் கூறி ஆரம்பித்தான்.
“ஆக்சுவலா.. அருண் நம்ம படத்துக்கு அப்ரோச் பண்ணப்ப நான் சரின்னு சொன்னதுக்கு முதல் ரீசன் உனக்காக மட்டும் தான்.. உன் கூடவே இருக்க எனக்கு ஒரு சான்ஸ்..” ரிஷ்வந்த் சொல்ல நிஹாரிகா தலையை வேறொரு பக்கம் திருப்பினாள்.
புன்னகைத்தபடியே தன் ஆளகாட்டி விரலால் அவளின் நாடியைத் திருப்பியவன், “இந்த டைம் உன்னை மிஸ் பண்ணக் கூடாதுன்னு நினைச்சேன்டி.. ஆனா, உன்னை அர்ஜூன் ஸார் ப்ரொடக்சன்ல பாத்தப்ப, நீ என்னை யாருன்னே தெரியாத மாதிரி நடந்துக்கிட்ட. அதுதான் ரொம்ப கடுப்பு ஆச்சு. இந்தப் படம் முடியறதுக்குள்ள உன்னை கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்திடணும்னு நினைச்சேன். ஆனா, நீதான் ஓவரா பேசுனே. சரி சரி முறைக்காத.. நானும் பேசுனேன். அதான் உன்னை பொசசிவ் பண்ண வேற பொண்ணை கல்யாணம் பண்ண போறேன்னு சொன்னேன். அன்ட் நீ கல்யாணத்துக்கு ஒத்துக்கலனாலும் உன்ன..” என்று நிறுத்தியவன், அவளைத் தயக்கமாகப் பார்க்க, அவளோ அழுத்தமாக அவனை கவனித்துக் கொண்டிருந்தாள்.
ஷோபாவில் ஒருகளித்து சாய்ந்து அமர்ந்து கைகளை கட்டியவள், “என்ன கடத்தீட்டு போய் கல்யாணம் பண்ணி இருப்பியா? இல்ல ரேப் பண்ணி இருப்பியா?” நிஹாரிகா அவனை நேராக நோக்கி, கேள்வியை வீச அவளின் கேள்வியில் அவனுக்கும் கோபம் ஏறியது.
இருந்தும் அதை முகத்தில் காட்டாமல் கால் மேல் காலிட்டு அவளைப் பார்த்தபடி ஷோபாவில் சாய்ந்து ஒருகளித்து நிமிர்ந்து அமர்ந்தவன், “நோ, உன்னை வேற எவனும் நெருங்க விட்டிருக்கமாட்டேன். அதாவது வேற எவனையும் உன் கழுத்துல தாலிகட்ட விட்டிருக்க மாட்டேன்” என்ற அவனின் குரலில் இருந்த தீவிரத்தை நிஹாரிகாவால் உணர முடிந்தது. குரூர எண்ணம் தான். ஆனால், அவனுக்கு அது தவறாகத் தோன்றவில்லை.
“கொஞ்சம் வில்லத்தனமாதான் இருக்கும். உன்னை வேற ஒருத்தனுக்கு விட்டுத்தர அளவுக்கு நான் மடையன் இல்லை. ஆனா, உன்னை அடையனும்னு நான் தூக்கிட்டு போகவோ, இல்ல பலவந்தப்படுத்தவோ கண்டிப்பா பண்ணியிருக்க மாட்டேன். எதுலையும் நாமளா எடுத்துக்கிறதுக்கும், நமக்கு ஒருத்தங்க வந்து தர்றதுக்கும் வித்தியாசம் இருக்கு” என்றான். அவனின் முகமும், விழிகளும் அதை உணர்த்தும் செய்தியில் அத்தனை அழுத்தம் இருந்தது.
‘இப்ப நான் என்ன கேட்டுட்டேன்னு இப்படி நெருப்புக் கோழி மாதிரி உக்காந்திருக்கான்’ என்று நினைத்தவள் பேச்சை மாற்றும் பொருட்டு, கூலாக, “லன்ச் என்ன செய்யறே?” என்று வினவ, ரிஷ்வந்திற்கு வந்ததே ஒரு எரிச்சல்.
அவளை சுட்டெரிக்கும் சூரியனைப் போல பார்வையால் பொசுக்கியவன், அவளின் நக்கல் புரிந்து, கோபத்தைக் கட்டுக்குள் வைத்து, “தயிர் சாதம், தக்காளி சாதம், முட்டைப் பொடிமாஸ், உருளை கிழங்கு வறுவல்” ரிஷ்வந்த் பல்லைக் கடித்துக் கொண்டே சொல்ல, அவன் சொல்வதைப் பார்த்து சிரிப்பு வந்தவளுக்கு, கூடவே அவன் சொன்ன பதார்த்தங்களைக் கேட்டு, ‘ப்பா! செம காம்பினேஷனா இருக்கே’ என்று நினைத்தவள், “குட்” என்று அவன் தலையை கலைத்துவிட்டு நகர்ந்தாள்.
அவள் செல்வதையே பார்த்திருந்தவன், நைட்டியில் இருந்தவளின் பின்னழகை உச்சி முதல் பாதம் வரை கண்களால் ரசித்துக் கொய்ய, தன் உள்ளுணர்வுகள் மூலையில் அடித்த எச்சரிக்கை மணியில் விருட்டென திரும்பிய நிஹாரிகா, அவனின் விழிகளில் வழிந்த குறும்பையும், மோகத்தையும் கண்டு, “இன்னிக்கு நம்ம இரண்டு பேரும் பிரண்ட்ஸ்.. அதை மறந்திடாத” என்றவள் உதட்டைச் சுளித்துக்கொண்டு அறைக்குள் நுழைய, ‘ஆமா.. பொண்டாட்டியா இருந்தா மட்டும் பக்கத்துல விட்டிருவா இவ.. இந்த பேச்சு ஹேருக்கு ஒண்ணும் குறைச்சல இல்ல’ என்று நினைத்தவன் தன் வேலையைப் பார்க்க எழுந்தான்.
முதலில் அரிசியை ஊற வைத்தவன், ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், இஞ்சி பூண்டு விழுது, சோம்புத் தூள், பச்சை மிளகாய் என அனைத்தையும் போட்டு மணக்க மணக்கத் தாளித்தவன், அதில் நறுக்கிய வெங்காயம், செக்கச் சிவந்த தக்காளியை போட்டு நன்கு வதக்கி, சிறிது நேரம் கழித்து தூள்களை பரபரவென்று தூவி, அடுத்து கொத்தமல்லி மற்றும் புதினாவை போட்டு வதக்கியவன், கழுவி வைத்த அரிசியை அத்துடன் சேர்த்து கிளறிவிட்டு, அதில் தண்ணீரை ஊற்றி உப்பு சேர்த்து குக்கரை மூடினான்.
ஒரு பாத்திரத்தில் சூடான சாதத்தை போட்டு அதனுடன் உப்பு, வெண்ணெய், பெருங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் விழுது, தயிர், மற்றும் கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை ஆகியவற்றைச் சேர்த்தவன், கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடனாதும் கடுகு, மிளகாய், முந்திரி, திராட்சை ஆகியவற்றை போட்டு நன்கு சிவக்க சிவக்க தாளித்து, கலந்து வைத்துள்ள தயிர் சாதத்தில் கலந்தவன் அதன் மேலே இரண்டு கரண்டி மாதுளை முத்துக்களை கலந்து வைக்க, குக்கர் மூன்று விசிலை முடித்திருந்தது.
அதை அணைத்தவன் அடுத்து முட்டைப் பொரியலுக்கும், உருளை கிழங்கு வறுவலுக்கும் தயாராக அதற்கு மேல் நிஹாரிகாவால் முடியவில்லை. வாசனை வேறு அவளது நாசியை தீண்டி சீண்டிக் கொண்டே இருக்க, சமையல் அறையை எட்டிப் பார்த்தவள், “ஏதாவது ஹெல்ப் வேணுமா?” என்று கேட்டவளை ஒரு கரத்தை சமையல் மேடையில் வைத்து ஊன்றிக்கொண்டு மற்றொரு கரத்தை இடுப்பிற்கு கொடுத்து, “எது எல்லாம் செஞ்சு முடிச்ச அப்புறமா?” என்றவனைக் கண்டு முணுமுணுத்துக் கொண்டே அவள் செல்ல, அடுத்த அரைமணி நேரத்தில் சமைத்து முடித்தவன் குளித்துமுடித்து வந்து, அனைத்தையும் கொணர்ந்து வரவேற்பறையில் வைக்க, குளித்து முடித்து வந்த நிஹாரிகாவும், மூச்சை நன்கு இழுத்து வாசைனையைப் பிடித்தாள்.
“நாட் பேட்” என்றாள் அனைத்தையும் வாயில் எடுத்து ஒவ்வொரு வாயாக வைத்து ருசி பார்த்தபடி.
எப்போதும் உண்ணும் அளவைவிட வயிறு நிறைய நிறைய உண்டவள், “ஏப்ப்ப்” என்று ஏப்பத்தைவிட, சாப்பிட்டுக் கொண்டிருந்த ரிஷ்வந்தோ, “நாட் பேட்னு சொல்லிட்டு அத்தனையும் காலி பண்ணிட்ட போல” என்று கேலி செய்ய, தோளைக் குலுக்கியவள் கை கழுவிவிட்டு வந்து ஷோபாவில் அமர்ந்து, டிவியைப் பார்க்க, அவளைத் தொடர்ந்து சாப்பிட்டு முடித்துவிட்டு வந்த ரிஷ்வந்தும் அவளின் மடியில் தலை வைத்து ஷோபாவில் கால் நீட்டிப் படுக்க, “ம்கூம்.. என்ன இது?” என்று வினவினாள்.
“பிரண்டா தான் தலை வச்சிருக்கேன்” என்றவன் கண்களை மூட, மறுபேச்சு பேசிய வாயிலேயே அடிக்க வேண்டும் என்று நினைத்தவளுக்கு, நன்கு ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றவனை எழுப்ப மனமில்லை. அவன் தூங்கிய பின் டிவியை அணைத்து, தன்னவனின் தலையைக் கோதிவிட்டவள், “எந்த பிரண்ட் மடில படுப்பான்.. சரியான கேடி பைய” என்று நினைத்தவள் அவன் சிகைக்குள் விரல்களை வைத்தபடியே தன்னையறியாமல் உறங்கிப் போனாள். இரவு சரியாக உறங்காததால் இருவரின் விழிகளையும் தூக்கம் வந்து பசை போல ஒட்டிக்கொண்டது.
“ரிஷ்வந்த், என்ன ப்ளான்?” நிஹாரிகா வினவினாள்.
மாலை விழித்தவளிடம் ரிஷ்வந்த், “மிட் நைட் ஔட் போகலாமா?” என்று வினவ, அவளின் கண்கள் குஷியிலும் ஆர்வத்திலும் மின்ன, “நிஜமாவா?” என்று கேட்டாள்.
ஏனெனில், இம்மாதிரி இருப்பவர்களுக்கு வெளியில் சுற்றுவது அதுவும் தங்கள் துணையுடன் சுற்றுவது என்பது குதிரைக் கொம்பு தான். எந்தவளவு புகழ் ஒருவரை உயரத்திற்கு அழைத்துச் செல்கிறதோ அதே அளவுக்கு அவர்களின் சுதந்திரத்தையும், தனிப்பட்ட வாழ்க்கையையும் சீண்டுகிறது. வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும் பொழுதே அவர்களுக்கு தேவையான சுதந்திரம் கிட்டுகிறது.
அதுவும் நிஹாரிகா வெளியே சென்று சுற்றுவது எல்லாம் ரிஷ்வந்தை பிரிந்திருந்த காலங்களில் நடந்ததே இல்லை. ரிஷ்வந்தும் அப்படியே.
அப்படியிருக்க கணவன் கேட்டதில் சிறு குழந்தை போல தலையை ஆட்டிக் கேட்டவளைக் கண்டு அவனின் காதல் பொங்கும் இதயம் உருகியது.
ரிஷ்வந்த், “ஆமா, போறோம். நைட் லெவன் தெர்ட்டி டூ த்ரீ” என்றிருக்க, ரிஷ்வந்த் கொடுத்த சாதாரண வெள்ளை லெகின்ஸ் மற்றும் மெரூன் குர்தாவுக்கு மாறியவள், “ரிஷ்வந்த் என்ன ப்ளான்?” என்று வினவினாள்.
ஒரு மாஸ்க்கை, தொப்பியையும் எடுத்து அவளிடம் நீட்டியவன், அவள் அணிந்ததும், அவன் நினைத்திருந்த ப்ளானை சொல்ல, தைரியலஷ்மியான நிஹாரிகாவே தன்னவன் சொன்னதில், “வாட்” என்று அதிர, அவளின் பதறிய குரல் அந்த அறை எங்கும் தெறித்து எதிரொலித்தது.
(ரொமான்ஸ் வப்பேன்னு நினைச்சீங்களா😈.. வேணும்னே தான் வைக்கல😆.. ஸூ யூ ஆல் இன் நெக்ஸ்ட் எபி)