நிஹாரி-28

IMG-20211003-WA0016-4673931b

நிஹாரி-28

‘பளார்’ என்ற ஒலி அந்த வரவேற்பறை முழுதும் எதிரொலிக்க, கன்னத்தைப் பொத்தியபடி ஷோபாவில் விழுந்தாள் நிஹாரிகா. சத்தத்தில் வெளியே வந்த சந்திராமா, முதலில் நிஹாரிகாவைக் கண்டு பதறியவராக, அருகில் வர எத்தனிக்க, அங்கு கோபத்தில் முகம் சிவப்பேறி கண்களில் ரௌத்திரத்தோடு நின்ற சக்ரவர்த்தியைக் கண்டு அவரின் கால்கள் அதற்கு மேல் ஒரு அடி எடுத்து வைக்கவில்லை.

பல வருடங்களுக்குப் பிறகு சக்கரவர்த்தியைக் கோபமாகப் பார்க்கிறார் அவர். ஆனால், இது அதிர்ச்சியின் உச்சம் சந்திராமாவிற்கு.

‘பங்காரம்’, ‘பங்காரம்’ என்று வார்த்தைக்கு வார்த்தை பாசத்தையும் அன்பையும் மட்டுமே காட்டும் சக்கரவர்த்தி, பேத்தியைக் கை நீட்டி அறைந்தார் என்றால் ஒருவர் நம்பமாட்டார். அவர் அறைந்த சத்தம் சமையலறையில் இருந்த சந்திராமாவையே எட்டியிருக்க, நிஹாரிகாவிற்கோ அறை வாங்கியதில் கன்னம் இரண்டாகி விட்டதுபோல வலி.

அறைந்த அறையில் ஷோபாவில் விழுந்தவள் தன்னை தனது தாத்தையா தான் அறைந்திருக்கிறாரா என்று நிமிர்ந்து பார்க்க, சக்கரவர்த்தி ருத்ரமூர்த்தியாக மாறி நிற்பதைக் கண்ட நிஹாரிகாவுக்கு, ஒரு நொடி கை கால்கள் எல்லாம் பயத்தில் உறைந்தன. இப்படி ஒரு முகத்தை அவரிடம் அவள் கண்டதே இல்லை. அவள் கண்ட முகம் அவரின் கனிவான முகம் மட்டுமே.

பயத்திலும், தனது தாத்தையா தன்னை கை நீட்டி அடித்திருக்க, அதில் ஏற்பட்ட மனவலியும் சேர்ந்து, “தா.. தாத்தையா” இயலாமையோடு அவள் அழைக்க, “ஷ்!” என்று அவர் உதட்டில் விரல் வைத்து எச்சரித்ததில், நிஹாரிகாவின் குரல் அதற்குமேல் வெளியே வரவில்லை. கண்கள் மட்டும் யாரின் அனுமதியும் பெறாமல் குளமாகக் கட்டி நிற்கத் தொடங்கியது.

தந்தை மகளை அடித்ததில் அதிர்ச்சியின் சிகரத்தைத் தொட்டு மீண்ட விவாஹா, “அப்பா!” என்று கோபத்தோடும், இயலாமையோடும் அழைக்க, “அதேதான் உனக்கும்” சக்கரவர்த்தி தனது சிம்மக்குரலில் வீடே அதிர, மகளை வாயில் விரலை வைத்து அதட்டி எச்சரிக்க, தந்தையின் அதட்டலிலும், கர்ஜனையிலும் விவாஹாவும் அவரின் கோபத்தை நன்கு அறிந்தவராய் வாயைத் திறக்கவில்லை. அவருக்கும் கண்ணீர் வழியத் தொடங்கியது.

மகாதேவனோ, மகள் அழுவது ஒருபுறம், விவாஹா அழுவது ஒருபுறம், சக்கரவர்த்தியின் கோபம் ஒருபுறம் என்றாலும், நிஹாரிகா பேசிய பேச்சை அவராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தங்களைப் பற்றி இவ்வாறு கேவலமாக நினைத்திருந்தாளா மகள் என்று உள்ளுக்குள் உடைந்து போனார் அவர். அவள் அவரின் உயிர்நீரில் உருவான குழந்தை இல்லை என்றாலும், அவளை என்றுமே மகாதேவன் பிரித்துப் பார்த்தது இல்லையே. தன் மகளாகவே தான் அவளை நினைத்திருந்தார் அவர்.

‘இந்த நேரத்தில் ரிஷ்வந்தும் இங்கு இல்லையே.. இருந்திருந்தால் அவளை இவ்வாறு அவன் பேசவிட்டிருக்க மாட்டான். அடிவாங்கவும் விட்டிருக்கமாட்டான்’ என்று மகாதேவனுக்குத் தெரியும்.

“தாத்தையா..” என்று கரகரத்த குரலோடு, குளம் கட்டிய கண்ணீர் கன்னங்களில் வழிய, தன்னை அழைத்த பேத்தியைக் கண்ட சக்கரவர்த்தி எதுவும் பேசவில்லை. அவர் பார்வையே சொல்லியது நிஹாரிகாவுக்கு அவரின் கோபத்தின் அளவை.

நிஹாரிகாவோ அதற்குமேல் எதுவும் பேசவில்லை. அவரின் பார்வையில் இருந்த குற்றச்சாட்டைத் தாங்க இயலாமல் வேதனையில் துடிதுடித்துப் போனாள் பேதைப் பெண்.

“நிஹாரிகா!” சக்கரவர்த்தி பெயர் சொல்லி அதிகாரத்துடன் அழைக்க, அவரின், ‘நிஹாரிகா’ என்ற அழைப்பே நிஹாரிகாவுக்கு அத்தனை வலியைக் கொடுத்தது.

தயங்கித் தயங்கி அவரை அவள் நிமிர்ந்து பார்க்க, “கம் இன்சைட்” என்று கட்டளையிட்டவர் ஆபிஸ் அறையை, ஆள்காட்டி விரலால் சுட்டிக்காட்டிவிட்டு உள்ளே செல்ல, நிஹாரிகா யாரின் முகத்தையும் பார்க்கமுடியாமல் தலைகுனிந்தபடியே எழுந்தாள்.

அவள் தலைகுனிந்து, ஈர விழிகளோடு செல்வதைப் பார்த்த மூவருக்குமே மனதில் பயம் கவ்விக்கொண்டது. கதவின் அருகே சென்றவள், கதவைத் திறக்க, “லாக் தி டோர்” என்றார் சக்கரவர்த்தி ஆணையாக. அத்தனை கடினம் அவரது குரலில். பேத்தி பிறந்ததில் இருந்து காட்டாத கடுமையை இப்போது மொத்தமாகச் சேர்த்து வைத்துக் காட்டிக் கொண்டிருந்தார் அவர். ஆனால், பேத்திதான் அதில் மருண்டு போனாள். எங்கே தன் தாத்தையா தன்னை வெறுத்துவிட்டாரோ என்று எண்ணி.

உள்ளே நுழைந்தவள் வரவேற்பறையில், ‘அடுத்து என்ன நடக்குமோ?’ என்று பயத்தோடு நின்றிருந்த மூவரையும் பார்த்தபடியே கதவை அடைத்தாள்.

சந்திராமா அங்கு சத்தம் கேட்டு வந்த இருவேலையாட்களைப் பார்த்து, “என்ன வேலை எதுவும் இல்லியா?” என்று குரலை உயர்த்தி அதட்ட, அவர்கள் வெளியே ஓடிவிட்டனர்.

“சந்திராமா..” என்று கண்ணீரோடு அழைத்த விவாஹா, விசும்பியபடி பிடிமானம் இன்றி ஷோபாவில் விழப்போக, மனைவியை எப்போதும் வாழ்வில் தாங்குவது போலத் தாங்கினார் மகாதேவன்.

அவரின் நிலையைக் கண்டு பதறிய சந்திராமா தண்ணீரை எடுத்துக் கொண்டு ஓடிவர, பாட்டிலை கையில் வாங்கிய மகாதேவன், விவாஹாவின் முகத்தில் அவர் மயக்கத்திற்குச் செல்லாமல் இருக்க தண்ணீரை அடித்தார். சந்திராமாவோ விவாஹாவின் கன்னத்தைத் தட்ட, அதில் கண்கள் சொருகுவதைப் போலிருந்தவர் சுயநினைவிற்கு வந்தார்.

“தண்ணி கொஞ்சம் குடி விவாஹா” மகாதேவன் கண்கள் கலங்கியபடிச் சொல்ல, அவரோ கணவரின் கண்களைப் பார்த்து தானும் கண் கலங்கினார்.

சந்திராமா அங்கிருந்து நகரப்பார்க்க, “நீங்க இருங்க சந்திராமா.. பரவாயில்லை” என்றார் விவாஹா.

கணவரின் கையைப்பற்றிய விவாஹா, “நீங்க ஏங்க அழறீங்க?” என்று அவரின் கரத்தைப் பற்றி வேதனை நிரம்பிய குரலில் வினவ, “நம்மள இவ்வளவு..” என்று சொல்ல வந்தவருக்கு வார்த்தைகள் வெளிவரவில்லை. ‘நம்மள இவ்வளவு கேவலமா நம்ம பொண்ணு நினைச்சுட்டாளே’ என்று வர இருந்தது அவரின் வாயில் இருந்து.

ஒரு காலத்தில் முன்னணி நடிகர்ளுள் கம்பீரமாக வலம் வந்த தேவின் கண்களில் இருந்து கண்ணீர் வழிய, கணவரின் கண்ணீரைத் துடைத்துவிட்டு, “ஸாரி” என்றார் விவாஹா கண்ணீர் வழிய.

“ச்ச! கோபம்லாம் இல்லடா.. ஆனா, இதெல்லாம் முன்னாடியே தெரிஞ்சிருந்தா சரி பண்ணியிருக்கலாம்” என்றார் மனைவியின் கண்களைத் துடைத்துவிட்டபடியே.

இருவரின் சம்பாஷனைகளைக் கண்ட சந்திராமாவிற்கு முதல் முறையாக நிஹாரிகாவின் மேல் சிறிதுகோபம் எட்டிப் பார்த்தது. ‘எதுக்கு இந்தப் புள்ளைக்கு இத்தனை வீம்பு’ என்று நினைத்தவருக்கு, சற்று நேரத்திற்கு முன் அவள் கத்திய அனைத்தும் கேட்டது.

***

இருவரும் சென்னை சென்றுவிட்டு வந்து நான்கு மாதங்கள் ஆகியிருக்க, இருவரின் நிலையுமே சிறிது மாறியிருந்தது. அன்றிலிருந்து முன்னதாக இருந்த பேச்சுக்களுமே இருவருக்கும் சிறிது குறைந்து போனது. ரிஷ்வந்தும் நிஹாரிகாவை அவளின் போக்கில் விட்டுப்பிடிக்க நினைத்தான்.

படப்பிடிப்பு வேறு சுறுசுறுப்பாக நடக்கத் துவங்க, இருவருக்கும் பேசுவது கூட அரிதாகிப்போனது. காலை செல்பவர்கள் இரவு ஒரு மணிக்கே வீடு திரும்பினர். சில நாட்கள் ரிஷ்வந்த் காலை ஐந்து மணிக்கு ஓடும் நிலையும் வந்தது. அவ்வளவு தீவரமாக அருண் முயற்சியில் இறங்கியிருந்தான். நான்கு மொழிகளிலும் படம் வெளியாகப் போவதால், அனைவரும் படு பிசியாக தங்களை படத்திற்குள் இணைத்துக் கொண்டனர்.

அப்படி இருந்த சமயத்தில் தான் படக்குழு, ஒரு காட்சிக்காக வெளிநாடு சென்றிருந்தனர். ரிஷ்வந்த், அருண், நவ்தீப், நவ்யா, அனன்யா மற்றும் படக்குழுவினர் அனைவரும் சென்றிருக்க, நிஹாரிகா ஓய்வின் காரணமாக வரவில்லை என்று தன் வேலையையும் நவ்தீப்பிடம் கொடுத்துவிட்டாள்.

சரியாகப் பேசவில்லை என்றாலும் தன்னுடனே இருந்தவன் இன்றுடன் சென்று ஒருவாரம் ஆகியிருக்க, அவனின் பிரிவில் வாடிக் கொண்டிருந்தவளுக்கு எரிச்சல் மண்டயது தன்னை நினைத்தே. ‘ஏன்டி நீயே அவனை ஒதுக்கறே.. அவன் இல்லைனாலும் உக்காந்து சோக மியூசிக் வாசிச்சிட்டு இருக்க? என்ன டிசைன்டி நீ’ என்று அவளின் ஈகோ பிடித்த மூளை அவளிடம் வாக்குவாதம் செய்யத் துவங்க நிஹாரிகாவின் மனம் இப்போது கோபத்தின் எல்லையைத் தாண்டியது.

‘நீ கொஞ்சம் சும்மா இருக்கியா.. உன் பேச்சைக் கேட்டுக் கேட்டு தான் இந்த நிலை’ நிஹாரிகாவின் மனம் உறும, அவளின் மூளையோ ஒளிந்து பம்மிக் கொண்டது.

அது போதாது என்று நேற்று இரவு அவள் சென்று வந்த இடத்தில் ஒரு புதிய பிரச்சனை. பழைய பிரச்சனை தான் என்றாலும் அதை மேலும் கீறிவிட்டது சிலரின் பேச்சுக்கள். அதில் இன்னும் அவளின் ஆறாத ரணத்தில் இரத்தம் பீறிட்டு வழிந்தது.

“ஹேய், நிஹாரிகா. இப்ப உன் பேரன்ட்ஸ் உன்கூட தான் இருக்காங்களாமே.. இஸ் தட் ட்ரூ.. பட் உன் அப்பா இல்லாம உன் அம்மாவோட கள்ளக்காதலன் தானே இருக்கான் அங்க” நிஹாரிகாவுடன் பள்ளியில் படித்த ஒருத்திக் கேட்டாள். பள்ளியில் இருந்தே நிஹாரிகாவின் மீது பொறாமை பிடித்துத் திரியும் நரிகளுக்குள் இவளும் ஒருத்தி. இவளைப் போன்ற பல பேரின் சொற்களைத் தாங்க முடியாமல் தான் இரண்டுங்கெட்டான் வயதில் நிஹாரிகா சென்னை ஓடி வந்து படித்தது.

இப்போது நிஹாரிகாவின் திருமணம் அனைத்து மாநிலங்களும் பேசும் அளவிற்கு பிரம்மாண்டமான முறையில் முடிந்து, தன்னவன் அருகாமையில் இருப்பதால் என்னவோ அவள் அனிச்சம் வதனம் இன்னும் பிரகாசமாக மெருகேறியிருக்க, அதைக் கண்டவளால் தனக்குப் பின்பக்கம் பற்றி எரிந்ததை கட்டுப்படுத்த முடியவில்லை.

நிஹாரிகாவை அப்போது போல் அழ வைக்கவேண்டும் என்று வன்மமாக நினைத்தவள், நிஹாரிகாவைக் குத்திக் கிழிக்க நினைத்துச் செல்ல, விதி(நிஹாரிகா) யாரைவிட்டது என்று சிரித்தது அவளின் தலையெழுத்து. நேராகச் சென்றவள் ஏளனத்துடன் பழைய நிஹாரிகா என்று கேட்டுவிட, அவளின் கேள்வியில் அசராமல் நின்ற நிஹாரிகா கண்களை ஊசி போன்று கூர்மையாக்கி, இதழோரம் புன்னையைப் படரவிட, அருகிலிருந்த நந்தினிக்கோ பகீரென்று இருந்தது.

அடுத்த நொடி ‘பளார்’ என்ற சத்தத்தில் கண்களை நந்தினி மூடிக்கொள்ள, நிஹாரிகாவின் அறையில் வந்தவளின் கன்னம் கன்றிவிட்டது. அங்கு போடப்பட்டிருந்த டிஜெவும், ஓரத்தில் நிஹாரிகா நின்றிருந்ததால் யாரும் பார்க்கவில்லை. ஒரு சிலரைத் தவிர. பார்த்தவர்களும் அவளின் வாயைப்பற்றி அறிந்ததால் அவளுக்குத் தேவை தான் என்று தோள்களைக் குலுக்கிக்கொண்டு நகர்ந்துவிட்டனர்.

அவளிடம் பொறுமையைக் காத்து வீடுவந்து சேர்ந்தவளுக்கு, மனம் உலைக்கலாமாய் கொப்பளித்துக் கொதிக்க ஆரம்பித்தது. என்ன முயன்றும் ஆறவில்லை. அதே கோபத்தோடு இரவு உறங்கி எழுந்தவளுக்கும் மனம் அப்போதும் தனிந்த பாடில்லை.

அதே கோபத்தோடு கீழே வந்தவளுக்கு அதில் தூபம் போடும் விதமாய் நடந்தது சக்கரவர்த்தி பேசியது.

“மாமா, மாப்ள(ரிஷ்வந்த்) வந்ததுக்கு அப்புறம் அவங்கள வர சொல்லிட்டேன்” என்றிட, “சரி மாப்ள” என்றார் சக்கரவர்த்தி. சந்திராமா சமையல் அறைக்குள் இருக்க, விவாஹா டைனிங் ஹாலில் காலை உணவிற்கு அனைத்தையும் அடுக்கிக் கொண்டிருந்தார்.

நிஹாரிகா, ‘இவங்க என்ன பேசறாங்க’ என்று யோசித்துக் கொண்டிருக்க, “பங்காரம்! ரிஷ்வந்த் எப்ப வராரு. வந்த அப்புறம் சொல்லு. நம்ம பேமிலி ஃபோட்டோ நம்ம வீட்டுக்கு முன்னாடி எடுத்துக்கலாம்” என்றார் செய்தித் தாள்களை புரட்டியபடி.

“அப்பா! அப்படியே மாப்ளையோட அப்பா அம்மாக்கு சொல்லனும் நாம” என்று விவாஹா தந்தையிடம் கூறியபடியே ஹாலுக்கு வர, நிஹாரிகாவுக்கு அடக்கி வைத்திருந்த கோபம் அனைத்தும் கரை புரண்டு, சுனாமியாய் அனைவரின் மகிழ்ச்சியையும் உள்வாங்கிக் கொள்ளும் அளவுக்கு வீரிட்டு எழுந்தது.

அதுவரை அமைதியாய் இருந்தவள், “பேமிலி போட்டோவா? அப்படின்னா உங்களுக்கு என்னனு தெரியுமா?” என்று எள்ளலுடன் கேட்க, அனைவரும் அதிர்ந்து அவளைப் பார்த்தனர். நீண்ட வருடங்களுக்குப் பிறகு அன்னையிடம் பேசியிருக்கிறாள் அவள். ஆனால், பேசிய வார்த்தைகளோ சாதரணமானது அல்லவே?

“நிஹாரிகா!” மகாதேவன் விவாஹாவைச் சொல்லியதில் சிறிது அதட்டல் போட்டார் மகளை. மனைவி துவண்டு துடிப்பதை அவர் மற்றொரு முறை பார்க்கத் தயாராக இல்லை. மீண்டும் துடிக்கும் சக்தியும் மனைவிக்கு இல்லை என்பதை நன்கு அறிவார்.

மகாதேவன் குரலில் திரும்பியவள், “நீங்க யாரு எனக்கு?” என்று நிதானமாகக் கேட்க, சக்கரவர்த்தியோ பேத்தி பேசுவதைக் கண்டு சிலையாகிக் கொண்டிருந்தார்.

என்னதான் கோபம் இருந்தாலும், வருத்தம் இருந்தாலும் பேத்தி இவ்வாறு பேசுபவள் அல்ல என்று அவருக்கு நன்கு தெரியும். அதனால் பேத்தி எடுத்தெறிந்து மரியாதை இன்றி, பேசுவதைப் பார்த்தவர் பேத்தியை அடக்க முன் வர விவாஹா முந்திக் கொண்டார்.

நிஹாரிகா கேட்ட கேள்வியில் மகாதேவனின் முகம் கறுத்துவிட, தனக்காக தன் மேல் வைத்திருந்த காதலுக்காக, தியாகங்கள் செய்த மனிதனை மகள் பேசியது பொறுக்காமல் விவாஹா, “நிஹாரிகா!” என்று அதட்டினார். முதல் முறையாக மகளை அதட்டுகிறார் அவர்.

அன்னையின் அதட்டலில் தோளைக் குலுக்கியவள், “ஆமா நிஹாரிகா தான்” என்று முட்டிக்காலில் இரு கைகளையும் வைத்து எழுந்தவள், “உங்களை ஒரு கேள்வி கேட்டேன்.. பேமிலி போட்டோனா என்னன்னு?” மீண்டும் நிஹாரிகா விவாஹாவின் இதயத்தைக் குத்தி ரணமாக்க, மகாதேவனும், சக்கரவர்த்தியும் எழுந்தனர்.

“பங்காரம்! காலைல என்ன இது.. வா வந்து சாப்பிடு” பேத்தியின் மேல் கோபம் எழுந்தாலும், அதைக் காட்ட முடியாமல் அவளின் மேல் இருந்த பாசம் தடுக்க, சக்கரவர்த்தி அவளை அங்கிருந்து அப்புறப்படுத்த எண்ணினார்.

“தாத்தையா! எனக்கு இன்னிக்கு தான் நிறைய கேக்க தோனியிருக்கு. நீங்க இருங்க. நான் இப்ப கேட்டு ஆகணும்” என்றவள் அன்னையிடம் திரும்பி, ஆழமான பார்வை பார்த்து, “சொல்லுங்க மிஸஸ்.மகாதேவன். ஃபேமிலி போட்டோக்கு அர்த்தம் தெரியுமா?” மீண்டும் கேட்க, விவாஹாவோ மகளின் கேள்விக்கான அர்த்தம் புரிந்து ஸ்தம்பித்து நின்றார்.

“பங்காரம்” மீண்டும் சக்கரவர்த்தி பேச வர, “நீங்க இருங்க மாமா.. இன்னிக்கு பேசிடலாம். மிஸஸ்.ரிஷ்வந்த் கேக்கறதுக்கு என்னோட மனைவி பதில் சொல்லட்டும்” என்று நிஹாரிகாவின் மேலிருந்த பார்வையை அகற்றாமல் மகாதேவன் ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்தமாக மாமனாரிடம் உச்சரித்தார்.

சமையல் அறைக்குள் இருந்த சந்திராமா கடவுளிடம் யார் மனமும் நோகக்கூடாது என்று கைகளை நெஞ்சில் கோர்த்து வைத்தபடி வேண்டிக் கொண்டிருந்தார்.

அது கடவுளின் செவியில் விழுந்தாலும், அவர் அதைக் கண்டு கொள்வதாய் இல்லை என்பதை அவருக்கு யார் சொல்லிப் புரிய வைப்பது.

நிஹாரிகா விவாஹாவையே அழுத்தமாகப் பார்த்திருக்க, “தெ.. தெரியும்” என்றார் விவாஹா.

“ஹோ அப்படியா?” நக்கல் தொக்கி நிற்க கேட்ட நிஹாரிகா, “அதாவது நான் கேட்டது புருஷன், பொண்டாட்டி, புள்ளைன்னு இருக்க போட்டோ.. கள்ளக் காதலன் கூட எடுக்கிற போட்டோ பேமிலி போட்டோ ஆகாது” என்று வார்த்தைகளில் விஷம் தடவி, நிஹாரிகாவின் நாவு கக்க, அதுவரை பொறுமையாக இருந்த சக்கரவர்த்தி, “நிஹி!” என்று கத்தினார்.

“தாத்தையா! நான் பட்ட அவமானத்துக்கு கேள்வி கேட்டுட்டு இருக்கேன்” என்று விவாஹாவைப் பார்த்தபடியே தாத்தையாவுக்கு பதில் சொன்னவளுக்கு, அப்போதும் மனம் அடங்காமல் அனைத்தையும் கொட்ட ஆரம்பித்தாள்.

“இல்லன்னு மட்டும் சொல்லிடாதீங்க. நானே பாத்தனே. அப்பா இருந்த அந்த நிலைமைல நீங்க இவரை கட்டிப் பிடிச்சிட்டு நின்னதை. ச்சி.. அப்பாக்கிட்ட நீங்க சொன்ன வார்த்தை” என்று நிஹாரிகா முகம் சுளிக்க,

“அவன் உன் அப்பா இல்ல நிஹி” என்றார் விவாஹா கோபமும் அழுகையுமாக.

“ஹோ! அப்ப இவரு என் அப்பாவா?” என்று கேட்டவள், அடுத்து கேட்ட கேள்வியில் அங்கிருந்த அனைவருக்கும் நிலத்தில் புதைந்துவிட மாட்டோமா என்றிருந்தது.

“அப்பா செத்த பதினைஞ்சு நாள்ல இன்னொரு கல்யாணம்.. அதுவும் வயசுக்கு வந்த பொண்ணை வச்சுட்டு ஹனிமூன் வேற..” என்று அன்னையின் முன் முகம் சிவந்து, ஒவ்வொரு வார்த்தைகளையும் அவள் அழுத்தி அழுத்திக் கேட்க, விவாஹாவுக்கு அது எல்லாம் செவியில் ஏறவில்லை. ஆனால், மகாதேவனுக்கு மரண வேதனையாய் இருந்தது அங்கு நிற்கவே.

“நிஹி, இன்னொரு தடவை அவனை உன் அப்பன்னு சொன்ன நான் பொல்லாதவ ஆகிடுவேன்.. இவருதான் உன் அப்பா” கோபத்தோடு விவாஹா விரலை நீட்டி மகளிடம் வாதாடினார்.

“எனக்கு என்னமோ நான் படிச்ச ஸ்கூல்ல ஒருத்தி என்னை பாத்து கேட்டது உண்மைன்னு தோணுது” என்று ஆங்காரமாகக் கேட்டவள், என்ன பேசுகிறோம் என்பதையே கோபத்தில் மறந்து, “ஒருவேளை அப்பாவை கல்யாணம் பண்ணிட்டு இவருக்கு தான் என்னைப் பெத்தீங்களா? அதுக்கு பேர் என்..” நிஹாரிகா பேசி முடிக்கும் முன், மகளின் நடத்தையை பேத்தி சந்தி சிரிக்க வைப்பதை தாங்காத சக்கரவர்த்தி அவளின் கன்னத்தில் இடியென ஓங்கி அறைந்திருந்தார்.

***

கண்களில் கண்ணீருடன் கதவை சாத்திவிட்டு அதன் அருகிலேயே நிற்கும் பேத்தியைக் கண்ட சக்கரவர்த்தி, “இங்க வந்து உக்காரு” என்று கடினத்துடன் அழைக்க, ஒரு நொடி அவரின் குரலில் அவளின் உடல் தூக்கிவாரிப் போட்டது.

யாருக்கும் அஞ்சாதவள், இன்று நடுங்கும் கோழிக்குஞ்சாய் தன் தாத்தையாவை தலைநிமிர்ந்து பார்க்க முடியாது நின்றிருந்தாள். அதுவும் தான் பேசிய வார்த்தைகளின் வீரியத்தை பேசி முடித்தபின் தான் அவளால் புரிந்துகொள்ள முடிந்தது.

“வந்து உக்காருன்னு சொன்னேன்” என்று சக்கரவர்த்தி குரலில் கடினத்தைக் கூட்டி அழைக்க, “ம்கூம்” என்றாள் தலைகுனிந்தபடியே.

கண்ணீர் மட்டும் நிற்காமல் வழிய, தன் கழுத்தைத் தொட்டிருக்கும் சட்டையின் ஒரு பகுதியை எடுத்து துடைத்துக்கொண்டே அவள் நிற்க, அவளின் நிலையைக் கண்டு மனம் உருகினாலும், தன் மகளை பேத்தி பேசியதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

என்னதான் பேத்தி அவரின் உயிர் என்றாலும், மகள் அதற்கும் மேல் அவருக்கு.

“கம் அன்ட் சிட் ஐ சே” என்று சக்கரவர்த்தி குரலை உயர்த்தி அதட்ட, உடல் அதிர்ந்து விக்கியவள், சிறு குழந்தைபோல தேம்பியபடியே அவரின் எதிரில் சென்று அமர்ந்தாள்.

அவளின் முன் அமர்ந்திருந்தவர், “என் மகளை நீ என்ன நினைச்ச நிஹாரிகா?” அவர் தொடங்க,

“தாத்தையா.. ப்.. ப்ளீஸ் என்னை தள்ளி வச்சு பேசாதீங்க..” என்றாள் அவரின் விலகல் தாங்கமுடியாமல் துடித்தபடி.

“என் மகளையே வேணாம்னு சொல்றவங்க எனக்கும் வேணாம்னு தான் நினைப்பேன். அது யாரா இருந்தாலும் சரி. அவ சந்தோஷம் தான் எனக்கு முக்கியம்” என்று மகளின் மேலிருந்த உரிமையை அவர் நிலைநாட்ட, நிஹாரிகா மனதளவில் உடைந்து போனாள்.

“அப்ப நான்..?” நிஹாரிகா தனக்கே உரித்தான உரிமையோடு கேட்க, அவரிடம் அமைதியே. அன்னை மேல் பொறாமை என்றில்லை. தாத்தாவின் மேலிருந்த உரிமை போராட்டமே அவளிடம். அதில் சிறிது பொறாமை வந்தால் கூட தவறில்லை.

“உன்கிட்ட சில உண்மைகளை சொல்லணும்” என்று நடந்த அனைத்தையும் கூறி முடித்தவர், “நான் உண்மையை சொல்லலாம்னு சொன்னேன். ஆனா, என் பொண்ணு தான் அவ மானமே போனாலும் பரவாயில்லை அப்படின்னு சொல்லி வேணாம்னு சொல்லிட்டா” என்று இறுகிய முகத்துடன் கூறியவர், பேத்தியைப் பார்க்க நிஹாரிகாவோ நெஞ்சில் யாரோ எழமுடியாத அளவுக்கு அடித்ததைப் போல உணர்ந்தாள்.

உள்ளம் அக்னியாய் பற்றி எரிய, கோபம் எரிமலையாய் வெடித்துச் சிதற, நடந்ததை நினைத்து அவளின் ஒவ்வொரு அணுவும் செத்த தந்தையை தோண்டி எடுத்து பலமுறை வெட்டிக் கூறுபோட நினைத்தது. ஒரு பெண்ணுக்கு கணவனாகவும் சரி, தந்தையாகவும் சரி அவனுக்கு இருக்க அருகதை துளியும் இல்லை என்று நினைத்தவளுக்கு, உண்மை அறியாமல் தான் செய்ததை எல்லாம் நினைத்து நெஞ்சத்தில் யாரோ குதறுவது போல வலி எழுந்தது.

‘கடவுளே ஏன் என்னை படைத்தாய்?’ என்று கடவுளிடம் வாழ்க்கையை வெறுத்துப்போய் கேட்டாள் ஒரு முறை.

“ஏன் தாத்தையா என்கிட்ட மறச்சீங்க.. சொல்லி இருக்கலாம்ல” அவள் ஒரு பக்கம் தலை சாய்த்து கண்ணீர் வற்றி, மனதில் சிறிதும் தெம்பில்லாமல் கேட்க, சக்கரவர்த்தி அவளின் நிலை பார்க்க சகிக்காமல், எங்கே இளகிவிடுவோமே என்று பயந்து, சுவற்றை வெறித்தார்.

“சொல்லுங்க தாத்தையா?” மீண்டும் நிஹாரிகா கேட்க,

“அதை உன்..” என்று தொடங்கியவர், “என் பொண்ணுகிட்ட கேட்டுக்க.. அவ தான் சொல்ல வேணாம்னு சொன்னா.. ஆனா, நான்தான் உன்னை என்கிட்ட வச்சுக்கிட்டேன். என் பொண்ணு வாழ்க்கைல மீண்டும் ஒரு வசந்தம் வரணும்னு. ஆனா, நீ யாருன்னு கேட்டியே ஒரு மனுஷன். அவரு உனக்காக எனக்கு குழந்தையே வேணாம்.. எங்க பொண்ணு நிஹி மட்டும் போதும்னு சொல்லிட்டாரு. அவங்க கேட்டப்ப நீதான் அவங்கள ஏத்துக்கல” என்று சொன்னவருக்கு மகாதேவனை நினைத்து மனம் புல்லரித்தது.

என்ன மாதிரி காதல் அவர்களது என்று சக்கரவர்த்திக்கு சொல்லத் தெரியவில்லை! ஆனால், காமத்தையும் காதலையும் தாண்டிய பந்தம் அது என்று மட்டும் அவரால் உறுதியாகக் கூற முடிந்தது.

சக்கரவர்த்தி சொன்னதில் செவிகளை நம்பஇயலாது நிஹாரிகாவின் குற்ற உணர்ச்சி மேலிட்டுக் கொண்டேபோக, அவள் பாவமாய் அவரைப் பார்த்தாள். அவளின் முகத்தைப் பார்த்தவர், “வரலட்சுமி (சக்கரவர்த்தியின் மனைவி) வளர்ப்புல என் பொண்ணு நல்லாதான் வளந்திருக்கா.. ஆனா, நீ..” என்று நிறுத்தியவர் பேத்தியின் முகத்தைப் பார்க்க, நிஹாரிகா அதற்குமேல் அடக்க இயலாமல் முகத்தைக் மூடிக்கொண்டு கதறிவிட்டாள். சக்கரவர்த்தி அவளைப் பார்த்துக்கொண்டு இருந்தாரே தவிர, சமாதானம் செய்யவோ, ஆறுதல் அளிக்கவோ விழையவில்லை.

‘அவள் செய்த தவறுதான் என்ன?’ என்று அவளுக்கு விளங்கவில்லை. அன்னையின் மடிக்கும், தந்தையின் தோளுக்கும் ஏங்கியது அவள் தவறா? சிறிய வயதில் கேட்கக்கூடாதது பார்க்கக்கூடாதது எல்லாம் பார்த்தது அவள் தவறா? 

குரலை செருமிய சக்கரவர்த்தி தன் முன்னிருந்த கண்ணாடி க்ளாஸை நிஹாரிகாவிடம் நீட்ட, வாங்கிப் பருகியவள், “ஸாரி தாத்தையா” என்றாள். அவர் எதுவும் பேசவில்லை.

“தாத்தையா..” அவள் தழுதழுத்தக் குரலில் அழைக்க,

“போதும். நான் செல்லம் கொடுத்து வளத்து, நீ என் பேச்சை மதிக்காம என் பொண்ணை சொல்லக்கூடாத வார்த்தை சொன்னது போதும். நீ உன் வீட்டுக்குக் கிளம்பு” அவர் இரும்பாய் இறுகியபடிச் சொல்ல, நிஹாரிகாவுக்கு எங்கிருந்து வந்ததோ கோபம். சடாரென கோபத்தில் அவள் எழ, அவள் அமர்ந்திருந்த நாற்காலி பின்னால் சென்றது.

“இதுதான் உங்க முடிவா?” நிஹாரிகா கோபம் பொங்க இயலாமையோடு கேட்டாள். கண்களில் நீர் இல்லை. ஆனால், கோபம் மிதமிஞ்சி வழிந்து கொண்டிருந்தது. அதிக அன்புள்ள இடத்தில் ஏற்க முடியாத வார்த்தை வந்ததால் வந்த கோபம் அவளுக்கு. 

“நான் எது சொன்னாலும் முடிவா தான் சொல்லுவேன்” சக்கரவர்த்தி விழிகளை மட்டும் உயர்த்தி பேத்தியிடம் வெளியே செல்லும் படி கைகளைக் காட்ட, நிஹாரிகா அவரை முறைத்தாள்.

இத்தனை நாள் பேத்தி கொஞ்சும் மொழியில் நின்ற தோரணையும், இப்போது ஆத்திரத்துடன் நிற்கும் தோரணையும் அவருக்கு உள்ளுக்குள் சிறிது சிரிப்பைக் கொடுத்தது. இருந்தும் அவர் வெளியே சிறிதளவும் காட்டவில்லை.

“ஓகே நான் போறேன்.. என்னைப் புரிஞ்சுக்காதவங்க என்னை வெளிய போக சொல்றவங்க எனக்கு வேணாம்” என்றவள் வெளியே செல்லத் திரும்ப,

“உன்னை எல்லாரும் புரிஞ்சுக்கிட்டாங்க. நீதான் யாரையும் புரியாம நடந்துக்கிற.. உன் புருஷன் உள்பட” சரியான நேரத்தில் சக்கரவர்த்தி வாழைப்பழத்தில் ஊசியை இறக்குவது போல இறக்க, அவளுக்கு அது தவறாமல், ‘சுருக்’ என்று குத்தியது.

வெளியே செல்ல எத்தனித்தவள் திரும்பாது அவரின் சொல்லில் அப்படியே சிலையாய் நின்றாள்.

அவரும் அசையாது தனது இருக்கையில் சாய்ந்து கால்மேல் கால் இட்டு, “என்னோட அனுபவம் சொல்லும் நீயும் ரிஷ்வந்தும் வாழ்ந்துட்டு இருக்க வாழ்க்கையை. எங்களை தான் புரிஞ்சுக்கல. புருஷனை புரிஞ்சுக்க பங்காரம். நீ கோபத்துல வார்த்தையை இன்னிக்கு விட்டபோலத்தான் அவரும் விட்டிருப்பாரு” என்றவரை நிஹாரிகா திரும்பி அதிர்ச்சியுடன் பார்க்க அவரோ, “நீங்க இரண்டு பேரும் சொல்லாட்டியும் எனக்குத் தெரியும்” என்றவர், பேச்சு முடிந்ததுபோல எழ, நிஹாரிகா அதற்து மேல் முடியாமல் வெளியே வந்தவள், மாடிப்படிகளில் கோபத்துடன் ஏற, வரவேற்பறையில் இருந்த மூவருக்கும் பதட்டம் தொற்றிக்கொண்டது.

பின்னோடேயே வந்த சக்கரவர்த்தியிடம் விவாஹா, “என்னாச்சு ப்பா” என்று கலங்கிய விழிகளுடன் கேட்க, அவரோ மூவரையும் அமரும்படி சைகை செய்தார்.

சந்திராமா தயங்கியபடி நிற்க, “தனியா சொல்லணுமா?” என்று அவர் கேட்க, அவரும் அமர்ந்துகொண்டார்.

தன் அறைக்கு வந்த நிஹாரிகா ஒரு ட்ராலியில் அனைத்தையும் மூக்கை சிந்தியபடியே அடுக்க, அவளின் வாயோ அப்போதும் அடங்காமல் முணுமுணுத்துக் கொண்டிருந்தது.

எதற்கும் அடங்காதவள் ஆயிற்றே அவள்! 

“பெரிய பொண்ணாம் பொண்ணு.. யார் வந்தாலும் நான்தான் உயிர்னு சொல்லிட்டு. கடைசில தலைல இருக்க முடி அளவுக்குகூட மதிக்கல. அப்படி என்ன என்னைவிட முக்கியம். நான் தான் சின்னவயசுல இருந்து கூடவே இருக்கேன்.. மடில படுக்கறேன்.. விளையாடறேன்.. ஆனா, பொண்ணு முக்கியம்னு ஒரே வார்த்தைல சொல்லிட்டாரு. இதுக்கு இரண்டு அடி இன்னும் அடிச்சிருக்கலாம்ல. வீட்டை விட்டு வெளியே வேற துரத்தறாரு. இனி இங்க வந்தேன்னா பாரு” என்று மூக்கை உறிஞ்சிக் கொண்டு கடுப்புடன் முணுமுணுத்தவள், ரிஷ்வந்த் சென்னையில் எடுத்துக் கொடுத்த உடையில் ஒன்றுக்கு மாறிவிட்டு, அவனுக்கு சென்னை செல்வதாக ஒரு மெசேஜை மட்டும் அனுப்பினாள்.

அவனின் கப்போர்டைத் திறந்தவள் அவனின் முக்கியமான சிலதை எடுத்துக்கொண்டு, விமானத்தை அரை மணிநேரத்தில் பதிவு செய்துவிட்டு, கீழே அதே கோபத்துடன் இறங்கினாள்.

அவள் ட்ராலியுடன் வருவதைப் பார்த்த விவாஹாவும் மகாதேவனும் எழ, “பாப்பா.. என்னமா இது?” சந்திராமா ஓடிச்சென்று அவர் கைகளைப் பிடித்துக் கேட்க, “எனக்கு இங்க உரிமை இல்லை சந்திராமா.. நான் சென்னை கிளம்பறேன்” கரித்துக்கொண்டு வந்த கண்ணீரை அடக்கியபடிச் சொன்னவள், ட்ராலியை இழுத்துக்கொண்டு கிளம்பினாள்.

வாசல்வரை சென்றவள் திரும்பி, மகாதேவன் விவாஹா இருவரையும் பார்த்து, “ஸாரி ம்மா.. ஸாரி நானா” என்று கண்ணீருடன் மன்னிப்பை வேண்டியவள், சக்கரவர்த்தியிடம் கோபமாகத் திரும்பினாள்.

“நான் முக்கியம் இல்லன்னு சொல்லி வெளியபோக சொல்லிட்டீங்கள்ள.. உங்களுக்கு இருக்க அதே வீம்பு எனக்கும் இருக்கு. இனிமே நான் இங்க வரமாட்டேன் தாத்தையா. நீங்க  சந்தோஷமா இருங்க. நீங்களும் என்னைப் பார்க்க வராதீங்க..” என்றவள் கண்ணீருடனும் கோபத்துடனும் ட்ராலியை இழுத்துக்கொண்டு செல்ல, விவாஹா மகள் செல்வதைப் தாங்க முடியாமல் முன்னே ஒரு எட்டு வைக்க, அவரை நகரவிடாமல் கையை இறுகப் பற்றியிருந்தார் சக்கரவர்த்தி.

“ப்பா! பாவம் ப்பா அவ” விவாஹா அதரங்கள் துடிக்கக் கெஞ்ச, மகாதேவனும் அதையேதான் கூறினார்.

“என் பேத்தி வாழ்க்கை எனக்கு முக்கியம். உங்களுக்கு உங்க பொண்ணு வாழ்க்கை முக்கியம்னா அவளை போக விடுங்க” என்றார் இருவரையும் கண்டிக்கும் தொணியில்.

அதன்பிறகு அவர்கள் வாய் திறப்பார்களா என்ன?

வீட்டிலிருந்த காரிலேயே விமான நிலையம் வந்து சேர்ந்தவள், அதைத் திருப்பி அனுப்பிவிட்டு, மாமியாருக்கு அழைத்துத் தான் வரப்போவதாகக் கூற, அவரும் சரியென்று வைத்தார். ஆனால், இவள் சொல்வதற்கு முன்னால் அவருக்கு விஷயம் எட்டி இருந்தது விவாஹாவின் மூலம்.

கயல்விழியிடம், “அவ கொஞ்சம் அப்பா கூட சின்னதா சண்டை போட்டுட்டா.. அதுனால அங்க கிளம்பி வர்றா.. கொஞ்சம் பாத்துக்கங்க..” என்று விவாஹா சம்மந்தியிடம் முக்கால் வாசியை மறைத்துக் கூறியிருந்தார்.
கயல்விழியும் என்ன ஏது என்று எதையும் துருவவில்லை.

மாஸ்க்கையும், கூலர்ஸையும் அணிந்து தன் கண்ணீரை மறைத்த நிஹாரிகாவுக்கு உதடுகள் இன்னும் சக்கரவர்த்தி சொன்ன செய்தியைக் கேட்டு அதிர்ச்சியில் இருந்து மீளாமல் துடித்துக்கொண்டு இருந்தது. நினைக்கும்போதே உடல் படபடத்தது நெஞ்சம் பயத்தில் உறைவதுபோல இருந்தது.

தன் தந்தை என்று கூட அந்தக் கயவனை அவளால் இப்போது இருக்கும் மனநிலையில் நினைக்க முடியவில்லை. ‘வித்யாதரன்’ இவ்வளவு கேவலமான, ஈனமான பிறவியா என்று அருவெறுப்புடன் எண்ணினாள் அவள்.

உலகில் இருந்த அத்தனை கொச்சை வார்த்தைகளைக் கொண்டு அவனைத் திட்டியவள் விமானம் ஏறி அமர, சிறிய வயது நினைவுகள் அவளின் மனதில் வந்து படமாய் ஓடி ஆரம்பித்தது.