நிஹாரி-29

IMG-20211003-WA0016-373d448c

நிஹாரி-29

“தேவ்! எனக்கு இப்ப எல்லாம் உங்க கூடவே இருக்கணும் போல இருக்கு” மகாதேவனின் தோளில் இனிமையாய் சாய்ந்து, அவர் கரத்துடன் கரம் கோர்த்து ஆசையும், ஏக்கமுமாய் காதலுடன் பேசிக் கொண்டிருந்தார் விவாஹா.

“ம்ம்” என்றவரை விவாஹா தலையை மட்டும் நிமிர்த்தி முறைக்க, அவரோ காதலியை அறிந்தவராய் கண் சிமிட்டினார். விவாஹா சொல்ல வருவது அவருக்குப் புரியாமல் இல்லை. இருந்தும் அவரைப் பார்த்து கண் சிமிட்டிவிட்டு அமைதி காத்தார்.

“தேவ்!” என்று அவரின் தோளில் இருந்து விவாஹா தலையை எடுக்கப் பார்க்க, “தலையை எடுக்காமையே பேசலாம்” என்று விவாஹாவின் தலையை தன் தோள் மீது அழுத்திக் கொண்டவரின் அருகாமையில் விவாஹாவின் காதல் கொண்ட மனம், இன்னும் இன்னும் என்று காதலைச் சுரந்து காதல் மயக்கத்தில் ஆழ்த்தியது.

அவரின் தோளில் சாய்ந்துகொண்டே அதன் இதத்தை உணர்ந்தவர், அதைக் குரலில் தேக்கி, “தேவ் நம்ம லவ் மேட்டரை நான் அப்பாக்கு ஓப்பன் பண்ண போறேன். சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாம் தேவ். என்னால உங்கள விட்டு இருக்க முடியல” என்று மென்குரலில் சொல்ல, மகாதேவனுக்கு அவரை எப்பாடி சமாளிப்பது என்று தெரியவில்லை.

“விவாஹா!” அவர் காதலியின் உள்ளங்கையை வருடியபடி அழைக்க, “ம்ம், சொல்லுங்க” என்றார் விழிகளை மூடிக்கொண்டு.

“இந்தப்படம் முடியட்டும். இந்தப்படம் முடிஞ்சா எனக்கு தெலுங்குலையும் நல்ல இடம் கிடைச்சிரும். அதுக்கு அப்புறம் நானே உன் அப்பாகிட்ட வந்து பேசறேன்” என்று தேவ் சொல்ல, விவாஹாவிற்கு கோபம் வந்தது.

அவரை விட்டு விலகி அமர்ந்தவர், “எப்போமே இததான் சொல்றீங்க தேவ்.. எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா? இந்தப் படத்துக்கே நீங்க ஹீரோன்னு சொன்னதால தான் நான் சைன் பண்ணேன்” என்று கோபமாக உரைத்த விவாஹாவைக் கண்டு, அவருக்கு கோபம் வரவில்லை. வரவும் வராது. மாறாக அவரின் அதரங்களில் புன்னகை பூத்தது.

‘சரியான பிடிவாதக்காரி’ என்று மனதுக்குள் செல்லமாக அவரைக் கடிந்தவர், அவரின் கரத்தைப் பிடித்து இழுக்க, அவரின் மடியில் பஞ்சுப் பொதியாய் விழுந்தார் விவாஹா.

வெண்ணிலவு வதனமும், வானவில்லாய் இருந்த புருவங்களும், கோபத்தில் நுனியில் சிவந்திருந்த நாசியும், இயற்கையிலேயே சிவந்திருந்த மென்மையான பளபளக்கும் அதரமும், இருபக்கமும் புசுபுசுவென இருந்த கன்னங்களையும் கண்டு ரசித்தவர், விவாஹாவின் அதரத்தில் முத்தமிடக் குனிய, விவாஹாவின் விரல் இருவரின் இதழ்கள் இரண்டிற்கும் இடையே வந்து சிறு கண்டிப்புடன் முட்டுக்கட்டை போட்டது.

வழக்கமாக நடப்பதுதானே. அடுத்து விவாஹா சொல்லும் வசனமும் அவர் அறிவார்.

“இதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தேவ்” என்றார் அவர் நினைத்தது போல புன்னகையுடன்.

“ப்ளீஸ்! விவாஹா” அவர் கெஞ்ச, “எனக்கு நாளைக்கு கூட கல்யாணத்துக்கு ஓகே” விவாஹா சீண்டும் குரலில் கேலியாகச் சொல்ல, அவரைத் தன் மடியில் இருந்து எழுப்பியவர்,

“நல்ல என்னை வச்சு விளையாடறா? கல்யாணத்துக்கு அப்புறம் மொத்தமா பாத்துக்கறேன்” என்று ஒற்றைப் புருவத்தை உயர்த்தி, மீசையை முறுக்கியபடி அவர் சொல்ல, விவாஹாவுக்கோ நாணத்தில் விழிகள் தாழ்ந்து, முகம் இரத்தமெனச் சிவந்து அதரங்கள் துடித்தது.

“இப்பவே அப்பாகிட்ட சொல்லிட்டா படம் முடிஞ்சவுடனே கல்யாணம் பண்ணிக்கலாம்ல தேவ்” மீண்டும் விவாஹா கெஞ்சத் துவங்க, “இல்ல விவாஹா.. நான்தான் உங்க அப்பாகிட்ட வந்து பொண்ணு கேக்கனும். உன்னவிட்டு பேசறதுல எனக்கு விருப்பம் இல்ல. மிஸ்டர் சக்கரவர்த்தி அளவுக்கு பெரிய நடிகரா இல்லனாலும், இந்த படம் வந்தா தெரியும் என்னோட நடிப்பை பத்தி அவருக்கு. அதுவும் இல்லாம நம்ம வீட்டை இப்ப நான் உனக்காக பாத்து பாத்து கட்டிட்டு இருக்கேன். வொர்க்ஸ் முடியனும். ஸோ இப்ப சான்ஸே இல்ல” அவர் சொல்லிக்கோண்டே போக, அவரின் தன்மானமும், தன்மேல் வைத்துள்ள ஆதித காதலையும் பனி இறங்குவது போல உணர்ந்த விவாஹா அவரின் கன்னத்தில் திடீரென இதழ் பதிக்கவும், முதல் முத்தத்தில் தேவ் இன்பமாய் அதிரவும், சரியாய் காரவனைத் திறந்துகொண்டு, ‘வித்யாதரன்’ உள்ளே நுழையவும் சரியாய் இருந்தது.

வந்த கோபத்தைக் கட்டுப்படுத்திய வித்யாதரன், “ஷாட் ரெடி” என்றுவிட்டுச் செல்ல, விவாஹா, “இவருக்கு தட்டிட்டு வரணும் அப்படிங்கற மேனர்ஸ் இல்லியா?” என்று தேவிடம் எரிச்சல் பட, அது வெளியே சென்று கொண்டிருந்த வித்யாதரன் செவிகளில் நன்றாக விழுந்தது.

“நியாயப்படி நான்தான் கோபப்படனும்” என்று குறும்பாய் தேவ் சொல்ல அவரின் தலையில் கொட்டிய விவாஹா, “ஷாட்டுக்கு டைமாச்சு” என்றிட, இருவரும் வெளியே வந்தனர்.

தேவ் தற்போது வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர். விவாஹா நடிக்க ஆசை கொண்டதால், சக்கரவர்த்தியின் அனுமதியோடு நல்ல கதைகளில் மட்டுமே நடித்து வருகிறார். இதுதான் கடைசி படம் என்றும், இதற்குப் பிறகு உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப திருமணம் செய்து கொள்வேன் என்றும் அன்னை வரலட்சுமியிடம் சத்தியம் செய்தபின்னே இப்படத்திற்கு கையெழுத்திட்டார் விவாஹா.

இப்படம் விவாஹா நடிக்க ஒப்புக்கொண்டதுக்கு ஒரே ஒரு காரணம் அவரின் தேவ். அவருடன் நேரம் செலவிடவே முடியாமல் தவித்தவருக்கு திருப்பதி லட்டாய் அருமையாய் வந்தது இப்பட வாய்ப்பு.

என்னதான் அவருடன் காதலாய் நேரம் செலவிடுபவருக்கு, அவரிடம் நெருங்க காதல்கொண்ட மனம் ஏங்கித் தவித்தாலும், திருமணத்திற்கு முன் எந்தத் தவறும் நடந்துவிடக்கூடாது என்று தனக்குத் தானே கடிவாளமிட்டு கட்டினார் விவாஹா.

விவாஹாவின் அன்னை வரலட்சுமியின் வளர்ப்பு அப்படி. திரைத்துறையில் இருந்தாலும், மகளை அனைவரிடமும் சகஜமான முறையில் நடக்க விட்டிருந்தாலும், அனைத்திலும் ஒரு எல்லையைக் கற்றுத் தந்திருந்தார் வரலட்சுமி. அதுவும் மகளின் அபார அழகின் மீது எந்த அளவிற்கு அவருக்கு கர்வமோ, அதே அளவிற்கு பயமும் உண்டு.

விவாஹாவிற்கு வேறு இருவரும் ஒரே திரைப்படத்தில் நடிக்கத் தொடங்க, தேவின் அருகாமைக்காக விரைவாகவே திருமணத்தை முடித்துவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டவர், அவ்வப்போது அதை தேவிடம் சொல்லிக்கொண்டே இருந்தார். தட்டிக் கழித்துக்கொண்டே வந்தவர் இன்றுதான் அதற்கான விளக்கத்தையே அளித்திருந்தார்.

அவருக்கும் அடுத்தநொடியே திருமணத்தை வைத்துக்கொள்ள ஆசைதான். அழகும், பண்பும், குணமும் மிதமிஞ்சி ஒருங்கே இருக்கும் மங்கையைக் யாருக்குத் தான் பிடிக்காது. அதுவும் விவாஹாவுக்கு இருக்கும் வசதிக்கும், செல்வாக்கிற்கும் அவர் தேவிடம் அதை சிறிதும் காட்டியதில்லை. தீராத காதலை மட்டும் கொட்டிக் கொண்டிருந்தார் அவர்.

“ஷாட் ஓகே” என்று இயக்குனர் சொல்ல இருவரும் வந்து குடைக்குக் கீழே அமர்ந்து பேசி சிரித்துக் கொண்டிருக்க, அதைப் பார்த்த வித்யாதரனுக்கோ கண்களில், அப்பட்டமாய், ஆத்திரம் ரேகையாய் தெரிந்தது.

மகாதேவனும், வித்யாதரனும் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். சிறு வயதில் இருந்தே தேவின் மேல் காரணமில்லாத பொறாமையை வைத்திருந்தான். வித்யாதரனை விட படிப்பிலும் சரி, விளையாட்டிலும் சரி, ஆசிரியர்களிடம் நல்ல பெயர் வாங்குவதிலும் சரி அனைத்திலும் கெட்டி மகாதேவன். அவரைப் பார்த்து குறிக்கோள் வைத்து பின்பற்ற வேண்டிய வயதில், வித்யாதரனுக்கு மட்டும் அது நஞ்சாய் விதைந்தது.

தன் கோபத்தையும், பொறாமையையும் உள்ளுக்குள் மறைத்தவன், தேவிடம் தேனொழுக பேச ஆரம்பித்தான். அவரைப் போல படித்திருக்கலாம். அல்லது விளையாட்டில் பங்கேற்று வெற்றி பெற்றிருக்கலாம். எதுவும் வரவில்லையா? ஒழுக்கமாக இருந்து ஆசிரியர்களிடமாவது நல்ல பெயரை வாங்கியிருக்கலாம்.

வித்யாதரனோ எதை எதை மகாதேவன் வைத்திருக்கிறாரோ அதை வாங்குவதிலேயே குறியாய் இருந்தான்.

சிறிய வயதில் நஞ்சாய் விதைந்தது கொஞ்சம் கொஞ்சமாய் வளரத் துவங்கியது. அது இறுதியில் மகாதேவனை அவர், ‘விடாது கருப்பு’ போல விடாமல், அவர் எடுத்த அதே கல்லூரியையே தேர்ந்தெடுக்க வைத்தது. மகாதேவனுக்கு நடிகர் ஆக வேண்டும் என்று ஆசையிருக்க, அதைவிட நான் பெரியதாக இருக்க வேண்டும் என்று நினைத்த வித்யாதரன் இயக்குனராக ஆசைப்பட்டான். அதில் ஒன்றும் தப்பில்லை தான். ஆனால், ஆசைமட்டும் போதாதே. ஆசைப்படுவதை அடைவதற்கு முழு முயற்சியும் வேண்டுமே.

அதில் வித்யாதரன் இம்மி அளவும் அசையாமல் இருக்க, மகாதவேன் அதற்குள் ஐந்து படங்களில் நடித்து வளர்ந்துகொண்டிருக்க, அது அவரின் விஷம் தடவிய மனதில், தீயாய் பற்றி எரியத் தொடங்கியது. ‘பொறாமை’ என்னும் நோய் மிகுதியாகும் பொழுது, அது நியாயம், தர்மம், கருணை என எதையும் பார்க்காது.

அது இறுதியில் தன்னையே கொன்றுவிடும் அல்லது எதிரில் இருப்பவரின் வாழ்வை சீரழித்துவிடும். வித்யாதரனின் வன்மமும், வக்கிரமும் நிறைந்த புத்தியாலும், குறையாது ஆழமரமாய் வளர்ந்து விஷத்துடன் நிற்கும் பொறாமையாலும், விவாஹாவின் வாழ்க்கை கேள்விக்குறியாய் நிற்கப்போவதை யாரும் அப்போது அறியவில்லை.

மகாதேவன் நடிக்கும் படத்திலேயே அடித்துப் பிடித்து உதவி இயக்குனராக சேர்ந்தவனின் இச்சை விழிகளில் விழுந்து தொலைத்தார் விவாஹா. அவரின் அழகும், இளமையும் வித்யாதரனை மயக்கத்தில் ஆழ்த்த, மகாதேவனும் விவாஹாவும் காதலிக்கிறார்கள் என்று அறிந்தவனுக்கு, அதைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.

சிறிது சிறிதாக கேவலமாகிக் கொண்டிருந்தவனின் புத்தி இப்போது முற்றிலும் சாக்கடையாய் மாறியது. அந்த நொடியே மகாதேவனை வீழ்த்த விவாஹாவை பகடையாய் தேர்ந்தெடுத்தான் அவன். அதுவும் நாள்தோறும் இருவரும் கண்களாலேயே காதல் செய்தவதைப் பார்த்து பார்த்து வன்மம் கூடிக்கொண்டு சென்றதே தவிர குறைந்த பாடில்லை.
நாட்கள் உருண்டோட படப்பிடிப்பு நன்றாக முடிந்து அடுத்த நாள் படம் வெளிவரத் தயாராக இருந்தது. விவாஹாவோ படம் வெளியாகும் மகிழ்ச்சி ஒருபுறம், விரைவாக தங்களது காதல் கை கூடப்போகிறது என்ற பூரிப்பு ஒரு புறம் என்று மினுமினுப்பில் தத்தளித்துக் கொண்டிருந்தார்.

“தேவ்! அப்பா இருக்காங்க.. அப்புறம் கூப்பிடட்டா?” தன் அறையில் இருந்த தொலைபேசியில், விவாஹா கிசுகிசுப்பாக பேசிக் கொண்டிருக்க, “உனக்கு ஒரு சர்ப்ரைஸ்..” என்றார் அவர்.

“என்ன?” விவாஹா ஆர்வத்துடன் கண்கள் மின்ன வினவ,

“நாளைக்கு பர்ஸ்ட் டே ஷோ முடிஞ்சவுடனே மதியம் உங்க வீட்டுல இருப்பேன். உன் அப்பாகிட்ட நம்ம கல்யாணத்தைப் பத்தி பேச..” என்று தேவ் நிறுத்தி நிதானமாக ஒவ்வொரு வார்த்தையும் காதலியின் செவியில் இறங்கி மனதில் பதியக் கூறினார்.

“நிஜமாவா தேவ்?” ஆர்வத்தில் வாய்விட்டு கத்தியே விட்டார் விவாஹா. தன்னை மறந்து மகிழ்ச்சியில் கத்தியதில் ஒற்றைக் கையால் வாயை அடைத்து, தன் முட்டைக் கண்ணை வைத்து அழகாய் சுற்றி முற்றிப் பார்த்தவர், “தேவ்!” என்றார் கிசுகிசுப்பாக.

“வேணும்னா நாளைக்கு பாரு ஐயாவோட பெர்பாமன்ஸை..” இந்தப்பக்கம் தேவ் தனது சட்டைக் காலரைத் தூக்கிவிட்டபடி சொல்ல, விவாஹாவோ நாளைய நாளுக்கான கனவில் மிதக்க ஆரம்பித்தார்.

அடுத்தநாள் தான் தங்கள் இருவரின் வாழ்க்கையும் மாறப்போவது என்பதை அறியாமல் காதல் கொண்டு இருமனங்களும் விடிய விடிய கதை பேசி கனவுகளில் மிதக்கத் தொடங்கினர்.

அடுத்தநாள் காலைப் பொழுது அனைவருக்கும் ரம்மியமாய் விடிய, விவாஹா ஏதோ பயங்கரக் கனவு கண்டு பதறியடித்து எழுந்தார். பதறி எழுந்தவருக்கு தான் வீட்டில் தான் இருக்கிறோம் என்று புலப்படவே சிறிது நேரம் பிடித்தது. தலையைக் கையில் தாங்கியவர், கடிகாரத்தைப் பார்க்க மணி எட்டாகி இருந்தது.

‘அச்சோ.. எல்லாம் இந்த தேவ்னால.. விடிய விடிய கதை பேசிட்டு இப்ப பாரு எவ்ளோ லேட்டா எந்திரிச்சிருக்கேன்னு. எல்லாம் உங்களால தான் தேவ். வந்து வச்சுக்கரேன்’ என்று குட்டித் திட்டை அவருக்கு வைத்தவர் அவசர அவசரமாக குளித்து முடித்து, தேவிற்கு பிடித்த வெள்ளை நிற சுடிதாரில் கிளம்பி கீழே வந்தார்.

கீழே வந்தவர் வரலட்சுமி வற்புறுத்தியும் உண்ணாமல் வெளியே வந்தவர் தன் காரோட்டியிடம், “நீங்க வர வேண்டாம் ண்ணா. நானே போயிக்கறேன்” என்று கூறிவிட்டு திரையரங்கிற்குக் கிளம்ப, அவரின் நேரம் சக்கரவர்த்தியும் அன்று காலை யாரோ ஒருவரைப் பார்க்க வெளியே சென்றிருந்தார்.

இருந்திருத்தால் மகளை தனியே அனுப்பியிருக்கமாட்டார். வரலட்சுமியும் உள்ளே இருந்ததால் மகளை அவர் கவனிக்கவில்லை.

விவாஹா வரும் வழியைக் கணக்கிட்டு இருந்த வித்யாதரன் ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில், ஒன்றும் அறியாத ஒரு தவறும் புரியாத வெண் முயலை வேட்டையாடும் நரியைப் போலக் மனசாட்சி அற்றுக் காத்திருந்தான். விதியும் சிறிதும் இரக்கம் இல்லாமல் அனைவரையும் கலங்கடித்து, அனைவரின் நிம்மதியையும் காவு வாங்கக் காத்திருந்தது.

விவாஹாவின் காரை பவ்யமாக நிறுத்திய வித்யாதரன் அவரின் பக்கம் சென்றான். “என்ற விஷயம்?” கார்க் கண்ணாடியை இறக்கியபடி விவாஹா வினவ, “தேவ் சார்.. இதை உங்ககிட்ட குடுக்க சொன்னாரு” என்று ஒரு கடிதத்தை நீட்ட, அதை வாங்க எட்டிப்பார்த்த விவாஹாவின் முகத்தில் மயக்க மருந்து தடவிய கர்சீப்பை அந்த கொடியவன் வைத்து அழுத்த சில நொடிகள் போராடிய, அடுத்து விவாஹா மூர்ச்சையாகி இருக்கையில் சாய்ந்தார்.

விவாஹாவை பின் இருக்கைக்கு மாற்றியவன், அவ்விடத்தை விரைவாக காலி செய்துவிட்டு, வேறொரு ஆளில்லாத இடத்திற்கு விவாஹாவைக் கடத்திச் சென்றான்.

இரண்டுமணி நேரம் கடந்து கண்விழித்த விவாஹாவுக்கு அனைத்தும் மங்கலாகத் தெரிய, கண்களைக் கசக்கியவருக்கு அது ஏதோ பாழடைந்த இடம் போன்று இருக்க, நடந்ததை மனதிற்குள் ஓட்டிப் பார்த்தவர், விடுக்கென்று எழ, தான் இருந்த நிலையை உணர்ந்து அஞ்சி அருகில் இருந்த தன் உடையை எடுத்து தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டார் அவர்.

அப்போதுதான் அவரிடம் இருந்த சில மாற்றங்களை உணர்ந்தார் அவர்.

தனக்கு என்ன நடந்திருக்திறது என்று புரிந்தும், உணர்ந்தும் கொண்டவர் பயந்து அஞ்சி கால்களைக் குறுக்கிக்கொண்டு கதறத் துவங்கினார். அவரின் காதலும், கனவுகளும், ஆசைகளும் அனைத்தும் பாழாய்ப் போனதை உணர்ந்தவர், பெற்றோருக்கும், தேவுக்கும் என்ன பதில் சொல்லப் போகிறோம் என்று தெரியாமல் அழுதார்.

முதலில் இடத்தைக் காலி செய்ய வேண்டும் என்று எண்ணியவர், தன் உடைகளை அவசர அவசரமாக அணிந்து முடிக்க, வித்யாதரன் நிதானமாக உள்ளே நடந்து வந்தான்.

அவனைப் பார்த்த நொடி, கொலை வெறியுடன், “டேய்!” என்று அவனின் சட்டையை கொற்றாக பற்றியவர், அவனை கண்மண் தெரியால் வெறியோடு அடிக்கத் துவங்கி, ஆத்திரத்தில் திட்ட, அவரைத் தடுக்கப் பார்த்தவனால் பெண்ணவளின் ஆவேசம் முன்பு எதுவும் முடியவில்லை. அவரின் தலைமுடியைப் பற்றிவன் இரு கன்னங்களிலும் மாறி மாறி அறைய, நேற்று இரவு சரியாக உறங்காததாலும், காலை உணவு சாப்பிடாததாலும், மேலும் சற்று முன் நடந்த அசம்பாவிதத்தாலும் அரை மயக்கத்தில் கீழே சரிந்தார் விவாஹா.

அப்போதும் கோபமும், வெறியும் தீராமல் இருந்தவன் அவரைத் திட்டிக்கொண்டே வயிற்றில் எட்டி உதைக்க, “தேவ்!” என்று அந்த இடமே அதிர்ந்து எதிரொலிக்க அலறினார் விவாஹா. எப்படியாவது யாராவது வந்து தன்னைத் காப்பாற்றி விடமாட்டார்களா என்ற பேராசையில்.

வயிற்றைப் பிடித்துக் கொண்டு அழுது கொண்டிருந்தவரின் அருகே சென்று குற்றி அமர்ந்தவன், “இதுக்கு அப்புறமும் உனக்கு தேவ் தேவையா?” என்று வினவ, விவாஹாவின் கண்களில் சரம் சரமாய் கண்ணீர். அவனின் கேள்வி அவரை உயிருடன் கொன்றது. அவன் பெண்ணவளை வன்மமாக ஆட்கொண்டதால், உடலில் இருந்த இரத்தக் கரைகள் வெள்ளை உடையில் படர்ந்து ஆங்காங்கே உடைகளின் வெளியே தெரியத் தொடங்கியது.

மனமும் உடலும் தெம்பில்லாமல் போக, விவாஹா சிறிது நேரத்தில் மயக்கத்திற்கு மீண்டும் செல்ல, அதைக் கண்டு திருப்தியுற்றவனாய் வெளியே சென்றவன் முன்னேற்பாடாய் வைத்திருந்த தனது இரு சக்கர வாகனத்தில் ஏறிப் பறந்தான்.

***

படத்தை முடித்துக்கொண்டு வெளியே வந்த மகாதேவனின் முகம் யோசனையில் இருந்தது. ஏன் விவாஹா இன்று திரையரங்கிற்கு வரவில்லை என்று. அப்போதும் அவருக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்திருக்கும் என்று அவருக்கு சிறிதும் தோன்றவில்லை. ஏனெனில், சக்கரவர்த்தி மகளை பாதுகாப்பு இன்றி எங்கும் அனுப்பமாட்டார் என்று அவருக்கு நன்கு தெரியும். யோசித்தபடியே தன் காருக்குள் ஏறி அமர்ந்தவர் விவாஹாவின் வீட்டிற்கு, நேராய் பயணிக்கத் தொடங்கினார்.

வீட்டிற்கு வந்த மகாதேவனை யோசனையோடு நோக்கினாலும், புன்னகையோடு வரவேற்றார் சக்கரவர்த்தி. உள்ளே வந்த மகாதேவன் விவாஹாவைக் கண்களால் தேட அவரை எங்கும் காணாமல் தவித்தவர், எடுத்தவுடனே எப்படிக் கேட்பது என்று தயங்கியபடியே நின்றார்.

“லஷ்மி” என்று குரல் கொடுத்த சக்கரவர்த்தி மகாதேவனை அறிமுகம் செய்துவைக்க, “நீங்க தமிழா?” என்று ஆர்வமாகக் கேட்டார் வரலட்சுமி. தனது ஊராரைக் கண்டால் இயல்பாய் வரும் ஆர்வம் அவருக்கு.

“தமிழ் தான்..” என்றவரிடம் இரண்டு வார்த்தை பேசியவர் உள்ளே செல்ல, சக்கரவர்த்தி, “படம் சக்ஸஸ்னு கேள்விபட்டேன். ரொம்ப சந்தோஷம். வாழ்த்துக்கள். இந்த மாதிரி இன்னும் நிறைய படம் பண்ணுங்க” என்று மனதார தேவை வாழ்த்த, புன்னகையுடன் தலையாட்டி அதை ஏற்றுக்கொண்டவர், அடுத்து எப்படித் தொடங்குவது என்று சிறிது தயங்கினார். அப்போதும் சக்கரவர்த்திக்கு திரையரங்கிற்கு சென்ற மகள் ஏன் இன்னும் வரவில்லை என்ற எண்ணம் வந்தது. யாரையாவது பார்த்து விட்டுவருவாள் என்று நினைத்தார்.

மகளின் காரோட்டியும் இங்கே இருப்பதைக் காலையிலேயே கண்டவர் மகள் தனியாக சென்றிருக்கிறாள் என்ற விவரத்தை அறிந்தார். அப்போதும் அவருக்கு தைரியம் தான், ‘தன் மகள் மேல் எவனாலும் கை வைக்க முடியாது’ என்று.

மகாதேவனோ, ‘இவ வேற எங்க இருக்கான்னு தெரியலையே?’ என்று சக்கரவர்த்தியின் எதிரில் அமர்ந்து கொண்டு, விவாஹாவைக் காணாமல் உள்ளுக்குள் தவிக்க, சக்கரவர்த்தி அவரின் தயக்கத்தைக் கண்டுகொண்டார். அரசல் புரசலாக ஏற்கனவே அவரின் காதுகளுக்கு சென்ற வாரம் சில விஷயங்கள், தெரிந்தவரின் மூலம் வந்திருந்தது.

“சொல்லுங்க என்ன விஷயம்?” சக்கரவர்த்தி கேட்க, அதற்குமேல் தாமதிக்க முடியாது என்று நினைத்த மகாதேவன் தைரியமாய், “நானும் விவாஹாவும் லவ் பண்றோம் ஸார்” என்று மகாதேவன் விஷயத்தைப் போட்டு உடைக்க, ‘படார்’ என்ற சத்தம் அந்த அறைமுழுதும் பட்டுத் தெறித்து எதிரொலித்தது.

வரலட்சுமி சமையல் அறையிலிருந்து கொண்டு வந்த தேனீரும், பண்டங்களும் தரையில் விழுந்து சிதறியிருக்க, இரு ஆண்களும் ஒரு சேரத் திரும்பினர்.

இருவரும் மகாதேவன் சொன்ன விஷயத்தின் அதிர்ச்சியில் தான், அவர் அனைத்தையும் கீழே விட்டிருக்கிறார் என்ற எண்ணத்தில் அவரைத் திரும்பிப் பார்க்க, அவரோ வீட்டின் வாயிலைக் கண்டு, அதிர்ச்சி ஆயிரம் பேரிடிகளாய்த் தாக்கிய உணர்வை சுமந்து நின்றிருந்தார். சக்கரவர்த்தியும், மகாதேவனும் வரலட்சுமியின் விழிகள் குத்தி நிற்கும் திசையைப் பார்க்க, ஆண்கள் இருவரும் ஒருசேர அதிர்ச்சியில் படாரென இருக்கையில் இருந்து எழுந்தனர்.

வீட்டின் வாயிலில் இரத்தம் படிந்த வெள்ளை சுடிதாரோடு, தலை முடி கலைந்து, வதனம் கசங்கி, கன்னங்கள் இரண்டும் வீங்கி, நிற்க சக்தியில்லாமல் வாடிய மலரைப்போல நின்றிருந்த விவாஹைக் கண்ட அனைவருக்கும் பேரதிர்ச்சி. விவாஹாவின் விழிகள் கலங்கி அங்கு நின்றிருக்கும் மகாதேவனையே குற்றம்சாட்டும் பார்வை பார்க்க, யாரும் சிறிது அசையக்கூட இல்லை.

நடக்கவே சிரமப்பட்டு மெல்ல மெல்ல அடிகளை எடுத்து வைத்து, தன்னிருகில் வரும் விவாஹாவைக் கண்ட மகாதேவனுக்கு புரியாமல் இல்லை, என்ன நடிந்திருக்கும் என்று. அதுவும் வயிற்றைக் கையில் பொத்தியபடி விவாஹா, வலியில் வதனம் கசங்க, தன்னருகே வர அவருக்கு நடந்ததை எண்ணி உடலும் மனமும் அதிர்ந்தது. அது பயத்தாலா அல்லது அதிர்ச்சியாலா என்று அவருக்கு தெரியவில்லை. ஆனால், தன்னவளை இந்நிலையில் கண்கொண்டு அவரால் காண முடியாமல் அவரின் காதல் கொண்ட இதயம் சுக்கு நூறாய் வெடித்துச் சிதறியது.

மகாதேவனின் அருகில் வந்தவரின் கால்கள் இடர, அவரின் கைகளைத் தாங்கிப் பிடித்தவரை நிமிர்ந்து பார்த்தவர், அவரின் சட்டையை கோபத்தோடு கொற்றாகப் பற்றினார். “எத்தனை தடவை சொன்னேன் தேவ். என்னை சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கங்க கல்யாணம் பண்ணிக்கங்கனு. கேட்டீங்களா. நீங்க என்கூட இருந்திருந்தா நான் இன்னிக்கு தனியா போயிருப்பனா, இதெல்லாம் எனக்கு நடந்திருக்குமா?” என்று அவரை உலுக்கியபடி கதறிய விவாஹா, சக்தியின்றி, அவருடைய தேவின் காலருகிலேயே தரையில் மடிந்து அமர்ந்து தலையில் வைத்து ஓவென்று கத்தி அழுதார்.