நிஹாரி-3

IMG-20211003-WA0016-8746e498

நிஹாரி-3

தலைவலியுடன் வீட்டிற்குள் நுழைந்த நிஹாரிகா முதலில் கண்டது தனது பெற்றோர் வரவேற்பறையில் அமர்ந்திருப்பதைத் தான். ஏற்கனவே அவளிற்கு இருந்த மனநிலையில் இப்போது மனம் உலையாய் கொதிக்கத் தொடங்கியது.

சக்கரவர்த்தியும் அவர்கள் எதிரில் அமர்ந்திருந்து நிஹாரிகாவைப் பார்க்க தாத்தாவிடம் வந்தவள், “சாப்பிட்டிங்களா தாத்தையா?” வினவினாள் நிஹாரிகா.

“ஆச்சு பங்காரம்… நுவ்வு கூடா வெல்லி திண்ணு(நீயும் போய் சாப்பிடு)” அவர் சொல்ல,

“குளிச்சிட்டு வர்றேன் தாத்தையா” என்றவள் பெற்றோர் என்ற இருவர் அமர்ந்திருப்பதையே கண்டுகொள்ளாமல் நகர தந்தையின் குரல் அவளை நிறுத்தியது.

“ஏன் வாங்கன்னு கூட கூப்பிடக்கூடாதா பிள்ளா” மகாதேவன் கேட்க அவரின் குரல் படியில் ஏறிக்கொண்டிருந்தவளைத் தடுத்து நிறுத்தியது.

திரும்பி நக்கல் பார்வை பார்த்தவள், “வீட்டுக்கு தாத்தாவை பாக்க வந்த கெஸ்ட்டுக்கு எல்லாம் நான் இம்பார்ட்டன்ஸ் தர்றதில்லை” அவளின் பதிலில் தாத்தா மனதிற்குள் புழுங்க, மகாதேவன் மனம் சுணங்க, நிஹாரிகாவை ஈன்றெடுத்த அவளின் அன்னை விவாஹா இயலாமையோடு அதே சமயம் வேதனையோடும் அமர்ந்திருந்தார்.

“இன்னிக்கு அம்மாக்கு பர்த்டே பங்காரம்” சக்கரவர்த்தி தொடங்க,

“தாத்தையா ப்ளீஸ்!” என்றவள்,

“நான் விஷ் பண்ணலைனா எல்லாம் எதுவும் ஆகிடாது… அதுக்கு யாரும் கவலைப்படப் போறதும் இல்ல” பட்டென்று வார்த்தைகளை சிதறவிட்டவள், மேலே செல்ல விவாஹாவிற்கு மனம் வெதும்பினாலும் முகத்தில் எதையும் காட்டாமல் தந்தையிடம் ஆசி வாங்கிவிட்டு வாயிலை நோக்கிச் சென்றார்.

“எப்போ தான் மாமா எல்லாம் சரியாகும்” மனைவி கண்ணீரை அடக்கியபடியே செல்வதைப் பார்த்து பொறுக்க முடியாமல் சக்கரவர்த்தியிடம் மகாதேவன் கேட்டார்.

“நம்பிக்கையோட இருங்க மாப்பிள்ளை” தோள்தட்டி அனுப்பி வைத்த சக்கரவர்த்தி பேத்தி வந்ததும் பேச வேண்டியதை மனதிற்குள் ஓட்டிப் பார்த்தார்.

‘எத்தனை நாட்கள் இப்படியே இருக்க முடியும்’ என்று நினைத்தவருக்கு தானும் அதில் ஒரு காரணமாக இருக்கிறோம் என்பதை நினைக்க மனம் மகளிற்காக வெதும்பியது.

அவர் வாழ்க்கையில் எடுத்த முடிவு முதன் முறையாக தவறானது அங்குதான்.

வருடாவருடம் இப்படித்தான் மகள், மருமகன் இருவரும் தங்களது பிறந்தநாளிற்கு வந்து பேத்தியிடம் மூக்கு அறுபட்டுப் போவது அவருக்கு உள்ளுக்குள் வலித்தது. பேத்தியைக் கடியவும் முடியவில்லை.

அவரின் ஒரே ஒரு செல்ல பங்காரம் அல்லவா அவள்?

ஆனால், இன்று பேத்தியிடம் பேசிவிடுவதாக முடிவில் இருந்தார்.

தன் அறைக்குள் நுழைந்த நிஹாரிகா குளியலறைக்குள் புகுந்தாள். குளியலறைக்குள் இருந்த டிம் லைட்டும், நறுமணமும் அவளிற்கு இதத்தைத் தந்திருக்க வேண்டும்.

அவளது மனமோ தந்தூரி அடுப்பில் வைத்தது போல வெந்து கொண்டிருந்ததால் அவளிற்கு எதையும் உணரும் மனநிலை இல்லை.

புடவை மாராப்பை விலக்கியவள் மேலும் தன் மேனியில் படர்ந்திருந்த புடவையைக் கலைந்தாள்.

ஏதோ வித்தியாசமான நறுமணம் நாசியைத் தீண்டுவதை உணர்ந்தவள் தன் புடவையை முகர்ந்து பார்க்க அவளின் இதழ்கள் தன்னால் பற்கள் தெரியாமல் புன்னகையில் பிரிந்தது.

அவனின் வாசனை அது. அவன் மேனியின் நறுமணமும், வெளிநாட்டு பெர்யூமும் இணைந்து அவளின் நாசியில் நுழைந்து இதயம் வரை தீண்டியது. சிறிதுநேரம் அசையாமல் நின்றிருந்தவளுக்கு தன் புடவையில் நறுமணம் வரும் அளவு என்றால் எவ்வளவு இறுக்கிப் பிடித்திருப்பான் தன்னை என்று தோன்ற, “பொறுக்கி” என்றாள்.

சில நொடிகளுக்கு முன் தோன்றியிருந்த இதம் மறுபடியும் ஓடிச்சென்றது.

குளியலறையில் இருந்த கண்ணாடியின் முன் ரவிக்கை மற்றும் பெட்டிகோட்டுடன் நின்றவளின் கண்கள் கழுத்திற்கு கீழே மேனிக்குச் சென்றது. அவள் மட்டுமே அறிந்த ரகசியம் ஒன்றல்லவா அவளின் உடலில் இருக்கிறது.

பெருமூச்சுடன் கண்ணாடியின் முன்னிருந்து நகர்ந்தவள், அவளின் குளியலறைக்குள் இருந்த யாரும் அறியாத கதவைத் திறந்தாள். சுவற்றோடு சுவரு போல பொருத்தப்பட்டிருந்த கதவைத் திறந்தவள் அங்கிருந்த கருங்கற்கலால் இருந்த படிவழியாக கீழே இறங்கிச் சென்றாள்.

மனதிற்கு இதத்தைத் தேடும்போதும் சந்தோஷமான தருணத்திலும் அவள் செல்லும் இடமது. மனதிற்கு நெருக்கமான இடமும்கூட.

அந்த இடத்தின் கதவைத் திறந்தவளிற்கு அந்த மண்டபத்தின் குளுமையை உணர முடிந்தது. அந்தக் காலத்து அரசியர் குளிக்கும் மண்டபம் போல சக்கரவர்த்தி அமைத்துத் தந்த மண்டபம் அது.

கருங்கல்லால் கட்டப்பட்டிருந்த மண்டபத்தில் நான்கு பக்கமும் சுற்றிசுற்றி நடக்க நடைபாதை கருங்கல்லாலே அமைத்திருக்க, ஆங்காங்கே சூரிய ஒளி விழவும் கட்டப்பட்டிருந்தது.

மண்டபத்தின் மத்தியல் நான்கு தூண்கள் அமைக்கப்பட்டிருக்க அதன் கீழே நான்கைந்து படிகள் குளத்தை நோக்கி இறங்கியது. இரண்டு அடியில் தொடங்கி 6.2 அடியில் முடியும் செழிப்பான குளம்.

நான்கு வயதில் இருந்தே நிஹாரிகா நீச்சல் இங்கே தான் பயின்றது. அவள் பயின்ற பிறகு பாட்டியுடன் குளத்திற்கு வந்து விளையாடிக் கொண்டிருப்பாள். பாட்டியின் இறப்பிற்குப் பிறகும் இங்கே வந்து தனியே முட்டிக்காலில் கன்னத்தை வைத்து அமர்ந்திருக்கிறாள்.

அவளின் சந்தோஷம் துக்கம் அனைத்தும் பகிரப்படும் இடம் இதுதான்.

அதை அவள் சொல்லமாலேயே அறிந்து கொண்ட சக்கரவர்த்தி அதை அவளுடைய பெர்சனல் ஸ்பேஸாகத் தந்தார். அதில் நிஹாரிகவைத் தவிர யாரும் நுழைய அனுமதியில்லை. இரண்டு பெண் வேலையாட்கள் மட்டும் சுத்தம் செய்ய அனுமதிக்கப்படுவர்.

தனது உடைகளைக் களைந்தவள் நீளமான தங்க நிறத்திலுள்ள துணியை எடுத்து உடலைச் சுற்றினாள். இரண்டு சுற்று உடலில் சுற்றியவள் துண்டின் இரு நுனிகளையும் கழுத்திற்கு பின் க்ராஸாகக் கொண்டுசென்று கட்டினாள்.

இடையைத் தொட்ட கூந்தலை அவிழ்த்து விட்டவள் குளத்தின் படியில் கால் வைக்க, வானிலிருந்த சூரியனும் சரி மண்டபத்தின் மேல் சூரிய ஒளி விழ வைத்திருந்த இடங்களில் அமர்ந்திருந்த பறவைகளும் சரி அவளின் அழகில் கிறங்கி வீழ்ந்தனர்.

கதிரவன் அவளின் மேல் வந்த மயக்கத்தில், தன் கதிர்கள் அவளின் பட்டுமேனியின் மேல் விழாமல் இழுத்துக்கொள்ள, ஆண் பறவைகளை பெண் பறவைகள் அங்கிருந்து விரட்டியடித்தனர்.

குளிர்ந்த நீருக்குள் இறங்கிய நிஹாரிகா மீனாக நீந்த ஆரம்பிக்க சூரியனிற்கோ அவளின் ஒயிலில் மயக்கம் உண்டானது. இரண்டடியில் தொடங்கி ஆறடி வரை நீந்திச் சென்றவள் அங்கிருந்த படியைத் தொட்டவள் மீண்டும் மீண்டும் உடல் களைக்க நீந்தினாள்.

அரைமணி நேரம் நீந்தியவள் அங்கு வலது பக்கப் படியில் கருங்கல்லால் செதுக்கியிருந்த குட்டிபெட்டியைத் திறந்து நலங்கு மாவை எடுத்து படியில் அமர்ந்து குளித்தாள்.

சிறிதுநேரம் அப்படியே அமர்ந்திருந்தவள் மீண்டும் நீருக்குள் பாய்ந்து மற்றொரு பக்கம் சென்று அமர்ந்து நன்றாக சாய்வதற்காக செதுக்கியிருந்த கல்லில் சாய்ந்து கண்களை மூடினாள்.

கண்களை மூடியவளிற்கு சிறிய வயது முதல் இப்போதுவரை இருக்கும் நினைவுகள் கண்முன் வர மூடியிருந்த வலது கண்ணில் மட்டும் இரண்டு சொட்டுக் கண்ணீர் வெளியேறி, தண்ணீரில் நனைந்திருந்த அவளின் ஈரக் கன்னத்தை சூடாக்கியது.

அது வலியின் கண்ணீரோ வேதனையின் கண்ணீரோ இல்லை. ஏக்கத்தின் கண்ணீர். என்னதான் தைரியமான நிமிர்வான பெண்ணாக இருந்தாலும், அவளிற்கு உள்ளுக்குள் இருக்கும் ஏக்கங்கள் அதிகம். அதை சக்கரவர்த்தி கூட அறிய முடியாத அளவிற்கு தன்னை வைத்துக் கொண்டிருக்கிறாள் நிஹாரிகா.

யாரிடமும் சென்று எதையும் கேட்டுப் பழக்கம் இல்லை அவளிற்கு. அப்படி சென்று கேட்கவும் அவளது ஈகோ அவளை விட்டதில்லை.

எந்த உறவுதான் அவளிற்கு நிரந்தரமாக இருந்திருக்கிறது. அவளின் தாத்தாவைத் தவிர.

இன்று ரிஷ்வந்தை சந்தித்துவிட்டு வந்தவளிற்கு உள்ளுக்குள் மகிழ்வதா நோவதா என்று தெரியாத நிலை. என்னதான் அவனிடம் ஒரு காலத்தில் பித்துப்பிடித்து இருந்தவள் என்றாலும், அவன் அவள் மேல் வாரி இறைத்த வார்த்தைகள் ஒன்றும் அவ்வளவு சாதரணமான ஒன்று அல்லவே, அவள் அதை மறப்பதற்கு.

சிறிதுநேரம் பாதி உடலைத் தண்ணீரில் வைத்து மீது உடலைக் கல்லில் சாய்த்துப் படுத்திருந்தவள் இறுதியாக நீரில் மூழ்கி எழுந்து, தன்னறைக்கு விரைந்து தனது ட்ரெஸிங் ரூமிற்குள் நுழைந்தாள்.

தனது பீச் நிற நைட்வியரை அணிந்தவள் கீழே இறங்கி வர அர்ஜூன் கொனிடெல்லா அமர்ந்திருந்தார்.

“கொனடானிக்கி அங்கிள்(வாங்க அங்கிள்)” வரவேற்றபடி வந்த நிஹாரிகாவின் கால்கள் அப்படியே நின்றது. வேறு யாராக இருக்க முடியும் ரிஷ்வந்த் தான்.

“வெல்கம்” தாத்தாவின் முன் முகத்தை சடுதியில் மறைத்து அவனை வரவேற்றவள் தாத்தாவின் அருகில் அமர்ந்தாள்.

பொதுவாக அனைவரும் பேசிக்கொண்டிருக்க நிஹாரிகா அவர்களின் பேச்சை கவனித்துக் கொண்டிருந்தாள். அவ்வப்போது ரிஷ்வந்தின் மேலும் அவளின் பார்வை படிந்து மீண்டது.

அன்று பார்த்தவனிற்கும் இப்போது பார்ப்பவனிற்கும் வித்தியாசங்களை வரிசைப்படுத்திக் கொண்டிருந்தாள். சாதா உடல்வாகில் இருந்தவன், இப்போது ஜிம் சென்று அகன்று விரிந்த தோள்களையும் சிக்ஸ் பேக்ஸையும் வைத்து அழகனாய் இருந்தவன் ஆணழகனாய் இருந்தான்.

இயல்பிலேயே எடுப்பான வசீகரமான முகத்தைக் கொண்டிருந்தவன் முதலில் தன் தோற்றத்திற்கு அவ்வளவு பராமரிப்பு எடுத்துக் கொண்டதில்லை. ஆனால், திரைத்துறையின் உள்ளே வந்தவனை இந்தத் துறை தலைகுப்புற மாற்றியிருந்தது.

சீராக அதே சமயம் ஸ்டைலாக வெட்டப்பட்டிருந்த கேசமும், பராமரிப்பால் நிறம் கொஞ்சம் கூடியிருந்த அவனின் தோல்களும், அமர்ந்திருந்த தோரணையும், பேசும்போது வெளிப்படும் ஆட்டிட்யூடும் என அனைத்தும் நிஹாரிகாவின் உள்ளத்தில் கேமராவில் பதிவது போல பதிந்து கொண்டிருந்தது.

நிஹாரிகாவின் பார்வையை உணர்ந்தவன், ‘என்ன?’ என்பதுபோல ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்க தன்னை மறைத்துக் கொண்டவள் எழுந்து டைனிங் ஹாலிற்குள் சென்றாள்.

அங்கிருந்த தண்ணீரை எடுத்துப் பருகியவள், சமையல் கட்டிற்குள் இருந்து வெளியே வந்த வேலையாள் சந்திரா மயக்கமாக தள்ளாடுவதை உணர விரைந்து சென்று அவரைப் பிடித்துக் கொண்டாள்.

“என்ன சந்திராமா, பீப்பி டேப்ளட்ஸ் போடறீங்களா இல்லியா?” அங்கு தனது பாட்டி வந்ததில் இருந்து வேலையில் இருக்கும் சந்திராவைக் கடிந்தாள்.

தன் பாட்டியுடைய வயதில் இருப்பவர் என்பதாலும், சிறிய வயதில் இருந்து தன்னைப் பார்த்துக்கொண்டவர் என்பதாலும் நிஹாரிகாவிற்கு அவரின் மேல் பாசம் அதிகம்.

“இந்த ஜூஸ்…” அவர் தடுமாற, தனக்காக வைத்திருந்த ஜூஸ் டம்ளரை எடுத்தவள், “இதை முதல்ல குடிங்க நீங்க… நான் தந்திடறேன்” என்று அவரை ஜூஸை பருக வைத்தவள் வெளியே ட்ரேயுடன் வந்தாள்.

அர்ஜூனிற்கு முதலில் தந்தவள், ரிஷ்வந்திற்கு ஜூஸை நீட்டிய சமயம், “பங்காரம்! ரிஸ்வந்த் ஷூட்டிங் டைம்ல நம்ம அவுட்டவுஸ்ல தான் தங்கிவாரு” என்று சக்கரவர்த்தி சொன்னது தான் தாமதம் கையிலிருந்த ட்ரேவை வந்த கோபத்தில் அப்படியே ரிஷ்வந்தின் மேல் கவிழ்த்திவிட்டாள்.

“ஷிட்!” என்றாள்.

“அட, கேர்புல்லா இருக்கலாம்லடா” அங்கலாய்த்த சக்கரவர்த்தி, “வாஷ் ரூமுக்கு கூட்டிட்டுப்போ பங்காரம்” என்றார்.

அவள் ஜூஸைக் கொட்டியதற்குத் தான், ‘ஷிட்’ என்றாள் என இருவர் நினைத்திருக்க, ரிஷ்வந்திற்கு மட்டுமே தெரியும் அவன் இங்கு தங்குவதற்காகத் தான் அவள், ‘ஷிட்’ என்றாள் என்று.

ஒரு இளநகை முகத்தில் படர எழுந்தவன், “வேர் இஸ் தி வாஷ்ரூம்” வினவ,

“வாங்க” என்றழைத்துச் சென்றாள்.

கீழ் தளத்திலேயே இருந்த அறைக்குள் அவனை அழைத்துச் சென்றவள், அதற்குமேல் அவனிற்கு சொல்லத் தேவையில்லை என்று நின்றுவிட அவன் பின்னால் வந்தானா இல்லையா என்ற அளவிற்கு அறையில் அமைதி நிலவியது.

சுவற்றில் இருந்த ஓவியத்தை வெறித்தபடி நின்றிருந்த நிஹாரிகா திரும்ப, தனக்கு வெகு அருகில் நின்றிருந்த ரிஷ்வந்தின் மேல் இடித்து நின்றாள்.

சட்டென எழுந்த கோபத்தை அடக்கியவள், “வாஷ் ரூம் அங்க” என்று கை காட்டினாள்.

இருநொடி அவளை அமைதியாக ஊடுருவிப் பார்த்தவன், “டூ யூ ஸ்டில் லவ் மீ?” என்று நேராகக் கேட்க நிஹாரிகாவின் கோபம் தாறுமாறாக ஏறியது.

“எனக்கு நீ யாருன்னே தெரியாது… இப்படி கொஸ்டின் பண்ற வேலையெல்லாம் வேணாம்” என்றாள் கடுப்பாக.

அவளிற்கு இருக்கும் கோபம் என்ன அவ்வளவு சாதாரணமானதா?

“ஸோ, ஜிலேபி உனக்கு என்னை யாருன்னு தெரியாது?” ரிஷ்வந்த் நக்கலாக.

“யெஸ்”

“நீ என்னை லவ் பண்ணல அப்போ?”, “அப்படித்தானே ஜிலேபி?”

“ஆமா” நிஹாரிகா அவனை நேராகப் பார்த்தபடி.

“தெரியாதவன் ஜிலேபின்னு கூப்பிடறேன் அதுக்கு எதுவும் அப்ஜெக்ட் பண்ணாம, லவ்வை அப்ஜெக்ட் பண்றதுலையே குறியா இருக்கியே” அவன் வினவ, நிஹாரிகா உள்ளுக்குள் தடுமாறித்தான் போனாள்.

இருந்தும் தனது நிமிர்வை குறைக்காமல் அமைதியாக எங்கோ பார்த்தபடி அவள் நிற்க, “ஓகே உன்கிட்ட கடைசியா கேக்கணும்னு நினைச்சேன்… கேட்டுட்டேன்… ஸீ மிஸ்.நிஹாரிகா எனக்கு இன்னும் ஃபோர் மன்த்ல மேரேஜ்” அவன் விஷயத்தை உடைக்க நிஹாரிக்காவிற்கு அடிவயிற்றில் ஏதோ உணர்வு எழுவதை உணர
முடிந்தது.

அவன் விளையாடுகிறானோ என்று மனதில் தோன்ற, “ம்ம், கங்கிராட்ஸ்” என்றாள்.

“தேங்க்யூ ஸோ மச் ஜிலே… ம்கூம் நிஹாரிகா” என்றவன் சட்டையில் மாட்டியிருந்த தனது டீட்டா ஐவியர் சன் க்ளாஸை கழற்றி அவளின் கைகளில் திணித்துவிட்டு வாஷ் ரூமிற்குள் புகுந்தான்.

‘கல்யாணமாம் கல்யாணம்… போடா போ நீ எவள கல்யாணம் பண்ண எனக்கென்ன?’ மனதிற்குள் திட்டியவள் அவனின் சன் க்ளாஸின் மேல் கோபத்தைக் காட்டி அதை அழுத்திப் பிடித்தபடி நின்றிருந்தாள்.

“நிஹாரிகா” அவனின் குரல் வாஷ்ரூமில் இருந்து கேட்க, ‘இப்ப என்னவாம் இவனுக்கு’ என்று உள்ளுக்குள் பொருமியவள் அவனிற்கு பதில் பேசாமல் நின்றாள்.

“நிஹாரிகா!” மீண்டும் அவனின் குரல் அவளையழைக்க,

“என்ன?” என்றாள் கோபத்தோடு. கிட்டத்தட்ட குரலை உயர்த்தியிருந்தாள்.

“இந்த சர்ட்டை வாங்கி கொஞ்சம் ட்ரை பண்ணித்தா” சட்டையை மட்டும் வெளியே ரிஸ்வந்த் நீட்ட, ‘தலையெழுத்துடா சாமி’ என நினைத்தவள் சென்று வெடுக்கென்று சட்டையைப் பறித்தாள்.

அவனின் சட்டையை வாங்கியவள் அதைக் காய வைக்க, நீண்ட நேரம் வாஷ் ரூமிற்குகள் நிற்க முடியாதவன் வெளியே வர இவளோ சங்கடத்தோடு திரும்பிக் கொண்டாள்.

சினிமாத் துறையில் இருப்பவளுக்கு ஒரு ஆணை சட்டை இல்லாமல் பார்ப்பது அவ்வளவு பெரிய விடயம் இல்லைதான். ஆனால், இப்படித் தனியறையில் அதுவும் ரிஷ்வந்துடன் நிற்பது அவளிற்கு மூச்சு முட்டியது.

“எப்படி வந்து ஷோ காமிக்கறான் பாரு” அவள் முணுமுணுக்க அது அவனிற்கும் தெள்ளத்தெளிவாகக் கேட்டது.

“நல்லா வாயைத் திறந்து பாக்க வேண்டியது… அப்புறம் தப்ப ஆம்பிளைக மேல போட வேண்டியது” அவனும் வாய் அடங்காமல் அவளிற்கு கேட்கும் அளவிற்கு முணுமுணுக்கவில்லை. கேட்கும் அளவிற்கு நன்றாகவே பேசினான்.

உடனே திரும்பி முறைத்தவளை, “ரொம்ப முறைக்க ட்ரை பண்ணாதே… என் ஷர்டை எடு” என்றவனிடம் கிட்டத்தட்ட சட்டையை தூக்கி வீசினாள்.

இளநகையுடன் சட்டையைப் பிடித்தவன், “என் பியான்சியைப் பார்க்கணுமா?” சட்டையை அணிந்தபடியே வினவ,

“வொய் ஷுட் ஐ?” என்றாள். அதாவது நான் எதற்கு அவளைப் பார்க்க வேண்டும் என்றாள்.

“வொய் வோன்ட் யூ?” ரிஸ்வந்த் விடாமல். நீ ஏன் பார்க்கக்கூடாது என்றது அவனின் வாதம்.

“லிஸன் ரிஷ்வந்த்… ஐம் திஸ் மூவி புரொடியூசர் அன்ட் யூ ஆர் ஆன் ஆக்டர்… அவ்வளவுதான் நமக்குள்ள… அதுக்கு மேல பேசுனா நல்லா இருக்காது சொல்லிட்டேன்” நிஹாரிகா பொறுமையிழந்து பேச,

அவளது கன்னத்தை அழுத்திப் பிடித்து அருகில் இழுத்தவன், “நமக்குள்ள என்னன்னு உன் முதுகுல இருக்க மச்சம் சொல்லும்டி” என்றான் பல்லைக் கடித்து கோபத்தை அடக்கியபடி.

பழைய நினைவுகள் கண்முன் நிஹாரிகாவிற்கு வர, நிஹாரிகாவிற்கு சுறுசுறுவென கோபம் தலைக்கேறியது.

“அது எல்லாம் முடிஞ்சிடுச்சு ரிஷ்வந்த்… உன்னோட வார்த்தைனால எல்லாம் எப்பவோ முடிஞ்சுது… நீ போய் உன் மேரேஜை அரேஞ்ச் பண்ணு… கண்டிப்பா நான் உன் மேரேஜுக்கு மொத ஆளா வருவேன்” என்றாள் அழுத்தமாக.

“மேரேஜ் தானே… அதுக்கென்ன தமிழ்,, தெலுங்கு என்ன சௌத் இந்தியன் சினி இண்டஸ்ரிஸ் திரும்பி பாக்கற அளவுக்கு பண்றேன் பாரு…” அவளிடம் இருந்து விலகியவன், “கல்யாணப் பத்திரிகை அடிச்சிட்டு வந்து முதல்ல உனக்கு சொல்றேன்” என்றான்.

“அட்வான்ஸ் விஷஸ்” என்றாள் தெளிவானக் குரலில்.

வழக்கம்போல ஒரு இளநகையுடன் கேசத்தைக் கோதியவாறு அவன் அறையைவிட்டு வெளியேற நிஹாரிகாவிற்கு ஆத்திரமாக வந்தது.

‘நீ எப்படி ஒருத்தியக் கல்யாணம் பண்ணிட்டு நிம்மதியா வாழ்றன்னு பாக்கறேன்டா’ அவன் சென்ற திசையை வெறித்தபடி மனதிற்குள் திட்டித் தீர்த்தாள்.

அவனைத் தள்ளி நிறுத்தி பேசியபோதும் அவன் திருமணம் என்றதும் அவள் மனம் அடிபட்டுத்தான் போனது. அந்த வலியைக் கூட கோபமாகத் தான் காட்டத் தெரிந்தது அந்தப் பெண்ணிற்கு.

சிறிதுநேரம் கழித்து வெளியே வந்தவள் இருவரும் கிளம்ப தாத்தாவுடன் நின்றிருந்தாள் மரியாதை நிமித்தமாக.

இருவரும் கிளம்பிய பின் பேத்தியின் முகத்தைப் பார்த்த தாத்தா, “பங்காரம், ரிஷ்வந்துக்கும் உனக்கும் என்ன பிரச்சினை?” நேராக விஷயத்திற்கு வர அவரின் கேள்வியில் நிஹாரிகா அதிர்ந்து நின்றாள்.

“தாத்தை… யா” அவள் மறுத்துப் பேச ஆரம்பிக்க,

“எனக்கு எல்லாம் தெரியும் பங்காரம்… உன்னை கண்காணிக்கறதைத் தவிர எனக்கு பெரிய வேலை எதுவும் இல்ல… சந்தேகம்னு தாத்தாவை தப்பா நினைச்சிடாத… நீ எந்தத் தப்பும் பண்ண மாட்ட…. ஆனா, உன்ன எந்த தப்பும் நெருங்கக் கூடாதுல்ல…” என்றவர்,

“நீயா இந்த நாலு வருஷத்துல சொல்லுவேன்னு நினைச்சேன்…” என்றார் பெருமூச்சை வெளியிட்டபடி. அவருக்கு அனைத்தையும் பகிர்ந்து கொள்ளும் பேத்தி இதைத் தன்னிடம் பகிரவில்லை என்ற மனவருத்தம் அதிகம். “பிரச்சனை தான் தாத்தையா… எனக்கு எல்லாமே பிரச்சனை தான்… என் லைஃப்ல உங்கள, பாட்டி தவிர அமைஞ்ச எந்த ரிலேஷன்ஷிப் தான் சரியா இருந்திருக்கு சொல்லுங்க?” இறுக்கமான குரலில் வினவியவள் வெளியே அமைத்திருந்த பூங்காவை நாடிச் சென்றாள்.

பேத்தி செல்வதையே பார்த்துக்கொண்டிருந்த தாத்தாவிற்கு மனதிற்குள் வலித்தது. நான்கு வருடத்திற்கு முன் வந்து நின்ற பேத்தியைப் பார்த்தவருக்கு என்ன ஏது என்று புரியவில்லை.

நிஹாரிகாவிடம் கேட்பதற்கும் அவருக்கு மனம் இடம் கொடுக்கவில்லை. ஏற்கனவே எதையோ நினைத்து தவித்துக் கொண்டிருப்பவளிடம் எப்படிக் கேட்பது என்று விட்டுவிட்டார்.

பேத்தியிடம் கேட்பதைத் தான் கைவிட்டாரே தவிர என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்வதை அவர் கைவிடவில்லை. அவருக்கு இல்லாத ஆட்களா அல்லது தெரியாத ஆட்களா.

விசாரித்ததில் அவருக்கு அப்போதே இருவரைப் பற்றியும் தெரிய வந்தது. ஆனால் முழுதாக என்ன பிரச்சினை என்று அறிய முடியவில்லை.

வீட்டிலேயே முடங்கியிருந்தவளைத் தான் அவர் அழைத்து புரொடக்ஷன்ஸை ஒப்படைத்தது. ரிஷ்வந்தின் ஞாபகங்களை ஓரம் கட்டி வைக்க அவள் தனக்குப் பிடிக்காதத் துறையில் காலை எடுத்து வைத்தாள்.

முதலில் தடுமாறியவளை சக்கரவர்த்தி அரவணைத்து சில நுணுக்கங்களையும் தந்திரங்களையும் கற்றுத் தர அதன் பிறகு அவள் தடுமாறவில்லை. அவளின் வேகத்திலும் விவேகத்திலும் தான் மற்றவர்கள் தடுமாறினர்.

அடுத்த இரண்டு வருடத்தில் ரிஷ்வந்தின் முதல் படம் ரிலீஸ் ஆக நிஹாரிகா கண்டும் காணாததுபோல இருந்தாள். சக்கரவர்த்தி தான் அவனின் படத்தை பேத்தி அறியாமல் பார்த்துவிட்டு அவனின் நடிப்புத் திறமையை எடை போட்டவரின் மூளையும் திரைத்துறையின் அனுபவமும் கணக்கிட்டது. இனி இரண்டு வருடங்களில் அவன் எட்டப்போகும் உயரம் அதிகம் என்று.

அவனின் ஒவ்வொரு படமும் வெளியாகும் போது பேத்தி எப்பொழுதாவது இருவரைப் பற்றி பகிர்ந்துகொள்வாள் என்றுதான் அவர் நினைத்ததே. ஆனால், அவருக்கு அவள் அந்த வாய்ப்பை அளிக்கவே இல்லை.

அவர் இங்கு சிந்தனையில் ஆழ்ந்திருந்த நேரம், ரிஷ்வந்த் திருமணத்திற்கான ஏற்பாடுகளை தொடங்க ஆயத்தமானான்.