நிஹாரி-30

IMG-20211003-WA0016-915de6fa

நிஹாரி-30

“அம்மா” என்ற அலறலோடு விவாஹா தன் பெண் குழந்தையை ஈன்றெடுக்க, வெளியே இருந்த சக்கரவர்த்தி விரக்கதியாய் அமர்ந்திருக்க, வரலட்சுமி பதற்றத்தோடு நின்றிருந்தார். மகளை பிரசவ அறைக்குள் அனுப்பிவிட்டு வெளியே காத்திருக்கும் ஒவ்வொரு தாயிற்கும் இருக்கும் பதட்டம் அது.

சிறிதுநேரத்தில் வெளியே வந்த நர்ஸ், “இந்தாங்க ம்மா உங்க பேத்தி” குழந்தையைக் கையில் தர, வெள்ளை சுருளுக்குள் இருந்த குட்டி ரோஜாக் குவியலைப் பார்த்த வரலட்சுமி, ஆசையாய் குழந்தையை வாங்கிக்கொள்ள, சக்கரவர்த்தி குழந்தையைப் பார்க்கக் கூட இல்லை. அவருக்கு அவர் மகள் மட்டுமே இப்போது முக்கியமாய் இருந்தது.

“நம்ம விவாஹா மாதிரியே இருக்குங்க குழந்தை” அவர் முகத்தின் முன் குழந்தையை வரலட்சுமி காண்பிக்க, மனைவியை பார்வையாலேயே எரித்தவர், “என் மக படற கஷ்டத்தை நான் நினைச்சிட்டு இருக்கேன். ஆனா, உனக்கு சந்தோஷமா இருக்கா. என் மகளுக்கு கஷ்டம் தர்ற எதுவும் எனக்கு வேணாம்” என்று எகிற,

“அதுக்குன்னு பச்சக்குழந்தை மேல வெறுப்பக் காட்டுவீங்களா?” என்று பொங்கி வந்த கண்ணீரை அடக்கியவர், “கண்ணு பாருங்க.. அப்படியே விவாஹா மாதிரியே” என்றபடி சக்கரவர்த்தியின் கரத்தில் வரலட்சுமி குழந்தையை வைக்க, உறக்கத்தில் இருந்து அப்போதுதான் விழித்திருந்த குழந்தை, தன் சிறிய பன்னீர் நிற இதழ்களை விரித்து கொட்டாவியை வெளிப்படுத்திவிட்டு, சக்கரவர்த்தியைப் பார்த்து, ‘ங்’ என்ற மெல்லிய சத்தத்தோடு சிரிக்க, அவரின் தண்டுவடம் சிலிர்த்துப் போனது பேத்தியின் சிரிப்பில்.

சக்கரவர்த்தியின் கண்கள் மகள், பேத்தி இருவரின் எதிர்காலத்தையும் நினைத்துக் கலங்க, கணவர் முதன் முதலாக கலங்குவதைக் கண்ட வரலட்சுமியும் கலங்கினார்.

சில மணிநேரத்தில் விவாஹாவும் கண் விழித்துவிட, வரலட்சுமி மகளின் கைகளில் குழந்தையை வைக்க, மகளைப் பார்த்த விவாஹாவுக்கு உடல், உள்ளம் எல்லாம் தெரியாத பரவசம் பரவியது. படித்துப் பெறாத பட்டம் அல்லவா தாய்மை. இத்தனை மாசம், தனது கருவறையில் அசைந்து அசைந்து தன்னை சிறு பயத்திலும், சிறு ஆனந்தத்திலும் ஆழத்திய மலர் பொதியை நேசம் வழிய அணைத்த விவாஹாவின் கண்கள் கலங்கியது.

சிறிது நேரம் குழந்தையின் மேல் வந்த நறுமணத்தை அனுபவித்தவர், அந்தக் குட்டி நெற்றியில் விவாஹா முத்தமிட, ‘ம்ங்’ என்று சிணுங்கிய மகளைக் கண்டு புன்னகைத்தவரைக் கண்டு அவரின் பெற்றோருக்கு கண்கள் கலங்கியது. குழந்தைக்கு பசியை ஆற்றிய விவாஹா, உடையை சரிசெய்துவிட்டு மகளைப் பார்க்க, முதல் முறை என்பதாலோ என்னவோ இரண்டு வெண்ணைக் கன்னங்களும் பால் குடித்ததில் ரோஸ் நிறத்தில் சிவந்திருந்தது .

‘அச்சோடா’ என்று தாய்மைக்கே உரிய மலர் வதனம் பூரிக்க மகளை ரசித்தவர், இரண்டு விரல்களை வைத்து இரு கன்னங்களையும் மென்மையாக தடவிக்கொடுத்துவிட்டு, உறங்கும் மகளை அலுங்காமல் அருகில் கிடத்தினார். வரலட்சுமி மகளுக்கு உணவை ஊட்டத் துவங்க, சக்கரவர்த்தி மருத்துவரைப் பார்க்கச் சென்றிருக்க, வித்யாதரன் உள்ளே வந்தான்.

திடீரென உள்ளே நுழைந்த வித்யாதரனைப் பார்த்த விவாஹா ஆத்திரத்தில், “வெளியே போ” என்று கத்த, “விவாஹா, இந்த மாதிரி சமயத்துல கத்தக்கூடாது..” மகளை சமாதானம் செய்த வரலட்சுமி, வந்திருந்தவனை என்ன என்பதுபோல பார்க்க, வித்யாதரனோ குழந்தையை அருகில் வந்து பார்க்க, விவாஹா, “அம்மா!” என்று அன்னையைக் கடிந்தார்.

தன் உயிர்நீரில் உருவான குழந்தையை சிறிது நொடி பார்த்த வித்யாதரன் கிளம்ப, விவாஹா, “இனி, அவன் வந்து என் பொண்ணை பார்க்கக்கூடாது சொல்லிட்டேன்..” என்று அன்னையிடம் சண்டையிட, சக்கரவர்த்தி உள்ளே வந்தார்.

வரலட்சுமி கணவரிடம் அனைத்தும் கூற, அங்கிருந்த நாற்காலியில் பெருமூச்சுடன் அமர்ந்தவர் மகளை யோசனையாக ஏறிட்டுப் பார்த்தார். தந்தையின் சிந்தனை புரிந்தவராக விவாஹா, “நான் உங்களுக்கு பாரமா இருக்கனா ப்பா?” என்று கரகரத்த குரலில் வினவ, சக்கரவர்த்தி மகளை உணர்வற்ற பார்வை பார்த்தாரே தவிற எதுவும் பேசவில்லை.

சிறிது நொடிகளில் அமைதியைக் கலைத்தவர், “விவாஹா, நான் நீ பிறந்ததுல இருந்து உன்னை எதுக்கும் கட்டாயப்படுத்துனது இல்ல.. ஆனா, இப்ப ஒரு முக்கியமான முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்துல நாம இருக்கோம்.. உனக்கு துணை எதுவும் வேணாம இருக்கலாம்.. ஆனா, குழந்தைக்கு கண்டிப்பா ஒரு அப்பா தேவை.. தேவ் உன்னை குழந்தையோட ஏத்துக்கறேன்னு சொன்னாலும் நீ ஒத்துக்க மாட்டிற.. அட்லீஸ்ட் வித்யாதரனையாவது ஏத்துக்கடா” சக்கரவர்த்தி கெஞ்சும் தொணியில் கேட்க, விவாஹாவின் கண்கள் வெறுமையை சுமந்து குழந்தையையே வெறித்தது.

தந்தையை நிமிர்ந்து பார்த்தவர், “கடைசில நீங்களும் சராசரி மனுஷங்க போல இப்படி பேசறீங்களே நானா.. என்னால..” என்று எதையோ தொடங்கியவர் வந்த வார்த்தைகளை சொல்ல இயலாமல் அப்படியே விழுங்கினார்.

“அவன் ஒரு ரேப்பிஸ்ட் நானா.. என்னை கடத்திட்டு போய் ரேப் பண்ண குற்றவாளி.. அவனோட போய் என்ன வாழ சொல்றீங்க?” நிஹாரிகா கோபமாக தந்தையைப் பார்த்துக் கேட்க, “பின்ன என்ன பண்ண சொல்ற எங்களை?” என்று கண்ணீரோடு வெடித்தார் வரலட்சுமி.

“இந்தக் குழந்தைக்கு யாரை அப்பான்னு சொல்லப் போற?” வரலட்சுமி வினவ, “அவளுக்கு இப்படி ஒரு அப்பன் தேவையில்ல” என்றார் விவாஹா முடிவாக.

சக்கரவர்த்திக்கு கோபம் வந்தாலும், மகளின் மனநிலையையும் உடல் நிலையையும் கருதி வெளியே சென்றுவிட, வரலட்சுமி கண்ணீரோடு, “இங்க பாரு விவாஹா.. உன்னை இப்படி எங்கனால பாக்க முடியல.. ஊர் பேசற பேச்சையும் கேக்க முடியல.. இதையே நினைச்சு உங்க அப்பாக்கு எதாவது ஆகிடுமோன்னு எனக்கு பயமா இருக்கு.. இதுக்காகவாது தயவு செஞ்சு ஏதாவது நல்ல முடிவை எடு” என்று கண்ணீரோடு மகளிடம் இறைஞ்சியவர் வெளியே வந்துவிட, குழந்தையோடு தனித்து விடப்பட்டார் விவாஹா.

சிறிதுநேரம் கழித்து உள்ளே வந்த அன்னையிடம், “அவனையே என் பொண்ணுக்கு அப்பாவா ஏத்துக்கறேன்.. ஆனா, என்னை இந்த கல்யாணம் கருமாதி இதெல்லாம் பண்ண சொல்லாதீங்க.. அவனோட எல்லாம் என்னால வாழமுடியாது” என்றார் எங்கோ பார்த்தபடி.

மகள் இந்த அளவிற்கு இறங்கி வருவதே பெரிது என்று எண்ணிய வரலட்சுமி கணவரிடம் விஷயத்தைக் கூற, அவராலுமே வித்யாதரனை மருமகனாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை தான். தன் மகளை இந்த இழிநிலைக்கு தள்ளிவிட்டவனின் மேல் இப்போதும் அவருக்கு ஆத்திரம் குறையவில்லை. குழந்தைக்காக மட்டுமே இப்போது அவர் மகளிடம் பேசியது. இல்லை என்றால் நிச்சயம் மகளை அதிலிருந்து வெளியே கொண்டு வந்து வேறொரு திருமணம் செய்து வைத்திருப்பார்.

உள்ளே குழந்தையைப் பார்த்தபடி படுத்திருந்த விவாஹாவுக்கோ அன்றைய நாளுக்கு மனம் சென்றது.

தேவின் காலருகே கதறிக் கொண்டிருந்த விவாஹாவை எழுப்பிய தேவ், “யாரு?” என்று கொலைவெறியுடன் கண்களில் சிவப்பு ரேகை படரக் கேட்க, தேம்பித் தேம்பி அழுதவர் அவரைப் பார்க்க முடியாமல், “வித்யாதரன்” என்று சொல்ல, தேவ் விவாஹாவின் தலையைப் பிடித்து நிமிர்த்தி, “நீ தலை குனிய வேண்டிய அவசியம் இல்ல விவாஹா” என்றுவிட்டு, வேக எட்டுக்களை வைத்து வித்யாதரன் கொன்றுவிடும் வெறியோடு வெளியேறினார்.

ஆசையாய் வளர்த்த மகள் வலியில் நிற்கவே முடியாமல் நிற்பதைக் கண்ட சக்கரவர்த்தியும், வரலட்சுமியும் மகளை வந்து தாங்க, “அம்மாஆ! வலிக்குது ம்மா” என்று விவாஹா அன்னையின் மேல் சாய்ந்து கதற, சக்கரவர்த்தியும் மகளை இந்நிலைக்கு ஆளாக்கிய வித்யாதரனைக் கொல்லும் முடிவுடன் வெளியே செல்ல எத்தனிக்க, அவரின் கையைப் பிடித்த விவாஹா, “நானா(அப்பா) எனக்கு பயமா இருக்கு.. என்னை விட்டுட்டு போகாதீங்க நானா” என்று அழுக, அதுவரை கண்ணீரோடு சமையல் அறை வாயிலில் நின்று, தங்கள் வீட்டு எஜமானி துடிப்பதைக் கண்ட சந்திராமாவை அழைத்த சக்கரவர்த்தி, மகளை அறைக்கு அழைத்துச் செல்லச் சொல்லிவிட்டு, அவரின் நண்பரும் குடும்ப மருத்துவருமான ஒருவருக்கு அழைத்தார்.

இங்கே ப்ரொடக்சனுக்கு வந்திறங்கிய தேவ், அங்கிருந்தவனை அழைத்து வித்யாதரன் எங்கே என்று விசாரித்துவிட்டு அவன் இருக்கும் இடம் நோக்கி ஆத்திரத்துடன் சென்றவர், அங்கு யாருடனோ சிரித்துப் பேசி சாப்பிட்டுக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். ஆவேசமாக சென்றவர் அவனை நாற்காலியோடு எட்டி உதைக்க, திடீர்த் தாக்குதலில் தலைகுப்புற விழுந்தவனின் நாசி உடைந்து இரத்தம் வழிந்தது.

ஆத்திரம் தலைக்கேற அங்கிருந்த இரும்பு நாற்காலியை எடுத்து அவனின் மேல் வீசியவர், அவனை எட்டி உதைத்து மிதிக்க, அவனோ அவரின் கோபத்தைப் பார்த்து சைகோ போல் சிரிக்கத் தொடங்கினான். அவனின் சிரிப்பில் ஆத்திரம் தலைக்கேற அவனின் காலரைப் பற்றியவர் சுவற்றில் அடிக்க இழுத்துச் செல்ல அங்கிருந்தவர்கள் சூழ்ந்து இருவரையும் பிரித்து எடுக்க படாத பாடு பட்டனர்.

அத்தனை அடி வாங்கி இரத்தம் வழிய இருந்தும் சிரித்துக்கொண்டிருந்த வித்யாதரனை ஒருவர் பிடித்து எழுப்ப, தேவ் மனம் அப்போதும் கேட்கவில்லை. நாலைந்து பேர் கூடியும் அவரை கட்டுப்படுத்த முடியாமல் போக, அவனை இறுதியாக அடிவயிற்றில் எட்டி உதைத்தவர், “********! ஏன்டா இப்படி பண்ண?” என்று கண்களில் கண்ணீர் ரேகையோடும் ஆத்திரத்தின் சாயலோடும் கத்த,

வாயில் வழிந்த இரத்தத்தைத் துப்பியவன், “உன்னை தோக்கடிக்கனும் மகாதேவா.. அதான் என்னோட ஒரே குறிக்கோள்.. அதான் அவளை யூஸ் பண்ணிக்கிட்டேன்.. சும்மா சொல்லக்கூடாது அவ..” என்று தொடங்கிய வித்யாதரனின் வாயை அடித்து உடைத்தவரை, அங்கு இருந்தவர்கள் கெஞ்சிக் கேட்டு அனுப்பி வைத்தார்கள்.

விவாஹாவின் வீட்டிற்கு வந்தவர், கீழே இருந்த சந்திராமாவிடம் அனைவரும் எங்கே என்று கேட்டுவிட்டு மேலே சென்றார். அதே சமயம் சக்கரவர்த்தி வெளியே வர, “ஸார் எனக்கு உங்க பொண்ணை அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாணம் பண்ணி தர்றீக்களா?” மகாதேவன் கேட்க, அவரின் கேள்வி சக்கரவர்த்திக்கு பெருமையாய் இருந்தாலும், இப்போதேவா என்று தயக்கமாக இருந்தது.

“அதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன்” என்ற கனீர்க் குரல் வந்த திசையை நோக்கி இருவரும் திரும்ப, தலையில் ஈரம் சொட்டச்சொட்ட நின்றிருந்தார் விவாஹா.

“நான் சொல்றதைக் ஒரு நிமிஷம் கேளு விவாஹா?” மகாதேவன் ஒரு எட்டு எடுத்துவைக்க, “வேண்டாம். போயிடுங்க என்னால அதைப்பத்தி யோசிக்க முடியல. ப்ளீஸ்” என்று இரு கரம் கூப்பி இறைஞ்சியவர், அறைக்குள் சென்று அடைந்துகொண்டார்.

தன்னவளின் செயலில் சோர்ந்துபோன மகாதேவன் சக்கரவர்த்தியைப் பார்க்க, “கொஞ்ச நாள் போகட்டும்” என்க, அங்கிருந்து தொய்ந்தபடி மனவலியுடன் வெளியேறினார் மகாதேவன்.

மகாதேவன் வருவதற்கு முன் விவாஹாவை பரிசோதித்துவிட்டுச் சென்ற மருத்துவர் அவருக்கு சில மாத்திரைகளை, மருந்துகளை தந்துவிட்டுச் சென்றிருந்தார். இரவு மகளுக்கு மருந்துகளை போட்டுவிட வரலட்சுமி வர, கத்தி ஆர்ப்பாட்டம் செய்து தன் அறைக்குள் யாரையும் அனுமதிக்காத விவாஹா, “நானே எல்லாம் பாத்துக்கறேன்” என்று படுக்கையில் அழுகையோடு விழுந்தார்.

நேற்று இரவு காதலாய் தேவுடன் அவர் பேசியது நினைவில் வர அவரால் அழ மட்டுமே முடிந்தது. கோபத்தில் மருந்து மாத்திரைகளைத் தூக்கி கண்மன் தெரியாமல் விவாஹா எரிய, அவருக்கு அப்போது தெரியவில்லை அதில் கருத்தடை மாத்திரையும் இருப்பதுபற்றி.

மருத்துவர் ஒவ்வொன்றையும் தெளிவாய் விவாஹாவிடம் சொல்லி இருக்க, அதெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளும் நிலையில் அவர் இருந்தால் தானே?

அதன் விளைவாய் அடுத்த இரு மாதங்களில் அவர் கருவுற்றார். அவருக்கு பிசிஓடி பிரச்சனை இருந்ததால் அவர் நாட்கள் தள்ளிச் சென்றதை பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை. ஏன் மசக்கை தொந்திரவும் வராமல், அவரை வைத்து அவரது வாழ்க்கை விளையாடிக் கொண்டிருந்தது. அதற்கு இடையில் தேவ் அவரை பலமுறை சந்திக்க வந்தும் அவர் அறைக்குள் முடங்கிக்கொண்டார். அவரின் முகத்தை விவாஹாவால் சந்திக்கவே இயவில்லை.

மகளின் தோற்றம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்ல, மனம் உறுத்த வரலட்சுமி மருத்துவரை வர வைத்திருக்க, விவாஹா கருவுற்றிருக்கும் செய்தி அறிந்து அனைவரும் இடிந்து உட்கார்ந்தனர். விவாஹா உட்பட.

சக்கரவர்த்தி குழந்தையை அழிக்க முடியுமா என்று மருத்துவரிடம் கேட்க, அந்த நிலையை தாண்டி இருந்தது விவாஹாவின் வயிற்றில் உள்ள கரு. முதலில் விவாஹாவுக்கும் வித்யாதரனின் குழந்தையை சுமக்கப் பிடிக்கவில்லை. கடனே என்று சுமந்தவரை, உள்ளே இருந்த நம் சேட்டைக்காரி ஆடி அசைந்து குலுங்கி அன்னையை தன் பால் இழுத்துவிட்டாள்.

அப்போதுகூட மகாதேவன் குழந்தையோடு ஏற்றுக் கொள்கிறேன் என்றுதான் கூறினார். “எனக்காக உங்க வாழ்க்கையை அழிச்சுக்காதீங்க தேவ். நான் எல்லாமே கேள்விபட்டேன். நீங்க தோக்கக் கூடாது. நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி, இன்னும் சினில பெரிய ஆளா வாங்க. அன்ட் இதுவே நீங்க என்னை பாக்க வர்றது கடைசியா இருக்கட்டும்” என்ற விவாஹா எட்டுமாத வயிற்றோடு எழுந்து செல்ல, அவர் செல்வதையே பார்த்திருந்தவர் விரக்தியுடன் எழுந்தார். அதன்பிறகு அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால், திரைத் துறையில் படைத்த சாதனைகள் அதிகம்.

அதற்கு நடுவில் விவாஹாவுக்கு பெண் குழந்தையும் பிறந்துவிட, அதை செவி வழியாக அறிந்தவருக்கு, மனம் ஏனோ விவாஹாவையும் குழந்தையையும் பார்க்க எண்ணியது. ஆனால், ஏற்கனவே மீடியாகாரர்கள் வேறு எதையாவது எழுதிக் கொண்டிருக்க, வந்த ஆசையை அடக்கிக் கொண்டு வேதனையுடன் தன் வேலையை மட்டும் பார்க்க ஆரம்பித்தார்.

வித்யாதரனை வீட்டிற்கு அழைத்த சக்கரவர்த்தி அனைத்தையும் பேசியிருக்க, அவனுக்கு சக்கரவர்த்தியின் மருமகனாய் இருக்க கசக்குமா என்ன?

தண்டச் சோறாக வீட்டிலேயே இருக்கத் தொடங்கியவன், இயக்குனர் ஆகிறேன் என்ற பெயரில் அங்கு இங்கு என்று காசை ஊதாரியாக செலவு செய்துகொண்டு ஊர் சுற்றிக்கொண்டிருந்தான். விவாஹாவும் அவனைத் தன் அறையில் அனுமதிக்காமல், அவனை ஒரு மனிதனாகவே கண்டுகொள்ளாமல் இருந்ததால் அவனை கேட்போர் யாரும் இல்லை. விஷயம் அறிந்த மீடியாவும் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக எண்ணி அதை எழுதவும் செய்தனர். மான மரியாதைக்காக சக்கரவர்த்தியும் அவனை எதுவும் கேட்காமல் இருந்தார்.

அவ்வீட்டில் இருப்பதற்காக வித்யாதரன் உபயோகப்படுத்திய ஆயுதம், ‘நிஹாரிகா’. அனைவரும் நிஹாரிகாவைத் தாங்குவதில் அவனுக்கு ஒன்று மட்டும் புரிந்தது. நிஹாரிகாவை பாசத்தால் கட்டிப் போட்டால் யாராலும் தன்னை இவ்வீட்டில் இருந்து வெளியேற்ற முடியாது என்று. அதற்காக சிறு வயதில் இருந்தே போலியான பாசத்தை குழந்தையிடன் காண்பிக்கத் தொடங்கினான். நிஹாரிகாவும் தந்தையின் சூழ்ச்சி அறியாமல், போலி அன்பையும் தூய்மையான அன்பையும் பிரித்தரிய முடியாமல், தந்தையின் பால் சாய்ந்தாள்.

தினமும் தந்தையுடன் விளையாடுவது, அவரிடம் கதை கேட்பது என்று தொங்கிக்கொண்டே இருக்க, வித்யாதரனுக்கு அது எரிச்சலாய் இருந்தாலும், பொன் முட்டையிடும் வாத்தை அவன் ஒதுக்க விரும்பவில்லை. இருவரின் பாசப் பிணைப்பைக் கண்ட வீட்டாரும், “பிள்ளையோடாவது அன்பாக இருக்கிறானே” என்ற நினைப்பு மட்டுமே.

ஒரு வயது வந்தபின் அன்னையும் தந்தையும் பேசாதது கண்ட நிஹாரிகா, “ஏன் ம்மா நீங்களும் நானாவும் பேச மாட்டிறீங்க.. என் பிரண்ட்ஸ் எல்லாம் அவங்க அம்மா நானா கூட தான் தூங்குவாங்கலாம்.. அப்பா ஏன் தனியா இருக்காங்க..” கேட்க, மகளின் கேள்வியில் விவாஹா என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்தார். தந்தையின் மேல் அன்பை வைத்திருக்கும் மகளிடம் உண்மையைக் கூறி வித்யாதரனை கீழ் இறக்கவும் அவரால் இயலவில்லை.

“நிஹி ம்மா.. இங்க வா” என்று அழைத்த வரலட்சுமி, “அப்பாவும் அம்மாவும் குட்டி சண்டை போட்டாங்க. நீங்க கேட்டா அம்மா அழுவாங்க. இனிமே இதைப்பத்தி கேக்ககூடாது” என்று புன்னகை முகம் மாறாமல் கூற, “சரி அவ்வா” என்ற நிஹாரிகா விளையாட ஓடிவிட்டாள்.

இவ்வாறே நாட்கள் முயல் வேகத்தில் நகர, நிஹாரிகா, “அம்மா!” என்று அறையிலிருந்து கத்தினாள்.

“என்ன நிஹி?” என்றபடி விவாஹா உள்ளே வர, “ம்மா! ஐ.. ஐ திங்க் நான் பெரிய பொண்ணு ஆகிட்டேன்” என்றவள் தன் உடையைக் காட்ட, மகளை குளியல் அறைக்குள் அழைத்துச் சென்ற விவாஹா, நீண்ட நாட்களுக்குப் பிறகு மகிழ்ச்சியோடு வெளியே வந்தார்.

“ம்மா” என்று வரலட்சுமியை அழைத்த விவாஹா, விஷயத்தைக் கூற அடுத்த பதினாறாவது தினத்தில் விசேஷத்தை தடபுடலாக வைத்தார் சக்கரவர்த்தி.

நிஹாரிகா தான் பாவம். குச்சியைப்போல இருந்தவளால் நீண்ட நேரம் நிற்கமுடியாமல் போனது. அவ்வப்போது விவாஹாவும், வரலட்சுமியும் அவளுக்கு பழச்சாறைக் கொடுத்து நிற்க வைத்தனர். வித்யாதரனின் சார்பில் வந்த ஒருவனின் பார்வை புத்தம் புது மலராய் இருந்த நிஹாரிகாவின் மேல் இச்சையுடன் விழுந்தது.

கொடூரனாய் இருப்பவனுக்கு குழந்தை முதல் கிழவி வரை வித்தியாசங்கள் தெரியாதே! அவனும் பிரபல தயாரிப்பாளர். பெயர் ஆனந்தன்.

அங்கு வந்திருந்தவனுக்கு ஓரளவுக்கு வித்யாதரன் நெருக்கமே. மேலும் மாமனார் வீட்டில் வித்யாதரனை ஒண்டி பிழைப்பை ஓட்டுகிறான் என்றும் அவன் அறிந்ததே. அதனால் அடுத்த வாரமே வித்யாதரனிடம் தான் அவனுக்கு ஒரு படத்தை இயக்க வாய்ப்புத் தருவதாகவும், அதற்கு தான் கேட்பதை தர வேண்டும் என்று சொல்ல, வித்யாதரனோ என்னவென்று கண்கள் மின்ன ஆசையில் கேட்டான்.

அடுத்து கேட்டதில் வித்யாதரன் அவனின் சட்டையைப் பிடிக்காமல் யோசனையோடு அமர்ந்திருக்கையிலே அவனுக்கு தனது காரியம் எளிதில் நடந்துவிடும் என்று அவனின் சாக்கடை மனம் துள்ளிக் குதித்தது.

“நீ கேக்கறது எனக்கு ஓகே.. ஆனா அவளை வெளியவே விடமாட்டான் அந்தாளு.. அவளை அத்தனை பாதுகாப்பா வச்சிருக்கான்” என்று சொல்ல, “உனக்கு சான்ஸ் வேணும்னா நீ ரிஸ்க் எடுத்துதான் ஆகணும் வித்யாதரன்” என்று கூற, தலையை ஆட்டியபடி எழுந்தான் வித்யாதரன்.

வீட்டிற்கு வந்தவனின் காதில் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல வரலட்சுமியும், விவாஹாவும் பேசிக் கொண்டிருந்தது கேட்டது. “ஏன் விவாஹா.. அவரை ஏதாவது பண்ண சொல்லலாம்ல.. யாராவது அவர் எண்ண பண்றாங்கன்னு கேட்டா என்னனு சொல்றது.. எத்தனை நாள் இப்படி வீட்டுலையே உக்காந்திருக்க போறாரு” என்று சமையல் அறையில் பேசிக்கொண்டிருக்க, அதற்கு விவாஹா அளித்த பதில் அவனை கொதிநிலைக்கு இழுத்துச் சென்றது.

“அதை எதுக்கும்மா என்ன கேக்க சொல்றீங்க.. எனக்கும் அவனுக்கும் என்ன பந்தம் இருக்கு.. இந்த வீட்டுல என்னை பொறுத்த வரைக்கும் நான் அவனை பொருளா கூட மதிக்கிறது இல்ல.. இதுல அவனோட எதிர்காலம் பத்தி எனக்கு எதுக்கு அக்கறை வேணும் சொல்லுங்க” என்று எரிச்சல்பட அன்னையிடம் விவாஹா பேசிக்கொண்டிருக்க, ஒரு முடிவோடு வித்யாதரன் படியேறினான்.

தன் அறைக்குள் வந்தவன் ஆனந்திற்கு அழைத்தான். “நீங்க சொன்னதுக்கு நான் ரெடி. ஆனா, விஷயம் ரிஸ்க் தான். நான் எப்ப சொல்றனோ அப்ப ரெடியா இருங்க” என்றுவிட்டு அலைபேசியை அணைக்க, “நானா!” என்றபடி தந்தையிடம் விளையாடில் வாங்கிய முதல் பரிசை காண்பிக்க வந்தாள் நிஹாரிகா.

நிஹாரிகா வந்தவுடன் முகத்தை மாற்றிய நயவஞ்சகன், அவளை பாராட்டு மழையில் தள்ளிவிட்டு, சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தான்.

இதற்கிடையில் தேவ் நடிக்கும் ஒரு படம் சக்கரவர்த்தியின் ப்ரொடக்சனில் எடுக்குத் துவங்கி இருந்தது.

இருவாரங்கள் கடந்த நிலையில், சக்கரவர்த்தியும், வரலட்சுமியும் மாலை ஒரு கோவிலில் சிறப்புப் பூஜைக்காக வெளியே சென்றிருக்க, சரியான நேரம் வந்துவிட்டதை எண்ணிய வித்யாதரன் மகளிடம், “உனக்கு அப்பா ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்கேன். போய் ரெடியாகி வாங்க. போயிட்டு வந்திடலாம்” என்றுவிட்டுச் செல்ல, நிஹாரிகாவோ ஏன் எதற்கு எங்கே என்று கூட கேட்கவில்லை. தந்தையின் உறவு என்பது சந்தேகம் வராத உறவு அல்லவா.

உடையை எடுத்துக்கொண்டு குளிக்க ஆயத்தமானவளை, “என்ன நிஹி? எங்க கிளம்பறே?” உள்ளே வந்த விவாஹா வினவ, விஷயத்தைச் சொன்னவள் குளிக்கச் சென்றுவிட்டாள்.

மகள் அளித்த பதில் விவாஹாவுக்கு மனதுக்கு நெருடலாக இருக்க, வித்யாதரனிடமே எங்கே என்று கேட்கலாம் என்று அவனின் அறை பக்கம் செல்ல, அவன் விவாஹா கீழே இருக்கிறார் என்று நினைத்து சிறிது சத்தமாக பேசியது அவருக்குத் தெள்ளத் தெளிவாக கேட்டது.

“எல்லாம் ஓகே. நான் கூட்டிட்டு வந்திடறேன். நான் இப்ப சிஸ்டம்ல தான் இருக்கேன். இப்ப நீ எனக்கு மெயில் மட்டும் அனுப்பிடு” என்றவன் கணினியை அணைக்காமல், அலைபேசியை வைத்துவிட்டு குளியல் அறைக்குள் சென்றுவிட, விவாஹாவுக்கு எங்கோ அபாய மணி அடித்த உணர்வு.

‘என்ன பேசறான் இவன். என்ன மெயில்’ என்று நினைத்தவர், அவன் குளியல் அறையில் இருப்பதை அறிந்துகொண்டு அவன் அறைக்குள் முதன்முதலாய் நுழைந்தார். உள்ளே நுழைந்தவர் அவனின் கணினியை இயக்க, அதுவும் எந்தத் தங்கு தடையின்றி திறந்தது.

அவனின் ஈ மெயிலுக்குச் சென்றவர், அதில் அலசி ஆராய, அவனுக்கு ஏதோ படத்தின் ஒப்பந்தம் கையெழுத்திட்டு அனுப்பப்பட்டு இருந்தது. அடுத்த நொடியே அவனின் அலைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தியும் வந்திருந்தது. அதை எடுத்த விவாஹா அதைப் படிக்க, அவரின் மனம் பூகம்பம் கண்ட நிலத்தைப் போன்று பல நூறு பிளவுகள் கண்டது.

“சைன் பண்ணிட்டேன். உன் பொண்ணை நீ கூட்டிட்டு வர்றது மட்டும் தான் பாக்கி” என்று குறுஞ்செய்தியில் வந்திருக்க, விவாஹாவின் கைகள் கோபத்தில் அலைபேசியை இறுக்கிப் பிடித்தது. ‘பாவி, கடைசில குழந்தை மேல கூட’ என்று ஆக்ரோஷத்தை அடக்கியவர், உடனே தந்தைக்கு அழைக்க நினைத்து வெளியே செல்ல எத்தனிக்க,

“இங்க என்ன பண்ற?” வித்யாதரனின் குரல் அதிர்ச்சியும் பதட்டமும் கலந்து ஒலிக்க, ஆக்ரஷோத்துடன் அவனைத் திரும்பிப் பார்த்த விவாஹாவின் விழிகளில் மட்டும் நெருப்புகள் வெளிப்பட்டிருந்தால் அதன் வீரியம் தாளாமல் அவன் பஸ்பம் ஆகியிருப்பான்.

ஒற்றை விரலைத் தூக்கி அவனை எச்சரித்தவர், “கடைசில என் பொண்ணு வாழ்க்கைலயும் விளையாட நினைச்சுட்டீல. இன்னிக்கு தான்டா உன்னோட கடைசி நாள்” என்று கர்ஜித்தவர் வெளியே செல்லப் பார்க்க, அவரை ஒரே எட்டில் பிடித்தவன், அவனின் அலைபேசியை கையில் இருந்து பறிக்க முயல, விவாஹாவோ திமிற ஆரம்பித்தார். அலைபேசியை மட்டும் விவாஹா விடவே இல்லை.

“அதை என்கிட்ட தந்திடு” விவாஹாவின் தலையை சுவற்றில் வைத்து அழுத்தியவன் அவரை மிரட்ட, அவனின் முட்டிக்காலை எட்டி உதைத்தவர் அவனிடமிருந்து தப்பிக்கப் பார்க்க, விஷயம் தெரிந்தால் தன் உயிர் தனக்கு இல்லை என்று அறிந்தவன், விவாஹாவின் காலை வெறியோடு பற்றியதில் கீழே விழுந்தார் விவாஹா.

கீழே விழுந்தவர் அப்போதும் அலைபேசியை விடாது பிடித்திருந்தார். அவரின் காலை பற்றியிருந்தவன் அவரின் காலைப் பிடித்து முறுக்க, “அம்மாஆ” என்று வாய்விட்டுக் கத்திய விவாஹா அவனின் முகத்தில் மற்றொரு காலால் எட்டி உதைத்தார்.

அப்போது சக்கரவர்த்தியைக் காண நீண்ட வருடங்களுக்குப் பிறகு வீட்டிற்கு வந்த மகாதேவனின் செவியில், விவாஹாவின் அலறல் சத்தம் விழ, சந்திராமாவும் வெளியே வந்தார். இருவரும் என்னமோ ஏதோ என்று மேலே ஓட, அதேநேரம் குளித்துவிட்டு வெளியே வந்த நிஹாரிகாவும் அன்னையின் சத்தம் கேட்டு பதறியபடி தன் அறையில் இருந்து வெளியே வந்தாள்.

அதற்குள் கால் வலியைப் பொறுத்துக்கொண்டு எழுந்த விவாஹாவின் தலை முடியைப்பற்றிய வித்யாதரன், “அப்ப உன்னோட காதலன் தேவை விட நான் பெரிய ஆள் ஆகிடக்கூடாது அதானடி உன் எண்ணம். ஒருவேளை நீயும் அவனும்..” என்று இருவரையும் இணைத்து அவன் கொச்சையாகப் பேச, இத்தனை வருடங்களாக உள்ளே அடக்கி வைத்திருந்த ஆத்திரம், ஆக்ரோஷம், ஆங்காரம் அனைத்தும் ஒன்று சேர, எரிமலையாய் வெடித்துச் சிதறினார் விவாஹா.

அவனின் கையைத் தட்டிவிட்டவர், அங்கு அவன் குடித்துவிட்டு வைத்திருந்த பாட்டிலை எடுத்து சுவற்றில் அடிக்க, அது பாதியாய் உடைந்து கூர் பாகங்களோடு பாதி விவாஹாவின் கையில் இருந்தது. அடுத்து நொடிப்பொழுது கூட தாமதிக்காதவர் பெருங்குரலோடு, “ஆமாடா, எனக்கு தேவ் தான் முக்கியம். தேவ் தான் முக்கியம். தேவ் தான் முக்கியம்” என்றவர் அவனின் கழுத்தில் உடைந்த பாட்டிலை இறக்கவும், நிஹாரிகா உள்ளே நுழையுவம், அவளின் முகத்தில் வித்யாதரனின் சூடான குருதி அடிக்கவும் சரியாய் இருந்தது. அவள் பின்னோடே வந்த மகாதேவனும், சந்திராமாவும் காளியாய் மாறியிருந்த விவாஹாவின் ஆக்ரோஷத்தில் உறைந்துவிட்டனர்.

அப்போதும் ஆத்திரம் அடங்காத விவாஹா, “செத்துப்போடா.. செத்துப்போ” என்று சரமாரியாக அவன் கழுத்தில் குத்தி இரத்தம் தெறித்துக் கொண்டிருக்க, நிஹாரிகா நடப்பது புரியாமல் வாய் பிளந்து கண்களில் கண்ணீரோடு நடப்பனவற்றை நம்ப முடியாத முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். ‘தேவ் தான் முக்கியம்’ அன்னை கூறிய வாக்கியமும் அவளின் செவியில் இருந்து தப்பவில்லை.

விவாஹாவின் ஆத்திரத்தில் பிணமாகி கீழே விழுந்தவனைத் துச்சமாகக் கண்ட விவாஹா, திரும்ப, மூவரையும் கண்டு சிலையாய் நின்றார். அதுவும் நிஹாரிகாவின் முகத்தில் உள்ள இரத்தத்தைக் கண்டவர், “நிஹி” என்று அருகில் செல்ல, பயத்தில் பின் நகர்ந்த நிஹாரிகா நடுங்கிப் போய் சுவற்றோடு அமர்ந்து தேம்ப, சுவற்றில் மூச்சு வாங்கி சாய்ந்தபடி மகள் அழுவதைக் கண்டு தானும் அழுதார் விவாஹா.

நிஹாரிகா வித்யாதரனின் உடலைப் பார்த்து பயந்து அழுது கொண்டிருக்க, அங்கிருந்த பெட்ஷீட்டை எடுத்து அவன் உடல் மேல் போட்ட தேவ், “ஏன் விவாஹா?” என்று தொண்டையடைக்கக் கேட்டார். ஏனெனில், தான் காதலித்த விவாஹாவிடம் அவர் இப்படி ஒரு ஆத்திரத்தையும், ஆங்காரத்தையும் பார்த்ததே இல்லை. அவள் எவ்வளவு மென்மையானவள் என்று அவர் அறிவார்.

அவரின் கேள்வியில் மகளைப் பார்த்து கரைந்து கொண்டிருந்த விவாஹா, “தேவ்!” என்று அவரின் தோள் மேல் சாய்ந்து அழது தீர்க்க, நிஹாரிகாவுக்கோ அடுத்த அதிர்ச்சி, தன் அன்னை வேறொரு ஆணை அணைத்துக்கொண்டு அழுவதில். ஆனால், அந்த அணைப்பில் விவாஹா ஆறுதலைத் தான் தேடினாரே தவிர, வேறு எந்தவொரு தவறான எண்ணமும் அவரிடம் இல்லை.

நிஹாரிகா அன்னையை கண் இமைக்காமல் அதிர்ச்சியோடு பார்த்திருக்க, சந்திராமாவிடம் கண்காலேயே நிஹாரிகாவை தேவ் காட்ட, சந்திராமா சிலையாய் அமர்ந்திருந்தவளை அழைத்துக்கொண்டு செல்ல, நிஹாரிகாவும் வாய் திறக்காமல் அவருடன் சென்றாள்.

“இப்ப சொல்லு என்னாச்சு?” தன்னிடம் இருந்து விவாஹாவை விலக்கிய தேவ் கேட்க, அவரிடம் ஒன்று விடாமல் ஒப்பித்த விவாஹா, “இந்த நாய் எல்லாம் உயிரோட இருக்கக்கூடாது தேவ். என் பொண்ணு மேல கூட பொய்யா பாசம் வச்சிருந்திருக்கான். வாழவே தகுதியில்லாத ஜென்மம்” என்று திட்ட, சக்கரவர்த்திக்கு அழைத்தார் மகாதேவன்.

அடுத்த பத்துநிமிடத்தில் இருவரும் வீட்டிற்கு வர, அதற்குள் குளித்து முடித்து வந்த நிஹாரிகா, சக்கரவர்த்தியைக் கண்டவுடன், “தாத்தையாஆஆ” என்று அலறலோடு அவரைச் சென்று கட்டியபடி அழுதுகொண்டே, “அம்மா.. நானாவை..” என்று கதற, பேத்தியை மனைவியிடம் ஒப்படைத்த சக்கரவர்த்தி, மேலே செல்ல விவாஹா தலையில் கைவைத்து விட்டத்தை வெறித்தபடி தரையில் அமர்ந்திருக்க, மகாதேவன் அறையின் வாயிலில் நின்றிருந்தார்.

நடந்ததை மகாதேவன் சக்கரவர்த்தியிடம் தெரிவிக்க, சக்கரவர்த்தி மகளை வேதனையுடன் பார்க்க, “எனக்கு வேற வழி தெரியல நானா” என்று பேசக்கூட சக்தியின்றி பேசிய மகளை நெஞ்சோடு அவர் அணைத்துக்கொள்ள, “நான் தப்பு பண்ணிட்டனா நானா?” என்று தந்தையின் நெஞ்சில் சாய்ந்து கதறியபடி அவர் கேட்க, “இல்லடா நான்தான் தப்பு பண்ணிட்டேன். இவனை உன் மேல கை வச்ச அன்னிக்கே கொன்னிருக்கனும்” என்று வித்யாதரனின் பிணத்தைப் பார்த்தபடி பல்லைக் கடித்துக் கலங்கியவர், மகளை அவளுடைய அறையில் விட்டுவிட்டு சந்திராமாவை அழைத்து பார்த்துக் கொள்ளும் படி பணித்துவிட்டு மகாதேவனை அழைத்துக்கொண்டு வெளியே சென்றார்.

அன்றிரவு ஆனந்தனிற்கும் இறுதிப் பயணம் குறிக்கப்பட்டது சக்கரவர்த்தியாலும், மகாதேவனாலும். பேத்தியின் மேலேயே கை வைக்கப் பார்த்தவனை அவரால் விடமுடியுமா என்ன?

அன்றிரவு ஆனந்தன் கடத்தப்பட்டான். அவனை ஒரு பாழடைந்த இடத்திற்கு கடத்தி வந்த ஆட்கள் கண் கட்டைப் பிரிக்க, அவன் எதிரில் அமர்ந்திருந்தனர் சக்கரவர்த்தியும், மகாதேவனும். இருவரையும் பார்த்தவுடனே அவனுக்கு பகீரென்று இருந்தது.

“ஸார் என்ன இது?” ஆனந்தன் சக்கரவர்த்தியைப் பார்த்துக் கத்த, அவரோ அவனுக்கு பதில் அளிக்கவில்லை.

அவர் ஒரு அடியாளைப் பார்க்க, அவரிடம் மருத்துவப்படிப்பு மாணவர்கள் உபயோகிக்கும் கட்டரை அவன் கொடுக்க, அவனருகே புன்னகைத்தபடி அமர்ந்த சக்கரவர்த்தி, அவனின் சுண்டுவிரலை முதலில் வெட்ட, உயிர் போகும் வலியில் அந்த இடம் எங்கும் எதிரொலித்து அதிர அவன் கத்த, சக்கரவர்த்தியோ தன் புன்னகையை மாற்றாமல் ஒவ்வொரு விரல்களாக வெட்டினார். மேலும் வெட்டப்பட்ட இடங்களில் சக்கரவர்த்தி லைட்டரை பற்ற வைக்க, அவனிற்கு பேசாமல் மொத்தமாக கொன்றுவிட்டால் என்ன என்ற அளவிற்கு வலியில் உடல் துடிதுடித்துப் போனது.

“ஸார், ப்ளீஸ் என்னை விட்ருங்க” என்று வலியில் கதறியவனைப் பார்க்க இருவருக்குமே இரக்கம் வரவில்லை. அடுத்து சர்ஜிக்கல் ப்ளேடை வைத்து அவனின் கழுத்து நரம்புகளை மகாதேவன் சிறிது சிறிதாக அறுத்துவிட, இரத்தக் குழாய்கள் சிறிது சிறிதாக உடைந்து, இரத்தம் வெளியேற, அடுத்த சில நிமிடங்களில் அவனின் கழுத்தோ ஒரு பக்கம் சாயத் தொடங்கி, அவனின் உயிரும் பிரிந்தது.

சக்கரவர்த்தி கண்ணைக் காட்ட அங்கிருக்கும் ஒருவனை அழைத்த மகாதேவன், “கார்ல ஒரு பாடி இருக்கு. அதுல இவனையும் வச்சிட்டு ஆக்ஸிடென்ட் மாதிரி பண்ணிடுங்க. நாங்க மத்தது எல்லாம் பாத்துக்கறோம்” என்றுவிட்டு இருவரும் கிளம்ப இருவரின் திட்டமும் எளிதாய் முடிந்தது.

அனைவரிடமும் வித்யாதரனின் இறப்பு விபத்து என்றே பதிந்து போனது. சக்கரவர்த்தியின் பணமும் செல்வாக்கைம் அதற்கு பெரிதும் உதவியது.

ஆயிற்று. காரியங்கள் அனைத்தும் முடிந்து பத்து நாட்கள் ஆயிற்று. அனைத்து சொந்த பந்தங்களையும் சக்கரவர்த்தி அனுப்பியிருக்க, அர்ஜூனின் குடும்பம் மட்டும் அவ்வப்போது இருந்தது.

“அழாதே நிஹி. நாங்க எல்லாரும் இருக்கோம்” என்று நப்தீப் நிஹாரிகாவுக்கு ஆறுதல் அளித்துக் கொண்டிருக்க, அவளிடம் தேம்பலே பதிலாக வந்தது. பார்த்ததை யாரிடமும் சொல்ல விரும்பாமல் மனதிற்குள் புழுங்கிக்கொண்டிருந்தது அந்தப் சின்னஞ்சிறு பேதை.

“பாப்பா.. உங்கள ஐயா கூப்பிறாங்க” என்று சந்திராமா வந்து அழைக்க, கீழே வந்தவளை தன்னருகில் அமர்த்திக் கொண்டவர், “பங்காரம்! நான் ஒரு முடிவு எடுத்திருக்கேன் எல்லாரோட நல்லதுக்காவும்” என்று தொடங்கியவர், “இன்னும் ஐஞ்சு நாள்ல அம்மாக்கும் மகாதேவனுக்கும் கல்யாணம்” என்று சொல்ல, நிஹாரிகாவின் முகத்தில் எந்தவொரு உணர்வும் இல்லை.

“பங்காரம்” என்று தோளைத்தொட்டு உலுக்கிய சக்கரவர்த்தி, “உனக்கு இதுல..” என்று ஆரம்பிக்க, “உங்க இஷ்டம் தாத்தையா” என்றவள் தன் அறைக்குள் புகுந்து கொண்டாள்.

விஷயம் அறிந்த மீடியாவோ தங்கள் இஷ்டத்திற்கு எழுதித் தள்ளியது. ஏற்கனவே கள்ளக் காதலில் இருந்த மகாதேவனும், விவாஹாவும் ஒன்றும் அறியாத வித்யாதரனை கொன்றுவிட்டு, திருமணத்திற்கு தயாராவதாக தங்கள் இஷ்டத்திற்கு எழுத, நிஹாரிகாவால் மன அழுத்தம் தாங்கமுடியாமல் போனது. பள்ளியில் வேறு அவளை ஒரு சிலர் கேலி செய்ய, சிலர் பரிதாபப் பார்வை வீச பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே முடங்கினாள். இன்னும் அதிர்ச்சியில் இருந்தே வெளியில் வராதவளுக்கு அவமானமும் சேர்ந்து கொண்டது.

“அம்மா மேல கோபமா நிஹி” விவாஹா இடையில் கிடைத்த ஒரு நாளில் அறையில் படுத்திருந்த மகளிடம் கேட்க, ‘இல்லை’ என்பதுபோல தலையாட்டியவள், மீண்டும் ஒருக்களித்து படுத்துக் கொண்டாள். விவாஹாவுக்கும் இந்த வயதில் திருமணம் செய்து கொள்வதில் விருப்பம் இல்லை. சக்கரவர்த்தியும் வரலட்சுமியும் வற்புறுத்தியும் வழிக்கு வராதவர், “என் கூட இரு விவாஹா வேற எதுவும் எனக்கு வேணாம். என்னை கடைசி வரைக்கும் அனாதையாவே விட்ராத” என்று தேவ் கேட்டிருக்க திருமணத்திற்கு தலையை ஆட்டியிருந்தார். இன்னும் தன்னால் திருமணமே செய்யாமல் இருப்பவரை நினைத்து விவாஹா மருகாத நாள் இல்லை. அதற்காகவாவது இந்த முடிவை எடுத்தார்.

எளிமையான முறையில் இருவரின் திருமணமும் ஒரு கோவிலில் முடிவடைந்தது.

அடுத்தநாள் இருவரும் பெரிய பெரிய பைகளோடு எங்கோ கிளம்ப வரவேற்பறையில் இருந்த நிஹாரிகா யோசனையுடன் எழ, “பங்காரம் நானாவும், அம்மாவும் யூ.எஸ் போறாங்க. ஒன் இயர் அப்புறம் தான் வருவாங்க” என்றிட, ஷோபாவில் இருந்து எழுந்தவள் பாவமாக அன்னையை நோக்க, விவாஹாவோ தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியத்தின் பொருட்டு தலை குனிந்து இருந்தார்.

“இங்க பாரு விவாஹா.. நீ இதுல இருந்து முழுசா வெளிய வரணும்.. அதுக்கு தான் உன்னை தேவ் கூட போக சொல்றேன்.. உன்னால அவரு அனுபவிச்ச கஷ்டமும் இருக்கே.. சொல்றது புரியும்னு நினைக்கறேன்..” வரலட்சுமி மகளிடம் சொல்ல, “நிஹியை விட்டுட்டு என்னால இருக்க முடியாதும்மா” என்றார் விவாஹா தாயிற்கே உரிய கலக்கத்துடன்.

“அவளை நாங்க பத்திரமா பாத்துக்கறோம்” என்றார் வரலட்சுமி.

“இல்ல நான் அவளை விட்டுட்டு போகமாட்டேன்” விவாஹா பிடிவாதமாக.

“கூட்டிட்டு போறதா இருந்தா எல்லா உண்மையும் சொல்லி கூட்டிட்டு போ விவாஹா.. ஏற்கனவே என்ன ஏதுன்னு புரியாம குழப்பத்துல இருக்கா.. இல்ல எங்க கிட்ட விட்டுட்டு போ.. எங்களுக்கு எப்படி வெளிய கொண்டு வர்றதுன்னு தெரியும்” என்றார் சக்கரவர்த்தி உறுதியாக.

“எப்படி நானா சொல்ல சொல்றீங்க. அவன் அப்படி பண்ண இருந்தான்னு தெரிஞ்சா அவனால தாங்கிக்க முடியாது. ப்ளீஸ் நானா அவளுக்கு எதுவும் தெரிய வேணாம். என்னை கேக்காம யாரும் சொல்லவும் கூடாது. நம்மளோட அந்த அசிங்கமான பக்கம் போகட்டும்” என்றவர் உறுதியாகச் சொல்ல, “அப்ப யூ.எஸ் கிளம்புங்க” என்றார் சக்கரவர்த்தி.

“மாமா, ப்ளீஸ் நீங்க என்ன நினைக்கறீங்கன்னு புரியுது. எங்க இரண்டு பேருக்கும் அந்த எண்ணம் எல்லாம் இல்ல. நிஹி எனக்கும் பொண்ணு தான். அவளைவிட எங்களுக்கு எங்க சந்தோஷம் முக்கியம் இல்ல” என்று விவாஹாவோடு சேர்ந்து அவரும் மறுக்க,

“நீங்க கொஞ்சம் கிளம்புனா தான் மீடியாஸோட வாயை அடைக்க முடியும். இங்க இருந்தீங்கன்னா எங்காவது போனா எதாவது பேசிகிட்டே இருப்பாங்க. உங்க இரண்டு பேருக்காக மட்டும் இத சொல்லல. இதை எல்லாம் பாத்து பாத்து நிஹாரிகாவும் ஸ்டெர்ஸ் ஆகிடக்கூடாதுன்னு சொல்றேன்” சக்கரவர்த்தி இருவரிடமும் பேசிப் பேசி வழிக்கு கொண்டு வந்திருந்தார்.

தன் முன் நிற்கும் இருவரையும் பார்த்த நிஹாரிகா, அன்னையிடம் சென்று, “நான் உங்க கூட பழைய மாதிரி பேசறேன் ம்மா. என்னவிட்டு போகாதீங்க. இல்லைனா நானும் கூட வர்றேன்” என்று அன்னையின் பிரிவையும் நினைத்துக்கூட பார்க்க முடியாதவளாய் நிஹாரிகா வதனம் கசங்க, நாசி சிவக்க, அதரங்கள் பிதுங்க கேட்க விவாஹாவோ பேச முடியாமல், ‘இல்லை’ என்பது போல தலையாட்டிவிட்டு, இன்னும் சிறிது நேரம் இங்கிருந்தால் அழுகையில் வெடித்துவிடுவோம் என்று ட்ராலியை தள்ளிக் கொண்டு முன்னே செல்ல, நிஹாரிகாவோ அன்னையின் செயலில் இடிந்து போய் நின்றாள். தன் பேச்சிற்கு அன்னை சிறிது கூட மதிப்பு அளிக்கவில்லை என்று புரிந்து கொண்டவள் சிலையாகி நின்றாள்.

அதே நிலையில் இருந்தவளை தேற்றுவதற்குள் சக்கரவர்த்தி, வரலட்சுமி இருவருக்கும் போதும் போதுமென்று ஆகிவிட்டது. பள்ளியில் சிலர் கேலி செய்வதும், மறைமுகமாக பேசுவதும் என்று அவளின் காயப்பட்ட மனதை மேலும் குத்தி ரணமாக்கிக் கொண்டிருந்தனர்.

***

இங்கு யூ.எஸ் வந்தும் இரண்டு மாதங்கள் கடந்திருக்க, படுக்கை அறையில் மகளை நினைத்தபடி விவாஹா படுத்திருந்தார். அலைபேசியில் பேச முயற்சித்தும் மகள் பேசவில்லை அல்லவா.
உள்ளே வந்த தேவ், “விவாஹா, சாப்பிட என்ன செய்யட்டும்?” என்று வினவ, “உங்களுக்கு என்ன வேணுமோ செய்யுங்க தேவ்” என்றவரை எழுப்பிய தேவ், “முகத்தை கழுவிட்டு வா” என்று சிறிது அதட்டல் போட, அவர் சொன்னதை தவறாது செய்துவிட்டு வந்தார் விவாஹா.

“இங்க பாரு விவாஹா. நீ இப்ப எதுக்காக ஃபீல் பண்ற. ஓகே நம்ம பொண்ணை நினைச்சுனா எனக்கு எந்த அப்ஜெக்ஷனும் இல்ல. ஏன்னா எனக்கும் அது இருக்கு. பட் ஊரை நினைச்சு ஃபீல் பண்றதா இருந்துச்சுன்னா அதை தூக்கிப்போடு. எவனும் நமக்கு முக்கியம் இல்ல. எனக்கு நீ. உனக்கு நான். நம்ம இரண்டு பேருக்கும் நம்ம பொண்ணு” என்றிட,

“எனக்கு நம்ம பொண்ணு பத்தின கவலை ஒரு பக்கம்னா.. உங்கள பத்தின கவலை ஒரு பக்கம் தேவ்” என்றார் அவரின் கரத்துடன் கரம் கோர்த்தபடி.

“ஏன் எனக்கென்ன.. நான் ஜாலியா தான் இருக்கேன். நீ எதுக்கும் தேவையில்லாம ஃபீல் பண்ணாத” என்றார் ஆறுதலாக தன் தோள் வளைவிற்குள் மனைவியை கொண்டு வந்தபடி.

“ஏன் தேவ் சிரிச்சே மறைக்கறீங்க. என் மேல் உங்களுக்கு எவ்வளவு ஃபீலிங்ஸ் இருந்துச்சுன்னு தெரியும். ஆனா, நான் தான் எப்போமே சுயநலவாதியா உங்கள இழுத்து கஷ்டப்படுத்தறேன். இல்ல?” என்று குற்ற உணர்வோடு வினவ, “ப்ச், என்ன இது விவாஹா. அதெல்லாம் இல்ல. சீக்கிரம் குளிச்சிட்டு வா. நான் சாப்பிட ஏதாவது செய்யறேன்” என்று நகரப்பார்க்க, “சமாளிக்காதீங்க தேவ்” என்க, அவரோ அதை கவனிக்காமல் சமையல் அறைக்குள் புகுந்தார்.

அன்று முழுதும் விவாஹா அவரிடம் அதைப் பற்றி பேச முயல, அவரோ கதை அதுஇதுவென்று பேச்சை மாற்றிக்கொண்டே இருந்தார்.

அன்றிரவு தன் அறைக்குள் நுழையப் பார்த்தவரை தன் அறைக்கு அழைத்த விவாஹா அவரின் மடியில் தலை வைத்து படுக்க, மனைவியின் தலையை வருடிக் கொடுத்தவர், “என்னாச்சு விவாஹா?” என்று வினவ, “தேவ், நம்ம லவ் பண்ண டேஸ் ஞாபகம் இருக்கா உங்களுக்கு. யாருக்கும் தெரியாம பதுங்கி பதுங்கி மீட் பண்ணுவோம். ஒரு தடவை நீங்க என்னை பாக்க வந்தப்ப. நாம காரவன்ல இருந்தோம். அப்ப திடீர்னு நானா வந்துட்டாருன்னு உங்க பிஏ சொன்னப்ப. நீங்க உடனே ப்ளேட் எடுத்துட்டு போற மாதிரி அப்படியே முகத்தை மறச்சிட்டு போனீங்க” என்று பழைய கதைகளில் மூழ்கத் தொடங்க, அவரும் அதே சுகமான நினைவில், ‘ம்ம்’ போட்டபடி இருந்தார். அவரின் குரலே சொல்லியது அவரும் அந்த இனிமையான தருணத்தை இன்னும் மறக்கவில்லை என்று.

அவரின் மடியில் இருந்து எழுந்தமர்ந்த விவாஹா, “என்னால உங்களை எப்பவும் மறக்கவே முடியல தேவ். அதான் நான் கல்யாணமே வேணாம்னு இருந்தேன். யாராவது கேட்டா அசிங்கமா நினைப்பாங்க தான். ஆனா, ரேப் பண்ணவனையே கல்யாணம் பண்ணிட்டு என்னால வாழ முடியாதுன்னு எனக்கே தெரியும். அந்த மாதிரி எது நடந்தாலும் கல்யாணம் பண்ணி ஏத்துக்கற பொண்ணும் நான் இல்ல. நீங்க நல்லா இருக்கனும்னு நினைச்சேன். அதான் உங்களை விட்டு விலகுனேன். எத்தனை தடவை தெரியுமா தேவ். ஏன் என்னோட வாழ்க்கை இப்படி ஆச்சுன்னு அழுதிருக்கேன். எனக்கு நிஹி மட்டும்தான் ஆறுதலே. இந்த கதைல எல்லாம் சொல்ற மாதிரி குழந்தை உருவானோன அவனை ஏத்துக்கனும் அதெல்லாம் தோணல. ஆனா குழந்தையை வெறுக்கவும் இல்ல” என்று கரகரத்த குரலோடுகூறியவர், “நீங்க எத்தனையோ தடவை என்கிட்ட கேட்டிருக்கீங்க தேவ். நான் முதல் தடவை உங்ககிட்ட கேக்கறேன். கான் யூ ப்ளீஸ் க்யூவ் மீ எ கிஸ்” என்று கண்ணீரோடு வெட்கத்தை விட்டுக் கேட்டார்.

மனைவியின் கண்ணீரில் தானும் கலங்கியவர் அவரின் இரு கன்னங்களையும் பற்றி, தன்னவளின் இதழ்களில் அழுந்த முத்தமிட, விவாஹாவின் விழிகள் கண்ணீரோடு மூடிக்கொண்டன.

‘எப்படி நடந்திருக்க வேண்டிய திருமணம்.. ஊரைக் கூட்டி, மேளங்கள் கொட்டி, பெரியோர் ஆசிர்வாதத்தோடு திருமணம் முடிந்து’ என்று நினைத்த இருவரின் விழிகளிலுமே இத்தனை வருட பிரிவை எண்ணி கண்ணீர் வழிய, தேவ் தன் உயிர்க் காதலியிடம், ஆருயிர் மனைவியிடம் மூழ்க, விவாஹாவோ காதலுடன் கிடைத்த கணவனின் ஸ்பரிசத்தில் அவரோடு நேசத்துடன் நெருங்கினார். தங்களது வருடங்கள் கடந்த காதலுக்கும், இத்தனை நாள் நேர்ந்த பிரிவுக்கும் இருவரும் அர்த்தத்தைக் கொடுக்க, சந்திரன் சாட்சியாய் நிற்க, இரு நேசம் கொண்ட நெஞ்சங்களும் இணைந்து.

“ஏன் தேவ் உங்களுக்கு குழந்தை வேணாமா?” தன்னைவிட்டு புன்னகையுடன் விலகியவரிடம் விவாஹா கேட்க, “நிஹி போதும்” என்று புன்னகையுடன் கூறியவர் மனைவியை நெஞ்சில் சாய்த்துக் கொள்ள, நீண்ட வருடங்களுக்குப் பிறகு மனநிறைவோடு உறங்கினார் விவாஹா.

***

ஆறு மாதங்கள் கடந்திருந்த நிலையில், வரலட்சுமியுடன் படுத்திருந்த நிஹாரிகா எழ மணி ஏழரை ஆகியிருந்தது. “அவ்வா ஏன் எழுப்பல” என்று விரைவாக தன்னை எழுப்பும் பாட்டி இன்னும் உறங்க, அவரை தொட்டவள் அப்போது தான் அவரின் உடலில் இருந்த குளிர்ச்சியை உணர்ந்தாள்.

பதட்டத்துடன், “அவ்வா! அவ்வா!” என்று உலுக்கியவள், அவர் எழாமல் இருக்க, சக்கரவர்த்தியின் அறைக்கு ஓடியவள், விஷயத்தைச் சொல்லி அவரை அழைக்க, வந்து பார்த்தவருக்கு புரிந்து போனது தன் மனைவி தன்னை தனியாய் தவிக்கவிட்டுச் சென்றுவிட்டாள் என்று. அவர் கண்ணீர் வழிய அமர்ந்திருப்பதை வைத்தே, புரிந்துகொண்ட நிஹாரிகா தனது பாட்டியை கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தாள். இத்தனை நாட்களாக கோழிக்குஞ்சாய் அவரின் மடியிலேயே கிடந்தவளுக்கு அவரின் இழப்பும் பாதிப்பாய் இருந்தது.

இறுதி காரியங்களுக்கு அனைத்தும் தயாராக, விவாஹாவும் மகாதேவனும் வந்து சேர, வரலட்சுமியின் உடல் எடுக்கப்பட்டது. அடுத்து வந்த தினங்களில் நிஹாரிகா சக்கரவர்த்தியின் கையைப் பிடித்துக் கொண்டே சுற்ற, விவாஹாவும் அவளிடம் பேச முயற்சித்து தோல்வியைத் தழுவினார்.

ஒரு மாதம் சென்றிருக்க, “நிஹி ம்மா” என்று விவாஹா தொடங்க, “நீங்க யாரு?” என்று கேட்டு அதிர வைத்தாள் அவர் மகள்.

“பங்காரம்..” சக்கரவர்த்தி தொடங்க, “தாத்தையா ப்ளீஸ்.. இவங்க யாருனே எனக்கு தெரியாது. என்கிட்ட பேச வேணாம்னு சொல்லுங்க. என்னை வேணாம்னு அவங்க சந்தோஷம் முக்கியம்னு போனவங்க எனக்கு வேணாம்” என்றிட, “இனி அம்மா உன்கூடவே இருக்கேன் நிஹி” விவாஹா மகளின் தலையை வருடப்போக, தலையை நகர்த்தி எழுந்தவள், “யாரும் எனக்கு தேவையில்லை. எனக்கு என் தாத்தையா போதும்” என்றவள் பிடிவாதத்தோடு தன் அறைக்குச் சென்றுவிட்டாள். விவாஹா தந்தையை குற்றம் சாட்டும் பார்வை பார்க்க, அவரோ தவறு செய்துவிட்டோமோ என்று முதல் முறையாக நினைத்து மருகினார்.

அன்று அன்னையிடம் இறுதியாகப் பேசியவள் தான். அதன்பிறகு அவர் முகத்தைக் கூட அவள் நிமிர்ந்து பார்க்கவில்லை.

இங்கேயே இருந்தால் யாராவது பாசத்திற்கு ஏங்கிவிடுவோம் என்றும், அது தன்னை பலவீனம் ஆக்குவதை உணர்ந்தும், ஊராரின் பேச்சில் இருந்து தப்பிப்பதற்காகவும் அவள் சென்னை கிளம்பினாள்.

***

யாரோ கதவைத் தட்டியதில் நிகழ்காலத்திற்கு வந்த நிஹாரிகா கதவைத் திறக்க, “சாப்பிடலாம் வாடா” என்று கயல்விழி அழைக்க, “வேணாம் ஆன்ட்டி பசியில்ல” என்றாள்.

“நீ சாப்பிடலைன்னா உன் புருஷன் நான் கொடுமை பண்றேன்னு சொல்லுவான். ஸோ, எதுவும் பேசாம சாப்பிட வா” என்று மருமகளை செல்லமாக அதட்டியவர் கீழே செல்ல, முகத்தைக் கழுவியவள் கீழே இறங்க, அவளை சாப்பிட வைத்தவர், அவள் உறங்குவதற்கு அறைக்குச் செல்ல எத்தனிக்க, “ஏதாவது வேணும்னா கேளுடா” என்றார்.

அவள் அறைக்கு வரவும், ரிஷ்வந்த் அவளுக்கு அழைக்கவும் சரியாக இருந்தது. கதவை அடைத்தவள், அலைபேசியை ஏற்று, “ரிஷ்வந்த்!” என்று வெடித்துக் கதற, எதிரில் இருந்தவனோ அனைத்து விஷயங்களும் சக்கரவர்த்தியின் மூலம் அறிந்தவனாய், “நிஹி, அழாதடி. மொதல்ல அழறதை நிறுத்து” என்று அதட்ட,

“என்னால முடியலடா.. என்னை தாத்தையா அடிச்சிட்டாரு தெரியுமா? அடிச்சதும் இல்லாம வீட்டை விட்டு வெளிய போக சொல்லிட்டாரு. நான் என்னடா தப்பு பண்ணேன். என்கிட்ட பர்ஸ்டே எல்லாம் சொல்லியிருந்தா இதெல்லாம் நடந்திருக்குமா.. அந்த வயசுல யார் கிட்டையும் எதையும் ஷேர் பண்ண முடியாமா எத்தனை நாள் பாத்ரூம்ல அழுதிருக்கேன் தெரியுமா.. எத்தனை பேர் என்னை கிண்டல் பண்ணியிருக்காங்க தெரியுமா.. எதுவுமே சரியா புரியாத வயசு வேற டா. அதுலையும் எல்லாம் தெரிஞ்சும் தெரியாம இருந்தப்ப எனக்கு எல்லாம் தப்பாதான புரியும். என்கிட்ட எதையுமே சொல்லி புரிய வைக்காம என்னை ப்ளேம் பண்ணா நான் என்னடா பண்ணுவேன்” என்று பேசப் பேச தன்னவனிடம் அவள் மனம் பாரம் தீர அழுது தீர்க்க, ரிஷ்வந்திற்கோ அவளின் அழுகை நிறைந்த குரலை கேட்க முடியவில்லை. அவள் கேட்கும் கேள்விகளும் அவள் பக்கம் இருந்து பார்த்தால் நூறு சதவீதம் நியாயம் தானே.

அவளுக்கு உண்மை தெரிந்திருந்தால் விஷயம் இந்த அளவிற்கு வந்திருக்காதே!

“ஏய் ஜிலேபி அழாதடி. கஷ்டமா இருக்கு. இப்ப என்ன… இரு வந்து மிஸ்டர் சக்கரவர்த்தி கிட்ட கேக்கறேன். நான் இல்லாதப்ப நீங்க எப்படி என் பொண்டாட்டிகிட்ட சண்டை போடலாம்னு” என்று சொல்ல, அவன் சீரியஸாக சொல்லிய தொணியில் அழுது கொண்டிருத்த நிஹாரிகாவுக்கு சிரிப்பு வந்துவிட்டது.

“ஏய் சீரியஸா பேசுனா.. என்னடி சிரிக்கறே?” என்று கேட்டவன் வீடியோ காலிற்கு வர, அதை ஏற்றவளின் முகத்தைப் பார்த்தவனின் விழிகள் இமைக்க மறந்தன. வதனம் சிவந்து, விழிகள் வீங்கியிருந்தது. தன்னவளை இப்படி ஒரு நிலையில் பார்க்க அவனுக்கு மெய்யாகவே அனைவரின் மீதும் கோபம் வந்தது. அவள் என்னதான் பேசியிருந்தாலும் வீட்டை விட்டு வெளியேற சொல்லி இருக்கக்கூடாது என்று நினைத்தது அவன் காதல் கொண்ட மனம்.

தனக்கு உரிமையானவர்கள் என்று வரும்போது அடுத்தவரின் உணர்வுகள் முன் அனைவரும் சுயநலவாதி தான் போல.

“ரிஷ்வந்த்! எப்ப வருவே?” நிஹாரிகா வினவ,

“ஏன் அம்மணிக்கு என்னை பாக்கணும் போல இருக்கோ” என்று கண்ணடித்துக் கேட்டவனின் நெஞ்சில் சாய்ந்துகொள்ள வேண்டும் என்றிருந்தது அவளுக்கு.

“சைட் அடிச்சது போதும்டி.. பதில் சொல்லு” என்றிட, நிஜத்துக்கு வந்தவள், “ஆமா பாக்கணும்னு இருக்கு. எப்ப அங்க ஷூட் முடியும் ரிஷ்வந்த்?” ஏக்கமும் எதிர்பார்ப்புமாய் கேட்டவளை இப்போதே பார்க்க அவனுக்கும் ஆவலாய் இருந்தது தான். ஆனால்…

“எனக்கு இப்பவே கிளம்பி வந்து என் பொண்டாட்டியை கொஞ்சனும்னு இருக்குடி. ஆனா, இந்தப் படத்தோட ப்ரொடியூசர் ஒருத்தி இருக்கா.. நல்லா பொம்பள ஹிட்லர் மாதிரி.. அவ நாங்க ஷூட் முடிக்காம வந்தா அவ்வளவு தான்” என்று அவளையே கேலி செய்ய, ஒற்றை விரலைத் தூக்கி கணவனை எச்சரித்தாள் ரிஷ்வந்தின் மனைவி.

“ரிஷ்வந்த், சாரிடா” என்றாள் மீண்டும் வதனம் சுருங்கி அழத் தயாரான விழியோடு.

“எதுக்கு ஸாரி?” என்று யோசிப்பதுபோல பாவனை செய்தவன், “புருஷனை தள்ளி வச்சதுக்கா?” என்று ஒற்றைப் புருவத்தை உயர்த்திக் கேட்க, “நேர்ல இருந்த அசிங்க அசிங்கமா திட்டிருப்பேன்” என்றவள், “எவ்வளவு சீரியஸா பேசறேன். நீ என்னடானா அதுலையே வந்து நிக்கற?” என்றாள் கோபத்தோடு. ஒருபக்கம் கோபம் மூண்டாலும் மற்றொரு பக்கம் அவனின் சேட்டையை மனம் ரசிக்கத்தான் செய்தது.

“சரி நான் எதுக்கு ஸாரின்னு கேக்க விரும்பல. பட் நிஹி. உன் அப்பா அம்மா ரொம்ப ரொம்ப நல்லங்கடி. அவங்களை வெறுத்திடாதே” என்றிட,

“உண்மை முன்னாடியே தெரிஞ்சிருந்தா.. அவங்களை கையில் தாங்கியிருப்பேன்டா.. ஆக்சுவலி எனக்கு அம்மா கல்யாணம் பண்ணப்ப கூட கோபம் வரலடா. என்னை விட்டுட்டு போனது தான் கோபமே.. உனக்கு என் சிட்சுவேஷன் புரியுது தான ரிஷ்வந்த். உன்னையும் நான் ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன். நான் என்னன்னு உனக்கு புரிய வச்சிருக்கனும். கோபத்துல உன்னை விட்டுட்டு வந்தது தப்புன்னு இப்ப தோணுது. அப்புறம் அந்த வித்யாதரன் எல்லாம் மனுஷ ஜென்மமே இல்ல. நாய்” என்று பல்லைக் கடித்தபடி அவனைத் திட்டித் தீர்த்தவள், “சொல்லப்போனா எனக்கு என்னோட லைப்ல கிடைச்ச எல்லாருமே ஒரு பெரிய பொக்கிஷம்டா. தேவ் நானா உட்பட” என்றாள் மனநிம்மதியோடு.

“நானும் உன்னை அத்தைகாருவ வச்சு திட்டுனது ரொம்ப பெரிய தப்பு நிஹி. ஆக்சுவலி நான் அன்னிக்கு உன்னை பேசவே விடல. பட் அதுக்கு தான் நான் உன் பேரன்ட்ஸை பர்ஸ்ட் டைம் பாத்தப்ப கால்ல விழுந்தேன். அவங்களுக்கு அது ஆசிர்வாதமா தெரிஞ்சுது. எனக்கு அது மன்னிப்பா தெரிஞ்சுது” என்றவனின் பேச்சை புன்னகையோடு ரசித்தவள், ஏதோ தொடங்க வர,

“சரிடி போதும் போதும் என்னைய போட்டு அறுக்காத.. இங்க வேற ஓவர் குளிரா இருக்கு.. நீ வேற வெள்ளை பணியாரம் மாதிரி வைட் நைட்டில என் மூடை மாத்திட்டு இருக்க.. அப்புறம் நான் பாவம்” என்று சொல்ல,

“டேய், எவ்வளவு சென்ட்டிமென்ட் வழிய பேசிட்டு இருக்கேன். ஏன்டா இப்படி பண்ற?” என்று நிஹாரிகா கணவனைத் திட்டத் தொடங்க அவனோ இமைக்காது அவளைப் பார்த்து வைக்க, பெண்ணவளுக்குத் தான் வெட்கம் பிடுங்கித் தின்றது.

தனது உடையை மேல் ஏற்றிவிட்டு சரி செய்தவள், “ஏன் என்னை முன்ன பின்ன பாத்தது இல்லியா?” என்று கேட்க, மனையாளின் கேள்வியில் வாய்விட்டுச் சிரித்தவன், “உன்னோட முன்ன, பின்ன எல்லாமே நல்ல தெரியுமே ஜிலேபி” என்றான் தன் கீழுதட்டைக் கடித்து சிரிப்பை அடிக்கியபடி.அவன் சொல்வதின் அர்த்தம் புரியாதவளா அவள்?

நிஹாரிகாவுக்கோ அன்றைய நாளை எண்ணி நாணம் வந்து இரு கன்னங்களிலும் அமர்ந்து கொண்டது.

இருந்தும் நிஹாரிகா அவனுக்கு முறைப்பையே பதிலாகத் தர, “பட் அன்னிக்கு…” என்று இழுத்தவனைக் கண்டு நிஹாரிகா தலை குனிந்துவிட, ரிஷ்வந்திற்கோ கர்வமாய் இருந்தது. காதலியை நாணத்தில் தத்தளிக்க விடுவது கூட கர்வத்தைக் கூட்டுமானால் அது அழகுதானே.

ரிஷ்வந்த் பாதியில் நிறுத்தி இருக்க நிமிர்ந்தவள், “அன்னிக்கு..” என்று எதிர்பார்ப்புடன் வினவ, “அன்னிக்கு எல்லாம் சப்பியா இருந்…” ரிஷ்வந்த் வாய்விட்டுச் சொல்லிவிட, “ச்சி போடா பொறுக்கி.. லூசு.. அறிவே இல்ல..” என்று சிணுங்கியவள், “வீட்டுக்கு வா அப்புறம் இருக்கு உனக்கு” என்று மிரட்டினாள்.

“வாவ்.. பாவாக்கு என்ன ஸ்பெஷல்?” திரையின் அருகில் முகத்தைக் கொணர்ந்து தாடையை வசீகரமாய் இருவிரல் கொண்டு தடவியபடி,  இருபொருள்படக் கேட்டவனிடம், “எல்லாமே ஸ்பெஷல் தான் பாவா” என்று இருபொருள்படக் கூறி அவனைப் போலவே கண்ணடித்தவள், அலைபேசியை அதற்குமேல் முடியாமல் அணைத்துவிட, மோகத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தவனோ மனையாளின் திடீர்ச் செயலில் அவளுக்கு அழைத்து அழைத்து தோற்றான்.

வேண்டுமென்றே அவனை சீண்டியவள், “டூ நாட் டிஸ்டர்ப்” என்று மெசேஜ் அனுப்ப, “இப்பவே தூங்கிக்கடி.. இரண்டு நாள் அப்புறம் நீ கேட்டாலும் கிடைக்காது” என்று அனுப்பியிருக்க, அதைப் பார்த்தவள் வெட்கத்துடன் சிரித்துக்கொண்டே உறக்கத்தை தழுவினாள்.

ஏனோ நீண்ட நாள் இருந்த பாரம் மனதை விட்டு நீங்கிய உணர்வு இருவரிடமும்.

இருவரும் எப்போதுடா பார்த்துக்கொள்வோம் என்ற கனவுகளோடும், ஆசைகளோடும் வன்னத்துப் பூச்சிகளாய் தங்களது துயிலில் சஞ்சரித்துக் கொண்டிருக்க, நிஹாரிகாவுக்குத் தெரியவில்லை தன் கணவன் தன்னைத் தேடி நடு ரோட்டில் பைத்தியக்காரன் போன்று அலையப்போவதை. ரிஷ்வந்திற்கும் தெரியவில்லை தன்னவள் என்றும் இல்லாத போராட்டத்திற்கு ஆளாகப் போவதையும், அவளைக் காப்பாற்ற தான் கூட இருக்கப்போவதில்லை என்பதைப் பற்றியும்.