நிஹாரி-32

IMG-20211003-WA0016-0130e670

நிஹாரி-32

நிஹாரிகாவின் வாக்கியத்தில் சில நொடிகள் அசையாது சிலையாக நின்ற நவ்தீப், தானே நிஹாரிகாவின் கண் கட்டை அவிழ்க்கத் தொடங்கினான். நிஹாரிகா எதுவும் பேசவில்லை. அவனின் பெயரை தைரியமாக உச்சரித்து அவனை ஆட்டம் காண வைத்ததோடு சரி.

நிஹாரிகா தன்னை அழைத்ததில் அரண்டுதான் போயிருந்தான் நவ்தீப். அவன் இடைப்பட்ட மாதங்களில் எத்தனை நல்லவனாக நடித்து, அனைவரின் சந்தேகமும் தன் மீது வராமல் பார்த்துக் கொண்டிருக்க, நிஹாரிகா அதை ஒரு விநாடியில் மொத்தமாய் தலைகீழாகக் கவுத்திருந்தாள்.

எத்தனை வேலைகள் பார்த்தான் யாருக்கும் தன் மேல் சந்தேகம் உதிக்காத அளவிற்கு!

நிஹாரிகாவின் கண் கட்டை பிரித்தவன், அவளுக்கு எதிரே சென்று மீண்டும் அமர்ந்துகொள்ள, கண்களை கசக்கி தலையை சிலுப்பிய நிஹாரிகா முதலில் பார்த்தது ஸ்வாதிகாவைத் தான். “ஸ்வாதிகா” என்று குழந்தையை அவள் எழுப்ப முயற்சிக்க, அவளிடமோ சிறிதும் அசைவில்லை. ஸ்வாதிகாவிடம் அசைவே தெரியாததில் அவளின் நாசியின் அருகே, நிஹாரிகா நடுங்கும் விரல்களை பதட்டத்துடன் வைத்துப் பார்க்க, சீரான மூச்சுக்காற்று வந்து கொண்டிருந்தது குழந்தையிடம் இருந்து.

குழந்தைக்கு ஆபத்தில்லை என்று நிம்மதிப் பெருமூச்சை விட்டவள், அமைதியாக சுவரில் தலைசாய்த்து எதுவும் நடக்காதது போல அமர்ந்து கொண்டாள். அவள் கோபப்படுவாள், கத்துவாள், ஏன் அழக்கூட செய்யலாம் என்று நவ்தீப் நினைத்திருக்க, அனைத்தும் அவன் நினைத்ததிற்கு மாறாக நடந்துகொண்டிருந்தது.

அவளோ தைரியமான முகத்துடன் சுவற்றில் சாய்ந்து அமர்ந்து, எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தாள். அவளின் தைரியும் அப்போதும் அவனை ஈர்க்கத்தான் செய்தது. அவனுக்குப் புரிந்து போனது அவளாக வாயைத் திறக்க மாட்டாள் என்று. அது அவளின் டிரேட் மார்க் குணம் ஆயிற்றே.

மெல்ல தன் உதடுகளைப் பிரித்தவன், “நிஹி..” என்றழைக்க அவனை முறைத்தவள் எதுவும் பேசவில்லை. அமைதியாக அவனையே பார்த்திருந்தாள். அவளின் மனமோ உலைக்கலாமாய் கொதித்துக் கொப்பளித்துக் கொண்டிருந்தது.

“ஏதாவது பேசு நிஹி.. உனக்கு அட்லீஸ்ட் கேக்க நிறையா இருக்குமே” என்றிட, “எனக்கு உன்கிட்ட பேச எதுவுமில்லை நவ்தீப். இங்க இருந்து எப்ப போவேன்னு தான் இருக்கு” கடுகடுப்புடன் நிஹாரிகா சொல்ல, வாய்விட்டுச் சத்தமாக அரக்கத்தனத்துடன் சிரித்தான் நவ்தீப்

அவனின் சிரிப்பு கோரமாக அவன் எதையோ செய்ய இருக்கிறான், என்று நிஹாரிகா உணர்ந்த போதிலும் அவள் அசையாது தைரியமாக அவனைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

சிரித்துக் கொண்டிருந்தவன் இருமுட்டிக் கால்களிலும் கை கொடுத்து அமர்ந்து, “நீ இங்கிருந்து போனா என் பொண்டாட்டியா தான் நிஹி போவ” என்று உளற, நிஹாரிகா அவனின் பேச்சில் அசட்டையாகவும், அசால்ட்டாகவும் ஒரு புன்னகையை எள்ளலாக உதிர்த்தாள்.

அவளின் புன்னகையை கண்கள் இடுங்கப் பார்த்த நவ்தீப், “எதுக்கு நிஹி சிரிக்கறே.. உன்னை யாராலையும் இங்க வந்து காப்பாத்த முடியாது. உன் புருஷன் ரிஷ்வந்த்னாலையும் முடியாது. உன் தாத்தா சக்கரவர்த்தினாலையும் முடியாது” என்றிட, இப்போது வாய்விட்டுச் சிரிப்பது நிஹாரிகாவின் முறை ஆயிற்று.

சத்தமாக சிரித்து முடித்த நிஹாரிகா, “நான் யாராவது வந்து என்னை காப்பாத்துவங்கன்னு காத்துட்டு தான் இருக்கேன் நவ்தீப்.. இல்லைன்னு சொல்லலை.. ஆனா, நான் எப்பவுமே மிஸஸ்.ரிஷ்வந்த் தான். அதை சில வருஷத்துக்கு முன்னாடியே நான் முடிவு பண்ணது. என்னோட முடிவை எப்பவுமே யாராலையும் மாத்த முடியாது. அது உனக்கு சொல்லனும்னு அவசியம் இல்ல. அந்த விதியே எங்களை பிரிச்சு வச்சிருந்தும் நாங்க எங்க லவ்னால ஒண்ணு சேந்தவங்க. அப்படி இருக்கும் போது சாதரணம் மனுஷனால எங்க பிரிக்க முடியுமா சொல்லு. அப்படியே மாத்த நினைச்சா, யாரா இருந்தாலும் தி ரியல் நிஹாரிகாவோட கேரக்டரை பாக்க வேண்டியது வரும். அதுவும் எனக்கு தேவையான என்னோட விஷயத்துல நான் ரொம்ப சுயநலவாதி நவ்தீப். குறுக்க யாரு வந்தாலும் பாக்க மாட்டேன்” நிஹாரிகா ஊசி முனை போன்ற கூர்மையான விழிகளை வைத்து நவ்தீப்பை நேராகப் பார்த்துச் சொல்ல அவனிற்கு அவளின் சவால் பிடித்திருந்தது.

“அதையும் பாக்கலாம் நிஹி..” என்றவன், “என்னோட லவ் உண்மையானது.. கண்டிப்பா ஜெயிக்கும்” இரு பாக்கெட்களிலும் கைகளைவிட்டு எழுந்தபடிச் சொல்ல, நிஹாரிகா அருவெறுப்புடன் அவனைப் பார்த்தாள்.

அவனின் முட்டாள்தனமான பேச்சு ஆத்திரத்தைக் கிளப்ப, “லவ் பத்தி நீ பேசதே.. அதுக்கு கொஞ்சம் கூட தகுதியில்ல உனக்கு.. அடுத்தவன் பொண்டாட்டியை கடத்திட்டு வந்துட்டு நீயெல்லாம் உன் லவ் உண்மையானதுன்னு பேசாதடா” என்றாள் அடக்கபட்ட கோபத்தோடு.

நிஹாரிகாவின் பேச்சில் கோபம் கிளர்ந்தெழ அவளின் அருகே வேகமாக வந்தவன், அவளைக் குனிந்து பார்த்து, “சின்ன வயசுல இருந்து உனக்காக உன்னை மட்டும் நினைச்சுட்டு நான் இருக்கேன்ல நீ பேசுவ நிஹி” என்று கோபமாக கத்தியவன், கண்களை மூடி தன்னுடைய கோபத்தை கட்டுக்குள் கொண்டு வர முயன்றான்.

சிறிது நொடிகள் கழித்து கண்களைத் திறந்தவன் நிஹாரிகாவின் அருகிலேயே தரையில் அமர, முகத்தை சுளித்த நிஹாரிகா வெறுப்புடன் தள்ளி அமர்ந்தாள். அத்தனை அருவெறுப்பாய் இருந்தது அவனது பேச்சும், செயலும், அருகாமையும் அவளுக்கு.

“நிஹி.. என் லவ் உனக்கு புரியலையா?” நிஹாரிகாவின் தோள் மீது கை வைத்துக் கேட்க வர, “தொடாதே!” என்று சீறினாள் ரிஷ்வந்தின் மனைவி.

“நிஹி! உனக்கு ஓகே ன்னா சொல்லு.. நாம யார் கண்ணுலையும் படாம எங்காவது போயிடலாம். நான் ரிஷ்வந்தை விட உன்னை நல்லா பாத்துப்பேன்” என்று அவன் தன்னை புரியவைக்க முயல்வது போல நிஹாரிகாவிடம் பேசினான்.

அவனை கேவலமான பிறவியைப் போன்று பார்த்து வைத்தவள், “நீ பேசறது உனக்கே அசிங்கமா இல்ல?” என்று கர்ஜிக்க,

“என்ன தப்பு நிஹி.. வாழ போறது நானும் நீயும். நமக்கு புடிச்ச மாதிரி வாழ்ந்துட்டு போயிடனும்” என்றவனை உறுத்து விழித்தாள் நிஹாரிகா. அவன் பைத்தியம் பிடித்தவன் போல பேசுவதைப் போன்று தோன்றியது நிஹாரிக்காவிற்கு. அவன் முகத்தைப் பார்க்கக் கூட பிடிக்காதவளாய் முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொண்டாள்.

“நிஹி.. உன் அம்மா நானா கூட..” நவ்தீப் விவாஹாவையும், மகாதேவனையும் உள்ளே இழுக்க, நிஹாரிகா நவ்தீப்பை எரித்துப் பொசுக்கி விடுவதைப் போலப் பார்த்தவள்,

“வாயை மூடுடா.. எங்க அம்மா நானா விஷயம் என்னன்னு உனக்கு தெரியுமா? அவங்க லவ் கூட போய் உன்னோட சாக்கடையை கம்பேர் பண்ற? நீயெல்லாம் எப்படிடா அர்ஜூன் அங்கிளுக்கும் சுரேகா ஆன்ட்டிக்கு பொறந்த? கேடுகெட்டவன் மாதிரி பண்ணிட்டு இருக்க. மரியாதையா என்னை விட்ரு நவ்தீப், அதான் உனக்கு நல்லது” என்று நிஹாரிகா எச்சரித்தாள். அத்தனை ஆவேசமாய் வெளிவந்தது அவளது குரல். கை கட்டுகள் மட்டும் இல்லை என்றால் அவனை அடித்திருப்பாள்.

“எது நிஹி சாக்கடை? என்னோட லவ்வா? என்னோட லவ்வோட கம்பேர் பண்ணும்போது அதுல ஒரு சதவீதம் கூட ரிஷ்வந்தோட லவ் நிக்காது. உன்னை சின்ன வயசுல இருந்து தெரிஞ்சவன் நான். எத்தனை ஆசை ஆசையா உன்னை பாத்துக்கணும் நினைச்சிருக்கேன் தெரியுமா.. எல்லாத்தையும் குழி தோண்டி புதைக்கிற மாதிரி அந்த ****** உள்ள வந்துட்டான்” என்று நவ்தீப் பல்லைக் கடித்துக்கொண்டு ரிஷ்வந்தைத் தகாத வார்த்தைகளால் அசிங்கமாகத் திட்ட,

“நவ்தீப்” என்று உறுமினாள் நிஹாரிகா. தன்னவனை திட்டும்போது அவள் மனம் அணு உலையாய் கொதித்து, ரணமாய் வலித்தது.

“இங்க பாரு நவ்தீப் ரிஷ்வந்தை இன்னொரு வார்த்தை தப்பா பேசுனா உன்னை கொல்ல கூட நான் தயங்கமாட்டேன்.. அவனை பத்தி என்னடா தெரியும் உனக்கு. ஜாக்கிரதை” என்று கட்டியிருந்த இருகைகளையும் தூக்கி, ஒற்றை விரலைத் தூக்கி அவனை எச்சரித்தாள் ரிஷ்வந்தின் உயிர் மனைவி.

“சரி நான் அவனை பேசல நிஹி.. பட் ஒன்னே ஒண்ணு கேட்டுக்க. இன்னிக்கு எனக்கும் உனக்கும் கல்யாணம், நீ சம்மதிக்கலனா கூட. அதுக்கு அப்புறம் நாம யார் கண்ணுலையும் படாம நம்ம இடத்துக்கு போகப்போறோம்” என்றவன் நிஹாரிகாவின் பதிலை எதிர்பார்க்காமல் கதவை அடித்துச் சாத்திக்கொண்டு வெளியே செல்ல, நிஹாரிகா அவன் சென்ற திசையையே வெறித்துக் கொண்டிருந்தாள்.

***

“நான் வுமனைஸர் தான்.. பட் கல்யாணம் ஆன பொண்ணு மேல கை வைக்கிற அளவுக்கு கீழ்த்தரமானவன் இல்ல” என்ற ஆத்விக் அவன் சட்டையைப் பற்றியிருந்த ரிஷ்வந்தின் கரத்தை மெதுவாக விலக்கினான்.

மீண்டும் ஆத்விக் தனது கெஸ்ட் ஹவுஸிற்கு வந்திருக்க, அவனை நேரடியாக சந்தித்தனர் ரிஷ்வந்தும் கவினும்.

“எப்படி நம்ப சொல்றே? என்கிட்டையே உன் பொண்டாட்டி பத்திரம்னு சொன்னவன் தானே நீ..” ரிஷ்வந்த் அவனை நம்ப முடியாமல் வினவ, ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் ஒன்றாக வைத்து நெற்றியில் தேய்த்த ஆத்விக், அவனை நிமிர்ந்து யோசனையுடன் பார்த்து, “நிஹாரிகா உன்கிட்ட எதுவும் சொல்லலையா?” என்று வினவினான்.

அவனின் கேள்வியில் குழம்பிய ரிஷ்வந்த் அவனை பார்த்த பார்வையிலேயே ஆத்விக்கிற்கு புரிந்துபோனது நிஹாரிகா அவனிடம் எதுவும் சொல்லவில்லை என்று.

“இனி மறைச்சு யூஸ் இல்லை ரிஷ்வந்த்” என்ற ஆத்விக், “நவ்யா வெளில வா” என்று திரும்பி தனது அறையை நோக்கி குரல் கொடுக்க, நவ்யா கௌடா அவனுடைய அறையில் இருந்து தயக்கத்துடன் வெளியே வந்தாள்.

அவளைப் பார்த்த ரிஷ்வந்த் திகைத்தான். நவ்யா தற்போது அவன் நடிக்கும் படத்தின் கதாநாயகிகளுள் ஒருவள் அல்லவா. அதுவும் நிஹாரிகாவின் தோழி வேறு அவள்.

ரிஷ்வந்த் கேள்வியாய் இருவரையும் பார்க்க, “ஆக்சுவலி நிஹாரிகா என்கிட்ட கடைசியா பேசிட்டு வந்த அப்புறம் நான் திருந்திட்டேன்னு சொல்லமாட்டேன் ரிஷ்வந்த். அந்த அளவுக்கு நான் நல்லவனும் இல்ல. பட் அவ பேசுனது என்னை ஒரு விதமா பாதிச்சது உண்மை. அது என்னனா குற்ற உணர்ச்சி. இருந்தும் என்னால அவ்வளவு சீக்கிரம் மாற முடியல. அப்பதான் நவ்யாவை ஒரு பார்ட்டில பாத்தேன். ஐ லவ் ஹெர் அன்ட் ஹெர் ஆட்டியூட்டு அட் பர்ஸ்ட் சைட்”

“அவ உன்னோட கரண்ட் மூவில நடிக்கறான்னும் தெரியும் எனக்கு. அட் தி சேம் டைம் நிஹாரிகாக்கு பிரண்ட் கூடன்னு தெரிய வந்துச்சு. அதுதான் நிஹாரிகாகிட்ட ஸாரி கேட்டுட்டு அப்படியே நவ்யா விஷயம் பத்தி பேச வந்தேன். நான் திருந்திட்டேன்னு என் அப்பாவே நம்பல ரிஷ்வந்த்” என்று புன்னகையை உதிர்த்தவன், “நிஹி நான் பேசுன உடனே புரிஞ்சுக்கிட்டா.. ஆனா, மறுபடியும் நவ்யா பத்திக் கேட்டப்பதான் அவ என்னை கோபமா முறைச்சு திட்டிட்டு இருந்தா.. அதாவது ஒரு பிரண்டா.. அப்பதான் நீ வந்த.. அவளை வெறுப்பேத்த சொன்ன வார்த்தையை தான் நீ தப்பா புரிஞ்சுக்கிட்ட ரிஷ்வந்த்.. அதுக்கு அப்புறம் நிஹாரிகாக்கு நான் உண்மையா நவ்யாவை லவ் பண்றன்னு புரியவச்சு பேசி பேசி நம்பர் வாங்குனேன்” என்று ஒன்றுவிடாமல் கூறினான்.

தனது ஊகம் தவறாகப் போய்விட்டதை நினைத்து ரிஷ்வந்த் தலையைப் பிடித்துக்கொண்டு அமர, “இப்பகூட எனக்கு தெரிஞ்ச ஆளுங்கள வச்சு நிஹியை தேட சொல்லிட்டுதான் வந்தேன்” என்ற ஆத்விக்கின் அருகில் வந்த நவ்யா கண்களால் ஏதோ அவனிடம் சொன்னாள்.

அவளின் விழி மொழியை உணர்ந்தவன் ரிஷ்வந்தின் அருகே சென்று அவனின் தோளை தைரியமாய் தட்டி, “நாம தேடலாம் ரிஷ்வந்த். கண்டிப்பா மார்னிங்குள்ள கண்டு பிடிச்சிடலாம்” என்று சொல்ல,

“நீ இல்லனா யாரா இருக்கும் ஆத்விக்?” ரிஷ்வந்த் கேட்க, நால்வரும் தலையைப் போட்டு உடைத்துக் கொண்டிருக்க, “இதைப் பண்ணது ஏன் நவ்தீப்பா இருக்கக் கூடாது?” என்று நவ்யா கேட்க, மூன்று ஆண்களும் அவளை வெட்டவா குத்தவா என்பது போலப் பார்த்தனர்.

ஆத்விக், “வாட் ரப்பிஷ் நவி.. அவன் அப்படிப்பட்ட ஆளில்லை” என்று சிறிது கோபத்துடன் சொல்ல,

“உங்க எல்லாருக்கும் ஒண்ணு தெரியுமா.. நிஹி என்கிட்ட எல்லாத்தையும் ஷேர் பண்ற ஆளு.. ஈவன் ரிஷ்வந்த் பத்தி ஒன் இயர் முன்னாடியே மறைமுகமா ஒரு தடவை என்கிட்ட சொல்லியிருக்கா.. நாங்க இப்ப ஷூட்ல கூட ஒண்ணா தான் இருப்போம்.. அப்ப எல்லாம் அவ நவ்தீப்பை கொஞ்சம் அவாய்ட் பண்ண மாதிரி இருந்துச்சு.. அதே சமயம் அவனை கண்காணிச்சுட்டே இருந்தா ஷூட்டிங் வரும்போதெல்லாம்.. ரிஷ்வந்த் உங்களுக்கு ஞாபகம் இருக்கா.. நம்ம சூட்ல செட் சரியா போடாம, நீங்க டூப் இல்லாம பண்ண ஸ்டன்ட்ல, செட்ல சாஞ்சு உங்க மேல விழப்பாத்தது?” என்று வினவ, ரிஷ்வந்தின் புருவங்கள் யோசனையாய் சுருங்கியது.

“அதுக்கு அப்புறம் நிஹாரிகா சிசிடிவி செக் பண்ணா. ஏதோ ஒண்ணு அவளுக்குத் தெரிஞ்சுது. ஆனா, நான் கேட்டு அவ எதுவும் இல்லன்னு சாதிச்சுட்டா. பட் அதுக்கு அப்புறம் உங்களுக்கு செக்யூரிட்டிஸ் ரொம்பவே டைட் ஆச்சு. இன்னிக்கு கூட நிஹாரிகா காணோம்னு நீங்க முன்னாடி எல்லார் கூடையும் வந்து சத்தம் போட்டப்ப, நான் உள்ள இருந்து கவனிச்சேன் எல்லாத்தையும். நவ்தீப் எதுவுமே பேசல. ஏதோ யோசனைல இருந்தான். அப்பப்ப போன்ல ஏதோ மெசேஜ் பண்ணிட்டே இருந்தான்” என்று தனது ஊகங்களை சொன்ன நவ்யா மூவரையும் பார்க்க மூவருமே பலத்த யோசனையில் இருந்தனர்.

தனது அலைபேசியை எடுத்த ரிஷ்வந்த் அர்ஜூனுக்கு அழைக்க, “சொல்லுங்க ரிஷ்வந்த்.. ஏதாவது ஹின்ட்ஸ் கிடைச்சுதா?” என்று வினவ, “இல்ல ஸார்.. நவ்தீப் கிட்ட பேசணும்னு கூப்பிட்டேன்.. ஃபோனை நவ்தீப் கிட்ட தர முடியுமா?” என்று வினவ, “அவன் நிஹியை வேற ஏதாவது மூலியமா தேட முடியுமான்னு பாக்க வெளிய போயிருக்கான். நீங்க அவனுக்கு கூப்பிடறீங்களா?” என்று கேட்டார்.

“சரி” என்று வைத்தவன் தனது ஆள் ஒருவனுக்கு ஃபோன் செய்து நவ்தீப்பின் அலைபேசி எண்ணை வைத்து அவன் இருக்கும் இடம் ஆராயச் சொன்னான்.

***

சுவற்றில் சாய்ந்திருந்த நிஹாரிகாவின் யோசனை நவ்தீப் செய்த காரியங்களிலேயே நின்றிருந்தது. ஒவ்வொன்றாக அவளது மூளை யோசிக்க யோசிக்க, ‘அவன் இவ்வளவு கேவலமானவனா’ என்ற கோபமும், அவனின் பெற்றோரை நினைத்து வேதனையும் ஒருசேர எழுந்தது.

அன்று, ‘அனன்யா நாயர்’ ரிஷ்வந்த் தன்னை ஏமாற்றி விட்டதாக பத்திரிகையாளர்களிடம் சொன்ன போது கூட அவள் அனன்யாவை தூண்டிவிட்டது நவ்தீப் என்று நினைக்கவில்லை. அவளை தனி அறையில் வைத்து விசாரித்த போதுதான் நிஹாரிகா உள்ளுக்குள் அதிர்ந்து போனாள். ஓர் விநாடி, அவளின் விழிகள் பரிதாபமாக நவ்தீப்பை, ‘என்னை காப்பாற்றேன்’ என்பது போல பார்த்து மீண்டது.

அப்போதே நிஹாரிகாவுக்குத் தெரிந்துவிட்டது நவ்தீப் தான் இதை அனன்யாவை வைத்துச் செய்தது என்று. அதற்குத் தகுந்தாற் போல் இருவரின் அலைபேசியை ஹாக் செய்திருந்த நிஹாரிகா அனைத்தையும் கண்டு கொண்டாள் இருவர் தீட்டிய திட்டதை வைத்து. மேலும் ஆத்விக் தன்னிடம் வந்து பேசியபோது, விருது வழங்கும் விழாவில், தானும் ரிஷ்வந்தும் இருக்கும் புகைப்படத்தை ஏன் கொடுத்தாய் என்று அவனிடம் கேட்டபோது அவனோ தான் இல்லவே இல்லை என்றான்.

அவளிற்குத் தெரியும் ஆத்விக்கின் திமிரையும் தெனாவெட்டையும் பற்றி. அவனாக இருந்தால், ‘ஆமாம் நான்தான் செய்தேன் அதற்கென்ன’ என்று கேட்டிருப்பான். அனன்யா சம்பவத்திற்குப் பிறகு, தனது ஆட்களை வைத்து அவள் இரகசியமாய் விசாரித்தபோது, ஒருவன் நவ்தீப் என்று சொல்ல நிஹாரிகாவுக்கு நவ்தீப் மேலிருந்த நம்பிக்கை சுத்தமாக அறுபட்டுப் போனது.

உண்மையாக காதலித்தவனால் இவ்வாறு காதலித்த பெண்ணை ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் திரைத்துறையினர் முன்னால் நிறுத்த முடியாது. அதுவும் தங்கள் குடும்பத்தின் மேல் மரியாதையை வைத்திருந்தால்கூட அவன் இதை செய்திருக்கமாட்டான் என்று நினைத்த நிஹாரிகா இந்தப் படம் முடிந்தவுடன் அவனிடம் இருந்து மொத்தமாக விலக நினைத்தாள். இந்த அழுத்தத்தில் கணவனிடம் ஆத்விக்கைப் பற்றி கூற மறந்திருந்தாள்.

என்னதான் அர்ஜூனும், சுரேகாவும் அவளை சிறு வயதில் இருந்து பாசமாக பார்த்துக்கொண்டாலும், அவளை நிறைய நாட்கள் தனியே விடாமல் அக்கறையாகக் கவனித்துக்கொண்டாலும், கணவனுக்கும் தனக்கும் முன், தங்களது பந்தத்திற்கு முன் அவளுக்கு எதுவும் பெரிதாகத் தெரியவில்லை.

அதுவும் படபிடிப்பின் போது ரிஷ்வந்தை செட்டில் குளறுபடி செய்து தனது கணவனின் உயிரை எடுக்க நவ்தீப் எடுக்கத் துணிந்திருக்க, நிஹாரிகா பொறுமையை இழந்தாள். விரைவாக இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அவள் நினைத்திருக்க, அதற்குள் படபிடிப்பு விஷயமாக அனைவரும் வெளிநாட்டிற்குக் கிளம்பினர். தாத்தையா வேறு விஷயமாக இங்கு வேலையை அவளுக்குத் தர நிஹாரிகாவால் செல்ல இயலவில்லை.

வெளிநாடு செல்லும்போது, நவ்தீப்பும் செல்கிறான் என்று அறிந்த நிஹாரிகா வேண்டாத தெய்வங்கள் இல்லை. தன் கணவனுக்கு எதுவும் ஆகக்கூடாது என்று வேண்டிவள், அவனின் பாதுகாப்பிற்கு நான்கைந்து பேரை அருணிடம் அதுஇது என்னு சொல்லி அனுப்பி வைத்தாள்.

எத்தனை ஆசை ஆசையாய் தன்னவனின் வருகைக்காக காத்திருந்தாள்!

தன்னவனை நினைத்த நிஹாரிகாவுக்கு விழிகள் வைரத்தைப் போல கண்ணீரோடு பளபளத்தது.

“ஆன்ட்டி” என்ற ஸ்வாதிகாவின் முனகலில் தன்னிலை அடைந்தவள், “பட்டு” என்று அவளை அருகில் இழுத்து கண்கட்டை அவிழ்க்க, “ஆன்ட்டி பயமா இருக்கு” என்று சுற்றியும் முற்றியும் பார்த்துக்கொண்டு அவளிடம் தஞ்சம் புகுந்து சிறியவள் அழ, நிஹாரிகாவோ, “அழக்கூடாது ஸ்வாதிகா. நீங்க எவ்வளவு போல்ட் கேர்ள். எது வந்தாலும் நாம அதை தைரியமா எதிர்த்து நிக்கணும் சரியா. சரி நம்ம ஒரு கேம் விளையாடுவோமா?” நிஹாரிகா கேட்க, அழுத விழிகளுடன், மருண்டபடியே தலையாட்டியது சின்னச் சிட்டு.

“ஆன்ட்டி கை கட்டியிருக்கு பாத்தீங்களா? இதை எப்படிக் கழட்டலாம்” என்று யோசிப்பது போலக் கேட்க, தாடையை உயர்த்தி மேலே பார்த்து யோசித்த ஸ்வாதிகா, “ஆன்ட்டி அப்பா படத்துல எல்லாம் வாய்ல கடிச்சு இழுப்பாங்க” என்று சொல்ல அந்நிலையிலும் நிஹாரிகாவுக்கு சிரிப்பு வந்தது.

ஏனெனில் அவர்களின் கை கட்டப்பட்ட முடிச்சுக்கள் அப்படி இருந்தது. அத்தனை இறுக்கமாக, எங்கே தொடங்கி எங்கே முடிகிறது என்று கூட தெரியாமல்.

சுற்றியும் முற்றியும் பார்த்த நிஹாரிகா அங்கொரு கண்ணாடி ஜாடியைக் கண்டாள். சிரமப்பட்டு எழுந்தவள் அதன் அருகில் சென்று அதைத் தள்ளிவிட அது கீழே விழுந்து உடைந்து தெறித்தது. அதில் ஒரு துண்டை எடுத்தவள், ஸ்வாதிகாவின் அருகில் வந்து அமர்ந்து அவளின் கை கட்டை கவனமாக அறுக்க, அதுவோ கனமான கயிறு ஆயிற்றே. அதை அறுத்து முடிப்பதற்கே இருபது நிமிடம் பிடித்தது நிஹாரிகாவுக்கு.

அடுத்து அதை ஸ்வாதிகாவிடம் தந்தவள், “நீங்க இதே மாதிரி ஆன்ட்டிக்கு பண்ணுங்க” என்று கூற மணிமுத்தாக தலையாட்டிய ஸ்வாதிகா கயிரை அறுக்க, சிறிது தடுமாறியவள் நிஹாரிகாவின் விரலை பதம் பார்க்க, “ஸ்ஸ்!” என்ற நிஹாரிகா ஸ்வாதிகாவை பார்க்க அதுவோ பயந்து போய் நிஹாரிகாவைக் கண்டு, “ஸாரி ஆன்ட்டி” என்றது.

விரலில் இருந்து வழிந்த இரண்டு பொட்டு இரத்தக் கரையை புடவையில் துடைத்த நிஹாரிகா, “இட்ஸ் ஓகே.. மெதுவா பண்ணுங்க” என்றிட, அதேபோல செய்த ஸ்வாதிகா கட்டுகளை அறுத்து முடிக்க முக்கால் மணிநேரம் ஆனது.

ஒரு வழியாய் எழுந்த நிஹாரிகா ஸ்வாதிகாவை அழைத்துக்கொண்டு கதவைத் திறந்து வெளியே எட்டிப் பார்த்தாள். யாரும் இல்லை. ஆனால், எங்கோ சிலர் பேசிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டது நிஹாரிகாவுக்கு.

சத்தம் வராமல் மெதுவாக, அதே சமயம் வேக நடைகளோடு நிஹாரிகா படிகளை இறங்கி கீழே வர, கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் நவ்தீப். நிஹாரிகாவைப பார்த்தவன் திகைக்க, அவனைக் கண்டவளோ தைரியமாக அவனின் அருகில் வந்து, பளாரென ஆவேசத்துடன் அவன் சுதாரிக்கும் முன் அவனை அறைந்திருந்தாள்.

“உன்னை எல்லாம் திட்ட கூட வார்த்தை இல்லடா” என்று அடிக்குரலில் சீற்றத்தோடு அவனிடம் கர்ஜித்தவள் ஸ்வாதிகாவை அழைத்துக் கொண்டு வெளியே செல்லப் பார்க்க, நிஹாரிகாவை முரட்டுத்தனமாக பிடித்து இழுத்திருந்தான் அவன்.

“தாலி கட்டிட்டு உன்னை சொந்தம் ஆக்கிக்கலாம்னா முடியாது போல நிஹி” என்றவன் துச்சாதனனாக மாறி அவளின் துகிலை உரிக்க, பெண்ணுக்கே உரிய அச்சம் உடல் முழுதும் படர, வெடவெடத்துப் போனவள், தன்னைக் காத்துக் கொள்ள முயல, மின்சாரம் தடையாகவும், நிஹாரிகாவின் புடவை அவன் கைகளில் சென்றிருக்கவும் சரியாக இருந்தது.

தான் நின்றிருந்த நிலை குறித்து பதறிப் போனவள் இருட்டில் கிடைத்த அறைக்குள் சென்று ஓடிச்சென்று கதவை அடைத்துத் தாழிட, சத்தம் வந்த திசையை நோக்கி சென்ற நவ்தீப், கதவை இடியெனத் தட்டினான். கதவைத் சாத்தியவள் கதவின் மேலேயே சாய்ந்து, அடுத்து என்ன என்று உடல் நடுங்க யோசித்துக் கொண்டிருக்க, நவ்தீப் கதவைத் தட்டியதில் அவளின் உடல் சிறிது பயத்தில் வெட்டியது.

இதே நிலையில் தன் அன்னை இருந்ததையும், அவரின் கற்பு அவர் அறியாமல் பறிபோனதையும் நினைத்த நிஹாரிகாவுக்கு, அவளை மீறி கண்ணீர் வெடித்துக்கொண்டு வெளியே வந்து அவளை பலவீனம் ஆக்கியது. கீழே அமர்ந்து அவள் முழங்காலிட்டு அழுதது சில நொடிகள் தான். அடுத்து, ‘தன் அன்னைக்கு நடந்ததுபோல தன்னை பலவீனப்படுத்த ஒருவனை விடக்கூடாது’ என்று நினைத்தவள் கண்ணீரை துடைத்துக் கொண்டு ஆவேசமாக எழுந்த சமயம், “ஆன்ட்டி” என்ற அலறல் நிஹாரிகாவின் ஈரக் குலையையும் ஆட்டம் காணச் செய்தது.

தான் இருந்த நிலையில் ஸ்வாதிகாவை மறந்தவள், அவசரமாக கதவைத் திறக்க முயல, அது வெளியே தாழிட்டு இருந்தது. கதவை படபடவென்று அடித்தவள், “நவ்தீப் கதவைத் திற” என்று கத்த, அவனோ வெறி பிடித்தவனாய் சத்தம் போட்டு சிரித்தான்.

“கதவைத் திறடா” என்று கத்திய நிஹாரிகா ஸ்வாதிகாவின் அழு குரலில் நவ்தீப் அவளை என்ன செய்கிறான் என்று தெரியாமல் உள்ளுக்குள் துடித்துக் கொண்டிருந்தாள்.

வெளியே நவ்தீப்போ ஸ்வாதிகாவின் தலைமுடியை கையில் கொற்றாய் பற்றிப் பிடித்திருந்தான்.

“நவ்தீப், குழந்தையை எதுவும் பண்ணிடாதே” நிஹாரிகா அவனை எச்சரிக்க, பல்லைக் கடித்துக் கொண்டு சிரிப்புடன் பேசினான் அவன்.

“விட்டுடறேன் நிஹி.. ஆனா, நான் இப்ப உள்ள வருவேன். நீ என்னை எதுவும் சொல்லக்கூடாது.. ஓகேன்னா சொல்லு இதை விட்டறேன்” என்றிட, தன்னிச்சையாக அவளின் கரங்கள் தன்னை மூடியது.

நிஹாரிகா பதில் பேசாமல் இருக்கவும், நவ்தீப் ஸ்வாதிகாவின் முடியை இறுக்கிப் பிடிக்க, “ஆஆஆஆஆஅஅஅ வலிக்குதுஊஉஉ” என்று அழுகையோடு ஸ்வாதிகா அலறித் துடிக்க, தன்னை நம்பி வந்த குழந்தையின் அழுகையை தாங்க முடியாதவள், “நவ்தீப்! ஸ்டாப் இட் ஸ்டாப் இட்” என்று விழிகளில் நீர் மணிகள் வழிய பதட்டத்துடன் கத்தினாள் நிஹாரிகா.

“அப்ப ஓகே ரைட்?” நவ்தீப் வினவ, எப்படியும் சமாளித்துக் கொள்ளலாம் என்று எண்ணிய நிஹாரிகா, “சரி” என்றாள்.

அவசர அவசரமாக சுற்றிப் பார்த்தவள் அங்கிருந்த திரைச்சீலையை இழுத்து, தன்னைச் சுற்றிக்கொள்ள கதவை வெளிறே திறந்த நவ்தீப், “கதவை திற நிஹாரிகா” என்றான் கடுமையான குரலில்.

‘என்ற நடந்தாலும் தன்னை காத்துக்கொள்ள வேண்டும்’ என்று உறுதியாக முடிவெடுத்தவள், கதவைத் திறக்க புயலென உள்ளே நுழைந்தவன், தனது அலைபேசியின் ப்ளாஷ் லைட்டினை நிஹாரிகாவின் மேல் அடிக்க, அவனின் முகத்தைப் பார்க்க பிடிக்காதவள் முகத்தைத் திருப்பிக்கொள்ள, திரைச்சீலையை சுற்றியிருந்த நிஹாரிகாவின் மாங்கல்யம், திரைச்சீலைக்கு மேலே வந்து அவனை எச்சரித்துக் கொண்டிருப்பது போல பளபளத்துக் கொண்டிருந்தது. வெளியில் இருந்த ஆட்களிடம் வேறு, “என்ன சத்தம் கேட்டாலும் உள்ளே வரக்கூடாது” என்று சொல்லியிருந்தான் நவ்தீப்.

நிஹாரிகாவின் அருகில் அடி மேல் அடி வைத்து அவன் நகர, அவளோ அசராமல் முகம் இறுக திரைச்சீலையை இரும்பென பற்றியிருக்க, நிஹாரிகாவின் மாங்கல்யத்தை எதிர்பாரத சமயத்தில் பற்றியவன், “இது நல்லா இல்லை நிஹி” என்று இழுக்க, உலகமே சுற்ற, நாடி நரம்பெல்லாம் புடைக்க, லட்சம் பேரிடிகள் வந்து அவளது இதயத்தைத் தாக்க, தன் மாங்கல்யத்தை பிடித்துக் கொண்டவள், “நவ்தீப்” என்று ஆத்திரத்துடனும், ஆங்காரத்துடனும் வெடித்தாள்.

“வேணாம் நிஹி.. உனக்கு நான் போதும்.. வேற யாரும் வேணாம்” என்றவன் அவளின் மாங்கல்யத்தை இழுக்க முயல, அவனின் கரத்தை இறுகப் பற்றியிருந்த நிஹாரிகாவுக்கு எங்கிருந்துதான் வந்த பலமோ அது. அவனின் கரத்தை மேலும் இழுக்க விடாமல் அத்தனை உறுதியாய் பிடித்திருந்தாள் அவள்.

மாங்கல்யத்தின் சக்தி தந்த பலமோ என்னவோ!

“விடு நவ்தீப்… விடு” என்று அவனுடன் போராடிக்கொண்டிருந்தவள் மற்றொரு கையை வைத்து, அவனைத் தள்ளப்பார்க்க ஆறடி இருந்தவனின் எடையோடு அவளால் போராட முடியவில்லை. தனது மாங்கல்யத்தை மட்டும் விடாது பற்றிக்கொண்டாள்.

தன் கணவன் இதை.அணிவிகாகும்போது, உடலும் உள்ளமும் பூரித்துப் போய், அவள் அவனை நிமிர்ந்து பார்த்ததும், அவன் வெற்றிப் புன்னகையுடன் அவளது நெற்றியில் முத்தமிட்டதும் ஞாபகத்தில் வர கண்களில் கண்ணீர்த் துளிர்க்க, “ப்ளீஸ் நவ்தீப்” என்றாள் தன் மாங்கல்யத்தை இருகைகளாலும் பிடித்துக்கொண்டு. அவனோ இதை உன் கழுத்திலிருந்து அகற்றாமல் விடமாட்டேன் என்ற வேறியேறி நின்றிருந்தான்.

இறுதியில் அவனின் வெறியில் நெஞ்சுக் கூடு சில்லிட்டுப் போகும் அளவுக்கு பதட்டம் எழுந்தது அவளுக்கு. ஆக்ரோஷமும், ஆத்திரமும், ஆங்காரமும் ஒன்று கூட அவனின் கையை தனது நகத்தால் பிராண்டியவள், அவனைத் தள்ள சில அடிகள் தள்ளி விழுந்தவனைத் தாண்டி அவள் தாண்டி ஓட முயற்சிக்க, நிஹாரிகாவின் மென் பாதத்தை கொடூரமாகப் பிடித்தவன், திடீரென இழுத்ததில் தடுமாறிக் கீழே விழுந்தாள்.

சட்டென நிஹாரிகாவின் நிலையை உபயோகித்தவன், அவள் மேல் படர, அவனின் தொடுகை அவளின் உயிரை உறிய, “ச்சீ விடுடா” என்று அவனின் கழுத்தைப் பிடித்துத் நிஹாரிகா தள்ள, “எனக்கு நீ வேணும் நிஹி” என்றான் கண்களில் கண்ணீருடன் வெறியும் சேர.

“***** சைகோ” என்று அவனைத் திட்டியவள், அவனின் வயிற்றில் எட்டி உதைக்க அப்போதும் அவன் நகரவில்லை.

திரைச்சீலையை அவன் விலக்கப் பார்க்க, அவனின் உயிர்நிலையில் எட்டி உதைத்தவள் தன்னை மறைத்துக் கொண்டு எழுந்தவளின் காலைப் பிடித்தவன், “நீ இல்லாம என்னால இருக்க முடியாது நிஹி.. ப்ளீஸ் என்னை விட்டுட்டு போகாத” என்று கெஞ்ச, நிஹாரிகாவின் இதயம் அவனின் செயலில் பனியாய் உறைந்து போனது.

தலையில் கை வைத்து அமர்ந்தவள், “ஏன்டா இப்படி பண்ற.. என்னை உண்மையா லவ் பண்ணி இருந்தா இப்படி எல்லாம் பண்ணுவியா நீ.. ஏன் எவ்வளவு சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்டிற” என்று கரகரத்த குரலோடு கேட்க, “என்னால முடியல நிஹி” என்று நெஞ்சில் கை வைத்துக்கொண்டு கண்ணீர் விட்டான் அவன்.

சிறிது நொடிகள் அவனையே பார்த்திருந்தவள், “எனக்கு என் ரிஷ்வந்த் தான் முக்கியம்” என்றவள் எழப் பார்க்க அவளுக்கு முன் காற்றின் வேகத்தில் எழுந்தவன், “உன்னை விட மாட்டேன்” என்றவன் தனது பாண்ட் பாக்கெட்டில் இருந்த மாங்கல்யத்தை எடுக்க நிஹாரிகாவின் தண்டுவடம் அவனின் செயலில் அதிர்ச்சியில் சில்லிட்டு போனது.

உதடுகள் பிரிந்து, கீழ் அதரங்கள் துடிக்க அவனைப் பார்த்தவள், “வேணாம்டா நவ்தீப்.. இதை நீ பண்ணா, உன்னை விட என்னை யாராலையும் அசிங்க படுத்தமுடியாது டா” என்றவள் பின்னே நகர, “எனக்கு ஊரைப் பத்தி கவலை இல்ல நிஹி” என்றான் முன்னே நகர்ந்து கொண்டு.

“எனக்கு உன்னை பிடிக்கல டா.. விட்டுத் தொலையேன்” என்று நிஹாரிகா வெறுப்போடு கத்த, அவனோ எதைப்பற்றிய கவலையும் இன்றி முன்னேறினான்.

இரண்டு சுவற்றுக்கும் இடையில் இடித்து நின்றவளை கண்டு வெற்றிப் புன்னகையோடு நெருங்க, அதற்கு மேல் பொறுமையை கடைபிடிக்க முடியாதவள், இத்தனை நேரம் சிறிது பரிதாபம் அவன் மேல் காட்டியவள், அருகில் இருந்த மேசையில் கையில் சிக்கியதை எடுத்து அவனின் தலையில் கோபத்தோடும் ஆங்காரத்தோடும் அடிக்க, “டங்” என்ற சத்தத்தோடு அது அவனின் தலையை பதம் பார்த்து அடுத்த நொடியே அவனின் மண்டை திறந்து இரத்தம் கொட்ட ஆரம்பித்தது.

நவ்தீப் மயங்கிச் சரியவும், மின்சாரம் வரவும் சரியாக இருந்தது. அப்போது தான் நிஹாரிகா கவனித்தாள் அவள் அடித்தது அலாயினால் செய்யப்பட்ட சிம்மத் தலையின் சிலை என்று. நிஹாரிகா ருத்ர தாண்டவம் எடுத்து நவ்தீப்பை வதம் செய்ய பத்ரகாளி அவதாரத்தோடு துணிந்திருக்க, அவனின் இரத்தம் பட்டு சிம்மத்தின் வாயிலிருந்து குருதி வழிந்து கொண்டிருந்தது.

மூச்சு வாங்க வதனம் கோபத்தில் எரிந்து சிவந்து, நிஹாரிகா நின்ற கோலம் மட்டும் யாராவது கண்டிருந்தால் காளி அவதாரத்தை எடுத்து பூமிக்கு ஒருத்தி வந்துவிட்டதாகத் தான் எண்ணி பயந்திருப்பார்கள்.

மயங்கிக் கிடந்தவனையே சிறிது நேரம் வெறித்தபடி பார்த்திருந்தவள், “ச்சீ” என்றுவிட்டு வெளியே வர, ஸ்வாதிகா அழுதபடி குறுகி கொண்டு, அங்கிருந்த மூலையில் பயத்தோடு அமர்ந்திருக்க, அவளிடம் ஓடியவள் குழந்தையை அணைத்துக்கொண்டு, “ஸாரிடா குட்டி.. ஸாரி” என்று அழ, பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த பிஞ்சு அவளிடம் ஒன்றி தானும் அழுதது.

அங்கு கிடந்த தனது புடவையை எடுத்து அவசரமாக அவள் கட்டி முடிக்கவும், சரியாக நான்கைந்து கார் சத்தம் கேட்கவும் சரியாக இருந்தது. வீட்டிற்கு பின்னால் இருந்த சில அடியாட்கள் பயந்து ஓட, அவர்களைத் துரத்திச் சென்றனர் சிலர்.

உள்ளே புயலென நுழைந்த ரிஷ்வந்த், கவின், ஆத்விக் மூவரையும் முறைத்தவள், ஆவேசமாக எழுந்து சென்று மூவரையும் அறைந்தாள். இறுதியில் கணவனின் சட்டையைப் பிடித்து, “உனக்கு வர்றதுக்கு இவ்வளவு நேரமாடா?” என்று கத்தியவள் அவனின் நெஞ்சில் புதைந்து கொள்ள, அவளின் உடல் நடுக்கத்தை உணர்ந்தவன்,

“சரி சரி எதுவும் இல்லடி. அதான் வந்துட்டோம்ல” என்று அவளைத் தன்னுடன் அணைத்தவன், “நவ்தீப் எங்கே?” என்று கேட்டான் ரௌத்திரத்துடன்.

அவனை நிமிர்ந்து பார்த்தவள் உதடுகள் நடுங்க அவனைப் பார்க்க, “எங்க அவன்?” என்று நரசிம்ம அவதாரத்தோடு அர்ஜூன் மகனைத் தேடி உள்ளே வந்தார். அவருக்கும் விஷயத்தைக் கூறி உடன் அழைத்து வந்திருந்தான் ரிஷ்வந்த்.

அவரைப் பார்த்தவுடன் அவரிடம் சென்ற நிஹாரிகா இரு கரங்களையும் கூப்பி, “என்னை மன்னிச்சிருங்க அங்கிள்.. என்னை மன்னிச்சிருங்க” என்று அவரின் முகத்தை பார்க்க முடியாமல், வதனத்தை மூடிக்கொண்டு கதறினாள்.

கவின் ஸ்வாதிகவை தூக்கிக்கொண்டு வெளியே செல்ல, அவளை அடைந்த மற்ற ஆண்கள் அனைவரும் அவளிடம் என்னவென்று விசாரிக்க அவளோ அறையைக் காட்டி, “உயிர் இருக்கான்னு தெரியல” என்று சொல்ல, வெளியே நின்றுகொண்டிருந்த கவினின் காதிலும் அது விழ, அனைவரும் சிலையாகி நின்றுவிட்டனர்.

ரிஷ்வந்த் ஓடிச்சென்று சென்று பார்க்க, நவ்தீப்பிடம் துடிப்பு இருக்க, ஆத்விக்கை அழைத்தவன், நவ்தீப்பை ஒரு காரில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க, அர்ஜூனோ நின்ற இடத்தில் இருந்து நகரவில்லை.

அவரிடம் அனைத்தையும் கூறிய நிஹாரிகா, “அங்கிள் ஏதாவது பேசுங்க..” நிஹாரிகா அவளின் கைகளைப் பிடிக்க, குழந்தையாய் இருந்தவளை கையில் ஏந்திய தினம் அவரின் நினைவில் எழுந்தது. அன்று பன்னீர் பூவாய் இருந்தவளை மகன் கசக்கி எரிய முனைந்திருக்கிறான் என்று வேதனையுடன் நினைத்தவர், “நீ அழாதடா.. நான் பாத்துக்கறேன்” என்றவரின் கண்களிலும் கண்ணீர்.

நிஹாரிகாவின் நிலையை எண்ணியும் கண்ணீர் வழிந்தது. செல்லமாய் வளர்த்த மகனை குருதி சொட்டத் தூக்கிச் சென்றதைப் பார்த்தும் கண்ணீர் வழிந்தது அவருக்கு.

நிஹாரிகாவை ரிஷ்வந்திடம் ஒப்படைத்தவர் மருத்துவமனைக்குக் கிளம்ப, மனைவியை தன் தோள் வளைவிற்குள் கொண்டு வந்து அணைத்தவன், அவளை தன்னுடன் இறுக்கினான்.

கணவனுள் புதைந்த நிஹாரிகா, “லவ் யூ ரிஷ்வந்த்” என்றாள் முதன் முறையாக கண்ணீருடன்.

அவளின் கண்ணீரைத் துடைத்தவன், “லவ் யூ டூ டி” என்று அவளின் இதழில் தன் இதழை ஒற்றி எடுத்தவன் அவளை அழைத்துக் கொண்டு வெளியே வர, கவின் கையில் இருந்த ஸ்வாதிகா உறங்கியிருந்தாள்.

குழந்தையை கையில் வாங்கிய நிஹாரிகா, “இவ தான் என்னால ரொம்ப கஷ்டப்பட்டுடா” என்ற நிஹாரிகா குழந்தையை தன்னுடன் அணைத்துக் கொள்ள, இருவரையும் அழைத்து வந்த ரிஷ்வந்த் காரில் ஏற்ற, கவின் காரை எடுக்க, ஆட்களிடம் சிலதை சொன்ன ரிஷ்வந்த், முன்னால் கவினுடன் ஏறி அமர்ந்தான்.

***

“ஸ்வாதி” என்று குழந்தையை ஓடிவந்து ராஜி வாங்கிக்கொள்ள, மகாதேவனை பார்த்த நிஹாரிகா, “நானா” என்று ஓடிச்சென்று அவரை அணைத்துக் கொண்டாள்.

அவளின் முதுகு விம்மலில் வெட்ட, “ஸாரி நானா ஸாரி நானா” என்று முணுமுணுத்தவளை தலையை வருடி ஆறுதல் கூறியவர், அங்கிருந்த மருத்துவரைப் பார்க்க அவர் நிஹாரிகாவையும், ஸ்வாதிகாவையும் பரிசோதித்துவிட்டு, பிரச்சனை இல்லை என்றுவிட்டுச் சென்றிருந்தார்.

“எதுக்குடா அதெல்லாம்.. வாங்க வந்து மொதல்ல ஏதாவது சாப்பிடுங்க” என்றிட, ஸ்வாதிகாவை எழுப்பி தூக்கத்திலேயே உணவை ராஜி உண்ண வைக்க, நிஹாரிகாவுக்கும் மகாதேவன் ஊட்டிக் கொண்டிருந்தார். கயல்விழியும், கனகராஜும் வேறு அனைவரையும் ஓடி ஓடி கவனித்துக் கொண்டிருந்தனர்.

கையைக் கழுவிக் கொண்டு வந்த நிஹாரிகாவிடம் மகாதேவன் அலைபேசியை நீட்ட, புரிந்து கொண்ட நிஹாரிகா, “ம்மா” என்றழைக்க, “நிஹி” என்ற விவாஹா கதறிவிட்டார்.

மகளை சமாதானம் செய்ய வேண்டி அழைத்த விவாஹாவை இப்போது நிஹாரிகா சமாதானம் செய்து கொண்டிருந்தாள். “ம்மா! எனக்கு எதுவும் இல்லமா.. நீங்க எதையும் போட்டு குழப்பிக்காதீங்க..” என்று அன்னையை சமாதானம் செய்தவள், “எங்க அவரு?” என்று கேட்டாள்.

“யாரு?” என்று விவாஹா கேட்க,

“அதான் உங்க அப்பா..” என்று முறுக்கிக் கொண்டு கேட்ட நிஹாரிகா, தனது தாத்தையாவுடன் பேசும் ஆர்வத்தில் இருந்தாள். ஆனால், அவர் பேசும் போது கண்டிப்பாக சீன் போட வேண்டும் என்றும் நினைத்திருந்தாள்.

“நிஹி..” என்று விவாஹா இழுக்க, “தாத்தையா கிட்ட தாங்கம்மா” என்றாள்.

“நிஹி..” என்று மீண்டும் விவாஹா தயங்க அப்போது தான் நிஹாரிகாவுக்கு அன்னையின் குரல் புரிந்தது.

“ம்மா.. என்னாச்சு?” அவள் பதட்டத்துடன் வினவ, அலைபேசியை அவளிடம் இருந்து வாங்கிய ரிஷ்வந்த், “நாங்க கிளம்பி வர்றோம் அத்தைகாரு” என்றவன் ஃபோனை அணைத்தான்.

கணவனின் முகத்தில் கலக்கத்தோடு பார்த்தவளிடம், “தாத்தையாக்கு ஹார்ட் அட்டாக் நிஹி” என்று பொறுமையாகக் கூற, “என்னாச்சு?” என்று கேட்டவளின் குரலே ரிஷ்வந்தை எட்டவில்லை.

“உன்னை காணோம்னு சொன்ன உடனே..” என்று சொன்ன மகாதேவன், “இப்ப நல்லாதான் இருக்காருடா. பயப்பட எதுவும் இல்ல. மைல்ட் அட்டாக் தான்” என்றார்.

“நாம இப்பவே கிளம்பலாம்” என்று நிஹாரிகா உணர்வைத் துடைத்த முகத்துடன் சொல்ல, மகாதேவனும் ரிஷ்வந்தும் அவனை அழைத்துக் கொண்டு கிளம்ப, அனைவரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பினாள் அவள்.

ஹைதராபாத் வந்து இறங்கியவர்கள், அதிகாலை நேராக மருத்துவமனைக்குச் செல்ல, அன்னையைக் கண்டவுடன் ஓடிச்சென்று அவரை அணைத்துக் கொண்ட நிஹாரிகா, “நீங்க எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பீங்கனு எனக்கு புரியுது ம்மா. என்கிட்ட சொல்லி இருக்கலாம்ல.. நான் புரிஞ்சுக்காம போயிடுவனா சொல்லுங்க.. எனக்காக ஏன் ம்மா நீங்க இப்படி உங்களையே வருத்திக்கிட்டு இருந்தீங்க.. உங்களை எத்தனை நாள் ஏங்கி தனியா அழுதிருக்கேன் தெரியுமா? ஆனா ஈகோ, கோபம் எனக்கு” மனதில் இருந்ததைக் கொட்டித் தீர்த்தவள் அன்னையின் தோளில் சாய்ந்தபடியே சிறிது நேரம் நின்றாள்.

“உன்கிட்ட அவனை கேவலமா காட்ட விரும்பல நிஹி.. நீ அவனோட பாசத்தை நம்பி ஏமாந்து நிக்கறதை என்னால பாக்க முடியாது.. ஆனா, உனக்கு அவன் தகுதியில்லாதவன் டா. எந்த உறவுக்கும் தகுதி இல்லாதவன்.. இப்ப வரைக்கும் ஒரு நொடி கூட நான் அவனைக் கொன்னதை நினைச்சு வருத்தப்படல. எனக்கு எப்போமே உன் கவலை தான்” என்று அவளின் தோளைத் தட்டியபடிச் சொல்ல, அன்னையை அமர வைத்தவள் அவரின் மடியில் சுகமாய் சாய்ந்து கொண்டாள்.

ஏனோ நவ்தீப் தன்னைக் கடத்திச் சென்றபிறகு, கணவனின் தோள் வளைவையும், தந்தையின் தோளையும் விட அவளுக்கு அன்னையின் மடி தேவைப்பட்டது போல. அன்னையை இறுக அணைத்தவளின் வலது கண்ணில் இருந்து மட்டும் கண்ணீர் வழிந்தது.

மகாதேவனும், ரிஷிவந்தும் தாயும் மகளையும் பிரிக்க விரும்பாமல் இருவரின் நெருக்கத்தையும் பாசத்தையும் நிம்மதியுடன் பார்த்திருந்தனர்.

“தாத்தையா?” என்று அன்னையின் மடியில் இருந்து எழுந்து கேட்டவள்,

“உள்ள போய் பாரு” என்று அனுப்பிவைத்தார் விவாஹா.

உள்ளே சென்ற நிஹாரிகாவுக்கு கம்பீரம் குறையாமல் இருக்கும் சக்கரவர்த்தி, தன்னால் இப்படிப் படுத்திருப்பதைப் பார்த்து கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது.

அவரின் அருகே வந்து நின்றவள் கலங்கிய கண்களுடன் அவரைப் பார்த்து, அவரின் தலையை மிருதுவாய் நீவிவிட, பேத்தியின் தொடுகையில் கண் விழித்தவர், கலங்கி நின்றிருந்த பேத்தியைக் கண்டு கண்களைச் சிமிட்டி, “உன் பாட்டி ரொமான்ஸ் பண்ண கூப்பிடறா போல” என்று கண்ணடித்துப் புன்னகைக்க, நிஹாரிகாவுக்கு புன்னகையும் அழுகையும் ஒரே சேர குபுக்கென்று வர, தாத்தையாவின் கையில் செல்ல அடி போட்டவள், அவரின் அருகே அவரின் கரத்தை பிடித்து கன்னத்தில் வைத்தபடி அமர்ந்தாள்.