நிஹாரி-8

IMG-20211003-WA0016-423996aa

நிஹாரி-8

உதட்டை அழகாய்க் குவித்து விசிலில் பாட்டை இசைத்தபடியே வீட்டிற்குள் நுழைந்த மகனிடம், “என்னப்பா மொத நாள் ஸ்கூல் எப்டி இருந்துச்சு?” அவனின் பையைத் திறந்து டிபன் பாக்ஸை எடுத்தபடியே வினவினார் கயல்விழி.

ரிஷ்வந்தின் முகத்தில் மென்மையாய் புன்னகை நெளிந்தது. அன்னையின் விழிகள் தன்மேல் இருப்பதை உணர்ந்தவன் முகத்தை மாற்றிக்கொண்டு, “எங்க கேங்க் நாங்க எல்லாருமே ஒரே க்ளாஸ்தான் ம்மா.. எல்லாருமே ஒரே க்ரூப் தான் எடுத்திருக்கோம்” ஷூ லேசைக் கழற்றியபடி சொன்னவன் உடை மாற்ற அறைக்குள் நுழைந்துகொண்டான்.

உடையை மாற்றிவிட்டு வந்தவனிடம், “என்னப்பா அதிசயமா இருக்கு.. டிபன் பாக்ஸ் எல்லாம் கழுவிட்டு வந்திருக்க?” கயல்விழி வினவ,

“என்ன?” குழப்பமாய் வினவியவனுக்கு நிஹாரிகாவின் முகமே கண்முன் வந்தது.

ஏனெனில் அவள்தானே சாப்பிட்டு முடித்துவிட்டு அவனிடம் டிபன் பாக்ஸை நீட்டியது. தோழமைகளோடு பேச்சில் லயித்து இருந்தவனிற்கோ, அவள் கை கழுவ பாக்ஸோடு சென்றது தெரியவில்லை. தெரிந்திருந்தால் விட்டிருக்கமாட்டான். அவள் என்று இல்லை யாரையும் அவன் அவ்வாறு செய்ய அனுமதிக்கும் குணமில்லாதவன்.

“நான் தான் ம்மா.. சும்மா” அன்னையின் கன்னத்தில் இருபக்கமும் கொஞ்சிவிட்டு, “ம்மா.. நான் கிரிக்கெட் விளையாடப் போறேன்” தனது ஏரியா நண்பர்களோடு விளையாட ஓடும் தனது மகனையே பார்த்தபடி நின்றிருந்தார் கயல்விழி.

மகன் ஏதோ மறைக்கிறான் என்று அவருக்குப் புரிந்தது. முதல் நாள் எப்படி இருந்தது என்று விசாரித்தபோது மகனின் முகத்தில் தெரிந்த மாற்றமும், நெளிந்த புன்னகையும் அவருக்கு வித்தியாசமாகத் தெரிந்தது. அதுவும் டிபன் பாக்ஸ் விஷயத்தில் மகனைப் பற்றி அவருக்குத் தெரியாதா?

அவனிடம் கோடிமுறை அவர் சொல்லியும் பாக்ஸை தண்ணீரில் காட்டாத மகன் இன்று, அதுவும் முதல்நாள் இப்படிச் செய்தான் என்றால் அவரால் அது நம்பும்படி இல்லை.

‘கத்தரிக்காய் முத்தினால் கடைத் தெருவிற்கு வந்துதானே ஆகவேண்டும்’ என்று நினைத்தவர் தனது வேலையைப் பார்க்கச் சென்றார்.

***

அதேநேரம் நிஹாரிகா தாத்தாவுடன் வீடியோ காலில் இருந்தாள். பேத்தியின் முகத்தில் பழைய ஆர்ப்பரிக்கும் மகிழ்ச்சிகள் இல்லை என்பதை உணர்ந்தவர், “பங்காரம், நான் அங்க வரட்டா டா. தனியா இருக்க கஷ்டமாயிருந்தா சொல்லு” அவர் கேட்க,

“இல்ல தாத்தையா. நான் இப்போதைக்கு தனியா இருக்கேன். நானே லீவ் டைம்ல வர்றேன். நீங்க என்னைப் பத்தி கவலைப்படாதீங்க தாத்தையா. உடம்பை பாத்துக்கங்க. அவ்வா ஞாபகம் வந்தா நம்ம சேனலுக்குப் போயிட்டு வாங்க. இல்லனா உங்க பிரண்ட்ஸ் யாராவதை பார்த்திட்டு வாங்க” நீளமாகப் பேசிய பேத்தியிடம் புன்னகையை தவழவிட்டவர்,

“சரிடா. ஏதாவது வேணும்னா எப்ப வேணாலும் தாத்தாவைக் கூப்பிடு” என்றவர் மேலும் சிலமணி நேரம் பேத்தியுடன் பேசிவிட்டு வீடியோ காலில் இருந்து வெளியே சென்றார்.

அலைபேசியை அணைத்த நிஹாரிகா, அறையைவிட்டு வெளியே வர அவளிற்காகவே வீட்டில் வைத்திருந்த வேலையாட்களில் ஒருவரான பெண்மணி ஓடிவந்து, “என்னமா சாப்பிடறீங்க?” வினவ,

“பசியில்ல. எனக்கு நைட் பால் மட்டும் வச்சிடுங்க” என்றவள் பால்கனியில் வந்து நிற்க, ஏனோ காலையிலிருந்து நடந்த அனைத்தும் அவள் கண்முன் படமாக படர்ந்தது.

ரிஷ்வந்த் மற்றும் அவன் நண்பர்களின் ஆட்டம் பாட்டம் அனைத்தும், இன்று அவளின் மனதில் நன்றாக பதிந்திருந்தது. ரிஷ்வந்த் தனக்குத் தெரியவில்லை என்று தன்னை கவனித்துக் கொண்டிருந்ததும், அவளையே ஊன்றிப் பார்த்துக் கொண்டிருந்ததும் என அவளின் நினைவில் எழுந்து தன்னையறியாமல் புன்னகைக்க வைத்தது.

இன்று தாத்தா தன்னை கணினித் திரையில் பார்க்கும்போது அவளிற்கு வேதனையாக இருந்தது. தனக்காக அவரும் வருந்துகிறார் என்பதை அவளால் நன்றாகவே உணர்ந்துகொள்ள முடிந்தது. ஆயிரம் கம்பளிப்பூச்சியை ஒன்றாய் ஒரே இடத்தில் பார்ப்பது போலிருந்தது அவளின் நிலை.

இருந்தாலும் இப்படியே இருந்துவிட முடியாதே?

தாத்தாவிற்காகவும், தன்னுடைய மனநிம்மதிக்காவும் மாற முடிவெடுத்தாள். தன்னை இதிலிருந்து திசை திருப்பிக்கொள்வது கடினம் என்று அவளின் மனம் காட்டுக்கத்தல் கத்தினாலும், அதிலிருந்து வெளிவருவது தான் தனக்கு நல்லது என்று எண்ணியவள் நேராக பூஜையறைக்கு ஓடினாள்.

திருப்பதி ஏழுமலையான் படத்தின் முன் நின்றவள், கண்களை மூடி தன்னுடைய மனபாரத்தை எல்லாம், ஒவ்வொரு மணிகளாக சோகம் என்னும் மாலையில் இருந்து கொட்ட ஆரம்பித்தாள். பூஜையறையிலேயே அரைமணி நேரத்திற்கு மேலாக நிற்கும் சின்ன எஜமானியை அழைக்கும் தைரியம் யாருக்கும் இல்லை.

நேரம் தவறாமல் பேத்தியை வேளாவேளைக்கு சாப்பிட வைத்துவிட வேண்டும் என்று சக்கரவர்த்தி கண்டிப்புடன் கூறி அனுப்ப, அவளைப் பார்த்துக்கொள்ள பணித்திருந்த பெண்ணின் செவியில் அவரின் சொற்கள் டமாரென ஒலித்துக் கொண்டிருக்க, கைகளைப் பிசைந்தபடி நின்றுகொண்டிருந்தார்.

தனது மொத்த பாரத்தையும் அக்கடா என்று இறக்கி வைத்த நிஹாரிகா, வெளியே வர சமையலறையின் முன் நின்றிருந்தவரைக் கண்டவள், என்னவென்று விசாரித்தாள்.

“நைட்டுக்கு இப்ப..” அவரிழுக்க,

“அதான் பால் போதும்னு சொன்னனே”

“இல்லிங்கம்மா.. ஐயாவோட பிஏ ஃபோன் பண்ணி உங்கள ஐயா சாப்பிட வைக்க சொன்னதா சொன்னாங்க” என்றிட, அதரத்தில் புன்னகையை மென்மையாய் படரவிட்டவள்,

“ஓகே ஏதாவது பண்ணுங்க” என்றவள் தொலைக்காட்சியை உயிர்பித்து தமிழ் சேனல்களில் மூழ்கினாள். தெலுங்கு பக்கம் சென்றால் தேவையில்லாததைக் காணவேண்டும் என்றே அவள் தமிழுக்குச் சென்றது.

இரவு உணவு தயாராக உண்டுவிட்டு படுக்கைக்குச் சென்றவள் கண்களை மூட, நீண்ட நாட்களுக்குப்பின் நித்திராதேவி அவளின் அழகிய விழிகளை மென்னையாய் தழுவிக்கொண்டாள்.

*****

காலை வகுப்பறைக்குள் நுழைந்த ரிஷ்வந்த் தனக்கு முன், தன்னருகில் இருக்கும் இடத்தில் அமர்ந்திருந்த நிஹாரிகாவைக் கண்டான். இரட்டை ஜடையை முன்னால் எடுத்துவிட்டிருந்தவளின் பிறை நெற்றியில் ஆங்காங்கே சிறுசிறு முடிகள் தவழ்ந்திருக்க, வானவில்லாய் இருந்த இருபுருவங்களின் மத்தியில் கரும்பச்சை நிறத்தில் சிறிய வட்டப்பொட்டை வைத்திருந்தாள்.

சைக்கிள் சாவியை கையில் ஸ்டைலாக சுழற்றியபடி, பெஞ்ச்சின் அருகே அவன் வர, அவனிற்கு வழிவிட்டு எழுந்தவளை திடீரென முறைத்தவன் அவளருகில் அமைதியாய் அமர்ந்துகொண்டான்.

அவனின் புன்னகையோடு தன் புன்னகையை மென்மையாய் தவழவிட்டிருந்தவளுக்கு, அவனின் இந்த திடீர் முறைப்பு எதனால் என்று
புரியவில்லை. அவனின் முகத்தையே புருவம் சுருக்கி அவள் பார்க்க, திடீரென்று அவள் பக்கம் அவன் திரும்ப, எதற்கும் பயப்படாதவளே அவனின் திடீர்ச்செயலில் பயந்துதான் போனாள்.

“எதுக்கு டிபன் பாக்ஸ்..?” அவன் முடிக்கவில்லை அவள் பதிலளித்தாள்.

“நாம சாப்பிட்டதை நாமதான் வாஷ் பண்ணனும்.. அன்ட் சாப்பிட்டுட்டு அப்படியே தர்றது பேட் ஹாபிட்.. அதான்” அவள் விளக்க,

“ம்ம்” என்றவன், “ஆமா, எப்டி இவ்வளவு நல்லா தமிழ் பேசறே?” பின்னந்தலையில் இடதுகையை வசீகரமாக வைத்தவன் வலதுபக்கம் அவளிடம் திரும்பி பேச,

“எங்க அவ்வா தமிழ் தான்”

“அவ்வா?” யோசனையாய் கேட்டவனிடம்,

“பாட்டி” என்றாள் கவினைக் கூர்ந்து பார்த்தபடியே.

இவ்வளவு நேரம் தன்மேல் இருந்த விழிகள் இப்போது வேறுபக்கம் செல்வதை உணர்ந்தவன் பின்னால் திரும்ப அதிர்ந்தான். கவின்தான் விழிகள் கலங்க அமர்ந்திருந்தான்.

“டேய் ஏன்டா அழறே?” ரிஷ்வந்த் வினவ, கவின் அசையாமல் அமர்ந்திருந்தான்.

“டேய், கவின்” அவன் தோளைப் பற்றி உலுக்கினான் ரிஷ்வந்த். பதிலில்லை. காலையில் இருந்தே கவனித்துக்கொண்டு தானே இருந்தான் ரிஷ்வந்த். இருவரும் காலை வரும்போதே அவன் சரியாகப் பேசவில்லை. முகமே சரியில்லாதது போல இருந்தது.

‘சரி வீட்டில் ஏதாவது பிரச்சினையாக இருக்கும்’ என்று நினைத்தவன் மாலை அவனே சொல்வான் என்று விட்டுவிட்டான்.

தான் கேட்கும் கேள்விகளுக்கு பதலளிக்காமல், கவின் மேலும் விழிகள் சிவக்க சிலைபோல் அமர்ந்திருக்க, அவனை எழுப்பியவன் ஆசிரியர் வருவதற்குள் வெளியே அழைத்துச் சென்றான்.

இருவரும் வெளியே செல்வதையே பார்த்திருந்த நிஹாரிகா, இருவரும் எப்போது வருவார்கள் என்பதுபோல அமர்ந்திருந்தாள். அதற்குள் ஆசிரியர் வேறு வந்து அட்டென்ட்டன்ஸ் எடுக்கத் துவங்க இருவரும் வந்த பாடில்லை.

ஆசிரியர் பாடம் எடுக்கத் துவங்கியதும் வந்தவர்களை ஆசிரியர் முறைத்தபடியே, “எங்க போயிருந்தீங்க?” வினவ,

“ரெஸ்ட்ரூம் மேம்” என்றனர் ஒருசேர.

இருவரையும் முறைத்தவர், “வெளியவே நில்லுங்க” கடுப்புடன் கூறிவிட்டு பாடத்தை விட்ட இடத்திலிருந்து துவங்க, அதுக்கெல்லாம் கலங்குபவர்களா நமது ஆண் பிள்ளைகள்?

வெளியே இருவரும் நின்றபடி பேசி சிரித்துக் கொண்டிருந்தனர். போர்ட்டின் அருகேயே நின்றிருந்ததால் ஆசிரியருக்கு இருவரும் வெளியே சுவற்றில் சாய்ந்தபடி நின்று அரட்டையில் மூழ்கியிருப்பது தெரியவில்லை. ஆனால், கடைசி வரிசையில் அமர்ந்திருந்ததால் நிஹாரிகாவிற்கு அவர்களின் சேட்டை நன்றாக கண்களில் விழுந்தது.

அன்றைய பாடத்தை முடித்த ஆசிரியர் வெளியே போக, இருவரும் சிரித்துக்கொண்டு நிற்பதைப் பார்த்தவர், ‘நீங்க எல்லாம் திருந்தவே மாட்டிங்கடா..’ என்ற பார்வையை வீசிவிட்டுச் செல்ல, இருவரும் உள்ளே வந்து அமர்ந்தனர்.

“எப்டிடா இவ்வளவு ஜாலியா இருக்க?” உள்ளே நுழையும் போதிலிருந்து அவனையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தவள் கேட்டேவிட்டாள்.

“எப்டின்னா? புரியல?” கவினின் தோளில் கை போட்டபடி ரிஷ்வந்த் வினவ,

“இல்ல உங்கள மேம் திட்டிதான் வெளிய நிக்க வச்சாங்க.. பட் நீங்க ஃபீல் பண்ணலைனாலும் பரவாயில்ல.. நீங்க என்னடான்னா சிரிச்சுட்டு நின்னீங்க.. அதான் எப்டி இவ்வளவு ஜாலியா இருக்கீங்கன்னு கேட்டேன்” கேட்டவளைக் கண்டு இருவரும் வாய்விட்டுச் சிரித்தனர்.

இருவரும் சிரிப்பதைக் கண்டு கோபம் கொண்டவள், “கேட்டா ஆன்சர் பண்ணாம எதுக்குடா சிரிக்கறீங்க?” தன்னிடம் இருந்த கண்ணாடி ஸ்கேலை வைத்து கவினின் தோளில் தட்டியவள், ரிஷ்வந்தின் தலையில் ஒரு அடி வைத்தாள்.

“என்னமா அடிக்கிற?” என்ற கவின் மற்ற நண்பர்களையும் கூட்டு சேர்க்க,

“பின்ன அடிக்காம.. கேட்டா எதுக்குடா சிரிக்கறீங்க?”

“ஹே, இவன் கூட இருந்தா எப்போமே அப்படித்தான் இருப்போம் நிஹாரிகா.. இப்ப இவனே(கவின்) அழுதிட்டு போனான்.. இப்ப எப்படி முப்பத்தி இரண்டு பல்லையும் காமிச்சிட்டு வந்திருக்கான் பாரு.. எங்க ரிஷ்வந்தோட ஸ்பெஷல் பவரே அதான்.. எல்லாரையும் சிரிக்க வச்சிட்டே இருப்பான்” அவர்களுள் ஒருத்தியான சக்தி சொல்ல,

‘அதான் பாத்தாலே தெரியுதே’ மனதிற்குள் நினைத்த நிஹாரிகா குறும்பு தலைதூக்க மீண்டும் அவனை ஸ்கேலால் அடிக்க ரிஷ்வந்தின் புன்னகை மாறவில்லை.

“என்னடா நம்ம அடிச்சா விளையாட்டுக்காவது திருப்பி அடிப்பான்.. இங்க சிரிச்சுக்கிட்டே உக்காந்துக்கிட்டு இருக்கான்” கவினின் காதில் அவனருகிலிருந்த அன்பு கிசுகிசுக்க,

“அதான்டா நானும் நோட் பண்றேன்” என்றவன் ரிஷ்வந்தைப் பார்க்க, அவனோ புன்னகையை இதழில் கீற்றாய் வைத்தபடி நிஹாரிகா அடிக்கவேயில்லை என்ற பாவனையில் அவளிடம் பேசிக்கொண்டிருந்தான்.

“என்னமோ நடக்குதுடா” சக்தி இருவரிடமும் சொல்ல இருவரும், ‘ஆம்’ என்பதுபோல தலையசைத்தனர்.

அன்றுமாலை வழக்கம்போல சைக்கிளில் இருவரும் வீடு திரும்பிக் கொண்டிருக்க, “மச்சி, உனக்கு நிஹாரிகாவைப் பிடிச்சிருக்கா?” கவின் சாதாரணம் போல் கேட்டவன், ரிஷ்வந்த் உடன் வராததை உணர்ந்து திரும்பிப் பார்த்தான்.

“என்னடா நின்னுட்ட?” ஒருகாலை தரையில் ஊன்றி மற்றொரு காலை பெடலில் வைத்து, இருகைகளையும் கட்டியபடி நிமிர்வாக நின்றிருந்தவனிடம் கவின் வினவ,

“என்னடா புது ஸ்டோரி பரப்ப ஸ்டார்ட் பண்ணிட்டீங்களா?” ரிஷ்வந்த் வினவ,

“என்னடா மச்சி.. அவ்வளவு தானா.. நான் கேட்கக் கூடாதாடா” கவின் உடம்பை வளைத்து திரும்பியபடியே கேட்க,

“எனக்கு சும்மா அவள பிரண்ட்ஆ பிடிக்கும்.. ஆனா, நீங்க நினைக்கற மாதிரியில்ல.. Can’t explain somethings in words மச்சி” என்றவன் சைக்கிளை எடுக்க இருவரும் அவரவர் வீட்டிற்குக் கிளம்பினர்.

***

நாட்கள் இதேபோல் நகர, அவர்களோடு நன்கு ஐக்கியமாகியிருந்தாள் நிஹாரிகா. ஏற்கனவே, வாலாய் இருந்தவள் இவர்களுடன் சேர்ந்து இரட்டை வால் ஆகியிருந்தாள். அவர்களை விட இவளின் விளையாட்டுத்தனம் கூரையை பிய்த்துக் கொண்டு சென்றிருந்தது என்றும் கூறலாம்.

ஆண்பிள்ளைகளுடன் இணைந்து ஆசிரியரிடம் திட்டு வாங்கி வகுப்புக்கு வெளியே நிற்கும் அளவிற்கு வந்திருந்தது அனைத்தும். இப்படியே அவர்களின் அன்றாட நாட்கள் நகர்ந்து பதினொராம் வகுப்பும் சிறப்பாக முடிந்தது.

விடுமுறைக்கு ஊருக்கு வந்த பேத்தியைப் பார்த்த சக்கரவர்த்திக்கு மகிழ்ச்சி தாளவில்லை. இங்கிருந்து செல்லும் போது பேத்தி இருந்ததிற்கும், இப்போது இருப்பதிற்கும் ஆயிரம் வித்தியாசங்கள் தெரிந்தது அவளிடம்.

பேத்தியிடம் திரும்பிவந்து ஒட்டிக்கொண்ட துள்ளல்களும், மீண்டும்  மின்மினியாய் பேசும்போது மின்னும் கண்களும், முகம்கொள்ளாச் சிரிப்பும், இதழ்களில் குறும்பும், மீண்டும் சிரிப்பாளா என்றிருந்த பேத்தி, பழையபடி சுற்றித்திரிவது அவருக்கு நிம்மதியை அளித்தது.

“பங்காரம் பிரண்ட்ஸ் எல்லாம் எப்படி இருக்காங்க?” இரவு இருவரும் வரவேற்பறையில் அமர்ந்ததும் அவர் வினவ,

“ஸோ ஸோ குட் தாத்தா. செம ஜாலி தெரியுமா எல்லாரும்” சொல்லிக்கொண்டே சென்ற பேத்தியின் முகத்தில் தெரிந்த மாற்றங்களும், அவள் இதழில் நெளிந்த புன்னகையும் அவருக்கு ஏதோ ஒன்றை சொல்லியது.

“குட். இதேமாதிரி பங்காரம் ஹாப்பியா இருக்கணும் சரியா” என்றவர் எழ, “மாத்திரை போட்டிங்களா தாத்தா?” வினவினாள் சின்னவள்.

“மறந்துட்டேன்” நாக்கைக் கடித்துக்கொண்டவர் பேத்தியிடம் திரும்ப, அவரின் செய்கையிலேயே அவளுக்குப் புரிந்துபோனது.

“உங்களை..” என்றவள் எழுந்து மாத்திரையை எடுக்க சந்திராமா தயாராக தண்ணீரோடு வந்தார்.

“சந்திராமா..” பாசமாய் அவரின் மேல் விழிகளை தேக்கியவள், சில நொடிகள் கழித்து தாத்தாவிடம் சென்றாள்.

ஹைதராபாத் வந்தவள் இப்படியே நாட்களைக் கடத்த, ஒரு நாள் ரிஷ்வந்த் அவளை அலைபேசியின் வாயிலாக அழைத்தான்.

“டேய், எப்டி இருக்க? என்ன பண்ற? மத்த எல்லாரும் எப்டி இருக்காங்க?” அவள் மூச்சைக்கூட விடமறந்து பேச,

“ஏய் கேப்(gap) விட்டுப் பேசுடி” சிரித்தவன், “ஒரு ஃபோன் இல்ல ஒண்ணும் இல்ல.. வீட்டுல எல்லாரையும் பார்த்தோன எங்களை மறந்துட்ட நிஹி நீ” ரிஷ்வந்த் கேலியாய் சொல்ல,

“லேது ரிஷ்வந்த்” அவசரத்தில் தெலுங்கில் மறுத்தவள், “ச்ச.. இல்ல ரிஷ்வந்த்” என்றாள்.

“உங்களை எப்டிடா மறப்பேன். உங்க எல்லாரையும் பத்தி தாத்தாக்கிட்ட சொல்லியிருக்கேன் தெரியுமா. சந்திராமாக்கு கூட தெரியும் உங்களைப் பத்தி” அவள் துடிதுடிப்பாகப் பேச அவனின் அழுத்தமான அதரங்களில் புன்னகை அரும்பியது.

‘ஐ மிஸ் யூ’ சொல்ல வேண்டும் என்று நினைத்த மனதை அடக்கினான். காதல் என்று அவனால் சொல்லவிட முடியாது. அவளின் நட்பு அவனுக்கு மிகவும் பிடிக்கும்.

அவளையும் சேர்த்துத் தான்!

விடுமுறை அளித்த இருநாளில் இருந்தே அவளின் நினைவாய் இருந்தவனிற்கு அவள் அழைப்பாளா என்றிருந்தது. ஒருவாரம் பொறுத்திருந்து பார்த்தவனால், முடியாமல் போக இன்று அலைபேசியில் அழைத்தேவிட்டான். அவளிடம் தனது எதிர்பார்ப்பை அவன் சொல்லவும் இல்லை. அதேபோல அவள் தன்னை எதிர்பார்க்க வேண்டும் என்று அவன் நினைக்கவும் இல்லை. இருக்கும் நட்பை
வாழ்நாள் முழுவதும் நீடிக்க நினைத்தான். அவ்வளவே!

சில நொடிகள் இருவருமே அமைதியாய் இருக்க, “அப்புறம் அம்மா, அப்பா எப்டி இருக்காங்க நிஹி” ரிஷ்வந்த் கேட்டிட, உள்ளுக்குள் புதைந்திருந்த ஆத்திரங்கள் அனைத்தும் வெளியே வந்தது நிஹாரிகாவிற்கு.

ஆனால், ரிஷ்வந்தின் மேல் அவளால் கோபத்தைக் காட்டிட முடியாதே.

“ம்ம்” என்றவள், “அப்புறம் ரிஷ்வந்த், ஸ்கூல் எப்ப ரீ ஓபன்” அவள் பேச்சை மாற்றினாள்.

“கரெக்டா அடுத்த மாசம் பர்ஸ்ட் மன்டே.. பட் அதுக்கு டூ டேஸ் முன்னாடி என் பர்த்-டே வருது. கண்டிப்பா நீ இங்க இருக்கணும். எல்லாரும் வர்றாங்க” அவன் சொல்ல,

“வாவ் பர்த்-டேவா?” என்று வாய்விட்டு சிரித்தவள், “ரிஷி மூணு மாசம் முன்னாடி தான் என் பர்த்டே முடிஞ்சது. என்னவிட சின்ன பையனாடா நீ” கேலி செய்ய,

“ஏய், நான் ஒரு வருசம் லேட் டி ஸ்கூல் சேர்ந்ததே. உன்னை விட நான் ஒன் இயர் த்ரீ மன்த்ஸ் பெரிய பையன்.. ஸோ நீ வாயை மூடு. சென்னை ஹைதராபாத் இரண்டும் உள்ள போயிடும் போல உன் வாய் சைசுல” அவன் பதிலுக்குக் கேலி செய்ய,

“போடா..” சிணுங்கியவள், “ஆமா, எங்க வரணும் ரிஷி?” அவள் வினவ,

“எங்க வீட்டுக்கு தான்டி. ஆக்சுவலி அன்னிக்கு எல்லாரும் எங்க வீட்டுல ஸ்டே பண்ணுவாங்க. கேர்ஸும். அவங்களோட அம்மா எல்லாருமே இருப்பாங்க. எங்க அம்மாவும் இருப்பாங்க.. நீயும் இருக்கியா? உனக்கு கம்பர்டபிளா..” அவன் இழுக்க, அவனின் தயக்கம் புரிந்து தலையில் அடித்துக்கொண்டவள்,

“டேய் அடங்குடா.. அதெல்லாம் இருப்பேன்” என்றிட, இருவரும் சிறிது நேரம் பேசியபடி வைத்தனர்.

சிறிது நேரத்திற்கு முன்பு நிஹாரிகாவின் மனதில் வெளிவந்த கோபம் அவனிடம் பேசியதில் எங்குசென்றது என்றே தெரியவில்லை.

அவள் யாரிடமும் தான் யார் என்பதை இன்னும் கூறவில்லை. அவளை சிறுவயதில் இருந்து, சினிமா உலக விழாக்களுக்கு அழைத்துச் செல்லாதது இப்போது அவளுக்கு கை கொடுத்தது.

தன்னை நிஹாரிகா, அதாவது அவர்களுடைய தோழியாய் வைக்கவே விரும்பியவள் எதையும் கூறவில்லை. ஒருசில சமயங்களில் அவளின் குடும்பத்தைப் பற்றி கேட்டபோது கூட, பிசினஸ் அதுஇது என்று சமாளித்துவிட்டாள்.

அவள் அவ்வப்போது ‘தாத்தையா’, ‘தாத்தையா’ என்றிட தாத்தாவின் செல்லபிள்ளை அவள் என்று எண்ணினார்கள் அனைவரும். அது உண்மை என்றாலும், அவர்கள் நினைத்தது பெற்றோருடன் இருந்தாலும் சக்கரவர்த்தியின் செல்லம் என்று நினைத்தவர்கள் எதுவும் ஆராயவில்லை.

***

நிஹாரிகா சென்னை கிளம்பும் தினம் வர சக்கரவர்த்தியின் முகம்தான் அன்று பேத்தியின் பிரிவை எண்ணிக் கூம்பியிருந்தது. பள்ளி முடியும்வரை அவளைக் காண வரக்கூடாது என்றல்லவா அவள் சொல்லியது. பள்ளி முடியும் வரையிலாவது தன்னைப் பற்றி யாருக்கும் தெரியக்கூடாது என்று முடிவெடுத்திருந்தாள் அவள்.

“சந்திராமா, நான் போயிட்டா தாத்தா சரியா சாப்பிட மாட்டாரு.. எனக்கு
நல்லாவே தெரியும். மாத்திரை கூட டெய்லியும் நைட் நான் ஃபோன் பேசும்போது ஞாபகப்படுத்த வேண்டியதா இருக்கு. அவரை பாத்துக்கங்க சந்திராமா. எதுனாலும் எனக்கு ஃபோன் பண்ணுங்க. என் நம்பர் தான் உங்ககிட்ட இருக்குல்ல. அதே மாதிரி நீங்களும் நல்லா உடம்பை பாத்துக்கங்க. நீங்க இங்க இனி ரொம்ப வேலை செய்யணும்னு எல்லாம் இல்ல சரியா. தாத்தாவும் அதை எக்ஸ்பக்ட்
மாட்டாரு. மத்தவங்க எப்டி வேலை செய்யறாங்கன்னு மட்டும் பாத்துக்கங்க” நீளமாய் நிஹாரிகா பேச அவளிற்கு தன்மேல் இருந்த அக்கறையில் அவரின் விழிகள் நிறைந்தது.

“நீ போயிட்டு வா பாப்பா.. நான் எல்லாம் பாத்துக்கறேன்” அவளின் கன்னங்களை வழித்து நெட்டி முறித்தவர், அவள் சிரித்த முகத்துடன் செல்வதையே பார்த்திருந்தார்.

சமையல் அறையிருந்து வெளியே வந்தவள் வருத்தம் இருந்தாலும் , முகத்தில் காட்டாமல் அமர்ந்திருந்த தாத்தாவிடம் வந்து, அவரின் கையை எடுத்து தனது தோளில் சுற்றிப் போட்டபடி அமர்ந்தாள்.

“நவண்டி(சிரிங்க) தாத்தையா” என்றவள் அவர் உதடுகளின் இருபக்கமும் கையை வைத்து இழுத்துச் சிரிக்க வைக்க முயற்சிக்க, அவர் மாட்டேன் என்பது போல் அமர்ந்திருந்தார்.

“தாத்தையா என்ன இது? இப்படி இருந்தா அப்புறம் எனக்கு அழுகை வரும் போகும்போது” நிஹாரிகா அவரின் கையைப் பற்றியபடி பேச,

“நான்தான் இங்க தனியா இருக்கேன் பங்காரம். உனக்கு ஸ்கூல் போனா எல்லாம் சரியாகிடும்” அவர் சொல்ல உள் அர்த்தத்தைப் புரிந்துகொண்டாள்.

‘ஓஹோ! தாத்தையா பொசசிவ்நஸ்ஆ?’ மனதிற்குள் ஒருபுறம் பூரித்தாலும், ஒருபுறம் அவரைத் தனியே விட அவளிற்கும் சிரமமாக இருந்தது. நண்பர்களோடு இருந்தபோதும் இரவு தாத்தாவிடம் பேசும்போது, அவரின் மடியில் தலை சாய்க்கத்தான் மனம் ஏங்குகிறது.

“தாத்தையா! என் லைஃப்ல எத்தனை பேர் வந்தாலும், அது என் ப்யூச்சர் பார்ட்னரா இருந்தாலும் உங்க ப்ளேஸுக்கு யாருனாலையும் வரமுடியாது. I hope you understand me more than everyone” என்றவள் அவரின் மடியில் தலைசாய்க்க அவரின் மனமோ, பேத்தியின் வார்த்தையில் சொல்ல முடியாத ஆனந்தத்தில் திளைத்தது.

நிஹாரிகா அன்று மாலை விமானத்தில் சென்னை வந்திறங்க முதல் வேளையாக வீட்டிற்கு வந்தவள், ரிஷ்வந்திற்கு வாங்கி வைத்ததை வெளியில் எடுத்தாள்.

அவள் மனதிலும் கறந்த பாலாய் சுத்தமான நட்பு இருந்தது. அவனின் மேல் அதீத அக்கறையும் அன்பும் இருந்தபோதிலும் அதை அவள் காட்டிக்கொண்டதே இல்லை.

அவனை அலைபேசியில் அழைத்தவள் சென்னை வந்துவிட்டதாகக் கூறிவிட்டு வீட்டிற்குள் வலம்வர ஆரம்பித்தாள்.

இருவரும் அப்போது அறியவில்லை, இருவரின் உள்ளங்களும் காதலில் திளைத்து சங்கமித்து பிறகு வெறுத்து இருவரும் இருவரின் முகத்தைக் கூட பார்க்க விரும்பாமல் பிரியப்போவதை.