நிஹாரி-9

IMG-20211003-WA0016-c7a09220

நிஹாரி-9

அன்று காலை தன் விழிகளைப் பிரித்த நிஹாரிகாவின் இதழ்களும் புன்னகையில் விரிந்து கொண்டது.

இன்று ரிஷ்வந்தின் பிறந்தநாள்!

படுக்கையை விட்டு இறங்கியவள் நேரே குளியலறைக்குள் புகுந்துகொண்டாள். குளித்துமுடித்து அவள் வெளியே வரவும் அவளது அலைபேசி சிணுங்கவும் நேரம் சரியாக இருந்தது.

வெண் பாதங்கள் தரையில் படாமல் விரல்களை வைத்து நீர் சொட்ட குடுகுடுவென்று ஓடியவள், திரையைப் பார்க்க, அவர்களுள் ஒருத்தியான சக்தி தான் அழைத்திருந்தாள்.

“சொல்லு சக்தி” நிஹாரிகா கண்ணாடியின் முன் நின்று தலையைக் கோதியபடி பேச,

“என்ன டைமுக்கு வர்ற”

சுவற்றில் மாட்டியிருந்த மெட்டலாலான(metal) மயில் கடிகாரத்தைப் பார்த்தாள் நிஹாரிகா. சுவரின் நடுவே மயில் கழுத்துப் பகுதிவரை வைத்து பதித்திருக்க,  மெல்லிய தங்கவர்ண மெட்டலில் செய்த தோகைகளை பிரித்து, ஒவ்வொன்றையும் ஒவ்வொரு எண்களோடு பொருத்தப்பட்டிருந்தது. 

வழக்கம்போல அதன் வேலைப்பாடை இரசித்தவள், “ஒன் ஹவர்ல இருப்பேன்” என்று அலைபேசியை அணைத்தாள்.

தனது வார்ட்ரோபைத் திறந்தவள், குவிந்து கிடந்த துணிகளுள், எதை அணியலாம் என்று தேடிக்கொண்டே இருக்க அவளது உடலில் இருந்த நீர்கள் கூட காணாமல் போயிருந்தது.

இறுதியாக வெங்காய சருகின் வண்ணத்தில் ஒரு சுடிதாரை எடுத்தவள், கண்ணாடியின் முன் வைத்துப் பார்த்துவிட்டு, உடையை உடுத்த ஆரம்பித்தாள். அனைவரும் அங்கு வரவிருப்பதால் தனது மெல்லிய தங்கச் சங்கிலியைத் தவிர அனைத்தையும் கழற்றியவள், உடைக்கு ஏற்ற நிறத்தில் பூ வேலைப்பாடு செய்திருந்த ப்ளாஸ்டிக் தோடையும் இடது கையில் ஒரு கடிகாரம் மட்டும் கட்டிமுடித்து எளிமையாகக்  கிளம்பினாள்.

ரிஷ்வந்திற்கு வைத்திருந்த கிப்டை எடுத்தவள், ஏதோ தடுக்க தாத்தாவை அழைத்தாள்.

“தாத்தையா, இன்னிக்கு என் பிரண்டோட பர்த்டே.. இன்னிக்கு நைட் நாங்க பிரண்ட்ஸ் எல்லாரும் அங்கதான் ஸ்டே பண்றோம். எல்லாரோட அம்மாவும் வர்றாங்க. நானும்..” என்றவள் நிறுத்தினாள். அதற்கு மேல் அவளிற்கு எப்படிக் கேட்பது என்று தயக்கமாக இருந்தது.

அதுவும் எதிரில் தாத்தாவின் அமைதியே சொன்னது அவரது பதிலை.

நிஹாரிகாவிற்குத் தெரியும் தாத்தா தன்னை அனுமதிப்பது கடினம் என்று. அவரின் குணநலன்கள் அவளும் அறிந்தது தானே. அன்னையைக் கூட அவர் எங்கும் அவ்வளவு எளிதில் அனுப்பமாட்டார் என்று பாட்டி சொல்லிக் கேட்டிருக்கிறாள்.

அவரிடம் சொல்லாமல் அவள் சென்றிருக்கலாம். ஏன் மறைக்கவும் செய்திருக்கலாம். அவர் மீது அவளிற்கு இருந்த அன்பும், மரியாதையுமே அவளை அவ்வாறு செய்ய விடாமல் தடுத்தது.

அவர் அமைதியாய் இருக்க, “தாத்தையா, நான் வேணா போயிட்டு நைட்டே வந்திடறேன்.. ப்ளீஸ்” அவள் இறங்கிய குரலில் கேட்க, அவளின், ‘ப்ளீஸ்’ அவரை தடுமாற வைத்துவிட்டது.

“பங்காரம். நீ போயிட்டு உன் பிரண்ட்ஸ் கூட இருந்துட்டே வா. பட் நீ யாரு வீட்டுக்கு போற, எந்த இடம், எல்லாம் அனுப்பிடனும்” சக்கரவர்த்தி சிறிய கண்டிப்புடன் கூற, நிஹாரிகாவின் முகத்தில் பிரகாசம் வந்து பூசிக்கொண்டது.

“தேங்க்ஸ் தாத்தையா.. தேங்க்யூ” அலைபேசியிலேயே அவரைக் கொஞ்சியவள், “உங்க வாட்ஸ்ஆப்-கு எல்லாம் இப்பவே அனுப்பிடறேன் தாத்தையா” அவர் கேட்ட அனைத்தையும் அனுப்பியிருந்தாள்.

பேத்தியின் ஆர்வமும், அவர் சம்மதம் தெரிவித்தவுடன் குரலில் தெரிந்த
ஆர்ப்பரிப்பும் அவரை யோசனையில் ஆழ்த்தியது.

மகளின் விஷயத்தில் தோற்றவரால், பேத்தியின் விஷயத்திலும் அது முடியாது. அதுவும் அவரின் கைகளிலேயே வளர்ந்த அவரின் தங்கத்தை அவரை மீறி யாரையும் உருக்க விட்டு விடமாட்டார். 

அதேசமயம் பேத்தியின் மேல் அவருக்கு சந்தேகம் எழவில்லை. அவளின் வயதும், ஆர்வமும் தான் அவருக்கு வெளிக்காட்ட முடியாத பயத்தைக் கொடுத்தது. அவள் தவறு செய்யமாட்டாள் என்றாலும், அவளைத் தேடி எதுவும் வந்துவிடக்கூடாது என்று உறுதியாக எண்ணினார்.

பேத்தி அனுப்பியதை வைத்து, நிஹாரிகா, ரிஷ்வந்தின் வீட்டில் காலை வைக்கும்முன் அனைத்து விவரங்களையும் அனைவரைப் பற்றியும் பெற்றிருந்தார்.

எதுவும் தவறாய் இல்லாது இருக்க ஒரு புன்னகையை இதழில் படரவிட்டவர், பேத்தியின் அலைபேசிக்கு, ‘கன்வே மை விஷஸ் டூ யுவர் ப்ரண்ட்’ (Convey my wishes to your friend) என்று அனுப்பினார்.

***

ரிஷ்வந்தின் வீடே கலகலப்பைத் தத்தெடுத்திருந்தது. கவின், சக்தி, அன்பு, பிருந்தா, தமிழ், அபர்னா அனைவரும் தங்கள் அன்னைகளோடு வந்திருக்க, ரிஷ்வந்த் நிஹாரிகாவுடனும் சேர்ந்து அன்றைய நாள் இனிமையாக சென்றுகொண்டு இருந்தது.

அனைவரும் சிறுசிறு குழந்தைகளாய் இருந்ததிலிருந்தே நண்பர்களாய் இருக்க அவர்களின் நட்பில் எவருக்கும் எந்த சந்தேகமும் வரவில்லை. வரும் அளவிற்கு யாரும் நடந்து கொண்டதும் இல்லை.

நிஹாரிகா ஹைதராபாத்தில் சந்திராமா கையால் செய்த, அவர்களது ஸ்டைல்  ஜிலேபியை அனைவருக்கும் எடுத்து வந்திருந்தாள்.

“ஹே, ஜிலேபி” கத்திய கவின் ஜிலேபியை எடுத்து மொக்கத் துவங்க, தட்டில் தனித்தனியாக எடுத்து வைத்த கயல்விழி அனைவருக்கும் தந்தார்.

நிஹாரிகாவோ அவனிற்காக வாங்கிய பிறந்தநாள் பரிசை எப்போது தரலாம் என்று அவ்வப்போது நேரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ஏன் டா லேட் ஆச்சா?” அவள் அருகில் அமர்ந்த கயல்விழி வினவ,

“இல்ல ஆன்ட்டி.. நானும் இங்கதான் இருப்பேன்” அவள் சொல்ல,

“அம்மா வரலையாடா?” அடுத்த கேள்வியை கயல்விழி கேட்க,

“இல்லை ஆன்ட்டி.. எல்லாரும் ஹைதராபாத்ல இருக்காங்க.. நான் மட்டும்தான் இங்க இருக்கேன்” அவள் சொல்ல மேலே கேட்க வாயெடுத்தவரை, அவர்களின் பின்னால் இருந்த ரிஷ்வந்த் வேணாம் என்று கண்களால் கட்டளையிட, மகனின் செயலில் அர்த்தம் உணர்ந்தவர் மேலே எதுவும் துருவவில்லை.

கயல்விழியோ மனதிற்குள் யோசனையில் ஆழ்ந்தார். ரிஷ்வந்த் இதுவரை நிஹாரிகாவைப் பற்றி அன்னையிடம் பகிர்ந்ததில்லை. சிறிய விஷயத்தைக் கூட எப்போதும் சொல்லும் மகன் நிஹாரிகாவைப் பற்றி நேற்றுதான் அவரிம் சொன்னது.

அதுவும், ‘அவளும் வீட்டிற்கு வருகிறாள்’ என்று சொன்ன போது, கயல்விழி கேட்ட கேள்விகளுக்கு அவன் மழுப்பலாக பதில் அளித்திருந்தான். கவினிடம் விசாரித்ததிற்கு, “அவ ஒன் இயரா எங்க ப்ரண்ட் தான்.. உங்ககிட்ட அவன் சொன்னது இல்லியாமா?” கவின் கேட்க,

“சொல்லி இருக்கான். ஆனா, ரொம்ப சொன்னது இல்ல” மகனை விட்டுக்கொடுக்க முடியாதவராய் அவரும் மழுப்பினார்.

மாலை வரை சிறியவர்கள் பேசி சிரித்துக் கொண்டிருக்க, அன்னைகளும் தங்களுக்குள் வீட்டுக் கதைகளை அலச பொழுது இனிமையாகக் கழிந்தது.

மாலை ஆறு மணி போல் கனகராஜும் வந்து சேர, நண்பர்கள் எல்லாம் ரிஷ்வந்திற்காக ஆர்டர் செய்திருந்த சாக்கோ ட்ரபிள் கேக் கொண்டு வரப்பட்டது.

அனைவரும் ஒன்று கூடி பிறந்தநாள் பாடலைப் பாட ரிஷ்வந்த் முதல் துண்டை வெட்டி அன்னைக்கு முதலில் ஊட்டினான். அடுத்து தந்தைக்கு ஊட்டியவன் திரும்ப, யாருக்கு முதலில் ஊட்டுவது என்று தெரியாமல் திணறிவிட்டான்.

அனைவரும் அவனுடைய நண்பர்கள்.

கவின் முன் வந்து, “ஆ” காட்ட அவனின் பின் கழுத்தைப் பிடித்தவன் மொத்த கேக்கையும் அவன் வாயில் திணிக்க, கவினைப் போட்டு அனைவரும் ஒருவழி செய்துவிட்டனர்.

கேக்கை துண்டுகளாக வெட்டி அனைவருக்கும் தரப்பட, நிஹாரிகாவோ கேக்கை கபளீகரம் செய்துவிட்டு ரிஷ்வந்தின் அறையிலுள்ள குளியலறைக்குள் புகுந்தாள்.

வெளியே வந்தவள் அங்கு வைக்கப்பட்டிருந்த தனது பேக்கை எடுத்து ரிஷ்வந்திற்காக தான் செய்திருந்ததை வெளியே எடுத்தாள். சில நிமிடங்கள் தனது உள்ளங்கரத்தில் வைத்து, விழிகளுக்கு அருகே நகர்த்தி  கிப்ட் கவர் சுற்றிய சிறிய பெட்டியை அவள் ரசித்துக் கொண்டிருக்க, ரிஷ்வந்த் அவளைக் கண்களால் தேடிக் கொண்டிருந்தான்.

“டேய், இந்த ஜிலேபி எங்க காணோம்?” பலூனை கைகளில் தட்டியபடி ரிஷ்வந்த் கவினிடம் வினவ,

தனது பாக்கெட்டை ஒரு நிமிடம் பார்த்த கவின், ரிஷ்வந்தின் பாக்கெட்டிலும் எட்டிப் பார்த்துவிட்டு, “ஸாரி மச்சி, அவ எங்கேன்னு தெரியல” என்றிட, அவனின் தலையில் தட்டியவன்,

“எல்லாரும் இருக்காங்க இரு உன்னை அப்புறம் பார்த்துக்கறேன்” என்றவன் சக்தியிடம் வினவ,

“உன் ரூமுக்குத் தான் எந்திரிச்சுப் போனா.. இன்னுமா வரலை” பிருந்தாவுடன் பேச்சில் லயித்திருந்த சக்தியும் கேட்க,

“சரி இரு. நான் பாத்துக்கறேன்” என்றவன் எழுந்து தன்னறைக்குள் நுழைய, நிஹாரிகாவின் முதுகுப்புறமும் , அவள் கையில் எதையோ வைத்திருப்பதும் தான் அவனிற்குத் தெரிந்தது.

“ஏய் ஜிலேபி இங்க என்ன பண்ற?” அவன் வினவவும் அவள் திரும்பவும் சரியாக இருந்தது.

அவளது கரத்திலிருந்த கிப்டைக் கண்டு இடுப்பில் இருபக்கமும் கை வைத்தவன், “யாருக்கு?” கண்களை கூர்மையாக்கி வினவ,

“இங்க யாருக்கு பர்த்டே?” வில்லாய் இருந்த ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்கி அவள் வினவியதில் அவனின் மனமோ சிலிர்த்தது.

சடுதியில் தன்னை மறைத்தவன், “இப்ப எதுக்குடி இந்த பார்மாலிட்டி எல்லாம்” அவன் சலித்துக்கொள்ள,

“நான் வாங்கிக் குடுத்தா நீ எதுவும் வாங்க மாட்டேன்னு தெரியும் ரிஷ்வந்த்.. பட் இது என் கையால நான் செஞ்சது” அவள் மென்மையான குரலில், தன் செப்பு இதழ்களை அசைத்துக் கூற, ரிஷ்வந்த் யோசனையாய் அவளைப் பார்த்தான்.

அவனின் கரத்தில் பரிசை வைத்தவள் யாரும் தங்களைத் தேடி வரும்முன் அங்கிருந்து அகன்றாள்.

அவள் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தவன், அவள் சென்றபின் கதவை மூடித் தாழிட்டான். தனது படுக்கையில் வந்தமர்ந்தவன் கிப்ட்  கவரைப் பிரிக்க தொடங்கினான்.

எப்போதும் எதிலும் பொறுமை இல்லாமல் விளையாட்டுத் தனத்துடன் இருப்பவன், பரிசை சுற்றியிருந்த கிப்ட் பேப்பரைக் கூட கிழியாத வண்ணம் பொறுமையின் சிகரமாய் அழகாய்ப் பிரித்தான்.

முழுதாய் பிரித்தவன், அவள் தந்த பரிசைப் பார்த்து மெய் சிலிர்த்துவிட்டான்.

ஆம்!

அவனும்! அவளும்!

இருவரும்!

அவர்களின் நட்பை அந்தச் சிறிய பரிசு உள்ளடக்கி பறைசாற்றியது.

களிமண்ணால் இருவரின் உருவத்தையும் கைகோர்த்தபடி சிறிதாய் அழகாய் செய்திருந்தாள் நிஹாரிகா.

மிகமிக, தத்ரூபமாக!

இருவரும் சிறிது இடைவெளி விட்டு ஒரு மேடையில் கைகோர்த்தபடி அமர்ந்திருப்பது போன்றிருக்க, அதைக் கண்ணாடிக்குள் அழகாய் வைத்திருந்தாள் ரிஷ்வந்தின் தோழி.

அதன் வேலைப்பாடை கண் இமைக்காமல் ரசித்துக் கொண்டிருந்தவன், கதவு தட்டப்பட சுயநினைவிற்கு வந்தான்.

“ரிஷ்வந்த்” கயல்விழி கதவைத் தட்ட,

“வர்றேன் ம்மா” என்றவன் அவள் தந்த பரிசை, தனது அறையில் உள்ள அலமாரியில் ஏறி, அதற்கு எதுவும் சேதாரம் வராத வண்ணம், பாதுகாப்பாக வைத்தான்.

கதவைத் திறந்தவனை கயல்விழி கேள்வி கேட்க, ஏதேதோ சொல்லி சமாளிக்க, “எல்லாரும் கொஞ்சம் கொஞ்சமா மேல எடுத்திட்டுப் போங்க..” என்றிட, இரவு உணவிற்காக அனைவரும் மொட்டை மாடிக்கு ஒவ்வொரு பதார்த்தங்களாக எடுத்துச் செல்ல, நிஹாரிகாவும் கையில் தட்டுடன் மாடிப்படிகளில் ஏறினாள்.

அனைவரும் மேலே வர, “அட கரண்டிய மறந்துட்டனே” என்ற கயல்விழி நகர,

“நீங்க இருங்க ஆன்ட்டி.. நான் எடுத்திட்டு வந்திடறேன்” என்ற நிஹாரிகா மாடிப்படிகளில் துறுதுறுவென்று இறங்கி ஓடினாள்.

கீழே குடுகுடுவென்று ஓடிவந்த நிஹாரிகா சமையலறையில் கரண்டியைத் தேட, அதுவோ அவளது கண்களில் சிக்கிவிடுவேனா என்றது. சமையல் மேடைக்கு கீழுள்ள கதவைத் திறக்க இறுதியாக அங்கிருந்த கரண்டிகளுள், எதற்கும் என்று இரண்டு கரண்டிகளை எடுத்துக்கொண்டு திரும்பியவள் அசைய மறுத்தாள்.

ரிஷ்வந்த் தான் நின்றிருந்தான்.

சமையலறை வாயிலில் சாய்ந்தபடி நின்றிருந்தவனின் பார்வை அவளை விட்டு விலகவில்லை.

அவனின் பார்வை தன் மேலேயே இருப்பதை உணர்ந்தவள், “என்னடா லுக்கு?” என்றவள் அவனைத் தாண்டிச் செல்ல முயற்சிக்க மின்சாரம் தடைப்பட்டது.

மின்சாரம் தடைபட்ட அதிர்ச்சியில் நிஹாரிகா நிற்க, முழுநிலவின் ஒளி மட்டும் அன்று சிறிய கீற்றாக அவர்கள் வீட்டின் வாயிலில் விழுந்திருந்தது.

நிஹாரிகா திரும்ப ரிஷ்வந்த் இருந்த இடம்வேறு முழுதும் இருள்சூழ்ந்து இருக்க, அவளால் எதையும் பார்க்க முடியவில்லை.

“ரிஷ்வந்த்” அவள் அழைக்க,

“ஹம்” என்று மட்டும் குரல் வந்தது. அது வந்த திசையை வைத்தே, அவன் இன்னும் நின்ற இடத்தைவிட்டு  நகரவில்லை என்பதை அவளுக்கு உணர்த்தியது.

“மேல போலாம் வாடா.. எல்லாரும் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க” நிஹாரிகா இருட்டில் கரண்டியை இறுகப் பற்றிபடி பேச,

“அந்த கிப்ட் பண்ண உனக்கு எப்டி தோணுச்சு?” அவள் பேசியதற்கு சம்மந்தமே இல்லாமல் அவன் கேட்க, இருட்டில் கைகளால் அவனைத் தேடித் துலாவியவள் இறுதியில் சுவற்றில் முற்றி நின்றாள்.

“எங்கடா இருக்க?” அவள் நெற்றியைத் தேய்த்தடி வினவ,

“ஆன்சர் பண்ணு பர்ஸ்ட்” அவனின் குரல் வந்த திசை இப்போது மாறியிருந்தது.

இருநொடி அமைதி காத்தவள், “நான் சின்ன வயசுல இருந்து அந்த க்ளாஸ் பிடிக்கும்னு போவேன் ரிஷ்வந்த். ஆனா, யாருக்கும் இந்த மாதிரி செஞ்சு குடுத்தது இல்ல. உனக்கு தான் ப.. பர்ஸ்ட் டைம் குடுக்கிறேன்.”

மனதில் இருந்ததை மறைக்காமல் சொல்ல வைத்தது அவளை அந்த இருள்.

முகம் நோக்காமல் இரு உள்ளங்களும் தங்களின் உள் உணர்வுகளை மட்டும் வைத்து பேசிக்கொண்டிருந்தது.

இருள் அவர்களுக்குள் இருந்த நெருக்கத்தை அதிகரித்தது மனதளவில்.

“வேற யாருக்கும் ஏன் குடுக்கலை?” ரிஷ்வந்த் அடுத்தக் கேள்வியைத் தொடுத்தான்.

ஆனால், இப்போது அவளிற்கு வெகு அருகில் நின்று.

அவனின் குரலில் திரும்பியவளுக்கு அவன் தன்னை நோக்குவதை உணர முடிந்தது.

இருளிலும் அவன் முகத்தை நோக்கி நிமிரிந்தவள், “எனக்கு நீ ஸ்பெஷல் ரிஷ்வந்த். உன்னோட ப்ரண்ட்ஷிப் எனக்கு ரொம்ப முக்கியம்” என்றவளின் குரல் தன்னையும் அறியாமல் கரகரத்தது.

அவளின் குரலில் தெரிந்த தடுமாற்றத்தை அவனும் உணர்ந்தான்.

இருவரும் அமைதியாய் நிற்க மின்சாரமும் வந்தது. இருவரும் இருவரின் முகம் நோக்க, “போலாம்” என்ற ரிஷ்வந்த் முன்னே நடக்க நிஹாரிகா அவனைப் பின் தொடர்ந்தாள்.

அவளின் முன் படி ஏறிக்கொண்டிருந்தவன் திடீரென்று திரும்பி, “தயவு செஞ்சு இப்படி சீரியஸா பேசாதடி. உன் மூஞ்சிக்கு அதெல்லாம் செட்டே ஆகாது” வழக்கமாக இதழ்களை விரிக்காமல் நக்கலடித்து சிரிக்க,

“எருமை எருமை. திருந்தவேமாட்டே” கையிலிருந்த கரண்டியை வைத்து அவனை அவள் அடிக்க, அவனைத் துரத்தியபடியே இருவரும் மாடியேறினர்.

கயல்விழியின் வலதுபக்கம் சென்று நிஹாரிகா அமர, இடது பக்கம் ரிஷ்வந்த் அமர்ந்தான்.

அனைவருக்கும் தட்டில் சுடச்சுட குழிப்பனியாரத்தை பரிமாறியவர், அடுத்து சப்பாத்தி, சந்தகையும் வைத்து, தான் பிடித்திருந்த லட்டையும் வைத்தார்.

கனகராஜ் விரைவாக சாப்பிட்டு முடித்துவிட்டுக் கீழே செல்ல, நிஹாரிகாவோ தட்டை அளந்துகொண்டு இருந்தாள். அனைவரும் தன் அன்னையுடன் அமர்ந்திருப்பதைக் கண்டவளுக்கு ஏனோ அன்னையின் நினைவாக இருந்தது.

சிறிய வயதில் அன்னையின் கையிலேயே இருந்ததும், தாத்தையாவின் கையில் இருந்தபடி அன்னையின் கையால் உண்டதும், அன்னையுடன் விளையாடியதும்,  நினைவில் வர, மனம், ‘அம்மா’ என்றது அவளையும் அறியாமல்.

அவளின் முகத்தையே பார்த்திருந்த ரிஷ்வந்த் அன்னையை இடிக்க, மகனின் பார்வை போகும் திசையை பார்த்தார்.

நிஹாரிகா தட்டை அளப்பதைப் பார்த்தவருக்கு ஏதோ புரிவதுபோல் இருந்தது. வீட்டின் ஞாபகம் என்று நினைத்தவர் அவளின் கையில் இருந்த தட்டை எடுத்து அவளுக்கு ஊட்டத் தொடங்க, நிஹாரிகாவிற்கு விழிகளிலிருந்து சரசரவென்று கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது.

அங்கிருந்த அனைவருக்குமே அது அதிர்ச்சியாக இருந்தது.

அவர்கள் அறிந்து நிஹாரிகா முதல் நாள் தவிர, அனைத்தும் நாட்களும் சிரித்தது தான் பார்த்திருக்கிறார்கள்.

வகுப்பில் ஆசிரியர்கள் திட்டினால் கூட அமரும்போது நண்பர்களைக் கண்டு சிரித்துக்கொண்டு அமர்ந்து தானே பார்த்திருக்கிறார்கள்.

தனது இடது கையால் அவளின் கண்களைத் துடைத்துவிட்ட கயல்விழி, “ஏன்டா அழுகறே? உனக்கு வீட்டு ஞாபகம் வந்தா எங்க வீட்டுக்கு வந்துட்டு போ”

“இல்லினா ஊருக்கு போயிட்டு வா. இதுக்கெல்லாம் அழலாமா?” பேசிக்கொண்டே அவளிற்கு ஊட்ட, மற்றவர்களின் அன்னைகளும் அதையே தான் கூறினார்கள்.

ஒருவழியாய் கண்ணீரை அடக்கியவள், “ஸாரி ஆன்ட்டி” என்றிட,

அவளின் கன்னத்தை அழகாய்ப் பற்றியவர், “எதுக்கு அதெல்லாம்” என்றவர் அவளிற்கு ஊட்டி முடித்துவிட்டு ரிஷ்வந்திடம் திரும்ப,

“நானும் உன் மகன்தான். எப்பவாவது ஊட்டியிருக்கியா?” என்று ரிஷ்வந்த் திருப்பிக்கொள்ள,

“நான் உனக்கு ஊட்டுனதே இல்லியா ரிஷிப்பா?” கயல்விழி சிரிப்பை அடக்கிக் கொண்டு வினவ,

“நீங்க அப்பாக்குத் தானே எனக்கு தெரியாமா சமையல்கட்டுல அப்பப்ப ஊட்டிவிடறீங்க” ரிஷ்வந்த் அன்னையை கேலி செய்ய, அனைவரும் வாய்விட்டுச் சிரிக்க, அந்த வயதிலும் தோன்றிய முகச்சிவப்பை மறைத்தவர்,

“பேசாம சாப்பிடுடா” என்றார் மகனின் தலையில் தட்டியபடி.

அனைவரும் சாப்பிட்டு முடிக்க அங்கிருந்த மூலையில் இருந்த குழாயில் கையைக் கழுவிக்கொண்டு ரிஷ்வந்த் திரும்ப, நிஹாரிகா அவனைப் பார்த்தபடியே நின்றிருந்தாள்.

அவன் என்னவென்று பார்வையாலேயே வினவ, “தாங்க்ஸ்டா, சென்னை வரும்போது நான் இவ்வளவு மாறுவேன்னு நினைச்சுக்கூட பார்க்கல. இவ்வளவு ஹாப்பியா இருப்பேன்னு நினைக்கல” என்றவள் கையை கழுவிவிட்டு அங்கிருந்து அகன்றாள்.

இரவு மொட்டை மாடியிலேயே தூங்க அனைவரும் முடிவு செய்ய, மேலே ஜமக்காளத்தை எடுத்து வந்த, ஆண் பிள்ளைகள் விரித்துப் படுத்துக்கொள்ள, சிறிது இடைவெளி விட்டு விரிக்கப்பட்டிருந்த ஜமக்காளத்தில் அன்னைகளும், பெண் பிள்ளைகளுக்கு படுத்து உறங்க ஆரம்பித்தனர்.

ரிஷ்வந்த், நிஹாரிகா இருவரின் மனதிலும் முதல் சந்திப்பில் தொடங்கி, இன்று இறுதியாய் அவள் சொன்ன நன்றிவரை மனதில் ஓடியது.

தயங்கித் தயங்கி
தொடங்கிய
முதல் உரையாடல்!
பயத்தோடு அருகருகே
அமர்ந்த
முதல் தருணங்கள்!
தயக்கம் நீங்கி
பகிரப்பட்ட
அலைபேசி எண்கள்!
காதல் என்று
நட்பிற்குள்
உளறாத குணங்கள்!
புரியாமல் தொடங்கி
புரிதல் தொடர்ந்து
பாலின வித்தியாசங்கள்
ஒதுங்கிய நாட்கள்!
கண்களாலேயே அவன்
துன்பம்
துடைத்திருக்க
உணர்வாலேயே அவள்
தோள்
சாய்ந்திருக்க
நட்பு பேசும் மொழிகள்!