நீயாக நான், நானாக நீ

eiQIOJ079215-e324f7f2

நீயாக நான், நானாக நீ

 

அத்தியாயம் 13

சுந்தரிடம் பைக் சாவியை வாங்கிக் கொண்டு தன் நீண்ட நாள் கனவை நனவாக்க வீர நடை போட்டு, அவனின் பைக் அருகில் சென்றாள், பூமி. பைக்கை தடவியவள், ‘இந்த பைக்க தான எனக்கு குடுக்க மாட்டேன்னு சொன்ன… இத திரும்ப குடுக்குறப்போ ஒரு சின்ன கீறலாவது போடாம குடுக்க மாட்டேன்…’ என்று மனதிற்குள் சபதமிட்டவளிற்கு தெரியவில்லை, கடவுள் அதற்கு ததாஸ்து சொல்லிவிட்டார் என்று…

அவர்களின் வீடு முக்கிய சாலையிலிருந்து சற்று உள்ளே தள்ளியிருந்தது. மதிய வேளை என்பதால் அவ்வளவாக அங்கு கூட்டமில்லை. பூமியும் நெடுநாட்கள் கழித்து வண்டி ஓட்டுவதால், பிடித்த பாடலை முணுமுணுத்துக் கொண்டே, வளைத்து வளைத்து ஓட்டிக் கொண்டிருந்தாள். முக்கிய சாலை வந்ததும், அவளின் கைகள் நடுங்க வண்டியும் லேசாக ஆடியது.

‘ஸ்ஸ்ஸ் பூமி ஸ்டெடி.. பயத்த வெளிய காட்டிக்காம இருக்கணும்…’ என்று தனக்குள்ளயே சொல்லிக் கொண்டாள்.

முக்கிய சாலையிலும் அவ்வளவாக கூட்டமில்லை என்றாலும், அவ்வப்போது கனரக வாகனங்கள் அவளைக் கடந்து சென்று கொண்டு தான் இருந்தன.

அதுவரையிலும் சினிமா பாடலை முணுமுணுத்தவள், இப்போது பக்திப் பாடல்களை பாடிக் கொண்டிருந்தாள்…. ‘கடவுளே எப்படியாவது பத்திரமா என்ன வீட்டுக்கு போய் சேர்த்துடு… உன் கோவில்ல மொட்டை போடுறதுக்கு எனக்கு ரெண்டு அத்த பசங்க இருக்கானுங்க… ரெண்டு பேரையும் நடக்க வச்சே கூட்டிட்டு வந்து மொட்டை போடுறேன்…’ என்று கடவுளிடம் கோரிக்கை வைக்க, அவரோ அவளின் கோரிக்கையை உடனே நிராகரித்தார்.

மனதில் பயமிருந்தாலும், சரியாகத் தான் வண்டியை ஓட்டினாள். ஆனால் அவளின் வேண்டுதலை நிராகரித்த கடவுள், சபதத்தை நிறைவேற்ற அருள் புரிந்தாரோ… எதிர்த்திசையில் அவளிற்கான ஆப்பு ஸ்கூட்டியில் வந்து கொண்டிருந்தது.

இன்னும் சிறிது தூரத்தில் வீட்டை அடைந்து விடலாம் என்று நிம்மதியுடன் ஓட்டிக் கொண்டிருந்தவளை சோதிக்கவென எதிரில் ஸ்கூட்டியில் வந்து கொண்டிருந்த பெண் தடுமாற, அவளைக் கண்டு இவளும் தடுமாற, கன நேரத்தில் நிகழவிருப்பதை உணர்ந்த பூமி ‘சடன் பிரேக்’கிட்டு விபத்தை தடுத்திருந்தாள். ஆனால் அப்பெண்ணோ பயத்திலேயே நிதானத்தை இழந்து கீழே விழுந்திருந்தாள்.

அதில் பதறிய பூமி, அவசர அவசரமாக வண்டியை விட்டு இறங்கினாள். அவள் இறங்கிய வேகத்திற்கு அதுவும் கீழே விழுந்தது. ஆனால் அதற்குள் அங்கு கூட்டம் கூடி விட்டது.

‘அடேய் ஸ்லீப்பர் செல்ஸ் எங்க டா இருந்தீங்க இவ்ளோ நேரமா…’ என்று பூமி மனதிற்குள் புலம்பினாள்.

கீழே விழுந்ததில் அப்பெண் அழ, சுற்றியிருந்தவர்கள் பூமியை திட்டினர்.

“ஏன் பா… பார்த்து வரக்கூடாது…” என்று பெரியவர் ஒருவர் கேட்க, பூமி அதை மறுத்து சொல்வதற்குள், “இந்த காலத்து பசங்களே இப்படி தான்…” என்று இன்னொருவர் அதற்கு ஒத்து ஊதினார்.

“இல்லைங்க… நான் சரியா தான் வந்தேன்… அந்த பொண்ணு தான் தப்பா வந்துச்சு…” என்று கிடைத்த இடைவெளியில் பூமி பேச, “அந்த பொண்ண பாத்தா பொய் சொல்ற மாதிரியா இருக்கு…” என்றான் அப்பெண்ணிற்கு ரூட் விடும் ஒருவன்.

‘அடேய் என்ன டா ஆச்சு உங்களுக்கெல்லாம்… பொண்ணுங்கன்னா பொய் சொல்ல மாட்டங்களா… என்ன டா முட்டாள்தனமா பேசிட்டு இருக்கீங்க…’ என்று மானசீகமாக தலையிலடித்துக் கொண்டாள்.

அங்கு நின்ற ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைக் கூற, அப்பெண்ணோ நடந்ததைப் பற்றி வாயே திறக்க வில்லை. பூமிக்கு அங்கு நிற்பதற்கே பிடிக்க வில்லை. பைக்கை எடுக்கும்போது எவ்வளவு சந்தோஷமாக இருந்தாளோ, இப்போது அதற்கு நேர்மாறான உணர்வில் இருந்தாள்.

அப்பெண்ணை சமாதானப் படுத்தியவர்கள் (!!!) ஒரு வழியாக பூமியை திட்டிக் கொண்டே கலைந்து செல்ல, அப்பெண் அப்போதும் பூமியைக் கண்டுகொள்ளாமல் அவளின் ஸ்கூட்டியில் கிளம்பி விட்டாள்.

“ச்சே என்ன பொண்ணு அவ… தப்பு அவ மேல தான்… என்னமோ நான் தள்ளி தான் கீழ விழுந்த மாதிரி அழுகாச்சி சீன் வேற…” என்று முணுமுணுத்துக் கொண்டே பைக்கை நோக்க, அதுவோ ரோட்டின் ஓரம் அனாதையாகக் கிடந்தது.

பூமிக்கு ஒரு நொடி, அவளின் சபதம் நினைவிற்கு வர, “ஆனாலும் கடவுளே, இப்படி என் சபதத்த நிறைவேத்திருக்க வேணாம்…” என்று வாய் விட்டே கூறியவள், பைக்கை தூக்க முடியாமல் தூக்கி, அதை உயிர்ப்பித்தாள்.

*****

மேலும் சில நிமிடங்கள் கடந்திருக்க, இம்முறை சுந்தர், “ஆகாஷ் பைக்க எடுத்துட்டு போய் ரொம்ப நேரமாச்சே…. இன்னும் வரல…” என்று சொன்னதும், “என்னது பைக் எடுத்துட்டு போனாளா..க்கும்… போனானா…” என்று அதிர்ந்தான் ஆகாஷ்.

அவனின் அதிர்ச்சியை வித்தியாசமாக பார்த்துக் கொண்டிருந்தான் சுந்தர். அப்போது வாசலில் சத்தம் கேட்க, பூமி தான் பைக்கை நிறுத்தி விட்டு தளர்ந்த நடையுடன் உள்ளே வந்தாள்.

ஆகாஷ் அவளின் சோர்வில் ஒரு நொடி பதறி, அவளின் தலை முதல் கால் வரை ஆராய்ந்தவன், அவளிற்கு ஒன்றுமில்லை என்று தெரிந்த பின்பே நிதானித்தான். அடுத்த நொடியே அவளை முறைக்க ஆரம்பிக்க, பூமியோ அவன் ஒருவன் அங்கிருப்பதையே கவனிக்காதவள் போல், சுந்தரிடம் பேச ஆரம்பித்தாள்.

“சாரி சுந்தர்… உன் பைக்ல சின்ன ஸ்க்ரேட்ச் விழுந்துடுச்சு… ரியலி சாரி…” என்று பூமி மன்னிப்பு கேட்க, அவளின் மனசாட்சியோ, ‘என்னாது சின்ன ஸ்க்ரேட்ச்சா…’ என்று கூற, அதை அடக்கியவள், சுந்தரின் முகத்தையே பாவமாக பார்த்தாள்.

அவனோ, “இட்ஸ் ஓகே ஆகாஷ்… இதுக்கு ஏன் இவ்ளோ சாரி…” என்று சாதாரணமாகக் கூற, அப்போது தான் பூமிக்கு சற்று நிம்மதியாக இருந்தது. ஏனெனில் இவ்வளவு நேரம் பயந்து கொண்டல்லவா இருந்தாள்… எங்கு சுந்தர் அதற்கு வருத்தப்படுவது போல் பேசினாலோ இல்லை திட்டவோ செய்தால், அன்றைய நாள் முழுக்க ஆகாஷிடமும் அர்ச்சனை வாங்க வேண்டுமல்லவா…

சுந்தரிடம் மீண்டும் ஒரு முறை மன்னிப்பும் நன்றியும் கூறியவள், தலைவலி என்று கூறி அவளின் அறைக்குள் சென்றுவிட்டாள். ‘ஷப்பா அந்த கருவாயன் கிட்டயிருந்து தப்பிச்சாச்சு… இன்னைக்கு ஃபுல்லா வெளியவே போகக் கூடாது.’ என்று எண்ண, அவளின் கருவாயனோ மனதினுள் அவளைத் தான் கொஞ்சிக் கொண்டிருந்தான்.

‘லூசு… இவ பைக்க எடுக்கக் கூடாதுன்னு தான் என் பைக்க அசோக் வீட்டுல வச்சு பூட்டிட்டு, அவள அசோக் கூட அனுப்பிட்டு இருக்கேன்… லைசன்ஸே இல்லாம பைக்க எடுத்துட்டு போயிருக்கா… கொஞ்சம் கூட பயமே இல்ல…’ என்று ஆகாஷ் அவளைத் திட்டிக் கொண்டிருந்தான்.

சிறிது நேரத்தில் ஏதோ அவசர வேலை இருப்பதாகக் கூறி, சுந்தரும் விடைபெற்றான். அவனை வழியனுப்பியவன் நேரே சென்றது பூமியின் அறைக்குத் தான்.

அறை வாசலில் நின்று கதவைத் தட்டியதும், “எனக்கு டையர்டா இருக்கு ஸ்கை ஹை… எதுவா இருந்தாலும் காலைல பேசிக்கலாம்…” என்று சோர்ந்து போய் பேச, “கேவலமா நடிக்காத… இப்போ கதவ திறக்கல, கதவ ஒடைச்சுட்டு உள்ள வந்துடுவேன்…” என்றான் ஆகாஷ்.

“இப்போ என்ன வேணும் உனக்கு…” என்று எரிச்சலுடன் (!!!) பூமி கேட்க, “ஹ்ம்ம் என் உடம்புல அடி ஏதாவது பட்டிருக்கான்னு செக் பண்ணனும்… கொஞ்சம் வெளியே வரீங்களா மேடம்…” என்றான் ஆகாஷ்.

அவன் கூறியதில் மனம் வருந்த, ‘அப்போ என் மேல அக்கறை இல்லயா… அவன் உடம்புக்கு எதுவும் ஆகிடக் கூடாதுன்னு தான் பாக்குறானா…’ என்று எண்ணினாள். ஆகாஷ் அவளிற்காக செய்த மற்ற செயல்களை வசதியாக மறந்து போனாள்.

முகத்தை ‘உம்’மென்று வைத்துக் கொண்டே வெளியே வந்தாள் பூமி.

“அட மேடம் என்ன இவ்ளோ சீக்கிரம் வந்துட்டீங்க… உங்கள வெளிய வரச்சொல்லி கெஞ்சனும்னு நெனச்சேன்…” என்று அவன் கேலியாக சொல்ல, எப்போதும் அதை கிண்டலாக மட்டுமே எடுத்துக் கொள்பவளுக்கு இன்று நடந்த சம்பவங்களின் தாக்கமோ இல்லை ஆகாஷின் மேலான அவளின் பார்வையின் மாற்றமோ, அவன் கூறியதை மனதின் ஆழம் வரை எடுத்துச் சென்று வலியை உணரச் செய்தது.

ஆகாஷும் அவளின் நலன் பற்றிய பயம் கலந்த பதட்டத்தில் இருந்ததால் அவளின் எண்ணப்போக்கை கவனிக்க மறந்து மேலும் வார்த்தைகளைக் கொட்டினான்.

“உன்ன யாரு பைக் எடுத்துட்டு போக சொன்னா… கொஞ்சம் கூட பயமே இல்லயா… ஏதாவது ஆனா என்ன பண்ணுவ… உன்ன என் பொறுப்புல விட்டுருக்காங்க மாமாவும், அத்தையும்… அவங்களுக்கு நான் என்ன சொல்றது… எதுக்கு சொல்றோம்னு புரிஞ்சுக்கவே மாட்டியா…” என்று திட்ட, ஏற்கனவே சாலையில் மற்றவர்களிடம் திட்டு வாங்கிய போதே கஷ்டப்பட்டு தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டவளிற்கு, இப்போது எந்த கட்டுப்பாடுகளும் அவன் முன் இல்லாமல் போக, அவளின் கண்கள் கண்ணீரை சிந்த ஆரம்பித்தன.

அப்போது தான் அவளின் நிலையைக் கண்டவன், தான் செய்து கொண்டிருக்கும் செயலை நினைத்து தன்னைத் தானே திட்டிக் கொண்டான்.

அவள் அழுவதைத் தாங்க முடியாமல், “ப்ச் இப்போ எதுக்கு அழுகுற…” என்றான்.

அதில் பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தவளை, இழுத்து சோஃபாவில் அமர்த்தியவனை கைகளினால் அடித்தவள், “விடு டா என்ன… எப்போ பாத்தாலும் திட்டிட்டே இரு… அந்த லூசு தப்பா வந்ததுக்கு நான் என்ன பண்ணுவேன்… எல்லாரும் என்னையே சொல்றீங்க…” என்று கூறியவள் அவனை விட்டு நகர்ந்து அமர்ந்தாள்.

அவள் கூறியதைக் கேட்டு குழம்பியவன், “யாரு தப்பா வந்தா… என்ன சொல்ற… முழுசா சொல்லு…” என்றான்.

பூமியும் அங்கு நடந்தவற்றை சொல்ல, ஆகாஷிற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. இது மாதிரியான அனுபவங்களை அவனின் நண்பர்கள் பகிர்ந்து கேட்டிருக்கிறான். சில இடங்களில், சில சூழ்நிலைகளில், ஆண் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களின் மேல் பழி போடும் செயல்கள் இந்த சமூகத்தில் ஆங்காங்கே அரங்கேறிக் கொண்டு தான் இருக்கின்றன.

ஒரு பெருமூச்சு விட்டவன், “சரி… நடந்ததையே நெனச்சுட்டு இருக்காத…” என்று ஆகாஷ் கூற, அவனை முறைத்தாள் பூமி.

‘ஏன் இவ இவ்ளோ பாசமா பாக்குறா… அவளுக்கு ஆறுதல் தான சொன்னேன்..’ என்று நினைத்துக் கொண்டே அவளை நோக்கி புருவம் உயர்த்தி என்னவென்று கேட்க, “’சரி’ சொல்லுவ, ஆனா ‘சாரி’ சொல்ல மாட்டேல…” என்று பூமி முறைத்துக் கொண்டே கேட்டாள்.

முழுதாய் ஒரு நிமிடம் கடந்த பின்பே அவள் கூறியதற்கான அர்த்தம் புரிய, ‘அட க்ளோபே… இவ்ளோ விஷயம் நடந்துருக்கு… ஆனா நான் சாரி கேக்காதது தான் இவளுக்கு பிரச்சனையாமாம்…’ என்று சலித்துக் கொண்டவன், அவளை நோக்கி கைகூப்பி, “எம்மா தாயே சாரி…” என்றான்.

அவனின் செய்கையில் அவளின் அதரங்களும் விரிய, வாய்ப்பை நழுவ விடாமல் உடனே சமாதான உடன்படிக்கை போட நினைத்தான் ஆகாஷ். பூமியும் தன் ‘மன உளைச்சலுக்கு’ காரணமான ஆகாஷின் பர்ஸிற்கு வேட்டு வைத்துவிட்டே சமாதனத்திற்கு உடன்பட்டாள்.

அடுத்த ஐந்தாம் நிமிடத்தில் இருவரும் சாதாரணமாக பேசிக் கொண்டனர். அப்போது பூமி, “நீங்களும் நெறைய கஷ்டங்கள்ல அனுபவிக்குறீங்க… இப்படி யாரு மேல தப்பு இருக்குன்னு கூட சரியா விசாரிக்காம, ஆண்கள் மேல பழிய போடுறாங்க…” என்று வருத்தமாகக் கூறினாள்.

“ஹ்ம்ம் இது மாதிரி சம்பவங்களும் இப்போ நிறைய இடங்கள்ல நடக்க தான் செய்யுது… இப்போ கூட ரீசன்ட்டா நடந்த விஷயம்… ஒரு பொண்ணு அவளோட செர்வன்ட் தான் சொன்ன வேலைய செய்யலன்னு, அவன் மேல பாலியல் தொல்லை கேஸ் குடுத்துருக்கா… ஏதோ அந்த பையனோட நல்ல நேரம், விசாரிக்குறப்போ அந்த கேஸ் பொய்யுனு தெரியவர, தண்டனைலயிருந்து தப்பிச்சுட்டான்… இதுவே அந்த கேஸ சரியான பாதைல விசாரிக்காம போயிருந்தா, அந்த பையன் இப்போ கம்பி எண்ணிட்டு இருப்பான்…” என்று ஆகாஷ் வருத்தமாக கூறினான்.

“ம்ம்ம் ஆமா… எங்க பொண்ணுங்கள ஆதரிக்கணுமோ அங்க சும்மா இருந்துட்டு, இப்படி தேவையில்லாததுக்கு எல்லாம் சப்போர்ட் பண்ணுவாங்க…” என்றாள் பூமி.

“சில பெண்கள் இப்படி இருந்தாலும், பல பெண்களோட நிலை இன்னும் மோசமா தான் இருக்கு க்ளோபு… கொலை, கற்பழிப்பு, ஆசிட் வீச்சுன்னு எத்தனையோ காரணங்களுக்காக பயந்து பயந்து தான காலேஜுக்கும் வேலைக்கும் போயிட்டு வராங்க… இன்னும் கொஞ்ச நாள்ல அவங்கள காப்பாத்துறதுக்காக மறுபடியும் கிச்சன்ல அடைச்சு வச்சாலும், ஆச்சரியப் படுறதுக்கு ஒன்னுமில்ல…” என்று பெருமூச்சு விட்டான்.

மேலும் சமூகம் சார்ந்த பல விஷயங்களை, அவரவர்களின் கண்ணோட்டத்தில் பகிர்ந்து கொண்டனர். நாம் நமது கோணத்தில் காணும் காட்சி, மற்றவர்களின் கோணத்தில் வித்தியாசப்பட்டிருப்பதையும் உணர்ந்தனர்.

ஆண்களோ பெண்களோ, இருவருக்கும் அவரவர் வாழ்க்கையில் அவரவர்களுக்கேயான கஷ்டங்களும் தடங்கல்களும் இருக்கத்தான் செய்கின்றன. அதற்காக வாழ்க்கையை சபித்துக் கொண்டும், மற்றவர்களின் மேல் பழிபோட்டுக் கொண்டும் இருப்பவர்கள் வாழ்க்கையில் முன்னேறுவதில்லை. அதைக் கடந்து தானும் முன்னேறி, தன் துணையையும் முன்னேற்ற பாதையில் அழைத்துக் செல்பவர்களே வாழ்க்கையில் வெற்றி பெறுகின்றனர். இத்தகைய வாழ்க்கைப் பாடத்தை இவர்களுக்கு உணர்த்த தான் கடவுள் இவர்களிடம் விளையாடினாரோ.

ஆகாஷும் பூமியும் பேசிக் கொண்டே இருந்தவர்கள் நேரத்தை கவனிக்க மறக்க, பூமியின் ‘அலாரம்’ அடிக்க ஆரம்பிக்க, அப்போது தான் மணியை பார்த்தவள், “ஹே ஸ்கை ஹை இவ்ளோ நேரமாகிடுச்சு… எனக்கு பசிக்குது…” என்றாள்.

அவனோ சிரித்துக் கொண்டே, “என்ன நடந்தாலும் சாப்பாடு விஷயத்துல கரெக்ட்டா இரு…” என்று கூற, “இப்போ ஏதாவது சொன்னீயா… பசி மயக்கத்துல காது அடச்சுகிச்சு..” என்று காதை நீவியபடியே பூமி கூறினாள்.

அவளின் காதைப் பிடித்து இழுத்துக் கொண்டே சமையலறைக்குச் சென்று, சமைக்க ஆரம்பித்தான். ஆகாஷ், அங்கிருந்த மேடையில் ஏறி அமர்ந்து கொண்டு, கேரட்டை கடித்துக்கொண்டே அவன் சமைப்பதை வேடிக்கை பார்த்தாள்.

“டெய்லி இப்படி வேடிக்க பாக்குறீயே… ஒரு நாளாவது ஹெல்ப் பண்றீயா…” என்று ஆகாஷ் கேட்க, பூமியோ உள்ளுக்குள் சிரித்துக் கொண்டு, “நானே சமைக்குறேன்னு சொன்னா நீ தான் கேக்க மாட்டிங்குற… தள்ளு இன்னைக்கு நான் அந்த கொரியன் டிஷ் செய்யுறேன்…” என்று எழ, அவளை பிடித்து மீண்டும் அமரச் செய்தவன், “எல்லாம் உன் வாயால தான்…” என்று அவனையே திட்டிக் கொண்டான்.

அதில் பக்கென்று சிரித்தாள் பூமி. அப்போது தான் அவளின் நினைவு, சுந்தர் என்னும் அப்பாவி ஜீவனை நோக்கிச் செல்ல, “ஹே ஸ்கை ஹை, சுந்தர் எங்க..?” என்று கேட்டாள்.

“ஹப்பா இப்பவாவது கேக்கணும்னு தோணுச்சே… ஏதோ வேலையிருக்குன்னு அவன் அப்போவே கிளம்பிட்டான்…” என்றான் ஆகாஷ்.

“அந்த பக்கி என்கிட்ட சொல்லாமையே போயிட்டானா…” என்று பூமி கூற, “நீ ரூமுக்குள்ள போய் அழுதுட்டே இருந்தா, அவன் எவ்ளோ நேரம் வெய்ட் பண்ணுவான்…” என்று ஆகாஷ் அவளை வம்பிழுத்தான்.

அங்கிருந்த முருங்கைக்காயை கொண்டு அவனை அடித்தவள், “நான் ஒன்னும் அழுகல..” என்றாள் பூமி.

அவள் சுந்தரைப் பற்றி கேட்டவுடன், இருவருக்கும் சுந்தர் தங்களிடம் கூறியவை நினைவிற்கு வந்தது. இவ்வளவு நேரம் சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தவர்களுக்கு, இப்போது பேச்சில் தயக்கம் ஏற்பட்டது. இருவருக்குமே மனதினில் மற்றவர்களின் மேல் ஒருவித அழகான உணர்வு தோன்றியிருந்தாலும் அதை வெளிப்படுத்த இருவருமே தயங்கினர்.

இவ்வளவு நேரம் அவன் முன்னே காலையாட்டியபடி அமர்ந்திருந்தவளிற்கு இப்போது கூச்சம் ஏற்பட, “க்கும்… நான் என் பிரெண்ட்ஸ் கிட்ட பேசப் போறேன்…” என்று கூறிவிட்டு அவளின் அறைக்கு ஓடிவிட்டாள்.

அவளின் செய்கைகளை கவனித்துக் கொண்டிருந்த ஆகாஷிற்கு, சுந்தர் அவளிடமும் பேசியிருக்கிறான் என்று புரிந்தது. ஒரு சிரிப்புடனேயே அவள் செல்வதைக் கண்டவன், ‘உனக்கும் என்ன பிடிக்குமா, க்ளோபு…’ என்று மிக மெல்லியதாக அவன் மனதிற்குள் இருப்பவளிற்கு மட்டும் கேட்குமாறு வினவினான்.

அறைக்குள் சென்ற பூமியும், ‘ஓய் ஸ்கை ஹை… சின்ன வயசுல இருந்தே உனக்கு என்ன பிடிக்குமா… உனக்கு என்மேல அவ்ளோ பொசஸிவ்னெஸா…‘ என்று சிரிப்பினுடனே யோசித்தவளிற்கு, சிறுவயது நினைவுகள் கொஞ்சம் கொஞ்சமாக அவளை ஆக்கிரமித்தன.

ஆகாஷ் அவளை ‘பூமிமா’ என்று கொஞ்சுவதும், அவள் அவனை ‘அச்சுமா’ என்று பதிலுக்கு கொஞ்சுவதும் நினைவிற்கு வந்து அவளின் இதழ்களை விரியச் செய்தது.

“அச்சுமா…” என்று முணுமுணுத்தவளிற்கு, இப்போது அவனை அப்படி அழைத்தால் அவனின் எதிர்வினை எவ்வாறு இருக்கும் என்று பார்க்க வேண்டும் என்ற விபரீத எண்ணம் தோன்றியது.

உடனே வெளியே வந்தவள், அவன் இன்னும் சமைத்துக் கொண்டிருப்பதைக் கண்டாள். ஒருமுறை இங்கிருந்தே அழைத்துப் பார்க்கலாம் என்று ‘அச்சுமா’ என்று வாயசைப்பதற்கும், அவன் திரும்புவதற்கும் சரியாக இருந்தது.

ஆகாஷ் அங்கிருந்தே ‘என்னவென்று’ கேட்க, பூமியோ திருட்டு முழி முழித்து ‘ஒன்றுமில்லை’ என்று தலையசைத்து அறைக்குள் வந்து விட்டாள்.

“இப்போ எதுக்கு திருட்டு முழி முழிச்சா…” என்று யோசித்துக் கொண்டே சமையலைத் தொடர்ந்தான் ஆகாஷ்.

“டேய் கருவாயா… உனக்கு ஷாக் குடுக்கலாம்னு வந்தா, எனக்கே ஷாக் குடுக்குறீயா…” என்று அவனை செல்லமாக கொஞ்சிக் கொண்டாள் அவனின் க்ளோபு…

இரவு சாப்பிடும் போதும் அமைதியாகவே உண்டனர் இருவரும். ஒருவரையொருவர் பார்க்காத நேரத்தில் பார்த்துக் கொள்வதும், ரகசியமாக சிரித்துக் கொள்வதும் என்று அத்தருணத்தை அழகாக அனுபவித்தனர் இருவரும்.

இவர்களின் கண்ணாமூச்சி ஆட்டம் அடுத்து வந்த வாரத்திலும் தொடர்ந்தது. மற்ற நேரங்களில் சாதாரணமாக பேசிக் கொண்டாலும், அவர்களின் பார்வையில் மாற்றம் வந்திருந்தது. அதை இருவருமே உணர்ந்து தான் இருந்தனர். இருப்பினும் மற்றவர் முதலில் கூறட்டும் என்று காத்திருந்தனர்.

இந்த ஒரு வாரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள்… ஊரில் திருவிழா என்று இவர்களை அழைத்த பெற்றோரிடம் ஏதேதோ கூறி சமாளித்தனர். சுந்தர் ஒருவனை சமாளிக்கவே அவர்கள் பட்டபாடு அவர்களுக்குத் தானே தெரியும்…

பூமியின் அலுவலகத்தில்… இப்போது ஆகாஷ் பூமியின் தோழிகளிடம் நன்றாகவே (!!!) பேசினான். அவர்கள் ஆகாஷையும் பூமியையும் இணைத்து கலாய்க்கும் போதும் சிரிப்புடனே கடந்து செல்பவனைக் கண்ட ரூபாவிற்கு சந்தேகம் எழுந்தது. ‘இவங்க ரெண்டும் பேரும் லவ் பண்றாங்களோ… அந்த ஃபிராடு பூமி என்கிட்ட மறைச்சுட்டாளோ…’ என்று உள்ளுக்குள் பூமியை திட்டிக்கொண்டாள்.

ஆகாஷின் அலுவலகத்தில்… பூமி கோபத்தில் யாரையோ திட்டிக் கொண்டிருந்தாள். யாரையோ என்ன யாரையோ… ஆகாஷைத் தான் திட்டிக் கொண்டிருந்தாள்.

சற்று நேரத்திற்கு முன்பு… அவர்களின் அலுவலகத்தில் புதிதாக சிலர் வேலைக்கு வந்திருப்பகாகவும், அதிலும் பெண்கள் அழகாக இருப்பதாகவும் செவிவழி செய்தி அந்த அலுவலகம் முழுவதுமே பரவியிருந்தது. அசோக் கூட என்னவென்று விசாரிக்க சென்றான்… அவன் கவலை அவனிற்கு…

இந்த களேபரம் அடங்கிய நேரம், புதிதாக சேர்ந்தவர்களில் நால்வர் அவர்களின் குழுவில் இடம்பெற்றிருக்கின்றனர் என்ற தகவல் வர அங்கிருந்த ஆண்கள் அனைவரும் உற்சாகமானார்கள். அந்த நால்வரும் இவர்களின் இடத்திற்கு வர, அங்கிருந்தவர்கள் அனைவரும் அவர்களிடம் சென்று பேசிக் கொண்டிருக்க, பூமியோ அதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்பது போல் வேலை செய்து கொண்டிருந்தாள்.

அவளின் செயலிலேயே ஈர்க்கப்பட்டாள் அந்த நால்வரில் ஒருத்தி… முதலில் அவளின் பார்வையைக் கண்டுகொள்ளாமல் விட்ட பூமிக்கு, எங்கு போனாலும் தன்னை துளைத்த பார்வையால், எரிச்சல் ஏற்பட்டது.

இடைவேளையில் பூமியே அப்பெண்ணை தனியே அழைத்தாள்.

“உன் பேரு என்ன…?”

“சுஷ்மிதா…” என்றாள் மென்குரலில்.

“வந்ததுலயிருந்து பாக்குறேன், நீ என்னையே பார்த்துட்டு இருக்க…” என்றாள் பூமி சற்று காட்டமாகவே.

முதலில் அப்பெண் அதிர்ந்தாலும், சற்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, “ஐ திங்க் ஐ’ம் இன் லவ் வித் யூ…” என்று கூறிவிட்டாள்.

‘டேய் கருவாயா, உனக்கு அவ்ளோ டிமாண்ட்டா… இத்தன ப்ரொபோசல்ஸ் வருது… அதுவும் ‘அந்த’ மாதிரி ப்ரொபோசல்ஸ் வேற…’ என்று எண்ணியவாறே தன் முன் நின்றிருந்தவளைக் கண்டாள். வெட்கப் படுவதற்கான பெருமுயற்சியில் அப்பெண் இறங்கியிருக்க, ‘இதையெல்லாம் பார்க்கணும்னு என் தலைல எழுதியிருக்கு…’ என்று மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டாள் பூமி. தன் கைப்பொருளை அவள் பிடுங்கிக் கொள்வது போல் கடுகடுவென இருந்தாள்.

அவளிடம் என்ன சொல்லலாம் என்று யோசித்தவள், சட்டென்று, “நான் அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டேன்…”என்று கூறி வெளியே சென்று விட்டாள்.

அவளின் கூற்றில் அப்பெண் எவ்வளவு அதிர்ந்தாலோ, அதே அளவிற்கு பூமியின் மனச்சாட்சியும் அதிர்ந்து, ‘அடிப்பாவி… என்ன பண்ணி வச்சுருக்க..’ என்று கேட்க, பூமியோ, ‘இப்படி சொன்னா தான் பின்னாடி அந்த கருவாயன் இங்க வந்து வேலை செய்யுறப்போ, ஜொள்ளு விடாம இருப்பா…” என்று அசால்ட்டாக மனதினுள் கூறிக் கொண்டவள் வேலையைத் தொடர்ந்தாள்.

பூமி அப்பெண்ணிடம் தனியாக பேசியதையும், அதற்கு பின் அப்பெண் பேயறைந்தது போல் இருந்ததையும் கண்ட அசோக் பூமியிடம், “ஹே பூமி, சுஷ்மி கிட்ட என்ன பேசுன… அவ முகமே வாடிபோயிருக்கு…” என்று கேட்டான்.

ஏற்கனவே கோபத்தில் இருந்தவளை, அசோக்கின் கேள்வி மேலும் கோபமடையச் செய்ய, “ஹான்… அவ உன்ன லவ் பண்றாலாம்… அத உன்கிட்ட சொல்ல சொன்னா…” என்றதும் அவன் முகம் பிரகாசமடைய, “ஆனா நான் தான், நீ அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டன்னு சொல்லிட்டேன்…” என்று அவனின் தலையில் இடியை இறக்கினாள்.

“அவன் இருக்க வரைக்கும் தான் எனக்கு லவ் செட்டாகாதுன்னு நெனச்சேன்… ஆனா இவ என்ன வாழ்க்கை முழுசும் பிரம்மச்சாரியா இருக்க விட்டுடுவா போலயே…” என்று புலம்பினான், அசோக்.

இவர்களை சேர்க்க வந்த க்யூபிடோ, “இதுங்க ஒருத்தருகொருத்தர் லவ் சொல்லி ரொமான்ஸ் பண்ணுங்கன்னு பார்த்தா, மத்தவங்கள நெருங்க விடாம பண்றதுக்கே நேரம் சரியா இருக்கு இதுங்களுக்கு… ஸ்ஸ்ஸ் இவங்க எப்போ லவ்வ சொல்லி, ரொமான்ஸ் பண்ணி, நான் எப்போ அடுத்த ஜோடிக்கு அம்பு விடுறதோ… கடவுளே அடுத்த அசைன்மெண்ட்டாவது ஈசியா குடுங்க…” என்று புலம்பியது.

அடுத்த ஜோடிக்கு அம்பு விடும் வாய்ப்பு க்யூபிடிற்கு கிட்டுமா, இல்லை இவர்களின் பின்னே இன்னும் அலைய நேரிடுமா…

 

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!