நீயாக நான், நானாக நீ

ei15DGD88821-55daae65

 

எபிலாக்

ஐந்து வருடங்களுக்கு பிறகு…

அதே சமையலறை… அதே ஆகாஷ்… அதே பூமி… பூமி எப்போதும் போல் மேடையில் அமர்ந்து காலாட்டிக் கொண்டிருக்க, ஆகாஷ் மும்முரமாக சமைத்துக் கொண்டிருந்தான்.

“என்ன அஷு… இன்னிக்கு இவ்ளோ லேட்டு…” என்று பூமி குற்றப்பத்திரிக்கை வாசிக்க, “ஹான் இன்னிக்கு கோட்டா நீ குடுக்கலல அதான்… இப்போ கூட ஒன்னுமில்ல… நீ உன் அஷுக்கு குடுப்பியாம்… அப்பறம் பாரு எவ்ளோ ஃபாஸ்ட்டா வேலை நடக்குதுன்னு…” என்றான் அவளைப் பார்த்து கண்ணடித்தவாறே…

“ஹுஹும்… நான் இங்கயிருந்து இறங்கனும்… அப்பறம் உன் பக்கத்துல வரணும்… அப்பறம் உன் ஹைட்டுக்கு எக்கணும்… ஹ்ம்ம்… இவ்ளோலாம் என்னால பண்ண முடியாது…” என்று உதட்டை சுழித்துக் கொண்டாள்.

“நீ எதுக்கு இவ்ளோ கஷ்டப்படுற… மாமாவே பக்கத்துல வரேன்…” என்று அருகில் வந்தவனிற்கு வாகாக கன்னத்தை காட்டியவளிடம், “நீயா வந்தா தான் இங்க, நானா வந்தா இங்க…” என்று அவளின் இதழ்களை நோக்கி செல்ல, “ம்மா…ஆ… எனக்கு பசிக்குது…” என்றான் அவர்களின் செல்ல மகன் புவனேஷ்.

அதில் அவளிடமிருந்து விலகியவன், “பிள்ளைய கூட அவள மாதிரியே பெத்துருக்கா…” என்று முணுமுணுத்தான். அப்போது அவனின் கன்னத்தில் முத்தமிட்டவள், “நீ தான் ஃபாஸ்ட்டா குடுக்கணும்… அத விட்டுட்டு ஸ்லோ மோஷன்ல வந்தா…” என்று கூறிவிட்டு ஓடிவிட்டாள். ஆகாஷோ கன்னத்தை தடவியபடி சிரித்தான்.

அவர்களின் மகனை பார்த்துக்கொள்ள வேண்டி, வேலையை விட்டிருந்தாள் பூமி. ஆகாஷ் அலுவலகம் கிளம்ப, அவனின் ஆசைகளில் ஒன்றை நிறைவேற்றிக் கொண்டிருந்தாள் பூமி. அவனிற்கு மதிய உணவை கட்டிக் கொடுத்து சிரிப்புடன் வழியனுப்ப, அவசர முத்தத்தை அவளிற்கு வழங்கியவன், பின் மகனையும் தூக்கிக் கொஞ்சினான்.

“அஷுப்பா… பூமிம்மா பேட் மா… நேத்து எனக்குன்னு நீங்க வாங்கிட்டு வந்த சாக்கிய அவங்களே சாப்பிட்டுட்டாங்க… புவிக்கு தரவே இல்ல…” என்று உதட்டை பிதுக்கினான்.

‘அச்சோ போட்டுக் கொடுத்துட்டானே… ஒரு சாக்லேட் சாப்பிட்டதுக்கு விசாரணை கமிஷன் வைக்குற அளவுக்கு ஏண்டா பாக்குறீங்க… இந்த சின்னது அப்படியே அவங்க சித்தப்பன் மாதிரி…” என்று அங்கில்லாத சுந்தரையும் சேர்த்து மனதிற்குள் அர்ச்சித்தாள்.

சுந்தர் தான் புவிக்கு விளையாட்டுத் தோழன். அவனிருந்தால் அவன் பின்னாடியே சுற்றிக் கொண்டிருப்பான். இப்போது சுந்தர் அவனின் காதல் மனைவியுடன் ஹனி-மூன் சென்றுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகாஷ் பூமியை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “ஈவ்னிங் வந்து அஷுப்பா கேக்குறேன்… ஓகே வா… எங்க இப்போ அஷுப்பாக்கு டாட்டா சொல்லுங்க…” என்று கொஞ்சிவிட்டு சென்றான்.

*****

மாலையில் புவியை கூட்டிக் கொண்டு பூங்காவிற்கு சென்றவர்கள், வரும் வழியில் அசோக்கின் வீட்டிற்கு சென்றனர்.

வீட்டின் கதவு திறந்து கிடக்க, உள்ளே தலைவியைப் பிரிந்த தலைவனாய், பசலை நோயில் வாடியவனாய், பிரசவத்திற்கு பிறந்த வீட்டிற்கு சென்ற மனைவியுடன் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்தான்.

“சுமி மா… நான் வேணா நாளைக்கு ஊருக்கு வரவா…”

“அச்சோ மானத்த வாங்காதீங்க… நேத்து தான இங்கயிருந்து கிளம்புனீங்க… இனி அடுத்த வாரம் தான் வரணும்…” என்று கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள் அவனின் மனைவி சுஷ்மிதா.

ஆம் அவர்களின் அலுவலகத்தில் புதிதாக சேர்ந்த அதே சுஷ்மிதா தான். பூமியின் உதவியுடன் (!!!) அவளிடம் காதலை சொல்லி, அவளையும் சொல்ல வைத்து, பெற்றோரின் சம்மதத்திற்காக இத்தனை வருடங்கள் காத்திருந்து அவளை கரம் பிடித்தும் விட்டான்.

அலைபேசியை அணைத்துவிட்டு திரும்பியவன் அங்கிருந்தவர்களைக் கண்டு, ‘ஆஹா… குடும்பமா வந்துருக்குதுங்களே… இன்னிக்கு எப்படி எப்படி ஓட்டப்போறாங்களோ…’ என்று எண்ணியபடி முழித்துக் கொண்டிருந்தான்.

அதற்குள் ஓடி வந்து அசோக்கின் கால்களை கட்டிக்கொண்ட புவி, “ஷோக்கு மாமா தூக்கு…” என்று கூற, “என்ன ஷோக்கா கூப்பிடுறான் பாரு உன் பையன்… அப்படியே அவங்க அம்மா மாதிரி…” என்றான்.

பின் அவர்களை உபசரித்து பேசிக் கொண்டிருக்க, “என்ன அண்ணா… ஓவர் லவ்ஸ் போல…” என்றாள் பூமி.

‘எதுக்கோ பிளான் பண்றா போலயே… அலர்ட்டா இரு டா அசோக்கு…’ என்று தன்னைத் தானே கூறிக் கொண்டவன், பொதுவாக தலையாட்டினான்.

“ஆனா ஆஃபிஸ்ல என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டான்னு ஜாலியா சுத்திட்டு இருக்கீங்கன்னு தகவல் வந்துச்சே…” என்று பூமி சிரிப்புடன் கூற, “குதூகலமா இருக்க குடும்பத்துல கும்மி அடிச்சிடாத மா…” என்று கையெடுத்துக் கும்பிட, அங்கு நடப்பது புரியவில்லை என்றாலும் அசோக்கைக் கண்ட புவி நகைக்க, மற்றவர்களும் அவனின் சிரிப்பில் இணைந்தனர்.

ஆகாஷ் – பூமி இருவருக்குள்ளும் சிறு சிறு சண்டைகள் வந்தாலும், அவை பிரச்சனையாகும் வரை வளரவிட்டதில்லை. அவர்கள் தான் ‘நீயாக நான், நானாக நீ’ என்று வாழ்ந்தவர்கள் ஆயிற்றே… இப்போது அன்பு மகனும் அவர்களின் கூட்டில் சேர ‘நாமாக நாம்’ என்று வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் இந்த வாழ்க்கை மேலும் சிறக்கும் என்று வாழ்த்தி விடைபெறுவோம்.

நன்றி!!!