நீயாக நான், நானாக நீ

eiKIJVX20030-2328aa00

நீயாக நான், நானாக நீ

 

அத்தியாயம் 3

அதிகாலை வேளை கனவில் மூழ்கியிருந்தவளின் இதழ்கள் கனவின் இனிமையை பறைசாற்றுமாறு விரிந்திருக்க, அதன் இனிமையைக் குழைக்கவென கர்ணக்கொடூரமாகக் கேட்டது அந்த சத்தம்.

“ஹு லெட்ஸ் தி டாக்ஸ் அவுட்” என்ற பாடல் அவளின் காதருகே கேட்க, அடித்து பிடித்து எழுந்தாள் பூமி.

“ச்சே அலாரமா… யாரது பாட்ட மாத்துனது… அந்த கருவாயன் மாத்திருப்பானோ…” என்று வாய்விட்டு புலம்பியவள், ஒற்றைக் கண்ணை மட்டும் திறந்து, மணி பார்க்க அலைபேசியை எடுத்தாள்.

‘இது அவனோட மொபைல் மாதிரி இருக்கு…’ என்று யோசித்தவள், அப்போது தான் அவளிருக்கும் அறையைக் கண்டாள்.

அதிர்ச்சியில் தூக்கத்திற்கு முழுதாக (!!!) விடைகொடுத்தவள், மீண்டும் தன் கண்களை தேய்த்துவிட்டு நன்றாக பார்த்தாள்.

“நான் எப்படி இவன் ரூமுக்கு வந்தேன்… நேத்து என்ன நடந்துச்சு… ஃபர்ஸ்ட் அவன் குடிச்சான்… நான் அவனுக்கு அட்வைஸ் பண்ணேன்… அப்பறம் நான் குடிக்கப் போனேன், அவன் எனக்கு திருப்பி அட்வைஸ் பண்ணான்… அவன் கல்யாணத்த நிறுத்த மாட்டேன்னு சொன்னதும் கோபத்துல என் ரூமுக்கு போயிட்டேன்… இது தான நடந்துச்சு… இதுல நான் எப்போ இவன் ரூமுக்கு… ஒரு வேள அப்படி இருக்குமோ… நைட் அந்த கருவாயன் என்ன…. சேச்சே அவன் அதுக்கு சரிபட்டு வரமாட்டான்…” என்று புலம்பியவாறே அறையில் நடந்து கொண்டிருந்தாள்.

அப்போது எதேச்சியாக அங்கிருந்த நிலைக்கண்ணாடியைக் கண்டவள், அதில் தெரிந்த அவளின் பிம்பத்தை அதிர்ச்சியுடன் பார்த்து கத்த ஆரம்பித்தாள். அதே நேரம் பக்கத்து அறையிலிருந்தவனும் கத்திக் கொண்டு தான் இருந்தான்.

ஐந்து நிமிடங்களுக்கு முன்பு…

கால்களை விரித்து சுகமாக படுத்து தூங்கிக் கொண்டிருந்தவனின் நித்திரையை, அலைபேசியின் அதிர்வொலி (வைப்ரேஷன் சவுண்ட்) கலைக்க, தூக்கம் பறிபோன கடுப்பில், எழுந்து கொள்ளாமல், அரைக்கண்ணில் வந்த புலன செய்தியை படித்தான்.

ஹாய் க்யூட்டி… திஸ் இஸ் ஸ்வீட்டி… அண்ட் திஸ் இஸ் மை நியூ நம்பர்… – என்ற செய்தியை படித்தவன், “யாரது ஸ்வீட்டி… அதுவும் என்ன க்யூட்டின்னு கூப்பிடுற ஸ்வீட்டி… ஹ்ம்ம் நம்ம பசங்க தான் விளையாடுறாங்க போல…” என்றவன் கண்களை மூட, மீண்டும் அதே ஒலி கேட்டது. மீண்டும் அதே ஸ்வீட்டியிடமிருந்து செய்தி…

“கொய்யால… எவன்டா அது காலங்கார்த்தால தூக்கத்த டிஸ்டர்ப் பண்ணுறது…” என்று கோபத்தில் கத்தியவாறே எழுந்தவன், கையிலிருந்த அலைபேசியை பார்த்து, “இது அந்த வெள்ளெலியோட மொபைலாச்சே… நேத்து நைட் தூக்கத்துல எதுவும் மாத்தி எடுத்துட்டு வந்துட்டோமோ… ஐயையோ இது என்ன அந்த ரவுடி ரூம்ல படுத்துருக்கேன்… போச்சு நேத்து சரகடிச்சுட்டு என்ன மறந்து அவ ரூமுக்கு வந்துட்டேன் போலயே… சும்மாவே ஜிங்கு ஜிங்குன்னு குதிப்பா, இப்போ அவள வேற சமாளிக்கணும்…” என்றவாறே நெட்டி முறித்தான்.

“மணி என்ன… ரொம்ப லேட்டாகிருச்சோ…” என்று அலைபேசியை எடுத்தவன், அதன் கருப்பு திரையில் தெரிந்த அவளின் உருவத்தைக் கண்டு பதறி, அதை கீழே போட்டு விட்டான்.

“ச்சே எங்க பார்த்தாலும் அந்த உலக உருண்ட மூஞ்சி தான் தெரியுது.” என்றவன், எதிரிலிருந்த கண்ணாடியில் அவன் உருவத்தை பார்க்க, அதிர்ச்சியில் அந்த நொடி அவனின் மூளை செயலிழந்து போனது. ஆனால் மறுநொடியே சுயத்திற்கு வந்தவன் அலறினான்.

அடுத்த இரண்டு நிமிடங்களுக்கு அந்த அடுக்குமாடி குடியிருப்பே இவர்களின் கூச்சலில் அல்லோலப் பட்டது.

தொடர்ந்து இரு நிமிடங்கள் கத்தியதால், சோர்ந்தவர்கள் அவர்களின் குரலுக்கு தற்காலிக ஓய்வளிக்க, அப்போது தான் இருவருக்கும் மற்றவர்களின் நினைவு வந்தது. இருவரும் ஒரே நேரத்தில் மற்றவர்களின் (!!!) கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தனர்.

நேருக்கு நேர் நின்ற இருவரும் ஒருவரையொருவர் பார்த்து மீண்டும் கத்த, இம்முறை அவர்களின் கூச்சலை அடக்கியது, வாசலில் இடைவிடாது ஒலித்த அழைப்பு மணி.

இருவரும் மற்றவரை முறைத்துக் கொண்டே வாசல் வரை சென்றனர். ஆகாஷ் கதவைத் திறக்க, அங்கு அவர்களின் அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள முக்கால்வாசி நபர்கள் அவர்களை முறைத்துக் கொண்டு நின்றிருந்தனர்.

அதில் ஒருவர், “என்னப்பா ஆகாஷ் காலங்கார்த்தால இப்படி எல்லாரோட தூக்கத்தையும் கெடுத்துட்டு இருக்கீங்க…” என்று அவனைப் பார்த்து கேட்க, அவனருகிலிருந்தவள் (!!!), “சாரி விஷ்ணு அங்கிள்… எல்லாத்துக்கும் ‘இவ’ தான் காரணம்…” என்று அவனை (!!!) முறைத்தாள்.

அந்த விஷ்ணு அங்கிள் எனப்பட்டவரோ, ‘என்னது இது இந்த பையன கேள்வி கேட்டா, அந்த பொண்ணு பதில் சொல்லுது…’ என்று குழம்பினார்.

மற்றவர்களும் அவர்களை ஒரு மாதிரி பார்க்க, ‘அவன்’ ‘அவளின்’ கைகளைப் பிடித்து, “சாரி அங்கிள்…” என்று கூறியவாறே உள்ளே சென்று கதவை அடைத்தான்.

இதைக் கண்டவர்களுக்கு, புரளி பேச விஷயம் கிடைத்த திருப்தியில் ஆளாளுக்கு ஒன்றை கூறியபடி கலைந்தனர்.

“ஹே எதுக்கு டி இப்போ என்ன இழுத்துட்டு வந்த… அவங்க என்ன நெனைப்பாங்க…” என்றான் ‘அவன்’, பெண்குரலில்…

“அவங்க வேற மாதிரி நெனச்சுடக் கூடாதுன்னு தான் இழுத்துட்டு வந்தேன்…” என்றாள் ‘அவள்’, ஆண்குரலில்…

அவளாக அவனும், அவனாக அவளும்..
உடலிருக்க, உயிர் மட்டும் இடமாறியதோ…
போகனின் சித்துவிளையாட்டுக்களுள் ஒன்றை
விதி இவர்களுக்கு வரமாக தந்திருக்க…
அதை வரமாக்கிக் கொள்வதும் சாபமாக்கிக் கொள்வதும் அவர்களின் கைகளில்…

அரைமணி நேரம் கடந்திருந்தது. இருவரும் எதிரெதிரே அமர்ந்து, தரையையும் உத்தரத்தையும் மாறி மாறி வெறித்திருந்தனர்.

அந்த அமைதியை பொறுக்காத பூமி, “எப்படி டா இப்படி…” என்று அவர்கள் இருவரையும் சுட்டிக் காட்ட, அதை யோசித்து யோசித்து மண்டை குழம்பியிருநத ஆகாஷோ, “ஹ்ம்ம்… நீதான் டி மந்திரவாதி, ஏதாவது மந்திரம் போட்டிருப்ப…” என்றான்.

அதில் வெகுண்டெழுந்தவள், “என்னையா மந்திரவாதின்னு சொன்ன… நீதான் டா பில்லி சூனியம் வைக்குற மாதிரி இருக்க…” என்றாள்.

பின் வாய்ச்சண்டை, கைச்சண்டையாக மாற, சோஃபாவின் தலையணைகளிலுள்ள பஞ்சு வெளிவரும் வரை அவர்களின் சண்டை நீடித்தது.

சிறிது நேரத்தில் சோர்ந்த இருவரும், “நீதான் டி(டா) ஆணா(பொண்ணா) மாறனும்னு ஆசைப்பட்ட…” என்று ஒரே நேரத்தில் கூறினர்.

ஒருவர் கூறியதை மற்றவர் கேட்டதும், அதிர்ச்சியடைந்தனர். இவர்களின் விருப்பத்திற்கு ‘ததாஸ்து’ கூறிய கடவுளோ, இவர்களின் சண்டையை பூஜையறையிலிருந்த போட்டோவிலிருந்து சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

*********

இருவரும் சற்று பயத்துடன் காணப்பட்டனர். ஆம் பயமே… இவ்வளவு நேரமிருந்த விளையாட்டுத்தனம் மறைந்து தீவிரமாக சிந்தித்தனர். இவர்களின் மாற்றத்திற்கான காரணம் விதியென்றால், அதை வெல்வதற்கான வழியையும் அறிய வேண்டுமல்லவா…

“டேய் அஷு… இப்போ என்னடா பண்றது…” நலிந்த குரலில் அவள் வினவினாள், பூமி.

“அதான் எனக்கும் தெரியல டி க்ளோபு…” – என்றான் ஆகாஷ், அவளின் ‘அஷு’வை கவனிக்காமல்…

சற்று நேரம் யோசித்தவன், “எனக்கு தெரிஞ்ச சாமியார் இருக்காரு. அவருக்கிட்ட கிட்ட போய் நாம திரும்ப நம்மளோட உடம்புக்குள்ள வரதுக்கான வழிய கேக்கலாமா…” என்றான்.

“சாமியாரா…” என்று முகத்தை சுழித்தவளை கடுப்புடன் பார்த்தவன், “ஏன் உன்கிட்ட வேற ஏதாவது நல்ல ஐடியா இருக்கா…” என்றான்.

“சரி சரி சாமியார் கிட்டயே போலாம்…” என்றாள்.

“ம்ம்ம் சரி நீ போய் உன் ரூம்ல குளி… நான் என் ரூம்ல குளிக்கிறேன்… சீக்கிரம் போனா தான் கூட்டமில்லாம இருக்கும்… அப்பறம் இன்னிக்கு உனக்கு லீவ் சொல்லிடு…” என்று ஆகாஷ் அடுத்தடுத்து திட்டங்களை தீட்ட, பூமியோ ‘குளி’ என்றதிலேயே ஸ்தம்பித்து போய் அமர்ந்திருந்தாள்.

அவளின் அதிர்ச்சியைக் கண்டவன், ‘இப்போ எதுக்கு இவ இப்படி ஷாக்காகுறா… இவளால தான மத்தவங்க தான இப்படி பேயறஞ்ச மாதிரி இருப்பாங்க…’ என்று யோசித்தவன், அவளை உலுக்கி நிகழ்விற்கு அழைத்து வந்து என்னவென்று வினவினான்.

“டேய் கருவாயா… நீ குளிக்க கூடாது…” என்றாள்.

‘என்னாச்சு இந்த க்ளோபுக்கு… எப்பவும் சுத்தம் சுகாதாரம்னு அரை பக்கத்துக்கு டையலாக் பேசுவா…’ என்று யோசித்தவனிற்கு அவள் அவ்வாறு கூறியதற்கான காரணம் புரிபட, ‘அடி வாடி என் மாமா பொண்ணு உலக உருண்ட… இன்னிக்கு இத வச்சே உன்ன கதற விடுறேன்…’ என்று மனதிற்குள் கூறியவன், “ச்சே குளிக்காம இருக்கணுமா… உன்ன மாதிரி நான் கெடையாது மா… தினமும் குளிச்சுடுவேன்…” என்று வெறுப்பேற்றினான்.

“ச்சோ… இப்போ நீ… நீ இல்ல… நான்…”

“இப்போ எதுக்கு நீ நான்னு உளறிட்டு இருக்க…”

“அடேய் கருவாயா… நீ இப்போ இருக்குறது என் உடம்புக்குள்ள… நீ எப்படி குளிப்ப… அது…” என்று கூறும்போதே அவளின் கண்கள் கலங்கிவிட்டது.

சிறுவயதிலிருந்தே, அவளின் சேட்டைக்கு எல்லாம் எதிர்வினை புரிபவன், அவளின் கண்ணீருக்கு அடங்கி விடுவான். இப்போதும் அப்படியே… அவளின் கண்ணீரைக் கண்டதும், தன் குறும்பை கைவிட்டவன், “ஹே லூசு இதுக்கெதுக்கு அழுதுட்டு இருக்க… அப்படி பார்த்தா, நீயும் தான் என் உடம்புக்குள்ள இருக்க… இங்க பாரு…” என்று கூறி அவளின் முகத்தை நிமிர்த்தி, கண்களில் வழியும் கண்ணீரைத் துடைத்தவன், “இப்படியே எவ்வளவு நாள் இருப்போம்னு தெரியாது… அதுவரைக்கும் குளிக்காம இருப்பியா…” என்று கேட்டான்.

அவள் இன்னும் தெளியாததைக் கண்டு, “சரி உனக்கு ப்ரோமிஸ் பண்றேன்… நான் கண்ண மூடிட்டு தான் குளிப்பேன் போதுமா…” என்றான்.

அதற்கு தலையாட்டியவள், “ஆமா நீ எப்படி கண்ண மூடிட்டே குளிப்ப…” என்றாள்.

“ம்ம்ம் ஆமால அப்போ கண்ண தொறந்தே குளிக்குறேன்…” என்றான் நக்கலாக.

“ஓய் கண்ண தொறந்தன்னு தெரிஞ்சுது, கண்ண நோண்டிடுவேன்…” என்று மிரட்டினாள்.

அவள் பேசியதிலிருந்து அவள் தெளிந்து விட்டாள் என்று புரிந்து கொண்டவன், “நீயும் தான் கண்ண மூடிட்டு குளிக்கணும்…” என்றான்.

அவளோ அவனை நக்கலாக பார்த்தபடி, “எனக்கு கண்ண மூடிட்டு குளிக்குற வித்தையெல்லாம் தெரியாது…” என்றாள்.

அவளின் கூற்றில் புருவம் உயர்த்தியவன், “அப்போ சரி கண்ண தொறந்தே குளி…” என்றான் விஷமமாக.

அதில் அதிர்ந்தவள், “உவக்… சீ…” என்று கூறி அறைக்குள் செல்ல முற்பட்டாள்.

அவளைத் தடுத்தவன், “ஓய்… இப்போ ப்ரோமிஸ் பண்ணது உனக்காக இல்ல… ‘நான்’ அழுகுறத என்னால பார்க்க முடியாம தான்…” என்றான்.

பூமியோ உதட்டை சுழித்துவிட்டு சென்று விட்டாள். ஆகாஷ் அவளின் செய்கைகளை எண்ணி சிரித்தவன், தலையை இடவலமாக ஆட்டிவிட்டு அறைக்குள் நுழைந்து கொண்டான்.

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!