நீயாக நான், நானாக நீ

eiZ0GMI7216-49406854

நீயாக நான், நானாக நீ

 

அத்தியாயம் 6

அவர்களின் சண்டை ஓய்ந்ததும், முதல் வேலையாக அசோக்கிற்கு வீட்டிற்கு வருமாறு தகவல் அனுப்பினான், ஆகாஷ்.

“ஹே ஸ்கை ஹை, பசிக்குது ஏதாவது செஞ்சு தாயேன்…” என்று பாவமாக கேட்டாள் பூமி.

“அடிப்பாவி, அரை மணி நேரத்துக்கு முன்னாடி தான என் பங்குலயும் கொஞ்சம் பிடுங்கி தின்ன… அதுக்குள்ள பசிக்க, அது என்ன வயிறா வேற எதுவுமா…”

“டேய் கருவாயா… ஓவரா பேசாத… அப்படி பார்த்தா இது உன் வயிறு தான்… நீ தான் தின்னு தின்னு பெருத்து இப்படி வச்சுருக்க…” என்று உதட்டை சுழித்துவிட்டு, குளிர்சாதன பெட்டிக்குள் தலையை விட்டு சாப்பிட ஏதாவது கிடைக்குமா என்று தேடினாள்.

ஆகாஷோ இவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு அறைக்குள் சென்று விட்டான்.

“ச்சே என்ன ஆப்பிள் மட்டும் தான் இருக்கு… சரி பசி ருசி அறியாது… அப்படின்னு நெனச்சுட்டே இந்த ஆப்பிளை சாப்பிட வேண்டியது தான்…” என்று அவளாக பேசியபடி கூடத்திற்கு வர, அங்கு ஆகாஷ் இல்லாமல் தேடியவள், “இவன் ஏன் எப்ப பார்த்தாலும் ரூமுக்குள்ள போயிடுறான்… சரி நமக்கு சோறு தான் முக்கியம்… அவன் எப்படி போனா என்ன..” என்று கூறியவாறு ஆப்பிளை வெட்ட முற்படும்போது, அழைப்பு மணி அடிக்க, “எவன் அவன்… நான் சாப்பிடும்போது தான் வருவீங்களா டா…” என்று எரிச்சலில் கத்தியுடனே சென்று கதவைத் திறந்தாள்.

அவள் கதவைத் திறந்ததும், “டேய் மச்…சா…ன்ன்..” என்று அலறியவாறே அவளை அணைக்க வந்த அசோக்கை, “பக்கத்துல வந்த சொருகிடுவேன்…” என்று கத்தியைக் காட்டி மிரட்டினாள், பூமி.

“டேய்… என்ன டா மச்சான்… வீட்டுக்கு கூப்பிட்டு அசிங்க படுத்துறியா… டேய் மச்சான் அசோக்கு டா… உன் தேவா டா… நீ கூட அடிக்கடி சொல்லுவியே, நான் தோனினா நீ ரெய்னானு… நான் ‘அ’ன்னா, நீ ‘ஆ’ டா…” என்று அசோக் புலம்ப, “ஹே போதும் நிறுத்துறியா… கேக்க முடியல…” என்று காதை குடைந்தாள்.

அவளின் செய்கையைக் கண்டவன், “நட்புன்னா என்ன தெரியுமா…” என்று ஆரம்பிக்க, “இப்போ வாய மூடல, வாயில இன்டு மார்க் போட்டு விட்டுருவேன் பாத்துக்கோ…” என்று அவள் மிரட்டவும் தான் அமைதியானான்.

அப்போது வெளியில் கேட்ட பேச்சு சத்தத்தில், யாரென்று எட்டிப் பார்த்த ஆகாஷ், அசோக்கை கண்டதும், “டேய் மச்சான்… என்ன டா அங்கேயே நின்னுட்டு இருக்க…” என்று அசோக்கை அணைக்க செல்ல, அதில் மற்ற இருவருமே பதறினர்.

சற்று சுதாரித்த பூமி, கடைசி நிமிடத்தில் இருவருக்கும் இடையே சென்று, “ஹே என்ன பண்ற… ஒழுங்கா ரெண்டு ஸ்டெப் பேக் எடுத்து வை… பாசம் ஓவரா தான் பொங்குது…” என்று காட்டமாக பேச, (பாவம் அவளிற்கு ஆப்பிள் சாப்பிட விடாத கடுப்பு!!!) அப்போது தான் நிலையை உணர்ந்தவன், தலையைக் கோதி சமாளித்தான். அதற்கும் அவளிடமிருந்து முறைப்பைப் பெற்றான். (பின்னே அரை மணி நேரம் செலவழித்து செய்த ‘ஹேர் ஸ்டைல்’ ஆயிற்றே…)

இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்க, அதை ‘சப்-டைட்டில்’ இல்லாத வேற்று மொழி படத்தை பார்ப்பது போல், இருவரின் முகத்தையும் மாறி மாறிப் பார்த்தான்.

‘டேய் என்னங்கடா நடக்குது இங்க… கூப்பிட்டு வச்சு கலாய்க்குறாங்களோ…’ என்று மனதிற்குள் புலம்பினான் அந்த அப்பாவி ஜீவன்.

அதற்குள் ஆகாஷை உள்ளே அனுப்பிய பூமி, அசோக்கை பார்த்து, “ஹலோ, உனக்கு தனியா சொல்லணுமா… உள்ள வா…” என்று மிரட்டிவிட்டு சென்றாள்.

‘ஆரம்பமே இப்படி இருக்கே… உள்ள போனா இன்னும் என்னன்ன நடக்குமோ… இப்படியே எஸ்ஸாகிடலாமா…’என்று அவன் யோசிக்கவும், “இன்னும் உள்ள வரலியா நீ…” என்ற சத்தம் கேட்கவும் சரியாக இருந்தது.

“யார் யாரோ நண்பன் என்று…
ஏமாந்த நெஞ்சம் உண்டு…”
என்ற பாடலை மீண்டும் முணுமுணுத்துக் கொண்டே உள்ளே சென்றான்.

அங்கு நின்றிருந்த பூமியைக் கண்டவன், “நீ நல்லா தான இருக்க மச்…” என்று ஆரம்பித்தவன் பூமியின் முறைப்பைக் கண்டு, “க்கும்… எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு டா… உன்மேல யாரோ செம கோபத்துல இருக்காங்கன்னு நெனைக்குறேன்… அதான் குட்டிச்சாத்தான ஏவி விட்டுருக்காங்க…” என்று அசோக் கூறியதைக் கேட்டதும் ஆகாஷ் பக்கென்று சிரித்தது மட்டுமின்றி, “ஆமா ஆமா குட்டிச்சாத்தான் தான் அந்த உடம்புக்குள்ள இருக்கு…” என்று கூறியதும் அந்த ‘குட்டிச்சாத்தான்’ இரத்தக்காட்டேரியாக மாறி, அசோக்கின் இரத்தத்தை உறிஞ்ச பாய முற்படும் போது, அவளைத் தடுத்து நண்பனை காப்பாற்றினான் ஆகாஷ்.

“யார பார்த்து டா குட்டிச்சாத்தான்னு சொன்ன பூன மூஞ்சி… உன்ன…” என்று ஆகாஷின் கைகளிலிருந்து திமிற, அவளை அடக்க வழியைத் தேடிய ஆகாஷ், பக்கத்திலிருந்த முழு ஆப்பிளை அவளின் வாயில் அடைத்து, “ம்ம்ம் சாப்பிடு… பசி வந்துச்சுன்னா நீ நீயா இருக்க மாட்ட…” என்று விளம்பர பாணியில் கூறினான்.

பூமியோ சண்டையா சாப்பாடா என்று ஒரு நொடி சிந்தித்தவள், ‘நமக்கு சோறு தான் முக்கியம்…’ என்று ஆப்பிளுடன் ஐக்கியம் ஆனாள்.

அவள் சாப்பிடுவதற்குள், நடந்தவைகளை சுருக்கமாக அசோக்கிற்கு கூறினான் ஆகாஷ்.

அதைக் கேட்ட அசோக், பூமியாக நின்றிருந்த ஆகாஷை நோக்கி, “நான் சரக்கடிச்சு புலம்புற ஆளு… என்ன இப்படி சரக்கடிக்காமயே குழம்ப விட்டுட்டீயே மா…” என்று பாவமாக கூறினான்.

“டேய் நான் தான் ஆகாஷ் டா…”

“அட போடா…” என்று சோஃபாவில் சோர்வாக அமர்ந்தான் அசோக். அதே சோஃபாவில் சற்று தள்ளி அமர்ந்திருந்த பூமி அவனைப் பார்க்க, பதறி எழுந்தான்.

“அது வந்து மச்… ஆகா… மா…” என்று குழப்பியடிக்க, அவனைக் கண்ட மற்ற இருவரும் சிரித்து விட்டனர்.

“என்ன ரெண்டு பேரும் என்ன கூப்பிட்டு வச்சு கலாய்க்குறீங்களா… நீ சொன்னதெல்லாம் பொய் தான…” என்று அழும் குரலில் வினவினான் அசோக்.

“இல்ல அசோக்… நான் சொன்னதெல்லாம் உண்மை தான்… நான் தான் ஆகாஷ்… இவ பூமி…” என்று மீண்டுமொரு முறை விளங்கினான்.

இம்முறை, ஆகாஷ் கூறியதை நம்பிய அசோக், “ஹே அப்போ நீங்க மாறுறதுக்கு ஏதாவது வழி யோசிக்க வேண்டியது தான… நம்ம கஷ்டானந்தா சாமிய பாக்கலாம்…” என்ற அசோக் மீண்டும் ஒரு முறை பூமியின் முறைப்பிற்கு ஆளானான்.

“டேய் ஆகாஷ், நியாயமா பாத்தா உன் முறைபொண்ணு உன்ன தான டா முறைக்கணும்… என்ன எதுக்கு முறைச்சுட்டு இருக்கா…” என்று அருகே நின்ற ஆகாஷிடம் முணுமுணுத்தான்.

பின், ஆகாஷ் அசோக்கிடம் காலையில் நடந்ததைக் கூறி, அந்த இரண்டாவது சாமியார் கூறியதையும் சொன்னான்.

“இப்போ என்ன டா பண்ண போற…” என்று அசோக் கேட்க, “அது தான் ஒன்னும் புரியல டா… வர்ற ஃப்ரைடே வேற ப்ரொஜெக்ட் ப்ரெசென்டேஷன் இருக்கு…” என்றான் ஆகாஷ்.

“மச்சான் நாம வேணா அந்த குடுமி மண்டையன் கிட்ட ப்ரெசென்டேஷன அடுத்த வாரம் போஸ்ட்போன் பண்ண சொல்லலாம் டா…” என்றான் அசோக்.

“அடுத்த வாரம் மட்டும் நான் பழைய மாதிரி மாறிடுவேனா என்ன…” என்று சலிப்புடன் கூறினான் ஆகாஷ்.

“அப்பறம் எப்படி டா ப்ரெசென்ட் பண்ணுவ… உன் இத்தன நாள் உழைப்பு டா…” என்று அசோக் கூற, “ஏன் என்ன பாத்தா ப்ரொஜெக்ட் ப்ரெசென்ட் பண்ற மாதிரி தெரியலையா…” என்று பூமி கேட்டாள். இவ்வளவு நேரம் தன் வேலையில் (சாப்பிடும் வேலை!!!) குறியாக இருந்தவள், வேலை முடிந்ததும் (ஆப்பிள் தீர்ந்ததும்…) அவளும் அவர்களின் உரையாடலில் பங்கு கொண்டாள்.

பூமியின் கூற்றைக் கேட்ட அசோக் ஆகாஷை பார்க்க, “ஆமா டா… எனக்கு பதிலா பூமி தான் ப்ரெசென்ட் பண்ண போறா…” என்றான் ஆகாஷ்.

“இது எவ்ளோ தூரம் சரி வரும்னு எனக்கு தெரியல மச்சான்… என்ன தான் உன் ப்ரொஜெக்ட்ட பத்தி நீ முன்னாடியே அவளுக்கு சொல்லிக் குடுத்தாலும், அங்க ஆன்-ஸ்பாட்ல அவங்க கேக்குற கேள்விக்கு பதில் தெரியலைனா அதுவே ஒரு பிளாக் மார்க் ஆகிடும்ல…” என்றான் அசோக்.

“ஆனா இப்போ நமக்கு வேற வழி இல்ல மச்சான்… ப்ரொஜெக்ட் விஷயத்த நான் பாத்துக்குறேன்… அவளுக்கு நம்ம ஆஃபிஸ் புதுசு டா… சோ நீ தான் அவள அங்க பாத்துக்கணும்…”

‘என்னாது நான் பாத்துக்கணுமா…’ என்று யோசித்தவன் எச்சிலை விழுங்கியவாறு அவளிருக்கும் திசை நோக்கித் திரும்ப, அங்கு பூமியோ இவனை பாவமாக பார்த்து வைத்தாள்.

‘இப்போ சாதுவா இருக்கா… நம்மள திட்டுறப்போ மட்டும் சொர்ணாக்காவா மாறிடுறாளே… அது எப்படி…’ என்று மனதிற்குள் புலம்பினான்.

“டேய் அசோக்… எந்த உலகத்துல டா இருக்க… நான் சொன்னது காதுல விழுந்துச்சா… நீ தான் அவள ஆஃபிஸ்ல பாத்துக்கணும்… என்ன ஓகேவா…” என்று மீண்டும் அழுத்திக் கூறினான்.

“இப்போ நான் இல்லன்னு சொன்னா மட்டும் விட்டுடவா போறீங்க…” என்று பெருமூச்சு விட, “ நீ தான் தைரியமான ஆளாச்சே… சொல்லித்தான் பாரு…” என்று பூமி கவுண்டர் கொடுக்க, அடுத்த கால் மணி நேரம் கலகலப்பாகவே சென்றது.

“ஆமா அப்போவே கேக்கணும்னு நெனச்சேன்… மெசேஜ் பண்ணி பத்து நிமிஷம் தான் ஆச்சு… அதுக்குள்ள எப்படி டா வந்த…” என்று ஆகாஷ் கேட்க, அதற்கு கேவலமான சிரிப்பொன்றை சிறிது விட்டு, “அது மச்சான்… இன்னைக்கு அந்த குடுமி மண்டை வரல… நீயும் லீவா… அதான் போர் அடிச்சது… சரி வெளிய போலாம்னு கிளம்புன நேரம் , நீ மெசேஜ் பண்ணியா, உடனே நண்பன் தான் முக்கியம்னு உன்ன பாக்க வந்துட்டேன்…” என்றான் அசோக்.

“இதுக்கு வெட்டியா இருந்தேன்னு ஒரே வரில முடிச்சுருக்கலாம்…” என்று தலையிலடித்துக் கொண்டாள் பூமி.

“மச்சான்… பூமி நம்ம ஆஃபிஸ் வந்துட்டா, நீ என்ன பண்ணுவ…” என்று அசோக் கேட்க, “அவளோட ஆஃபிஸுக்கு அவளுக்கு பதிலா போகணும்…” என்று யோசனையுடன் கூறிக் கொண்டே பூமியைக் கண்டான்.

“ஹ்ம்ம் அப்போ உனக்கும் இவன மாதிரி ஒரு ஆளு வேணும்ல… என் பிரெண்ட கூப்பிடுறேன்… அவ உனக்கு ஹெல்ப் பண்ணுவா…” என்றாள் பூமி.

பூமி, ‘பிரென்ட்’ என்றதும் கண்கள் ஒளிர அமர்ந்திருந்த அசோக்கை கண்ட பூமி, “ஆமா உன் பிரென்ட் வந்த வேலை தான் முடிஞ்சுருச்சே கிளம்ப வேண்டியது தான….” என்று ஆகாஷிடம் கூறுவது போல் சத்தமாகக் கூறினாள்.

ஆகாஷும் அசோக்கை பார்க்க, ‘அச்சச்சோ நம்மள பேக்-அப் பண்ணிடுவாங்களோ… ‘ என்று மனதிற்குள் பயந்த அசோக், “அது… வந்து… ஹான்… என் மச்சான் எப்படி தனியா ஹாண்டில் பண்ணுவான்… உங்க பிரெண்டு வந்ததுக்கு அப்பறம், என் மச்சான பத்திரமா பாத்துக்க சொல்லிட்டு நான் கிளம்புறேன்…” என்று ஏதோ கூறி (உளறி) சமாளித்தான்.

“அதெல்லாம் நாங்க பாத்துக்குறோம்… இவரு மச்சான் குட்டி பாப்பா… எப்படி ஹாண்டில் பண்றதுன்னு தெரியாதாம்…” என்று வாய் விட்டே கூறினாள் பூமி.

“இல்ல அது…” என்று அவன் மீண்டும் இழுக்க, “கத்திக்கு மறுபடியும் வேலை வங்துடும் போலயே…” என்று பூமி கூறவும், “நான் கிளம்பிட்டேன் மச்சான்…” என்று அசோக் அவசர அவசரமாக கிளம்பினான்.

அதை சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தவர்கள், அவன் கிளம்பியதும், பூமியின் தோழி ரூபாவிற்கு அழைத்து அவர்களின் நிலை பற்றி விளக்கினர்.

முதலில் அதை நம்ப மறுத்த ரூபாவை சரிகட்டினர் இருவரும். பின் அவளும் உதவுவதாகக் கூற, அன்றைய நாளின் பெரும் பணியை முடித்த அலுப்பில் இருந்தனர் இருவரும்.

முன்னிரவில் பூமியை அழைத்த ஆகாஷ், அவனின் ப்ரொஜெக்ட் பற்றி விளக்குவதாகக் கூற, “ஹே ஸ்கை ஹை என்ன இன்னிக்கேவா… நாளைக்கு பாக்கலாம்…” என்று சோம்பலாகக் கூறினாள் பூமி.

“என்னாது நாளைக்கு பாக்கலாமா… நானே இன்னும் ரெண்டு நாள் தான் இருக்குன்னு டென்ஷன்ல இருக்கேன்… க்ளோபு இந்த ப்ரொஜெக்ட்ல தான் என் கரியரே இருக்கு…” என்று ஆகாஷ் புலம்ப ஆரம்பிக்க, “ஸ்ஸ்ஸ் போதும் போதும் இதுக்கு உன் ப்ரொஜெக்ட்டையே கேக்கலாம்…” என்று சலித்துக் கொண்டாள் பூமி.

அதன் பின் அவர்களின் நேரம், கலந்துரையாடலிலேயே சென்றது. பூமிக்கு அனைத்தும் புதிதாக இருந்தாலும், இத்துறை மீது அவளுக்கிருந்த பற்றினால், அவளும் ஆர்வமாகவே ஆகாஷ் கூறுவதை கவனித்தாள். இடையிடையே அவளுக்கிருந்த சந்தேகங்களையும் கேட்டாள். இவ்வாறு அவர்களின் இரவு கழிய, அவர்களுக்கிருந்த களைப்பினால், அந்த சோஃபாவிலேயே ஆளுக்கொரு புறம் படுத்து விட்டனர்.

 

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!