நீயாக நான், நானாக நீ

eiIWKN63899-496bbb0b

 

அத்தியாயம் 8

அன்றைய இரவு ஆகாஷ் தீவிரமாக திட்ட விளக்கக்காட்சிக்காக உழைத்துக் கொண்டிருந்தான். சூழ்நிலையின் தீவிரத்தை புரிந்த பூமி கூட ஆகாஷிற்கு அவளால் முடிந்த உதவியை செய்து கொண்டிருந்தாள். நடு ஜாமத்தில் பூமிக்கு தூக்கத்தில் கண்கள் சொருக, தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

அவளைக் கவனித்த ஆகாஷ், “ஹே க்ளோபு உள்ள போய் தூங்கு டி…” என்றான்.

“ஆவ்… இல்ல இல்ல நான் தூங்கல… உனக்கு ஏதாவது ஹெல்ப் வேணும்னா கேளு…” என்றாள்.

ஆனால் அடுத்த ஐந்து நிமிடங்களில், அமர்ந்தபடியே உறங்கியிருந்தாள். அவளைக் கண்டு சிரித்தவன், அவளை வசதியாக படுக்க வைத்து, தன் வேலையைத் தொடர்ந்தான்.வேலை முடிந்ததும், அப்படியே கண்ணயர்ந்து விட்டான். அவர்கள் சோஃபாவில் உறங்கும் இரண்டாவது இரவானது அது…

மறுநாள் காலை இருவரும் படப்படப்புடனே இருந்தனர். கிளம்பும்முன் அவளிற்கு ஒருமுறை அனைத்தையும் கூறியவன், ஒரு ‘ஆல் தி பெஸ்ட்’டுடன் வழியனுப்பி வைத்தான்.

பூமி அலுவலகம் செல்லும் வழியெல்லாம் பதட்டமாகவே காணப்பட்டாள். அசோக் கூட, ‘நல்ல வேள ப்ரெசென்டேஷன் பண்ணப் போற டென்ஷன்ல நம்மள மறந்துட்டா…’ என்று மகிழ்ந்து கொண்டே வண்டி ஓட்டினான்.

முதல் நாள் கூறியது போல், அந்த குடுமி மண்டையன் வந்தவுடன் பூமியை அழைத்தார். பூமியும் சற்று பயத்துடனே செல்ல, அவளின் முன் வந்த அசோக் தன் முப்பத்திரண்டு பற்களையும் காட்டியபடி, “ஆல் தி பெஸ்ட், பூமி” என்றான்.

அதுவரை பதட்டத்தில் இருந்த பூமி, அசோக்கை முறைத்துவிட்டு அறைக்குள் சென்றாள்.

என்ன தான் ஆகாஷ் பூமிக்கு சொல்லி அனுப்பியிருந்தாலும், முதல் முறை என்பதால் சற்று சொதப்பினாள்.

“இது தான் நீங்க பக்காவா ரெடி பண்ண லட்சணமா, ஆகாஷ். இதே மாதிரி நாளைக்கும் சொதப்புனீங்கனா, க்ளைன்ட் முன்னாடி எவ்ளோ அசிங்கமா இருக்கும்… இதே மாதிரி உங்க பெர்ஃபார்மன்ஸ் இருந்துச்சுன்னா உங்க ப்ரோமோஷன்ல தான் கைவைக்க வேண்டியது வரும்” என்று அந்த குடுமி திட்டும்போதே யாரோ அறைக்கதவை தட்ட, அவர்களுக்கு அனுமதி அளித்தார் மிஸ்டர். குடுமி.

அங்கு ஒரு பெண் அழுது கொண்டே உள்ளே வர, அதுவரை ‘இஞ்சி தின்ற குரங்கு’ போல் முகத்தை வைத்திருந்தவர், அப்பெண் நுழைந்ததும் நொடியில் முகத்தை சீர்படுத்திக் கொண்டார்.

“ஹே சாரா, வாட்ஸ் தி ப்ராப்ளம்… எதுக்கு அழுகுற…”

“சாரி சார்… க்ளைன்டுக்கு அனுப்புன மெயில்ல ஒரு தப்பு நடந்துடுச்சு…” என்று அந்த தவறை விளக்க, அதைக் கேட்டுக் கொண்டிருந்த பூமியோ, ‘அச்சோ இவ்ளோ பெரிய மிஸ்டேக்… இங்க சொதப்புனதுக்கே இந்த காண்டாமிருகம் இவ்ளோ திட்டுச்சு… இந்த பொண்ணு என்ன ஆகப் போகுதோ…’ என்று வருந்த, அதற்கு நேர்மாறாக, “சாரா இது சின்ன மிஸ்டேக் தான் மா… ஐ வில் டேக் கேர்… நீ எதுக்கும் பயப்படாத…”என்று அப்பெண்ணிற்கு ஆறுதல் அளித்துக் கொண்டிருந்தார் குடுமி.

அதை கண்கள் தெறித்து விடுமளவிற்கு பார்த்த பூமி, “அட பக்கி… இப்படி வழியுறான்…’ என்று இன்னும் பல கெட்ட வார்த்தைகளால் குடுமியை காய்ச்சிக் கொண்டிருந்தாள் பூமி. இதற்கு முன் இப்படியான நிகழ்வுகளை அவள் செவிவழியாக கேட்டிருக்கிறாள். ஆனால் இப்போது தான் சொந்த அனுபவத்தில் (!!!) தெரிந்து கொள்கிறாள்.

அப்பெண்ணை அங்கிருந்து அனுப்பி வைத்தவர், மீண்டும் கடூப்ஸ் ரோலுக்கு திரும்பி, “இன்னும் என்ன இங்கேயே நின்னுட்டு இருக்கீங்க… நாளைக்காவது நல்லபடியா ப்ரெசென்ட் பண்ணுங்க…” என்றார்.

அவரை முறைத்துக் கொண்டு வெளியே வந்தாள் பூமி. முதலில் அவர் திட்டியபோது தன்மேல் குற்றம் இருப்பதால், தன்னைத் தானே தேற்றிக் கொண்டாள். ஆனால் இறுதியாக நடந்த செயலை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

அதே எரிச்சலில் வந்தவள் சற்று தள்ளி நடந்த சம்பாஷனையில் தேங்கினாள்.

“எப்படி டி இவ்ளோ சீக்கிரமா வெளிய வந்த… அந்த ஜொள்ஸ் அதுக்குள்ளயும் சமாதானம் ஆகிட்டானா…”

“என் பெர்ஃபார்மன்ஸ் அப்படி ரெண்டு சொட்டு கண்ணீர் தான்… அந்த ஆளு ஃபிளாட்…” என்று கூறி சத்தமாக சிரித்தாள் அவள், சற்றுமுன் குடுமியிடம் கண்ணீர் நாடகத்தை நடத்தியவள்.

“ஆனா இந்த ஆகாஷ் தான் பாவம்… நான் போனப்போ அந்த ஆளு அவன திட்டிட்டு இருந்தாரு… ப்ரொமோஷன்ல கை வைப்பேன்னு பேசிட்டு இருந்தாரு…” என்று அப்பெண் கூற, மற்றொருத்தி, “இந்த ஆஃபிஸ்லயே அவன் தான் ரொம்ப சின்சியர்… நியாயமா பார்த்தா, அவனுக்கு தான் ப்ரொமோஷன் தேடி வரணும்… ஆனா நமக்கு வருது…” என்று சிரித்தாள்.

“அது தான் நம்ம பொண்ணா இருக்குறதுக்கான அட்வான்டேஜ் டி…”

பூமிக்கு தான் இந்த பேச்சுக்கள் அருவருப்பாக இருந்தன. ‘சீ… பொண்ணா இதுங்க…’ என்று அங்கிருந்து நகர்ந்தாள்.

அதற்குள் ஆகாஷின் விஷயம் ஆஃபிஸிற்குள் பரவியிருக்க, பூமி சென்றதும் ஆளாளுக்கு வந்து, “விடு மச்சான் அந்த ஆள பத்தி தெரியும்ல…” என்று ஆறுதல் சொல்கிறேன் என்று மேலும் ரணத்தைக் கீறினர்.

அசோக் தான், “எல்லாரும் போய் அவங்கவங்க வேலைய பாருங்க…” என்று அவர்களை அனுப்பி வைத்தான்.

“ஃபர்ஸ்ட் ரிலாக்ஸ் பண்ணு பூமி…” என்று தண்ணீரை அவளிடம் தந்தான். பின் பூமியே உள்ளே நடந்ததை அவனிடம் கூறினாள்.

“இப்படி ஒரு மேனேஜர்… அப்பறம் அந்த பொண்ணுங்க… ச்சே டிஸ்கஸ்டிங்… நான் பண்ணது தப்பு தான் இல்லன்னு சொல்லல… ஆனா என்ன ட்ரீட் பண்ணதுக்கும் அந்த பொண்ண ட்ரீட் பண்ணதுக்கும் எவ்ளோ வித்தியாசம்…” என்று அவளின் மனக்குமுறலைக் கூறினாள்.

“இது எல்லா இடத்துலயும் நடக்குறது தான், பூமி. சில பொண்ணுங்க வேற வழியில்லாம இந்த மாதிரி தொந்தரவுக்கு ஆளாகுறாங்க… சிலர் குறுக்கு வழில சம்பாதிக்கணும்னு இப்படி பண்றாங்க… ப்ச் விடு.. நீ அத பத்தி யோசிக்காம ரிலாக்ஸா இரு…” என்றான் அசோக்.

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே மிஸ்டர். குடுமி வெளியே செல்ல, “வந்த வேலை முடிஞ்சுதுன்னு கிளம்பிட்டான் பாரு… ஒரு நாள் என் கைல சிக்கட்டும் அன்னைக்கு அந்த குடுமிய வெட்டிடுறேன்…” என்று அசோக் கூற, பூமிக்கும் லேசாக சிரிப்பு வந்தது.

ஆனால் சற்று நேரத்தில், எல்லாரும் அவளைப் பார்த்து பரிதாபப்படுவது போல் தோன்ற, அசோக்கிடம் வீட்டிற்கு செல்வதாகக் கூறினாள்.

அவளின் நிலையை புரிந்து கொண்டவன், “நான் ட்ராப் பண்ணவா…” என்று கேட்டான்.

“இல்ல நான் கேப் புக் பண்ணி போயிடுறேன்…” என்று கூறி அங்கிருந்து வெளியே வந்தாள்.

*****

ஆகாஷின் அன்றைய நாள், வழக்கம் போல் கேலி கிண்டலுடன் ஆரம்பித்தது. ஆனால் அவனின் மனம் தான் அதில் ஒன்ற முடியாமல், பூமியையும் ப்ரெசென்டேஷனையும் சுற்றிக் கொண்டிருந்தது.

அப்போது அசோக் அவனிற்கு அழைத்து அங்கு நடந்ததைக் கூறினான். பூமி வீட்டிற்கு சென்று விட்டாள் என்பதை அறிந்தவன், அவனும் வீட்டிற்கு கிளம்ப ஆயத்தமானான்.

ஏனெனில், அவனிற்கு நன்கு தெரியும், வீட்டிற்குள்ளேயே செல்லமாக வளர்க்கப்பட்ட அவள் இப்படிப்பட்ட சூழ்நிலையை இதுவரை எதிர்கொண்டிருக்க வாய்ப்பில்லை. அதிலிருந்து வெளிவர அவளிற்கு ஆறுதலாக யாராவது அருகே இருக்க வேண்டும் என்பதையும் அவன் அறிவான். அதனாலேயே அவன் சீக்கிரமாக கிளம்பினான்.

பயிற்சியாளரிடம் அவனிற்கு உடம்பு சரியில்லை என்று கூறியவன் அரை நாள் விடுப்பு கோரினான். அவரோ, அன்றைய நாள் பயிற்சியை முடித்துவிட்டு தான் செல்ல வேண்டுமென்று கூற, ஆகாஷ் அனைத்தையும் முடித்து விட்டதாகக் கூறி அதன் முடிவுகளையும் அவரிடம் காட்டிவிட்டு வெளியே வந்தான். அந்த பயிற்சியாளரோ எப்படி அவள்(ன்) முடித்திருப்பான் என்று ஆச்சரியமாகப் பார்த்தார்.

அவர் மட்டுமல்ல அவளி(னி)ன் தோழிகளும் கூட. செல்லும்முன் ரூபாவிடம் ஏதோ சைகை செய்துவிட்டு சென்றதைக் கண்டவர்கள், “என்ன அவ உங்கிட்ட மட்டும் ஏதோ சொல்லிட்டு போறா…” என்று அவளிடம் நச்சரிக்க, “ஆகாஷ் அண்ணாவுக்கு உடம்பு முடியலன்னு போறா…” என்று கூறி சமாளித்தாள் ரூபா.

*****

வீடு வந்து சேர்ந்த பூமிக்கு தலை வலிக்க, அப்படியே சோஃபாவில் சாய்ந்து விட்டாள். ஆகாஷ் அவனிடமிருந்த சாவியைக் கொண்டு கதவைத் திறக்கும் சத்தத்தில் ஒற்றைக் கண்ணைத் திறந்து பார்த்தவளிற்கு, அவனின் வரவு சற்று ஆறுதலாகவே இருந்தது.

ஆகாஷும் நடந்ததைப் பற்றி வினவாமல், “சாப்பிட்டியா…” என்றான். பூமி சோர்வாக இல்லை என தலையசைத்தாள்.

“சரி வா சாப்பிடலாம்…” என்று ஆகாஷ் கூற, பூமியோ உதட்டைப் பிதுக்கி, வேண்டாம் என்று தலையசைத்தாள். ஆகாஷிற்கு சிறு வயதில், தப்பு செய்துவிட்டு உதட்டைப் பிதுக்கும் பூமி போலவே காட்சியளித்தாள்.

உதட்டோரம் மெல்லிய புன்னகை பூக்க, அதை அவளிற்கு தெரியாமல் மறைத்தவன், அவளருகே அமர்ந்து, “உனக்கு இப்போ என்ன பிரச்சனை…” என்று கேட்கவும், அவ்வளவு நேரம் மனதில் வைத்து அழுத்தியதெல்லாம் அருவி போல் கொட்டினாள்.

ஆகாஷும் அமைதியாக அவள் கூறுவதைக் கேட்டான். அவள் அனைத்தையும் கூறி முடித்ததும், “இப்போ ஒரு டீப் பிரெத் எடு…” என்றான், ஆகாஷ்.

‘இவன் என்ன லூசா… எவ்ளோ எமோஷனலா சொல்லிருக்கேன்… இப்போ வந்து மூச்சு பயிற்சிக்கு இன்ஸ்ட்ரக்ஷன் குடுத்துட்டு இருக்கான்…’ என்று மனதிற்குள் திட்டியவள், அவனை முறைக்க, “ட்ரஸ்ட் மீ பூமி… கண்ண மூடிட்டு மூச்ச இழுத்து விடு…” என்றான்.

பூமியும் கண்களை மூடிக்கொள்ள, “இப்போ மூச்ச விடுறப்போ, உன் மனசுல இருக்க எரிச்சலும் அதோட வெளிய போற மாதிரி ஃபீல் பண்ணு…” என்றான். அவளும் அவ்வாறே செய்ய, “இப்போ கண்ண திற… ஹவ் டூ யூ ஃபீல் நவ்..?” என்றான்.

“ம்ம்ம் குட்… முன்னாடி இருந்த டென்ஷன் இல்ல… இப்போ மனசு கொஞ்சம் அமைதியா இருக்கு…”

“குட்… இப்போ நீ சொன்ன விஷயத்துக்கு வருவோம்… நீ வேலைக்கு வந்து ரெண்டு மாசம் தான் ஆகுது… அதுவும் ட்ரைனிங் பீரியட்ல தான் இருக்க… அதான் இந்த மாதிரி விஷயத்துக்கு டென்ஷன் ஆகுற… இது மாதிரி சிஷுவேஷன் நாளைக்கு உனக்கே ஏற்படலாம்… அப்போ எப்படி ரியாக்ட் பண்ணுவங்கிறதுக்கான அனுபவமா இத எடுத்துக்கோ…” என்று பேசி பேசியே அவளை இயல்பாக்கினான்.

“என்ன இப்போ ஓகேவா…” என்று ஆகாஷ் கேட்டதும், “ம்ம்ம் ஓகே… ரொம்ப ஓவரா ரியாக்ட் பண்ணிடேனோ…” என்றாள் பூமி.

“கொஞ்சம்… நான் கூட இந்நேரம் அந்த குடுமிய தலைகீழா தொங்க விட்டுருப்பன்னு நெனச்சேன்… ஆனா மேடம் வீட்டுல தான் புலி, வெளிய எலி தான் நிரூபிச்சுட்டீங்க…” என்று கிண்டல் செய்ய, அவனைத் துரத்திக் கொண்டு ஓடினாள்.

ஒருவழியாக அவர்களின் அடிதடி சண்டையெல்லாம் முடிந்த பின்னர், “உனக்கு கிளாஸ் எடுத்தே என் எனர்ஜி காலியாகிருச்சு… நான் போய் ஏதாவது சமைக்குறேன்…” என்றான்.

“ஹே இரு நானும் வரேன்…” என்று பூமி கூற, “எம்மா தாயே… பத்து விசில் நூடுல்ஸ்லா என்னால சாப்பிட முடியாது…” என்று கூறி மீண்டும் சண்டையை ஆரம்பித்து வைத்தான். அதன்பின் சண்டை கொஞ்சம், சமாதானம் கொஞ்சம், சமையல் கொஞ்சம் என்று அவர்களின் நேரம் சென்றது.

இரவில் மீண்டும் பதட்டமாக காணப்பட்டவளைக் கண்ட ஆகாஷ், “எதுக்கு இப்போ மறுபடியும் டென்ஷன்…” என்றான்.

“தெரியல… நாளைக்கு திரும்ப சொதப்பிட்டா, உன் ப்ரோமோஷன்…” என்று பூமி இழுக்க, “இதான் உன் டென்ஷனுக்கான காரணம்… அதப்பத்தி எதுவும் யோசிக்காம நீ ப்ரெசென்ட் பண்ணாலே சொதப்பாம பண்ணுவ… தேவையில்லாம நீ தான் டென்ஷன உன் தலையில ஏத்திக்குற…” என்று கூறி அவளை தெளிவு படுத்தினான்.

“ம்ம்ம் சரி தான்… தேங்க்ஸ்…” என்று ஆகாஷிடம் பூமி கூற, “அட க்ளோபு தேங்க்ஸ்லா சொல்ற… நீ உண்மையிலேயே என் க்ளோபு தான…” என்று வம்பிழுத்து சண்டை போட்ட பின்பே அவளை உறங்க அனுமதித்தான். அவர்களின் சண்டையில் அவன் கூறிய ‘என் க்ளோபு’ என்பதை இருவருமே கவனிக்கவில்லை.

இருவருமே கட்டிலில் படுத்து அன்றைய நிகழ்வுகளை நினைத்துப் பார்த்தனர். ‘கருவாயன் அவ்ளோ மோசம் இல்ல… கொஞ்சமே கொஞ்சம் குட் பாய் தான் போல…’ என்று நினைத்த பூமி, சிரித்துக் கொண்டே உறங்கிப் போனாள்.

‘இன்னிக்கு குட்டி பூமிய மறுபடியும் பார்த்த மாதிரி இருந்துச்சு… ஹாஹா அதே அழுமூஞ்சி டி நீ…’ என்று நினைத்தவனும் உறங்க ஆரம்பித்தான்.

இருவரும் அவர்களை அறியாமலேயே மற்றவர்களை நெருங்கியிருந்தனர்… இது உடல் மாற்றத்தால் உண்டான நெருக்கமா… இல்லை உள்ளப் பரிமாற்றத்தால் உண்டான நெருக்கமா… அவர்களுக்கே வெளிச்சம்…

*****

காலையில் அதே மலர்ச்சியுடன் எழுந்தவர்கள், அவரவர்களின் பணியிடம் நோக்கிக் கிளம்பினர். செல்லுமுன் பூமி, “உன் ப்ரோமோஷனோட வரேன்…” என்று கூற, ஆகாஷும் அவளை வாழ்த்தி அனுப்பினான்.

என்ன தான் நம்பிக்கையுடன் கிளம்பி வந்தாலும், அலுவலகத்திற்கு வந்த பின் சற்று படப்படத்தாள், பூமி. ஆகாஷிற்கு அழைக்கலாமா வேண்டாமா என்று குழம்பிக் கொண்டிருந்தவளின் கவனத்தை அவளின் அலைபேசி ஒலி ஈர்க்க, அதில் தெரிந்த ஆகாஷின் பெயரை பார்த்து, அவளின் இதழ்கள் தானாக விரிந்தன.

அழைப்பை ஏற்றவள், வேண்டுமென்றே வேலை இருப்பது போல் காட்டிக்கொள்ள, அவனும் சாதரணாமாக பேசிவிட்டு வைத்து விட்டான். ஆனால் அவனிடம் பேசிய பின்னரே சற்று இயல்பாக இருந்தாள் பூமி.

அதே உற்சாகத்தோடு விளக்கப்படக் காட்சியை முடித்தாள். வாடிக்கையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு கூட சரியாக பதிலளித்தவளை ஆச்சரியமாக நோக்கினார் மிஸ்டர். குடுமி. அவர்கள் பூமியை பாராட்ட, மிஸ்டர். குடுமி தான் அனலில் சிக்கிய அண்டங்காக்கா போல் முகம் கறுத்துப் போனார்.

“வீ ஆர் ஹாப்பி வித் யுவர் ப்ரெசென்டேஷன் மிஸ்டர். ஆகாஷ். கிளாட் டு டூ திஸ் ப்ரொஜெக்ட் வித் யூ…” என்று அவர்கள் பாராட்ட, மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தாள் பூமி. அவர்களின் பாராட்டிலேயே ஆகாஷின் பதவி உயர்வு உறுதியானது.

அவள் வெளியே வந்ததும், அனைவரும் அவளை வாழ்த்த, சிறு சிரிப்புடன் அதை ஏற்றாள்.

“பூமி கங்கிராட்ஸ்… அந்த குடுமி மண்டையன் மூஞ்சிய பார்க்கணும்… கடுகடுன்னு இருக்கான்…” என்று பூமியின் காதருகே கூறினான் அசோக். அதில் அவளும் சிரிக்க, இருவரும் ஹை-ஃபை அடித்துக் கொண்டனர்.

இதை ஆகாஷிற்கு தெரிவிக்கலாம் என்று அழைத்தால், அவன் எடுக்க வில்லை. வீட்டிற்கு வந்தும் அழைத்து விட்டாள். அப்போதும் அவன் எடுக்க வில்லை.

‘ஏன் இன்னிக்கு இவ்ளோ லேட்டாகுது…’ என்று அவள் யோசிக்கும்போதே, கதவு திறக்கும் சத்தம் கேட்க, உற்சாக மிகுதியில், ஓடிச் சென்று அவனை அணைத்து, “ஹே அஷு… உனக்கு ப்ரோமோஷன் ஓகே ஆகிடுச்சு…” என்றாள்.

நொடி நேரத்திற்கு பின்பே, அவளிருக்கும் நிலை உணர்ந்தவள், அதிர்ச்சி பாதி வெட்கம் மீதியென கலவையான உணர்வுகளில் சிக்கித் தவித்து, அவனை விட்டு விலகினாள்.

ஆனால் ஆகாஷோ அதையெல்லாம் உணராமல், வேறேதோ யோசனையில் முகம் சிவக்க நின்றிருந்தான்…. அது கோபத்திலா… இல்லை வெட்கத்திலா…

 

தொடரும்…