நீயின்றி நானுமே நீரின்றி மேகமே – 09

eiPONP961496-a79f1f0f

கிருஷ்ணா வீட்டை விட்டுச் சென்றதிலிருந்து வள்ளியினால் எந்தவொரு வேலையையும் செய்யவே முடியவில்லை, திரும்பும் புறமெல்லாம் தன் மகனின் முகமே தெரிவது போலிருக்க ஒவ்வொரு நொடியும் அவனை எண்ணி அழுதபடியே அண்ணம்,தண்ணீர் எதையும் தொடாமல் அவனது புகைப்படத்தை அணைத்துக் கொண்டபடி வீட்டின் ஒரு மூலையில் முடங்கிக் கிடந்தார்.

மூர்த்தி மற்றும் தர்ஷினி கூட அவரைப் பலதடவை எழுந்து வரும்படி வற்புறுத்தி இருந்தும், அவரோ கிருஷ்ணா தன்னைத் தேடி நிச்சயமாக வருவான் என்று கூறிக்கொண்டு வாயில் கதவைப் பார்த்தபடியே தான் அமர்ந்திருந்த இடத்தில் அப்படியே அமர்ந்திருக்க, அவரின் வார்த்தையை மெய்யாக்குவது போல கிருஷ்ணா தன் வீட்டிற்குள் மறுபடியும் அடியெடுத்து வைத்திருந்தான்.

கிருஷ்ணாவைப் பார்த்த அடுத்த கணமே, “கிருஷ்ணா!” என்றவாறே தள்ளாடியபடி அவனருகில் ஓடி வந்த வள்ளி அவனை அணைத்துக் கொள்ள, அவனுக்குத் தான் பெரும் தர்மசங்கடமான நிலையாக அது அமைந்தது.

தன் தாயை அப்படியான ஒரு உடைந்து போன தோற்றத்தில் இதுநாள் வரை பார்த்திராத அந்த மகனின் உள்ளம் அவரை ஆறுதல் படுத்த முனைய, மறுபுறம் அனுராதாவிற்கும், அவளது பெற்றோரிருக்கும் அவர்கள் செய்ததாக சொன்ன காரியம் அவனது அந்த மனதை இறுகக் கட்டிப் போட்டு வைத்தது.

வள்ளி அழுது முடிக்கும் வரை அவரை ஆறுதல் படுத்தும் வகையில் எதையும் பேசாமல் நின்றவன் அவரது அழுகை மெல்ல மெல்ல குறைவதை உணர்ந்து கொண்டவனாக, அவரைத் தன்னை விட்டு மெல்ல விலக்கி நிறுத்தினான்.

“கிருஷ்ணா, அம்மா மேலே இன்னும் கோபமாகதான் இருக்கியா ராஜா?”

“நான் நம்மைப் பற்றி எதையும் பேசவிரும்பல, நான் மறுபடியும் இங்கே வந்தது அனுராதாவோட அம்மா, அப்பாவுக்கு நடந்த ஆக்சிடென்டைப் பற்றித் தெரிந்து கொள்ள”

“என்ன?” கிருஷ்ணாவின் பேச்சைக் கேட்டு அதிர்ச்சியான வள்ளி தன் தலையில் கை வைத்தபடியை முழங்காலிட்டு அமர்ந்து கொள்ள,

அவரின் முன்னால் அமர்ந்து கொண்ட கிருஷ்ணா, “சொல்லுங்க ம்மா, நீங்க அவங்களுக்கு எப்படி ஆக்சிடென்ட் பண்ணீங்க? மூணு வருஷமா அவங்களைப் பற்றி எந்தவொரு தகவலும் வெளியே வராமல் இருக்க நீங்க என்னவெல்லாம் பண்ணீங்களோ, அதை எல்லாம் என்கிட்ட ஒரு விஷயம் மறைக்காமல் சொல்லுங்க, ப்ளீஸ்” எனவும், கலங்கிய கண்களுடன் அவனை நிமிர்ந்து பார்த்தவர் தான் செய்த அந்த பெரும் தவற்றைப் பற்றி கண்ணீர் மல்க அவனிடம் சொல்லத் தொடங்கினார்.

“அனுராதாவோட உண்மை எல்லாம் எனக்குத் தெரிந்த பிறகு என்னால அவளோடும், தேவியோடும் சகஜமாகப் பேச முடியல கிருஷ்ணா, அதோடு அவங்க கூட நீ உரிமை எடுத்துப் பழகியதும் எனக்குப் பிடிக்கல, எப்படியாவது அவங்களை நம்ம வாழ்க்கையை விட்டு தூரமாக்கணும்ன்னு நினைத்தேன், ஆனா எப்படி இதையெல்லாம் பண்ணுறதுன்னு எனக்குத் தெரியல.
அப்போதான் எனக்கு ஒரு விபரீதமான யோசனை வந்தது, அவங்க உயிரோடு இருக்கும் வரைக்கும் உன்னையும், அவங்களையும் பிரிக்கிறது சாத்தியமில்லைன்னு எனக்குப் புரிஞ்சுது, நீ இங்கே இருந்தால் இதை எல்லாம் பண்ண விடமாட்டேன்னு எனக்குத் தெரியும், அந்தநேரத்தில்தான் உனக்கு சென்னையில் ஒரு பெரிய கம்பெனியில் வேலைக்காக இன்டர்வியூ வரச்சொல்லி இருந்தாங்க, அதேநேரத்தில்தான் அனுராதாவும், அவளோட அம்மா, அப்பாவும் ஒரு பிசினஸ் விஷயமாக வெளியூர் போக இருக்காங்கன்னு எனக்குத் தெரிய வந்தது, நல்ல வேளையாக அந்த விஷயத்தை அனுராதா உன்கிட்ட சொல்லி இருக்கல, கடைசி நிமிஷத்தில்தான் அவளும் அந்த பயணத்தில் போறதாக முடிவெடுத்து இருந்தா, இதெல்லாம் நான் அவங்க வீட்டுக்கு போயிருந்த நேரந்தான் எனக்குத் தெரிய வந்தது.
நீயும் ஊரில் இல்லை, அவங்களும் வெளியூர் போறாங்க, அதுவும் உனக்குத் தகவல் சொல்லாமல். அதுதான் சரியான சந்தர்ப்பம்ன்னு நினைத்து உங்க அப்பாவோட பணம் கொஞ்சம் இருந்ததைக் கொடுத்து அவங்க போகும் வழியிலேயே வைத்து ஆக்சிடென்ட் பண்ணச் சொல்லி ஒரு ஆளுக்கு பணம் கொடுத்தேன்”

“அவங்க எந்த ஊருக்கு போனாங்க?”

“ஊட்டிக்கு”

“அங்கே எங்கே?”

“அது எனக்கும் தெரியாது, ஊட்டிக்கு போவதற்கு முதல் ஒரு காட்டுப் பகுதி வரும், அங்கே தான்”

“இவ்வளவு கரெக்டா சொல்றீங்க, அப்படின்னா நீங்களும் அந்த இடத்தில் இருந்தீங்களா?” கிருஷ்ணாவின் கேள்வியில் தன் தலையைக் குனிந்து கொண்ட வள்ளி ஆமோதிப்பாக தலையசைக்க, அவனோ சலிப்புடன் தன் தலையில் கை வைத்துக் கொண்டான்.

“அப்போ உங்க கண்ணு முன்னாடியே அவங்களை ஆக்ஸிடென்ட் பண்ண வைத்திருக்கீங்க, அப்படித்தானே?”

“இல்லை, கிருஷ்ணா, அது…”

“வேண்டாம்மா, இன்னும் இன்னும் உங்க கதையைக் கேட்க எனக்கு சக்தியில்லை. நீங்க பண்ணது எவ்வளவு பெரிய தப்புன்னு உங்களுக்கு கொஞ்சம் கூட புரியலையா? நம்ம பண்ணுறது தப்புன்னு தெரிஞ்சும் அதைப்பற்றிக் கொஞ்சம் கூட கவலையில்லாமல் இத்தனை நாளாக என் முன்னாடி நீங்க ரொம்ப சாதாரணமாக நடந்திருக்கீங்க, அதுவும் எல்லாம் பக்கா பிளான். நீங்க ரொம்ப புத்திசாலிதான் ம்மா, நான் ஒத்துக்கிறேன்”

“கிருஷ்ணா, நான் பண்ணது தப்புன்னு ஒத்துக்கிறேன்பா, நான் பண்ணது மகாபாவம்தான், இரண்டு உயிரைப் பறிச்ச பாவி நான்தான், எனக்கு நீ என்ன தண்டனை வேணும்னாலும் கொடு, ஆனால் தயவுசெய்து என்னை விட்டுட்டுப் போயிடாதாப்பா. உன் காலில் வேணும்னாலும் விழுறேன்” என்றவாறே வள்ளி கிருஷ்ணாவின் காலில் விழப்போக சட்டென்று விலகிக் கொண்டவன்,

“நீங்க பண்ணது தப்புன்னு இப்போதாவது ஏற்றுக்கொள்ள மனது வந்ததே, அதுவரைக்கும் சந்தோஷம்தான், ஆனா மன்னிக்க வேண்டியது நானில்லை, அனுராதாதான்” என்று விட்டு, பின்னர் சட்டென்று ஏதோ நினைவு வந்தவனாக, “அந்த ஆக்சிடென்ட் நடந்த நேரம் தேவி ஆன்ட்டி அன்ட் ராஜா ஆங்கிள் உயிரோடுதான் இருந்தாங்களா?” என்று கேட்க, வள்ளி அவனைக் குழப்பத்துடன் நிமிர்ந்து பார்த்தார்.

“நீ என்ன கேட்குற கிருஷ்ணா? அவங்க எப்படி?”

“அவங்க போன அதே காரில்தானே ராதாவும் போனா, அவளுக்கு எதுவும் ஆகல இல்லையா? அதுதான் அவங்களுக்கும் எதுவும் ஆகியிருக்காதோன்னு கேட்டேன்”

“இல்லை, அவங்க உயிரோடு இருக்கமுடியாது”

“அது எப்படி இவ்வளவு உறுதியாக சொல்லுறீங்க?”

“அது வந்து, அது வந்து” வள்ளி தடுமாற்றத்துடன் கிருஷ்ணாவைப் பார்க்க,

அவனோ, “நீங்க இன்னும் எதையோ மறைக்குறீங்க, உண்மையை சொல்லுங்கம்மா, அவங்களுக்கு உண்மையாக என்ன நடந்தது?” சிறு அதட்டலுடன் அவரைப் பார்த்து வினவ, அவனது அதட்டலில் திடுக்கிட்டு அவனை நிமிர்ந்து பார்த்தவர் அன்றைய நாளின் தாக்கத்தில் தன் முகத்தை மூடிக் கொண்டு அழ ஆரம்பித்தார்.

“அன்னைக்கு கார் ஆக்சிடென்ட் ஆனதற்கு அப்புறம் ராதா காரிலிருந்து வெளியே வந்துட்டா, அவ என்னைப் பார்த்ததும் அவங்களை விட்டுடச் சொல்லி என் காலில் விழுந்து அழுதா, ஆனா நான்… நான் அவ பேச்சைக் கேட்காமல் அந்த வளைவான பாதையின் விளிம்பில் இருந்த அவங்க காரைப் பள்ளத்தில் தள்ள வைத்தேன், அந்த காரிற்குள்தான் தேவியும், அவளோட கணவனும் இருந்தாங்க, அவங்க அந்தக் காரிலேயே வைத்து எரிந்ததை நான் என் கண்ணாலேயே பார்த்தேன்” கிருஷ்ணாவின் முகத்தைப் பார்க்கத் துணிவின்றி தலைகுனிந்து அமர்ந்திருந்த வள்ளியின் தாடையை நிமிர்த்தியவன்,

“அப்போ அனுராதா?” என்று கேட்க,

சிறு தடுமாற்றத்துடன் தன் கைகளைப் பிரிப்பதும், கோர்ப்பதுமாக அமர்ந்திருந்தவர், “அவளையும் அந்தப் பள்ளத்தில்தான் தள்ளி” என்றவாறே தன் தலையைக் குனிந்து கொள்ள,

அவரை விட்டு விலகி எழுந்து நின்று கொண்டவன், “நீங்க எப்படிம்மா இவ்வளவு மோசமானவங்களா மாறுனீங்க?” என்று கேட்க, அவரோ அவனை நிமிர்ந்து பார்க்க துணிவின்றி மீண்டும் தன் தலையைக் குனிந்து கொண்டார்.

“நீங்க பண்ண தப்புக்கு எல்லாம் என்ன செய்து பிராயச்சித்தம் பண்ணப் போறீங்களோ சத்தியமாக எனக்குத் தெரியல, இப்படியே நீங்க அழுதுட்டு இருந்தால் மட்டும் அந்த நடந்த தப்பு இல்லைன்னு ஆகப் போவதும் இல்லை, அதனால இனிமேலாவது ஒரு மனிதனாக யோசித்து நடக்கப் பாருங்க. சாரி, சாரி, மனிதனாக யோசித்துதானே இவ்வளவு பெரிய பாவத்தை செய்திருக்கீங்க, உங்களை என்ன சொல்லுறதுன்னு கூட எனக்குத் தெரியலை, இதற்கு மேலும் இங்கே இருந்தால் நான் ஏதாவது கோபமாக உங்களைத் திட்டிடுவேன்னு பயமாக இருக்கு, நான் கிளம்புறேன்” என்றவாறே கிருஷ்ணா மறுபடியும் அவனது வீட்டை வெளியேறி செல்லப் போக,

“கிருஷ்ணா, போகாதே ப்பா. தயவுசெய்து இந்த அம்மாவை விட்டுப் போகாதேப்பா, நீ என்ன பண்ண சொன்னாலும் நான் கேட்கிறேன், தயவுசெய்து இங்கே இருந்து போயிடாதேப்பா” என்றவாறே வள்ளி அவன் பின்னால் தட்டுத்தடுமாறி ஓடி வர, ஒரு சில நிமிடங்கள் தான் நின்று கொண்டிருந்த இடத்திலேயே அசையாது நின்றவன் ஆழ்ந்த மூச்சுக்களை எடுத்து விட்டபடி அவரைத் திரும்பிப் பார்த்தான்.

“நான் என்ன சொன்னாலும் செய்வீங்களா?”

“கண்டிப்பாக செய்வேன் ப்பா, நீ என்ன வேணும்னாலும் சொல்லு, இப்போவே செய்றேன்”

“முதல்ல அடுத்தவங்களை பழி தீர்க்கும் எண்ணம் இல்லாத மனுஷனாக மாறுங்க” என்று விட்டு கிருஷ்ணா வள்ளியின் முகத்தை அழுத்தமாக ஒரு தடவை பார்த்து விட்டு வெளியேறி விட, அவரோ தான் நின்று கொண்டிருந்த இடத்திலேயே சிலையென உறைந்து நின்றார்.

தன் மகனுக்கு நல்லது செய்வதாக எண்ணி அவர் செய்திருந்த காரியம் இப்போது அவரை பாடாய்ப்படுத்த தன் கண்களிலிருந்து வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டபடி கிருஷ்ணா சென்ற வழியைப் பார்த்துக் கொண்டு நின்றவர் சில நொடிகள் சிந்தனைக்குப் பின்னர் உறுதியான ஒரு முடிவை எடுத்தவராக அவன் சென்ற பாதையிலேயே நடக்கத் தொடங்கினார்.

**********

கிருஷ்ணா ஊட்டி நகரை வந்து சேர்ந்து அன்றோடு முழுமையாக இரண்டு நாட்கள் நிறைவு பெற்றிருந்தது.

இந்த இரண்டு நாட்களில் அவன் தேடி வந்த விடயம் பற்றி அவனால் எந்தவொரு தகவலையும் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

தன் அன்னையிடம் அனுராதாவின் பெற்றோரின் விபத்து பற்றிய தகவல்களை எல்லாம் கேட்டறிந்து கொண்டவன் அங்கிருந்து நேராக புறப்பட்டுச் சென்றது பேருந்து நிறுத்தத்திற்குத்தான்.

தன் அலுவலகத்தில் இரண்டு வாரம் விடுமுறையை பெற்றுக் கொண்டவன் இந்த இரண்டு வாரத்திற்குள் அனுராதாவின் பெற்றோர் அவள் பேசிக்கொண்டிருந்தபடி உயிருடன் இருக்கிறார்களா, இல்லையா? என்பதை அறிந்து கொண்டே ஆகவேண்டும் என்கிற எண்ணத்தோடுதான் தன் பிரயாணத்தை ஆரம்பித்திருந்தான்.

தன் அன்னை சொன்ன தகவலை வைத்து விபத்து நடந்ததாக கூறப்பட்ட இடத்தை கண்டுபிடித்திருந்தவன் அந்த விபத்தைப் பற்றி பல பேரிடம் விசாரித்துப் பார்த்திருக்க, மனிதர்களுக்கு எல்லாம் இலவசமாக கொடுக்கப்பட்ட மறதி எனும் அன்பளிப்பு அவனது விசாரணைக்கான பதிலைக் கொடுக்க முடியாமல் செய்திருந்தது.

அந்தப் பகுதியில் வாரத்திற்கு ஒருமுறையாவது விபத்து நடந்து கொண்டேதான் இருக்கும் என்கிற நிலையில் மூன்று வருடங்களுக்கு முன்பு நடந்த விபத்தைப் பற்றி இன்னமும் அங்குள்ளவர்கள் நினைவு வைத்திருக்கக்கூடும் என்று தான் நினைத்து வந்தது பெரும் பேராசையோ என்று கூட சில தருணங்களில் கிருஷ்ணாவிற்குத் தோன்றும், இருந்தாலும் ஏதோ ஒரு மன உந்துதல் அவனுக்கு அங்கே அவன் நினைத்த காரியத்தை முடித்து வைக்கும் என்று அவனை உத்வேகப்படுத்திக் கொண்டே இருந்தது.

நாட்கள் வேறு காலில் சக்கரத்தைக் கட்டி விட்டது போல வெகுவேகமாக நகர்ந்து கொண்டிருக்க, கிருஷ்ணாவால் எந்தவொரு உண்மையான தகவல்களையும் கண்டறியமுடியவில்லை.

இதற்கிடையில் அனுராதா தன் வீட்டில் உள்ளவர்களிடம் எப்படி நடந்து கொள்கிறாளோ என்ற சிந்தனை வேறு அவனை வறுத்தியெடுக்க, ஒரு நிலைக்கு மேல் தான் நினைத்து வந்த வேலை முடியாது போலும் என்று நினைத்துக்கொண்டவன் நாளைய தினம் தன் ஊருக்கே திரும்பிச் சென்று விடலாம் என்கிற எண்ணத்துடன் தான் தங்கியிருந்த ஹோட்டல் அறையை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த வேளை, எங்கிருந்தோ மின்னல் போல வந்த ஒரு கார் அவனை மோதித்தள்ளப் பார்த்தது.

கண்ணிமைக்கும் நொடிக்குள் தன்னை சுதாரித்துக் கொண்டு அந்தப் பாதையை விட்டும் கிருஷ்ணா விலகிச் சென்றிருக்க, நல்ல வேளையாக அவனுக்கோ அந்த காரினுள் அமர்ந்திருந்த நபருக்கோ எந்தவொரு ஆபத்தும் ஏற்பட்டிருக்கவில்லை.

ஒரு சில கணங்கள் தன் கண்களை மூடி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவன் அந்த காரை நோக்கி நகர்ந்து சென்று அந்த காரின் கதவைத் திறக்க, அதற்குள் இருந்து ஒரு வயதான நபர் இறங்கி நின்றார்.

“சார், உங்களுக்கு எதுவும் ஆகல தானே? ஆர் யூ ஆல் ரைட்?” கிருஷ்ணாவின் கேள்விக்கு தன் நெற்றியை நீவி விட்டபடியே தனது உடையை சரி செய்து கொண்டு,

“ஐ யம் ஃபைன் தம்பி. சாரி, வேறு ஏதோ சிந்தனையில் என் கவனம் திசைமாறிடுச்சு, உங்களுக்கு எதுவும் இல்லை தானே?” என்றவாறே அவனை நிமிர்ந்து பார்த்தவர்,

அவனது முகத்தை உற்று நோக்கி விட்டு, “நீங்க கிருஷ்ணா தானே?” அதிர்ச்சியாக அவனைப் பார்த்து வினவினார்.

“ஆமா, நான் கிருஷ்ணாதான். என் பேரு எப்படி உங்களுக்குத் தெரியும்?”

“உங்க பேரு மட்டுமில்லை, உங்களைப் பற்றி எல்லா விடயமும் எனக்குத் தெரியும்”

“அப்படியா?ஆனா, எனக்கு உங்களைப் பார்த்த மாதிரி ஞாபகமே இல்லையே?”

“நீங்க பேசுவதைப் பார்த்தால் அனும்மா என்னைப் பற்றி உங்ககிட்ட ஒருவார்த்தை கூட சொல்லல போல இருக்கே?”

“அனும்மாவா?”

“ஓஹ், சாரி, நீங்க அவளை ராதான்னு தானே சொல்லுவீங்க, இல்லையா?”

“இதெல்லாம் உங்களுக்கு எப்படி? நீங்க யாரு?” கிருஷ்ணா குழப்பமும், அதிர்ச்சியும் ஒன்று சேர தன் முன்னால் நின்று கொண்டிருந்த நபரைப் பார்க்க,

சிறு புன்னகையுடன் அவனது தோளில் தன் கையைப் போட்டுக் கொண்டவர், “என்னோட பேரு ராமச்சந்திரன், ராதாவோட அப்பா” என்று கூற, அவனோ அவரை இன்னமும் அதிர்ந்து போனவனாக பார்த்துக் கொண்டு நின்றான்……