நீயின்றி நானுமே நீரின்றி மேகமே – 10

eiPONP961496-4f6ece18

தான் உள்நுழையும் இடம் மாளிகையா அல்லது வீடா என்று சிந்தித்தபடியே ராமச்சந்திரனைப் பின் தொடர்ந்து சென்ற கிருஷ்ணா அந்த வீட்டின் ஹாலில் நடுநாயகமாக மாட்டப்பட்டிருந்த அனுராதாவின் புகைப்படத்தைப் பார்த்து தன் நடையை நிறுத்திக் கொண்டான்.

கிருஷ்ணா தன் பின்னால் வருகின்றான் என்றெண்ணியபடி நடந்து சென்று கொண்டிருந்த ராமச்சந்திரன் திடீரென நிலவிய அமைதியில் திரும்பிப் பார்க்க, அங்கே கிருஷ்ணா அனுராதாவின் புகைப்படத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றான்.

“என்னாச்சு கிருஷ்ணா? எதற்காக அனுவோட படத்தை இப்படி முறைச்சுப் பார்க்கிற?”

“என்ன பண்ணுறது அங்கிள்? அவ செய்திருக்கும் வேலைக்கு இதை மட்டும்தான் என்னால் இப்போதைக்கு செய்ய முடியும்”

“கவலைப்படாதே கிருஷ்ணா, அவ இப்படி எல்லாம் பண்ணுவான்னு நான் கூட நினைத்துப் பார்க்கலதான். அவளோட அம்மா, அப்பாவோட இழப்புதான் அவளை இந்தளவிற்கு மாறச் செய்திருக்கிறது, ஆனா அவ மனதளவில் ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணு, அதேநேரம் அவளை பழையபடி மாற்றக்கூடிய சக்தியும், திறமையும் உன்கிட்டதான் இருக்குன்னு எனக்குத் தெரியும்” ராமச்சந்திரனின் கூற்றில் சிறு புன்னகையுடன் அவரைத் திரும்பிப் பார்த்தவன்,

“எனக்கு அந்த நம்பிக்கை சுத்தமாக இல்லை அங்கிள், என்னைத் திசை திருப்பி இங்கே அனுப்பி வைச்சுட்டு அங்கே அவ என் வீட்டு ஆளுங்களை என்ன பாடுபடுத்திட்டு இருக்காளோ தெரியலை. உங்களைச் சந்தித்து எல்லா விடயத்தையும் கேட்டதிலிருந்து எங்க வீட்டுக்கு கால் ட்ரை பண்ணிட்டே இருக்கேன், ஆனா லைனே போக மாட்டேங்குது, எனக்கு என்னவோ ரொம்ப பயமாக இருக்கு” எனவும்,

அவரோ, “நீ இன்னும் அவளை சரியாக புரிஞ்சுக்கல கிருஷ்ணா, அனுராதா இப்போ கோபக்காரியாக, பிடிவாதம் பிடிப்பவளாக உன் கண்ணுக்குத் தெரியலாம், ஆனா உண்மை அது இல்லை, அவ இப்போதும் அந்த குறும்புத்தனம் நிறைந்த அனுராதா தான், ஆனா என்ன உன் முன்னாடி ஒரு முகமூடி போட்டு தன்னைக் கெட்டவளாக காண்பிக்க முயற்சி பண்ணுறா” என்றவாறே அவனது தோளில் கையை போட்டுக் கொண்டு அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டார்.

“அதற்காக இப்படி ஒரு பொய்யை சொல்லணுமா அங்கிள்? ஒருவேளை இன்னைக்கு நான் உங்களை சந்தித்திருக்கலேன்னா இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி தெருத்தெருவாக அலைந்து திரிந்து இருப்பேனோ தெரியல, அவ அம்மா, அப்பாவுக்கு நடந்தது அநியாயந்தான், நான் இல்லைன்னு சொல்லல, அதற்கான தண்டனையை எனக்குக் கொடுக்கத்தானே சொல்லுறேன், அவளோட கோபத்தை தாங்கிக் கொள்ள நான் தயாராகத்தான் இருக்கேன். அவ எவ்வளவு திட்டினாலும், ஏன் அடித்தாலும் அதை எல்லாம் தாங்கிக் கொள்ள நான் தயார், அதற்கான ஆரம்பப்படியைக் கூட அன்னைக்கு செய்தா தானே?” அனுராதா தன்னிடம் இறுதியாக நடந்து கொண்ட விதத்தை எண்ணி கவலை கொண்டவனாக கிருஷ்ணா தன் கண்களை மூடிக் கொள்ள,

அவனது தோளை ஆதரவாக அழுத்திக் கொடுத்தவர், “நீ சொல்வது உனது பக்கமிருந்து பார்த்தால் நியாயமானதுதான் கிருஷ்ணா, ஆனா அனுவோட பக்கமிருந்து யோசித்துப் பாரு, ஒருவேளை அவ நிலைமையில் நீயிருந்தால் என்ன பண்ணியிருப்ப சொல்லு? உன் பழிவாங்கும் எண்ணம் முதலில் அனுராதாவைத்தான் தாக்கியிருக்கும், அதேநேரம் அவங்க குடும்பத்தை சும்மா விட்டுருப்பியா? இல்லைதானே?” என்று கேட்க, கிருஷ்ணா அவரது கேள்விக்கு பதில் சிந்தித்த வண்ணம் அமைதியாக அமர்ந்திருந்தான்.

“நம்ம ஒவ்வொருவரும் பிரச்சினைகளைப் பார்க்கும் விதம் ரொம்ப வித்தியாசமானது கிருஷ்ணா, அடுத்தவங்களுக்கு வரும் போது வேறு கோணத்தில் பார்ப்போம், அதேநேரம் நமக்கு வரும் போது வேறு ஒரு கோணத்தில் தான் பார்ப்போம், அதுதான் மனித இயல்பு. அதற்காக அனும்மா பண்ணுறது எல்லாம் நான் சரின்னு சொல்ல வரல, அவளோட கோபம் நூற்றுக்கு நூறு வீதம் நியாயமானது தான், ஆனா அவ தேர்ந்தெடுத்திருக்கும் வழி? அது சரியானதில்லை, அந்த வழியில் போக ரொம்ப தைரியம் வேணும், ஏன் சில சமயம் அந்த பாதை அவளோட உயிரைக் கூட பறிச்சுடலாம்” என்ற ராமச்சந்திரன் அதற்கு மேல் பேசமுடியாமல் அங்கிருந்து எழுந்து சென்று விட, கிருஷ்ணா அவரை மனம் நிறைந்த கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

“அனுராதா உன்னை எந்த ரகத்தில் சேர்த்துக் கொள்ளுறதுன்னு எனக்கு சுத்தமாக தெரியலை, ஒரு முறை யோசித்தால் உன் பக்கம் சரின்னு தோணுது, ஆனா அதேநேரம் இன்னொரு விதமாக யோசித்தால் நீ பண்ணுறது ரொம்ப ரொம்ப தப்பாகப்படுது, இதற்கு எல்லாம் என்ன முடிவு?” சுவற்றில் மாட்டப்பட்டிருந்த அனுராதாவின் புகைப்படத்தைப் பார்த்தபடியே அதனுடன் பேசிக்கொண்டு நின்றவன் தன் வீட்டினருக்கு மறுபடியும் அழைத்துப் பார்க்கலாம் என்றெண்ணிக் கொண்டு தன் தொலைபேசியை எடுக்கப்போக அப்போதுதான் ஏதோ ஒன்று அவனிடமிருந்து குறைவது போலத் தோன்றியது.

தன் பேண்ட் பாக்கெட்டின் இருபுறமும், தான் கொண்டு வந்த பையையும் வெகு நேரமாக ஆராய்ச்சி செய்தவன் தன் பர்ஸ் தொலைந்து விட்டதை உறுதிப்படுத்திக் கொண்டு, “பர்ஸை எங்கே மிஸ் பண்ணேன்னு தெரியலையே, ஒரு வேளை ராமச்சந்திரன் அங்கிளை சந்தித்த இடத்தில் தொலைச்சுட்டேனா? எதற்கும் ஒரு தடவை நேரில் போய் பார்த்து விட்டு வரலாம்” என்று தனக்குள் பேசியபடியே வாயில் வரை சென்றவன்,

‘அங்கிள் கிட்ட சொல்லிவிட்டு போகலாமா? இல்லை, பரவாயில்லை, அவர் ஏற்கனவே ரொம்ப கவலையில் இருக்காரு, கொஞ்ச நேரம் அவரு ஓய்வாக இருக்கட்டும், நாம சட்டுன்னு போயிட்டு சட்டுன்னு வந்துடலாம்’ என்றெண்ணிக் கொண்டு ஓட்டமும், நடையுமாக தான் ராமச்சந்திரனை சந்தித்த இடத்தை நோக்கி ஓடிச் செல்லத் தொடங்கினான்.

தான் ஓடிக் கொண்டிருந்த நேரத்தில் அவன் சிந்தனை முழுவதிலும் சிறிது நேரத்திற்கு முன்பு ராமச்சந்திரனை சந்தித்த தருணமே மீண்டும் மீண்டும் காட்சியாக தோன்றிக் கொண்டிருந்தது.

ராமச்சந்திரனின் அனுராதாவின் தந்தை என்கிற அறிமுகம் கிருஷ்ணாவை வெகுவாக அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்க, ஒரு சில நிமிடங்கள் அதை நம்பமுடியாமல் நின்று கொண்டிருந்தவன் ராமச்சந்திரனின் தொடுகையின் பின்னரே தன் சுயநினைவுக்கு வந்திருந்தான்.

“நீங்க ராதாவோட அப்பாவா? இது எப்படி சாத்தியம்? ராதாவோட அப்பாவை நான் சந்தித்திருக்கேனே, அவரோட முகம் இன்னமும் எனக்கு ஞாபகம் இருக்கு, ஆனா நீங்க எப்படி?”

“நீங்க யோசிப்பது சரிதான் தம்பி, நான் அனுராதாவோட வளர்ப்பு அப்பா, பெற்றெடுத்த அப்பா இல்லை”

“என்ன?” ராமச்சந்திரன் பேச்சு கிருஷ்ணாவை மேலும் மேலும் அதிர்ச்சியாக்குவது போலிருக்க, தன் தலையைப் பிடித்துக் கொண்டவன் அங்கிருந்த கற்குன்றில் அமர்ந்து கொண்டு அவரை நிமிர்ந்து பார்த்தான்.

“நீங்க ஒண்ணும் குழப்பமடைய தேவையில்லை தம்பி, நடந்ததை நான் தெளிவாக சொல்லுறேன். மூணு வருடத்திற்கு முன்னாடி இங்கே அனும்மா வந்திருந்த போது அவளோட அம்மா, அப்பா இரண்டு பேரும் ஆக்சிடென்டில் இறந்துட்டாங்க, அது எப்படி நடந்தது என்று உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன். அனுராதா காரில் இருக்காமல் வெளியே இருந்ததால் அவளுக்கு எந்த காயமும் ஏற்படல, இருந்தாலும் உங்களோட அம்மா அவளை அந்தக் காரைத் தள்ளிவிட்ட அதே பள்ளத்தில் தள்ளி விட்டுருக்காங்க, ஆனா அந்த கடவுளோட புண்ணியம் அவ விழுந்த பள்ளத்திலிருந்து அவளுக்கு எந்தவொரு ஆபத்தும் ஏற்படல, எப்படியோ தப்பிச்சு வந்துட்டா, அந்த உயிர் போகும் நிலைமையிலும் அவ உங்களைத் தான் பார்க்கணும்னு நினைச்சு உங்களைத் தேடி தென்காசி வந்திருக்கா, அங்கே நீங்களும், உங்க அம்மாவும் பேசிட்டிருந்ததைக் கேட்டு அவ ரொம்ப உடைஞ்சு போயிட்டா, யாரை நம்பியிருந்தோமோ அவங்களே இப்படி ஒரு துரோகத்தைப் பண்ணிட்டாங்கன்னு நினைச்சு போகும் இடம் தெரியாமல் மறுபடியும் ஊட்டிக்கு வந்திருக்கா, இனி வாழவே விருப்பமில்லாமல் இருந்தவ அவங்க அம்மா, அப்பா விழுந்து இறந்த அதே பள்ளத்தில் விழ முயற்சிக்கும் போதுதான் அந்த வழியாக வந்த நான் அவளைக் காப்பாற்றினேன்.
எனக்கு குடும்பம், குழந்தை எதுவும் கிடையாது, பல வருடங்களுக்கு முன்னாடி நடந்த ஒரு ஆக்சிடென்டில் என் மனைவியும், அவ வயிற்றிலிருந்த என் குழந்தையும் என்னை விட்டுப் போயிட்டாங்க, ஏதோ கடமைக்காக வாழணும்னு இருந்த எனக்கு கடவுள் அனுப்பிய பரிசாக என் அனும்மாவை நினைச்சேன், என் சொந்த மகளைப் போல அவளைப் பார்த்துக்கிட்டேன், கிட்டத்தட்ட இரண்டு வருஷம் அவ எதுவும் பேசாமல் அமைதியாக அவளோட அறையிலேயே ஒடுங்கியிருப்பா, அதற்கு அப்புறம் மெல்ல மெல்ல தன் கூட்டுக்குளிருந்து வெளியே வந்தவ இரண்டு மாதங்களுக்கு முன்னாடி என் கிட்ட வந்து உன்னைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுவதாக சொன்னா, அப்போ நானே உங்க வீட்டுக்கு வந்து பேசுவதாக சொன்னேன், ஆனா அவ பிடிவாதமாக தனக்கான உரிமையை தானே போராடி எடுக்கணும்னு சொன்னா, இந்த மூணு வருடத்தில் அவ தனக்குன்னு எதுவும் கேட்கல, அவ முதன்முதலாக கேட்ட விடயம் நீதான், அதனால நான் அவ ஆசைக்கு சம்மதம் சொல்லி அனுப்பி வைத்தேன்.
உங்க கல்யாணம் முடிந்து ஒரு சில நாளில் எனக்கு உடம்பு ரொம்ப முடியாமல் போயிடுச்சு, அப்போ அனும்மா என்னைப் பார்க்க வந்தா, அப்போதான் என் பழைய அனும்மா இதில்லைன்னு எனக்குப் புரிஞ்சுது, அவ மனதில் பழிவாங்கும் எண்ணம் மட்டுந்தான் இருக்குன்னு தெரிஞ்சு ரொம்ப ஆடிப் போயிட்டேன், இப்போ நீங்க இங்கே வந்திருப்பதைப் பார்த்தால் இதற்கு பின்னாடியும் அனும்மாதான் ஏதோ பண்ணியிருக்கணும் போல” என்றவாறே ராமச்சந்திரன் கேள்வியாக அவனை நோக்க, நீண்ட பெருமூச்சு விட்டபடியே அவரை நிமிர்ந்து பார்த்தவன் தான் இங்கே வந்திருப்பதற்கான காரணத்தைச் சொல்ல, அவரோ தன் நெற்றியை நீவி விட்டுக் கொண்டார்.

“இல்லை கிருஷ்ணா, அவங்க உயிரோடு இருந்தால் எனக்குத் தெரியாமல் இருக்காது, அனும்மா ஏதோ திட்டம் போட்டுத்தான் இதை எல்லாம் செய்திருக்கணும், ஒரு வேளை நீ அவ முன்னாடி இருந்தால் அவளால் எதுவும் செய்யமுடியாதுன்னு உன்னைத் தூரமாக்க இப்படி பண்ணியிருப்பாளா?”

“அவ என்னைப் பழிவாங்க எந்த எல்லைக்கும் போவான்னு இப்போ புரிஞ்சுக்கிட்டேன் அங்கிள், எனக்கு என்ன பண்ணுறதுன்னே புரியல” கிருஷ்ணா முற்றிலும் கலங்கிப் போனவனாக அமர்ந்திருக்க,

அவனது கையைப் பிடித்து எழுந்து நிற்கச் செய்தவர், “முதல்ல நம்ம வீட்டுக்கு போகலாம் வாங்க கிருஷ்ணா, அங்கே போய் அடுத்து என்ன செய்றதுன்னு யோசிங்க” என்றவாறே தன் காரில் அமரச் செய்ய, அவனும் தன் மனதிற்குள் சூழ்ந்திருந்த பெரும் குழப்பத்துடன் அவருடன் இணைந்து புறப்பட்டுச் சென்றான்.

ராமச்சந்திரனுடனான தன் உரையாடலை சிந்தித்தபடியே தான் வரவேண்டிய இடத்தை வந்து சேர்ந்தவன் தன்னுடைய பர்ஸைத் தேடிக் கொண்டிருந்த தருணம், அவனை யாரோ கடந்து செல்வது போல இருக்க, ஏதோ ஒரு மன உந்துதலில் அந்த நபரை நிமிர்ந்து பார்த்தவன் அதிர்ச்சியில் செய்வதறியாது திகைத்துப்போய் நின்றான்.

**********

கிருஷ்ணா ஊட்டி புறப்பட்டுச் சென்றதிலிருந்து அனுராதா தான் தீட்டி வைத்திருந்த திட்டம் ஒவ்வொன்றையும் மிகக் கச்சிதமாக நடைமுறைப் படுத்தத் தொடங்கியிருந்தாள்.

கிருஷ்ணா வீட்டிலிருந்து சென்றதைத் தொடர்ந்து வள்ளியும் அவனைப் பின் தொடர்ந்து சென்றிருக்க, அவரைத் தேடி ஊரெங்கும் அலைந்து திரிந்த மூர்த்தி தன் மனைவியைக் காணாது வெகுவாக தவித்துப் போயிருந்தார்.

வள்ளியின் காணாமல் போன சம்பவத்தின் பின்னணியில் அனுராதா தான் இருக்கக்கூடும் என்று உறுதியாக நம்பியிருந்தவர் அவளிடம் அதைப் பற்றி விசாரித்திருக்க, அவளோ எப்போதும் போல ஒற்றைப் பார்வையினால் அவர்களை எல்லாம் அடக்கி வைத்திருந்தாள்.

கிருஷ்ணா வீட்டிலிருந்து சென்றதன் பின்னர் மறுபடியும் அந்த வீட்டிலிருந்து யாரையும் வெளியே செல்ல விடாமல் காவல் அரண் போல அந்த வீட்டிலேயே இருந்தவள் மறந்தும் கூட அந்த வீட்டிலிருந்தவர்களோ, வேறு எவருமோ வள்ளியைத் தேடவோ, கிருஷ்ணாவைத் தொடர்பு கொள்ளவோ அனுமதித்திருக்கவில்லை.

கிட்டத்தட்ட சிறையில் இருப்பது போல அவர்களை எல்லாம் அடைத்து வைத்திருந்தவள் தினமும் அவர்களை தன் வார்த்தையினால் காயப்படுத்திக் கொண்டே இருந்தாள்.

முதல் நாள் அவள் சொல்லும் வார்த்தைகளையும், செய்யும் செயல்களையும் பார்த்து தனக்குள்ளேயே புழுங்கிக் கொண்டு அமர்ந்திருந்த மூர்த்தி, அடுத்த நாளும் அவளது அந்த வார்த்தை வேட்டையை தாங்க முடியாமல் அவளை எதிர்த்துப் பேச ஆரம்பித்திருந்தார்.

“இதோ பாரு அனுராதா, நீ பண்ணுறது கொஞ்சம் கூட சரியில்லை. கிருஷ்ணாவைத் திட்டம் போட்டு எங்கேயோ அனுப்பி வைச்சுட்டு, வள்ளியையும் கடத்தி வைச்சுட்டு நீ பண்ணுறது சரியா? உன்னை விட வயதில் பெரியவங்க கிட்ட நீ இப்படித்தான் நடந்து கொள்ளுவியா? இதுதான் உன் அம்மா, அப்பா உனக்கு கற்றுத் தந்த பழக்கமா?” அவளை எந்த இடத்தில் பேசித் தாக்கினால் அவள் அடங்கக் கூடும் என்பதை தனக்குள்ளேயே கணக்குப் போட்டவராக மூர்த்தி தன் பேச்சை ஆரம்பித்திருக்க,

தன் கை முஷ்டி இறுக அவர் முன்னால் வந்து நின்றவள், “வயதில் பெரியவங்கன்னா அவங்க அந்த மாதிரி நடந்துக்கணும், ஆனா மரியாதைக்குரிய ஐயா அவர்களே! நீங்க என்ன செய்தீங்கன்னு உங்களுக்கு ஞாபகம் இல்லை போல? ஓஹ்! வயதான ஆளுதானே அதுதான் ஞாபகமறதி வந்துடுச்சு போல” என்றவாறே அவரைப் பார்த்து நக்கலாக சிரிக்க, அவரோ அவமானம் தாளாமல் தன் தலையைக் குனிந்து கொண்டார்.

“ஆனா ஒரு விஷயத்தில் உங்க ஒட்டுமொத்த குடும்பமும் ஒரேமாதிரி இருக்குறீங்கப்பா, ஏதாவது கேள்வி கேட்டுட்டா போதும் உடனே பலி கொடுக்க கொண்டு போகும் ஆடு மாதிரி தலையைக் குனிஞ்சுக்குறீங்க. குடும்பத்தில் எது உருப்படியாக இல்லையோ இது மட்டும் ரொம்ப நல்லா இருக்கு” மூர்த்தியை ஏளனமாகப் பார்த்துக் கொண்டே கடந்து சென்றவள்,

சட்டென்று ஏதோ நினைவு வந்தவளாக தன் தலையில் தட்டிக் கொண்டு, “என் அருமை மாமனாரே! ரொம்ப ரொம்ப நன்றி. நல்ல வேளையாக உங்க பையனைப் பற்றி நினைவுபடுத்துனீங்க, உங்க கிட்ட முக்கியமான ஒரு விஷயம் சொல்லணும்னு இருந்தேன், மறந்தே போயிடுச்சு பாருங்க” என்றவாறே சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்தவள்,

“உங்களுக்கு ஒரு ப்ரேக்கிங் நியூஸ் சொல்லவா? ஆக்சுவலி, பேசிக்கலி” தன் பேச்சை பாதியில் இடை நிறுத்தி விட்டு அங்கிருந்த தண்ணீர் குவளையை எடுத்துப் பருக ஆரம்பிக்க, மூர்த்தியோ அவளைப் பதட்டத்துடன் பார்த்துக் கொண்டு நின்றார்.

“நீ என்ன சொல்ல வந்த, சீக்கிரமாக சொல்லு, எதற்காக எங்களைப் போட்டு பாடாய்படுத்துற?” என்றவாறே மூர்த்தி அவளது முகத்தை தவிப்புடன் நோக்க,

“அச்சச்சோ! என் மாமனாருக்கு எவ்வளவுதான் அவசரம்?” என்றவாறே அவர் முன்னால் வந்து நின்றவள்,

“உண்மை என்னன்னா என் அம்மா, அப்பா இரண்டு பேரும் உயிரோடுதான் இருக்காங்க, அவங்களுக்கு எதுவும் ஆகல, ரொம்ப பத்திரமாக என்னோட பாதுகாப்பில் நிம்மதியாக இருக்காங்க, இது தெரியாமல் உங்க பிள்ளை அவங்களைத் தேடி ஊர் ஊராக அலையுது, இன்னொரு பக்கம் உங்க அன்பு சம்சாரம் இரண்டு கொலை பண்ண தப்புக்கு போலீஸ் ஸ்டேஷனில் சரணாக தயாராக இருக்காங்க, நான் ஒரு கால் பண்ணா போதும் உங்களோட அன்பான துணைவிக்கு தூக்குத்தான். என்ன செஞ்சுடலாமா?” என்றவாறே தன் தொலைபேசியை எடுத்துக் காண்பிக்க, மூர்த்தி சப்த நாடிகளும் ஆடிப் போனவராக அவளைத் திகைத்துப்போய் பார்த்துக் கொண்டு நின்றார்……