நீயின்றி நானுமே நீரின்றி மேகமே – 11

eiPONP961496-8a6f52f8

அனுராதா தன் அன்னையும், தந்தையும் உயிருடன் இருக்கிறார்கள் என்கிற உண்மையை மூர்த்தியிடம் சொல்லியிருக்க, ஆரம்பத்தில் அதை நம்பமுடியாமல் திகைத்து நின்றவர் சிறிது நேரம் செல்லச் செல்ல அது உண்மையாக இருக்கக்கூடும் என்று நம்ப ஆரம்பித்தார்.

அப்படி அவர்கள் உயிருடன் இருந்தால் எதற்காக அனுராதா இப்படி எல்லாம் தங்களைக் கஷ்டப்படுத்த வேண்டும் என்கிற குழப்பமான சிந்தனையுடன் அவளது முகத்தைப் பார்த்துக் கொண்டு நின்றவர், “அதுதான் உன் அம்மா, அப்பாவுக்கு எதுவும் ஆகலதானே? அப்புறம் எதற்காக எங்க எல்லோரையும் இப்படி கஷ்டப்படுத்துற? இப்படி எங்களைக் கஷ்டப்படுத்துவதால் உனக்கு என்னதான் கிடைக்கப் போகிறது?” என்றவாறே அவளைப் பார்த்து சத்தமிட,

அழுத்தமான நடையுடன் அவர் முன்னால் வந்து நின்று கொண்டவள், “உங்களைக் கஷ்டப்படுத்துவதால் என்ன கிடைக்குமா? சந்தோஷம் கிடைக்கும், பரம சந்தோஷம். உங்க எல்லோரோட முகத்திலேயும் ஒரு பயம், பதட்டம் இருக்கு பாருங்க, அதைப் பார்க்கும் போது அப்படியே வானத்தில் மிதப்பது போல ஆனந்தமாக இருக்கு. நீங்க எல்லோரும் என் காலில் விழுந்து அழும் போது அப்படியே உடம்பெல்லாம் புது உற்சாகம் பரவுவது போல ஜிவ்வுன்னு இருக்கும். தானாக தேடி வந்த இப்படியான சந்தோஷத்தை எல்லாம் யாராவது வேணாம்னு சொல்லுவாங்களா என் மாமனாரே? கொஞ்சமாவது உங்க மூளையைப் பாவிக்க ட்ரை பண்ணுங்க அங்கிள், எப்போ பாரு உங்க அன்பு மனைவி சொல்லுவதையே கேட்டு கேட்டு உங்க மூளை அப்படியே ஃப்ரஷ்ஷாகவே இருக்கப் போகுது, இனிமேலாவது அதற்கு வேலை கொடுங்க, ஏன்னா உங்க சரிபாதியைத் தான் ஜெயிலுக்கு அனுப்பப் போறேனே” என்று விட்டு தன் கைத்தொலைபேசியை எடுத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்து சென்று விட, மூர்த்தி செய்வதறியாது தவிப்புடன் அவள் சென்ற வழியைப் பார்த்துக் கொண்டு நின்றார்.

‘இந்த பொண்ணு மனதில் என்ன இருக்குன்னு கண்டுபிடிக்கவே முடியல, வள்ளி ஆரம்பத்தில் நான் சொன்னதைக் கேட்டிருந்தால் இன்னைக்கு அவளுக்கும், இந்த குடும்பத்திற்கும் இப்படியான ஒரு நிலைமை நிச்சயமாக ஏற்பட்டிருக்காது.கௌரவம், அந்தஸ்து, அது, இதுன்னு சொல்லி சொல்லி கடைசியில் நம்ம உயிருக்கு கூட உத்தரவாதம் இல்லாத ஒரு நிலைமையை ஏற்படுத்திட்டாளே’ தன் மனைவி செய்த தவறின் வீரியத்தை காலம் கடந்த பின் உணர்ந்து கொண்ட மூர்த்தி தங்கள் நிலையை எண்ணிக் கவலையுடன் தன் இரு பிள்ளைகளையும் ஆதரவாக தட்டிக் கொடுத்தபடி அமர்ந்திருக்க, மறுபுறம் அனுராதா ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த வள்ளியின் முன்னால் தன் கைகளைக் கட்டிக் கொண்டு நின்று கொண்டிருந்தாள்.

இரண்டு நாட்களாக தான் எங்கேயிருக்கிறோம் என்று கூடத் தெரியாமல் பயத்தோடும், குழப்பத்தோடும் அந்த அறையை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தவர், இன்று தன் முன்னால் நின்று கொண்டிருந்த அனுராதாவைப் பார்த்த பிறகுதான் தான் எப்படி இங்கே வந்திருக்கக் கூடும் என்பதைப் புரிந்து கொண்டிருந்தார்.

கிருஷ்ணா இரண்டாம் முறையாக தங்கள் வீட்டிலிருந்து வெளியேறி சென்றதும் அவன் சென்ற பாதையிலேயே நடக்கத் தொடங்கியவர் நேராக சென்று நின்றது அனுராதாவின் வீட்டில்தான்.

அவரை அந்த சந்தர்ப்பத்தில் அங்கே எதிர்பார்த்திராத அனுராதா, “அடடே! என் பாசத்திற்குரிய மாமியார் என்னைத் தேடி என் வீட்டுக்கே வந்துட்டீங்க போல இருக்கே. வாங்க, வாங்க. உட்காருங்க” என்றவாறே அவரை நாற்காலி வரை அழைத்துச் சென்று விட்டு,

அவர் நாற்காலியில் உட்காரப் போன சமயம், “ஒரு நிமிஷம்” என்றவாறே அவரை அமர விடாமல் பிடித்துக் கொண்டவள்,

“என் குடும்பத்திற்கு இவ்வளவு பெரிய துரோகத்தைப் பண்ணிட்டு கொஞ்சம் கூட வெட்கம், மானம், சூடு, சுரணை எதுவும் இல்லாமல் நான் உட்கார சொன்னா உட்கார்ந்துடுவீங்களா?” என்று கேட்க, அவரோ முகம் சுருங்கிப் போக அமைதியாக நின்று கொண்டிருந்தார்.

“அது சரி, உங்களை மாதிரி ஆளுங்ககிட்ட எல்லாம் வெட்கம், மானம், சூடு, சுரணை இருக்கும்ன்னு நான் எதிர்பார்த்தது தப்புதான். சரி, சொல்லுங்க. எதற்காக இங்கே வந்தீங்க?”

“அனுராதா, தயவுசெய்து என்னை மன்னிச்சிடு, நான் உன் குடும்பத்திற்கு பண்ண பாவத்துக்கு தயவுசெய்து என்னை மன்னிச்சிடு. என்னைத் தயவுசெய்து மன்னிச்சிடு ம்மா, நான் பெரிய பாவிம்மா, எந்தவொரு மதிப்பும் இல்லாத விடயத்திற்காக உன் குடும்பத்தை சின்னாபின்னமாக்கிட்டேன், அதற்கு நீ என்ன வேணும்னாலும் தண்டனை கொடும்மா, நான் ஏற்றுக்கொள்கிறேன்.
உனக்கு நான் பண்ண பாவத்துக்கு பிராயச்சித்தமாக என் உடம்பில் உயிர் இருக்கும் வரைக்கும் உன்னை என் சொந்த மகளாக நான் பார்த்துக்கிறேன்ம்மா, உனக்கும், கிருஷ்ணாவுக்கும் நடுவில் இனி எக்காரணத்தைக் கொண்டும் ஒரு பிரச்சினையாக நான் இருக்கவே மாட்டேன் ராதா. நீங்க இரண்டு பேரும் சந்தோஷமாக வாழ்ந்தாலே எனக்குப் போதும், தயவுசெய்து என்னை மன்னிச்சிடு ம்மா. வேணும்னா நான் பண்ண தப்பை சொல்லி இப்போவே நான் போலீஸில் சரணாகிடுறேன், ஆனா என்னை மன்னிச்சிட்டேன்னு ஒரு தடவையாவது சொல்லிடும்மா, சொல்லிடும்மா” என்று கதறியழுதபடியே அனுராதாவின் காலைப் பிடித்துக் கொண்டு வள்ளி அமர்ந்திருக்க, சிறிது நேரம் தன் தலையைப் பிடித்துக் கொண்டு அமைதியாக நின்று கொண்டிருந்தவள் பெருமூச்சு விட்டபடியே அவரைப் பிடித்து எழுந்து நிற்கச் செய்தாள்.

“சரி அத்தை, நான் உங்களை மன்னிச்சுட்டேன், நீங்க முதல்ல வீட்டுக்கு போங்க. நைட் நான் வீட்டுக்கு வந்த பிறகு இதைப்பற்றி பேசலாம், இப்போ நீங்க இப்படி வீணாக கவலைப்படாமல் வீட்டுக்கு கிளம்புங்க” அனுராதா சிறு புன்னகையுடன் அவரைப் பார்த்துக் கொண்டு நிற்க,

அவள் கூறியதை நம்ப முடியாமல் அவளை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டு நின்றவர், “நீ நிஜமாகத் தான் சொல்லுறியா ராதா? நீ என்னை மன்னிச்சுட்டியா? இதெல்லாம் நிஜமா?” இன்னமும் தன் காதில் விழுந்த வார்த்தைகளை நம்ப முடியாமல் திகைத்துப்போய் நிற்க,

அவரைப் பார்த்து ஆமோதிப்பாக தலையசைத்தவள், “ஆமா அத்தை, உண்மைதான். நீங்க முதல்ல கிளம்புங்க, எனக்கு கொஞ்சம் ஆபிஸ் வேலை இருக்கு, அதை முடிச்சுட்டு வீட்டுக்கு வந்து ஆறுதலாக பேசலாம், சரியா?” என்றவாறே வாயில்வரை அவரை அழைத்துக் கொண்டு செல்ல, அவரோ இன்னமும் அங்கே நடப்பவற்றை நம்பமுடியாத ஒரு நிலையிலேயே இருந்தார்.

எது எவ்வாறாயினும் அனுராதா தன்னை வார்த்தையளவிலேனும் மன்னிப்பதாக கூறி விட்டாளே அதுவே போதும் என்றெண்ணியபடி அவளுடன் இணைந்து நடந்து சென்றவர், திடீரென தன் தலையை சுற்றுவது போல் இருக்க தடுமாற்றத்துடன் அவளது கைகளைப் பிடித்துக் கொண்டார். தனக்கு என்ன நடந்தது என்று அவர் சிந்திப்பதற்கு முன்னரே எல்லாம் நடந்து முடிந்திருக்க, அதன் பிறகு நடந்த எதுவும் அவருக்கு நினைவே இல்லை, மாறாக தான் கண் விழித்த போது இந்த இருள் சூழ்ந்த இடந்தான் அவருக்குப் புலப்பட்டது.

அப்படியென்றால் தன்னை மன்னித்ததாக கூறி விட்டு அனுராதா வேண்டுமென்றே தன்னை இங்கே அடைத்து வைத்திருக்கிறாள் என்பதை புரிந்து கொண்டவர் தவிப்புடன் அவளை நிமிர்ந்து பார்க்க, அதேசமயத்தில் அவளும் அவரைப் புன்னகை முகமாக பார்த்துக் கொண்டு நின்றாள்.

“என் அருமை அத்தை! எப்படி இருக்கீங்க? இந்த இடம் உங்களுக்கு வசதியாக இருக்குத்தானே?”

“அனுராதா, நீ…”

“அட பரவாயில்லை அத்தை, வசதியாக இல்லைன்னாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. நீங்க செய்த தப்புக்கு என்ன தண்டனை வேணும்னாலும் ஏற்றுக்கொள்கிறேன்னு சொன்னீங்க தானே, அதனால இதை அதோட ஆரம்பப்படியாக நினைச்சுக்கோங்க, ஓகேவா?” வள்ளியின் கன்னத்தில் தட்டியபடியே அந்த அறையைச் சுற்றி வலம் வந்தவள்,

“அத்தை, நீங்க இருக்கும் இந்த ரூம் யாரோடது தெரியுமா?” என்று கேட்க, அவரோ அவளைப் பார்த்து மறுப்பாக தலையசைத்தார்.

“தெரியாதா? ஐயோ! சாரி, அத்தை. ரூம் இருட்டாக இருக்கு இல்லையா? அதனால உங்களுக்குத் தெரிந்திருக்காது, இருங்க வர்றேன்” என்றவாறே அனுராதா அந்த அறையின் சுவற்றில் இருந்த சுவிட்சை ஆன் செய்ய, வெகு நேரமாக இருட்டிலேயே அமர்ந்திருந்த வள்ளி திடீரென ஏற்பட்ட வெளிச்சத்தில் தன் முகத்தை மூடிக் கொள்ள, அவர் முன்னால் மண்டியிட்டு அமர்ந்து கொண்ட அனுராதா அவரது கையை வலுக்கட்டாயமாக அவரது முகத்திலிருந்து பிரித்தெடுத்தாள்.

“இந்த சின்ன வெளிச்சத்திற்கே முகத்தை மூடினால் எப்படி அத்தை? கண்ணைத் திறந்து பாருங்க” வலுக்கட்டாயமாக வள்ளியின் முகத்தைப் பிடித்து அந்த அறையை சுட்டிக் காட்டியவள்,

“அதோ பாருங்க, உங்க பிரண்ட்” என்றவாறே அந்த அறைச்சுவற்றில் மாட்டப்பட்டிருந்த தன் அன்னையின் புகைப்படத்தைக் காண்பிக்க, வள்ளியோ அந்த புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சியாகி அமர்ந்திருந்தார்.

“என்ன அத்தை இது? போட்டோ பார்த்ததற்கே ஷாக்காகுனா எப்படி? ஆக்சூவலி இத்தனை வருஷமாக என் அம்மா தங்கியிருந்த ரூம் தான் இது, இங்கேதான் இரண்டு நாளாக நீங்க நிம்மதியாக தூங்கிட்டு இருந்தீங்க, எவ்வளவு ஆழமான நட்பு இல்லையா?”

“ராதா, நீ ஏன் இப்படி எல்லாம் பண்ணுற? நான்தான் நான் பண்ண தப்பை ஒத்துக்கிட்டேனே, போலீஸில் கூட சரணாகுறேன்னு சொல்லிட்டேன், அதற்கு அப்புறமும் எதற்காக எப்படி எல்லாம் பண்ணுற?”

“வெறி, என் மனதிலிருக்கும் வெறி, அது அடங்கும் வரைக்கும் உங்க எல்லோரையும் நான் இப்படித்தான் சித்திரவதை பண்ணுவேன்”

“உனக்கு என்னைத் தானே பழிவாங்கணும்? அப்புறம் எதற்காக கிருஷ்ணாவையும், என் மற்ற குழந்தைகளையும் கஷ்டப்படுத்துற? அதோடு கிருஷ்ணாவை எதற்காக என்னை விட்டுத் தூரமாக்கி வைத்திருக்க?”

“எதற்காகவா? உங்க பையன் இங்கே இருந்தால் உங்க மேலே இருக்கும் பாசத்தில் ஊறிப் போய் என்ன தண்டனை வேணும்னாலும் எனக்கு கொடு, எனக்குக் கொடுன்னு ஒரே தொல்லை பண்ணுவான், அதனாலதான் அவனை திட்டம் போட்டு வெளியூருக்கு அனுப்பி வைத்திருக்கேன்”

“நிச்சயமாக அது மட்டும் தான் காரணமா? இல்லை அவன் முன்னால் நீ பலவீனமாக மாறிடுவேன்னு பயமா?” வள்ளியின் கேள்வியில் அவரை வியப்புடன் நோக்கியவள்,

“பரவாயில்லையே, என் மாமியாருக்கு என்னைப் பற்றி கொஞ்சம் அதிகமாகவே தெரிந்திருக்கு போல?” என்றவாறே அவரது தோளில் தன் கையைப் போட்டுக் கொண்டு அங்கிருந்த கட்டிலில் அமர்ந்து கொண்டாள்.

“அத்தை நீங்க சொன்ன மாதிரி உங்க மேலே இருக்கும் பாசத்தைப் பார்த்து மட்டும் நான் கிருஷ்ணாவை வெளியூருக்கு அனுப்பல, உண்மையை சொல்லப் போனால் என் மனதார அவனைக் கஷ்டப்படுத்த என்னால் முடியாது. ஏன் தெரியுமா? அவனை இப்போதும் நான் என் உயிருக்கு உயிராக காதலிச்சுட்டுத்தான் இருக்கேன், அவன் கஷ்டப்படுவதை ஒரு நாள் பார்த்ததற்கே என்னால நிம்மதியாக இருக்க முடியல, அப்படியிருக்கும் போது தினமும் அவனை எப்படி என்னால் கஷ்டப்படுத்த முடியும்? அதுதான் அவனை என்னை விட்டுத் தூரமாக்குனேன், அவன் என் பக்கத்தில் இருந்தால் நான் நிச்சயமாக நானாக இருக்கவே மாட்டேன்” வெட்கம் கலந்த புன்னகையுடன் ஒருவிதமான மோனநிலையுடன் தன்னை மறந்து அனுராதா பேசிக் கொண்டிருக்க, வள்ளி அவரை விசித்திரமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.

“நீ கிருஷ்ணாவை இந்தளவிற்கா நேசிக்குற? நீ இன்னமும் அவனைக் காதலிக்குறது உண்மையா?” வள்ளியின் கேள்வியில் சட்டென்று தன்னை சுதாரித்துக் கொண்டு தன் புன்னகையை மறைத்துக் கொண்டவள்,

“காதலும் இல்லை, கத்தரிக்காயும் இல்லை. உங்க எல்லோரையும் பழிவாங்கணும், அவ்வளவுதான்” பதட்டத்தில் சிவந்து போன தன் முகத்தை வள்ளி பார்த்து விடக்கூடாது என்பதற்காக அவசர அவசரமாக அந்த அறையின் விளக்கை அணைத்து விட்டு, மீண்டும் வள்ளியை உள்ளேயே வைத்து பூட்டி விட்டு வெளியேறி சென்று அந்த வீட்டின் தோட்டத்தில் சென்று நின்று கொண்டாள்.

“அனுராதா, நீ என்ன பண்ணிட்டு இருக்க? நீ இங்கே வந்தது அந்த கிருஷ்ணாவையும், அவன் குடும்பத்தினரையும் பழிவாங்க, அதை விட்டுட்டு அவனோட அம்மாகிட்ட ஏதேதோ உளறிட்டு இருக்க. உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லை அனுராதா” அந்த தோட்டத்தில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டே தன்னைத் தானே கடிந்து கொண்டவள், சிறு சோர்வுடன் அங்கிருந்த கல் பெஞ்சில் அமர்ந்து கொண்டாள்.

“அன்னைக்கு கிருஷ்ணா கேட்கும்படி நான் பேசியது எல்லாம் உண்மைதான், என் அம்மாவும், அப்பாவும் உயிரோடுதான் இருக்காங்க, ஆனா அந்த இடத்தை என்னைத் தவிர வேறு யாராலும் கண்டுபிடிக்க முடியாது. கிருஷ்ணா என்னதான் முயற்சி பண்ணாலும் அவனால் என் அம்மாவையோ, அப்பாவையோ நெருங்க முடியாது, ஊட்டி பூராவும் அவன் அலைந்து திரிந்து தேடிட்டு இங்கே வர இன்னும் எத்தனை நாளாகும்ன்னு தெரியலை, அதற்கிடையில் இவங்க எல்லோரையும் ஒருவழி பண்ணிடனும். அதற்கு அப்புறம் கிருஷ்ணா வந்த பிறகு என்னால இவங்க எல்லோரும் எவ்வளவு கஷ்டப்பட்டாங்கன்னு நினைத்து நினைத்தே இவங்க வாழ்க்கை நடக்கணும், அந்த பயமும், கவலையும் தான் எனக்கு வேணும்” என்றவாறே தான் அமர்ந்திருந்த இருக்கையின் பின்புறமாக தலை சாய்த்து அமர்ந்து கொண்டவள்,

“ஆனா கிருஷ்ணா, நான் அவனை மறுபடியும் பிரிந்து போகணுமா? இந்த மூணு வருடமாக அவனைப் பிரிந்திருந்ததையே என்னால் தாங்கிக்க முடியல, அப்படியிருக்கும் போது என்னால் எப்படி அவனை நிரந்தரமாக பிரிந்திருக்க முடியும்? எங்களுக்கு கல்யாணம் நடந்த நாளிலிருந்து அவனோட ஒவ்வொரு அசைவையும் நான் பார்த்திருக்கேன், நான் கோபமாக பேசும் போது அவனோட முகம் அப்படியே வாடிப்போய் விடும், ஆனாலும் அந்த நேரத்திலும் எப்படியாவது என்னை சமாதானப்படுத்தனும்னு தானே அவன் பிடிவாதமாக இருப்பான். என்மேல் அவனுக்கு இன்னமும் காதல் இருக்குன்னு எனக்குத் தெரியும், ஆனால் அந்த ஆக்சிடென்ட் நடந்த பிறகு அவனோட அம்மாகிட்ட அவன் சொன்ன விடயம், அது எப்படி இல்லைன்னு ஆகும்? அந்தவொரு விடயம்தான் இன்னும் இன்னும் என்னை அவன் மேலே கோபப்பட வைக்கிறது, இதற்கு எல்லாம் என்னதான் தீர்வு?” தன் நெற்றியை நீவி விட்டுக் கொண்டே சிந்தித்தபடி அமர்ந்திருக்க, மறுபுறம் கிருஷ்ணா கோபத்தினால் சிவந்து போன முகத்துடன் தன் முன்னால் நின்று கொண்டிருந்த நபர்களை முறைத்துப் பார்த்துபடி அமர்ந்திருந்தான்……