நீயின்றி நானுமே நீரின்றி மேகமே – 12

eiPONP961496-9b80d881

கிருஷ்ணா மற்றும் ராமச்சந்திரன் தங்கள் முன்னால் அமர்ந்திருந்த தேவி மற்றும் ராஜலிங்கத்தை கோபமாக முறைத்துப் பார்த்த வண்ணம் அமர்ந்திருக்க, அவர்கள் இருவருமோ நடப்பது எதுவும் புரியாமல் ஒருவரையொருவர் பார்த்து திருதிருவென விழித்துக்கொண்டு அமர்ந்திருந்தனர்.

அனுராதா தன்னை எப்படி எல்லாம் சுற்றலில் விட்டிருக்கிறாள் என்பதை நினைத்துப் பார்த்தபடி அமர்ந்திருந்த கிருஷ்ணா தன் முன்னால் அமர்ந்திருந்த தேவியை நிமிர்ந்து பார்க்க, அதேசமயத்தில் அவரும் அவனது முகத்தையே கலவரத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

“அப்போ உங்களுக்கு எதுவும் ஆகல, நீங்க இரண்டு பேரும் நல்லாத்தான் இருக்கீங்க, இல்லையா?” கிருஷ்ணாவின் கேள்வியில் ஒருவரை ஒருவர் திரும்பிப் பார்த்துக் கொண்ட தேவி மற்றும் ராஜலிங்கம்,

“கிருஷ்ணா, நீ என்னப்பா கேட்குற? எங்களுக்கு எதுவும் புரியல” ஒருசேரப் பதிலளிக்க, அவனோ சிறு சலிப்புடன் தன் முகத்தை திருப்பிக் கொண்டான்.

“கிருஷ்ணா, கோபப்படாதே ப்பா” அவனது மனநிலையைப் புரிந்து கொண்டவராக அவனது தோளில் தட்டிக் கொடுத்த ராமச்சந்திரன், அனுராதா மற்றும் கிருஷ்ணாவுக்கு இடையே நடந்திருந்த விடயங்களை எல்லாம் அவளது பெற்றோரிடம் விளக்கிக் கூற, அவர்கள் இருவருமோ அவர் சொன்ன விடயங்களை நம்ப முடியாமல் திகைத்துப்போய் அமர்ந்திருந்தனர்.

“நீங்க என்ன சொல்லுறீங்க சார்? எங்க ராதா இப்படி எல்லாம் நிச்சயமாக பண்ணவே மாட்டா, அவ சின்ன குழந்தை மாதிரி” தேவியின் பேச்சைக் கேட்டு நக்கலாக சிரித்துக் கொண்டே அவரை நிமிர்ந்து பார்த்த கிருஷ்ணா,

“அந்தக் குழந்தைதான் இன்னைக்கு நான் இங்கே, இந்த நிலைமையில் இருக்கக் காரணம். தன்னோட சொந்த அம்மா, அப்பா இறந்துட்டாங்கன்னு வாய்கூசாமல் பொய் சொல்லி, என்னோட குடும்பத்து ஆளுங்களைக் கடத்தி, என்னைப் பலவிதமாக தொல்லை பண்ணி… இதெல்லாம் பண்ணது நீங்க சொன்ன அதே குழந்தைதான் ஆன்ட்டி. அப்பப்பா! எத்தனை பொய், எவ்வளவு நடிப்பு? எதற்காக இதெல்லாம் அவ பண்ணணும்? அப்படி அவளுக்கு நான் என்ன பண்ணேன்?” என்று கேட்டு விட்டு மனதளவில் முற்றிலும் உடைந்து போனவனாக தன் இரு கைகளிலும் தன் முகத்தை புதைத்துக் கொள்ள, ராஜலிங்கம் மற்றும் தேவி அவனைக் கவலையோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.

“கிருஷ்ணா, ராதா ஏன் இப்படி எல்லாம் பண்ணுறான்னு எங்களுக்கு தெரியாதுப்பா. ஏன் அவ உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டது கூட இப்போ நீங்க சொல்லித்தான் எங்களுக்குத் தெரியும், அவ எங்க மேலே இருக்கும் பாசத்தில் இப்படி எல்லாம் தப்புத் தப்பாக யோசிக்கிறா போல இருக்கு”

“அதற்காக இவ்வளவு பெரிய பொய்யை சொல்லணுமா? உயிரோடு இருப்பவங்களை இறந்துட்டாங்கன்னு சொல்ல அவளுக்கு எப்படி மனசு வந்தது? அப்போ உங்களுக்கு ஆக்சிடென்ட் நடந்தது கூட பொய் தானா?”

“கிருஷ்ணா! ராதா உன்கிட்ட ஒரு பொய் சொன்னான்னு அவ சொன்ன எல்லாமே பொய்ன்னு ஆகிடுமா? ஏன், எங்களுக்கு நடந்த ஆக்சிடென்ட் பற்றி உங்க அம்மா எதுவும் சொல்லாமலா நீ இங்கே வந்த?” தேவி சிறு கண்டிப்புடன் கிருஷ்ணாவைப் பார்த்து வினவ,

தன் தலையில் தட்டிக் கொண்டே அவரை திரும்பிப் பார்த்தவன், “ஐ யம் சாரி ஆன்ட்டி, நான் வேறு ஏதோ யோசனையில் அப்படிக் கேட்டுட்டேன், ரியலி சாரி. ஆன்ட்டி அன்னைக்கு உண்மையிலேயே என்னதான் நடந்தது? தயவுசெய்து எதையும் மறைக்காமல் சொல்லுங்க, ப்ளீஸ்” என்று கேட்க, ராஜலிங்கம் மற்றும் தேவி அன்னையை நாளின் நினைவுகளில் கண்கள் கலங்க அவனை நிமிர்ந்து பார்த்தனர்.

“அன்னைக்கு எனக்கு ஒரு பிசினஸ் கான்ட்ராக்ட் விஷயமாக ஊட்டி போக வேண்டிய அவசியம் வந்தது, நான் மட்டும்தான் அன்னைக்கு போவதற்காக முதலில் தயாரானேன், ஆனா ராதாவும், தேவியும் என்கூட வர ஆசைப்படவும் நடக்கப் போகும் விபரீதம் தெரியாமல் நாங்க ரொம்ப சந்தோஷமாக புறப்பட்டு வந்தோம். ஊட்டி டவுனை வந்து சேர இன்னும் கொஞ்ச நேரம்தான் இருக்குன்னு நாங்க பேசிட்டு வரும் போது திடீர்னு எங்கிருந்தோ வந்த லாரி ஒன்று எங்க காரை அடிச்சு தள்ளிடுச்சு. ஒரு நிமிஷம் என்ன நடந்ததுன்னு யோசிக்க முதலே ராதா காரிலிருந்து வெளியே விழுந்துட்டா, அதேநேரம் வள்ளியும், மூர்த்தியும், இன்னும் இரண்டு, மூணு பேரும் சேர்ந்து எங்க காரைப் பள்ளத்தில் தள்ளி விட்டுட்டாங்க.

சத்தியமாக சொல்லுறேன் கிருஷ்ணா நாங்க அந்த நிமிஷம் எங்க நிலைமையை நினைத்து கவலைப்படவே இல்லை, எப்படியோ ஒரு நாள் நாங்க இறக்கத்தான் வேணும், அது அந்த நாளாக இருந்திருக்கலாம், ஆனா ராதா? அவளோட நிலைமை? அவளோட வாழ்க்கை? அவளுக்கு ஆசைப்பட்ட வாழ்க்கையை எங்களால் ஏற்படுத்திக் கொடுக்க முடியலையேன்னு ஆற்றாமையோடு நாங்க எங்க கடைசி மூச்சோடு இருந்தது அந்த கடவுளுக்குப் புரிஞ்சுடுச்சோ என்னமோ கார் பள்ளத்தில் விழுந்த வேகத்தில் நானும், தேவியும் காரிலிருந்து வெளியே ஒரு குழியில் விழுந்துட்டோம், பள்ளத்தில் விழுந்த கார் வெடிச்சு சிதறி சாம்பலாகிடுச்சு, அதற்கு அப்புறம் என்ன நடந்ததுன்னு எங்களுக்குத் தெரியாது, கண்ணு முழிச்சு பார்த்தபோது மலைக்கு அந்தப் பக்கமாக இருக்கும் பழங்குடி ஆளுங்க கொஞ்சப் பேருதான் எங்களைக் காப்பாற்றி உயிர் பிழைக்க வைத்திருந்தாங்க. அவங்க சொல்லித்தான் எங்களுக்குத் தெரியும் நாங்க கிட்டத்தட்ட ஒரு வருஷமா மயக்கத்தில் இருந்திருக்கோம்ன்னு”

“என்ன, ஒரு வருஷமா?”

“ஆமா, ஆரம்பத்தில் எங்களுக்கும் நம்ப முடியலைதான், அப்புறம்தான் மெல்ல மெல்ல எல்லாம் புரிய வந்தது, நாங்க மயக்கத்தில் இருந்தபோதே ராதாம்மா நாங்க இருக்கிற இடத்தைக் கண்டுபிடித்து எங்களைத் தேடி வந்திருக்கா, எங்களுக்கு மயக்கம் தெளிஞ்சுடுச்சுன்னு தெரிந்த பிறகுதான் அவ முகத்தில் சிரிப்பே வந்ததுன்னு அங்கே இருந்த ஆளுங்க சொன்னாங்க. அதற்கு அப்புறம் மறுபடியும் நாம நம்ம ஊருக்கு போகலாம்ன்னு ராதாகிட்ட சொல்லவும் அவ வேண்டாம்னு சொல்லிட்டா, மறுபடியும் எங்களுக்கு ஏதாவது ஆபத்து வந்துடும்ன்னு சொல்லி எங்களை அந்த ஏரியாவிலேயே ஒரு இடத்தில் தங்க ஏற்பாடு எல்லாம் பண்ணிட்டு அவ தன்னோட வேலைக்காக சென்னை போறதாகதான் எங்ககிட்ட சொன்னா, இப்போ கொஞ்ச நாள் முன்னாடி பேசும் போது கூட அங்கே இருக்கேன்னுதான் என்கிட்ட சொன்னா. இன்னைக்கு கூட ராதாவைப் பற்றி யோசிட்டேதான் என்னையும் அறியாமல் மலைக்கு மேலே வந்தேன், இல்லைன்னா நான் மலைக்கு மேலே வர்றது இல்லை, வரவும் கூடாதுன்னு ராதா கண்டிப்பாக சொல்லி இருந்தா, ஆனா என்னையும் அறியாமல் நான் வந்ததனால் தான் நடந்த விடயங்களை எல்லாம் தெரிஞ்சுக்க முடிந்திருக்கு” என்றவாறே ராஜலிங்கம் தன் மகளை எண்ணிக் கவலை கொண்டவராக தன் மனைவியின் கையைப் பிடித்துக் கொள்ள,

“அப்போ இரண்டு வருஷமாக எல்லாம் பக்காவா பிளான் பண்ணி அதற்கப்புறம்தான் அவ என்னைத் தேடி வந்திருக்கா இல்லையா?” கிருஷ்ணா கேள்வியாக அவர்களை நோக்க, அவர்கள் இருவரும் அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தவிப்போடு அமர்ந்திருந்தனர்.

அவர்கள் அமைதியான தோற்றத்தைப் பார்த்து சிறிது நேரம் தன் கண்களை மூடி அமர்ந்திருந்த கிருஷ்ணா, பின்னர் சட்டென்று ஏதோ நினைவு வந்தவனாக அவரைத் திரும்பிப் பார்த்து, “அங்கிள் நீங்க சொன்னதை எல்லாம் வைத்துப் பார்த்தால் அந்த பக்கம் இருக்கும் ஆளுங்களுக்கு உங்களைத் தெரிந்ததுதானே இருக்கும்? ஆனா நான் அந்தப் பக்கம் வந்து விசாரிச்சப்போ உங்களையோ, தேவி ஆன்ட்டியையோ யாரும் தெரிந்த மாதிரி சொல்லவே இல்லையே”

“கிருஷ்ணா நீ மலையடிவாரத்திற்கா வந்து விசாரிச்ச?” தேவியின் கேள்விக்கு மறுப்பாக தலையசைத்தவன்,

“இல்லை ஆன்ட்டி, மலையடிவாரத்திற்கு எப்படி வர்றதுன்னு எனக்குத் தெரியாது, ஆனா நான் அந்த ஆக்சிடென்ட் நடந்த சுற்றுவட்டாரத்தில் இருக்கும் ஆளுங்க எல்லோர் கிட்டவும் கேட்டேன்” எனவும்,

சிறு புன்னகையுடன் அவனது அருகில் வந்து அமர்ந்து கொண்டவர், “கிருஷ்ணா, அந்த மலையடிவாரத்தில் அப்படி ஒரு பழங்குடி ஆளுங்க இருக்காங்கன்னு ஊட்டியில் இருக்கும் நிறைய பேருக்கு தெரியாது, ஏன் நாங்க அங்கே போன பிறகுதான் எங்களுக்கே தெரியும். அதோடு ராதாவோட அப்பா சொன்ன மாதிரி நாங்க மலைக்கு மேலே வரமாட்டோம்ப்பா, நாங்க வரக்கூடாதுன்னு ராதா அவ்வளவு உறுதியாக சொல்லியிருந்தா, அதனால அங்கே இருக்கும் யாருக்கும் எங்களைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, அதோடு அந்த பழங்குடி ஆளுங்க பற்றி வெளியே பல பேருக்கு தெரியவே தெரியாது, வேணும்னா சார்கிட்ட கேட்டுப் பாரு, அவரும் ஊட்டிதானே?” என்றவாறே ராமச்சந்திரனை சுட்டிக்காட்ட, கிருஷ்ணா தன் குழப்பம் தீராதவனாக அவரைத் திரும்பிப் பார்த்தான்.

“அங்கிள், உங்களுக்குத் தெரியுமா?” பலத்த சிந்தனையுடன் அமர்ந்திருந்த ராமச்சந்திரன் அவனது கேள்வியை உள்வாங்கிக் கொள்ள முடியாத ஒரு நிலையில் அமர்ந்திருக்க,

தன் கேள்விக்கு பதிலளிக்காமல் எங்கோ ஒரு மூலையை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தவரின் தோளில் தன் கையை வைத்து உலுக்கியவன், “அங்கிள், என்ன ஆச்சு?” என்று கேட்க,

கனவில் இருந்து விழிப்பது போல அவனை திரும்பிப் பார்த்தவர், “ஆஹ், ஒண்ணும் இல்லை, ஒண்ணும் இல்லை. என்னப்பா கேட்ட?” என்று கேட்க, விசித்திரமாக அவரைப் பார்த்துக் கொண்டிருந்தவன் தான் கேட்ட கேள்வியை மறுபடியும் அவரிடம் கேட்டான்.

“இல்லைப்பா, எனக்கும் தெரியாது, ஒருவேளை தெரிந்திருந்தால் ராதாவுக்கு நானே உதவி பண்ணிருப்பேனே. இவ்வளவு பெரிய விடயத்தை அவ என்கிட்ட மறைக்க வேண்டிய தேவையும் வந்திருக்காதே” என்றவாறே ராமச்சந்திரன் கண்கள் கலங்கிய படி கிருஷ்ணாவைப் பார்க்க முடியாமல் தன் தலையைக் குனிந்து கொள்ள,

அவரைத் தன் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டவன், “ஐயோ! அங்கிள், நீங்களே இப்படி கலங்கிப் போகலாமா? ராதாம்மாதான் எதையும் யோசிக்காமல் அவ இஷ்டத்திற்கு பண்ணிட்டா, அதற்காக நீங்க இப்படி உடைந்து போகணுமா?” என்று வினவ,

தன் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு அவர்கள் எல்லோரையும் நிமிர்ந்து பார்த்தவர், “அனுராதாவை நான் என் சொந்த பொண்ணு மாதிரிதான் இத்தனை வருஷமாக நினைச்சுட்டு இருந்தேன், தனிமையில் இருந்த எனக்கு அவளோட வருகைதான் சந்தோஷமே, அவ வந்த பிறகுதான் இந்த வீட்டுக்கே ஒரு வெளிச்சம் வந்த மாதிரி இருந்தது, அதுமட்டுமில்ல அவ கேட்டா இந்த உலகத்தில் எந்தவொரு விடயத்தையும் அவளுக்காகப் போராடி செய்து கொடுத்திருப்பேன், ஏன்னா அவளை என்னோட மகளாகத்தான் நான் பார்க்கிறேன், இந்த விஷயமும் அவளுக்கும் ரொம்ப நல்லாவே தெரியும். அப்படியிருக்கும் போது அவ என்கிட்ட இப்படி ஒரு விடயத்தை மறைத்திருப்பான்னு நான் கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை கிருஷ்ணா, அவ தப்பு பண்ணப் போறான்னு தெரிஞ்சிருந்தா என் உயிரைப் பணயம் வைத்தாலாவது அவளை நான் தடுத்திருப்பேன், ஆனா இப்போ?” என்றவாறே கிருஷ்ணாவின் தோளில் சாய்ந்து கொண்டு கதறியழ, அவர்கள் மூவரும் அவரைத் தேற்றும் வழி தெரியாமல் வெகுவாக தவித்துப் போயினர்.

“அங்கிள், தயவுசெய்து நீங்க இப்படி அழ வேண்டாம். நீங்க எந்தவொரு தப்பும் பண்ணல, ஏன் இன்னும் சொல்லப்போனால் இங்கே இருக்கும் யாரும் எந்தவொரு தப்பும் பண்ணல. தப்பு பண்ணது எல்லாம் ஒரேயொரு ஆளுதான், அவங்க பண்ண தப்புதான் இன்னைக்கு இவ்வளவு பெரிய வலியையும், காயத்தையும் நம்ம எல்லோருக்கும் கொடுத்திருக்கு. முதல்ல நம்ம தென்காசிக்கு கிளம்பலாம் வாங்க, அங்கே போனால்தான் இந்த பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியும், அதோடு இந்தப் பிரச்சினைக்கான காரணகர்த்தாவை நான் கண்டிப்பாக மறுபடியும் சந்தித்தே ஆகணும்” என்றவாறே கிருஷ்ணா ராமச்சந்திரன், ராஜலிங்கம் மற்றும் தேவியை அழைத்துக் கொண்டு சென்று அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் ஏறி அமர்ந்து கொள்ள, மறுபுறம் அனுராதா வெகு மும்முரமாக எதையோ சிந்தித்தபடி தன் வீட்டின் ஹாலில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள்.

அனுராதா தன் கையிலிருந்த தொலைபேசியையும், வாயிலையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டே நடந்து கொண்டிருக்க, அவள் மனதிற்குள் ஒரேயொரு கேள்விதான் திரும்பத் திரும்ப எதிரொலித்துக் கொண்டிருந்தது.

காலையிலிருந்து பலமுறை தன் தந்தைக்கும், அன்னைக்கும் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டிருந்தும் இப்போதுவரை அவர்களை அவளால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

வழக்கமாக இவ்வளவு நேரமாக அவளது தொலைபேசி அழைப்புக்கு பதிலளிக்காமல் அவர்கள் இருந்ததில்லை, அப்படியிருக்கையில் அவர்களது இந்த அமைதி அவளை வெகுவாக அச்சம் கொள்ளச் செய்ய, அவள் மனமோ நடக்கக் கூடாது எதுவோ நடக்கப் போகிறது என்பது போல அவளை எச்சரிக்கை செய்து கொண்டிருந்தது.

“ஏன் அம்மாவும், அப்பாவும் என் போனை எடுக்க மாட்டேங்குறாங்கா? ஒருவேளை கிருஷ்ணா அவங்க இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து இருப்பானோ? இல்லை, இல்லை. அதற்கெல்லாம் வாய்ப்பேயில்லை. இத்தனை வருஷமாக ஊட்டியில் இருக்கும் ராமுப்பாவே அவங்க இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கல, அப்படியிருக்கும் போது இதற்கு முதல் அந்த ஊருக்குப் போகாத கிருஷ்ணா இரண்டே நாளில் அவங்க இருக்கும் இடத்தைக் கண்டுபிடிப்பானா? வாய்ப்பே இல்லை” என தனக்குத்தானே பேசிக் கொண்டு அந்த ஹாலின் நடுவே நின்று கொண்டிருந்தவள்,

“ஆனா எனக்கும்தான் ஊட்டியைப் பற்றி எதுவுமே தெரியாது, அப்படியிருக்கும் போது நான் என் அப்பா, அம்மா இருந்த இடத்தைக் கண்டுபிடிக்கலையா என்ன?” தன் மனதிற்குள் திடீரென முளைத்த குழப்பத்துடன் அப்படியே மண்டியிட்டு அமர்ந்து கொண்டாள்.

“ஒருவேளை கிருஷ்ணாவுக்கு எல்லா விடயமும் தெரிந்திருக்குமோ? இல்லை, இல்லை. அப்படி நடக்கவே கூடாது, அதற்கு அப்புறம் நான் போட்ட எல்லாத் திட்டமும் மண்ணோடு மண்ணாகிப் போயிடும். ஐயோ! அம்மா, போனை எடுங்களேன்” தன் கையிலிருந்த போனை இறுக்கிப் பிடித்துக் கொண்டு கோபமாக அதை விட்டெறியப் போனவள், ஒரு சில நிமிடங்கள் கண்களை மூடி தன்னை நிதானப்படுத்திக் கொண்டு மீண்டும் தன் அன்னைக்கு அழைப்பை மேற்கொள்ள, ஊட்டியிலிருந்து தென்காசி நோக்கி காரை ஓட்டிக் கொண்டிருந்த கிருஷ்ணா காரினுள் ஒலித்த கைப்பேசி ஒலியில் காரின் ஓட்டத்தை நிறுத்திவிட்டு தேவியின் புறம் திரும்பிப் பார்த்தான்.

“ஆன்ட்டி இப்போ ரிங் பண்ணது உங்க போனா?” அவனது கேள்விக்கு தயங்கியபடியே ஆமோதிப்பாக தலையசைத்தவர்,

“ராதாதான் கால் பண்ணுறா கிருஷ்ணா, காலையிலிருந்து பல தடவை கால் பண்ணிட்டா, இவ்வளவு நேரமாக நாங்க போனை எடுக்கலேன்னா அவ ரொம்ப பயப்படுவாப்பா. ஒரேயொரு தடவை எடுத்துப் பேசிடுறேனே? இல்லைன்னா அவ ரொம்ப டென்ஷன் ஆகிடுவா. நான் அவ கிட்ட தென்காசி வர்றேன்னு சொல்லாமல் ஊட்டியில் இருக்குற மாதிரியே பேசுறேனே, ப்ளீஸ்” கெஞ்சலாக அவனைப் பார்த்துக் கூற,

அவரது கையிலிருந்த கைப்பேசியை சட்டென்று வாங்கிக் கொண்டவன், “தென்காசி போய் சேரும் வரை அனுராதாகிட்ட யாரும் எதுவும் சொல்லக்கூடாது, இனி எதுவாக இருந்தாலும் நானும், அனுராதாவும் நேருக்கு நேராகத்தான் பேசிக்கணும்” என்றவாறே அந்த போனை ஆஃப் செய்து தனது பையில் போட்டுக் கொண்டு தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டவனாக மீண்டும் தங்கள் பயணத்தை தொடரச் செய்தான்……