நீயின்றி நானுமே நீரின்றி மேகமே – 15

eiPONP961496-e6c95698

கிருஷ்ணாவின் வீட்டைச்சூழ பல நபர்கள் குழுமி நிற்க, அங்கே நிலவிய மயான அமைதியில் அச்சம் கொண்டவளாக தன் அன்னையின் கையைப் பிடித்துக் கொண்டு சிறு தடுமாற்றத்துடன் நடந்து வந்து கொண்டிருந்தாள் அனுராதா.

தன் அன்னை, தந்தையையும், தன்னையும் கொல்ல முயன்றதிற்காக வள்ளியையும், அவரது குடும்பத்தினரையும் பழி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்தோடு தான் இத்தனை நாட்களாக அவர்களையே அவள் சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தாள்.

ஆனால் இப்போது வள்ளி இந்த உலகை விட்டு முற்றாக விடைபெற்றிருக்க, அந்த செய்தி கேட்ட நொடி முதல் அவளால் இயல்பாக இருக்கவே முடியவில்லை.

அவள் மனதிற்குள் பழி வாங்கும் எண்ணம் நிறைந்து போயிருந்தாலும் தன்னால் ஒரு உயிர் பிரிந்து விட்டதே என்கிற குற்ற உணர்வு அவளை வெகுவாக இம்சை செய்து கொண்டிருந்தது.

என்னதான் வெளி நபர்களுக்கு தன்னை மிகவும் கெட்டவளாக காண்பிக்க அவள் முயற்சி செய்திருந்தாலும் இயல்பாகவே அவளுக்குள் இருக்கும் இரக்க உணர்வு அவளை அத்தனை எளிதில் தவறு செய்ய விட்டுவிடுவதில்லை.

எல்லாத் தடைகளையும் தாண்டி அவள் ஏதோ செய்ய நினைத்திருக்க, இப்போது அது அவள் எதிர்பாராத ஒரு நிகழ்வாக நடந்து முடிந்திருந்தது.

அந்த வீட்டைச் சூழ நின்றிருந்த நபர்கள் அனைவரும் அவளையே குறுகுறுவென பார்ப்பது போல அவளுக்கு உணர்த்தினாலும், அது எதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் முன்னேறி நடந்து சென்றவள் அந்த வீட்டின் ஹாலில் வைக்கப்பட்டிருந்த வள்ளியின் உடலைப் பார்த்து தன் நடையை நிறுத்திக் கொண்டாள்.

வள்ளி செய்த தவற்றை அவருக்கு உணர்த்த வேண்டும், அவர் செய்த தப்பை எண்ணி அவர் வருந்த வேண்டும் என்பது தான் அனுராதாவின் மிக முக்கியமான நோக்கமாக இருந்த விடயங்கள், ஆனால் இப்போது நடந்திருப்பது அவள் கனவிலும் எதிர்பாராத ஒன்று.

‘நான் உங்களைப் பழி வாங்கணும்னு நினைத்தது என்னவோ உண்மைதான் அத்தை, ஆனால் உங்க உயிரைப் பறிக்கணும்னு ஒரு நாளும் நினைத்ததில்லை. உங்க எல்லோரையும் தொந்தரவு பண்ணணும்னு நான் நினைத்தேன்தான், ஆனால் இப்படி ஒரேயடியாக உங்களைப் பிரிக்க நான் நினைத்ததே இல்லை அத்தை’ அனுராதா தன் வாய் வரை வந்த விடயங்களை வெளியே சொல்ல மனமின்றி சிறு தடுமாற்றத்துடன் வள்ளியின் உடலின் அருகில் வந்து நிற்க, அதேநேரம் கிருஷ்ணாவும் தன் அன்னையின் உடலின் அருகில் மண்டியிட்டு அமர்ந்திருந்தான்.

யாருக்கும் தன் கவலை தெரிந்து விடக்கூடாது என்பதற்காகவே அழ மாட்டேன் என்பது போல அவனது முகம் இறுகிப் போய் இருக்க, அவனது கண்களோ அனுராதாவின் முகத்தில் நிலைகுத்தி நின்றது.

கிருஷ்ணாவின் கண்கள் தன்னிடம் பல கேள்விகளை கேட்பது போல அனுராதாவிற்கு பிரமை தோன்ற, உடனே தன்னை சுதாரித்துக் கொண்டவள் வேக வேகமாகப் படியேறி சென்று தங்களது அறைக்குள் நுழைந்து கதவை சாத்திக் கொண்டாள்.

“எனக்கு என்ன ஆச்சு? எதற்காக எனக்குள்ளே இவ்வளவு குழப்பம்? அத்தை இறந்தது என்னவோ இயற்கையாகத்தான், ஆனா என்னோட மனசு அவங்க இறப்புக்கு நானும் ஒரு வகையில் காரணம்ன்னு எதற்காக என்னை சிந்திக்க வைக்கிறது? அவங்களுக்குத் தண்டனை கிடைக்கணும்னு நான் நினைத்தது என்னவோ உண்மைதான், ஆனா அவங்க இறந்த விஷயத்தை என்னால சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியலையே. ஐயோ! நான் எப்படி இந்தக் குழப்பத்தில் இருந்து வெளியே வரப்போகிறேன்?” காலையிலிருந்து தனது மனதிற்குள் திரும்பத் திரும்ப எதிரொலித்துக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு பதில் கண்டறிய முடியாமல் அனுராதா தன் தலையைப் பிடித்துக் கொண்டு நின்ற நேரம் அவளது அறைக் கதவு தட்டப்பட, அவசர அவசரமாக தன் முகத்தைத் துடைத்துக் கொண்டு அறைக் கதவைத் திறந்தவள் அங்கே வாயிலில் நின்றுகொண்டிருந்த கிருஷ்ணாவைப் பார்த்து அதிர்ந்துதான் போனாள்.

“கிருஷ்ணா! நீ இங்கே…கீழே அம்மா”

“நான் உன் கிட்ட கொஞ்சம் பேசணும்” அனுராதாவின் பதிலை எதிர்பாராமலேயே அவளது கைகளை கதவிலிருந்து விலக்கி விட்டு அறையினுள்ளே நுழைந்து கொண்டவன் கதவை சாத்தி விட்டு அந்த கதவின் மேலேயே சாய்ந்து நின்று கொண்டான்.

“கிருஷ்ணா நீ என்ன பண்ணுற? கீழே எல்லோரும் இருக்கும் போது இப்போ எதற்காக இங்கே வந்த? முதல்ல நீ கீழே போ” அனுராதா சிறு கண்டிப்புடன் கிருஷ்ணாவின் தோளில் கை வைத்து அவனை விலக்கப் பார்க்க,

அவளது கையைத் தனது தோளில் இருந்து விலக்கி விட்டவன், “நான் உன் கிட்ட பேசணும்னு சொன்னேன், ஷோ நான் பேசுறதைக் கேட்டுட்டு அப்புறமாக கீழே போகலாம்” என்றவாறே அவளை நோக்கி இரண்டடி முன்னால் எடுத்து வைத்தவன்,

“இனிமேல் நீ இந்த வீட்டில் இருக்க வேண்டிய அவசியமிருக்காது இல்லையா?” என்று வினவ, அவளோ அவனை அதிர்ச்சியாக நிமிர்ந்து பார்த்தாள்.

“கிருஷ்ணா, உனக்கு என்ன பைத்தியமா? எதற்காக தேவையில்லாமல் உளறுற?”

“நான் உளறுறேனா? இப்போதான் அனுராதா தெளிவாகப் பேசுறேன். நீ மூணு வருஷம் கழிச்சு மறுபடியும் என்னை சாரி, சாரி எங்களைத் தேடி வந்தது பழிவாங்கத்தானே?”

“கிருஷ்ணா, தயவுசெய்து என்னை கீழே போக விடு”

“என் கேள்விக்கு பதில் சொல்லாமல் நீ எங்கேயும் போக முடியாது அனுராதா”

“சரி, இப்போ என்ன? உன்னோட கேள்விக்கு பதில் சொல்லணும், அவ்வளவுதானே? சரி, சொல்லுறேன். ஆமா, நான் மறுபடியும் வந்தது உங்க எல்லோரையும் பழிவாங்கத்தான். அதற்கு என்ன இப்போ?”

“அப்போ, நீ நினைத்த மாதிரியே எங்க அம்மாவை பழிவாங்கிட்ட இல்லையா?”

“கிருஷ்ணா!” அவனது கேள்வியில் கோபம் பொங்க அவனது சட்டைக் காலரை இறுகப் பிடித்துக் கொண்டவள்,

“என்ன, உன் குடும்பத்து ஆளுங்க பண்ண விஷயத்தை எல்லாம் நீ மறந்துட்டியா? நிமிஷத்திற்கு நிமிஷம் உனக்கு அதைப் பற்றி சொல்லிட்டே இருக்கணுமா என்ன? ஏதோ எந்த தப்பும் செய்யாத ஒருத்தங்களை நான் கொடுமைப்படுத்திய மாதிரி பேசுற. இதோ பாரு, அவங்க பண்ண தப்பை அவங்களுக்குப் புரிய வைத்து அவங்களாகவே செய்த தப்பை எல்லாம் ஒப்புக் கொள்ளணும்னுதான் நான் நினைச்சேன், மற்றபடி யாரோட உயிரையும் பறிக்கணும்னு அவசியம் எனக்கில்லை. புரிஞ்சுதா?” என்றவாறே தன் கையை உதற, அவள் கையை உதறிய வேகத்தில் கிருஷ்ணா இரண்டடி பின்னால் நகர்ந்து கதவில் இடித்துக் கொண்டபடியே அவளை நிமிர்ந்து பார்த்தான்.

“நீ நேரடியாக எதுவும் பண்ணல அனுராதா, ஆனா எப்படியோ அவங்களோட இறப்பில் உனக்கும் ஒரு பங்கு இருக்குத்தானே? நீ இத்தனை நாளாக உங்க அப்பா, அம்மா இறந்து போயிட்டாங்கன்னு சொல்லி என்னன்னவோ பண்ண, ஆனா உங்க அப்பா, அம்மா உயிரோடுதான் இருக்காங்கன்னு தெரிஞ்ச பிறகும் நான் நீ பண்ண வேலை எதையும் நினைத்து உன் மேலே கோபப்படல, ஏன் தெரியுமா? ஒருவேளை உண்மையாகவே அவங்களுக்கு ஏதாவது நடந்திருந்தால் அது உன்னை எந்தளவிற்கு பாதிச்சிருக்கும்ன்னு நான் புரிஞ்சுக்கிட்டேன், அந்த புரிதல்தான் உன்மேல் இன்னும் இன்னும் என் காதலை அதிகரிச்சது.

எப்போ என் அம்மா, அப்பா தப்பு பண்ணாங்கன்னு தெரிஞ்சதோ அப்போவே அவங்களை விட்டு நான் விலகி வந்தேன், ஏன்? உனக்காக, உன்னோட கவலையைப் போக்க, உனக்குத் துணையாக இருக்கணும்னு. ஆனா பதிலுக்கு எனக்கு கிடைச்சது வெறும் அவமானம் மட்டும்தான். சரி, பரவாயில்லைன்னு அதையும் தாங்கிகிட்டே உனக்காக மறுபடியும் வந்து நின்னேன், அப்போ நீ எனக்கு கொடுத்த பரிசு, என் அம்மாவோட அந்த நிலைமை.

சரி, என் அம்மா பண்ண தப்புக்காக நீ அந்த மாதிரி அவங்க கிட்ட நடந்துக்கிட்டேன்னு அதையும் மறந்து விட்டேன், ஆனா எங்க அம்மாவால இதை எல்லாம் தாங்க முடியல, அவங்களுக்கு என்னை மாதிரி எதையும் இயல்பாக எடுக்கும் மனசு இல்லை, அதனால்தான் அவங்களுக்கு இப்படி…கடைசியாக அவங்க இந்த வீட்டுக்குள்ளே மறுபடியும் நுழையும் போது என்கிட்ட என்ன சொன்னாங்க தெரியுமா? ராதாவை எப்போதும் கை விட்டுடாதேன்னுதான், ஆனா இதை எல்லாம் உன்னாலதான் புரிஞ்சுக்கவே முடியாதே”

“கிருஷ்ணா! வார்த்தையை பார்த்துப் பேசு. உண்மையாகவே உங்க எல்லோரையும் கொல்லணும்னு எனக்கு எண்ணமிருந்தால் அதை எப்போவோ பண்ணியிருப்பேன், இத்தனை நாள் உங்க எல்லோர் கூடவும் குப்பை கொட்டணும்னு எனக்கு என்ன தலை எழுத்தா?”

“அப்படி செய்திருந்தாலாவது பரவாயில்லை, ஒரே நிமிடத்தில் எல்லாம் முடிந்திருக்கும்”

“கிருஷ்ணா!” கிருஷ்ணாவின் பேச்சைக் கேட்டு அனுராதாவின் கோபம் எல்லை மீறிச் செல்லப் போக அங்கேயிருந்து வேகமாக வெளியேறிச் செல்லப் பார்த்தவள்,

“அனுராதா, ஒரு நிமிடம்” என்ற கிருஷ்ணாவின் அழைப்பில் வேண்டாவெறுப்பாக அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

அனுராதாவின் கோபமான முகத்தைப் பார்த்ததுமே தன் பேச்சை நிறுத்தி விட்டு தன் கண்களை மூடி சிறிது தன்னை நிதானப்படுத்திக் கொண்டவன், “ஐ யம் சாரி அனுராதா, அம்மாவோட இழப்பு என்னை இப்படி எல்லாம் பேச வைச்சுடுச்சு, அவங்க நல்லவங்களோ, கெட்டவங்களோ என்ன இருந்தாலும் இத்தனை வருஷமாக என்னைப் பெற்று, வளர்த்தவங்க ஆச்சே? அதுதான். சரி, நான் போய் இனி செய்ய வேண்டிய வேலையை எல்லாம் செய்துட்டு வர்றேன், நீ இங்கேயே இருக்கிறதுன்னாலும் ஓகே, இல்லை கீழே வந்து இருக்கிறதுன்னாலும் ஓகே” என்று கூற,

அவனைப் பார்த்து தன் இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி கும்பிட்டுக் கொண்டவள், “ஐயா, சாமி! உங்க சகவாசமே வேணாம், நான் என் வீட்டுக்கு கிளம்புறேன், ஆளை விடுங்க” என்றவாறே வெளியேறப் பார்க்க, கிருஷ்ணா அவசரமாக அவளது வழியை மறித்தவாறு வந்து நின்று கொண்டான்.

“என்ன ராதாம்மா இப்படி சொல்லுற? நான் இப்போதானே சொன்னேன், கடைசியாக அம்மா என் கிட்ட சொன்னது உன்னை எப்போதும் நான் பிரியக்கூடாதுன்னு. அப்புறம் எப்படி உன்னைத் தனியாக நான் அனுப்பி வைப்பேன்? என் அம்மா இனிமேல் திரும்பி வரப்போவதில்லை, ஆனா அவங்க ஆசையை நிறைவேற்றி அவங்களுக்கு நிம்மதியைக் கொடுக்க வேண்டியது என் கடமைதானே?”

“இப்போ கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி அவங்களோட இறப்பில் எனக்கும் பங்கு இருக்குன்னு சொன்ன, ஆனா இப்போ இப்படி சொல்லுற?”

“ஆமா, உன் மேல் எனக்கு வருத்தம் இருப்பது என்னவோ உண்மைதான், ஆனால் என் அம்மாவோட இறுதி ஆசைக்கு முன்னாடி என்னோட வருத்தம், கவலை எல்லாம் பெரிய விடயமே இல்லை” என்றவாறே கலங்கிய தன் கண்களைத் துடைத்துக் கொண்டு கிருஷ்ணா வேகமாக அந்த அறையிலிருந்து வெளியேறிச் சென்று விட, அனுராதாவிற்குத்தான் அந்த இடத்தில் நிற்பது பெரும்பாடாகிப் போனது.

கிருஷ்ணாவிற்குத் தன் மேல் அளவில்லா கோபம் இருப்பது அவளுக்குத் தெரிந்திருந்தாலும், அந்த கோபத்தை எல்லாம் தாண்டி அவளை விட்டுக் கொடுக்கவே மாட்டேன் என்று அவன் எடுத்திருக்கும் அந்த உறுதியான எண்ணம் அவள் பிடிவாதத்தை ஆட்டம் காண்பிப்பது போலத்தான் இருந்தது.

அனுராதா இங்கே பலவகையான சிந்தனைகளில் உழன்று கொண்டிருந்த நேரம் வள்ளியின் இறுதிக்கிரியைகள் எல்லாம் நடந்து முடிந்திருக்க, கிருஷ்ணா தன் மனதினுள் நிறைந்து போயிருக்கும் சோகத்தை வெளிக்காண்பித்துக் கொள்ளாமல் இயல்பாக இருப்பது போல தன்னைக் காண்பிக்க பெரும் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தான்.

சிறிது நேரம் செல்லச் செல்ல வந்திருந்த உறவினர்களும், நண்பர்களும் கிருஷ்ணாவின் வீட்டை விட்டு புறப்பட்டுச் சென்றிருக்க, மறுபுறம் அனுராதா தன் மனதிற்குள் உறுதியான ஒரு முடிவை எடுத்தவளாக தன்னுடைய உடைமைகளை எல்லாம் எடுத்துக் கொண்டு படியிறங்கி வந்து கொண்டிருந்தாள்.

“ராதா! இது என்னம்மா பெட்டி?” அனுராதாவின் கையிலிருந்த பெட்டியை சுட்டிக் காட்டியபடியே தேவி அவள் முன்னால் வந்து நிற்க,

சிறு புன்னகையுடன் கிருஷ்ணாவின் புறம் திரும்பிப் பார்த்துக் கொண்டவள், “நான் வந்த வேலைதான் முடிஞ்சுடுச்சே, இனி எதற்காக இங்கே இருக்கணும்? அதுதான் நம்ம வீட்டுக்கே திரும்பி போகலாம்னு இருக்கேன்” என்று கூற, தேவி அவளை கோபமாக தன் புறம் இழுத்து நிற்கச் செய்தார்.

“அனுராதா! என்ன பேச்சு இதெல்லாம்? வள்ளி செய்த தப்பை நானே மன்னித்து, மறந்துட்டேன்னு சொன்ன பிறகும் எதற்காக இப்படி எல்லாம் பேசுற? அப்படி உன் மனதில் எதற்காக இவ்வளவு வன்மம்?”

“ஆமாம்மா, வன்மம் தான். அவங்க பண்ண தப்பை என்னால் மன்னிக்கவே முடியாது, அவங்களுக்கு இப்படி ஒரு தண்டனை கிடைத்தது எனக்கு ரொம்ப சந்தோஷம்”

“அனுராதா!” தேவி தன் மகளின் பேச்சைக் கேட்டு கோபத்தில் அவளை அடிக்கச் செல்ல, நொடிப்பொழுதில் அவர்கள் இருவருக்கும் இடையில் வந்து நின்று கொண்ட கிருஷ்ணா அவளுக்கு கிடைக்கப் பார்த்த அந்த அடியையும் தன் கன்னத்தில் வாங்கிக் கொண்டான்.

“கிருஷ்ணா! நீ எதற்காக நடுவில் வந்த? தயவுசெய்து என்னை மன்னிச்சிடு ப்பா” தேவி தான் செய்த செயலை எண்ணி மனம் வருந்தியவராக கிருஷ்ணாவைப் பார்த்து மன்னிப்பு வேண்டி நிற்க,

அவரைப் பார்த்து மறுப்பாக தலையசைத்தவன், “நீங்க மன்னிப்பு எல்லாம் கேட்க வேண்டாம் அத்தை, தெரியாமல் நடந்த விடயத்திற்கு நீங்க எப்படி பொறுப்பாக முடியும்?”என்று வினவவும்,

அனுராதாவோ, “போதும் கிருஷ்ணா, இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி நாடகமாடி எல்லோரையும் ஏமாற்றப்போற?” என்று கேட்க, தேவி கவலை சூழ தன் தலையில் கை வைத்தபடி அப்படியே மண்டியிட்டு அமர்ந்து கொண்டார்.

“இந்த பொண்ணு ஏன் கிருஷ்ணா இப்படி மாறுனா? ஒரே பொண்ணுன்னு எல்லாப் பாசத்தையும் இவ மேலேயே கொட்டி வளர்த்தோமே, அதற்கான கைம்மாறா இது? மூணு வருஷத்துக்கு முன்னாடி ஒரு சின்ன பூச்சிக்கு கூட கேடு விளைவிக்கக்கூடாதுன்னு வீட்டையே இரண்டாக்கும் அந்த அனுராதா நிச்சயமாக இவ கிடையாது, ஒருத்தங்க இறப்பைப் பார்த்து சந்தோஷப்படும் மனநிலை எவ்வளவு மோசமானது தெரியுமா?”

“ஆனா அத்தை, இந்த ஆட்டத்தை தொடங்கி வைத்ததே எங்க வீட்டு ஆளுங்கதானே? அவங்க ஆரம்பித்த தப்புதான் இது எல்லாவற்றிற்கும் காரணம்”

“நீ எப்போதும் அனுராதாவுக்கு ஆதரவாகப் பேசணும்னு அவசியம் இல்லை கிருஷ்ணா, இன்னும் சொல்லப்போனால் அவளை ஆரம்பத்திலேயே கண்டிக்காமல் விட்டது உன்னோட தப்புதான்”

“அப்படி அவ எந்த தப்பும் பண்ணலேயே அத்தை”

“ஓஹ்! அப்படியா? அப்போ இத்தனை நாளாக அவ வார்த்தையினாலும், செயலினாலும் உன்னைக் காயப்படுத்தினாலே அது சரியா? நடந்த விடயத்திற்கும், உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு தெரிஞ்சும் உன்னை தினமும் நோகடிக்குறாளே அது சரியா? உன் மனதில் எவ்வளவு கவலை இருக்கும்னு தெரிஞ்சும் உன்னை இன்னமும் கஷ்டப்படுத்துறாளே, அதுவும் சரின்னுதான் சொல்லுறியா?” தேவியின் கேள்விக்கு தன்னிடம் பதில் இல்லை என்பதைப் புரிந்து கொண்டது போல கிருஷ்ணா தன் தலையைக் குனிந்து கொள்ள,

அவனைப் பார்த்து சலித்துக் கொண்டே அனுராதாவைத் தன் புறமாக இழுத்துக் கொண்டவர், “ஏன் அனுராதா இப்படி இருக்க? நடந்தது எல்லாம் பெரிய தப்புதான், அதற்காக இவ்வளவு வன்மம் வேண்டாம் ராதாம்மா. யாரு தப்பு பண்ணாங்களோ அவங்களுக்கு தண்டனை அந்த கடவுள் மூலமாக கிடைக்கும், அதற்காக நீ உன் மனதில் வன்மத்தை வளர்க்க வேண்டாம்மா” என்று கூற, அவளோ அவர் பேச்சைக் கேட்க விருப்பமில்லை என்பது போல வேறெங்கோ பார்த்துக் கொண்டு நின்றாள்.

அவளின் செயலில் சிறிது கோபம் பொங்க அவளது முகத்தை தன் புறமாகத் திருப்பியவர், “ராதா! போதும். உன் விளையாட்டை எல்லாம் இதோடு நிறுத்திக்கோ. உனக்கு ஒரு கஷ்டம் வரும்போது முதல் ஆளாக கிருஷ்ணா வந்து நிற்கிறான், அதேபோல இந்த மாதிரியான ஒரு சமயத்தில் கிருஷ்ணாவுக்கு நீதான் ஆறுதலாக இருக்கணும், முதல்ல இதெல்லாம் எடுத்துட்டு உள்ளே போ” சிறு அதட்டலுடன் அவளைப் பார்த்துக் கூற,

தன் முகத்திலிருந்த அவரது கையை தட்டி விட்டவள், “எனக்கு யாரும் கட்டளை போட முடியாது, எனக்கு என்ன தோணுதோ அதைத்தான் நான் செய்வேன். இப்போ, இந்த நிமிஷமே இந்த வீட்டை விட்டு நான்‌ போகப் போறேன், இதுதான் என்னோட முடிவு. அப்புறம் மறுபடியும் இந்த வீட்டுக்கு வர வேண்டிய தேவை நிச்சயமாக எனக்கு வராது, ஷோ எல்லோரும் ஹேப்பியா இருங்க, குட் பாய். முக்கியமாக கிருஷ்ணா சார் உங்களுக்கு பெரிய குட் பாய்” கிருஷ்ணாவைப் பார்த்து கையசைத்துக் கொண்டே அவனின் அருகில் சென்றவள்,

“உன் அம்மாவோட கடைசி ஆசையை நிறைவேற்றணும்னு ரொம்ப ஆசையாக இருக்க இல்லையா? நிச்சயமாக அதை நான் நடக்க விடமாட்டேன்” என்றவாறே அந்த வீட்டிலிருந்து வெளியேறிச் சென்று விட, அவனோ செய்வதறியாது‌ அவள் செல்லும் வழியைப் பார்த்து திகைத்துப் போய் நின்றான்……