நீயின்றி நானுமே நீரின்றி மேகமே – 16

eiPONP961496-277f991d

அனுராதா தங்கள் வீட்டிலிருந்து வெளியேறிச் செல்வதைப் பார்த்துக் கொண்டு நின்ற கிருஷ்ணாவிற்கு அங்கே நடக்கும் நிகழ்வுகளை உள்வாங்கிக் கொள்ளவே பல நிமிடங்கள் தேவைப்பட்டது.

“கிருஷ்ணா, என்னப்பா அப்படியே நிற்கிற? ராதா வீட்டை விட்டு போகாமல் ஏதாவது பண்ணுப்பா” தேவியின் தவிப்பான குரல் கேட்டு தன் சிந்தனைகளில் இருந்து விடுபட்டவன் அவசர அவசரமாக ஓடிச் சென்று அனுராதாவின் வழியை மறித்தவாறு நின்று கொண்டான்.

“ராதா, இப்போ எதற்காக இப்படி ஒரு முடிவை எடுத்த? என்ன நடந்தாலும் என்கூடத்தான் இருப்பேன்னு நீ சொன்னது எல்லாம் அப்போ பொய்யா? பழிவாங்குவதற்காகவது என்கூட என் வீட்டில்தான் இருப்பேன்னு சொன்ன, ஆனா இப்போ அதை எல்லாம் மறந்துட்டு எங்கே கிளம்பிட்ட ராதா?”

“என்ன கிருஷ்ணா சார், எமோஷனலா அட்டாக் பண்ண பார்க்குறீங்களா? பை த வே, நல்லா முயற்சி பண்ணீங்க, ஆனா நீங்க என்ன முயற்சி பண்ணாலும் இந்த அனுராதா எதற்கும் அசர மாட்டா, புரிஞ்சுதா?. நானும் உன் அம்மாவோட இறப்பு செய்தியைக் கேட்ட அப்புறம் உன் கூட இருக்கலாம்னுதான் யோசிச்சேன், ஆனா மேலே ரூமில் வைத்து நீ ஒரு விஷயம் சொன்ன பாரு, அந்த செக்கன் என் முடிவை சட்டுன்னு மாத்திட்டேன்,

எப்போ உன் அம்மாவோட கடைசி ஆசைக்காக என்கூட இருக்கணும்னு நீ ஆசைப்படுவதாக சொன்னியோ, அப்போவே அந்த ஆசையை சின்னாபின்னமாக்கணும்னு முடிவெடுத்துட்டேன், இனிமேல் நீ என்ன சொன்னாலும் சரி, என்ன செய்தாலும் சரி, மறுபடியும் நான் உன்னைத் தேடி வரவே மாட்டேன், அதேமாதிரி நீயும் என்னைத் தேடி தயவுசெய்து வந்துடாதே, சரியா? அப்புறம் இன்னொரு விஷயம், கூடிய சீக்கிரமே உனக்காக டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்பி வைக்கிறேன், அதைப் பார்த்து சூப்பராக எஞ்சாய் பண்ணணும், ஓகே வா மிஸ்டர்.ஹரிகிருஷ்ணா?” என்றவாறே அனுராதா அவனைத் தாண்டிச் செல்லப் போக,

அவளை நகர விடாமல் தன் கைகள் இரண்டையும் விரித்துப் பிடித்தவன், “தயவுசெய்து என்னை மறுபடியும் விட்டுட்டு போயிடாதே அனுராதா, சத்தியமாக சொல்லுறேன், நீ இல்லாமல் என்னால வாழவே முடியாது. ஒருதடவை உன்னைப் பிரிந்து அந்த நினைவுகளை எல்லாம் மறக்க நான் ரொம்பவே சிரமப்பட்டுட்டேன், மறுபடியும் எனக்கு அந்தக் கஷ்டத்தைக் கொடுத்துடாதே அனுராதா. நடந்த விடயத்திற்கும் எனக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லைன்னு உனக்கு நல்லாவே தெரியும், அப்படியிருக்கும் போது எதற்காக என்னை இந்தளவுக்கு வெறுக்கிற? அப்படி நீ என்னை வெறுக்கும் அளவுக்கு நான் என்ன தப்பு செய்தேன்? தயவுசெய்து உன்னைக் கெஞ்சிக் கேட்டுக்கிறேன் அனுராதா, இங்கே இருந்து போகாதே, ப்ளீஸ்” என்றவாறே அவள் முன்னால் மண்டியிட்டு அமர்ந்து கொள்ள,

அவனது சட்டைக் காலரைப் பிடித்து அவனை எழுந்து நிற்கச் செய்தவள், “நீ‌ இன்னும் எவ்வளவு தூரம் வேணும்னாலும் கதறியழு கிருஷ்ணா, உன்னோட இந்த முதலைக் கண்ணீரைப் பார்த்து மறுபடியும் மயங்க நான் ஒண்ணும் காலேஜில் உன்னை உருகி உருகி காதலித்த அந்த அனுராதா கிடையாது. இதோ பாரு கிருஷ்ணா, உனக்கு மறுபடியும் சொல்லுறேன், இன்னொரு தடவை தேவையில்லாமல் என்னைத் தொல்லை பண்ண நினைத்தால் உன்னை மொத்தமாக இந்த உலகை விட்டு அனுப்பி வைக்கவும் நான் தயங்க மாட்டேன். என்ன புரிஞ்சுதா? முதல்ல என் வழியை விட்டும் நகர்ந்து போ” என்றபடியே அவனைத் தன் வழியை விட்டும் தள்ளி விட, அவள் தள்ளிய வேகத்தில் கீழே கிடந்த கல்லில் கால் இடறியவன் அங்கே கிடந்த ஒரு சிறு பாறையில் தலை அடிபட வீழ்ந்தான்.

தன் தலையில் அடிபட்டதால் ஏற்பட்ட வலியையும், அதனால் சொட்டு சொட்டாக வழியத் தொடங்கிய தன் உதிரத்தையும் பொருட்படுத்தாமல் தட்டுத் தடுமாறி எழுந்து நின்றவன் அனுராதாவின் பின்னாலேயே ஓடிச் செல்லப் பார்க்க, அதற்கிடையில் அவள் அந்த வழியாக வந்த ஆட்டோவில் ஏறிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றிருந்தாள்.

“ராதா, நில்லு! தயவுசெய்து திரும்பி வந்துடு ராதா. ராதா! நில்லு!” தன் நெற்றியிலிருந்து வடிந்து கொண்டிருந்த இரத்தத்தை ஒரு கையால் மறைத்துப் பிடித்தபடியே மண்டியிட்டு அமர்ந்து கொண்டவன் தன் ஆற்றாமை தாளாமல் தரையில் தன் கையை வேகமாக அடிக்கப் பார்க்க, அதற்கிடையில் வீட்டினுளிருந்து வெளியே வந்திருந்த தேவி அவனது கையைப் பிடித்து அவனை மேலும் காயப்படுத்த விடாமல் தடுத்துப் பிடித்திருந்தார்.

“கிருஷ்ணா, நீ என்ன பண்ணுற? ஐயோ! இது என்ன நெற்றியிலிருந்து இரத்தம்? அந்த மகாராணி கொடுத்த பரிசா?” தேவி சிறு கண்டிப்புடன் கிருஷ்ணாவின் தலையை தன் சேலை முந்தானையைக் கொண்டு துடைத்து விட்டபடியே அவனைப் பார்த்து வினவ, அவனோ பதில் எதுவும் சொல்லாமல் அனுராதா சென்ற வழியையே கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டு நின்றான்.

“கிருஷ்ணா, உனக்கு என்ன ஆச்சு? எதற்காக நீ இப்படி எல்லாம் பண்ணுற? அவதான் நடந்த எதையும் கேட்க விரும்பாமல் பிடிவாதமாக இப்படி எல்லாம் பண்ணுறான்னா மறுபடியும் மறுபடியும் எதற்காக நீ அவகிட்ட தேடிப் போய் காயப்பட்டுத் திரும்புற? உனக்கு என்னதான் ஆச்சு?”

“இல்லை அத்தை, அவ இன்னும் நான் பண்ண அந்த சின்ன தப்பை நினைத்துத்தான் என் மேலே கோபமாக இருக்கா. ஆக்சிடென்ட் நடந்த அன்னைக்கு அவ கால் பண்ணும் போது நடந்த விடயத்தைப் பற்றி எதுவுமே தெரியாமல் அவ காலை கட் பண்ணேன், அந்த விஷயம் கூட நினைவு இல்லை, அன்னைக்கு ராதாம்மா சொல்லும் போதுதான் அப்படி ஒரு சம்பவம் நடந்ததே எனக்கு ஞாபகம் வந்தது.

ஆனா அவ நானும் எங்க அம்மாகூட சேர்ந்து உங்களை எல்லாம் கொலை பண்ண நினைத்துத்தான் அப்படி பண்ணேன்னு நினைச்சுக்கிட்டு இருக்கா. நான் அன்னைக்கு செய்த ஒரு சின்னத் தப்பு இன்னைக்கு என் ராதாம்மாவை என்கிட்ட இருந்து மொத்தமாக பிரிச்சுடுச்சு. இனிமேல் என்னைப் பார்க்கவே மாட்டேன்னு சொல்லிட்டு அவ போயிட்டா, என்னால எப்படி அத்தை இதை தாங்கிக் கொள்ள முடியும்? சத்தியமாக என்னால அவளைப் பிரிந்து இருக்க முடியாது அத்தை” கிருஷ்ணா தன் கண்களிலிருந்து கண்ணீர் வடிவதைக் கூட அறியாதவனாக தன்னை மறந்து பேசிக் கொண்டு நிற்க,

அவனது கைகளை ஆதரவாக அழுத்திக் கொடுத்த தேவி, “ஏற்கனவே உன் தம்பி, தங்கை எல்லாம் வள்ளி இறந்து போன கவலையில் ரொம்ப சோகமாக இருப்பாங்க, இந்த சமயத்தில் நீ இப்படி அழுது புலம்பினால் யாருக்கு யாரு ஆறுதல் சொல்லுறது கிருஷ்ணா? நீ முதல்ல உன் தம்பி, தங்கையைக் கவனி, அப்புறம் அனுராதா பற்றி யோசிக்கலாம், இப்போதைக்கு நான் சொல்லுறதை மட்டும் பண்ணு” என்றவாறே சிறிது நேரம் அவனோடு பேசிக்கொண்டு அவனது காயத்திற்கும் மருந்திட்டு விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்று விட, மறுபுறம் அனுராதா தான் கொண்டு வந்த பெட்டியை அவளது வீட்டின் ஹாலின் நடுவே தூக்கிப் போட்டு விட்டு மூச்சு வாங்கியபடியே அங்கிருந்த நாற்காலியில் சென்று அமர்ந்து கொண்டாள்.

காலையிலிருந்து நடந்த நிகழ்வுகளை எல்லாம் தனக்குள் மீட்டிப் பார்த்தபடியே அவள் அமர்ந்திருந்த தருணம் அவளது முகத்தின் முன்னால் நீர் நிரம்பிய டம்ளரை கரமொன்று நீட்ட, “இந்தக் கிருஷ்ணாவுக்கு எத்தனை தடவை சொன்னாலும் அறிவே வராது போல, இன்னைக்கு அவனை உண்டு, இல்லைன்னு ஆக்குறேன்” என்றபடியே அந்த டம்ளரைத் தள்ளி விடப் போனவள், அந்த டம்ளரைப் பிடித்துக் கொண்டு நின்ற ராமச்சந்திரனைப் பார்த்து அதிர்ச்சியாக எழுந்து நின்றாள்.

“ராமுப்பா! நீங்களா?”

“ஏன், இப்போதான் இந்த ராமுப்பா உன் கண்ணுக்குத் தெரியுறேனா?”

“ஐயோ! அப்படி எல்லாம் இல்லை ப்பா. அந்தக் கிருஷ்ணாவாலதான் தேவையில்லாமல் டென்ஷன்”

“ஏன்? அப்படி அவன் என்ன பண்ணான்?”

“என்னப்பா எதுவுமே தெரியாத மாதிரி கேட்குறீங்க?”

“கிருஷ்ணாவோட அம்மா, அப்பா பண்ண தப்புதான் எனக்குத் தெரியும், ஆனா கிருஷ்ணா என்ன பண்ணான்னு எனக்குத் தெரியாதே, இன்னும் சொல்லப்போனால் அவன் என்ன பண்ணான்னு நீ இதுவரைக்கும் என்கிட்ட சொன்னதும் இல்லையே”

“அப்பா! இப்போ எதற்காக இப்படி எல்லாம் பேசுறீங்க? அவன் என்ன பண்ணான்னு உங்களுக்கு மறந்து போச்சா என்ன? நான் வேணும்னா மறுபடியும் சொல்லட்டுமா, சொல்லுங்க, சொல்லட்டுமா?”

“அதைத்தான் நானும் கேட்கிறேன் அனும்மா, கிருஷ்ணா என்ன பண்ணான்னு சொல்லு?” ராமச்சந்திரன் தன் கையிலிருந்த டம்ளரை அனுராதாவின் முன்னாலிருந்த மேஜை மீது வைத்து விட்டு தன் கைகளைக் கட்டிக் கொண்டு அவளை நிமிர்ந்து பார்க்க, அதேநேரம் அவளும் அவரது கேள்விக்கு பதில் சொல்லத் தயார் என்பது போல நின்று கொண்டிருந்தாள்.

“சரிம்மா, இப்போ நீ சொல்லலாம்” ராமச்சந்திரன் அனுராதாவைப் பார்த்து பேசும்படி தன் கையை அசைக்க,

சிறிது நேரம் என்ன சொல்வது என்று தெரியாமல் தடுமாறியவள், “ஆஹ், என் அம்மா, அப்பாவோட ஆக்சிடென்ட்க்கு கிருஷ்ணாவோட அம்மா, அப்பா தானே காரணம்?” என்று கூற,

சிறு புன்னகையுடன் அவளைப் பார்த்து ஆமோதிப்பாக தலையசைத்தவர், “அது சரிதான் அனும்மா, ஆனா நான் கேட்டது கிருஷ்ணா என்ன பண்ணான்னு தானே?” என்று கேட்க, அவளோ அவரது கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் ஒரு சில நொடிகள் திணறிப் போனாள்.

“என்னம்மா அனுராதா, பதிலையே காணோம்? ஒருவேளை என் கேள்விக்கு பதில் சொல்ல விருப்பமில்லாமல் அமைதியாக இருக்கியா? இல்லை, பதிலே இல்லாமல் அமைதியாக இருக்கியா?” ராமச்சந்திரன் கேள்வியாக அனுராதாவை நோக்க, தன் கைகளைப் பிரிப்பதும், கோர்ப்பதுமாக அந்த இடத்தில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தவள் ஒரு சில நிமிடங்கள் கழித்து சோர்வோடு அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்.

“இப்போ எதற்காக ராமுப்பா என்னை இப்படி குழப்பி விட்டீங்க?” அனுராதா சலித்துக் கொண்டே தன் நெற்றியை நீவி விட்டபடி ராமச்சந்திரனை நிமிர்ந்து பார்க்க,

அவள் முன்னால் இன்னொரு நாற்காலியை எடுத்துப் போட்டு அமர்ந்து கொண்டவர், “நான் ஒண்ணும் உன்னைக் குழப்பல அனும்மா, உண்மையைப் புரிய வைக்க முயற்சி பண்ணுறேன், அவ்வளவுதான். நான் உன்னோட கோபத்தில் தப்பு இருக்குன்னு சொல்லல, அந்த கோபத்தைக் காட்டும் இடத்தில்தான் தப்பு பண்ணுறேன்னு சொல்லுறேன். பழி ஓரிடம், பாவம் ஓரிடம்ன்னு சொல்லுவாங்க, அது போலத்தான் யாரோ பண்ண தப்புக்கு அதைப்பற்றி எந்தவொரு தகவலும் தெரியாத ஒருத்தரை நீ காயப்படுத்துற.

ஒருவேளை உண்மையாகவே உன் அம்மா, அப்பாவோட ஆக்சிடென்டில் கிருஷ்ணாவுக்கு தொடர்பு இருந்திருந்தால் அவங்களை உயிரோடு பார்த்த பிறகு உன்கிட்ட கூட்டிட்டு வரணும்னு அவனுக்கு என்ன தேவை வந்தது? அங்கேயே அவங்களை ஏதாவது பண்ணிட்டு எதுவுமே தெரியாத மாதிரி இங்கே வர அவனுக்குத் தெரியாதா என்ன? நீ உன் கண்ணை மறைத்து கோபம்ன்னு ஒரு திரையைப் போட்டிருக்க இல்லையா? அதுதான் உன்னை இந்தளவிற்கு ஆட்டி வைக்கிறது, முதல்ல அந்த கோபத்தைக் கொஞ்சம் விலக்கி வை, அப்போதான் எது சரி, எது தப்புன்னு உனக்குப் புரியும்” என்றவாறே அவளது தலையில் தன் கையை வைத்து அழுத்திக் கொடுத்து விட்டு அங்கிருந்து செல்லப் பார்க்க, அவளோ அவரது கைகளைப் பிடித்துக் கொண்டு அந்த கைகளிலேயே தன் முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.

“அனும்மா, என்னடா ஆச்சு?” ராமச்சந்திரனின் பரிவான குரலில் மெல்ல தன் முகம் நிமிர்த்தியவள்,

“ஐ யம் சாரி ராமுப்பா, நீங்க எனக்கு ரொம்ப பெரிய உதவி பண்ணியிருக்கீங்க, ஆனா நான் உங்களை என்னோட சுயநலத்திற்காக பாவிப்பது போல நடத்திட்டேன், தயவுசெய்து என்னை மன்னிச்சிடுங்க ப்பா. என் அம்மா, அப்பா உயிரோடு இருக்கும் உண்மையை இத்தனை வருஷமாக உங்ககிட்ட சொல்லாமல் விட்டது தப்புதான், தயவுசெய்து என்னை மன்னிச்சிடுங்க” என்றவாறே கண்கள் கலங்க,

அவளது கண்களைத் துடைத்து விட்டவர், “நீ உண்மையை மறைத்து வைத்ததில் எனக்கு கொஞ்சம் வருத்தம் இருந்தாலும், உன் மேலே நான் வைத்திருக்கும் அந்த அளவில்லாத பாசம் அந்த வருத்தத்தை எல்லாம் இல்லாமல் ஆக்கிடுச்சு அனும்மா. நீ அதைப்பற்றி எல்லாம் யோசிச்சு உன்னைக் கஷ்டப்படுத்தாமல் நான் சொன்ன விடயங்களை எல்லாம் கொஞ்சம் யோசித்துப் பாரு, எனக்கு அது போதும்” என்று விட்டு அங்கிருந்து சென்று விட, அவளோ அவர் சொன்ன வார்த்தைகளையும், சிறிது நேரத்திற்கு முன்பு கிருஷ்ணாவோடு நடந்த சம்பாஷணையையும் மீட்டிப் பார்த்தபடி தனது அறைக்குள் வந்து அடைந்து கொண்டாள்.

‘நடந்த சம்பவங்களுக்கும், கிருஷ்ணாவுக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லைன்னு எனக்கும் தெரியும், ஆனால் நான் ஏன் அவனைக் காயப்படுத்திப் பார்க்க நினைக்கிறேன்? அதுவுமில்லாமல் அவன் கஷ்டப்படுவதைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு ஏதோ வித்தியாசமாக இருக்கே. என்னோட மூளை அவனைக் கஷ்டப்படுத்த சொல்லி என்னைத் தூண்டிக் கொண்டே இருக்கிறது, ஆனால் என்னோட மனசு அவனுக்கு சின்ன வலியைக் கூட கொடுக்காதேன்னு சொல்லுது. என்னோட மூளைக்கும், மனசுக்கும் நடுவில் சிக்கிக்கிட்டு நானே பெரும் குழப்பத்தில் இருக்கேன், இந்த நேரம் பார்த்து ராமுப்பா வேறு இன்னும் என்னைக் குழப்பி விட்டுட்டுப் போயிட்டாங்க. இப்போ நான் என்னதான் பண்ணுறது?

இப்படியான ஒரு குழப்பமான தருணத்தில் நான் கிருஷ்ணா பக்கத்தில் இருந்தால் நான் என்னை மறந்து அவன் பக்கம் போயிடுவேனோன்னு பயத்தில்தான் அந்த வீட்டை விட்டே இவ்வளவு அவசரமாக வெளியே வந்தேன், ஆனா அந்த வீட்டிலிருந்த போது எனக்குள் இருந்த குழப்பத்தை விட இப்போ இருக்கும் குழப்பம்தான் பலமடங்கு அதிகமான மாதிரி இருக்கு, ஐயோ! எனக்கு தலையே சுற்றுதே’ உச்சி வெயில் தன் கால்களை தீயாக சுடுவதைக் கூட உணர முடியாதவளாக அனுராதா தன்னறைப் பால்கனியில் பெரும் சிந்தனை வயப்பட்டவளாக தன் தலையைப் பிடித்துக் கொண்டு நின்று கொண்டிருக்க, மறுபுறம் கிருஷ்ணா தனது அறையின் ஒரு மூலையில் கண்ணீர் விட்டபடி அமர்ந்திருந்தான்.

இன்றைய ஒரு நாள் தனது வாழ்நாளில் இத்தனை வலிகளைக் கொடுக்கக் கூடும் என்று அவன் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்கமாட்டான்.

ஒரு புறம் தனது அன்னையின் இறப்பு, மறுபுறம் தனது உயிரோடு கலந்து போனவளின் வெறுப்பும், பாராமுகமும்.

ஒவ்வொரு உண்மைகளையும் தேடித் தேடிக் கண்டறிந்து அவற்றை எல்லாம் சிறிது சிறிதாக நிவர்த்தி செய்யலாம் என்று கிருஷ்ணா எத்தனையோ கனவுக் கோட்டைகளை கட்டியிருக்க, அவை அனைத்தும் ஒரே நொடியில் தரை மட்டமாகிப் போயிருந்தது.

ஒவ்வொருவரும் தங்கள் பக்கம் இருக்கும் கவலைகளையும், பிரச்சினைகளையும் அவன் முன்னால் நிறுத்தி நியாயம் கோரும் போது தனக்கான பிரச்சினைகளை யாரிடம் சொல்லி அழுவது என்று அவனுக்குப் புரியவில்லை.

என்னதான் தவறுகளை செய்து தவறான ஒரு நபராக இந்த சமூகத்தினால் சித்தரிக்கப்பட்டாலும் சிறு வயது முதல் தன்னைப் பாசமாக வளர்த்த தன் அன்னையிடம் சென்று தன் மனக்குமுறல்களை எல்லாம் கொட்டி விடலாம் என்று அவன் நினைத்தாலும் அதற்கும் இப்போது வழியில்லை.

தனது கவலைகளை எல்லாம் மறைத்து தன்னை சுற்றியிருக்கும் எல்லோரையும் தைரியமாக இருக்கும்படி ஆறுதல் சொல்லித் தேற்றியவன், இப்போது தன்னைத் தேற்ற ஆளின்றி வெறிச்சோடிக் கிடக்கும் தன்னறைக்குள் தனிமரம் போல் அமர்ந்து மௌனமாக அழுது கொண்டிருந்தான்……….