நீயின்றி நானுமே நீரின்றி மேகமே – 17

eiPONP961496-8bf44a5d

வள்ளி இவ்வுலகை விட்டுப் பிரிந்து அன்றோடு முழுமையாக இரண்டு மாதங்கள் முடிவு பெற்றிருந்தது.

இந்த இரண்டு மாத இடைவெளியில் கிருஷ்ணா அவனாகச் சென்று அனுராதாவை சந்திக்க முயலவில்லை.

தனது அன்னையின் இறுதிக்கிரியைகள் அன்று தங்கள் வீட்டிலிருந்து அனுராதா சென்ற பின்னர் அவளை எந்த வகையிலும் தொல்லை செய்ய மாட்டேன் என்று உறுதியெடுத்துக் கொண்டவன் அதை இன்று வரை கச்சிதமாக கடைப்பிடித்தும் வருகிறான்.

அதேநேரம் அனுராதா தன் மனதிற்குள் கிருஷ்ணா பற்றிய நினைவுகளை மறக்கவும் முடியாமல், தன் பிடிவாதக் குணத்தை விட்டுக் கொடுக்கவும் முடியாமல் வெகுவாகத் திணறித்தான் போனாள்.

கிருஷ்ணா தன்னை இந்த இரண்டு மாதங்களாக சந்திக்க முயலவில்லை என்று அவளது மூளை நிம்மதியாக உணர்ந்தாலும், அவளது மனதோ அவன் தன்னை மொத்தமாக மறந்து விட்டானோ என்று எண்ணிக் கவலை கொள்ளவும் தயங்கவில்லை.

மனதிற்குள் அவன் மீதான காதலையும், வெளியே அவன் மீது வெறுப்பு இருப்பது போலும் நடித்து தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டிருப்பதில் எந்தவொரு பலனும் இல்லை என்பதை நாளடைவில் மெல்ல மெல்லப் புரிந்து கொண்டவள் தனது பிடிவாதக் குணத்தை விட்டு விட்டு கிருஷ்ணாவைத் தேடிச் செல்ல முடிவெடுத்திருந்தாள்.

இத்தனை நாட்களுக்குப் பின் அவனை சந்திக்கப் போகிறோம் என்கிற படபடப்பான உணர்வுடன் தயாராகி வந்து நின்ற அனுராதாவைப் பார்த்து வியந்து போன தேவி, “ராதாம்மா, எங்கே டா கிளம்பிட்ட? யாரையாவது சந்திக்க போறியா?” என்று வினவ,

அவருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தவித்துப் போனவள், “அதெல்லாம் ஒண்ணும் இல்லை, சும்மா கொஞ்ச நேரம் வெளியே போயிட்டு வரலாம்னு நினைச்சேன். அவ்வளவுதான்” என்று விட்டு, அவசர அவசரமாக அங்கிருந்து சென்று விட, அவரோ அவளது விசித்திரமாக நடவடிக்கைகளைப் பார்த்து சிறிது குழப்பத்துடன் தனது வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினார்.

தனது பெற்றோரின் விபத்தின் பின்னரான மூன்று வருடங்களுக்கு பின் கிருஷ்ணாவை சந்திக்க எண்ணி வரும் போது கூட அவள் மனது இந்தளவிற்கு தயக்கம் கொள்ளவில்லை, ஏன் இன்னும் சொல்லப்போனால் அவனைப் பார்ப்பதைப் பற்றி அவள் எதையும் சிந்திக்கவே இல்லை என்று கூட கூறலாம்.

ஆனால் இப்போது வெறும் இரண்டு மாதங்கள் இடைவெளியே அவளுக்குள் ஏதேதோ மாற்றங்களை உண்டு பண்ணியது போல இருந்தது.

அதற்கு காரணம் கிருஷ்ணா மீது எந்தவொரு தவறுமில்லை என்கிற உண்மையை அவள் அறிந்து கொண்டதா? அல்லது அவள் ஆழ் மனதில் பதிந்து போயிருந்த அவளது காதல் நினைவுகளா? அது என்ன என்பதை அவளாலேயே பிரித்தறிந்து கொள்ள முடியாமல் இருக்க, தன் சிந்தனைகளுடனேயே கிருஷ்ணாவின் வீட்டை வந்து சேர்ந்திருந்தவள் உள்ளே செல்வதா? வேண்டாமா? என்று தயங்கியபடி நிற்க, சரியாக அந்த தருணம் பார்த்து கிருஷ்ணா அவனது வீட்டிலிருந்து வெளியேறி வந்து கொண்டிருந்தான்.

கிருஷ்ணாவைப் பார்த்ததுமே அனுராதாவின் இதயம் தாறுமாறாக துடிக்க, தன் கைகளை இறுக பிடித்து தன்னை சுதாரித்துக் கொண்டவள் சிறு புன்னகையுடன் அவனது முகத்தைப் பார்த்துக் கொண்டு நின்றாள்.

அனுராதா கிருஷ்ணாவிடம் எப்படி தன் பேச்சை ஆரம்பிப்பது என்ற சிந்தனையோடு நின்று கொண்டிருந்த நேரம், தன் வீட்டு வாயிலில் ஒருத்தி நின்று கொண்டிருக்கிறாள் என்பதைக் கண்டு கொள்ளாதது போலவே அவளைக் கடந்து சென்ற கிருஷ்ணா, தன் வண்டியை எடுத்துக் கொண்டு சென்று விட, அவளோ அவன் சென்ற பாதையைப் பார்த்து அதிர்ச்சியாகி நின்றாள்.

“கிருஷ்ணா!” அனுராதா தன் பலம் கொண்ட மட்டும் அவனைக் கத்தி அழைக்க முயல, அந்த அழைப்பைக் கூட பொருட்படுத்தாமல் அங்கிருந்து சென்றவன் ஒரு முறை கூட அவளைத் திரும்பிப் பார்க்கவே இல்லை.

“கிருஷ்ணா, நீ என்னை மொத்தமாக மறந்துட்டியா?” அவன் சென்ற வழியைப் பார்த்தபடியே சோர்வோடு அந்த பாதையில் நடக்கத் தொடங்கியவள், ஒரு நிலைக்கு மேல் முற்றிலும் ஓய்ந்து போனவளாக அந்த வீதியின் ஓரத்திலிருந்த ஒரு கற்குன்றில் சென்று அமர்ந்து கொண்டாள்.

“ஆரம்பத்திலேயே நீ சொல்ல வந்ததைக் காது கொடுத்து கேட்காமல் உன்னைக் காயப்படுத்தியது என் தப்புத்தான் கிருஷ்ணா. நடந்த விஷயத்திற்கும், உனக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லைன்னு தெரிஞ்சும் உன்னை மேலும் மேலும் காயப்படுத்தியது என் தப்புத்தான். என்னோட வார்த்தைகளாலும், செயலாலும் நான் உன்னை ரொம்பவே நோகடிச்சுட்டேன், அது எல்லாவற்றிற்கும் எத்தனை தடவை மன்னிப்பு கேட்டாலும் போதாது கிருஷ்ணா, ஆனா இது எல்லாவற்றிற்கும் மேலாக நான் உன்னை ரொம்ப ரொம்ப நேசிக்கிறேன். என்னோட காதல் அப்போதும் சரி, இப்போதும் சரி ஒரேமாதிரியாகத்தான் இருக்கு, அதைப் புரிந்து கொள்ளாமல் நான் உன் கிட்ட ரொம்ப ரொம்ப மோசமாக நடந்துக்கிட்டேன்.

என் அம்மா, அப்பா மேலே நான் வைத்திருந்த பாசம் என் கண்ணை மறைச்சுடுச்சு, அதனால உன்னோட உண்மையான பாசத்தைக் கூட நான் நாடகம்ன்னு சொல்லி உன்னைக் காயப்படுத்திட்டேன். இதை எல்லாம் உன் கிட்ட எடுத்துச் சொல்லி உன்கிட்ட என்னோட காதலை சொல்லலாம்ன்னு நான் உன்னைத் தேடி வந்தால் நீ என்னை கணக்கெடுக்காமலேயே போயிட்ட. அன்னைக்கு இதேபோல் உன்கிட்ட நான் நடந்து கொண்டது உனக்கு எவ்வளவு பெரிய வலியைக் கொடுத்திருக்கும்ன்னு எனக்கு இப்போதான் புரியுது கிருஷ்ணா, நான் பண்ண தப்பை எல்லாம் நான் உணர்ந்துட்டேன் கிருஷ்ணா, நான் உணர்ந்துட்டேன். தயவுசெய்து மறுபடியும் என்கிட்ட வந்துடு கிருஷ்ணா, ப்ளீஸ், வந்துடு” கிருஷ்ணா சென்ற பாதையைப் பார்த்து தன் கண்கள் கலங்க அமர்ந்திருந்த அனுராதா சிறிது நேரம் கழித்து தன் முகத்தை துடைத்துக் கொண்டு அங்கிருந்து எழுந்து சென்று விட, அவள் மனமோ கிருஷ்ணாவைப் பார்க்க ஏங்கித் தவித்தபடியே துடித்துக் கொண்டிருந்தது.

தனது கோபத்தில் நியாயம் இருந்தது என்கிற உண்மை அவளுக்குத் தெரிந்திருந்தாலும், ராமச்சந்திரன் சொல்லியது போல தான் கோபத்தைக் காண்பித்த இடம்தான் நியாயமானது இல்லை என்பதை அனுராதா வெகு நன்றாகவே உணர்ந்து கொண்டிருந்தாள்.

‘கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் போல தன் வாழ்வை விட்டே கிருஷ்ணாவை போகச் செய்து விட்டு இப்போது மறுபடியும் அவனைத் தன்னிடம் வரச் சொல்லி நினைத்தால் அது அத்தனை சுலபத்தில் நடந்து விடுமா என்ன?’ என்றெண்ணியபடியே தன் வீட்டை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தவள், சட்டென்று ஏதோ நினைவு வந்தவளாக கிருஷ்ணாவின் அலுவலகம் இருக்கும் பகுதியை நோக்கி நடை போடத் தொடங்கினாள்.

மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அவனது அலுவலகத்தின் முன்னால் வந்து நின்றவள், “நீங்க எவ்வளவு தூரம் வேணும்னாலும் ஓடுங்க மிஸ்டர்.ஹரிகிருஷ்ணா, நீங்க எங்கே போனாலும் இந்த அனுராதா உங்களை விடவே மாட்டா” என தனக்குள் பேசியபடியே அந்த அலுவலக வாயிலில் நின்று கொண்டிருந்த காவலாளியின் அருகில் சென்றவள் அவரிடம் ஏதோ சொல்லியனுப்பி விட்டு சிறு புன்னகையுடன் தன் கைகளைக் கட்டிக் கொண்டு நின்றாள்.

அந்த காவலாளி உள்ளே சென்று விட்டு திரும்பி வந்த அடுத்த கணமே கிருஷ்ணாவும் அவர் பின்னால் அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடி வர, “சபாஷ் அனுராதா! கலக்கிட்ட போ” என்றவாறே தனது தோளில் தட்டிக் கொடுத்துக் கொண்டவள் அவனைப் பார்த்து நக்கலாக புன்னகைக்க, அவனோ அவர்கள் அருகில் நின்று கொண்டிருந்த காவலாளியை கோபமாக திரும்பிப் பார்த்தான்.

“யாரு என்ன சொன்னாலும் என்ன, ஏதுன்னு கூட கேட்காமல் அப்படியே நம்பிடுவீங்களா?” கிருஷ்ணா தன்னருகே நின்று கொண்டிருந்த காவலாளியைப் பார்த்து சிறு அதட்டலுடன் வினவ,

அவனைப் பார்த்து திருதிருவென விழித்துக்கொண்டு நின்றவர், “ஆனா, தம்பி இவங்க உங்க சம்சாரம் தானே? உங்க கல்யாணத்துக்கு கூட நான் வந்திருந்தேனே?” என்று கூறவும்,

அவனோ சிறு சலிப்புடன், “என்னோட மனைவி என்னை விட்டுப் பிரிந்து போய் இரண்டு மாதம் ஆகுது, இனிமேல் யாராவது வந்து என்னோட மனைவின்னு உங்ககிட்ட சொன்னால் உடனே என்கிட்ட வந்து சொல்ல தேவையில்லை, ஏன்னா என் மனைவி என்னைத் தேடி வரவே மாட்டேன்னு சொல்லிட்டு போயிட்டா. அவ சொன்னா சொன்னபடி செய்வா” என்று விட்டு, மீண்டும் அலுவலகத்தினுள் நுழைந்து விட, அனுராதாவோ அவனைத் திகைப்புடன் பார்த்துக் கொண்டு நின்றாள்.

‘கிருஷ்ணா, நீ என் மேலே இந்தளவிற்கா கோபமாக இருக்க? பரவாயில்லை, உன் கோபம் நியாயமானதுதான், ஆனா அதற்காக எல்லாம் நான் சோர்ந்து போக மாட்டேன், நீ வேணும்னா பாரு மறுபடியும் உன் வாயாலேயே ராதாம்மா ஐ லவ் யூ ன்னு சொல்ல வைக்கிறேன்’ என தனக்குள் நினைத்துக் கொண்ட அனுராதா அந்த அலுவலக வாயிலில் போடப்பட்டிருந்த பெஞ்சில் அமர்ந்து கொண்டு, கிருஷ்ணா அலுவலகம் முடிந்து வரும் நேரத்தை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்தாள்.

காலையிலிருந்து ஒரு பருக்கை உணவு கூட எடுத்துக் கொள்ளாமால் கிருஷ்ணாவிற்காக காத்திருந்தவள் மாலை நேரம் அவன் அலுவலகத்தில் இருந்து வெளியேறி வருவதைப் பார்த்ததும் முகம் கொள்ளாப் புன்னகையுடன் அவன் முன்னால் வந்து நிற்க, அவனோ அப்போதும் அவளைக் கண்டுகொள்ளாமல் கடந்து செல்லப் பார்த்தான்.

ஆனால் அனுராதாவோ அவனது பாராமுகத்தை பொறுத்துக் கொள்ளாமல் அவனது வண்டி சாவியை பிடுங்கிக் கொண்டு, “என்ன ரொம்ப ஓவராகத்தான் சீன் போடுற? நானும் போனால் போகட்டும்ன்னு கொஞ்சம் பொறுமையாக போனால் சார் ரொம்பத்தான் துள்ளுறீங்க. மவனே, இந்த விளையாட்டை எல்லாம் வேறு எங்காவது வைச்சுக்கோ, என் கிட்ட எல்லாம் இந்த சீனே ஆகாது” என்றவாறே அவனது வண்டியின் பின்னால் ஏறி அமர்ந்து கொள்ள, எதுவும் பேசாமல் அவளது கையிலிருந்த சாவியை வாங்கிக் கொண்டவன் வண்டியை ஸ்டார்ட் செய்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான்.

கிருஷ்ணா வண்டி ஓட்டும் நேரம் முழுவதும் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, அனுராதாவே ஏதாவது பேசி அவனின் வாயிலிருந்து ஒரு வார்த்தையாவது வர வைத்து விட வேண்டும் என்று மிகவும் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தாள்.

தனது வீட்டுக்கு சென்று சேரும் வரை அவளிடம் எந்தவொரு பேச்சு வார்த்தையும் வளர்க்காமல் அமர்ந்திருந்தவன் தன் வண்டியை நிறுத்தி விட்டு அவளைத் திரும்பியும் பார்க்காமல் வீட்டினுள் செல்லப் போக, “டேய் கிருஷ்ணா! நில்லு டா” கோபத்தினால் சிவந்து போன முகத்துடன் அவன் முன்னால் வந்து நின்ற அனுராதா,

“நான் இவ்வளவு நேரமாக பேசிட்டே இருக்கேன், நீ என்னடான்னா என்னைக் கண்டுக்காமலேயே போற, உனக்கு என்னதான் பிரச்சினை?” என்று கேட்க,

அவளை வியப்பாக நிமிர்ந்து பார்த்தவன், “அதை நான் உங்க கிட்ட கேட்கணும் அனுராதா மேடம்? உங்களுக்கு என்ன பிரச்சினை? அன்னைக்கு நானும் வேணாம், என் உறவும் வேணாம்ன்னு சொல்லிட்டு போனது நீங்கதானே? இப்போ மறுபடியும் வந்து ஏதேதோ பேசினால் எனக்கு எப்படி மேடம் புரியும்?” என்று வினவ, அவளோ அவனைத் தவிப்புடன் பார்த்துக் கொண்டு நின்றாள்.

“நீங்க ஆரம்பத்திலிருந்தே என்னைப் பிடிக்காதுன்னு சொல்லிட்டே இருந்தீங்க, இருந்தாலும் ஒரு நாள் இல்லை ஒரு நாள் என்னைப் புரிஞ்சுக்குவீங்கன்னு உங்க பின்னாடியே சுற்றி சுற்றி வந்தேன், அப்போவும் நீங்க என்னைப் புரிஞ்சுக்கவே இல்லை. சரி, பரவாயில்லை, நான் விலகிப் போனால் தான் உங்களுக்கு சந்தோஷம் போலன்னு நினைச்சு உங்க வழியை விட்டு மொத்தமாக விலகிப் போனேன், அதற்கு அப்புறமும் நீங்க இப்படி பண்ணால் நான் என்னதான் மேடம் பண்ணுறது?”

“இல்லை கிருஷ்ணா, நான் இதுவரைக்கும் நடந்த எல்லாவற்றிற்கும் மன்னிப்பு கேட்கத்தான் வந்தேன்”

“மன்னிப்பா? நீங்க போய் என்கிட்ட மன்னிப்பு கேட்கலாமா மேடம்? நீங்க யாரு? எப்படியான ஒருத்தங்க? நீங்க போய் என்கிட்ட, அதெல்லாம் சரி வராது மேடம்”

“ஐயோ! முதல்ல இந்த மேடம்ன்னு சொல்லுவதை நிறுத்து கிருஷ்ணா. ஓவர் இரிடிடேட்டிங் ஆகுது”

“சரிங்க, இனி சொல்லல”

“அப்போ நான் செய்த தப்பை எல்லாம் மன்னிக்கவே மாட்டியா கிருஷ்ணா”

“எந்த தப்பும் செய்யாத என்னையே நீங்க மன்னிக்கல, அப்படியிருக்கும் போது உங்களை மன்னிக்க நான் யாரு?”

“அப்போ எனக்கு என்ன ஒரு பிரச்சினையோ, கவலையோ வந்தாலும் உனக்கு அது கவலையைத் தராதா?”

“இல்லை”

“அப்படின்னா இனிமேல் நீ வேறு, நான் வேறு. அப்படியா?”

“ஆமாம், அதுதான் எல்லோருக்கும் நல்லது” கிருஷ்ணா வலி நிறைந்த குரலுடன் அனுராதாவைப் பார்த்து இயல்பாக புன்னகைத்து விட்டு அவளைத் தாண்டிச் செல்ல போன தருணம்,

“கிருஷ்ணா!” என்றவாறே அனுராதா மயங்கி சரிய, அவனோ அவளை ஒரு நொடியில் தன் கைகளில் தாங்கிக் கொண்டான்.

“ராதா! ராதாம்மா! கண்ணைத் திறந்து பாரு, உனக்கு என்ன ஆச்சு? ராதாம்மா ப்ளீஸ், என்னைக் கொஞ்சம் பாரு” கிருஷ்ணா பதட்டத்துடன் அனுராதாவின் கன்னத்தில் தட்ட, அவளோ பேச்சு மூச்சின்றி அவனது கைகளில் மயங்கிக் கிடந்தாள்.

“ஐயோ! திடீர்னு உனக்கு என்ன ஆச்சு ராதாம்மா?” பதட்டத்துடன் சுற்றிலும் தன் பார்வையை சுழலவிட்டபடியே அவளைத் தன் கைகைளில் ஏந்திக் கொண்டவன் அவசர அவசரமாக தங்கள் அறையை நோக்கி தூக்கிச் சென்று, அவளைக் கட்டிலில் படுக்க வைத்து விட்டு தன் தொலைபேசியை எடுத்துக் கொண்டு வெளியே சென்று விட, மறுபுறம் அனுராதா மெல்ல தன் ஒற்றைக் கண்ணைத் திறந்து பார்த்தாள்.

“எனக்கு என்ன நடந்தாலும் உனக்கு கவலை இல்லைன்னா சொல்லுற? இப்போ பாரு, உன் வாயாலேயே ராதாம்மான்னு சொல்ல வைச்சுட்டேன். அதேமாதிரி உன் காதலையும் சொல்ல வைக்கிறேன் மிஸ்டர் ஹரிகிருஷ்ணா” அனுராதா சிறு புன்னகையுடன் தங்கள் அறை வாயிலைப் பார்த்து பேசிக் கொண்டிருந்த நேரம், கிருஷ்ணா பதட்டத்துடன் தன் கையில் நீர் நிரம்பிய குவளை ஒன்றை எடுத்துக் கொண்டு வர, அவளோ மீண்டும் மயக்கமானது போல சட்டென்று தன் கண்களை மூடிக் கொண்டாள்.

கிருஷ்ணா தன் கையிலிருந்த குவளையில் இருந்து சிறிது தண்ணீரை எடுத்து அனுராதாவின் முகத்தில் தெளிக்கலாம் என்கிற எண்ணத்துடன் தன் கையைக் கொண்டு போன தருணம் கீழே ஒரு சில புத்தகங்கள் விழுந்து கிடந்ததைக் கவனியாமல் பதட்டத்துடன் அவளருகில் வந்தவன் கால் தடுக்கி தன் கையிலிருந்த நீர் மொத்தத்தையும் அனுராதாவின் மேல் கொட்டியிருந்தான்.

தன்னை மயக்கத்திலிருந்து எழுப்ப கிருஷ்ணா என்ன செய்யப் போகிறானோ என்கிற எண்ணத்துடன் கண்மூடிப் படுத்திருந்த அனுராதா தன் மேல் மொத்தமாக கொட்டிய நீரில் அடித்துப் பிடித்துக் கொண்டு எழுந்து அமர, அவனோ ஒரு நொடியில் நடந்து முடிந்த செயலை பார்த்து திகைத்துப்போய் நின்றான்.

“ஐயோ! கிருஷ்ணா நீ என்ன வேலை பண்ணியிருக்க? மயக்கத்திலிருக்கும் ஒருத்தரை எழுப்ப இப்படித்தான் ஒரு குடம் தண்ணீரை மொத்தமாக கொட்டுவியா? உன்னால பாரு, என் டிரெஸ் எல்லாம் நாசம். அவ்வளவு அழகாக ராதாம்மா, ராதாம்மான்னு சொல்லிட்டே படியேறி ரூம் வரை தூக்கிட்டு வந்த உனக்கு தண்ணீரைத் தெளிச்சு எழுப்பத் தெரியாதா?” அனுராதா தன் மேல் கொட்டியிருந்த நீரைத் துடைத்து விட்டபடியே கிருஷ்ணாவைப் பார்த்து சலித்துக் கொள்ள,

“ரியலி சாரி ராதா, நான் பதட்டத்தில் நடந்து வந்தேனா கீழே கிடந்த புக்ஸை கவனிக்கல, ரியலி சாரி” என்றவாறே அவளது தலையை தன் டவல் கொண்டு துடைத்து விட்டுக் கொண்டு நின்றவன்,

பின்னர் சட்டென்று ஏதோ நினைவு வந்தவனாக, “ஏய்! ஒரு நிமிஷம் இரு, நான் படியேறி வரும்போது ராதாம்மான்னு உன்னைச் சொன்னது உனக்கு எப்படித் தெரியும்? நீதான் அப்போ மயக்கத்தில் இருந்தியே?” என்று கேட்க,

அவளோ, ‘ஆஹா! அவசரப்பட்டு உளறிட்டியே ராதா. எப்படியாவது இவனை சமாளிச்சுடு’ என தனக்குள் முணுமுணுத்து கொண்டபடி தயங்கித் தயங்கி அவனை நிமிர்ந்து பார்த்தாள்……