நீயின்றி நானுமே நீரின்றி மேகமே – 18

eiPONP961496-5ed642d3

அனுராதா தான் கிருஷ்ணாவை ஏமாற்றியதைக் கண்டுபிடித்து விட்டானோ என்கிற பதட்டமான உணர்வுடன் தயங்கித் தயங்கி அவனை நிமிர்ந்து பார்க்க, அவனோ அவளது சேட்டைகளைப் பார்த்து தன் இதழோரம் வரை வந்த புன்னகையை மறைக்க பெரும் பிரயத்தனப்பட்டுக் கொண்டு நின்றான்.

அவனது உதடுகள் புன்னகையில் வளைவதைப் பார்த்ததுமே துள்ளிக் குதித்தவள், “எனக்குத் தெரியும் கிருஷ்ணா, உன்னால என் மேலே இவ்வளவு நேரம் எல்லாம் கோபமாக இருக்க முடியாதுன்னு. காலையிலிருந்து இஞ்சி தின்ன குரங்காட்டம் உர்ருன்னு இருந்த, இப்போ பார்த்தியா? எப்படி உன்னை சிரிக்க வைச்சேன்னு” என்று கூற,

அவளை நெருங்கி வந்து நின்றவன் அவளது முகத்தை தன் கைகளில் ஏந்திக் கொண்டு, “என்னோட ஒரு நாள் கோபத்தையே உன்னால தாங்கிக் கொள்ள முடியலையே, அப்போ உன்னோட இந்த நான்கு, ஐந்து மாதக் கோபத்தை மட்டும் நான் எப்படி தாங்கிக்கிட்டேன் அனுராதா? நீ என்னோடு எவ்வளவு வெறுப்பாக நடந்து கொண்டாலும், என்னை எவ்வளவோ காயப்படுத்தினாலும் நான் உன்னை விட்டு போகவே இல்லையே, அதற்கு எல்லாம் என்ன காரணம்? நான் சொல்லவா? இப்போ என்ன காரணத்திற்காக நீ என்னை விட்டுப் போக மாட்டேன்னு பிடிவாதமாக இருக்கியோ, அதே காரணம்தான், அந்த காரணம் நீ என் மேலேயும், நான் உன் மேலேயும் வைத்திருக்கும் காதல். சரியா? ” என்று வினவ, அவளோ சட்டென்று அவனைத் தன்னை விட்டும் தள்ளி விட்டிருந்தாள்.

“பதில் சொல்லு அனுராதா, நான் சொன்ன காரணம் சரியா, தவறா?”

“அது…அது…”

“உன்னால இப்போதும் தைரியமாக எனக்குப் பதில் சொல்ல முடியலை, இல்லையா அனுராதா?”

“ஏய்! யாருக்கு தைரியம் இல்லை. எனக்கு எல்லாம் யாரைப் பார்த்தாலும் பயம் இல்லை, புரிஞ்சுதா?. ஏதோ நீ கொஞ்சம் எமோஷனலா பேசினியேன்னு கொஞ்சம் அமைதியாக இருந்தால் எனக்குத் தைரியம் இல்லைன்னு சொல்லுவியா? மவனே, கொன்னுடுவேன்” அனுராதா தன்னை மறந்து கிருஷ்ணாவின் சட்டைக் காலரை இறுகப் பற்றியபடி அவனை முறைத்துப் பார்த்துக் கொண்டு நிற்க,

சிறு புன்னகையுடன் அவளது கையை தன் சட்டையிலிருந்து எடுத்து விட்டவன், “அப்போ நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு அனுராதா” எனவும்,

சலித்துக் கொண்டே அவனை நிமிர்ந்து பார்த்தவள், “இப்போ என்ன? நானாக என் வாயால் உன்னை இன்னமும் காதலிக்கிறேன்னு சொல்லணும், அவ்வளவுதானே? சரி, சரி ஐ லவ் யூ. போதுமா?” என்று வினவ, கிருஷ்ணா அவளைப் பார்த்து திகைத்துப்போய் நின்றான்.

“இது என்ன ராதாம்மா? ஏதோ தெரியாமல் காலை மிதிச்சிட்டேன் சாரின்னு சொல்லுற மாதிரி சொல்லுற”

“ஐயோடா! அப்போ சாருக்கு கேன்டில் லைட் டின்னர் ஏற்பாடு பண்ணி ஊரையே அழைச்சு சொல்லணுமா, என்ன? உன் மேல் இருக்கும் கோபத்திற்கு நான் இவ்வளவு தூரம் சொன்னதே பெரிசு போவியா?”

“இன்னும் எதற்காக என் மேலே கோபம்? அதுதான் நடந்த எல்லா விடயத்தையும் பற்றி நான் சொல்லிட்டேனே”

“எல்லா விடயத்தையும் பற்றி சொல்லிட்டியா கிருஷ்ணா”

“ஆமா, சொல்லிட்டேனே. இன்னும் ஏதாவது இருக்கா என்ன?”

“எங்களுக்கு ஆக்சிடென்ட் ஆன அன்னைக்கு உன் அம்மா கூட நீ பேசிட்டிருந்த விடயம், அது இன்னமும் என்னைக் குழப்பத்துடனேயே வைத்திருக்கு கிருஷ்ணா. உன்மேல எந்தத் தப்பும் இல்லைன்னு எனக்கு நானே புரிய வைத்துக் கொண்டாலும் இந்த ஒரு விடயம் மட்டும் என் மனதில் முரண்பாடாவே இருக்கு” என்றவாறே அனுராதா கிருஷ்ணாவைத் திரும்பிப் பார்க்க,

அவளது கைகளைப் பிடித்துக் கொண்டு அங்கிருந்த ஷோபாவில் அமர்ந்து கொண்டவன், “நீ இதே பொறுமையோடு அன்னைக்கே நான் சொல்லுவதைக் கேட்டிருந்தால் இவ்வளவு தூரம் பிரச்சினையே உருவாகியிருக்காது அனுராதா, ஆனாலும் பரவாயில்லை, நீ இப்போதாவது நடந்த விடயங்களைப் பற்றி பேச வந்திருக்கியே அதுவரைக்கும் சந்தோஷம்” என்று விட்டு, அவளது குழப்பத்திற்கான பதிலை சொல்ல ஆரம்பித்தான்.

“உனக்குத் தெரியும், அன்னைக்கு எனக்கு சென்னையில் முக்கியமான ஒரு இன்டர்வியூ இருந்தது, அந்த விஷயமாக நான் புறப்பட்டு போயிட்டேன், அதோடு எனக்கு முக்கியமான வேலையில் இருக்கும் போது தொந்தரவு பண்ணுற மாதிரி எந்த விடயமும் பண்ணப் பிடிக்காது, இன்பாக்ட் அது போன் பேசுவதாக இருந்தாலும் சரி. நான் சென்னைக்கு புறப்படும் போது உன் கிட்ட என்ன சொல்லிட்டு போனேன்னு ஞாபகம் இருக்கா?” கிருஷ்ணாவின் கேள்விக்கு ஆமோதிப்பாக தலையசைத்தவள்,

“எல்லா வேலையும் முடிச்சுட்டு ஊருக்கு வந்து என்னை எங்க வீட்டில் வைத்து சந்திச்சுட்டு அதற்கு அப்புறம்தான் உங்க வீட்டுக்குப் போவேன்னு சொன்ன” என்று கூற,

“ஆஹ்! நான் எல்லாம் தெளிவாக சொல்லிட்டுத்தானே போனேன்?” அவனது கேள்விக்கு மறுபடியும் ஆமோதிப்பாக தலையசைத்தாள்.

“நான் சென்னைக்கு போன பிறகு நீ ஊட்டிக்கு போக ரெடியானது எனக்குத் தெரியாது, நீ சொல்லவும் இல்லை. அதோடு எங்க வீட்டில் உங்க குடும்பத்திற்கு எதிராக அப்படி ஒரு சதி திட்டம் போடப்பட்டிருக்குன்னு கூட எனக்குத் தெரியாது. நான் சென்னைக்கு போய் என்னோட எல்லா வேலைகளையும் முடிச்சுட்டு ஊருக்கு திரும்பி வந்ததும் உன் கிட்ட சொன்ன மாதிரி உன்னைத் தேடி உங்க வீட்டுக்குத்தான் வந்தேன், ஆனா நீங்க யாரும் அங்கே இல்லை. சரின்னு அக்கம் பக்கத்தில் விசாரித்தால் அவங்களுக்கும் எதுவும் தெரியல.

அதற்கு அப்புறம்தான் உனக்கு கால் பண்ணேன், கால் கனெக்டே ஆகல. எங்கிட்ட சொல்லாமல் அப்படி எங்கே போயிருப்பன்னு யோசிச்சுட்டே எங்க வீட்டுக்கு போனேன், சத்தியமாக அன்னைக்கு நீ என்ன நிலைமையில் இருந்திருந்தேன்னு நடந்த உண்மை எல்லாம் தெரிய வரும் வரைக்கும் எனக்குத் தெரியவே தெரியாது. நமக்குள்ள வர்ற சின்னச் சின்ன சண்டை மாதிரி அன்னைக்கும் நீ வேணும்னே அப்படி பண்ணுறேன்னு நினைச்சு கோபத்தில் உன்னோட பேசக்கூடாது, நீயாக வந்து சாரி சொல்லணும்னு நினைச்சேன். அப்போதான் அம்மா கிட்ட இன்டர்வியூக்கு போய் நீங்க சொன்ன மாதிரியே எல்லாம் பண்ணிட்டேன், இப்போ சந்தோஷமான்னு கேட்டேன், ஆனா நீ நான் உன்னையும், உன் குடும்பத்தையும் காயப்படுத்திட்டு அதைப்பற்றி பேசியதாக நினைத்திருக்க” என்று விட்டு கிருஷ்ணா கவலையுடன் தன் கண்களை மூடிக் கொண்டு அமைதியாக அமர்ந்திருக்க, அனுராதாவும் அவனது அமைதியைக் கலைக்க விரும்பாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்.

சிறிது நேரத்தில் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு அவளைத் திரும்பிப் பார்த்தவன் அவளது கைகளைப் பிடித்துக் கொண்டு, “அந்தநேரத்தில் தான் எனக்கு நீ கால் பண்ண ராதாம்மா, நான் எப்போதும் போல நம்ம சண்டையில் நடப்பது போல நினைத்துத்தான் உன் காலை கட் பண்ணேன். ஆனா ஒரு வேளை அன்னைக்குதான் நீயும், நானும் பேசப் போகும் கடைசி நிமிஷம்ன்னு தெரிஞ்சிருந்தா நிச்சயமாக அப்படி நான் பண்ணியிருக்கவே மாட்டேன். நீ உன்னோட பக்கத்தில் நடந்த விடயங்களையும், பார்த்த சம்பவங்களையும் வைத்து ஒருமாதிரி ஃபீல் பண்ணியிருந்த, அதேமாதிரி என்னோட பக்கமும் என்ன நடந்ததுன்னு ஒரு தடவையாவது நீ கேட்க ட்ரை பண்ணியிருக்கலாம், ஆனா அதற்கிடையில் காலம் கடந்து போச்சு. நான் உன் போனைக் கட் பண்ணிட்டு மறுபடியும் கொஞ்ச நேரம் கழித்து உன் போனுக்கு ட்ரை பண்ணேன், லைன் கிடைக்கவே இல்லை. மறுபடியும் மறுபடியும் பல தடவை முயற்சி பண்ணேன், எந்தப் பலனும் இல்லை.

அப்போதான் எனக்கு சின்னதாக ஒரு சந்தேகம் வந்தது, வழக்கமாக இவ்வளவு நேரமாக நீ என் போனை எடுக்காமல் இருக்க மாட்ட, நான் சண்டை போட்டாலும் சரி, நீ சண்டை போட்டாலும் சரி, கொஞ்ச நேரம் கழித்து நீயாகவே பேசிடுவ. ஆனா அன்னைக்கு எல்லாமே தப்பாக இருந்தது போல இருந்தது, அதனால அதற்கு மேலேயும் தாமதிக்க கூடாதுன்னு உன்னைத் தேடி மறுபடியும் உங்க வீட்டுக்கு வந்தேன், நீங்க யாரும் இல்லை. எனக்குத் தெரிந்த எல்லோர்கிட்டயும் விசாரித்துப் பார்த்தேன், யாருக்கும் எதுவும் தெரியல. சரி, ஒரு நாளில் வந்துடுவ, இரண்டு நாளில் வந்துடுவன்னு காத்துட்டு இருந்தேன், முழுமையாக மூணு வருஷம் கழிச்சு நீ வந்த, ஆனா மொத்தமாக வேறொரு அனுராதாவா வந்து நின்ன ” என்று கூற, அவளோ அப்போதும் பதில் எதுவும் பேசாமல் அமைதியாக அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டு அமர்ந்திருந்தாள். “ஆரம்பத்தில் நீ என்கிட்ட நடந்துகிட்ட முறையைப் பார்த்து நான் ரொம்ப கோவப்பட்டேன் ராதாம்மா, கோபம்ன்னு சொல்லுவதை விட வருத்தம்தான் அதிகமாக இருந்தது. நான் எந்தவொரு தப்புமே பண்ணாமல் எதற்காக நீ என்னை விட்டுட்டுப் போனேன்னு குழப்பம் ஒருபுறம், மறுபடியும் திடீர்னு என் முன்னாடி வந்து நின்னு என்னைக் கல்யாணம் பண்ணிக்கனும்ன்னு பிடிவாதமாக இருந்த, அந்தக் குழப்பம் மறுபுறம்ன்னு ரொம்ப தவிச்சுப் போயிட்டேன் ராதாம்மா.

என்னைச் சுற்றி என்ன நடக்குதுன்னு புரிஞ்சுக்கவே எனக்கு ரொம்ப நாள் ஆச்சு, அதற்கு அப்புறம் அந்த கோபமெல்லாம் எங்கே, எப்படி போச்சுன்னு சத்தியமாக தெரியல. நீ என்னை ஒவ்வொரு முறை திட்டும் போதும், கஷ்டப்படுத்தும் போதும் எனக்கு அதெல்லாம் பெரிதாக தோணவே இல்லை, ஏன்னா அந்தக் கோபத்தை எல்லாம் உன்மேல நான் வைத்திருந்த காதல் மழுங்கடிக்கச் செய்துடுச்சு. என்னைக்காவது ஒரு நாள் நீயும் அந்தக் காதலை உணருவேன்னு நான் எதிர்பார்த்தேன், அதுவும் நடந்துடுச்சுன்னு நம்புறேன். ஆனா அது எல்லாவற்றிற்கும் மேலே என் மனதில் இருக்கும் விடயங்களை எல்லாம் பகிர்ந்து கொள்ளக்கூட ஒரு ஆள் இல்லாமல் ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன் ராதாம்மா, அந்தக் கஷ்டம் என் எதிரிக்கு கூட வரக்கூடாது” கிருஷ்ணா தன் மனதிற்குள் இருக்கும் கவலைகளை எல்லாம் சொல்லி முடித்து விட்ட திருப்தியோடு அனுராதாவின் தோளிலேயே சாய்ந்து கொண்டு கண்ணீர் விட, அப்போதும் அனுராதா தன் வாய்திறந்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

கிருஷ்ணா தனக்குள் இத்தனை நாட்களாக மறைத்து வைத்திருந்த எல்லா உள்ளக்குமுறல்களையும் கொட்டித் தீர்த்து விட்ட திருப்தியோடு தன் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டே அனுராதாவை நிமிர்ந்து பார்க்க, அவளோ தனது முகத்தில் எந்தவொரு உணர்வையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் முகம் இறுக அமர்ந்திருந்தாள்.

அனுராதாவிடமிருந்து எந்தவொரு பதிலும் வராமல் இருக்க மெல்லத் தன் தலை நிமிர்த்தி பார்த்தவன் தான் அவளோடு நெருக்கமாக அமர்ந்திருப்பதை உணர்ந்து கொண்டவனாக சட்டென்று அவளருகாமையிலிருந்து விலகி எழுந்து நின்றான்.

“ஐ யம் சாரி அனுராதா, நான் வேணும்னே எதுவும் பண்ணல, ஏதோ எமோஷனலாக பேசப் போய் இப்படி ஆகிடுச்சு, ரியலி சாரி” என்றவாறே கிருஷ்ணா அங்கிருந்து செல்லப் போக,

அவன் சொல்ல வந்த விடயத்தைப் புரிந்து கொள்ள முடியாமல் அவன் முன்னால் வந்து நின்றவள், “இப்போ என்ன ஆச்சுன்னு நீ சாரி கேட்கிற கிருஷ்ணா? நான் உன்னோட ராதாம்மா தானே? என் பக்கத்தில் நீயிருந்தால் என்ன தப்பு?” என்று கேட்க, அவளை அதிர்ச்சியாக நிமிர்ந்து பார்த்தவன் தன் கையை ஒரு முறை கிள்ளிப் பார்த்துக் கொண்டான்.

“ஆஹ்! வலிக்குது, அப்போ இது நிஜம்தான்”

“ஹேய்! என்ன நக்கலா?”

“அதை நான்தான் அனுராதா கேட்கணும். இத்தனை நாளாக நான் எப்படி எல்லாமோ உன்னை சமாதானப்படுத்த ட்ரை பண்ணேன், அப்போ எல்லாம் என்னை ஒரு பொருட்டாகவே நீ எடுக்கல, ஆனா இன்னைக்கு இப்படி ஒரு மாற்றம்? சத்தியமாக என்னால நம்ப முடியல”

“நீ நம்பித்தான் ஆகணும் கிருஷ்ணா, வேறு வழியே இல்லை. இதுநாள் வரைக்கும் நான் உன்னை ரொம்ப தப்பாக நினைச்சுட்டேன், ஆனா நீ என்னை விட்டு விலகியிருந்த இந்த நாட்கள் உன்னைப் பற்றி என்னை சிந்திக்க வைத்தது, அதனாலதான் இந்தளவிற்கு மாற்றம் வந்ததுன்னு கூட சொல்லலாம்”

“ஆனா இந்த மாற்றத்தை நான் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லையே”

“என்ன?” கிருஷ்ணாவின் பதிலைக் கேட்டு அதிர்ச்சியான அனுராதா,

அவனது கையைப் பிடித்துக் கொண்டு, “நீ என் மேலே கோபமாக இருக்கியா கிருஷ்ணா?” என்று வினவ, அவனோ தனது கையை அவளது கைகளிலிருந்து விலக்கி கொண்டான்.

“எனக்கு யாரு மேலேயும் எந்தக் கோபமும் இல்லை. இத்தனை நாளாக என் தரப்பு நியாயத்தை சொல்ல ஒரு வாய்ப்புக் கேட்டுத்தான் நான் உன் கூட போராடினேன், அதேமாதிரி இன்னைக்கு அந்த வாய்ப்பை நீ கொடுத்ததும் நான் எல்லாவற்றையும் சொல்லிட்டேன். அதற்கு மேலே வேறு எதுவும் இல்லை. அதோடு என்னையும், என் குடும்பத்தையும் அடியோடு வெறுப்பதாக நீ சொல்லியிருக்க, ஷோ இனிமேல் நீ இங்கே வர வேண்டிய தேவையும் இருக்காது, நீ உன் வீட்டுக்கு போகலாம் ரா…க்கும், அனுராதா”

“என்ன, பழிக்குப்பழி வாங்குவதாக நினைப்போ? அப்படி ஒரு எண்ணம் இருந்தால் அதை இப்போவே அழிச்சுடு”

“ஐயோ! அனுராதா, எனக்கு யாரையும் பழிவாங்கணும்னு தேவையில்லை, அதேமாதிரி யாரையும் கட்டாயப்படுத்தி என் கூட சேர்த்து வைக்கணும்னு அவசியமும் இல்லை”

“ஓஹ்! அப்படியா?” கிருஷ்ணாவைப் பார்த்து நக்கலாக சிரித்துக் கொண்டே தன் கைப்பையை எடுத்துக் கொண்டவள்,

“நீ சொல்லுறதும் ஒரு வகையில் சரிதான் கிருஷ்ணா, யாரையும் கட்டாயப்படுத்தி சேர்த்து வைக்க முடியாதுதான், ஆனால் நானாக விரும்பி வந்தால் உன்னால் என்ன செய்ய முடியும்?” என்று வினவ, கிருஷ்ணா அவளை வியப்பாகப் பார்த்துக் கொண்டு நின்றான்.

“என்ன ஹரிகிருஷ்ணா சார், பதிலையே காணோம்? சரி, சரி. நீ இப்படியே ஷாக்காகி நில்லு, நாளைக்கு காலையில் உனக்கு ஒரு பெரிய சர்ப்ரைஸ் தர்றேன், வரட்டா?” என்றவாறே கிருஷ்ணாவின் கன்னத்தில் தட்டி விட்டு அனுராதா அந்த அறையை விட்டு வெளியேறிச் சென்று விட, அவனோ அவள் சொன்னதை முழுமையாக புரிந்து கொள்ள முடியாமல் பெரும் குழப்பத்துடன் தன் தலையில் கை வைத்தபடி அமர்ந்து கொண்டான்.

கிருஷ்ணாவின் வீட்டை விட்டு வெளியேறியதில் இருந்து அனுராதாவின் மனது அவனுடனான தன் காதல் நினைவுகளையே நொடிக்கொரு தடவை மீட்டிப் பார்க்கச் சொல்லி தூண்டிக் கொண்டிருந்தது.

கல்லூரி நாட்களிலும் சரி, இப்போதும் சரி கிருஷ்ணா தன் மேல் காட்டும் அளவில்லா பாசத்தைப் பார்த்து அனுராதா நித்தமும் வியந்து தான் போகிறாள்.

தான் கோபத்தைக் காட்டும் போதும் சரி, பாசத்தைக் காட்டும் போதும் சரி அவனது காதலில் எந்தவொரு மாற்றமும் இதுவரை நாளில் வந்ததில்லை, அது போலத்தான் இன்றும் அவன் புறத்திலான நியாயத்தைக் கேட்ட பின்னர் தான் ஆரம்பத்திலேயே அவனுக்கு பேச வாய்ப்பு அளித்திருக்கலாமோ என்று அவள் மனம் எண்ணாமல் இல்லை.

எது எவ்வாறாயினும் கிருஷ்ணா மற்றும் தனது காதல் இதுநாள் வரை மாற்றம் ஆகவே இல்லை என்கிற ஆனந்தமான உணர்வுடன் தனது வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்த அனுராதா தனது அன்னையிடம் இன்னும் ஒரு சில தினங்களில் தான் மீண்டும் கிருஷ்ணாவின் வீட்டிற்கே செல்லப் போவதாக சொல்லியிருக்க, ஆரம்பத்தில் அவள் சொல்வதை நம்ப முடியாமல் திகைத்துப்போய் நின்றவர் சிறிது நேரம் கழித்தே தனது சுயநினைவை அடைந்து கொண்டார்.

“ராதா, நீ நிஜமாகத்தான் சொல்லுறியா? இல்லை மறுபடியும் என் கிட்ட பொய் சொல்லிட்டு வேறு ஏதாவது பண்ணப் போறியா?”

“அம்மா! நீ என்னை நம்பவே கூடாதுன்னு முடிவு பண்ணிட்டியா? இந்த தடவை நான் எந்த தப்பும் பண்ணப் போறதில்லை, கிருஷ்ணா என் மேலே வைத்திருக்கும் உண்மையான காதலை நான் புரிஞ்சுகிட்டேன். இதுநாள் வரைக்கும் அவன் என் மீது பாசத்தைக் காட்டும் போதெல்லாம் நான் அதற்கு பதிலாக வெறும் கோபத்தைத்தான் கொடுத்திருக்கேன், ஆனால் இனிமேல் அப்படி நடக்காது. இதுநாள் வரைக்கும் என் கோபத்தை மட்டுமே பார்த்த கிருஷ்ணா இதற்கு அப்புறம் என்னோட காதலைப் பார்த்து திக்குமுக்காடிப் போகப் போறான், பார்த்துக்கோங்க” என்றவாறே அனுராதா தேவியை இறுக அணைத்து விடுவித்து விட்டு தனது அறையை நோக்கிச் சென்று விட, அவரோ தனது மகளின் இந்த சந்தோஷம் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும் என்கிற வேண்டுதலுடன் அவள் சென்ற வழியைப் பார்த்துக் கண்கள் கலங்கி நின்றார்…..