நீயின்றி நானுமே நீரின்றி மேகமே – 19

eiPONP961496-8487b089

காலைவேளை சோம்பல் முறித்துக் கொண்டபடியே தன் தூக்கம் கலைந்து எழுந்து அமர்ந்த கிருஷ்ணா சுவற்றில் மாலையிடப்பட்டிருந்த தன் அன்னையின் புகைப்படத்தை வருடிக் கொடுத்தபடியே படியிறங்கி வந்து வாசல் கதவைத் திறக்க, அங்கே அனுராதா வாயில் புன்னகையையும், கையில் பூக்கொத்தையும் ஏந்தி நின்று கொண்டிருந்தாள்.

“அனு?”

“ராதா”

“என்ன?”

“அனுராதா, என் பேரு. நீங்க அனுன்னு சொன்னீங்க, நான் ராதான்னு சொல்லி என் பேரை கம்ப்ளீட் பண்ணேன், அவ்வளவுதான்” அனுராதா தன் கையிலிருந்த பூங்கொத்தை கிருஷ்ணாவின் புறம் நீட்டியபடி புன்னகையுடன் அவனைப் பார்த்துக் கொண்டு நிற்க, அவளைத் தாண்டிச் சென்றவன் வாசலில் வைக்கப்பட்டிருந்த பால் பாக்கெட்டுகளை எடுத்துக் கொண்டு மீண்டும் உள்ளே சென்று விட, அவளோ தன் முகத்தில் மறையாத புன்னகையுடன் அவனைப் பின் தொடர்ந்து நடந்து சென்றாள்.

“அப்போ காலையில் காபி போடுவதிலிருந்து நைட் சமையல் வரை எல்லாமே உன் கன்ட்ரோல் தானா கிருஷ்ணா?” அவளின் கேள்வி தன் காதில் விழவில்லை என்பது போல அவளைத் திரும்பியும் பாராமல் நடந்து சென்றவன், அடுப்பில் பாலை ஊற்றி காய்ச்சத் தொடங்க, தன் சேலை முந்தானையை எடுத்து இடுப்பில் சொருகியபடி அவனை இடித்து தள்ளிவிட்டவள் அவன் செய்யத் தொடங்கிய வேலையை இப்போது தன் பொறுப்பின் கீழ் எடுத்திருந்தாள்.

அங்கிருக்கும் எல்லோருக்கும் சேர்த்து காஃபி கப்களை ட்ரேயில் எடுத்து வைத்தவள் ஒரு கப்பை மாத்திரம் தனியாக எடுத்து வைக்க, கிருஷ்ணா அவள் செய்யும் ஒவ்வொரு செயலையும் தன் கைகைளைக் கட்டிக் கொண்டு அமைதியாகப் பார்த்துக் கொண்டு நின்றான்.

எல்லாக் கப்களிலும் காஃபியை ஊற்றி வைத்தவள் தான் தனியாக எடுத்து வைத்திருந்த கப்பில் காஃபி பவுடரை அதிகமாகவும், சர்க்கரையை வெகு குறைவாகவும் சேர்த்து கலக்கி விட்டு கிருஷ்ணாவிடம் நீட்ட, அவளை வியப்பாக பார்த்துக் கொண்டு நின்றவன், “நான் காஃபி இப்படித்தான் போடுவேன்னு உனக்கு எப்படித் தெரியும்?” என்று வினவ,

அவனைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டவள், “அன்னைக்கு எங்க வீட்டில் வைத்து நான் காஃபி போட்டுத் தந்த போது நீ எதுவும் சொல்லாமல் சாப்பிட்ட, ஆனா அந்த காஃபியை குடிக்கும் போதெல்லாம் உன் முகம் கொஞ்சமா சுருங்கிப் போனதை நான் பார்த்தேன். வழக்கமாக நீ நிறைய ஸ்வீட்ஸ் எடுத்துக்க மாட்டியே, ஷோ சிம்பிள்” என்றபடியே அங்கிருந்த காஃபி ட்ரேயை எடுத்துக் கொண்டு செல்ல,

அவசரமாக அவள் முன்னால் வந்து நின்றவன், “நீ கொடு அனுராதா, நானே எல்லோருக்கும் காஃபியை கொடுக்கிறேன்” என்றபடியே அவளது கையிலிருந்த ட்ரேயை வாங்கிக் கொள்ளப் போக, அவளோ தன் கையை சட்டென்று பின்னிழுத்துக் கொண்டாள்.

“ஏன், நான் எல்லோருக்கும் காஃபி கொடுத்தா என்ன? நான் உன்னோட மனைவிதானே? நானும் இந்தக் குடும்பத்தில் ஒருத்திதான்”

“அதற்கில்லை ராதாம்மா, அம்மா இறந்ததற்கு அப்புறம் அப்பா அவங்க அறையை விட்டு வெளியே வர்றதே இல்லை, வேறு யாரையும் உள்ளே வரவிடுவதும் இல்லை. நேரத்திற்கு சாப்பாட்டைக் கொண்டு போய் கொடுத்தால் அதை வாங்கிட்டு உள்ளே போயிடுவாங்க, அதற்கு அப்புறம் தட்டை மட்டும் வெளியே வைத்துடுவாங்க, இந்த இரண்டு மாதங்களாக அவங்க இப்படியேதான் இருக்காங்க. நானும் எத்தனையோ தடவை பேசிப் பார்த்துட்டேன், அவங்ககிட்ட எந்த மாற்றமும் இல்லை”

“மாற்றம் இல்லைன்னா அப்படியே விட்டுடுவியா? என்ன கிருஷ்ணா நீ? முதல்ல வழி விடு, நான் அவங்க கிட்ட பேசிக்கிறேன்” என்றபடியே அனுராதா மூர்த்தியின் அறைக்கதவைத் திறக்க முயல, அதுவோ உள்புறமாக தாழிடப்பட்டிருந்தது.

“நான்தான் சொன்னேனே ராதா, அப்பா அவ்வளவு சீக்கிரம் வெளியே வரமாட்டாங்க” என்று விட்டு கிருஷ்ணா தன் தந்தையின் அறைக்கதவை தட்ட, வெகு நேரம் கழித்து அந்த அறைக்கதவு திறந்து கொண்டது.

இரண்டு மாதங்களாக சவரம் செய்யப்படாத முகமும், ஒளியிழந்து போயிருந்த அவரது கண்களுமே அவர் தன் மனைவியின் பிரிவை எண்ணி எந்தளவிற்கு வருந்திக் கொண்டிருக்கிறார் என்பதை உணர்த்த மனம் நிறைந்த கவலையுடன் அவரைப் பார்த்துக் கொண்டு நின்ற அனுராதா, “மாமா… க்கும், அப்பா காஃபி” என்றவாறே தன் கையிலிருந்த ட்ரேயை அவர் புறமாக நீட்ட, கிருஷ்ணாவோ அவர் அவளை எதுவும் சொல்லி விடுவாரோ என்கிற பதட்டமான உணர்வுடன் அவரைப் பார்த்துக் கொண்டு நின்றான்.

சிறிது நேரம் அனுராதாவையும் அவள் கையிலிருந்த ட்ரேயையும் பார்த்துக் கொண்டு நின்றவர் சிறு புன்னகையுடன் அவளிடமிருந்த காஃபி நிறைந்த கப்பை வாங்கிக் கொள்ள, கிருஷ்ணா அவரைப் பார்த்து அதிர்ச்சியாகி நின்றான்.

“என்ன கிருஷ்ணா, நீ என்னென்னவோ எல்லாம் சொன்ன? ஆனா, இங்கே எல்லாம் வேற மாதிரி இருக்கு. சரி, சரி. நீ இந்த காஃபியை கொண்டு போய் ராகவ்க்கும், தர்ஷினிக்கும் கொடு, நான் அப்பாகிட்ட கொஞ்சம் பேசிட்டு வர்றேன்” என்றபடியே கிருஷ்ணாவை இழுக்காத குறையாக அழைத்துக் கொண்டு வந்து ஹாலில் விட்டவள் மீண்டும் மூர்த்தியின் அறையை நோக்கிச் செல்ல, அவனோ அங்கிருந்து நகர மனமேயின்றி அவளைத் திரும்பிப் பார்த்தபடியே தன் தங்கை, தம்பியின் அறையை நோக்கி நடந்து செல்லத் தொடங்கினான்.

தன் தம்பி, தங்கை இருவரிடமும் அனுராதா மறுபடியும் தங்கள் வீட்டிற்கு வந்திருக்கிறாள் என்ற செய்தியை அவன் பகிர்ந்து கொள்ள, அவர்கள் இருவருமோ தங்கள் வாய்க்கு வந்தபடி அவளைத் திட்டத் தொடங்க, அவர்கள் இருவரையும் கண்டித்து விட்டு, தனது அறைக்குச் சென்று குளித்து தயாராகி விட்டு ஹாலுக்கு வந்தவன் அங்கே தான் பார்த்த காட்சியில் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றான்.

இத்தனை நாட்களாக தான் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் தன் பேச்சைக் கேட்டிராத தன் தந்தை இப்போது அனுராதாவிடம் சிரித்துப் பேசியபடியே அவள் பரிமாறிய உணவை சாப்பிட்டுக்கொண்டிருக்க, தன் வியப்பு மாறாதவனாக அவர்கள் முன்னால் வந்து நின்றவன், “அப்பா!” என்று அழைக்க,

அவனைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டவர், “அடடே! வாங்கப்பா, வாங்க. ராதா அவ கையால் சமைத்திருக்கா வந்து சாப்பிடுங்க. ரொம்ப அருமையா இருக்கு, உட்காருங்கப்பா” என்றவாறே தன் உண்ணும் பணியைத் தொடர, கிருஷ்ணா கண்கள் கலங்க அனுராதாவின் புறம் திரும்பிப் பார்த்தான்.

“உட்காரு கிருஷ்ணா” கிருஷ்ணாவின் தோளில் கையை வைத்து அவனை அமரச் செய்தவள் அனைவருக்கும் உணவைப் பரிமாறி விட்டு தானும் உண்ணத் தொடங்க, அவனுக்குத்தான் அந்த சந்தோஷத்தை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை.

அனுராதா தன்னோடு மீண்டும் சேர்ந்து வாழப்போகிறாள் என்கிற சந்தோஷமான உணர்வை விட அவன் மனதிற்குள் இருக்கும் ஒரேயொரு சங்கடமான உணர்வு அவனை இந்த நொடி வரை வெகுவாக இம்சை செய்ய, பெயருக்கு உண்ணுவது போல அமர்ந்திருந்தவன் சிறிது நேரத்தில் அனுராதாவை வேண்டுமென்றே தவிர்ப்பது போல அவளிடம் எதுவும் செல்லாமல் மூர்த்தியிடம் தனது அலுவலகத்திற்குச் செல்வதாக சொல்லி விட்டுச் சென்றிருக்க, அனுராதாவிற்குத்தான் அவனை சரியாகப் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

தான் அவனை விட்டு விலகிச் செல்ல நினைத்த போதெல்லாம் தன்னை விடாமல் தன் பின்னாலேயே ஒரு நிழல் போல வந்து கொண்டிருந்தவன், இப்போது தானாக அவனைத் தேடி வரும் போது எதற்காக தன்னை விலக்கி வைக்க நினைக்கிறான் என்பது அவளுக்குப் புரியாத புதிர் போலவே தோன்றியது.

தன் மனக்குழப்பத்திற்கான தீர்வை எண்ணியபடியே அன்றைய நாளுக்கான பகலுணவை சமைத்து வைத்தவள் சிறிது நேரம் ஓய்வாக இருக்கலாம் என்றெண்ணியபடி தனது அறையில் அமர்ந்திருந்த நேரம் தற்செயலாக ஏதோ ஒரு நினைவு வந்தவளாக தன் கைத்தொலைபேசியை எடுத்துப் பார்த்து விட்டு, “அட! இதை எப்படி நான் மறந்து போனேன்? ஒருவேளை நான் இதை மறந்து போமிட்டேன்னு நினைத்துத்தான் கிருஷ்ணா என் மேலே கோபமாக இருக்கிறானா? இருக்கும், இருக்கும். அந்தக் கிருஷ்ணா இந்த விஷயத்தை எல்லாம் அவ்வளவு சீக்கிரம் மறக்க மாட்டான், அதேமாதிரி நான் மறந்தாலும் சும்மா இருக்க மாட்டான். அப்போ இதுதான் ஐயாவோட கோபத்திற்கு காரணம் போல? ரைட்டு, என்னோட ஸ்வீட் ஹஸ்பண்ட்க்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுத்துடுவோம்” என்றவாறே அந்த அறையை சுத்தம் செய்யத் தொடங்க, மறுபுறம் கிருஷ்ணா தனது அலுவலகத்தில் எந்தவொரு வேலையும் செய்ய மனமின்றி சோர்வாக அமர்ந்திருந்தான்.

அவனது மனதிற்குள் இருக்கும் குழப்பத்தை எப்படி வெளிப்படுத்துவது? யாரிடம் வெளிப்படுத்துவது? என்பது கூட அவனுக்குப் புரியவில்லை.

இத்தனை நாட்களாக தன் தந்தையின் நிலையை எண்ணி கவலை கொண்டிருந்தவன் இன்று அவர் பழையபடியே எல்லோரிடமும் சிரித்துப் பேசியது அவனுக்கு ஒரு புறம் சந்தோஷமாக இருந்தாலும், அந்த சந்தோஷத்தைக் கூட அவன் மனதிற்குள் இருக்கும் குழப்பம் ஒன்றுமில்லாமல் போகச் செய்திருந்தது.

இப்படியே இந்த சிந்தனையுடன் அமர்ந்திருந்தால் தன்னால் எந்தவொரு வேலையையும் செய்ய முடியாது என்று புரிந்து கொண்டவன் என்ன நடந்தாலும் சரி அனுராதாவிடம் தான் அவளை விட்டு விலகிச் செல்ல என்ன காரணம் என்பதைக் கூறி விட்டு அவளை அவளது வீட்டிலேயே விட்டு விட வேண்டும் என்று உறுதியான முடிவோடு தங்கள் வீட்டை நோக்கிப் புறப்பட்டுச் செல்ல, அங்கே அவனுக்கு காத்திருந்ததோ அவன் முற்றிலும் எதிர்பாராத விடயங்கள்.

வழமைக்கு மாறாக அன்று வெகு நேரம் கழித்தே கிருஷ்ணா தங்கள் வீடு திரும்பியிருக்க, மூர்த்தி, ராகவ் மற்றும் தர்ஷினி நேரத்திற்கே தங்கள் இரவுணவை முடித்து விட்டு உறங்கச் சென்றிருந்தனர்.

“எல்லோரும் தூங்கிட்டாங்க போல, பரவாயில்லை, இதுவும் நல்லதுதான். அனுராதா கிட்ட எப்படியாவது எல்லா விடயத்தையும் பேசி முடிச்சுடணும்” தன் அறையை நோக்கி தான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிகளுக்கும் தனக்குத்தானே தைரியம் அளிப்பது போல் பேசிக்கொண்டு சென்ற கிருஷ்ணா அவனது அறைக்கதவில் கையை வைக்க, அதுவோ தானாகத் திறந்து கொண்டது.

“என்ன இது? ராதா கதவைத் திறந்து போட்டுட்டு எங்கே போயிட்டா?” தன் மனதிற்குள் சூழ்ந்திருந்த குழப்பத்துடனேயே கிருஷ்ணா தங்கள் அறைக்குள் நுழைய, அந்த அறையோ முற்றிலும் இருள் சூழ்ந்து போய் கிடந்தது.

“ஏன் ரூம் இவ்வளவு இருட்டா இருக்கு? ஒருவேளை ராதாவும் தூங்கிட்டாளா? ஆனா, நான் அவகிட்ட எப்படியாவது பேசி ஆகணுமே” கிருஷ்ணா அந்த அறை விளக்குகளை ஒளிரச் செய்வதா? வேண்டாமா? என்று சிந்தித்தபடியே தயக்கத்துடன் விளக்குகளை ஒளிரச் செய்ய, அங்கே அந்த அறையில் அனுராதா எங்கேயும் இருக்கவில்லை.

“அனுராதா எங்கே போயிட்டா? ஒருவேளை மறுபடியும் அவங்க வீட்டுக்கே போயிட்டாளா? ஆனா அப்படி எல்லாம் அவ பண்ண மாட்டாளே? ஒருவேளை பால்கனியில் இருப்பாளோ?” அனுராதாவைக் காணவில்லை என்கிற பதட்டத்துடன் அவசர அவசரமாக பால்கனியை நோக்கி ஓடிச் சென்றவன் பால்கனிக் கதவைத் திறக்க, அங்கே அந்தப் பால்கனி முழுவதும் ரோஜாப்பூ இதழ்கள் கொட்டியிருக்க அதற்கு நடுவே ஒரு மேஜையும், இரண்டு நாற்காலிகளும் போடப்பட்டிருந்தது.

அந்த மேஜையின் மீது பல உணவு வகைகள் அடுக்கப்பட்டு, அதற்கு நடுவே மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டிருக்க, அந்தப் பால்கனியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பல மெழுகுவர்த்திகள் அழகாக ஒளிர்ந்து கொண்டிருந்தது.

முழு நிலவு வெளிச்சத்தின் கீழ் மெழுகுவர்த்தி வெளிச்சமும் சேர்ந்து அந்த இடத்தை ரம்மியமாக்க அந்த இடத்தைப் பார்த்து வியந்து போனவனாக கிருஷ்ணா நின்று கொண்டிருந்த நேரம் தன் கையில் வெற்றுக் கூடைகளுடன் நடந்து வந்து கொண்டிருந்த அனுராதா, அவனைப் பார்த்து ஒரு கணம் திகைத்துப்போய் நின்றாள்.

“கிருஷ்ணா! நீ எப்போ வந்த? ஐயோ! என் சர்ப்ரைஸ் இப்படி ஆகிடுச்சே” சிறு குழந்தை தனக்கு பிடித்தமான பொருளைத் தொலைத்து விட்டு கவலையுடன் நிற்பது போல் தன் தலையில் கை வைத்துகொண்டு நின்ற தன் மனைவியைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டே அவளருகில் வந்து நின்றவன்,

“நீ இப்படி பண்ணுணதே எனக்கு சர்ப்ரைஸ்தான் தெரியுமா? அதுசரி, என்ன திடீர்னு இப்படி எல்லாம்?” என்று வினவ,

அவனை வியப்பாக நிமிர்ந்து பார்த்தவள், “ஏன் சாருக்கு எதுவுமே ஞாபகம் இல்லையா? சும்மா நடிக்காதே கிருஷ்ணா, உனக்கு எல்லாம் தெரியும்னு எனக்கும் தெரியும்” என்று கூற, அவனோ அவள் சொன்னதைப் புரிந்து கொள்ள முடியாமல் தவிப்புடன் நின்று கொண்டிருந்தான்.

‘ராதாம்மா கிட்ட எப்படியாவது என் மனதில் இருக்கும் விடயங்களை சொல்லியே ஆகணும். டேய், கிருஷ்ணா! தைரியமாக சொல்ல வந்ததை சொல்லிடுடா’ கிருஷ்ணாவின் மனது அவனைப் பேசச் சொல்லித் தூண்டிக் கொண்டேயிருக்க, ஆழ்ந்த மூச்சுக்களை எடுத்து விட்டு தன்னை சிறிது நிதானப்படுத்தியவனாக அனுராதாவை அவன் நிமிர்ந்து பார்த்த தருணம் அவளும் அவனது முகத்தையேதான் ஆவலுடன் பார்த்துக் கொண்டு நின்றாள்.

நிலவொளி வெளிச்சத்தில் அவள் முகத்தில் பூத்திருந்த வேர்வைத் துளிகள் கூட அவளுக்குப் பேரழகை வழங்குவது போல இருக்க, தன் மனவோட்டத்தை எண்ணி தன்னைத் தானே கடிந்து கொண்டவன் அவளது கையிலிருந்த பொருட்களை வாங்கி கீழே வைத்து விட்டு அவளது கைகளை தனது கைகைளுக்குள் வைத்துப் பிடித்துக் கொண்டான்.

“அனுராதா, நான் இப்போ உன்கிட்ட சொல்லப் போகும் விடயம் உனக்கு அளவில்லாத கோபத்தைக் கூட ஏற்படுத்தலாம், ஏன் பெரிய பிரச்சினையைக் கூட உருவாக்கலாம், ஆனா அந்த விடயத்தை என்னால இதற்கு மேலும் மறைத்து வைக்க முடியாது அனுராதா. அதனால்….”

“நீ என்ன சொல்லப் போறேன்னு எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும் கிருஷ்ணா. இத்தனை நாளாக நான்தான் உன்னை ரொம்ப காக்க வைச்சுட்டேன், ஷோ அந்த விடயத்தை நான்தான் உன்கிட்ட முதல்ல சொல்லணும்”

“இல்லை ராதாம்மா, நீ…”

“கிருஷ்ணா! நான்தான் சொல்லுறேன்னு சொல்றேன் இல்லையா? அதற்கிடையில் உனக்கு என்ன அவசரம்? நம்ம காலேஜில் படிக்கும் போதிருந்தே நீதான் இதைப்பற்றி அதிகம் பேசியிருக்க, இப்போ நான் சொல்லுறேனே, நீ அமைதியாக நின்று கேளு, அது போதும்”

“ஐயோ! ராதா, ஒரு நிமிஷம் என்னைப் பேச விடு”

“முடியாது, இன்னைக்கு நான் மட்டும்தான் பேசுவேன்” தான் விளையாட்டாக நினைத்துப் பேசிக் கொண்டிருப்பது தன் எதிரில் உள்ளவனை வெகுவாக கோபப்படுத்துகிறது என்பதைக் கூட உணராதவளாக, பிடிவாதமாக அனுராதா பேசிக் கொண்டிருக்க, கிருஷ்ணாவோ தன் கோபம் எல்லை மீறி விடக்கூடாது என்று தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொண்டு நின்றான்.

“கிருஷ்ணா! நான் இப்போ சொல்லப் போற விஷயம் ரொம்ப வருஷம் கழிச்சு நான் உன்கிட்ட சொல்லப் போறேன். இந்த விடயத்தைக் கேட்டால் நீ எவ்வளவு சந்தோஷப்படுவேன்னு எனக்குத் தெரியும், இந்த வார்த்தையை நான் சொல்லும் போது உன் முகத்தில் வரும் ஒரு சிரிப்பு இருக்கே, அதற்கே நான் மொத்தமாக அவுட்தான். அப்படியான அந்த மேஜிக்கல் விஷயத்தைத்தான் நான் சொல்லப் போறேன். அது என்னன்னா, அது….” அனுராதா சிறு வெட்கம் கலந்த புன்னகையுடன் கிருஷ்ணாவை நிமிர்ந்து பார்க்க, அவனோ தன் கை முஷ்டி இறுக அவளை வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றான்.

“என்ன கிருஷ்ணா நீ? நான் எவ்வளவு முக்கியமான விஷயம் சொல்லப் போறேன், நீ என்னடான்னா இப்படி உர்ருன்னு முகத்தை வைச்சுட்டு இருக்க? போ, நான் உன் கிட்ட எதுவும் சொல்ல மாட்டேன்” அனுராதா சிறு கோபத்துடன் தன் முகத்தை திருப்பிக் கொள்ள,

அவளது முகத்தை தன் புறமாக திருப்பியவன், “நீ என்ன வேணும்னாலும் சொல்லிக்கோ, ஆனா அதற்கு முன்னாடி நான் சொல்ல வர்றதை கேளு” என்று கூற,

அவனது கையைத் தட்டி விட்டவள், “நீ சொன்னா நான் கேட்கணுமா? முடியாது, போ” என்றவாறே அங்கிருந்து விலகிச் செல்லப் பார்க்க, அவனோ அவளது கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டு நின்றான்.

“கிருஷ்ணா! நீ என்ன பண்ணுற? கையை விடு”

“நான் சொல்லுறதை ஒரு நிமிஷம் கேளு ராதா”

“முடியாது”

“அப்போ கேட்க மாட்ட?”

“ஆமா, மாட்டேன்”

“ராதா, என் பொறுமையை ரொம்ப சோதிக்குற”

“ஓகே, ஓகே கூல் டவுன் கிருஷ்ணா. சும்மா உன் கூட விளையாடுனேன்டா” என்றவாறே அனுராதா அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே அவனை அணைத்துக் கொள்ளப் பார்க்க,

அவளைத் தன் புறம் நெருங்கி வர விடாமல் தடுத்தவன், “அனுராதா, நீயும், நானும் இனி ஒன்றாக இருக்கவே முடியாது. நீ ஆரம்பத்திலிருந்து சொன்னபடி உனக்கும், எனக்கும் எந்தவொரு உறவும் இருக்க முடியாது, இருக்கவும் கூடாது. இனி என் வாழ்க்கையிலும் நீ வேண்டாம், என் வீட்டிலும் நீ வேண்டாம். அதனால இப்போவே, இந்த நிமிஷமே என் வீட்டை விட்டும், என் வாழ்க்கையை விட்டும் நீ போயிடு” தன் மனதிற்குள் இருந்த ஒட்டுமொத்த உணர்வும் ஒன்று சேர அவளைப் பார்த்து சத்தமிட்டு விட்டு அங்கிருந்து சென்று விட, அவளோ அவன் சொல்லி விட்டுச் சென்ற வார்த்தைகளை உள்வாங்கிக் கொள்ள முடியாமல் திகைத்துப் போய் நின்றாள்…..