நீயின்றி நானுமே நீரின்றி மேகமே – 02

eiPONP961496-f4ef34d8

அடர்ந்த காட்டின் தலைவனாக நிலைத்து நிற்கும் சிங்கம் போல பரந்து விரிந்திருந்த கருமையான வானத்தில் தனியாளாக நின்று முழு உலகிற்குமே ஒளி வீசிக் கொண்டிருக்கும் நிலவைப் பார்த்தபடி தங்கள் அறையின் பால்கனியில் போடப்பட்டிருந்த கயிற்று ஊஞ்சலில் அமர்ந்திருந்தாள் அனுராதா.

அன்று நடந்து முடிந்திருந்த அனைத்து நிகழ்வுகளையும் மீட்டிப் பார்த்தபடி அவள் அமர்ந்திருந்த நேரம் சிறு தயக்கத்துடன் அவளருகில் வந்து நின்ற கிருஷ்ணா அவளிடம் பேச்சுக் கொடுக்கலாமா? வேண்டாமா? என்று தனக்குள்ளேயே விவாதம் நடத்திக் கொண்டிருந்த நேரம் அனுராதாவின் தொலைபேசி ஒலிக்க ஆரம்பித்தது.

தன் தொலைபேசி ஒலி கேட்டு தன் சிந்தனை கலைந்து நிமிர்ந்து அமர்ந்தவள் தன்னருகே நின்று கொண்டிருந்த கிருஷ்ணாவைப் பார்த்து ஒரு கணம் அதிர்ந்து தான் போனாள்.

“கிருஷ்ணா, நீங்க இங்க என்ன பண்ணுறீங்க?”

“இது என்னோட வீடு, அப்புறம் நீ இருக்குறது என்னோட ரூம்”

“ஓஹ், ஆமாலே. சாரி, மறந்துட்டேன்”

“அனுராதா நான் உன் கிட்ட கொஞ்சம் பேசணும்”

“ஷப்பா, நீங்க இன்னும் பேசி முடிக்கலயா? இப்படி பேசிப் பேசியே கழுத்தை அறுக்கப் பார்க்குறீங்களே கிருஷ்ணா, இதெல்லாம் அடுக்குமா? அப்புறம் இன்னைக்கே எல்லாவற்றையும் பேசி முடித்தால் இனி வரப்போகும் நாள் எல்லாம் என்ன தான் பண்ணுவீங்க? அதுமட்டுமில்லாமல் நான் ஏற்கனவே ரொம்ப களைத்துப் போயிட்டேன் கிருஷ்ணா, எதுவாக இருந்தாலும் நாளைக்குப் பேசலாமே” என்று விட்டு சிறு புன்னகையுடன் அவனைத் தாண்டி செல்லப் போனவள்,

“நீ ஏன் என்னை விட்டுட்டுப் போன ராதா?” என்ற கிருஷ்ணாவின் கேள்வியில் அதிர்ச்சியாக அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

அவன் இப்போது கேட்ட கேள்வி என்றாவது ஒரு நாள் அவன் தன்னிடம் கேட்கக்கூடும் என்பது அவளுக்குத் தெரியும், ஆனால் இத்தனை சீக்கிரத்தில் அவன் கேட்பான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.

“சொல்லு ராதா, எதற்காக என்னை விட்டுட்டுப் போன?”

“அவசியம் தெரிஞ்சுக்கணுமா?” தன் முகத்தில் எந்தவித உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தாமல் அனுராதா அவனைப் பார்த்து வினவ, கிருஷ்ணா தயங்கியபடியே அவளைப் பார்த்து ஆமோதிப்பாக தலையசைத்தான்.

“நீங்க கேட்கும் எல்லாக் கேள்விகளுக்கும் உடனே பதில் சொல்ல எனக்கும் ஆசை தான், ஆனா அந்த விடயத்தைப் பற்றி பேச எனக்கு இப்போ துளி கூட விருப்பம் இல்லை, அதனால மறுபடியும் மறுபடியும் என் முன்னாடி வந்து நின்று இதே கேள்வியை கேட்காதீங்க, எனக்கு தலை வலிக்குது” அனுராதா தன் நெற்றியை நீவி விட்டபடியே தங்கள் அறையை நோக்கிச் சென்று விட, கிருஷ்ணாவிற்குத் தான் தன் நிலையை எண்ணி பரிதாபமாக இருந்தது.

ஆறு வருடங்களுக்கு முன்பு தன் உயிரில் கலந்து போயிருந்தவள் மூன்று வருடங்களுக்கு முன் திடீரென தன்னைப் பிடிக்கவில்லை என்று விலகிப் போய் விட்டு, இப்போது மறுபடியும் தன் முன்னால் வந்து நின்று தன்னைத் தான் திருமணம் செய்வேன் என்று கூறி அதை நடத்தியும் காட்டி விட்டாள், இதெல்லாம் எதற்காக நடக்கிறது என்பதை அவனால் யூகிக்கவே முடியவில்லை.

ஏதாவது ஒரு வழியில் உண்மை நிலவரத்தைப் பற்றி அறிந்து கொள்ளலாம் என்று அவன் நினைத்திருக்க, அவன் நினைப்பதற்கு மாறாக மத்தளம் போன்று இருபக்கமும் அவனுக்கு அடிகள் தான் மாறி மாறி விழுந்து கொண்டே இருக்கிறது.

அதிலும் அனுராதா சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகளும், அவளது ஒவ்வொரு செயலும் ஒவ்வொரு நிமிடமும் அவன் தைரியத்தை அசைத்துப் பார்ப்பது போலவே இருந்தது.

சிறிது நேரம் இருள் சூழ்ந்திருந்த வானத்தைப் பார்த்துக் கொண்டு நின்றவன் குளிர் காற்று அவன் உடலைத் தழுவிச் செல்வதை உணர்ந்தவனாக தங்கள் அறையை நோக்கிச் செல்ல, அங்கே சுவரோரமாக போடப்பட்டிருந்த சாய்வு நாற்காலியில் தன் கால்களையும், கைகளையும் குறுக்கியபடி ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள் அனுராதா.

அவள் முகத்தில் இப்போது காலையில் தெரிந்த கோபமோ, வெறுப்போ எதுவுமே இருக்கவில்லை, மாறாக அப்போதுதான் மலர்ந்த மலர் போல வசீகரமாக இருந்தது அவள் முகம்.

கிருஷ்ணா சிறிது நேரம் தன்னை மறந்து அவளைப் பார்த்துக் கொண்டு நின்றிருக்க, தூக்கக் கலக்கத்தோடு மறுபுறம் திரும்பி உறங்குவதற்காக தன் கண்களைத் திறந்த அனுராதா தன் முன்னால் நின்று கொண்டு தன்னை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு நின்ற கிருஷ்ணாவைப் பார்த்து தன் தூக்கம் முற்றாக கலைந்து போக, “ஹலோ மிஸ்டர், நீங்க இப்படி பார்த்துட்டே இருக்க நான் ஒண்ணும் மியூசியத்தில் இருக்கும் சிலை இல்லை, சாதாரண மனுஷி தான். அதனால இப்போ நீங்க போய்த் தூங்கலாம்” என்று கூற, அவளது கூற்றில் கிருஷ்ணாவின் முகம் சிறுத்துப் போனது.

அவளின் பேச்சுக்கு பதில் எதுவும் பேசாமல் தன் கட்டிலில் சென்று அமர்ந்து கொண்டவன் அவளின் முகத்தைப் பாராமல் மறுபுறம் திரும்பி உறங்க ஆரம்பிக்க, அதைப் பார்த்து அனுராதாவின் முகமோ புன்னகையால் மலர்ந்து போனது‌.

கிருஷ்ணாவின் முகம் வாடிப் போவதைப் பார்த்து அவளுக்கு சிறு கவலையாக இருந்தாலும் தன் வாழ்க்கையில் நடந்த விடயங்களை எல்லாம் மீண்டும் மீண்டும் தனக்குள் நினைத்துப் பார்த்துக் கொண்டவள், ‘நீ இப்படி கவலைப்படுவது எல்லாம் எனக்குப் போதாது கிருஷ்ணா, உன்னையும், உன் குடும்பத்தையும் இன்னமும் நான் கதற விடணும், அதை நான் என் குளிரப் பார்க்கணும். இப்படி எல்லாம் வீராப்பாக வசனம் பேச எனக்கும் ஆசையாகத் தான் இருக்கு, ஆனால் என்னால நீயும், உன் குடும்பமும் கவலைப்படுவதைப் பார்க்க முடியலையே கிருஷ், அதுதான் உண்மை. உங்க எல்லோரையும் கஷ்டப்படுத்தணும்னு என் அறிவு கட்டளை போட்டாலும், என் மனது அப்படி எல்லாம் பண்ணாதேன்னு என்னைத் தடுத்த வண்ணமே இருக்கு. எனக்கு என்ன பண்ணுறதுன்னு சரியாகவே புரியல, ஆனாலும் பரவாயில்லை, என்ன நடந்தாலும் சரி, நான் என்ன நினைத்து இங்கே வந்தேனோ அந்தக் காரியத்தை நிச்சயமாக நிறைவேற்றியே தீருவேன்’ என தனக்குள்ளேயே உறுதிமொழி எடுப்பது போல கூறிக் கொண்டு தன் வாழ்க்கையின் மறக்க முடியாத நிகழ்வுகளை மீட்டிப் பார்த்தபடியே உறங்க ஆரம்பித்தாள்.

காலை நேரக் கதிரவனின் கதிர்கள் தன் முகத்தில் பட்டு வெம்மையை ஏற்படுத்திய தருணம் கிருஷ்ணா தன் துயில் கலைந்து எழுந்து அமர்ந்து கொள்ள, சரியாக அதே தருணத்தில் அனுராதாவும் தன் தூக்கம் கலைந்து எழுந்து அமர்ந்திருந்தாள்.

இருவரும் நேற்றைய இரவு தங்கள் இருவருக்கும் இடையில் நடந்த உரையாடலை மீட்டிப் பார்த்த வண்ணம் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்க, அவர்கள் பார்வைப் பரிமாற்றத்தை தடுப்பது போல அனுராதாவின் தொலைபேசி ஒலிக்க ஆரம்பித்தது.

“இவ்வளவு காலையிலேயே யாரு கால் பண்ணுறது” சோர்வும், சலிப்பும் ஒன்று சேர தன் தொலைபேசியை எடுத்தவள் அதன் திரையில் தெரிந்த பெயரைப் பார்த்ததும் தன் சோர்வு மொத்தமும் பறந்தோடியது போல அதை எடுத்துப் பேச ஆரம்பித்தாள்.

“ஹலோ அப்பா” அனுராதாவின் அப்பா என்ற அழைப்பில் கிருஷ்ணா அவளை சற்று வியப்பாக நோக்க, மறுபுறம் அவளுக்கு என்ன பதில் வந்ததோ ஒரு நொடியில் அவளது முகம் எந்தவொரு உணர்வும் இல்லாமல் துடைத்து விடப்பட்டது போல ஆனது.

சிறிது நேரம் அமைதியாக தொலைபேசியைத் தன் காதிலேயே வைத்திருந்தவள் “சரி, பத்து நிமிடத்தில் இங்கே வண்டியை அனுப்புங்க, நான் வர்றேன்” என்று விட்டு அவசர அவசரமாக தன் ஹாண்ட்பாக்கை ஒழுங்கு படுத்த ஆரம்பிக்க, அவளிடம் என்ன என்று கேட்கலாமா என்று யோசித்த கிருஷ்ணா நேற்றிரவு அவள் தன்னிடம் பேசிய விதத்தை நினைத்துப் பார்த்து விட்டு தன் முயற்சியைக் கை விட்டவனாக தன் மாற்றுடைகளை எடுத்துக் கொண்டு குளியலறையை நோக்கி செல்ல ஆரம்பித்தான்.

அவன் சரியாக குளியலறைக் கதவில் கை வைக்கும் நேரம் மின்னல் போன்று வந்து அவனை தள்ளி விட்ட அனுராதா குளியலறைக்குள் நுழைந்து கொள்ள, கிருஷ்ணாவிற்கோ கோபம் தலைக்கேற ஆரம்பித்தது.

“ஏய்! நீ என்ன பண்ணுற? இது ஒண்ணும் விளையாடும் நேரம் இல்லை, மரியாதையாக வெளியே வா அனுராதா. காலங்காத்தாலேயே கடுப்பாக்காதே சொல்லிட்டேன்” என்றவாறே கிருஷ்ணா கதவை விடாமல் தட்டிக் கொண்டே இருக்க, மறுபுறம் அவளிடம் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை.

நேரம் வேறு நத்தை வேகத்தில் மெல்ல மெல்ல நகர்வது போல் இருக்க, கிருஷ்ணாவிற்கு தான் அவனது பொறுமையை இழுத்துப் பிடித்து வைக்க அத்தனை சிரமமாக இருந்தது.

ஒருவழியாக இருபது நிமிடக் காத்திருப்பிற்குப் பின்னர் குளியலறைக் கதவு திறந்து கொள்ள, அந்த கதவு திறக்கப்படும் என எதிர்பார்க்காமலேயே அதில் சாய்ந்து நின்றவன் தன் நிலை தடுமாறி அனுராதாவின் மேல் விழப் பார்க்க, கண்ணிமைக்கும் நொடியில் அவனைப் பிடித்து நிறுத்தியவள் தன் பலம் கொண்டும் அவனை மொத்தமாக தன்னை விட்டு தள்ளி விட்டாள்.

“கண்ணு இல்லையா உங்களுக்கு? ஆளு தான் வளர்ந்து இருக்கீங்க, மேல் மாடி சுத்தமாக காலி போல” அனுராதா சிறு கோபத்துடன் அவனைப் பார்த்து திட்டியபடியே வேக வேகமாக தயாராகத் தொடங்க, அவனுக்குத் தான் அவள் தன்னிடம் நடந்து கொள்ளும் விதத்தைப் பார்த்து அத்தனை கோபமும், கவலையுமாக இருந்தது.

‘இவ மனதில் அப்படி என்ன தான் இருக்குன்னு எனக்குத் தெரியல. வாயைத் திறந்தாலே திட்டுவது மட்டும் தான் தொழிலாக வைத்து இருக்கா. அது மட்டுமில்லாமல் அவ பேசும் ஒவ்வொரு வார்த்தையும் தேள் கொட்டுவது போல அவ்வளவு கடினமாக இருக்கு, இவளுக்கு என்னதான் ஆச்சு? காலேஜில் நான் பார்த்த அனுராதா வார்த்தைக்கு கூட வலிக்கக் கூடாது என்பது போல அவ்வளவு மென்மையாக பேசுவா, ஆனா இவ அதற்கு அப்படியே நேர் எதிராக இருக்கா. ஐயோ! கடவுளே, இதற்கு எல்லாம் ஒரு முடிவே இல்லையா? ஏன்பா என்னை இப்படி சோதிக்குற?’ கிருஷ்ணா தன் மனதிற்குள் எழுந்த கவலையை வெளிக்காட்ட முடியாத தன் நிலையை எண்ணி கவலை கொண்டவனாக குளியலறைக்குள் நுழைந்து கொள்ள போக,

“கிருஷ்ணா, ஒரு நிமிடம்” என்றவாறே அவன் முன்னால் வந்து நின்றவள்,

“நான் அவசரமாக ஊட்டி போறேன். வர்றதுக்கு எப்படியும் ஒரு நான்கு, ஐந்து நாள் ஆகும்” என்று விட்டு அவனைத் தாண்டிச் செல்ல போக,

அவனோ, “இது என் சம்மதத்திற்காக கேட்கும் விடயமா? இல்லை எனக்கு சொல்லும் தகவலா?” என்றவாறே அவளைக் கேள்வியாக நோக்கினான்.

“உங்க கிட்ட சம்மதம் கேட்டு எந்த ஒரு விடயமும் செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை, இது உங்களுக்கு சொல்லும் தகவல் மட்டுமே” தன் புன்னகை மாறாத முகத்துடன் அவனைப் பார்த்து பதிலளித்தவள் தன் கைப்பையை எடுத்துக் கொண்டு வேக வேகமாக அந்த அறையை விட்டு வெளியேறி சென்று விட, சிறிது நேரம் அந்த அறையில் அமைதி மாத்திரமே நிறைந்திருந்தது.

அனுராதாவை கிருஷ்ணாவால் ஒரு துளி கூட புரிந்து கொள்ள முடியவில்லை, அவன் அவளைப் பற்றி ஒரு விதமாக நினைத்தால் அவள் வேறு விதமாக நடந்து கொள்கிறாள்.

இப்படி எதிரும், புதிரும் போல நடந்து கொள்ளும் இவர்கள் இருவரும் தான் சில வருடங்களுக்கு முன்பு நகமும் சதையும் போல ஒன்றாகியிருந்த காதலர்கள் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்.

அவர்கள் வாழ்வில் நடந்த சில தவிர்க்க முடியாத சம்பவங்களே அவர்கள் இருவரையும் இப்படி ஒரு நிலைக்குத் தள்ளி விட்டிருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது.

அனுராதாவுடனான தன் கடந்த கால நிகழ்வுகளை அசை போட்ட வண்ணம் கிருஷ்ணா தன் வேலைகளைப் பார்க்கத் தொடங்கியிருக்க, மறுபுறம் அவர்கள் வீட்டு ஹாலில் அமர்ந்திருந்த வள்ளி மற்றும் மூர்த்தி அவசர அவசரமாக வீட்டை விட்டு வெளியேறி செல்லும் அனுராதாவைப் பார்த்து ஒருவரை ஒருவர் ஆச்சரியமாக நோக்கினர்.

“என்னங்க இது? இந்த பொண்ணு இவ்வளவு அவசரமாக எங்கே போறா? ஒருவேளை கிருஷ்ணா கூட சண்டை போட்டுட்டு கோவிச்சுட்டுப் போறாளா? அய்யய்யோ! அப்படி ஒரு சம்பவம் நடந்தா நான் நம்ம குலதெய்வக் கோவிலுக்கு போய் நூறு தேங்காய் உடைப்பேன், ஊரெல்லாம் அழைத்து விருந்து போடுவேன், இந்த வீட்டையே திருவிழா நடக்கும் இடம் மாதிரி மாற்றிடுவேன்” என்றவாறே வள்ளி தன் கற்பனைக் குதிரையை ஓட வைக்க ஆரம்பித்த தருணம்,

“அவசரப்பட்டு ரொம்ப சந்தோஷப்படாதீங்கம்மா, அவ ஊட்டிக்குப் போறாளாம், இன்னும் நான்கு, ஐந்து நாளில் திரும்பி வந்துடுவேன்னு சொல்லிட்டுத் தான் போறா” என்றவாறே கிருஷ்ணா படியிறங்கி வர நொடிப்பொழுதில் வள்ளியின் முகம் காற்றிழந்த பலூன் போல ஆனது.

“சே! நான் கூட நம்மைப் பிடித்த தொல்லை மொத்தமாக போயிடுச்சுன்னு நினைத்தேன், நம்ம தலைவிதி இப்படி போட்டு ஆட்டி வைக்குது” என்றவாறே டைனிங் டேபிளில் உணவுப் பதார்த்தங்களை எல்லாம் வள்ளி ஒழுங்கு படுத்திக் கொண்டிருக்க,

அவரை விசித்திரமாகப் பார்த்தபடியே அவர் முன்னால் வந்து நின்றவன், “அம்மா, நீங்களா ராதாவைப் பற்றி இப்படி எல்லாம் பேசுறீங்க? நான் ராதாவைக் காதலிக்கும் விடயத்தை உங்க கிட்ட சொல்லும் போது அவ்வளவு தூரம் சந்தோஷப்பட்டீங்க, ஆனா இப்போ அவளை இப்படி எல்லாம் பேசுறீங்க? எனக்கு எதுவுமே புரியல. அம்மா, உண்மையை சொல்லுங்க, இந்த மூணு வருடத்தில் ராதா என் வாழ்க்கையில் இருந்து விலகிப் போக நீங்க ஏதாவது பண்ணீங்களா?” என்று கேட்க,

அவனது கேள்வியில் அதிர்ச்சியாக அவனை நிமிர்ந்து பார்த்தவர், “நீ இந்த அம்மாவையே சந்தேகப்படுறியா கிருஷ்ணா? உன் கல்யாணத்தைப் பற்றி எவ்வளவோ கனவு கண்டிருந்தேன், அதெல்லாம் அநியாயமாக போச்சேன்னு கவலையில் இப்படி பேசுனா உன்னைப் பெற்ற அம்மாவையே நீ சந்தேகப்பட்டுட்ட. சந்தோஷம் பா, ரொம்ப சந்தோஷம்” என்றவாறே தன் சேலை முந்தானையால் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட, கிருஷ்ணா தான் பேசிய வார்த்தைகளை எண்ணி தன்னைத் தானே கடிந்து கொண்டான்.

‘அய்யோ கிருஷ்ணா! அம்மாவைப் போய் தப்பாக பேசிட்டியே. ராதா சொன்ன மாதிரி ஆளு தான் வளர்ந்து இருக்க, அறிவு கொஞ்சம் கூட வளரல’ கிருஷ்ணா தன்னைத் தானே கடிந்து கொண்டபடி தன் அன்னையைத் தேடிச் சென்று அவரை சமாதானப்படுத்தி தன் காலையுணவையும் முடித்துக் கொண்டு தன் அலுவலகம் நோக்கிச் சென்று விட,

அவன் அங்கிருந்து சென்றதை உறுதிப்படுத்தியவராக தன் மனைவியின் அருகில் வந்த மூர்த்தி, “எதற்காக வள்ளி கிருஷ்ணா கிட்ட பொய் சொன்ன? இன்னும் எத்தனை நாளைக்கு உண்மையை மறைக்க முடியும்? அதுதான் அந்த பொண்ணு குத்துக்கல்லாட்டம் நடு வீட்டில் வந்து நிற்கிறாளே, இனி உண்மையை மறைத்து என்ன பயன்?” என்று வினவ,

அவரோ, “உண்மையை சொன்னால் எல்லாம் சரி ஆகிடுமா? நம்ம பையன் நம்மை வெறுத்துடுவாங்க, வெறுத்துடுவான். இதோ பாருங்க, எதை எதை எப்போ பண்ணணும்னு எனக்குத் தெரியும், அதனால நீங்க உங்க வேலையை மட்டும் பாருங்க. அந்த பொண்ணை என் பையன் வாழ்க்கையில் இருந்து எப்படி விலக்கி வைக்கணும்னு எனக்குத் தெரியும், கூடிய சீக்கிரம் அதை நடத்தியும் காட்டுவேன், அதுவரைக்கும் கிருஷ்ணா முன்னாடி கொஞ்சம் அமைதியாக இருங்க, அது போதும், இப்போ வழியை விடுங்க, எனக்கு நிறைய வேலை இருக்கு” என்று விட்டு தன் வேலைகளை கவனிக்கத் தொடங்கி விட, இதை எதையும் அறியாத அனுராதா தன் உயிராக இருக்கும் தன் தந்தையைக் காண ஊட்டியை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தாள்.

அனுராதா!

அவளுக்கென்று தற்போது இருக்கும் ஒரே சொந்தம் அவளுடைய வளர்ப்புத் தந்தையான ராமச்சந்திரன் மாத்திரமே.

அவரால் தான் இன்று அவள் உயிருடன் நடமாடிக் கொண்டிருக்கிறாள், இல்லை என்றால் எப்போதோ அவளுக்கு கல்லறை நட்டு அதில் பூக்களும் முளைத்து இருக்கும்.

அவளுக்கு மறுவாழ்வு அளித்து அவளை இன்று வரை தன் சொந்த மகளாக பார்த்து வரும் ராமச்சந்திரன் தற்போது தனது இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார் என்று தகவல் வந்ததிலிருந்து அவளால் உறுதியாக இருக்க முடியவில்லை.

கிருஷ்ணாவையும், அவன் குடும்பத்தினரையும் தனியாளாக நின்று ஆட்டுவிக்கும் அனுராதாவால் தன் தந்தையின் இந்த நிலையைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

பல்வேறு மனப் போராட்டங்களுக்கும், சஞ்சலங்களுக்கும் மத்தியில் அவள் அமர்ந்திருந்த நேரம் அவளது கார் ஊட்டி நகரை வந்து சேர்ந்திருந்தது.

ஊட்டியின் பிரதான பாதையில் இருந்து சுமார் இருநூறு மீட்டர் தொலைவில் அரண்மனை போன்ற தோற்றத்தில் இருந்த வீட்டின் முன்னால் சென்று அவளது கார் நிற்க, அடுத்த கணமே வீட்டிற்குள் தாவி ஓடியவள் வேக வேகமாக படியேறி ஒரு அறையை நோக்கி ஓடிச் சென்றாள்.

அந்த அறைக் கதவைத் திறக்கும் முன் சிறிது மூச்சு எடுத்து விட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவள், “அப்பா” என்றவாறே அந்த அறையின் கதவைத் திறந்து கொண்டு உள் நுழைய, அந்த பிரமாண்டமான அறையின் நடுவே போடப்பட்டிருந்த கட்டிலில் கண் மூடி உறங்கிக் கொண்டிருந்தார் ராமச்சந்திரன்.

மருந்துகளின் தாக்கத்தினால் அசந்து தூங்கி கொண்டிருந்தவர் அனுராதாவின், ‘அப்பா’ என்ற அழைப்பில் மெல்ல தன் கண்களைத் திறந்து கொள்ள,

ஒரு நொடியில் அவரின் அருகில் வந்து அமர்ந்து கொண்டவள், “என்னப்பா ஆச்சு உங்களுக்கு? நான் ஊருக்கு கிளம்பும் போது நீங்க நல்லா தானேப்பா இருந்தீங்க? திடீர்னு உங்க உடம்புக்கு என்ன ஆச்சு?” என்று கேட்க, அவரோ சிறு புன்னகையுடன் அவளது கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டார்.

“கல்யாணம் எல்லாம் நல்லபடியாக நடந்ததா அனும்மா?”

“அப்பா! நான் என்ன கேட்கிறேன், நீங்க என்ன சொல்லுறீங்க?”

“முதல்ல நான் கேட்டதற்கு பதில் சொல்லும்மா, கல்யாணம் எல்லாம் நல்லபடியாக நடந்ததா?”

“ஆமா, ஆமா. நடந்துச்சு, நடந்துச்சு”

“நீ போய் பேசியதுமே அவங்க சம்மதம் சொல்லிட்டாங்களா?”

“யாரு, அவங்க? சம்மதம்னு சொல்லிட்டாலும். எவ்வளவோ கேட்டுப் பார்த்தேன், அவங்க சம்மதிக்கவே இல்லை, அதுதான் கிருஷ்ணாவோட குடும்பத்தில் இருக்கும் எல்லோரையும் கடத்தி வைத்து மிரட்டி இந்த கல்யாணத்தை நடத்தினேன்” என்று விட்டு அனுராதா தன் தந்தையை திரும்பிப் பார்க்க, அவரோ அவளது கை தன் கைகளுக்குள் இருந்து நழுவியதைக் கூட அறியாதவராக அதிர்ச்சி மேலோங்க அவளை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார்……