நீயின்றி நானுமே நீரின்றி மேகமே – 03

eiPONP961496-224bbede

அனுராதா சொன்ன வார்த்தைகளைக் கேட்டு திகைத்துப் போய் அமர்ந்திருந்த ராமச்சந்திரனுக்கு தன் சுயநினைவை அடைய வெகு நேரம் தேவைப்பட்டது.

தான் மூன்று வருடங்களுக்கு முன்பு பார்த்த பெண் இவள்தானா என்ற சிந்தனையோடு ராமச்சந்திரன் அனுராதாவை நிமிர்ந்து பார்க்க, அவளோ தான் சொன்ன விடயத்தில் அதிர்ச்சியடையும் அளவுக்கு எதுவுமே இல்லை என்பது போல அவருக்குத் தேவையான மருந்துப் பொருட்களை எல்லாம் மேஜை மீது அடுக்கி வைத்துக் கொண்டிருந்தாள்.

தன் மகள் எப்படி இந்தளவிற்கு மாறக்கூடும் என்ற யோசனையுடன் அவள் கையைப் பிடித்து தன்னருகே அமரச் செய்தவர், “ராதா நீ செய்திருக்கும் வேலை சரிதானா?” என்று கேட்க,

அவளோ, “ஆமா, அதில் என்ன தப்பு இருக்கு?” இயல்பாக அவரைப் பார்த்து வினவினாள்.

“ராதா, நீ செய்தது கொஞ்சம் கூட சரியில்லை. இங்கே இருந்து கிளம்பி போகும் போது நீ என்ன சொன்ன? ஆனா, இப்போ நீ செய்து இருக்கிறது என்ன?”

“நான் ஒண்ணும் உங்க கிட்ட சொல்லாத விடயத்தை செய்யவில்லையே ப்பா”

“எது இப்படி ஒரு குடும்பத்தைக் கடத்தி வைத்து மிரட்டி கல்யாணம் பண்ணுறது தான் நீ என் கிட்ட சொன்னதா?”

“நான் அப்படி சொல்ல வரல”

“பின்ன எப்படி? நீ என் கிட்ட சொன்னதை நான் உனக்கு ஞாபகப்படுத்தவா? நான் கிருஷ்ணா வீட்டுக்கு போய் அவங்களை எப்படி சரி பேசி சம்மதிக்க வைப்பேன், அப்படி முடியலைனாலும் எப்பாடுபட்டாவது இந்த கல்யாணத்தை நடத்துவேன், ஆனா எங்க கல்யாணம் கண்டிப்பாக அவங்க முன்னாடி தான் நடக்கும். இது சத்தியம்ன்னு தானே நீ என் கிட்ட சொல்லிட்டுப் போன, ஆனா நீ அப்படியா நடந்திருக்க சொல்லு?”

“ஆமாப்பா, உங்க கிட்ட சொன்னதைத் தான் செய்திருக்கேன்”

“என்ன?” அனுராதா சொன்ன விடயத்தை முழுமையாக புரிந்து கொள்ள முடியாமல் ராமச்சந்திரன் சிறு குழப்பத்துடன் அவளைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்க,

அவரைப் பார்த்து புன்னகைத்தபடியே அவரது சட்டைக் காலரை சரி செய்து விட்டவள், “நான் என் கல்யாணத்தை அவங்களைக் கடத்தி வைத்து, கிருஷ்ணாவை மிரட்டி நடத்தியது என்னவோ உண்மைதான், ஆனா அவங்களை எல்லாம் என்னோட ரூமில் தான் அடைத்து வைத்தேன், ஏன்னா என் ரூமில் இருந்து பார்த்தால் அவங்களுக்கு அந்த மண்டபம் முழுமையாக, தெளிவாகத் தெரியுமே, அதனால் தான்” சிறுபிள்ளை கதை சொல்வது போல கூறவும், அவரோ சிறு கலக்கத்துடன் அவளது தலையை ஆதரவாக வருடிக் கொடுத்தார்.

“ராதா ம்மா, எனக்கு என்னவோ நீ தேர்ந்தெடுத்திருக்கும் இந்த பாதை ரொம்ப தப்பாக தெரியுதும்மா. இந்த பாதையில் நீ மேலும் மேலும் முன்னேறிப் போக நினைத்தால் அது உன் உயிரைக் கூட பறிச்சுடலாம். தயவுசெய்து நான் சொல்லுறதைக் கேளும்மா. மூன்று வருடங்களுக்கு முன்பு நான் பார்த்த அனுராதா நீ இல்லையோன்னு எனக்குப் பயமாக இருக்கிறது ராதாம்மா” என்றவாறே ராமச்சந்திரன் அவளது முகத்தை மெல்ல வருடிக் கொடுக்க,

தன் முகத்தில் மறையாத புன்னகையுடன் அவரைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தவள், “அப்பா, நீங்களும் இதே பல்லவியை சொல்லி என்னைக் கடுப்பாக்க வேண்டாம். நாம ஒண்ணும் மெஷின் இல்லை ப்பா, ஆரம்பத்தில் ஒரு ஃபார்முலா செட் பண்ணி அதற்கேற்ற மாதிரியே எப்போதும் இருக்க வேண்டும் என்று நினைப்பது முட்டாள்தனம். நான் என்னோட வாழ்க்கையில் என்ன எல்லாம் இழந்திருக்கேன்னு உங்களுக்கு ரொம்ப நல்லாவே தெரியும், அப்படியிருக்கும் போது நீங்க எனக்கு ஆதரவாக பேசாமல் அந்த கிருஷ்ணா குடும்பத்திற்காக இவ்வளவு தூரம் இறங்கிப் பேசுறீங்க. என்னோட வாழ்க்கை இப்படி மாறுவதற்கு முக்கியமான காரணமே அந்த கிருஷ்ணாவும், அவனோட குடும்பமும் தான். நான் பட்ட கஷ்டங்களையும், வேதனையையும் அவங்க அனுபவிக்க வேண்டாமா? எனக்குள் இருக்கும் இந்தப் பழிவாங்கும் எண்ணம் உங்களோட இந்த வெட்டி அறிவுரையால் மாறப்போவதில்லை, அதனால இனிமேல் எனக்கு ஆதரவாக பேசுவதாக இருந்தால் மட்டும் நீங்க உங்க வாயைத் திறந்து பேசலாம், மற்றபடி இப்படி ஏதாவது உளறுவதாக இருந்தால் உங்க வாயை மூடி இருங்க, அதை விட்டுட்டு இன்னொரு தடவை இப்படி பேச நினைத்தால் கூட உங்களைப் பேச முடியாத நிலைக்கு ஆளாக்கிடுவேன். புரியுதா” என்றவாறே அவரது கையை தன் முகத்திலிருந்து பட்டென்று தட்டி விட்டவள் தன் கைப்பையை எடுத்துக் கொண்டு வேகமாக அங்கிருந்து வெளியேறி சென்றாள்.

அனுராதாவின் பேச்சையும், நடவடிக்கைகளையும் பார்த்து அதிர்ந்து போய் அமர்ந்திருந்த ராமச்சந்திரன் தான் அவளுக்கு சரியான விடயங்களைக் கற்றுக் கொடுக்கவில்லையோ என்ற கவலையான எண்ணத்துடன் கண் மூடி அமர்ந்திருக்க, மறுபுறம் அனுராதா தனது அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள்.

“அப்பா எப்படி அந்தக் கிருஷ்ணாவுக்கு ஆதரவாக பேசலாம்? அவனால் நான் என்ன நிலையில் இருந்தேன்னு எல்லாம் தெரிந்தும் எப்படி அவர் இப்படி பேசலாம்? நான் என் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களுக்கு பழிக்குப்பழி வாங்காமல் எப்படி அமைதியாக இருக்க முடியும்? அந்தக் கிருஷ்ணா மட்டும் தான் இதற்கு எல்லாம் மூல காரணம். அவனால் தானே எனக்கு இந்த நிலைமை. இதற்கு எல்லாம் நீ கண்டிப்பாக தண்டனை அனுபவிக்க வேண்டும் கிருஷ்ணா, நான் உனக்குத் தண்டனை கொடுப்பேன்” என்றவாறே அந்த அறையிலிருந்த பொருட்களை எல்லாம் வாரித் தள்ளியவள் உடலும், மனமும் சோர்ந்து போக அப்படியே மண்டியிட்டு அமர்ந்து கொண்டாள்.

அறை முழுவதும் பொருட்கள் எல்லாம் இறைந்து போய் கிடக்க, அவை எல்லாவற்றிற்கும் நடுவே அமர்ந்திருந்தவள் தன் காலடியில் கிடந்த ஒரு புகைப்படத்தைப் பார்த்து விட்டு தன் நடுங்கும் கரங்களால் மெல்ல அந்த புகைப்படத்தை எடுத்து வருடிக் கொடுத்தாள்.

அந்த புகைப்படத்தில் கிருஷ்ணாவின் தோளோடு சாய்ந்தபடி அனுராதா அமர்ந்திருக்க சிறு புன்னகையுடன் அதை வருடிக் கொடுத்தவள், “ஏன் கிருஷ்ணா அன்னைக்கு நீ என்னைக் காப்பாற்ற வரல? நீ மட்டும் சரியான நேரத்திற்கு வந்திருந்தால் நான் இப்போ இப்படி ஒரு நிலையில் உன்னை சந்தித்திருக்க மாட்டேனே, நீ ஏன் கிருஷ்ணா என்னைக் காப்பாற்ற வரல? ஏன் வரல?” தன் கவலை மொத்தமும் கோபமாக உருமாற தன் கையிலிருந்த புகைப்படத்தை விட்டெறிந்தவள் தன்னருகே கிடந்த கண்ணாடி குவளை ஒன்றின் மீது தன் கையை ஓங்கி அடிக்க, அதுவோ சில்லு சில்லாக சிதறி அவளது கையைப் பதம் பார்த்தது.

தன் கையிலிருந்து இரத்தம் வடிவதைக் கூட பொருட்படுத்தாமல் அப்படியே அமர்ந்திருந்தவள் சிறிது நேரத்தில் தன்னை மறந்து உறங்கி விட, மறுபுறம் கிருஷ்ணா தன் அலுவலக அறையில் தன் மடிக்கணினியில் தெரிந்த அனுராதாவின் முகத்தை ஏக்கத்துடன் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

ஆறு வருடங்களுக்கு முன்பு தங்கள் இருவருக்கும் இடையே அழகாக மலர்ந்த காதல், ஒரு சில வருடங்களுக்கு முன்பு திடீரென மாயமாகிப் போக, ஆரம்பத்தில் அந்தப் பிரிவு கொடுத்த வலியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் திண்டாடிப் போனவன் சிறிது சிறிதாக தன்னை தேற்றி ஒரு அமைதியான நிலைக்கு வந்து சேர்ந்திருந்தான்.

இனி தன் வாழ்வில் அனுராதாவின் நினைவுகள் மாத்திரமே எஞ்சியிருக்கும் என்று அவன் நினைத்திருக்க, அவன் நினைப்பிற்கு மாறாக ஒரு மாதத்திற்கு முன்பு அவர்கள் வீட்டில் வந்து நின்றாள் அவன் நெஞ்சில் நிறைந்திருந்த அவனது காதல் நாயகி அனுராதா.

அவள் தன்னைத் திருமணம் செய்ய தன் பெற்றோரின் சம்மதத்தை வேண்டி நிற்க, அவர்களோ அவளை அவமானப்படுத்தி அந்த வீட்டை விட்டு வெளியே அனுப்பியிருந்தனர்.

பல வருடங்களுக்கு பின்னர் அவளைப் பார்த்ததும் ஆரம்பத்தில் அவளுக்காக கிருஷ்ணாவின் மனது இறங்கியிருந்தாலும் திடீரென தன்னை விட்டு விலகிப் போனவள் மறுபடியும் ஏன் தன்னைத் தேடி வரவேண்டும் என்கிற யோசனை மாத்திரம் அவனை விட்டு விலகவில்லை.

கிருஷ்ணா தன் மனதிற்குள் எழுந்த கேள்விக்கு விடை காணும் முன்னரே அனுராதா அவன் குடும்பத்தினரைக் கடத்தி வைத்து தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி மிரட்டியிருக்க, அதற்கு மேல் அவனால் வேறு எதைப்பற்றியும் சிந்திக்க முடியவில்லை.

தன் குடும்பம் தான் தன் உலகம் என வாழ்ந்து வருபவன் அவளது மிரட்டலுக்கு அடிபணிந்து தான் போனான்.

அனுராதா தன்னிடம் நடந்து கொண்ட முறை அவனுக்கு கோபத்தை வரவழைத்திருந்தாலும், அவள் மீது அவன் வைத்திருக்கும் காதல் அந்தக் கோபத்தை பனி போல மறையச் செய்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.

அன்றைய நாள் முழுவதும் அனுராதாவின் நினைவுகள் கிருஷ்ணாவை பாடாய்படுத்த அவளிடம் பேசிப் பார்த்து விடலாம் என்று எண்ணியபடி தன் தொலைபேசியை எடுத்து அவளது எண்களை அழுத்தியவன், சிறிது நேர சிந்தனைக்கு பின்னர் அந்த எண்களை அழித்து விட்டு மீண்டும் தன் தொலைபேசியை தன் சட்டைப் பாக்கெட்டில் போட்டுக் கொண்டான்.

“நான் நேரில் பேசினாலே அந்தளவுக்கு எரிந்து விழுந்து பேசுவா, இந்த லட்சணத்தில் நான் போனில் பேசி அவ என் கூட பேசுவாளா? அவ இருக்கும் கோபத்தைப் பார்த்தால் போனிலேயே எட்டி அறைந்தாலும் ஆச்சரியமில்லை, எதற்கு வம்பு? அவ நேரில் வந்ததுமே பேசலாம். ஆனாலும் ராதாம்மா உனக்கு இவ்வளவு கோபம் ஆகாது, அப்படி என்ன தான் கோபமோ? என்னதான் இருந்தாலும் கோபப்படும் போது கூட அவ அழகாகத் தான் இருக்கா” என தனக்குள் பேசியபடியே அமர்ந்திருந்த கிருஷ்ணா தன் மனவோட்டத்தை எண்ணி சிறு புன்னகையுடன் தன் தலையில் தட்டிக் கொண்டான்.

“ஆனாலும் உனக்கு இவ்வளவு காதல் ஆகாதுடா கிருஷ்ணா, அவ அந்தளவிற்கு திட்டும் போது கூட ஒரு வார்த்தை எதிர்த்து பேச உனக்குத் தோணலையே. உனக்கு காதல் முற்றிப் போச்சு, எத்தனை வருஷம் ஆனாலும் இந்தக் காதல் மட்டும் மாறவே மாறாது போல” கிருஷ்ணா தன் மனதிற்குள் இருக்கும் அனுராதா மீதான காதலை எண்ணி தன்னை மறந்து அமர்ந்திருக்க, அவனது இந்தக் காதல் அனுராதாவின் மனதை மாற்றுமா? இல்லை அவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் இந்தப் பிரிவை மேலும் அதிகரிக்குமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

**********

அனுராதா ஊட்டி வந்து சேர்ந்து அன்றோடு ஐந்து நாட்கள் முழுமையாக நிறைவு பெற்றிருந்தது.

இந்த ஐந்து நாட்களும் தன் தந்தையுடன் முடியுமான அளவுக்கு தன் நேரத்தை செலவிட்டவள் அவரை வெகு கவனத்துடன் பராமரித்து வந்தாள்.

அனுராதா தன்னுடன் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் தன்னால் முடிந்த மட்டும் அவளது மனதை மாற்ற ராமச்சந்திரன் பலவகையில் முயன்றும் அவரது முயற்சிக்கு கிடைத்த பலன் பூஜ்ஜியமே.

அனுராதா தன் பழிவாங்கும் எண்ணத்தை விட்டு மாறவே மாட்டேன் என்பது போல தென்காசிக்குத் திரும்பி செல்வதற்காக ஏற்பாடுகளை எல்லாம் செய்து கொண்டிருக்க, ராமச்சந்திரன் தான் மனதளவில் மேலும் மேலும் வருந்திக் கொண்டிருந்தார்.

தன் மகளது வாழ்க்கையில் எந்தவொரு தேவையில்லாத பிரச்சினைகளும் வந்து விடக்கூடாது என்று எண்ணியபடி கடவுளிடம் மனதார வேண்டிக் கொண்டவராக அனுராதாவை ராமச்சந்திரன் வழியனுப்பி வைத்திருக்க, அவளோ அடுத்து என்ன செய்வது என்று திட்டம் தீட்டிய படியே தென்காசி நோக்கிய தன் பயணத்தை ஆரம்பித்திருந்தாள்.

அதிகாலை நேரத்திற்கே ஊட்டியில் இருந்து அனுராதா புறப்பட்டிருந்தாலும், தென்காசி வந்து சேருவதற்குள் மாலையாகி இருந்தது.

கிருஷ்ணாவின் வீட்டைப் பார்த்ததுமே புது உற்சாகம் உடலெங்கும் பரவியது போல அனுராதா தன் காரிலிருந்து இறங்கி நிற்க, சரியாக அதே நேரத்தில் கிருஷ்ணாவும் அவனது அலுவலகம் முடிந்து வீடு வந்து சேர்ந்திருந்தான்.

பல வருடங்களுக்கு பின்னர் அனுராதவைப் பார்த்து விட்டு ஐந்து நாட்களாக அவளைப் பார்க்காமல் இருந்தது எதையோ ஒன்றை இழந்தது போல அவனை வாட்டியிருக்க, இப்போது தன் வீட்டின் முன்னால் மீண்டும் அவளது தரிசனம் கிடைத்ததும் அவன் தன் இடம், பொருள், ஏவல் மறந்து அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு நின்றான்.

“இவருக்கு இதே வேலையாக போச்சு, எப்போ பாரு இனிப்புக் கடையை வெறித்துப் பார்த்துக் கொண்டு நிற்பது போல நிற்பது தான் தொழில் போல” கிருஷ்ணாவைப் பார்த்து சலித்துக் கொண்டே அனுராதா வீட்டிற்குள் செல்ல, அவனும் சாவி கொடுத்த பொம்மை போல அவளைப் பின் தொடர்ந்து நடந்து சென்றான்.

வாயிலில் வாகனங்களின் சத்தம் கேட்டதும் கிருஷ்ணா தான் வருகின்றான் என்று எண்ணியபடி வீட்டு ஹாலில் நிம்மதியாக சாய்ந்து அமர்ந்திருந்த வள்ளி, வாசல் தாண்டி வந்தவளைப் பார்த்து அதிர்ச்சியாகிப் போனார்.

“அங்கேயே நில்லு, எதற்காக மறுபடியும் இங்கே வந்த?” வள்ளியின் கேள்வி தன் காதில் விழவில்லை என்பது போல அனுராதா படியேறி செல்லப் போக, அவளது வழியை மறித்தவாறு வந்து நின்று கொண்டவர், “உன்னைத் தான் கேட்டேன், காது கேட்காதா?” என்று கேட்க,

தன் காதைத் தேய்த்து விட்டபடியே அவரை நிமிர்ந்து பார்த்தவள், “என் கிட்ட தான் கேட்டீங்களா? நான் கூட வயது போன காலத்தில் தனியாகப் புலம்புறீங்கன்னு நினைத்தேன்” எனவும், அவருக்கோ கோபம் தலைக்கேற ஆரம்பித்தது.

“நீ என்ன நினைச்சுட்டு இருக்கா? உன் இஷ்டத்திற்கு வர்ற, போற. இது என்ன சத்திரமா? தெருவில் வர்ற, போற எல்லோருக்கும் இடம் கொடுக்க”

“ஓஹ்! ஒருவேளை இது சத்திரமாக இருந்தால் மட்டும் நீங்க அப்படியே தாராள மனசோடு இடம் கொடுத்துடுவீங்க, அப்படித்தானே?” அனுராதாவின் கேள்வியில் வள்ளி வாயடைத்துப் போய் நிற்க,

அவரது தாடையை தன் ஒரு விரல் கொண்டு நிமிர்த்தியவள், “நான் எனக்கு என்ன பண்ணால் சரின்னு தோணுதோ அதை எல்லாம் கண்டிப்பாக பண்ணுவேன், ஏன் தெரியுமா? எனக்கு ரொம்ப நெருக்கமான ஒருத்தங்க என் கிட்ட மூணு வருடத்திற்கு முன்னாடி ஒரு விடயம் சொன்னாங்க, என்ன தெரியுமா? பொண்ணோ, பையனோ எதையும் தைரியமாக பண்ணனும், எதற்கெடுத்தாலும் அடுத்தவங்க உதவியைத் தேடி நிற்க கூடாது, தனக்கு எது வேணும், வேணாம்னு உறுதியாக எடுத்துச் சொல்லணும், அது மட்டுமில்லாமல் நாலு இடத்திற்கு தைரியமாக போய் வரணும், அதுதான் இந்தக் காலத்தில் இருக்கும் பசங்களுக்கு அழகே. இப்படி எல்லாம் அவங்க சொன்னது தான் இன்னைக்கு என்னை இந்தளவிற்கு ஒரு தைரியமாக மாற்றி இருக்குன்னு சொன்னா நீங்க நம்புவீங்களா? ஆனா மாமியாரே, அதுதானே உண்மை” எனவும், இப்போது வள்ளிக்கு சுத்தமாகப் பேச்சே வரவில்லை.

வள்ளியின் தாடையில் இருந்த தன் கையை விலக்கி தூசு தட்டுவது போல பாவனை செய்தபடி அவரை நோக்கி இன்று இரண்டடி எடுத்து வைத்தவள், “என்கிட்ட தேவை இல்லாமல் பிரச்சினை வைக்க வேணாம்னு நான் தான் அன்னைக்கே சொன்னேனே, என்ன மறந்து போச்சா? என்னோட கோபத்தின் பாதியைக் கூட இன்னும் நீங்க யாரும் பார்க்கல, ஒரு வேளை மேலும் மேலும் தேவையில்லாமல் என் வழியில் தடையாக வந்து நின்னீங்க அப்புறம் நடக்கப் போகும் சேதாரங்களுக்கு நான் பொறுப்பு இல்லை. மூணு வருடத்திற்கு முன்னாடி எனக்கு என்ன எல்லாம் நீங்க கொடுத்தீங்களோ, அது எல்லாவற்றிற்கும் வட்டியும், முதலுமாக கணக்கைத் தீர்க்காமல் நான் இங்கே இருந்து போக மாட்டேன், அதனால என் கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க பழகிக்கோங்க என் செல்ல மாமியாரே” என்று விட்டு வேகமாக படியேறி சென்று விட, வள்ளி திக்பிரமை பிடித்தாற் போல அதிர்ந்து போய் நின்றார்.

தான் அன்று அனுராதாவிற்கு செய்த பெரும்பாவம் இன்று தன்னை இந்தளவிற்கு ஆட்டிப்படைக்கிறதே என்ற கலக்கத்துடன் தன்னறைக்குச் செல்லத் திரும்பியவர், அத்தனை நேரமும் அவர்கள் இருவருக்கும் இடையே நடந்த உரையாடலை கேட்டுக் கொண்டு நின்ற கிருஷ்ணாவைப் பார்த்து இன்னமும் பரிதவித்துப் போனவராக தன் கண்களைத் துடைத்துக் கொண்டபடி அவசரமாக அங்கிருந்து நகர்ந்து சென்று விட, அப்போதுதான் அவனுக்கு அனுராதாவின் கோபத்திற்கு தன் அன்னையும் ஒருவகையில் தொடர்பு பட்டிருக்கிறார் என்பது புரிய ஆரம்பித்தது.

“அம்மா ஏதோ ஒரு விடயம் செய்து தான் அனுராதா என்னோட வாழ்க்கையில் இருந்து விலகிப் போய் இருக்கா, அவளோட இந்த கோபத்தின் பிண்ணனியில் என் அம்மாவுக்கு நிச்சயமாக ஒரு பங்கு இருக்கு, ஆனா அன்னைக்கு நான் கேட்டபோது ஏதேதோ பேசி சமாளிச்சுட்டாங்க. பரவாயில்லை, நடந்தது நடந்து முடிஞ்சுடுச்சு, இனி நடக்கப் போகும் விடயங்கள் தான் ரொம்ப முக்கியம். இதற்கு முன்னாடி எப்படி வேணும்னாலும் அம்மாவும், அனுராதாவும் இருந்திருக்கலாம், ஆனா இப்போ அனுராதா என்னோட மனைவி. என்னோட மனைவிக்கு ஒரு பிரச்சினைனா அது எனக்கும் பிரச்சினை தான், இனி வரப்போகும் ஒவ்வொரு நாளும் நான் ராதாவுக்கு துணையாக இருந்த அவளோட எல்லாப் பிரச்சினைகளையும் நான் தீர்த்து வைப்பேன், அதேநேரம் அம்மாவுக்கும், அவளுக்குமிடையே இருக்கும் இந்தப் பிரிவையும் நான் கண்டிப்பாக தீர்த்து வைத்தே தீருவேன்” என்ற உறுதியான எண்ணத்துடன் கிருஷ்ணா தன்னறை நோக்கிச் செல்ல, அவன் வந்து சேருவதற்குள் அனுராதா மாற்றுடைகளை மாற்றிக் கொண்டு கையில் ஒரு புத்தகத்துடன் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தாள்.

“அனுராதா பயணம் எல்லாம் எப்படி இருந்தது?”

“பரவாயில்லை” கிருஷ்ணாவின் கேள்விக்கு தன் பார்வையை உயர்த்தாமலேயே அனுராதா பதிலளித்திருக்க, அவனோ அந்த இடத்தை விட்டு அசையப் போவதில்லை என்பது போல நின்று கொண்டிருந்தான்.

‘என்ன இவ நிமிர்ந்து கூட பார்க்க மாட்டேங்குறாளே’ அவளை நிமிர்ந்து பார்க்க வைக்க என்ன செய்வது என்று யோசித்தபடியே சுற்றிலும் தன் பார்வையை சுழலவிட்டவன்,

“அம்மா, அப்பா எல்லாம் நல்லா இருக்காங்களா ராதா?” என்று கேட்க, அவளோ அவனை சட்டென்று நிமிர்ந்து பார்த்தாள்.

அவள் தன்னைத் திடீரென பார்க்க கூடும் என்று நினைத்திராத கிருஷ்ணா அதிர்ச்சி கலந்த சந்தோஷத்துடன் அவளைப் பார்க்க, அவளோ, “அப்பா நல்லா இருக்காங்க” என்று விட்டு மீண்டும் தன் தலையைக் குனிந்து கொண்டாள்.

‘இது சரி வராது’ அவள் தன்னிடம் பேச்சு வார்த்தை வைக்க விரும்பவில்லை என்று புரிந்து கொண்ட கிருஷ்ணா அங்கே கிடந்த முக்காலி ஒன்றை இழுத்து அனுராதா அமர்ந்திருந்த இடத்தின் அருகே போட்டு விட்டு அவள் கையிலிருந்த புத்தகத்தை எட்டிப் பார்க்க அவளோ சிறு கோபத்துடன், “இப்போ உங்களுக்கு என்ன வேணும்? எதற்காக இப்படி டிராமா போடுறீங்க?” என்று கேட்க,

அவனோ, “நான் எதுவும் பண்ணலயே” என்று விட்டு மீண்டும் அவளது கையிலிருந்த புத்தகத்தை வாங்கிப் பார்க்கப் போக அந்தப் புத்தகம் இப்போது பறந்து சென்று சுவற்றின் ஒரு மூலையில் ஒதுங்கி கிடந்தது.

“ராதா இப்போ எதற்காக இவ்வளவு கோபம்?”

“கால் மீ அனுராதா” அனுராதா தன் பற்களைக் கடித்துக் கொண்டு அவனைப் பார்த்துக் கூற,

“ஓகே, ஓகே. கூல் டவுன்” என்றவாறே அவளது கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டவன்,

“நீ என்ன எவ்வளவு வேண்டுமானாலும் திட்டு, ஏன் நாலு அடி வேண்டுமானாலும் அடிச்சுக்கோ, ஆனா இந்தக் கோபம் மட்டும் வேண்டாமே. எனக்கு என் பழைய ராதாம்மா தான் வேணும்” என்று கூற,

“அப்படியா?” சிறு ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்துக் கேட்டவள் இப்போது அவனது கைகளை தன் கைகளுக்குள் வைத்துப் பிடித்துக் கொண்டாள்.

“நீ இப்படி டிராமா எல்லாம் பண்ணால் நான் உன்னை நம்பி உன் பின்னாடியே ஓடி வருவேன்னு நினைச்சியா?”

“அனுராதா!”

“ஆமா, அனுராதா தான். நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டது உன் கிட்ட கொஞ்சிக் குழாவி குடும்பம் நடத்த இல்லை, உன்னையும், உன் குடும்பத்தையும் அடியோடு அழிப்பதற்கு. உன் பக்கத்தில் இருந்து ஒவ்வொரு நிமிடமும் நீயும், உன் குடும்பமும் கஷ்டப்படுவதைப் பார்க்கத் தான் மூணு வருஷம் கழிச்சு வந்திருக்கேன். இனி ஒவ்வொரு நாளும் நான் உங்களுக்கு கொடுக்கப்போகும் தண்டனையை தாங்கிக் கொள்ள தைரியமாக இருக்கப் பழகிக்கோ. இந்த உலகத்திலேயே நான் அதிகமாக வெறுக்கும் ஒரே ஆளு நீ தான், நீ மட்டும் தான் கிருஷ்ணா” என்றவாறே கிருஷ்ணாவின் கையை தன் பலம் கொண்டும் தனது கைகளை விட்டும் தள்ளி விட்டவள், தான் விட்டெறிந்த புத்தகத்தை எடுத்துக் கொண்டு மற்றைய புறமாக அமர்ந்து படிக்க ஆரம்பிக்க, கிருஷ்ணாவிற்கோ அவள் சொல்லி விட்டுச் சென்ற வார்த்தைகளை எல்லாம் கேட்டு தலைசுற்ற ஆரம்பித்தது…..