நீயின்றி நானுமே நீரின்றி மேகமே – 08

eiPONP961496-465de7df

நீயின்றி நானுமே நீரின்றி மேகமே – 08

வழமைக்கு மாறாக இரவு பூராவும் மழை பெய்து ஓய்ந்திருக்க, அந்த காலநிலை மாற்றம் தந்த கதகதப்பான விடியலில் தன் தூக்கம் கலைந்து எழுந்து அமர்ந்த அனுராதா எப்போதும் போல தனது வேலைக்குச் செல்வதற்காக தயாராகி வந்தாள்.

அவள் படியிறங்கி வருவதைப் பார்த்ததுமே இரவு முழுவதும் தூங்காமல் கண் விழித்தபடியே வீட்டு வாயிலுக்கும், அவளின் அறைக்குமாக நடந்து கொண்டிருந்த வள்ளி அவளருகில் ஓடி வர, அவரைப் பார்த்து நிற்கும் படி சைகை செய்தபடியே நடந்து வந்தவள், “இந்த வயசான காலத்தில் எதற்காக இப்படி ஓடுறீங்க? இவ்வளவு வேகமாக ஓடிவந்து எங்கேயாவது அடிபட்டு விழுந்து பொட்டுன்னு போய் சேர்ந்துட்டீங்கன்னா அப்புறம் நான் நினைச்சு வந்த காரியம் நல்லபடியாக நடக்குமா? அதனால கொஞ்சம் பார்த்து நடங்க, அப்போதான் எனக்கு வசதியாக இருக்கும், என்ன புரியுதா?” என்று கேட்க, அவரோ அவளைப் பார்த்து கண்கள் கலங்கி நின்றார்.

“அனுராதா, நான் உனக்குப் பண்ணது ரொம்ப பெரிய தப்புதான், அது இல்லைன்னு சொல்லல. இத்தனை நாளாக நான் செய்த தப்பை சரின்னு நினைச்சு உன்னை இன்னும் இன்னும் கஷ்டப்படுத்திட்டே இருந்துட்டேன், ஆனா என் பையன் என்னை விட்டுப் போனதற்கு அப்புறம்தான் நான் பண்ண காரியம் எவ்வளவு மோசமானதுன்னு எனக்குப் புரியுது, நான் பண்ண தப்புக்கு நான் இப்போவே போலீஸில் போய் சரணடையுறேன், ஆனா என் பையனை மட்டும் என் கிட்ட கொடுத்துடு. கிருஷ்ணா இல்லாமல் என்னால இருக்கவே முடியாது. தயவுசெய்து என் பையனை என் கிட்ட திரும்பி வரவைச்சுடு, நான் உன் காலில் வேணும்னாலும் விழுறேன்” வள்ளி அனுராதாவைப் பார்த்து கதறியழுதபடியே அவளது காலில் விழ,

அவரைப் பார்த்து சிரித்துக் கொண்டே தன் கைகளைக் கட்டிக் கொண்டு நின்றவள், “உங்களுக்கு ஒரு காரியம் ஆகணும்னா நீங்க காலில் விழவும் செய்வீங்க, அதேநேரம் காலை வாரவும் செய்வீங்க இல்லையா?” என்று கேட்க, வள்ளி அதிர்ச்சியாக அவளை நிமிர்ந்து பார்த்தார்.

“என்ன அப்படி பார்க்குறீங்க? இதேமாதிரிதானே மூணு வருஷத்துக்கு முன்னாடி என்னையும், என் அம்மா, அப்பாவையும் எதுவும் பண்ணிடாதீங்கன்னு உங்க காலில் விழுந்து நான் கதறியழுதேன், அப்போ நீங்க என்னை என்ன பண்ணீங்கன்னு ஞாபகம் இருக்கா? சொல்லுங்க, ஞாபகம் இருக்கா?” என்றவாறே தன் காலடியில் விழுந்து கிடந்த வள்ளியின் கையைப் பிடித்து கோபமாக உலுக்கியவள்,

“என்னை எட்டி உதைச்சுட்டு என் அம்மா, அப்பா இருந்த காரை லாரியை விட்டு மோத வைச்சீங்க. இப்போ ஞாபகம் வருதா?” என்று கேட்க, வள்ளி தயங்கியபடியே அவளைப் பார்த்து ஆமோதிப்பாக தலையசைத்தார்.

“வெரிகுட், அப்போ அதே சம்பவத்தை மறுபடியும் நம்ம திரும்பவும் செய்து பார்க்கலாமா?” என்றவாறே அவரைப் பிடித்திருந்த தன் கையை உதறிவிட்டு இரண்டடி பின்னால் நகர்ந்து சென்றவள் வேகமாக தன் காலை வள்ளியை நோக்கி நகர்த்த,

அவரோ, “கிருஷ்ணா!” என்று சத்தமிட்டபடியே தன் கண்களை இறுக மூடிக்கொண்டார்.

தன் உடம்பில் எந்தவொரு வலியும் ஏற்படவில்லை என்பதை உணர்ந்து கொண்டவர் மெல்ல மெல்ல தயங்கியபடி தன் கண்களைத் திறந்து கொள்ள அவரைப் பார்த்து புன்னகைத்தபடியே அவர் முன்னால் முழங்காலிட்டு அமர்ந்து கொண்ட அனுராதா, “ஓங்கிய காலால் எட்டி உதைக்க எனக்கு ஒரு நொடி ஆகாது, ஆனா நான் அப்படி பண்ண மாட்டேன், ஏன்னா இப்போ உங்க முன்னாடி நிற்கிறது தேவியோட பொண்ணு, வள்ளியோட மருமகள் கிடையாது. தேவியோட பொண்ணு மனதில் இன்னமும் கொஞ்சம் போல பாசமும், இரக்கமும் மிஞ்சியிருக்கு, அதுதான் இன்னைக்கு உங்களைக் காப்பாற்றியிருக்கு, ஆனா இனி வரப்போகும் நாளெல்லாம் அது இருக்குமான்னு சொல்ல முடியாது, அதனால என் முன்னாடி இப்படி அடிக்கடி டிராமா போடுவதை நிறுத்திக்கோங்க, ஏன்னா எனக்கு கோபம் வந்தால் நான் என்ன செய்வேன்னு தெரியாது, அப்புறம் நேற்று உங்க பையனை கழுத்தைப் பிடிச்சு வெளியே தள்ளி விட்ட மாதிரி உங்களையும் தள்ள வேண்டி வரலாம். அப்படி ஒரு சம்பவத்தைப் பண்ண எனக்கு இஷ்டம் இல்லை, ஏன் தெரியுமா? நீங்க போய் விழுந்தால் அந்த இடத்தில் புல்லு கூட முளைக்காது, அவ்வளவு கொடூரமான ஆளு தான் நீங்க” என்று விட்டு தன் பையை எடுத்துக்கொண்டு சென்று விட, அவரோ அவளது பேச்சைக் கேட்டு மொத்தமாக ஆடிப் போய் அமர்ந்திருந்தார்.

தான் மூன்று வருடங்களுக்கு முன்பு பார்த்த அனுராதா இவளாக இருக்கவே முடியாது என்றுதான் அவருக்கு அப்போது மனதில் எண்ணம் தோன்றியது.

தான் முதன்முதலாக அவளைப் பார்த்த போது அவளிடம் அத்தனை பணிவும், பாசமும் இருப்பதைப் பார்த்து அவர் அந்தளவிற்கு வியந்து போயிருந்தார், ஆனால் இன்று தன்னை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் அவள் நடந்து கொள்ளும் விதம் அவரை வெகுவாக தாக்கத்திற்குள்ளாக்கியிருந்தது.

தான் அவசரப்பட்டு அவளது வாழ்க்கையில் இப்படியான ஒரு அநியாயத்தை செய்திருக்கக் கூடாதோ என்று அவர் நினைத்திருக்க, கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் போல இருந்தது அவரது சிந்தனை.

காலையிலேயே தேவையில்லாமல் தனது மனநிலையைக் கெடுத்து விட்டார்களே என்ற எண்ணத்தோடு தனது வீட்டை வந்து சேர்ந்திருந்த அனுராதா தோட்டப்புறமாக திரும்பிப் பார்க்க, அங்கே கிருஷ்ணா நேற்றிரவு பெய்த மழையில் முற்றாக நனைந்து நடுங்கியபடியே அமர்ந்திருந்தான்.

அவனை அந்த நிலையில் பார்த்ததும் தன் கையிலிருந்த சாவியை சுழற்றியபடியே அவன் முன்னால் வந்து நின்று கொண்டவள், “அச்சச்சோ! என்னாச்சு கிருஷ்ணா? மழையில் நனைஞ்சுட்டீங்களா? அட, அதுதான் அவ்வளவு பெரிய வீடு, ரொம்ப ரொம்ப நல்ல மனசு படைச்ச அம்மா, அப்பான்னு எல்லோரும் அங்கே இருக்கும் போது நீங்க இங்கே ஏன் இருக்கீங்க?” என்றவாறே அவனது கையைப் பிடித்தவள்,

“அச்சச்சோ! உடம்பெல்லாம் நெருப்பாக கொதிக்குதே, ஒரு நிமிஷம் இருங்க” என்று விட்டு வீட்டிற்குள் ஓடிச் சென்றவள் தன் கையில் பெரிய குவளை ஒன்றை எடுத்து வரவும், கிருஷ்ணா அவளை விசித்திரமாக நோக்கினான்.

“உடம்பு இப்படி சூடாக இருந்தால் நல்லது இல்லை கிருஷ்ணா, அதனால” என்றவாறே தன் கையிலிருந்த குவளையிலிருந்த குளிர்ந்த நீர் மொத்தத்தையும் அவனது தலையில் கவிழ்த்தவள்,

“இந்த ஜிலு ஜிலுன்னு இருக்கும் தண்ணீரை ஊற்றி உங்க சூட்டை குறைச்சுட்டேன், ஷோ இனிமேல் உங்களுக்கு ஜுரம் இருக்காது” அவனைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டே தன் வீட்டை நோக்கி சென்று விட்டு,

பின்னர் மறுபடியும் அவன் முன்னால் வந்து நின்று, “எப்படியும் எடுத்த சபதத்தை நிறைவேற்றாமல் இந்த இடத்தை விட்டு போகமாட்டேன்னு வீரவசனம் பேசிட்டு இங்கேயே தான் இருக்கப் போறீங்க, இருக்குறது தான் இருக்கீங்க அப்படி அந்த பக்கமாக போய் இருங்க, ஏன்னா நான் வீட்டுக்கு உள்ளே வரும் போதும், வெளியே போகும் போதும் இந்த முகத்தைப் பார்த்துட்டு போனால் என்னோட கோபம் அப்படியே உச்ச அளவில் வந்து நிற்கும், அப்படி கோபம் உச்ச அளவுக்கு போகும் போது உங்க எல்லோரையும் செமயாக வெளுத்து வாங்க ஒரு எனர்ஜி வரும் பாருங்க. அப்பப்பா! அதை வார்த்தையால் சொல்ல முடியாது, ஷோ எனக்காக இதை மட்டும் பண்ணிடுங்க, பாய்” என்று விட்டு உள்ளே செல்லப் பார்க்க, கிருஷ்ணா தட்டுத்தடுமாறி நடந்து வந்து அவளது வழியை மறித்தவாறு நின்று கொண்டான்.

“என்ன, ஐஸ் தண்ணீரில் குளித்தது போதாதா? இன்னமும் வேணுமா?”

“நீ என்னை எப்படியெல்லாம் கஷ்டப்படுத்தணுமோ பண்ணிக்கோ, ஆனா அவங்களை விட்டுடு, உன்னோட கோபத்தை எல்லாம் தாங்கும் சக்தி அவங்களுக்கு இல்லை. ப்ளீஸ்” கிருஷ்ணா தன் உடல் நடுங்க அனுராதாவைப் பார்த்து கெஞ்சலாக தன் இரு கரம் கூப்பி நிற்க,

அவனைத் தன் வழியை விட்டும் தள்ளி விட்டவள், “கிருஷ்ணா வெள்ளம் அணை கடந்து போயாச்சுப்பா, இனி வந்து அணையை உயர்த்திக் கட்ட முயற்சி பண்ணேன்னு வை ஏற்கனவே உள்ளே வந்திருக்கும் வெள்ளத்தில் மூழ்கிப் போயிடுவப்பா, அதனால இருக்கும் வெள்ளத்தில் எப்படியாவது கரை சேர முயற்சி பண்ணு, அதை விட்டுட்டு சும்மா ஆக்ட் கொடுக்காதே, என்ன புரிஞ்சுதா?” அவனைப் பார்த்து எச்சரிப்பது போல கூறி விட்டு சென்று விட, கிருஷ்ணா தன் உடலிலிருந்த மொத்த சக்தியும் வடிந்தது போல சோர்வோடு தான் நின்று கொண்டிருந்த இடத்திலேயே அமர்ந்து கொண்டான்.

ஒரு நாள் முழுவதும் சாப்பிடாமல் இருந்தது மட்டுமன்றி, மழையில் நனைந்து ஜுரம் வேறு வந்து சேர்ந்திருக்க கிருஷ்ணாவால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை.

இப்படியே இருந்தால் தன்னால் எந்தவொரு வேலையையும் செய்ய முடியாது என்று எண்ணிக் கொண்டவன் தட்டுத்தடுமாறி கையில் அகப்பட்ட பொருட்களை எல்லாம் பிடித்தபடியே நடந்து வந்து தன் உடலுக்கு சக்தி சேரும் அளவிற்கு கொஞ்சமாக சாப்பிட்டு விட்டு, தன் ஜூரத்திற்கான மாத்திரைகளையும் வாங்கிக் கொண்டு மறுபடியும் அனுராதாவின் வீட்டை வந்து சேர்ந்திருந்தான்.

கிருஷ்ணா அங்கிருந்து கிளம்பி செல்வதை தன் வீட்டிற்குள் இருந்தபடியே கண்காணித்துக் கொண்டிருந்த அனுராதா அவன் சென்ற பின்பு, ‘இனி தனக்கு சிறிது நேரத்திற்கு எந்தவொரு தொல்லையும் இல்லை’ என்றெண்ணியபடி தன் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்க, அவளால் கிருஷ்ணா மறுபடியும் அங்கே வந்ததைக் கண்டு கொள்ள முடியவில்லை.

தன் வேலைகளில் அவள் மும்முரமாக மூழ்கியிருந்த நேரம் அவளது தொலைபேசி ஒலிக்க, அதைத் தன் கைகளில் எடுத்தவள் அதில் தெரிந்த பெயரைப் பார்த்ததும் பதட்டத்துடன் தன் பார்வையை அந்த இடத்தை சுற்றிலும் சுழலவிட்டாள்.

வீட்டிற்குள் யாரும் இல்லை என்பதை ஒரு முறை நன்றாக உறுதிப் படுத்திக் கொண்டவள் வெளியே யாரும் இருக்கின்றார்களா என்று நோட்டம் விட, அவளது அந்த விசித்திரமான நடவடிக்கைகளைப் பார்த்து சிறிது குழம்பிப் போன ஹரிகிருஷ்ணா அவளது பார்வையில் படாமல் ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்து நின்று கொண்டான்.

அந்த இடத்தில் யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு வீட்டிற்குள் திரும்பிச் செல்லப் போனவள் மறுபடியும் ஏதோ நினைவு வந்தவளாக தோட்டப்புறம் திரும்பி, “கிருஷ்ணா, கிருஷ்ணா” என்று அழைக்க, ஒரு வேகத்தில் அவளது அழைப்புக்கு பதில் சொல்லப் போனவன் சட்டென்று தன் வாயை இறுக மூடிக் கொண்டான்.

அந்த இடத்திலேம் எந்தவொரு சத்தமும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு விடாமல் ஒலித்துக் கொண்டிருந்த தன் தொலைபேசியை எடுத்து தன் காதில் வைத்துக் கொண்டவள், “ஹலோ, அம்மா! உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன், நானாக கால் பண்ணும் வரை எனக்கு கால் பண்ணாதேன்னு சொன்னால் புரியாதா?” என்று பேசியபடியே வீட்டை நோக்கி நடந்து செல்ல, மரத்தின் பின்னால் மறைந்திருந்த கிருஷ்ணா அவளது சம்பாஷைணையைக் கேட்டு மொத்தமாக ஆடிப் போனான்.

“அம்மாவா? ஆனா தேவி ஆன்ட்டி இறந்துட்டாங்கன்னு சொல்லித் தானே இவ்வளவு கஷ்டத்தையும் அவ எங்களுக்கு கொடுத்தா? இப்போ அம்மான்னு சொல்லி போன் பேசிட்டு போறா, அப்போ இதில் எது உண்மை?” அனுராதா சொன்ன விடயத்தை நம்பமுடியாமல் அவளைப் பின் தொடர்ந்து சென்றவன் அவளது வீட்டின் கதவருகில் மறைந்து நின்று கொண்டான்.

அனுராதா அந்த ஹாலின் குறுக்கும், நெடுக்குமாக நடந்து கொண்டே தன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்க அவளது பேச்சு எதையும் கிருஷ்ணாவால் சரியாக கேட்க முடியவில்லை.

‘அய்யோ! என்ன பேசுறான்னு கேட்க மாட்டேங்குதே. எதற்கும் ஒரு தடவை எட்டிப் பார்க்கலாம்’ கிருஷ்ணா சுற்றிலும் நோட்டம் விட்டுக் கொண்டே பதுங்கி பதுங்கி அந்த இடத்தை எட்டிப் பார்க்க, அங்கே அனுராதா அவளது அன்னை மற்றும் தந்தையின் புகைப்படத்தின் முன்னால் நின்று கொண்டிருந்தாள்.

“அம்மா, அப்பா. உங்களுக்கு இங்கே என்ன நடந்ததுன்னு எதுவும் தெரியாது, தெரியவும் வேணாம். நீங்க யாரை அதிகமாக நம்புனீங்களோ அவங்களே உங்களுக்கு துரோகம் பண்ணியிருக்காங்க, அது உங்களுக்கு தெரிய வந்தால் நீங்க அதைத் தாங்கிக் கொள்ள மாட்டீங்கம்மா, ஆனா அந்த துரோகத்திற்கான தண்டனையைக் கொடுக்கத் தான் நான் இவ்வளவு பெரிய பொய்யை சொல்லியிருக்கேன். இது சரியில்லைன்னு எனக்குத் தெரியும்தான், நான் பண்ணுறது சிலருக்கு தப்பாக கூடத் தெரியலாம், ஆனா என்னைப் பொறுத்தவரை இது தப்பே இல்லை, நான் என்ன எல்லாம் செய்கிறேனோ அது எல்லாம் சரியாகத்தான் இருக்கணும், சரியாகத்தான் இருக்கும், நீங்களும் அதைக் கூடிய சீக்கிரம் புரிஞ்சுக்குவீங்க. நீங்களும், அப்பாவும் இப்போ உயிரோடு இல்லைன்னு நான் சொன்ன இந்த பொய் எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான்மா, அந்த கிருஷ்ணா, அவனோட அம்மா, அப்பா, தம்பி, தங்கச்சின்னு எல்லோருக்கும் ஒரு சரியான பாடம் கற்றுக் கொடுத்துட்டு மறுபடியும் நான் உங்ககிட்ட ஊட்டிக்கு வந்துடுவேன், அதற்கு அப்புறம் நீங்களும், நானும், அப்பாவும், ராமச்சந்திரன் அப்பாவும் தான், வேணும்னா என் பின்னாடியே சுற்றி வந்த அந்த கிருஷ்ணாவையும் கூட்டிட்டு வர்றேன், அப்போதுதான் எனக்கு டைம் பாஸ் ஆகும், இல்லையா?” தன் முன்னால் நிழற்படத்தில் தெரிந்த தன் அன்னை, தந்தையின் புகைப்படத்தைப் பார்த்துப் பேசிக் கொண்டே அனுராதா தன் மற்ற வேலைகளைப் பார்க்கச் சென்று விட, மறுபுறம் அவளறியாமல் இவற்றை எல்லாம் கேட்டுக் கொண்டு நின்ற கிருஷ்ணா முற்றிலும் திகைத்துப் போய் நின்றான்.

“அப்படின்னா ராதாவோட அம்மா, அப்பா இறக்கல, உயிரோடுதான் இருக்காங்க, ஆனா அம்மா ஆக்சிடென்ட் பண்ணதாக சொன்னாங்களே, அப்படின்னா ஆக்சிடென்ட் நடந்திருக்கு, ஆனா அவங்களுக்கு எதுவும் ஆகல. அப்படின்னா ஆக்சிடென்ட் நடந்த விஷயத்தை காரணம் காட்டி அனுராதா வேணும்னே எங்க எல்லோரையும் கஷ்டப்படுத்த நினைக்கிறா, ஆனா ஏன்? ஒருவேளை அம்மா அவங்களுக்கு இப்படி ஒரு துரோகம் பண்ணியிருக்காங்கன்னு இப்படி எல்லாம் பண்ணுறாளா? இதற்கான பதில் அனுராதா கிட்ட தான் இருக்கு, ஆனா இதெல்லாம் அவ சொல்ல மாட்டாளே, கேட்டாலும் ஏதாச்சும் சொல்லி என்னைக் கழுத்தைப் பிடிச்சு வெளியே தள்ளி விட்டுடுவா. அப்படின்னா எனக்கு ஆதாரம் இல்லாமல் எதுவும் கேட்க முடியாது, அதனால ராதாவோட அம்மா, அப்பாவை அவ முன்னாடி கொண்டு வந்து நிறுத்திட்டுத் தான் என்னால் எதையும் கேட்க முடியும், அதுவரைக்கும் இது ஆதாரமில்லாத ஒரு சந்தேகமாகத் தான் இருக்கும், ஆனா அவங்களை எங்கேன்னு தேடிக் கண்டுபிடிக்கிறது?” தன்னை சூழ்ந்திருந்த ஒவ்வொரு மர்ம முடிச்சுக்களையும் அவிழ்த்து விட்ட திருப்தியான மனநிலையுடன் தோட்டத்து இருக்கையில் வந்து அமர்ந்து கொண்டவன் அனுராதாவின் தாய் மற்றும் தந்தையின் விபத்து பற்றிய தகவல்களை யாரிடம் சென்று கேட்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

“ராதா எப்படியும் வாயைத் திறக்கவே மாட்டா, ஷோ மறுபடியும் அம்மாகிட்ட தான் கேட்கணும். நான்தான் கோபமாக வீட்டை விட்டு வந்துட்டேனே, மறுபடியும் எப்படி போறது? சரி, பரவாயில்லை, நம்ம காரியம் ஆகணும்னா ஏதாவது பண்ணித்தானே ஆகணும், அதனால போய் கேட்கலாம்” மழையில் நனைந்திருந்த தன் பையை தட்டி ஒரு ஓரமாக எடுத்து வைத்தவன், தன் வீட்டை நோக்கி புறப்பட்டு செல்ல,

அவனது நடவடிக்கைகளை எல்லாம் வீட்டிற்குள் இருந்தபடியே அவதானித்துக் கொண்டிருந்த அனுராதா, “பிளான் சக்ஸஸ். நீ என் அம்மா, அப்பாவைத் தேடிப் போகப் போற போல இருக்கே கிருஷ்ணா, ஆனா நான் உன்னை இந்த இடத்தை விட்டு கொஞ்ச நாள் தூரமாக்கி வைக்கத்தான் அம்மாகிட்ட இருந்து கால் வந்த மாதிரி பேசினேன்னு உனக்குத் தெரிய வாய்ப்பில்லையே ராஜா. எது எப்படியோ நீ கொஞ்ச நாள் இங்கே இருந்து போனதும் உன் வீட்டு ஆளுங்களை உண்டு, இல்லைன்னு பண்ணிடுவேன் பாரு. மறுபடியும் நீ ஊருக்கு வரும்போது உன் குடும்பமே தரைமட்டமாகியிருக்கும், அதுதான் உனக்கான என்னுடைய கல்யாணப் பரிசு” என்றவாறே அவன் சென்ற வழியைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டு நின்றாள்……..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!