நீயில்லை நிஜமில்லை 11

நீயில்லை நிஜமில்லை 11

 

நீரில் தீட்டிய 

காவியமாய் நீ!

நீயில்லை! நிஜமில்லை!

 

ஒருவார ஓய்வுக்கு பிறகு இன்று தான் நிறுவனம் வந்திருந்தாள் அஞ்சலி. 

 

நூலிழையில் உயிர் தப்பித்த சம்பவமோ, சுற்றி இருக்கும் வேறு எதுவும் அவளை பாதித்து இருக்கவில்லை.

அவளின் யோசனை எல்லாம் அர்ச்சனாவை அரவிந்திடமிருந்து விலக வைப்பது பற்றியே குறியாக இருந்தது.

 

அரவிந்த் இரண்டு நாட்களுக்கு முன்பே பணியில் சேர்ந்து விட்டிருந்தான். இன்னும் அரண்மனையில் தான் தங்கி இருந்தான். 

 

எத்தனை முயன்றும் அஞ்சலியை பேச வைக்க மட்டும் முடியவில்லை அவனால்.  அஞ்சலியிடம் இத்தனை பிடிவாதத்தை அரவிந்த் இதுவரை பார்த்தில்லை.

 

அன்று மாலையே, அரண்மனை முழுவதும் அவர்களின் நெருங்கிய, தூரத்து உறவுகள் குவிய தொடங்கினர். அஞ்சலியின் நலம் விசாரிக்கும் பொருட்டு.

 

இத்தனை பேரை கடந்து சென்று அஞ்சலியை சமாதானப்படுத்தவும் இவனால் முடியவில்லை. காதம்பரி தேவியின் மிதப்பான பார்வையில் இவனுக்கு புரிந்தது. இதெல்லாம் அவரின் வேலை தான் என்று. 

 

நிச்சயம் அரவிந்திற்கு அவர் மீது கோபம் வரவில்லை. சிரிக்க தான் தோன்றியது. 

 

எப்போதும் காதம்பரி ஆன்ட்டியின் கம்பீரமான ஆளுமை தோற்றத்தை அவன் வெகுவாக ரசிப்பான். எதற்கும் வளையாத ஆளுமை அவருடையது.

 

நிச்சயம் சாதாரண பெண்களிடம் அந்த கம்பீரத்தை காண முடியாது. ஏன் சித்தும்மாவிடம் கூட நிமிர்வு இருக்குமே தவிர, இவ்வித கம்பீரம் இருக்காது. மிக மென்மையான தோற்றம் சித்தாரா உடையது.

 

அத்தனை கம்பீரத்தின் சாயலை காதம்பரிக்கு பிறகு, அஞ்சலியிடம் தான் அவன் பார்த்து இருக்கிறான். பார்வையில் அழுத்தம், பேச்சில் உறுதி, நடையில் நிமிர்வு என அஞ்சலியின் எந்தவொரு செயலிலும் தீர்க்கம் இருக்கும்.

 

அவள் சாதாரணமாக செய்யும் செயல்களில் கூட, அவளுக்கான தனித்துவம் பொதிந்து இருப்பதை அரவிந்த் பலமுறை கவனித்து வியந்திருக்கிறான்.

 

இந்த ஆளுமை, கம்பீரமான தோற்றம் அவர்கள் குடும்பத்திற்கு வழிவழியாக வருவது போல என எண்ணி இருக்கிறான்.

 

ஆனால் இப்போது காதம்பரியின் தன்மீதான நம்பிக்கையற்ற தன்மையும், அஞ்சலியின் உயிர்ப்பற்ற இறுகிய தோற்றமும் இவனை கவலைக் கொள்ளவே செய்தது.

 

தாயையும் மகளையும் எவ்விதம் சமாதானம் செய்வது? தன் நிலையை அவர்களுக்கு எம்முறையில் விளங்க வைப்பது? அரவிந்திற்கு எந்த வழியும் பிடிபடவில்லை.

 

இப்போது அவனுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் அர்ச்சனா மட்டும் தான். என்னதான் அன்று ஆவேசமாக சண்டையிட்டு இருந்தாலும் அதன்பிறகு அவள் சமாதானமாகவே நடந்து கொண்டாள்.

 

அவளுக்கும் புரிந்து இருந்தது அரவிந்த், அஞ்சலியை விட்டு கொடுக்க போவதில்லை என்று. அவனை பொறுத்தவரை அவள் உற்ற தோழி மட்டுமே. அதுவரையில் அர்ச்சனாவிற்கு நிம்மதி.

 

ஆனாலும் முன்பை விட அரவிந்தை மனதளவில் இன்னும் தேடலானாள்.

அவனை இழந்து விடுவோமோ என்ற பயம் அவளை ஒவ்வொரு நொடியும் கலவரப்படுத்திக் கொண்டே இருக்கத்தான் செய்தது.

 

தனக்குரிய பிடித்தமான பொம்மையை வேறு குழந்தை பறித்து விடுமோ என்ற பிடிவாதக்கார குழந்தையின் பயந்த மனநிலை அவளுடையது!

 

அர்ச்சனாவின் பயத்தை கூட்டுவது போலவே, அஞ்சலியின் அடுத்தடுத்த செயல்களும் இருந்தன!

 

அலுவலகம் வந்ததும் முதல் வேலையாக அர்ச்சனாவை தான் அழைத்தாள். தன் முன்னே, அஞ்சலி வைத்தவற்றை பார்த்த அர்ச்சனாவின் முகத்தில் குழப்பத்தின் ரேகைகள்!

 

நெற்றி சுருங்க கேள்வியாக அஞ்சலியைப் பார்த்து நின்றாள்.

 

“இது பிளாங்க் செக். உனக்கு எவ்வளவு பணம் வேணுமோ நீ ஃபில் பண்ணிக்கலாம்… உனக்கு சொந்தமா வீடில்லன்னு ஃபீல் பண்ண இல்ல, இதோ சென்னையில ஒரு பங்களா உன் பேர்ல மாத்தி இருக்கேன் அதுக்கான டாக்குமென்ட்ஸ்… சென்னையிலேயே உனக்கான வேலையும் ஏற்பாடு செஞ்சு இருக்கேன்… இங்க விட அங்க ரெண்டு மடங்கு அதிகமான சம்பளத்தோட, அந்த வேலைக்கான அப்பாய்ன்ட்மென்ட் ஆர்டர் இது…” அஞ்சலி ஒவ்வொன்றாக சொல்லி அவள் புறம் நகர்த்த,

 

“இதெல்லாம் எனக்கு எதுக்கு தரீங்கனு நான் தெரிஞ்சுக்கலாமா?” அர்ச்சனா அடக்கிய ஆத்திரத்தோடு கேட்டாள்.

 

“நீ என் அரவிந்தை விட்டு போகனும்… அதுக்காக தான் இதெல்லாம், இன்னும் உனக்கு என்ன வேணுமோ கேளு நான் அதைவிட ரெண்டு மடங்கா தரேன்… ஒரே கண்டிஷன் தான் நீ அரவிந்த விட்டு முழுசா விலகி போயிடனும்” அஞ்சலி அசராமல் பேரம் பேச,

 

“நீங்க என் முதலாளி ஸ்தானத்தில இருக்கறதால மட்டும் தான் நான் இன்னும் பொறுமையா நின்னுட்டு இருக்கேன் மேடம், இதுவே வேற யாராவதா இருந்தா, மரியாதை கெட்டு போயிருக்கும்.

 

எங்க காதலை உங்க காசு பணத்தால விலை பேச பார்க்கிறீங்களா? இத்தனை கீழ்தரமா நீங்க இறங்குவீங்கனு நான் நினைக்கல” என்று ஆவேசமாக பேசியவள் முன் அஞ்சலி கைகாட்டி தடுத்தாள்.

 

“என்ன மண்ணாங்கட்டி காதல் உங்களோடது? மிஞ்சி மிஞ்சி போனா ஒன்னரை மாசமா உனக்கு அவனை தெரியுமா? என் நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து எனக்கு அவனை தெரியும்!”

 

“…”

 

“அவனுக்கு உன்ன பிடிச்சு இருந்தா மட்டும்… அவனை கட்டிபிடிச்சிட்டு நின்னா மட்டும் காதலாகிடுமா?

என் வீட்டு நாய் குட்டியை கூடத்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். தினமும் அதை கைல வச்சுட்டு கொஞ்சிட்டு இருப்பேன். அதால அது காதல் ஆகிடுமா?” அஞ்சலியின் வரைமுறை தாண்டும் பேச்சு அர்ச்சனாவின் முகத்தை கசங்க செய்தது.

 

“மேடம்…” அர்ச்சனாவின் குரல் ஓங்கி ஒலித்தது.

 

தங்கள் காதலை, நாயுடன் சம்மந்தப்படுத்தி பேசும் அவளின் குரூர குணம் இவளின் ஆத்திரத்தை கிளப்பியது.

 

“அவனுக்கு என்ன பிடிக்கும், பிடிக்காது, அவன் எப்ப சிரிப்பான், எப்ப அழுவான்னு உனக்கு தெரியுமா? எனக்கு தெரியும், எனக்கு மட்டும் தான் என் அரவிந்தை தெரியும்…” அஞ்சலி விடாது பேச,

 

“ரொம்ப மோசமா பேசுறீங்க, காசிருந்தா காதலையும் கூட விலைக்கு வாங்க முடியுமா என்ன? நான் இல்லாம போனா அரவிந்த் உங்க கால்ல வந்து விழுவான்னு நினைப்பா?” அர்ச்சனாவும் ஏளனம் தொனிக்க வெகுண்டு கேட்டாள்.

 

“நீ அனுபவிச்சிட்டு இருக்கிறது என்னோட காதல் அர்ச்சனா! என்னோட சந்தோசம், இரவலா தான் உனக்கு கிடைச்சிருக்கு, நீ எங்களுக்கு குறுக்க வரலைன்னா அரவிந்த் என்னை நிச்சயம் மறுத்திருக்க மாட்டான்” அஞ்சலியின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அர்ச்சனாவை கொதித்தெழ செய்வதாய்.

 

“மத்தவங்களுக்கு சொந்தமான எதையும் இரவலா கேட்டு எங்களுக்கு பழக்கம் இல்ல. பணங்காசு இல்லன்னாலும் மானம், ரோஷம், பாசத்துக்கு அடிமை பட தான் எங்குடும்பம் எனக்கு சொல்லி கொடுத்து இருக்கு. உங்களை போல சளச்சவங்க வாழ்க்கையில விளையாடுற புத்தி எங்களுக்கு எப்பவும் கிடையாது” என்ற அர்ச்சனா,

மேசை மேலிருந்த அனைத்தையும் கைகளில் அள்ளிக் கொண்டு ஆவேசமாக வெளியேறினாள்.

 

அஞ்சலிக்கு புரிந்து தான் இருந்தது அர்ச்சனா இதையெல்லாம் யார் முன்பு கடை விரிப்பாள் என்று. அவன் தன்னை பற்றி என்ன நினைப்பான் என்று.

 

தெரிந்தும், இல்லாத அமைதியை இறுத்திப் பிடித்து அமர்ந்திருந்தாள். இனியும் எதைப்பற்றியும் அவள் கவலைபடுவதாக இல்லை…

 

தனக்கு கீழ் வேலை செய்பவளிடம் தன் காதலுக்காக போராட வேண்டி வந்ததை நினைத்து அவமானத்தில் புழுவாய் சுருண்டு கொண்டது இவளின் மனசாட்சி.

 

****

 

தன் வேலையில் கவனமாக இருந்தவன் முன்னால், தான் எடுத்து வந்ததை எல்லாம் கடைப் பரப்பினாள் அர்ச்சனா.

 

“என்ன சனா இதெல்லாம்?” அரவிந்த் கேட்க,

 

“நான் உன்மேல வச்சிருக்க காதலுக்கு விலை. இது போதுமா இன்னும் அதிகமா வேணுமானு பேரம் பேசுறாங்க” அர்ச்சனா சொல்ல,

 

இவன் புரியாது, “யாரு?” எனக் கேட்டான்.

 

“வேற யாரு அஞ்சலி மேடம் தான்” 

 

அரவிந்த் அதிர்ந்து எழுந்து விட்டான்.

 

“அவங்க சொன்ன மாதிரி நான் இதையெல்லாம் வாங்கிட்டு உன்ன விட்டு போகட்டுமா? பணமிருந்தா எதை வேணாலும் விலை பேசலாமில்ல… வசதி இல்லாத எனக்கெல்லாம் காதல் கூட சாபமா…” என்றவளின் குரல் உடைந்தது.

 

அர்ச்சனாவிற்கு அஞ்சலி மீது கோபமும் ஆத்திரமுமாக வந்தது. மறுபுறம் தன்மீது கழிவிரக்கமும் தோன்றியது.

 

காசோலை, வீட்டு பத்திரம், வேலைக்கான கடிதம் இவற்றை எல்லாம் ஒரு திடுக்கிடலோடு பார்த்த அரவிந்திற்கும் அஞ்சலியின் செயலில் கோபம் மூண்டது.

 

நேராய் அவள் அறைக்கு வந்தவன், அவற்றை அவள் முன் வீசி எறிந்தான்.

 

அஞ்சலிக்கு மிக அவமானமான தருணம் இது. அதுவும் அர்ச்சனாவின் முன்பு.

 

எழுந்தவள், அரவிந்தை கோபமாக பார்த்தாள். இப்போதும் அவள் அவனிடம் எதுவும் பேசவில்லை. என்ன பேச அவளுக்கு தெரியவுமில்லை.

 

“உனக்கு என்ன புத்தி பிசங்கி போச்சா? நீ என்ன வேலை செஞ்சிருக்க தெரியுதா? உன்கிட்ட இருந்து இதை நான் எதிர்பாக்கல”

 

“…”

 

“நீ விலை பேசினது எங்க காதலை இல்ல, எங்களோட வாழ்க்கையை… என்னோட சந்தோசத்தை… சனா தான் என்னோட சந்தோசம், வாழ்க்கை எல்லாம். என் சந்தோசத்தை என்கிட்ட இருந்து பறிக்க நினைக்கிறியா அஞ்சலி?”

 

தங்கள் காதலை அவளுக்கு உணர்த்திவிடும் ஆவேசத்தோடு அரவிந்த் பேசினான். 

 

“என்கிட்ட இருந்து சனாவ பிரிச்சிட்டா நான் உன்கிட்ட வருவேன்னு எப்படி யோசிச்ச? இப்படியெல்லாம் யோசிக்க உனக்கு வெட்கமா இல்ல ச்சே” 

 

வேண்டும் என்றே வார்த்தைகளை வடிகட்டாமல் அஞ்சலி மேல் வீசினான். 

அவளின் தவறை அவள் உணர்ந்தேயாக வேண்டும் என்ற வேகத்தில். தன் மீதான அவள் பார்வை மாற வேண்டும் என்ற எண்ணத்தில்.

 

“காதல்ல என்ன வருச கணக்கு, மாச கணக்கு? ஒரு நிமிசத்துக்கும் ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில மனச தாக்கி போற உணர்வு அது. எதையுமே புரிஞ்சுக்காம ஏன் இப்படி பிடிவாதமா இருக்க?”

 

“…!”

 

“திடீர்னு இப்ப வந்து என்னை காதலிக்கிறதா சொல்ற, எப்பவும் உன்மேல எனக்கு அப்படியொரு ஃபீலிங் வந்ததில்ல, இனிமேலும் வராது! உன் மனச மாத்திக்க பாரு அஞ்சலி” அரவிந்த் முடிவாக சொல்லிவிட,

 

அஞ்சலி விழி அசையாமல் அவன் முகத்தை வெறித்தப்படி தான் நின்றிருந்தாள். 

 

தன் தாயை உரிமையற்று பார்க்கும் குழந்தையின் பரிதாப பார்வை அது!

 

அஞ்சலியின் விழிகள் கலங்கவில்லை. முகத்திலும் மாற்றமில்லை. ஆனால் உணர்ச்சி பாவங்களை துடைத்தது போன்ற அவள் முகம் இவன் பேச்சை நிறுத்தியது.

 

தன் கையால் தன் தலையை அழுத்திக் கோதிக் கொண்டான். “ஏன் அஞ்சலி இப்படி எல்லாம் செய்ற? உனக்கு என்ன குறைச்சல்? நீங்க தான் ராஜ வம்ச‌ பரம்பரை ஆச்சே, உனக்காக ராஜகுமாரன் வருவான் பாரு. அதைவிட்டு என்னை போய் நீ…”

 

இப்போதும் அஞ்சலியிடம் எந்த அசைவும் இல்லை. அர்ச்சனா இருவரையும் கவனித்தபடி தன் முடிவில் நின்றிருந்தாள்.

 

“அஞ்சலி பாப்பா க்ளவர் கேர்ள் தானே, இப்படி முட்டாள் வேலையெல்லாம் செய்யலாமா? நாம எப்பவும் போல நல்ல ஃபிரண்ஸ்ஸா இருக்கலாம்… ஃப்ரண்ஸ்” அரவிந்த் குழந்தைக்கு சொல்வது போல சொல்லி அவள் முன் கரம் நீட்ட, அஞ்சலி பார்வை தாழ்ந்து தன்னை நோக்கி நீண்ட அவன் கரத்தையும், நிமிர்ந்து அவன் முகத்தையும் பார்த்தது.

 

“உனக்கு… நான்… ஃப்ரண்டா இருந்தேன்றதை மறந்திடு… அஞ்சலின்னு யாருமே இல்லன்னு நினைச்சுக்கோ… உன் சந்தோசம் எங்க இருக்கோ அங்கேயே போயிடு…” திக்கி திணறி சொன்னவளின் இமையோரம் கண்ணீர் கசிவுகள்.

 

அரவிந்திற்கு மட்டுமல்ல, அர்ச்சனாவிற்கும் அஞ்சலியை இப்படி பார்க்க சற்று பாவமாக தோன்றியது.

 

இதயத்தை அழுத்தும் கனம் தாங்காமல் இருக்கையில் அமர்ந்தவள், மேசைமேல் தன் முகத்தை கவிழ்த்துக் கொண்டாள்.

 

அரவிந்திற்கு புரிந்தது. அஞ்சலி தன்னை தானே தேற்றிக் கொண்டால் தான் இந்த மனநிலையில் இருந்து வெளிவர முடியும் என்று. மேலும் அங்கே நிற்காமல் வெளியேறினான். அர்ச்சனாவும் அவனுடன் நடந்தாள்.

 

“நாம இங்க வேலை செய்ய வேணாம். உடனே ஜாப் ரிசைன் பண்ணிடலாம்” அர்ச்சனா முடிவாக சொல்ல, நின்று திரும்பியவன், “எனக்கு இம்பார்ட்டன்ட் வொர்க் இருக்கு சனா, அதை நான் சீக்கிரம் முடிச்சு கொடுத்தாகனும். நாம இதைப்பத்தி ஈவ்னிங் பேசலாம்” என்று விட்டு அரவிந்த் தன் வேலையை பார்க்க சென்று விட்டான்.

 

ஆழ பெருமூச்சோடு அர்ச்சனாவும் தன் வேலை இடத்திற்கு வந்தமர, சில நிமிடங்களில் அங்கிருந்து வெளியேறிய அஞ்சலியைக் கவனித்தாள்.

 

‘அஞ்சலியை மீறி தன்மீது எப்படி அரவிந்திற்கு காதல் வந்தது?’ என்று தன்னையே கேட்டு கொண்டாள். 

 

எது எப்படி இருந்தாலும் அவன் காதல் தனக்கு மட்டுமே என்ற பெருமையும் அவளுள் ஒட்டிக் கொண்டது. அஞ்சலியை நினைத்து மனதுள் ஒருபுறம் பதட்டமும் பரவியது.

 

****

 

மாலை அரவிந்துடன் அர்ச்சனாவும் அரண்மனை வந்திருந்தாள். 

 

“உடம்பு குணமாயிடுச்சு இல்ல. இன்னும் எத்தனை நாளைக்கு இங்கேயே தங்கி இருக்க போற?” கேட்டபடி அவள் அறை உள்ளே வர, அரவிந்த் அவள் முகம் பார்த்தான்.

 

கோபாமாக கேட்கவில்லை இயல்பாகவே அவள் கேட்டிருக்க, சற்று நிம்மதியுடன் சோஃபாவில் களைப்பாக தொப்பென்று சரிந்தான் அமர்ந்து விட்டான்.

 

அஞ்சலியின் செயலுக்கு தன்னிடம் சண்டை பிடிப்பாளோ என்று அதற்கும் சற்று பயந்து இருந்தவன், “நாளைக்கு கிளம்பிடுவேன் சனா” என்று பதில் தரவும், வேலையாள் வந்து இருவருக்கும் தேநீர் பலகாரம் பரிமாறிவிட்டு நகர்ந்தார். 

 

எது எப்படியோ அரண்மனையின் உபசரிப்பில் மட்டும் எந்த குறையும் சொல்ல முடியாது அரவிந்த் மனதிற்குள் நினைத்து கொண்டான். 

 

இருவருக்குமே எதையும் உண்ணும் மனமில்லை.

 

சற்றே அமைதிக்குப்பின் அர்ச்சனா, “நாம சீக்கிரம் கல்யாணம் செஞ்சுக்கலாம் அரவிந்த்” என்றாள் தயக்கமாக.

 

வியந்து அவளை பார்த்தவன், “கல்யாணம் எல்லாம் ரொம்ப பெரிய வார்த்தை… அதைபத்தி நாம எடுத்தோம் கவிழ்த்தோம்னு பேச முடியாது… அதோட, உங்க வீட்டிலேயும், எங்க வீட்டிலேயும் எடுத்து நடத்த பெரியவங்க யாரும் இல்ல வேற…” அவள் முன்பு தனக்கு தந்த பதிலையே இப்போது அவளிடம் திருப்பி தர, அர்ச்சனா அவனை முறைப்பாக பார்த்தாள். 

 

“நீ இந்த முடிவுக்கு வர என்ன காரணம்னு எனக்கு புரியுது சனா, ஆனா, நம்ம கல்யாணம் மட்டும் இந்த பிரச்சனைக்கு தீர்வு ஆகாது” இப்போது அரவிந்த் விளையாட்டை விட்டு நிதானமாக பேச,

 

மறுத்து தலையசைத்தவள், “இந்த பிரச்சனைக்கு நம்ம கல்யாணம் மட்டும் தான் சரியான தீர்வு அரவிந்த்… நம்ம கல்யாணம் முடிஞ்சா மட்டும் தான் அஞ்சலி அவங்க மனச மாத்திப்பாங்க” அர்ச்சனா சொல்வது அரவிந்திற்கும் சரியாகப்பட்டது. யோசனையோடு ஆமோதித்து தலையசைத்தான்.

 

இப்போது தங்களின் திருமணத்தை விட, அஞ்சலியின் மனமாற்றம் தான் இவனுக்கு முக்கியமாகப் பட்டது. எனவே சம்மதித்தான்.

 

“எனக்கு முடிக்க வேண்டிய வேலை சிலது இருக்கு. அது முடியறவரைக்கும் என்னால ஜாப் ரிசைன் பண்ண முடியாது சனா. அந்த வேலையை சீக்கிரம் முடிக்கனும். அதோட நம்ம கல்யாண ஏற்பாட்டையும் ஆரம்பிக்கனும்” என்றான் அரவிந்த் உறுதியான முடிவோடு.

 

அர்ச்சனாவின் மனமும் சற்று நிம்மதியை தேட, அரவிந்தின் தோள் சாய்ந்து அவன் கைவிரல்களை கோர்த்துக் கொண்டாள்.

 

“எனக்கு என்னவோ ரொம்ப பயமா இருக்கு… உன்னை நான் இழந்திடுவேனோன்னு… எனக்கு நீ வேணும் அரவிந்த்… நீ, நான், நம்ம குழந்தைங்கன்னு சாதாரண பொண்ணுங்க போல நானும் சந்தோசமா வாழனும்னு ஆசையா இருக்கு…” 

 

தன் தோள் சாய்ந்து பிதற்றியவளை இடையோடு சேர்த்துக் கொண்டவன், “உன்னோட பயத்துக்கு அவசியமே இல்ல சனா, அஞ்சலி பத்தி எனக்கு நல்லாவே தெரியும், என்னோட லைஃப் நீதான்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் நம்ம குறுக்க இனிமே அவ வரமாட்டா… என்மேல உனக்கு நம்பிக்கை இருக்கில்ல” என்று தைரியம் சொன்னான்.

 

அர்ச்சனா அவன் சட்டையை இறுக பற்றி அவனோடு மேலும் ஒன்றிக் கொண்டாள். தன்னவனை யாருக்கும் விட்டு தர முடியாது என்ற காதல் பிடிவாதமாய்.

 

அஞ்சலி தன் மனதை சீக்கிரம் மாற்றி கொள்ள வேண்டும் என்ற வேண்டுதலோடு, ‘மாற்றிக் கொள்வாள்‌’ என்றும் நம்பினான் அரவிந்த்.

 

அஞ்சலி இவன் மீது கொண்டிருக்கும் ஆழமான நேசத்தின் தீவிரத்தை உணராதவனாய்!

 

****

 

நிஜம் தேடி நகரும்…