நீயில்லை நிஜமில்லை 12

நீயில்லை நிஜமில்லை 12

 

காற்றில் வரைந்த 

ஓவியமாய் நீ!

நீயில்லை! நிஜமில்லை!

 

காரிருளின் வெளியில், ஆழ் மன இருளை தொலைக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தாள் அவள். உணர்வற்ற சிற்பமாய், தன் அறை பால்கனி மாடத்தில் நின்று இருண்ட வானத்தை இலக்கற்று வெறித்தபடி.

 

தான் கொண்ட நேசத்தில் தோற்று போன வேதனையை விட, தன் அரவிந்த் தனக்கில்லை என்ற வலி அஞ்சலியை உள்ளுக்குள் உடைத்தெறிவதாய்.

 

தன் வாழ்க்கை புத்தகத்தின் ஒவ்வொரு ஏட்டிலும் அவன் பெயரை ஆசையாக அச்சிட்டு வைத்திருந்தவள், இன்று அவற்றை கிழிக்கவா? எரிக்கவா? என்று வெதும்பி இருந்தாள்.

 

காலையில் நிறுவனம் சென்ற சிறிது நேரத்திலேயே திரும்பி வந்த அஞ்சலி, நேராய் அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டாள்.

 

அவளின் அம்மாவும் அம்மம்மாவும் மதிய உணவுக்கு அழைக்கவும் அஞ்சலி பிடிவாதமாக மறுத்து விட்டாள். மகளின் முக வாட்டம் கவனித்து காதம்பரி காரணம் கேட்க, அவளிடம் பதில் வரவில்லை. 

 

தன் கண்ணீரை யாருக்கும் காட்சியாக்க விருப்பமின்றி, நாள் முழுவதும் அழுது கரைந்து தீர்த்தபிறகும் சிறிதும் மறையவில்லை இவளுள் அவன் பதித்து விட்டிருந்த தடங்கள்.

 

இரவு உணவையும் அஞ்சலி மறுத்துவிட, பெரியவர்கள் மூவரும் என்னவோ ஏதோவென கலக்கம் கொண்டு அவளை என்னவென்று விசாரிக்க, “ஒருநாள் சாப்பிடலன்னா செத்து தொலைய மாட்டேன், என்னை தனியா விட்டு போங்க” அஞ்சலி கத்தினாள்.

 

“எதுக்காக இப்படி கத்துற அஞ்சு, உனக்கு என்ன பிரச்சனைனாலும் எங்ககூட ஷேர் பண்ணு, நாங்க இருக்கோம் உனக்கு” காதம்பரி மகளுக்கு அறிவுறுத்த,

 

“யாரும் என்னை தொந்தரவு செய்யாம இருந்தாலே போதும் எனக்கு” என்று பால்கனியில் வந்து நின்று கொண்டாள்.

 

யாரையும் பார்க்கவும் பேசவும் பிடிக்கவில்லை அவளுக்கு. தன்னையும் பிடிக்கவில்லை. தன்மீதே வெறுப்பு கூடியது.

 

பெண்மணிகள் இருவரும் என்னவென்று பிரபாகரை வினவ, அவருக்கும் ஏதும் தெரிந்திருக்கவில்லை. 

 

பிராபகர், அரவிந்தை அழைத்து அவனிடம் கேட்டார். “அஞ்சுக்கு என்னாச்சு அரவிந்த்? காலையில இருந்து சாப்பிடல, யார் கூடவும் பேசல, ரூமுக்குள்ளேயே அடைஞ்சு இருக்கா”

 

அரவிந்த் பதிலின்றி நிற்க, 

 

“அழுது இருக்கா போல டா… முகம் சிவந்து கண்ணெல்லாம் வீங்கி போயிருக்கா, அஞ்சுவ இப்படி பார்க்க முடியல… எப்பவும் அவ இப்படி நடந்துக்கிட்டதில்ல” அவர் பரிதவிப்பாக பேசவும் அரவிந்திற்கும் சங்கடமானது.

 

“அஞ்சு யாரையோ மனசுல வச்சிட்டு தான் பார்க்கற வரன்களை எல்லாம் தட்டி கழிக்கிறான்னு தோனுது. அப்படி ஏதாவது இருந்தா கேட்டு சொல்றா, அவளோட விருப்பத்துக்கு நாங்க எப்போ தடை சொல்லி இருக்கோம்?” பிரபாகர் மேலும் சொல்ல, அரவிந்த் தன் கண்களை அழுத்த மூடி திறந்தான்.

 

“டோன்ட் வொர்ரி மாம்ஸ்… நான் அவகிட்ட பேசுறேன், அவளை சாப்பிட வைக்கிறேன்” என்றவன் மாடியில் அஞ்சலி அறை நோக்கி நடந்தான்.

 

****

 

அவள் அறையின் வாசலில், வெண்பஞ்சு பந்து போன்று பொசு பொசுவென்ற அவளின் செல்ல நாய்க்குட்டி சோகமாய் சுருண்டு படுத்திருப்பதைக் கவனித்தவன்,

 

‘இந்த ஐந்தறிவு ஜீவனுக்கு என்ன தெரியுமோ?’ என்று தலையசைத்தபடி கதவை திறக்க, உள் தாழிடப்படாத கதவு திறந்து கொண்டது.

 

அறை முழுதும் இருளில் கிடக்க, அந்த செல்ல நாய்குட்டி இவன் கால் சந்துகளில் புகுந்து ஓடி, குரைத்தப்படி பால்கனிக்கு சென்று அஞ்சலியின் காலை சுற்றி சுற்றி, அவளாடையை கடித்து இழுத்து குரைத்துக் கொண்டே இருந்தது.

 

அஞ்சலி குனிந்து அதை தூக்கி வைத்து விரல்களால் கோதி கொடுத்தாள். அரவிந்த் விளக்கு ஸ்விட்ச்சை சுவற்றில் தேடி, அறையை ஒளிர விட்டு அவளிடம் வந்தான்.

 

அஞ்சலியின் ஓய்ந்த தோற்றம் பார்க்க, அரவிந்திற்கு என்னவோ போலானது. எப்போதுமே தன் அழகில், உடையில் அதிகம் கவனம் எடுத்து கொள்பவள் அவள். 

 

இப்போது அவளின் களையிழந்த தோற்றத்திற்கு காரணம் தானா? அவனுள் எழுந்த கேள்விக்கு பதில் தரும் துணிவில்லை.

 

அஞ்சலி அவனை திரும்பியும் பார்க்கவில்லை. மறுபடி இருளை வெறிக்க முயன்றாள். அவள் கைகளில் நாய்குட்டி துறுதுறுத்து.

 

“அஞ்சலி…” அவன் தயங்கி அழைக்க அவள் இறுகி நின்றாள்.

 

“ஹேய் சுவீட் ஜெல்லி… என்கிட்ட பேச மாட்டியா?”

 

அவளிடம் பதில் இல்லை.

 

“என்னை பார்க்க கூட மாட்டியா?”

 

அவளிடம் எந்த அசைவும் இல்லை.

 

மேலும் எப்படி பேச, முதல்முறை அவளிடம் பேச அவனுக்குள் தயக்கம் வர, அவன்நிலை சங்கடமாய்.

 

“அப்ப இனிமே நாம ஃப்ரண்ஸ்ஸா இருக்க முடியாது இல்ல ஜெல்லி…?” 

 

அந்த கேள்வி இருவருக்குமே வலியை தருவதாய்.

 

“சரி, நான் போறேன்… இங்கிருந்து மொத்தமா போறேன்‌, இனி உன்ன பார்க்கவோ பேசவோ மாட்டேன்” அரவிந்த் சொல்லிவிட்டு அவளை பார்த்தபடி பின்னால் நகர்ந்தான்.

 

அவன் போவது தெரிந்தும் அஞ்சலி அசையவில்லை. அரவிந்த் திரும்பி நடந்தான். மனதின் வலி கூடியது. 

 

தான் விலகி விட்டால் தன் தோழி அனைத்தையும் மறந்து தனக்கான வாழ்வை அமைத்துக் கொள்ள முயல்வாள் என்று தன்னை தானே தேற்றிக் கொண்டு அறைக் கதவை அடைய,

 

“டேய் அரவிந்தா…” அஞ்சலியின் அழைப்பு அவனை நிறுத்தியது.

 

சட்டென அவனுள் நிம்மதி பரவ, சின்ன சிரிப்புடன் திரும்பினான். 

 

கலங்க வரும் விழிகளை கட்டுப்படுத்தி, அழுகையில் பிதுங்கி நடுங்கும் இதழ்களை பற்களால் கடித்தபடி நின்றிருந்தாள் அவள்.

 

“அழறியா?” என்று கேட்டு அவள் எதிரில் திரும்பி வந்தான்.

 

அவள் ‘இல்லை’ என்று தலையசைக்க,

 

“முன்ன அழுதியா?” மாற்றி கேட்டான்.

 

இப்போது ‘ஆமெ’ன்று மேலும் கீழும் தலையசைக்க,

 

“இனி எப்பவுமே இப்படி அழுது வடியாத…” என்றவன் முகம் கசங்கிட, “பார்க்க சகிக்கல…” என்றிட, இவள் அவனை முறைக்க முயன்றாள். முடியவில்லை.

 

“அவ்…அவ்ளோ அசிங்கமாவா… இருக்கேன்?” திணறலாக முயன்று கேட்டவளின் குரலில் வித்தியாசம் தெரிந்தது.

 

தொடர் அழுகையில் அவள் குரல் கட்டி இருப்பது அவனுக்கு புரிந்தது.

 

“ம்ம் ரொம்ம்ம்ப அசிங்கமா இருக்க” அரவிந்த் இலகுவாக பேச முயன்றான்.

 

“அதான்… என்னை வேணான்னு சொன்னியா டா?” கேட்க கூடாது என்ற நினைப்பெலாம் மறந்து கேட்டே விட்டாள்.

 

நிச்சயம் இதற்கு அரவிந்திடம் பதிலில்லை. அவளை எப்போதும் இப்படி தவறி கூட அவன் யோசித்ததும் இல்லை.

 

அவன் நேராக பார்த்தபடி பதிலின்றி நிற்க, “பரவால்ல விடு, என்கிட்ட ஏதாவது… சொல்லனுமா உனக்கு?” அஞ்சலியே துணிந்து கேள்வியை மாற்றினாள்.

 

அரவிந்த் தலை மேலும் கீழும் அசைந்தது. “நிறைய தடவ உன்கிட்ட சொல்லனும்னு நினச்சும் சொல்ல முடியாமையே போயிடுச்சு” என்றவன்,

 

“என் ட்ரீம் கேர்ள்ள நான் பார்த்துட்டேன் ஜெல்லி… எனக்கும் காதல் வந்திடுச்சு தெரியுமா உனக்கு… 

 

சித்தும்மா, வெற்றிப்பா மாதிரி நானும் சனா கூட ஃபுல்ஃபில்லான வாழ்க்கை வாழனும்னு ஆசைபடுறேன். எனக்கு சனாவ அவ்வளவு பிடிச்சு இருக்கு, உனக்கும் அவள பிடிக்கும்… பிடிக்கும் தானே!?” 

 

அரவிந்த் சொல்லவும், இவளின் தொண்டைக்குழி அடைத்ததுப் போல அவஸ்தையானது. சகஜமாக பதில் தர முயன்றும் இவளால் முடியவில்லை.

 

“இதை மு…முன்னவே ஏன் டா என்கிட்ட சொல்லல?”

 

ஆக்ஸிஜன் குறைந்த அறைக்குள் அடைந்து கிடப்பதை போன்ற நிலை அஞ்சலிக்கு. மிகவும் பிரயத்தினப்பட்டு பேசினாள்.

 

“சொல்லாம விட்டது தப்பு தான், அதுக்காக சாரி எல்லாம் கேட்க முடியாது. நீ பனீஷ் பண்ணு நான் ஏத்துக்கிறேன்” அரவிந்த் எப்போதும் போல இயல்பாகவே பேச்சை வளர்த்தான்.

 

“எம்மேல… கோ…கோபம் இல்லையா உனக்கு?”

 

“நாலறை விட்டா என்னன்ற அளவுக்கு கோபம் வருது…” 

 

“நான்… ரொம்ப பேட் கேர்ள் ஆகிட்டேன் இல்ல?”

 

“இல்ல, ரொம்ப அழுமூஞ்சி ஆயிட்ட, கண்ண துடை முதல்ல”

 

“இனிமே நீ இல்லாம நான் எப்படி…? கஷ்டமா இருக்குடா” என்றவள் தளும்ப, அரவிந்த் பார்வையை விளக்காமல் நின்றிருந்தான்.

 

அஞ்சலி அழும் நேரங்கள் வெகு குறைவு, அதுவும் அவள் கண்ணோரம் சிறிது கலங்கினாலும் அடுத்து தன்னை தேற்றி கொள்வாள். இப்படி அழுது துவண்டு அவளை இதுவரை பார்த்ததில்லை.

 

‘எப்போதிருந்து இவள் என்னை விரும்ப ஆரம்பித்திருப்பாள்? தோழியின் மனமாற்றத்தைக் கூட அறிய முடியாத அளவா நான் முட்டாளாய்‌ இருந்திருக்கிறேன்?’ 

 

“எப்போ இருந்து இப்படி ஃபீல் பண்ண ஆரம்பிச்ச? ஏன் என்கிட்ட அப்பவே சொல்லல?” அவனும் இதை கேட்க கூடாது என்று தான் நினைத்திருந்தான். இருந்தும் கேட்டே விட்டான்.

 

அவளிதழில் விரக்தி சிரிப்பு உதிர்ந்தது. “நீ காலேஜ் போனப்ப… உன்ன ரொம்ப மிஸ் பண்ணேன் டா, என்னை சுத்தி எதுவுமே மாறல, ஆனா நீ ஒருத்தன் என் பக்கத்தில இல்லாம, என்னால உன்ன தவிர வேறெதையும் நினைக்க முடியல. நான் உன்னோட இருந்தா மட்டும் போதும்னு தோன ஆரம்பிச்சிடுச்சு…” 

 

“அப்ப இருந்தே ஃபீல் பண்ணி இருக்க, என்கிட்ட சொல்ல தோனல?”

 

“சொல்லனும்னு நினைப்பேன்… யாரும் சொல்லாம நான் உன்ன ஃபீல் பண்ண மாதிரி, நீயும் என்னை ஃபீல் பண்ணனும்னு நினைச்சேன்… நான் சொல்லித்தான் உனக்கு என்னை பிடிக்கனுமானு இருந்துட்டேன்… இப்ப தோனுது நான் முன்னவே சொல்லி இருக்கனும்னு” அவள் சொல்ல,

 

“என்னால உன்ன அப்படி ஃபீல் பண்ண முடியல அஞ்சலி, முடியவும் முடியாது. உனக்கே தெரியும் இல்ல நான் பொண்ணுங்க கிட்ட அன்வான்டேஜ் எடுத்துகிட்டதில்லனு. 

 

பட், சனா என்னை சம்திங் ஸ்பெஷலா ஃபீல் பண்ண வச்சா, அவ என் லைஃப்ல வந்த இந்த கொஞ்ச நாளா தான் என் லைஃப் ஃபுல்ஃபில் ஆன மாதிரி தோனுது” 

 

“உனக்கு புரியுதா அஞ்சலி, நானும் சனாவும் லவ் பண்றோம். சீக்கிரமே கல்யாணம் செய்துக்கலாம்னு முடிவெடுத்து இருக்கோம். உன் நினப்ப மாத்திக்க ஜெல்லி… உனக்கும் எனக்கும் செட் ஆகாது, உன்ன சனா இடத்தில வச்சு பார்க்கவும் முடியாது என்னால. எப்பவுமே…” அவளிடம் தன்நிலையை விளக்க முற்பட்டான்.

 

“எனக்கு உன்மேல லவ் வந்திருக்க கூடாது. நான் தான் தப்பில்ல?” அவள் கேட்க,

 

“அஞ்சலி ஸ்டாராங் கேர்ள் தான, உன்னால இதிலிருந்து வெளியே வர முடியும்.‌ முயற்சி பண்ணி வெளிய வா,‌ அட்லீஸ்ட் நம்ம ஃப்ரண்ட்ஷிப்காகவாவது” அரவிந்த் அவளுக்கு எதார்த்தத்தை விளங்க வைக்க முயன்றான்.

 

அவள் ‘சரி’யென்று மேலும் கீழுமாக தலையசைத்து, “இது எனக்குள்ள வந்த மாற்றம்… இந்த நேசத்துக்கு உன்கிட்ட பதில் இல்லன்னா, அதை வளர்த்துக்கிறதுல எந்த அர்த்தமும் இல்ல… நீ உன் லைஃப்ப பார்த்துக்க, அர்ச்சனாவும் ரொம்ப நல்ல பொண்ணு. உனக்கு…” அஞ்சலி தான் புரிந்து கொண்டதாக உணர்த்த முயன்றாள்.  

 

அரவிந்திற்கு ஒருபுறம் நிம்மதியானது. அவள் கலங்கி நிற்க, அவளை தேற்றுவதே இப்போது முக்கியம் என்று தோன்ற, “நேரமாச்சு பாரு, நீ போய் முதல்ல இந்த அழுமுஞ்சிய கழுவிட்டு வா” என்று விரட்டினான்.

 

அஞ்சலி மறுப்பின்றி குளியலறை சென்று முகம் கழுவி, தன்னையும் சற்று திடப்படுத்திக் கொண்டு வெளியே வர, அவளுக்கான இரவு உணவும் வந்திருந்தது.

 

அரவிந்த் அவளின் விருப்பமான உணவை தட்டில் பரிமாறி அவளிடம் நீட்ட, அதை பெற்றுக் கொண்டாள். இருந்தும் அவளால் உண்ண முடியும் என்று தோன்றவில்லை. இப்போது மறுத்தாலும் அவன் வற்புறுத்தி சாப்பிட வைப்பான் என்பதும் அவளுக்கு தெரியும்.

 

“சாப்பாட்ட பாத்துட்டே இருந்தா வயிறு நிறையுமா? எடுத்து சாப்பிடு” அரவிந்த் அதட்ட, அவள் முயன்று முதல் வாய் உணவை எடுக்கவும், அவளின் நாய்க்குட்டி சத்தமாக குறைத்தது.

 

“என்ன ரூபி” என்றவள் உணவை விடுத்து நாய்க்குட்டியை தூக்கிக் கொள்ள, இவனுக்கு கோவம் வந்து விட்டது.

 

“ஏய் இப்ப என்ன உனக்கு, அவள சாப்பிட விடு, இங்கிருந்து போ” என்று அதை விரட்டினான்.

 

அது அஞ்சலி முகத்தை திரும்பி பார்க்க, “விடு அரவிந்த், ரூபிக்கும் பசிக்குது போல” அவள் பரிந்து வரவும், அவளிடமிருந்து அதை பரித்து கீழே விட்டவன், “உனக்கு பசிச்சா வெளியே போய் சாப்பிடு, அவளை தொந்தரவு செய்யாத” என்று துரத்தினான்.

 

“ரூபி எப்பவும் என்கூட தான் சாப்பிடுவா விடு” அஞ்சலி சோர்வாக சொல்ல, அவனை காட்டமாக பார்த்து குறைத்தது அந்த நாய்க்குட்டி.

 

“என்னைவிட, நாலு மாசம் முன்ன வந்த இந்த நாய்க்குட்டி உனக்கு பெருசா போச்சா, முதல்ல நீ சாப்பிடு, அப்புறம் அதை கொஞ்சிக்கலாம்” அரவிந்த் அதனுடன் உரிமை போட்டிக்கு நிற்க, அவனை பார்த்து விடாமல் குரைத்து விட்டு வெளியே ஓடியது அந்த குட்டி நாய். 

 

“இத்துனூண்டு நாயிக்கு என்ன கொழுப்பு பார்த்தியா?” கேட்டபடி அரவிந்த் திரும்ப, அஞ்சலியின் அசையாத பார்வை அவனை தாக்கி நின்றது. இப்போது அவள் பார்வையின் அர்த்தம் இவனுக்கு புரிவதாய்.

 

”உனக்கும், என்னைவிட போன மாசம் பழகின ஒருத்தி பெருசா போயிட்டா இல்ல” அஞ்சலி அதை கேட்டும் விட்டாள்.

 

அரவிந்திற்கு கடுப்பேறியது. 

 

“இப்படியெல்லாம் பேசாத ப்ளீஸ்…‌ சனாவ என்னால விட முடியாது, அவளை அவ்வளவு லவ் பண்ணி தொலைச்சுட்டேன். வேற எப்படி சொல்ல எனக்கு தெரியல… புரிஞ்சுக்கோ அஞ்சலி” அவன் காட்டமாகச் சொல்ல, இவளும் மௌனமானாள்.

 

தனது உணவு தட்டை வாயில் கவ்விக் கொண்டு வந்து அவளிடம் தந்தது நாய்க்குட்டி. அதை வருடி தந்தவள் தன் உணவில் கொஞ்சம் எடுத்து அதற்கும் வைத்தாள். அது இருமுறை குரைத்து விட்டு சாப்பிட்டது.

 

“நான் உன்ன கஷ்டப்படுத்துறேன் இல்ல” அஞ்சலி அவன் சங்கடம் உணர்ந்து கேட்க, அரவிந்த் ஆம் என்பதாக தலையசைத்தான்.

 

“தப்பு தான். சாரி எல்லாம் கேட்க முடியாது. பனிஷ் பண்ணு ஏத்துக்கிறேன்” அவளும் அதையே சொல்ல, 

 

சின்னதாய் சிரித்தவன், “நம்ம ரெண்டு பேர் மேலயும் தப்பிருக்கிறதால, இப்ப ஒன்னுக்கு ஒன்னு சரியா போச்சு. இந்த முறை பனிஷ்மென்ட் வேண்டாம்” என்றான். 

 

“சரி சாப்பிடு” அரவிந்த் சொல்ல, இப்போது மறுக்காமல் உணவை வாயிலிட்டாள்.

 

அடுத்த நொடி ஆவேசமாக அவள் கையிலிருந்த உணவு தட்டை கீழே தட்டி விட்டவன், அவள் வாயிலிருந்த சாப்பாட்டை துப்ப சொன்னான்.

 

அவன் சொன்ன வேகத்தில் வாயிலிட்ட உணவை கீழே துப்பியவள், என்னவென்று பார்க்க, 

 

அங்கே, அவளின் செல்ல நாய்க்குட்டி வாயில் நுரை தள்ளி இறந்து கிடந்தது!

 

****

 

நிஜம் தேடி நகரும்…