நீயில்லை நிஜமில்லை 13
என் உயிர் பறித்து
உன் தேவை ஒன்று தீருமானால்,
கத்தி வீசி வாராதே!
ஒற்றை சொல் யாசித்து வா!
நடுநிசியில் விழித்திருந்த கோட்டான்களும் கூகைகளும் கூட அரண்மனை தோட்டத்து மரங்களிலிருந்து கழுத்தை சுழற்றி அங்கு நடப்பவற்றை மிரண்டு வேடிக்கை பார்த்திருந்தன.
நாய்க்குட்டி இறந்து கிடப்பதை பார்த்த அரவிந்த், முதலில் அதிர்ச்சி அடைந்தாலும் அடுத்த நொடி வேகமாக செயல்பட்டு அஞ்சலி வாயிலிட்ட உணவை தொண்டைக்குள் இறங்கும் முன்னே துப்ப வைத்திருந்தான்.
அப்போதே அனைவரையும் சத்தமிட்டு அழைத்தவன், யாரும் சாப்பிட வேண்டாம் என்று உத்தரவிட,
அவன் சொன்ன விசயமும், அவர்கள் கண்ட காட்சியும் அனைவரையும் உறைய வைத்திருந்தது. அதிர்ச்சியில் யாருக்கும் எதுவும் புரிவதாக இல்லை.
அந்த சூழ்நிலையை அரவிந்த் தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டான். காவல்துறைக்கும் மருத்துவமனைக்கும் தகவல் தந்தவன், அவர்கள் சொன்ன முன் எச்சரிக்கைகளைக் கேட்டும் கொண்டான்.
இறந்து கிடந்த ரூபியை பார்த்த அஞ்சலியின் பார்வை நகரவே இல்லை. முதலில் உச்சக்கட்ட அதிர்ச்சி, அடுத்து அவள் கண்களில் வற்றி இருந்த கண்ணீர் வழிய, “ரூபீ…” அலறியவள் அதை தூக்க முயல, அரவிந்த் அவளின் கைப்பற்றி தடுத்து இழுத்து தூர நிறுத்தினான்.
“அரவிந்த்… என் ரூபி… அதுக்கு ஒன்னுல்ல… இப்ப நல்லாதான இருந்துச்சு… ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனா காப்பாத்திடலாம்” என்று அஞ்சலி கண்ணீரோடு அலற்ற,
“காம் டௌன் அஞ்சலி…” அரவிந்தின் ஓங்கி ஒலித்த குரல், அவளை வாய்மூட வைத்தது. அவனும் உச்சக்கட்ட பதற்றத்தில் தான் கத்திவிட்டிருந்தான்.
“தெளிவா கேட்டுக்கோங்க இங்க இருக்க எந்த பொருளையும் யாரும் தொடக்கூடாது. டென் மினிட்ஸ்ல போலீஸ், பாரன்சிக்ல இருந்து வருவாங்க, அதுவரைக்கும் பொறுமையா இருங்க” என்று கட்டளை இட, காதம்பரி அதிர்ந்த பார்வையோடு கலங்கி நின்ற மகளை தன்னோடு ஆறுதலாக அணைத்துக் கொண்டார்.
அடுத்த அரைமணியில் காவலர்கள், தடவியலாளர்கள், மருத்துவர்கள் வந்திருக்க அரண்மனை முழுவதும் பரபரப்பு சூழ்ந்தது.
வேலையாட்கள் உட்பட அனைவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அரண்மனையில் இருந்த அனைத்து உணவுகளும் ஆய்வகத்திற்கு எடுத்து செல்லப்பட்டன. இறந்த நாய்க்குட்டி உடலும் உடற்கூறு ஆய்வுக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கிருந்த அனைவரின் கைரேகைகள் பெறப்பட்டன.
இரவு உணவை உண்ட அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட, யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்பது மட்டுமே அப்போதைய ஆறுதல்.
யாருக்கும் துளியும் உறக்கமின்றி கழிந்த இரவு பொழுது, அடுத்த நாள் விடிந்தும் இருள் அகலாத தோற்றமே இருக்கவும், மறுநாள் மாலை வரை அங்கிருந்த யார் முகமும் தெளிந்திருக்கவில்லை.
அரண்மனைக்குள் அதுவும் உண்ணும் உணவில் நஞ்சு எப்படி வந்தது? என்பது அனைவருக்குமே பெரிய கேள்விக்குறியாகி இருந்தது.
யாரையென்று சந்தேகப்பட, அவர்கள் யாருக்கும் விளங்கவில்லை. அங்கே வருட கணக்கில் விசுவாசமாக வேலைப்பார்பவர்கள் மீது சந்தேகம் கொள்ளவும் வரவில்லை அந்த அரண்மனை வாசிகளுக்கு.
மாலை அங்கு வந்த இன்ஸ்பெக்டர் நெடுமாறனின் ஆராய்ச்சி பார்வை அங்கிருந்த அனைவர் மீதும் படிந்து மீண்டது. “டெஸ்ட் ரிப்போர்ட் வந்தாச்சு, நாங்க கொண்டு போன எந்த சாப்பாட்டிலையும் விஷம் இல்ல” அவர் தகவல் சொல்ல, ஒருவரையொருவர் குழப்பமாக பார்த்துக் கொண்டனர்.
“அப்ப எங்க ரூபி எப்படி செத்து போச்சு?” அஞ்சலி கலங்கி கேட்க,
“நீங்க சாப்பிட்ட தட்டுல மட்டும் தான் விஷம் தெளிக்கப்பட்டு இருக்கு. அதுவும் கடுமையான விஷம், ரத்தத்தில கலந்த ரெண்டு நிமிசத்தில இருந்து ஐந்து நிமிசத்துக்குள்ள மரணம் ஏற்படுத்தற அளவுக்கு ஆபத்தான விஷம்” நெடுமாறன் சொல்லவும் அனைத்து முகங்களும் உச்சக்கட்ட அதிர்ச்சியை தாங்கி நின்றன.
“அஞ்சலி பிளேட்ல மட்டும் எப்படி அந்த விஷம் வந்து இருக்கும்?” காதம்பரி நம்பாமல் வினவ,
“அதை தான் கண்டுபிடிக்கனும்” என்ற ஆய்வாளர், “அந்த பிளேட்ல மூனு பேரோட கைரேகை இருக்கு. பொண்ணுக்குட்டி, அரவிந்த், அஞ்சலியோடது” என்றார்.
காதம்பரி, “அரண்மனையில எடுபிடி வேலை எல்லாம் செய்யறவ தான் பொண்ணுக்குட்டி, எட்டு வருசத்துக்கு மேல இங்க தான் வேலை செஞ்சுட்டு இருக்கா, அவ பிறவி ஊமை வேற, பாவம் அவள எப்படி சந்தேகப்பட முடியும்!” அவர் பொண்ணுக்குட்டியைப் பற்றி சொல்ல, நெடுமாறன் அவளை விசாரிக்க வேண்டும் என்றார்.
உடல் மொத்தமாக வியர்த்து வழிய அவர்கள் முன் வந்து நின்றாள் பொண்ணுக்குட்டி. ஒடிசல் தேகம், கருத்த முகம், பயந்து நடுங்கும் தோற்றம்.
“நேத்து நைட் என்ன நடந்துச்சு? அஞ்சலி சாப்பிட்ட பிளேட்ல எப்படி விஷம் வந்துச்சு? எதையும் மறைக்காம உண்மைய சொல்லு?” நெடுமாறனின் மிரட்டும் தோணியில் இன்னும் மிரண்டவள்,
“ஆங் ஆங் க்கா ப்பா ப்பே”
அடி தொண்டையில் இருந்து சத்தம் எழுப்பி, தனக்கு ஒன்றும் தெரியாது, தான் எந்த தப்பும் செய்யவில்லை என்று பயம் பாதியும் கலக்கம் மீதியுமாக பொண்ணுக்குட்டி கைகளை மறுத்தசைத்து சைகை செய்தாள்.
“நேத்து ராத்திரி அஞ்சலி ரூமுக்கு சாப்பாடு எடுத்துட்டு போனது நீதான, உனக்கு ஒன்னும் தெரியாதுன்னு சொன்னா எப்படி நம்பறது? ஒழுங்கா உண்மைய சொல்லிடு இல்ல ஸ்டேஷன்ல வச்சு விசாரிக்க வேண்டியது வரும்” நெடுமாறனின் வெளிப்படையான மிரட்டலில்,
“ஆங் காங் ஆங் காங் ப்பே ங்கே”
என்று கத்தியவள் மேல கை உயர்த்தி தரையில் கையடித்து தன் மார்பிலும் அடித்து கொண்டு கதறி அழுது விட்டாள்.
நெடுமாறன் அவள் சைகை விளங்காமல் பார்க்க, “கடவுள் மேல சத்தியமா அவ எந்த தப்பும் செய்யலன்னு சொல்ல வரா” காதம்பரி விளக்கினார்.
“கடவுள் மேல சத்தியம் வச்சுட்டா போதுமா, பொய் சத்தியம் வச்சாலும் கடவுள் வந்து கேட்க போறதில்லல” நெடுமாறன் ஏளனமாக கேட்கவும்,
“எதைபத்தியும் கவலைபடாம திமிரெடுத்து வாழறவங்க தான் கடவுளையும் சத்தியத்தையும் தன் சுயநலத்துக்காக பயன்படுத்திப்பாங்க இன்ஸ்பெக்டர். எதுவும் இல்லாம வயித்து பொழப்புகாக வாழற இவள போல கிராமத்து வெள்ளந்திங்களுக்கு கடவுளும் சத்தியமும் பெரிய ஆதாரம். தவறி கூட அதுல மாறு சொல்லவோ செய்யவோ மாட்டாங்க” காதம்பரி தன் அழுத்தமான குரலில் அவருக்கு எடுத்து சொன்னார்.
“அதோட இவளுக்கு துரோகம் செய்ற மனசும் இல்ல. அந்தளவுக்கு தைரியமும் இல்ல” காதம்பரி மேலும் சொல்ல,
“அப்ப நீங்க வேற யாரையாவது சந்தேகபடுறீங்களா மேடம்?” நெடுமாறன் கேட்கவும், காதம்பரி பதில் தரவில்லை. அவரின் பார்வை அரவிந்திடம் திரும்பியது.
நெடுமாறனின் கூரிய பார்வையும் அரவிந்த் மீது குத்தி நின்றது. அரவிந்தும் தயக்கமின்றி அவர் பார்வையை நேர் நோக்கினான்.
“நைட் டைம்ல அஞ்சலி ரூம்ல உங்களுக்கு என்ன வேலைனு நான் தெரிஞ்சுக்கலாமா அரவிந்த்?” நெடுமாறன் தன் விசாரணையை இவனிடம் திருப்ப,
“அஞ்சலி நேத்து கொஞ்சம் அப்செட்ல இருந்தா, அதான் அவளை சமாதானப்படுத்தி சாப்பிட வைக்க வந்தேன். அப்ப தான் இப்படி ஆயிடுச்சு” அரவிந்த் பதில் தந்தான்.
“லாஸ்ட் மன்ந்த் அஞ்சலி உன் வீட்டுக்கு வந்தபோது தான லாரி ஆக்ஸிடென்ட் ஆச்சு? லாஸ்ட் வீக் கார் ஆக்ஸிடென்ட் அப்பவும் நீ கூட இருந்த இல்ல? இப்ப மறுபடியும் பாஸ்சன் அட்டாக்? அதெப்படி அஞ்சலிக்கு ஆபத்து வந்த எல்லா இடத்திலையும் நீ இருந்திருக்க?” நெடுமாறன் சந்தேகமாக இழுக்கவும்,
“கரெக்டா சொன்னீங்க இன்ஸ்பெக்டர், கார் ஆக்ஸிடென்ட்ல நான் அஞ்சலி கூட இருந்ததால தான் அவளை காப்பாத்த முடிஞ்சது. நேத்தும் அவகூட நான் இருந்ததால தான் அவளை சாப்பிடாம தடுக்க முடிஞ்சது” அரவிந்த் பதிலும் தடுமாற்றமின்றி வந்தது.
“இருக்கலாம் அரவிந்தா, ஆனா நீ வந்ததுக்கு அப்புறம் தான் அஞ்சலிக்கு இதுமாதிரி ஆபத்தெல்லாம் வருது, எனக்கு உன்மேல தான் சந்தேகம். நீதான் ஏதோ சீப்பா கேம் பிளே பண்ற” காதம்பரியின் நேரடியான பேச்சு அங்கிருந்த அனைவரையும் அதிர வைத்தது. அஞ்சலியையும்.
“காதும்மா யாரை சந்தேகபடற? அவன் நம்ம அரவிந்த்” பிரபாகர் பரிந்து வர,
“இருக்கலாம்ங்க, ஆனா அவனோட நடவடிக்கை எதுவும் முன்ன மாதிரி இல்ல. எதையோ மனசுல வச்சுட்டு தான் மறுபடி இங்க வந்திருக்கான்” காதம்பரி விடாமல் பேசவும், மறுத்து பேச வந்த பிரபாகரை முந்திக்கொண்டு அரவிந்த் பேசினான்.
“அப்படி என்ன என் நடவடிக்கைல வித்தியாசத்தை பார்த்தீங்க ஆன்ட்டி? எனக்கு என்னவோ உங்க பேச்சு, செயல்ல தான் வித்தியாசம் அதிகமா தெரியுது” என்றான்.
நெடுமாறன், “உங்க கம்பெனி ஷேர்ஸ்ஸ உங்க அப்பா இவங்களுக்கு சேல் பண்ணதுல உனக்கு விருப்பம் இல்லாம இருக்கலாம், அதுக்காக இப்படி பைத்தியக்காரத்தனமா செய்றீயோ?” சந்தேகமாக கேட்கவும், அரவிந்த் பதில் சொல்லும் முன்,
“போதும் நிறுத்துங்க…” அங்கே அஞ்சலியின் குரல் உயர்ந்தது.
“இப்ப நான் உயிரோட இருக்கிறதுக்கு காரணம் அரவிந்த் தான். அவனையே எப்படி நீங்க சந்தேகபடலாம்?” அதுவரை பொறுத்திருந்த அஞ்சலி ஆதங்கமாக பேசினாள்.
“அவன்மேல சந்தேகம் வரக்கூடாதுன்னு கூட உங்கள காப்பாத்துற மாதிரி பிளான் பண்ணி இருக்கலாம்ல” நெடுமாறன் தன் சந்தேகம் தளராமலே கேட்கவும்,
“நான் சாகறது தான் முக்கியம்னா இவ்ளோ பிளான் பண்ணனும்னு எந்த அவசியமும் இல்ல அவனுக்கு. ‘செத்து போ’ன்னு ஒரு வார்த்தை சொன்னா நானே செத்து போயிடுவேன் போதுமா” அஞ்சலியின் வார்த்தையில் அனைவரும் திடுக்கிட,
“அஞ்சு…!”
“அஞ்சலி…!”
அரவிந்த், காதம்பரி இருவரின் அதட்டலும் ஒரே நேரத்தில் ஒலித்தது.
“நீங்க பேசாதீங்க ம்மா, அரவிந்தை நீங்க எப்படி சந்தேகப்படலாம்?” அவள் கேட்க, காதம்பரியிடம் பதில் இல்லை. இருந்தும் மகளை கலக்கமாகப் பார்த்தபடி நின்றிருந்தார்.
“இன்ஸ்பெக்டர் இங்க நடந்த எதுக்கும் அரவிந்த் பொறுப்பில்ல. அவன்மேல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு. இதுக்குமேல நீங்க அவன சந்தேகப்பட்டா நல்லா இருக்காது” காதம்பரிக்கு குறையாமல் இவளின் குரலும் அழுத்தமாக ஒலித்தது.
“உங்க நல்லதுக்காக தான் சொன்னேன் இதுக்கும் மேல உங்க இஷ்டம், எது எப்படி இருந்தாலும் எங்க கடமையை நாங்க செய்வோம்” மேலும் அங்கே தாமதிக்காமல் நெடுமாறன் வெளியேறி விட்டார்.
அங்கே சில நிமிடங்கள் அமைதி நிலவியது.
அரவிந்த் காதம்பரியிடம், “என்னால அஞ்சலி உயிருக்கு ஆபத்து வரும்னு சந்தேகபடுற அளவுக்கு வேற ஏதோவொரு விசயம் உங்கள குழப்பிட்டு இருக்கு ஆன்ட்டி, முதல்ல அந்த குழப்பத்துல இருந்து வெளியே வாங்க”
எனவும், இப்போதும் அவரின் பார்வை அவன்மீது நம்பிக்கை அற்றே படிந்தது.
“நீ எதுவும் தப்பா நினைக்காத அரவிந்தா, நான் காதம்பரி கிட்ட பேசுறேன்” பிரபாகர் சங்கடமாக சமாதானம் சொல்ல, அவர் முகத்திற்காக இவன் சமாதானமாக தலையசைத்தான்.
ஒன்றின் மேல் ஒன்றாக வேதனைகள் கூட, அந்த அரண்மனை வாசிகள் ஒவ்வொருவரின் உள்ளும் கவலைகள் குடியேறின.
மறுநாளில் இருந்து அரண்மனையில் எல்லாமே மாறி போனது. அஞ்சலி முற்றும் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டாள்.
உணவு தயாரிப்புகள் முழுவதும் காதம்பரி, திரிபுரசுந்தரியின் நேரடி பார்வையில் தயாரிக்கப்பட்டன.
அரண்மனைக்கு வெளியே எப்போதும் வேல், கம்போடு இரவும் பகலும் ஆட்கள் காவலுக்கு வைக்கப்பட்டனர்.
அரண்மனை வாயிலில் இரு கான்ஸ்டபிள் காவலர்கள் பாதுகாப்பிற்கு அமர்த்தப்பட்டிருந்தனர். நெடுமாறன் தலைமையில் தனிக்குழு அமைத்து வழக்கின் விசாரணை தீவிரமாக்கப்பட்டது.
****
தட்டில் பரிமாறப்பட்ட உணவை அஞ்சலி வெறுமையாக பார்த்திருந்தாள். எல்லாமே அவளுக்கு பிடித்தமான உணவு வகைகள். ஆனால் உண்ண வேண்டும் என்ற எண்ணம் மட்டும் எழவில்லை அவளுக்கு.
உணவை பார்த்தாலே ரூபி வாயில் நுரை தள்ளி இறந்து கிடந்த காட்சி தான் தோன்றியது. அவள் கன்னங்களில் கோடிட்ட கண்ணீர் அவள் உணவில் விழுந்து கலந்தது.
“அஞ்சு, புதுசா அழுக கத்துட்டு இருக்க போல” காதம்பரி தன் அழுத்தமான குரலில் கேட்க, அவள் நீர் ஏந்திய விழிகளுடனேயே தாயை ஏறிட்டாள்.
“எப்பவும் எந்த சூழ்நிலையிலும் தைரியமா இருக்கனும், இப்படி அழுது வழிஞ்சிட்டு இருக்கறது பொண்ணோட லட்சனம் இல்ல, முதல்ல சாப்பிடு” காதம்பரி அறிவுறுத்த,
“என்னால சாப்பிட முடியல ம்மா, எனக்கு எதுவும் வேணாம்” என்று உணவு மேசையில் இருந்து சோர்வாக எழுந்து சென்று விட்டாள்.
“எப்பவும் இப்படி விரைப்பா பேசாத காதம்பரி” என்று திரிபுரசுந்தரி மகளை கடிந்து கொள்ள,
“அஞ்சு எப்பவும் தைரியமா இருக்கனும்னு தான் சொல்றேன் ம்மா, இப்படி சும்மா சும்மா உடைஞ்சு போறது அவளோட எதிர்க்காலத்துக்கு நல்லதில்ல” காதம்பரி சொல்லவும், மனம் தாளாமல் பேத்தியிடம் சென்றார் திரிபுரசுந்தரி.
“நான் தான் அம்மம்மா ரூபிய கொன்னுட்டேன். நான் மட்டும் அதுக்கு என் சாப்பாடு வைக்கலன்னா, ரூபி இறந்திருக்காதில்ல” அஞ்சலி வேதனையில் புலம்பியபடி, பாட்டியின் மடியில் தோய்ந்து படுத்துக் கொள்ள, அவரின் கை பேத்தியைத் தட்டி கொடுத்தப்படி இருந்தது.
“வாயில்லா ஜீவன் அது சாப்பிட்டு விழுந்ததால தான சாப்பாட்டுல நஞ்சிருக்கறதை கண்டுக்க முடிஞ்சது, இல்லனா அதை நீ சாப்பிட்டு இருப்பியே ராசாத்தி” திரிபுரசுந்தரி கலக்கத்தோடு சமாதானம் சொல்ல,
“உயிர்னா எல்லாமே உயிர் தான அம்மம்மா, என் உயிர் எனக்கு உசத்தினா, ரூபி உயிரும் அதுக்கு உசத்தி தானே… நான் சாப்பிடலன்னு நாள்பூரா அதுவும் சாப்பிடாம பட்டினி கிடந்ததே, அதோட பசிக்கு நான் விஷத்தை கொடுத்துட்டேனே அம்மம்மா…” அவள் இமையோரம் ஈரம் கசிந்தது. தன்னை பார்த்ததும் தாவி தன்மேல் ஏறிக்கொள்ளும் செல்ல நாய்க்குட்டியின் பாரமான நினைவில்.
சுந்தரிம்மா பல ஆறுதல் மொழிகள் சொல்லி, வற்புறுத்தி பேத்தியை சிறிது சாப்பிட வைத்து, தூங்க வைத்துவிட்டு வந்தார்.
“யாரோட பொல்லாத கண்ணு பட்டதோ, அழுது பார்க்காத என் பேத்தி இப்படி அழுது கரையிறாளே கடவுளே” மனம்நொந்து புலம்பியபடி இருந்தார்.
“அஞ்சலி தைரியமா இருக்கிறது தான் இப்போதைக்கு முக்கியம், இங்கேயே இருந்தா ரூபிய நினைச்சிட்டே இருப்பா, நாளையில இருந்து கம்பனிக்கு போகட்டும். அவளுக்கு வேலை பக்கம் கவனம் திரும்பினா தெளிவாகிடுவா” காதம்பரி பிரபாகரிடம் சொல்லிக் கொண்டிருக்க,
“அதெப்படி, அஞ்சு உயிருக்கு ஆபத்து இருக்குன்னு தெரிஞ்சும் வெளியே அனுப்புறது? அந்த கொலைக்காரனை கண்டுபிடிக்கிற வரைக்கும் என் பேத்திய எங்கேயும் போக விட மாட்டேன்” பாசத்தில் பிடிவாதமாக மறுத்தார் சுந்தரிம்மா.
காதம்பரிக்கும் இந்த நிலைமை அதிக குழப்பத்தை தந்திருந்தது. அடுத்தடுத்து கொலை முயற்சி செய்யும் அளவிற்கு அஞ்சலிக்கு எதிரி யாராக இருக்க முடியும்? அவரும் தீவிரமான யோசனையில் ஆழ்ந்தார்.
****
அர்ச்சனா வெளிரிய முகத்தோடு அரவிந்த் முன் அமர்ந்திருந்தாள். அவளின் எண்ணங்கள் எங்கெங்கோ சென்று மோதின. நிமிடங்கள் கடந்தும் அவள் முகம் தெளியாமல் இருக்க,
“நல்லவேளை அஞ்சலிக்கு எதுவும் ஆகல, ஒரு பக்கம் நிம்மதியா இருந்தாலும், யார் இப்படி செய்யறது? என்ன காரணம்னு தான் புரியல?” அரவிந்த் சொல்லவும் இப்போதும் பதிலின்றி வேறு யோசனையில் இருந்தாள்.
“அரண்மனைக்குள்ள வந்து, அஞ்சலி சாப்பிடற தட்டை அடையாளம் வச்சு அதுல மட்டும் விஷம் தெளிச்சு இருக்காங்கனா அது நிச்சயம் வெளியாள் வேலையா இருக்காது…”
அரவிந்த் ஆராய்தலோடு மேலும் பேசிக் கொண்டே போக,
“இது ஏன் அஞ்சலியோட அடுத்த திட்டமா இருக்க கூடாது…?” அர்ச்சனா சட்டென கேட்டுவிட, அரவிந்த் நெற்றி சுருக்கி அவளை பார்த்தான்.
“பணத்தாசை காட்டி என்னை உன்கிட்ட இருந்து பிரிக்க பார்த்தாங்க, அது நடக்கலன்னு தெரிஞ்சதும் இப்ப இப்படியொரு டிராமா பிளே பண்ணலாம் இல்ல” அர்ச்சனா அவளுக்கு தோன்றிய சந்தேகத்தைச் சொல்ல, அதை அரவிந்தால் தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
“தனக்கு தானே யாராவது விஷம் வச்சுக்குவாங்களா? ரூபி இல்லாம அஞ்சலி எவ்வளவு கஷ்டபடுறான்னு நான் நேர்லயே பார்த்துட்டு இருக்கேன். சும்மா எதையாவது உளறாத சனா” இவன் மறுத்துக் கண்டிக்கவும்,
“இப்ப நான் சொல்றது உனக்கு உளறலா தான் இருக்கும். யாரோ ஒரு கொலைகாரன், அரண்மனைக்குள்ள வந்து அஞ்சலி சாப்பிடற தட்டுல மட்டும் விஷத்தை தெளிச்சுட்டு யாருக்கும் தெரியாம போயிட்டானாம், இந்த கதைய சின்ன குழந்தை கூட நம்பாது” என்றைக்கும் இல்லாமல் இப்போது அர்ச்சனா சலித்தப்படி பேசினாள்.
அரவிந்திற்கும் இது சாத்தியமில்லாததாகவே தொன்றியது. புது ஆட்கள் யாரும் அரண்மனைக்குள் வர அனுமதி இல்லை. எனவே இதை செய்தவன் நிச்சயம் இங்கே இருப்பவர்களில் ஒருவனாக தான் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருந்தான்.
ஆனால் வீட்டு வேலையாட்கள் அனைவரையும் துருவி துருவி விசாரித்து ஆயிற்று. அவர்கள் யாரிடமும் சந்தேகம் கொள்ளும்படி நடவடிக்கைகளைக் கண்டுக்கொள்ள முடியவில்லை. அவர்கள் அனைவரும் வருட கணக்கில் வேலைப்பார்க்கும் அரண்மனை விசுவாசிகள் வேறு.
‘பின் எப்படி கொடும் விஷம் அரண்மனைக்குள் வந்திருக்கும்?’ விடையற்ற கேள்வியாகவே நின்றது.
“தேவையில்லாத விசயமெல்லாம் நமக்கெதுக்கு அரவிந்த்? நாம இந்த ஊரவிட்டு போயிடலாம். எனக்கு என்னவோ இந்த அரண்மனையும் இங்கிருக்க மனுசங்களும் மர்மமாவே தெரியிறாங்க, மனசுக்குள்ள விபரீதமா பயம் வந்து போகுது” அர்ச்சனா பயத்தோடே சொல்ல,
“அஞ்சலியோட உயிருக்கு ஆபத்து இருக்குன்னு தெரிஞ்சும் என்னை இங்கிருந்து ஓடி வர சொல்றீயா சனா?” அரவிந்த் அழுத்தமாக கேட்டான்.
“அப்ப என்னைவிட அஞ்சலி தான் உனக்கு முக்கியம் இல்ல?” அர்ச்சனாவின் கண்களில் அனல் தெறித்தது.
“அஞ்சலியை ஒரு தராசு தட்டுலயும் உன்ன ஒரு தராசு தட்டுலையும் வச்சு எப்பவும் என்னால பார்க்க முடியாது சனா…! உனக்கு என்மேல நம்பிக்கை இருந்தா இன்னும் கொஞ்ச நாள் எனக்காக வெயிட் பண்ணு, நம்பிக்கை இல்லன்னா என் முகத்துல காரி துப்பிட்டு இப்பவே போயிடு” அரவிந்தும் எரிச்சலாகவே பேசிவிட்டான்.
மேலும் அர்ச்சனா அங்கே தாமதிக்கவில்லை. தன் கைப்பையை தோளில் மாட்டியபடி எழுந்துக் கொண்டாள்.
“உனக்காக கொஞ்ச நாள் என்ன, வாழ்க்கை முழுசும் காத்திருப்பேன். நீ கண்மூடித்தனமா எல்லாரையும் நல்லவங்கன்னு நம்பாத அரவிந்த், இங்க எல்லாருக்குள்ளையும் சுயநலம்ன்ற பிசாசு உலவிட்டு தான் இருக்கும்!” சொல்லி விட்டு நிற்காமல் சென்று விட்டாள்.
அர்ச்சனா வேகநடையோடு வாயிலை அடைந்தபோது நின்று திரும்பி அரண்மனையை ஒருமுறை பார்த்தாள். ஏனோ அந்த மாட மாளிகையின் பிரம்மாண்டம் இவளை மிரட்டுவதாய்.
தான் உற்ற காதலுக்கு இதுவே சமாதியாகி விடுமோ? அவள் எண்ணமே அவளை திடுக்கிடச் செய்வதாய்.
அர்ச்சனாவை சமாதானம் செய்ய பின்னோடு வந்த அரவிந்த், அவளின் அதிர்ந்த முகத்தைப் பார்த்து, “ஏன் இப்படி நிக்கிற சனா?” அருகே வந்து வினவ,
“நீ இங்க இருக்க வேணா அரவிந்த், இவங்க நம்ம பிரிச்சிடுவாங்களோன்னு பயமா இருக்கு” என்று வெறித்த பார்வையோடு பிதற்றினாள்.
சிறு சிரிப்புடன் ஆறுதலாக அவளின் தோளணைத்து கொண்டவன், “என்மேல உனக்கு இன்னும் முழு நம்பிக்கை இல்லாதது தான் உன் பயத்துக்கு காரணம், நம்புடீ சனாவ தாண்டி இந்த அரவிந்த் போக மாட்டான்” என்று உறுதி கூறியபடி, சமாதானமாக பேசி அவளை தானே அழைத்துச் சென்றான்.
இந்த இருசக்கர வாகன பயணம் இருவர் மனநிலையையும் சற்று இதமாக்குவதாய்.
****
நிஜம் தேடி நகரும்…