நீயில்லை நிஜமில்லை 14

நீயில்லை நிஜமில்லை 14

நீயில்லை நிஜமில்லை 14

 

நீயின்றி வாழப் பழகுகின்றேன்,

சிறகிழந்தப் பறவை 

நடைப் பழகுவது போல!

 

அஞ்சலி முழுவதுமாக தன்னுள் ஒடுங்கிக் கொண்டாள். அவளின் நிமிர்வும் தைரியமும் அவளிடமிருந்து விலகிக் கொண்டிருந்தது.

 

அரவிந்த் தனக்கு இல்லாமல் போனதின் வருத்தமா? தன் உயிருக்கு பாதுக்காப்பற்ற சூழலின் தாக்கமா?

அல்லது இவை‌ இரண்டின் வேதனையா?

அவளை முழுவதுமாக முடக்கி‌ போட்டிருந்தது.

 

நடந்தவை அனைத்தையும் மறந்துவிட்டு இயல்பு நிலைக்கு திரும்ப முயன்றாலும், தன்னை வேண்டாம் என்று மறுத்துவிட்டு இப்போது தன்னை காவல் காக்கிறேன் பேர்வழி என்று முன் நிற்கும் அரவிந்தின் நடவடிக்கை, மீண்டெழ முயல்பவளை மீண்டும் மடிந்து விழச் செய்வதாய்.

 

காதலெனும் பெருந்துரோகி, தான் குடிகொண்ட உள்ளத்தை வெந்தழியச் செய்திடுமாம். 

 

தானும் அறியாமல் உள்ளுக்குள் சிறிது சிறிதாகச் சிதைந்துக் கொண்டிருந்தாள் அஞ்சலி. மேல் பார்வைக்கு உருவத்திலும் வதங்கித் தெரிந்தாள்…

 

ஆய்வாளர் நெடுமாறன் விசாரணை என்று அஞ்சலியின் பள்ளி காலம், கல்லூரி காலம் என அனைத்தையும் தோண்டி துருவி கேள்விகளை அடுக்கினார்.

 

பெரும்பாலான கேள்விக்கான பதில்கள் அரவிந்திடம் இருந்து தான் வந்தன. அவளோடு படித்தவனாதலால் எல்லாவற்றையும் நினைவுபடுத்திக் கூறினான்.

 

அந்த வழியில் யாராவது அஞ்சலி மீது வன்மம் கொண்டிருக்கின்றனரா? என்ற ரீதியில் அவர்கள் விசாரணை நகர்ந்து கொண்டிருந்தது.

 

ஆனால் இதுவரை எந்த தடயமும் கிடைக்கப்பெறவில்லை. இப்போதைக்கு அஞ்சலியின் பாதுகாப்பை உறுதி செய்தபடி, அடுத்த தாக்குதலுக்காக காத்திருந்திருந்தனர். வேறுவழியும் தெரியவில்லை‌ அவர்களுக்கு.

 

அஞ்சலியை முன்னைப்போலவே வெளியே நடமாடும்படி நெடுமாறன் அறிவுறுத்தினார். அஞ்சலிக்கும் அங்கேயே அடைந்து கிடப்பதில் மனம் வெறுத்து நிறுவனம் செல்ல தொடங்கினாள். 

 

உடன் அரவிந்தும் வர, அவள் அவனை கேள்வியாக பார்த்தாள்.

 

“இனி உன்கூட தான் நான் இருப்பேன்” என்று அரவிந்த் சொல்ல, இவளின் காஜல் துறந்த விழிகள் சற்று விரிந்தன. 

 

“உன்னோட சேஃப்டிக்காக, நீ எங்க போனாலும் நானும் துணைக்கு வருவேன் அஞ்சலி” என்றான் திருத்தமாய்.

 

அஞ்சலிக்கு அன்றைய கார் விபத்து நினைவில் வந்தது. அன்று கொஞ்சம் பிசகி இருந்தாலும் தன்னோடு சேர்த்து அவனும் இல்லாது போயிருப்பான்! 

 

“உனக்கெதுக்கு இந்த தேவையில்லாத வேலை? என்னை பார்த்துக்க இங்க நிறைய பேர் இருக்காங்க. நீ போய் உன் வேலைய பாரு” என்று அவனை விரட்டினாள்.

 

“உனக்கு துணையா வரதைவிட இப்ப, வேறெந்த வேலையும் எனக்கு முக்கியம் இல்ல”

 

“சும்மா டைலாக் விடாத, எனக்கு பாடிகார்ட் வேலை பார்க்கனும்னு உனக்கு எந்த தலையெழுத்து இல்ல போ” அவள் விரட்டலை அரவிந்த் கண்டு கொள்ளாது காரில் ஏறிக் கொண்டான்.

அவளும் அதற்கு மேல் ஏதும் பேசவில்லை.

 

நிறுவனத்தில் தனக்கான பணிகளில் கவனம் செலுத்த முயன்ற அஞ்சலி, அதில் ஓரளவு மனமாற்றமும் உணர்ந்தாள்.

 

நாட்கள் கவனமாக நகர்ந்துக் கொண்டிருந்தன. எல்லோரையும் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் நிலையாகிப் போனது. குடும்பத்தில் ஒவ்வொருவரும் கூடுதல் விழிப்பாக இருந்தனர்.

 

அரவிந்த், அஞ்சலி உடன் இருப்பதை காதம்பரி மறுத்தும், பிரபாகர் பிடிவாதமாக அவனையே துணை இருக்கச் செய்தார். அவரால் அரவிந்தை சந்தேகப்பட முடியவில்லை. வேறு யாரையும் நம்பும் துணிவும் வரவில்லை.

 

அரவிந்த் கூடுமானவரை அஞ்சலி உடனே இருக்க தொடங்கினான். 

இதில் அர்ச்சனாவிற்கு தான் சுறுசுறுவென கோபம் ஏறியது. ஒரு மூச்சாய் அரவிந்திடம் கத்திவிட்டிருந்தாள். 

 

அவனோ வழக்கம் போல, “என்மேல உனக்கு நம்பிக்கை இருக்குல்ல சனா,‌ கொஞ்ச நாள்… அஞ்சலி பிரச்சனை தீர்ற வரைக்கும், ப்ளீஸ் டா” அவளை தாஜா செய்து அமைதிப்படுத்தி இருந்தான்.

 

அஞ்சலி செல்லும் இடங்களில் எல்லாம்  நிழலாக துணை சென்றான் பாதுகாப்பாளனாக. முன்னை போல இருவருக்கிடையே பெரிதாக பேச்சு எதுவும் இருக்கவில்லை.

 

அரவிந்த் அஞ்சலியுடன் பேச முயன்றாலும் அவளிடம் இப்போதெல்லாம் எந்தவித எதிர்வினையும் இருப்பதில்லை.

 

எப்போதும் ஓயாத நீர்வீழ்ச்சியான அவளின் பேச்சு, மழை பொய்த்த புன்செய் நிலமாக வறட்சி காட்டியது.

 

அரவிந்த் அவளுடனேயே இருந்தாலும் அவனிடம் பேசுவதை தவிர்த்தாள். அவனை நேர்க் கொண்டு பார்ப்பதை தவிர்த்தாள். தன் மனதில் உலாவரும் அவன் நினைவுகளையும் தவிர்க்க முயன்றால் போதும் என்று நப்பாசையுடன் எண்ணினாள்…

 

இந்த இடைப்பட்ட நாட்களில் அர்ச்சனாவை பார்த்து பேசும் வாய்ப்புகள் வெகுவாக குறைந்து போயிருந்தன அரவிந்திற்கு.

 

இதனால் இருவருக்கிடையே மனவருத்தங்களும் வீண் வாதங்களும் நீண்டன.

 

அர்ச்சனாவை சந்திக்கும் சில நேரங்களிலும் அவள் உரிமை போராட்ட கொடி பிடிப்பதும், இவன் கெஞ்சி சமாதானம் செய்து வெள்ளை கொடி பறக்கவிடுவதுமாகவே இருந்தது.

 

சக்கரைக்கட்டியாக இனிப்பு சேர்த்த காதலில் இப்போது உவர்ப்பும் அங்கங்கே படிவதாய்…

 

****

 

ஒவ்வொரு நாட்களும் நகர்ந்து கொண்டே இருந்தன. எந்த அசம்பாவிதங்களும் இன்றி. 

 

நாட்கள் வாரங்களைக் கடந்து மாதத்தை தொடவும், அனைவரையும் சூழ்ந்திருந்த இறுக்கமும் பயமும் மெல்ல தளர தொடங்கின. அரண்மனை வாசிகள் இப்போது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி இருந்தனர்.

 

அரண்மனை காவலிலும் சுணக்கம் வந்திருந்தது. காவல் நிற்பவர்கள் அவ்வப்பொழுது கூட்டமாக அமர்ந்து ஓய்வு எடுக்கவும் கதைபேசவும் ஆரம்பித்திருந்தனர். வாயிலில் நின்றிருந்த காவலரும் இருவரிலிருந்து ஒருவராகக் குறைக்கப்பட்டார்.

 

இதில் எந்த மாற்றமும் அஞ்சலியை மாற்றவில்லை. பேச்சு குறைந்து, சிரிப்பை துறந்து இயந்திர கதியில் அவள் இயங்கிக் கொண்டிருந்தாள்.

 

அவளின் இந்த இறுக்கம் குடும்பத்தினருக்கு மன உளைச்சல் தருவதாய்.

 

அவளை தேற்ற அரவிந்தும் தன்னாலான முயற்சிகளைச் செய்தான். அவளிடம் ஓயாமல் வாயடித்து இவன் வாய் ஓய்ந்து தான் மிச்சம். அஞ்சலி சிறிதும் இளகவில்லை.

 

அடிக்கும் தாயிடமே ‘வலிக்கிறது வலிக்கிறது’ என்று சொல்லி அழ, இவள் ஒன்றும் குழந்தை இல்லையே, வளர்ந்து விட்டாள்… அவளை சிதறடிப்பவனிடமே வலியை கூறும் மடமை இல்லை அவளிடம்! அவள் கொண்ட நேசத்தின் பரிசு இது. இந்த வலியை அவள் மட்டுமே அனுபவித்தாக வேண்டும்! தன்னந்தனியாக தனக்குள் புழுங்கி தீர்த்தாக வேண்டும்! தீர்ந்தே போனாலும், தீராமல் நீண்டாலும் இதில் வேதனை மட்டுமே மிச்சம்!

 

அவன் வற்புறுத்தி பேச சொன்னாலும், “உன்கூட பேச எனக்கு எதுவும் இல்ல, என்னை இப்படியே விட்டுடு ப்ளீஸ்” அவள் முடித்துக் கொள்வாள். அதன்பிறகு இவனுக்கும் பேச ஒன்றும் வரவில்லை.

 

அஞ்சலியிடம் செல்ல நாய்க்குட்டி ஒன்றை பரிசாக நீட்டினான். சாயலில் ரூபி போலவே தெரிந்த அந்த நாய்க்குட்டியைப் பார்த்ததும் இவள் முகம் கனிந்தது. அதை ஆசையாய் ஒருமுறை வருடி தந்தவள் தன் கைகளில் வாங்கிக் கொள்ளவில்லை.

 

“வேணாம் அரவிந்த், இதாவது எங்கயாவது உயிரோட இருக்கட்டும்… என்கிட்ட வேணா” என்று மறுத்து விட்டாள்.

 

அதற்குமேல் அரவிந்தும் அமைதியாகி விட்டான்.

 

****

 

“டேய் போதும் டா, உன் அக்காவ கூட எப்படியோ சமாளிச்சிறேன். உன்ன சமாளிக்க முடியல என்னால” அரவிந்த் கைபேசியில் அலுத்து கொள்ள,

 

“உங்களுக்கு எல்லாமே விளையாட்டா போச்சா மாமா, அக்கா ரொம்ப கவலைபடுறா, பயப்படுறா வேற, அவ இவ்ளோ பயந்து நான் பார்த்ததே இல்ல” மறுமுனையில் அர்ஜுன் விடாமல் வாதம் செய்தான்.

 

“எனக்கும் பயமா தான் இருக்கு, அஞ்சலிக்கு ஏதாவது ஆகிடுமோனு, அவள சுத்தி ஆபத்து இருக்கும் போது என்னால எப்படி கோழைத்தனமா விட்டு வர முடியும்” அரவிந்த் தன்னிலை விளக்கம் தர,

 

“நீங்க என்ன பெரிய சூப்பர் ஹீரோன்னு நினைப்பா மாம்ஸ்? உங்க ஃபிரண்ட பறந்து பறந்து காப்பாத்தறதுக்கு” அர்ஜுன் கடுப்படித்தான்.

 

“ஒருத்தரை காப்பாத்தறத்துக்கு பறந்து வரனும், சூப்பர் ஹீரோவா‌ இருக்கனும்னு எந்த அவசியமும் இல்ல டா, அவங்களுக்கு நாம பாதுகாப்பா கொஞ்சம் விழிப்பா இருந்தாலே போதும்” அரவிந்த் சொல்லவும் அர்ஜுன் சற்று நிதானமானான்.

 

“என்ன கேரக்டர் மாமா நீங்க? என்னை அநியாயத்துக்கு இம்ப்ரஸ் பண்றீங்க, அஞ்சலி அவங்களுக்கு உங்கமேல காதல் இல்லாம இருந்தா அக்காவும் இவ்ளோ பதட்டபட மாட்டா. இதை சாக்கா வச்சு எங்க அவங்க உங்கள பிரிச்சிடுவாங்களோன்னு ரொம்ப பயப்படுறா” அர்ஜுன் தன் உடன்பிறந்தவளுக்காக பேச,

 

“சனாகிட்ட சொல்லு அர்ஜுன், நான் அவளோட நம்பிக்கைக்கும் எங்களோட காதலுக்கும் மறந்தும் கூட துரோகம் செய்ய மாட்டேன்னு” அரவிந்த் உறுதி தர,

 

“உங்க ரெண்டு பேரையும் மாத்தி மாத்தி சமாதானம் செய்யறதே என் பொழப்பா போச்சு” என்று பொய்யாய் அலுத்துக் கொண்டவன், “நெக்ஸ்ட் லீவ்ல நான் அங்க வரலாம்னு இருக்கேன் மாமா, உங்க கல்யாணத்தை சிம்பிளா முடிச்சிடலாம். எங்ககிட்ட கொஞ்சம் சேவிங்க்ஸ் இருக்கு, உங்க அளவுக்கு இல்லன்னாலும் என்னால முடிஞ்சளவு என் அக்காவுக்கு செய்வேன்” அர்ஜுன் சொல்ல அரவிந்த் முகத்தில் மென்னகை பரவியது.

 

“உன் அக்காவ விட பெருசா நீ என்ன டா கொடுத்துட முடியும்?” என்க, இருவரும் சிரித்து விட்டனர்.

 

“எப்படியாவது அஞ்சலிய குறி வைக்கிறது யாருன்னு கண்டுபிடிக்கனும் அர்ஜுன். ஒருமுறை இல்ல தொடர்ந்து மூனு முறை…! அஞ்சலி மேல என்ன வன்மமா இருக்கும்னு தோனல” அரவிந்த் தன் யோசனையைப் பகிர,

 

“பணம் இருக்க இடத்தில ஆபத்தும் சேர்ந்து இருக்கும் போல…! எதுக்கும் நீங்க ஜாக்கிரதையா இருங்க மாமா, நீங்க சொல்றதை எல்லாம் கேட்டு,‌ எனக்கே பயமா இருக்கு. அக்கா எவ்வளவு பயப்படுவா கொஞ்சம் யோசிச்சு பாருங்க” அர்ஜுன் கூறவும், அரவிந்திற்கும் அர்ச்சனாவின் நிலை புரிவதாய். 

 

****

 

அஞ்சலியை சுற்றி இருந்த பாதுகாப்பு வட்டங்கள் இன்னும் குறைந்தன. அஞ்சலியும் பெரிதாக கட்டுப்பாடுகள் இன்றி வெளி இடங்களுக்கு செல்ல தொடங்கி இருந்தாள். உடன் அரவிந்த்  வந்தபடி தான் இருந்தான்.

 

இப்போதெல்லாம் அஞ்சலியின் நடவடிக்கைகளில் மாற்றங்கள் தெரிந்தன. நிறுவன வேலைகளில் தன் கவனத்தை குறைத்துக் கொண்டாள்.

 

அடிக்கடி ஷாப்பிங், சினிமா, ஓட்டல் என தன்போக்கில் சுற்றலானாள். எதைப்பற்றியும் கவலையின்றி, தன்னுடன் ஒருவன் துணை வருகிறான் என்ற நினைப்பும் இன்றி, நினைத்த நேரத்தில் வரையறையின்றி சென்றாள். கண்ணில் பார்க்கும் பொருட்களை எல்லாம் குப்பையென வாங்கி குவித்தாள்.

 

ஒரு நிலைக்கு மேல் அரவிந்திற்கு அவளின்‌ பின்னோடு சுற்றுவது நாக்கு தள்ளியது. ஆபத்து இருக்கும் என்று தெரிந்தும் அவளை தனியே விடும் தைரியமும் அவனுக்கு இருக்கவில்லை.

 

தொடர்ந்த அலைச்சல் அரவிந்தையும் சோர்வடையச் செய்திருந்தது. அவனுக்கென்று சிறிதும் நேரம் ஒதுக்காத‌ நிலை அவனை எரிச்சலடையவும் செய்திருந்தது. 

 

அர்ச்சனாவை சந்தித்து பேசி பத்து நாட்களுக்கு மேலாகி இருந்தன. நேற்றிரவு அலைபேசி வழி பேசும்போது கூட, “நீ என்னை விட்டு தூரமா போயிட்டு இருக்கிற மாதிரி தோனுது அரவிந்த்… நான் ஒதுங்கி போனப்போ ஏன் என்னை நெருங்கி வந்த? இப்ப ஏன் விலகி போய் என்னை கஷ்டபடுத்தற?” அர்ச்சனாவின் கலங்கிய குரல் இவன் மனதை பிசைவதாய்.

 

நாளை எப்படியும் அர்ச்சனாவை பார்த்து, சிறிதுநேரம் பேசி அவளை ஆறுதல்படுத்த வேண்டும் என்று எண்ணிக் கொண்டான். ஆனால் அதுவும் முடியாமல் போயிருந்தது.

 

மறுநாள் அஞ்சலி நிறுவனத்திற்கு போகவே இல்லை. காலையிலேயே தோழியை பார்க்கவென்று கிளம்பிவிட்டாள். வேறு வழியின்றி அரவிந்தும் உடன் வந்திருந்தான்.

 

அஞ்சலியும் அவள் தோழி மதுவந்தி, உடன் அவளின் அண்ணன் குழந்தைகள் இருவரென அனைவரும் ‘பிளாக் தண்டர்’ சென்று மாலை வரை கொட்டம் அடித்தனர்.

 

இயல்பான மனநிலையில் இருந்து இருந்தால் அரவிந்தும் அவர்களுடன் கலந்து கொண்டு இருப்பான் தான். ஆனால் தொடரந்த அலைச்சல், அர்ச்சனாவை பார்க்க இயலாது போன ஏமாற்றம், அஞ்சலியின் முரண்பட்ட போக்கு இதெல்லாம் அவனை ஆத்திரமாக்கி இருந்தது.

 

அதை அஞ்சலியிடமும்‌ காட்டிவிட்டான். “நீ என்ன நினைச்சிட்டு இருக்க உன் மனசுல? உனக்கு என்னாகுமோ ஏதாகுமோன்னு நாங்க எல்லாம் பயந்திட்டு இருக்கோம், நீ என்னடான்னா உன் இஷ்டத்து சுத்திட்டு இருக்க” என்று கத்தியவனை அஞ்சலி ஒரு சலனமற்ற பார்வை பார்த்தாள் அவ்வளவு தான்.

 

மதுவந்தியையும் குழந்தைகளையும் அவர்கள் வீட்டில் விட்டு வர மாலை ஏறி இருந்தது. அரவிந்த் காரை செலுத்த, ஹியர் போன் வழி‌ பாடல்கள் கேட்டபடி அஞ்சலி அமர்ந்து வந்தாள். இதுவே அவனுக்கு கடுப்பை கிளப்பி இருக்க, அவள் காதில் இருந்த வயரை பிடுங்கி விட்டு கோபமாக கத்தி இருந்தான் அரவிந்த்.

 

“இப்ப என்ன உனக்கு என்கிட்ட பேசுனா முத்து உதிரி‌ போகுமா?” என்று மேலும் கத்தியவன், ‘இவள லவ் பண்ணலன்னு சொன்னதுக்காக இப்படி என்ன அலையவச்சு வேடிக்கை பாக்குறா ச்சே’ வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டான்.

 

அருகில் அமர்ந்திருந்த அஞ்சலிக்கு தெளிவாகவே கேட்டது. திரும்பி அவனை முறைத்தவள், “நானா உன்ன என் பின்னாடி அலைய சொன்னேன்? என்னவோ என்‌ உயிரை காப்பாத்தறவன் மாதிரி நீதான் பெருசா சீன்‌ போட்டு சுத்திட்டு இருக்க” என்று இவளும் கடுப்பாக பேசினாள்.

 

சாலையில் அவன் கவனமாக காரை செலுத்தியப்படி, “உனக்காக நான் வந்தேன் பாரு என்னை சொல்லனும்?” என்று நெற்றியில் அடித்துக் கொள்ள,

 

“நீ ஏன் டா எனக்காக வரனும்? என்னை வேணான்னு சொல்லிட்டு போன இல்ல, அப்படியே போக வேண்டியது தான, ஏன் மறுபடி மறுபடி என் கண் முன்னால வந்து நின்னு என்னை உயிரோட கொன்னுட்டு இருக்க…?” அஞ்சலியின் உயர்ந்து ஒலித்த குரலில், கார் குலுங்கி ஓரமாய் நின்றது.

 

“உன்ன கொஞ்ச நேரமாவது மறக்க முடியுமானு தான் டா, எங்கெங்கேயோ பேய் மாதிரி அலைஞ்சிட்டு இருக்கேன்! இனிமே நீயில்லாம வாழ நானும்… கத்துக்கனும் இல்ல!” 

 

அரவிந்த் முகத்தில் பேயரைந்த அதிர்ச்சி! வெளிரிய முகத்தோடு அவளை‌ பார்த்தான்.

 

“உன்ன பார்க்கற ஒவ்வொரு முறையும் நீ என் காதலை குப்பையா தூக்கி வீசினது தான் ஞாபகம் வருது…  ஒரேயொரு முறை நீ கொடுத்த அடி, உன்ன பார்க்கிற ஒவ்வொரு முறையும் அதே வலியை கொடுக்குது டா…” அவள் கண்களில் நீர் கோர்த்துக் கொள்ள,

 

“சாரி அஞ்சலி…” அரவிந்த் சங்கடமாக அவளிடம் மன்னிப்பு வேண்டினான்.

 

“எனக்கு உன் சாரி எல்லாம் வேணாம். ஒரேயொரு உதவி மட்டும் செய்… என்னை விட்டு போயிடு” தன் கண்களை புறங்கையால் துடைத்தபடி சொல்ல,

 

“இந்த நிலையில எப்படி என்னால போக முடியும்? அந்த கொலைக்காரனை கண்டு பிடிச்சதும் நான் போயிறேன்” என்றான் இவனும் தயக்கமாய்.

 

“எந்த கொலைக்காரனையும் நீ கண்டுபிடிச்சு கிழிக்க போறதில்ல. இது போலிஸோட வேலை”

 

“அதில்லை‌ நான்…” ஏதோ சொல்ல வந்தவனை தடுத்தவள்,

 

“இப்ப நீயில்லாத எந்த உலகத்துக்கு போகவும் தயாரா இருக்கேன்… அப்படியொரு உலகத்துக்கு அந்த யாரோ ஒருத்தன் என்னை அனுப்பி வச்சா… அதுவும் எனக்கு நிம்மதி தான்” என்றாள் ஆவேசமாக.

 

அவள் பேசி முடித்த பின்னரே அதன் அர்த்ததை இவனால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

 

“ஏய் பைத்தியம் மாதிரி சும்மா உளறாத” என்று கோபமாக சொன்னவன், அதே வேகத்தில் காரை செலுத்தி அரண்மனை வந்திருந்தான்.

 

அன்றிரவு உறக்கம் அவனை சேரவே இல்லை. அஞ்சலி பேசியது திரும்ப திரும்ப காதில் ஒலித்து, அவனை திணற செய்தது.

 

இரவு முழுவதும் குழப்பத்தில் இருந்தவன் விடியலில் ஒரு முடிவுக்கு வந்திருந்தான்.

 

அன்றிலிருந்து அஞ்சலி முன் செல்வதை கூடுமானவரை தவிர்த்துக் கொண்டான். அவள் வெளியே செல்லும் போதும் அவளின் காரை தனது வண்டியில் பின் தொடர்வதோடு நிறுத்திக் கொண்டான்.

 

அன்றைக்கு பிறகு அஞ்சலியும் வெளியே சுற்றுவதை நிறுத்திக் கொண்டாள். 

 

அவளுக்கு சிறு வயதில் பழக்கமான கோட்டோவியங்களை வரையத் தொடங்கினாள். குறுக்கும் நெடுக்குமாக வேகக்கோடுகளை இழுத்து ஒழுங்கற்ற சித்திரங்களை முழுமையாக வரைவது இவ்வகை ஓவியங்கள்.

 

பொறுமையாக நிறுத்தி நிதானமாக வரையப்படுபவை அல்ல இவை. மனதின் அழுத்தங்களை கோடுகளாக தீட்டி வேகவேகமாக வரைந்து முடிப்பது.

 

அதிகமாக ஆக்டோபஸ் போன்ற உருவங்கள் வரையப்படும். அவளின் மன அழுத்தங்களை வடிப்பதற்கான இவை உத்தியாக உதவியது.

 

முன்பெல்லாம் இவள் மனதில் ஏற்படும் சிறு சுணக்கமோ வருத்தமோ சந்தோசமோ அனைத்தையும் அப்படியே அரவிந்திடம் கொட்டிவிடுவாள். எனவே அவள் மனதிற்குள் எதையும் தேக்கி வைக்க வேண்டி வந்ததில்லை. காதலை தவிர்த்து.

 

இப்போது பகிர்ந்து கொள்ள அவனும் இன்றி, வேறு யாரிடமும் பகிர்ந்து கொள்ளவும் மனமின்றி, பழக்கமற்ற பழக்கமாய் அனைத்தையும் தனக்குள்ளேயே போட்டு அழுத்திக் கொண்டிருந்தாள்.

 

அவளின் அழுத்தத்தை பெரிதாக்கவே அவளின் கைப்பேசி கிணுகிணுத்தது. முக்கிய கோப்புகளை பார்வையிட்டு கொண்டிருந்தவள், கைப்பேசியை உயிர்ப்பித்து காதில் ஒற்றினாள்.

 

“இன்னைக்கு தான் உன்னோட கடைசி நாள்… முடிஞ்சளவு சந்தோசமா இருந்துக்க… ஏன்னா நாளைக்கு நீ உயிரோட இருக்க மாட்ட…” மறுமுனையில் ஆணின் ஆழ்ந்த குரல் மிரட்டலாக ஒலித்தது.

 

அந்த குரலின் அழுத்தமும் ஆழமும் கேட்கும்போதே உள்ளுக்குள் குளிர்பரவ செய்தது.

 

“யார் நீ? உன் மிரட்டலுக்கு நான் பயந்து நடுங்கனும்னு எதிர்பார்க்கிறீயா?” அஞ்சலி தன்னை திடப்படுத்தியபடி கேட்டாள்.

 

“பயந்து நடுங்க அவசியம் இல்ல… உனக்கான கடைசி நிமிஷங்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவு சந்தோசமா வாழ்ந்து முடிச்சிடு…”

 

அவள் தைரியத்தை இழுத்து பிடித்தும் இதயத்தின் துடிப்பு மட்டும் எகிறி கொண்டிருந்தது.

 

உயிர் பயம் என்பது எல்லா உயிருக்கும் பொது உணர்வு தானே.

 

“நான் உனக்கு என்ன கெடுதல் செஞ்சேன்… எதுக்காக நீ என்னை கொல்ல வெறி பிடிச்சு அலையிற” தத்தியடிக்கும் வார்த்தைகளை உதிர்த்து முடித்தாள்.

 

“நீ பாவத்தில விளைஞ்சவ, உன்ன கருவறுக்காம எங்க பழி தீராது…” குரூரமாக கொடூரமாக ஒலித்து அடங்கியது அந்த குரல்.

 

வியர்க்க விறுவிறுக்க முகம் வெளுத்து உடல் நடுங்க தன் அலுவலக கேபீனில் அமர்ந்து இருந்தாள் அஞ்சலி. கைப்பேசியின் மறுமுனை துண்டித்த பிறகும் கூட, அந்த மர்ம குரல் இவள் காதில் ஒலித்தபடியே இருப்பது போன்ற பிரம்மை. அவளின் தொண்டைக்குழி வறண்டு போக, எச்சில் கூட்டி விழுங்கி ஈரப்படுத்திக் கொண்டாள்.

 

இதை உடனே அரவிந்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எழ, கைப்பேசியை இறுக பிடித்து கொண்டு அவனை காண வெளியே வந்தாள்.

 

அவன் இருக்கை வெறுமையாக இருக்க, இது தேநீர் இடைவேளை நேரமாதலால் கேண்டீன் நோக்கி வேக நடமிட்டாள்.

 

அங்கே அரவிந்துடன் அர்ச்சனாவையும் பார்த்தவள் அப்படியே நின்று விட்டாள்.

 

அர்ச்சனாவின் கைப்பற்றி அரவிந்த் ஏதோ ஆர்வமாக சொல்லவும், அர்ச்சனாவின் விழிகளில் பொய் கோபம் துளிர்க்கவும்… இருவரையும் ஒன்றாய் பார்க்க, வெகு அழகாய் தெரிந்தது.

 

அத்தனை அழகை ரசிக்கும் மனம் தான் இவளுக்கு வாய்க்கவில்லை. அஞ்சலி திரும்பி நடந்து வந்து தன் இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.

 

உயிர் பயத்திற்கும் உணர்வுகள் பட்ட காயத்திற்கும் இடையே அவள் தன்னை தொலைத்துக் கொண்டிருந்தாள்.

 

****

 

நிஜம் தேடி நகரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!