நீயில்லை நிஜமில்லை 15(1)

நீயில்லை நிஜமில்லை 15(1)

 

உனை பிரிந்து நானில்லை!

உன் காதல் விடுத்து

வேறேதும் நிஜமில்லை

எனக்கு!

 

இடைவெளையில் தேநீர் பருகி கொண்டிருந்த அர்ச்சனாவின் பின் வந்து நின்ற அரவிந்த், அவளின் இடத்தோளை சீண்ட, அவள் திரும்ப, மறுபடி வலத்தோளை சீண்டி விட்டு, அவள் முன் வந்து நின்றான்.

 

அவனை பார்த்ததும் இவள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன. 

“எப்…பா சுறுசுறுன்னு உன் ஃபேஸ் ரெட்டீஷா மாறுதுடீ, அப்படியே அள்ளிக்கலாம் போல இருக்கு. நான் கொஞ்சமே கொஞ்சமா கிள்ளிக்கவா?” என்று அரவிந்த் அவள் கன்னத்தை சீண்டவும், அவன் கரத்தை வேகமாக தட்டி விட்டாள்.

 

“ஒழுங்கா போயிடு, உன் ஃப்ரண்டுக்கு பாடிகார்ட் டியூட்டி பார்க்கிறது தான உனக்கு முக்கியம்” என்று சீறினாள். 

 

“என் சனாவுக்கு லவர் பாய் டியூட்டி பார்க்கறதும் எனக்கு முக்கியம் தான் டி” அவன் வழிந்துப் பேசவும்,

 

“நீ எந்த மண்ணாங்கட்டி டியூட்டியும் எனக்கு பார்க்க வேணா” அவள் முகம் கடுகடுத்தது.

 

“நான் பாட்டுக்கு என் வேலைய பார்த்துட்டு போயிருப்பேன்… சும்மா லவ்வு இலவுன்னு என்னை குழப்பி விட்டு, என் மூளைய மழுங்க வச்சுட்ட… ச்சே போயும் போயும் உன்ன விரும்பி தொலைச்சேன் பாரு. என் புத்திய அடிச்சிக்கனும்” அர்ச்சனா தன் நெற்றியை அடித்து கொள்ள, அவள் கையை பிடித்து கொண்டவன்,

 

“ரொம்ப தான் அலுத்துக்கிற, அப்படி என்னடி உனக்கு நான் குறைஞ்சு போயிட்டேனாம் ம்ம்?” அரவிந்த் வாடாமல் வதங்காமல் அவளிடம் வம்பை வளர்த்தான்.

 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு வாய்த்த இந்த சந்திப்பு அவனுக்குள் உற்சாகம் பரப்பியது.

 

‌”ஆமா குறைஞ்சு தான் போயிட்ட, உன் ஃபிரண்ட் தான் உனக்கு முக்கியமா போச்சு, நான் உனக்கு பொழுதுபோக்கா போயிட்டேன் இல்ல, வேணுன்னா என்கூட பேசுவ, வேணான்னா என்னை திரும்பி கூட பார்க்காம போயிடுவ, நான் தான் பைத்தியக்காரி… உன்ன நினைச்சு புலம்பிட்டு இருக்கேன்” அர்ச்சனா படபடக்க,

 

இவன் பிளந்த வாயை கையால் மூடி நின்று, “இப்பவே இப்படி கேப் விடாம பேசுறியே, கல்யாணத்துக்கு அப்புறம் என் காது கிழிஞ்சிடும் போல” என்று அரவிந்த் மறுகையால் காதையும் மூடிக் கொண்டு புலம்பினான்.

 

“நமக்குள்ள அப்படி ஒன்னு நடந்தா பாக்கலாம்” அர்ச்சனா நம்பிக்கையற்று சொல்லவும்,

 

“நடக்கும் சனா, அதுவும் சீக்கிரமே” அரவிந்த் உறுதி கூற,

 

“எதுக்கு எனக்கு தாலி கட்டிட்டு, அவகூட ஊர் சுத்தவா?” அர்ச்சனாவின் கொதிப்பு அடங்குவதாக இல்லை.

 

“ச்சே என்ன பேச்சு இது சனா? உன் ஃப்ரண்ஸ்க்கோ இல்ல உன் தம்பிக்கோ ஏதாவது ஆபத்துன்னா நீ வேடிக்கை பார்த்துட்டு சும்மா இருப்பியா? அவங்கள காப்பாத்த என்ன செய்ய முடியுமோ செய்ய மாட்ட? அதுபோல தான் இதுவும்…” 

 

“ஓஹோ எனக்கு ஒருத்தன் ஃப்ரண்டா இருந்து, அவன் என்னை ஒன் சைட் லவ் பண்ணி நான் அதை ரிஜக்ட் பண்ணிட்டு, இப்போ அவனுக்கு ஆபத்து அவனுக்கு உதவியா இருக்கேன்னு அவன் வீட்டுல போய் நான் தங்கினா… நீ என்னை எப்படி பார்ப்ப அரவிந்த்?” அர்ச்சனா கைகளை கட்டிக்கொண்டு கேட்க, 

 

அதை நினைக்கவே இவனுக்கு அருவெறுப்பாக இருந்தது.

 

“நான் சொல்லும் போதே எட்டிக்காயை கடிச்ச மாதிரி உன் முகம் மாறுதே, நீ செய்யறதை எல்லாம் பார்த்து எனக்கு எப்படி இருக்கும்…?” அர்ச்சனா விடாது கேட்க, அவன் திணறித் தான் நின்றான்.

 

“உடனே உன்மேல நம்பிக்கை இல்லையானு கேக்காத, இங்க நம்பிக்கை மட்டும் இல்ல, அதுக்கு மேலயும் நிறைய விசயம் இருக்கு…”

 

“முன்ன எனக்கு தனியா இருக்கிறது பழகி போயிருந்துச்சு, ஆனா கொஞ்ச நாளா என்கூடவே  இருந்து எனக்காக பார்த்து எல்லாம் செஞ்சுட்டு, கடைசிவரை கூட வருவேன்னு ஆசை காட்டிட்டு இப்போ… ஏதோ காரணத்தை பிடிச்சிகிட்டு விலகி போயிட்ட… நான் என்ன பாடுபடுவேன்னு கொஞ்சமாவது யோசிச்சு பார்த்தியா?”

 

“ஒவ்வொரு விசயத்துக்கும் மனசு உன்ன தேடுது, நான் வச்ச ரோஜா செடி பூ பூத்திருக்குன்னு உன்கிட்ட சொல்லி சந்தோசப்பட ஆசை, என் மொபைல் ரிங்டோன் மாத்தினதை உன்கிட்ட நல்லா இருக்கானு கேக்க ஆசை… ரோஸ்குட்டி எங்கிருந்தோ பூனைய பிடிச்சிட்டு வந்திருக்கா, அந்த பூனைக்குட்டிய பார்த்தாலே எனக்கு பயமா இருக்குன்னு சொல்லனும் நினப்பு… இதுபோல இன்னும் நிறைய…” அவள் சிறு குழந்தையைப் போல, அவன்மீது குற்றப்பத்திரிகை வாசித்தாள்.

 

“ப்ச் சாரி சனா, அஞ்சலி கூட இருக்கும் போது உன்கிட்ட பேசினா… வீணா அவளுக்கு சங்கடம்… அதான் உன்னோட அதிகம் பேச முடியல” இவன் தயக்கமாக சமாதானம் சொல்ல,

 

“உனக்கு எப்பவுமே அவங்க ஃபீலிங் தான் பெருசா தெரியுது இல்ல… உன்ன பார்க்க முடியாம எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும்னு  உனக்கு தெரியாதில்ல…” என்று வெதும்பினாள்.

 

“நானும் தான் ரொம்ப கஷ்டப்படுறேன், உன்ன பார்க்காம, உன்கிட்ட பேசாம, ஹக் பண்ணாம… கிஸ் பண்ணாம…” என்றபடி அவன் பட்டியல் நீள, அர்ச்சனா அவனை முறைக்க முயன்று தோற்று விட்டாள். 

 

அவள் முகத்தில் சிரிப்பின் சாயல்‌ படர்ந்தது. அர்ச்சனா இத்தனை சீக்கிரம் சமாதானமானது அவனுக்கும் சந்தோசமானது. அரவிந்தும் உடன் சிரிக்க… அங்கே காதல் எழுத்தில் வடிக்காத கவிதையாய்.

 

இந்த நேரத்தில் தான் அஞ்சலி இவர்களை பார்க்க நேர்ந்தது! 

****

 

அன்று மாலை அஞ்சலி அரண்மனை வரும் வரை உடன் வந்த அரவிந்த், தன் வண்டியை நேரே திருப்பி இன்ஸ்பெக்டர் நெடுமாறனை சந்திக்க சென்றான்.

 

இருவரும் காவல் நிலையத்தின் ஆய்வாளர் அறையில் அமர்ந்து  இருந்தனர்.

 

“முதல்ல உங்களுக்கு என்மேல வந்த சந்தேகம் தீர்ந்தாச்சானு சொல்லுங்க சார்” அரவிந்த் புன்னகையோடு கேட்க,

 

“போலிஸ்காரன் புத்தி பா, எல்லாரையும் சந்தேக கண்ணோட தான் பார்க்கும். பார்க்கனும். உன்னபத்தியும் அப்படித்தான் விசாரிச்சேன் மெர்சலாகிட்டேன் பா, காதம்பரி மேடம்க்கு உன்மேல சந்தேகம் வந்ததுலயும் தப்பு சொல்ல முடியாது தான்” என்று அவர் இயல்பாக பேச்சை தொடங்கினார்.

 

“உங்களை மெர்சலாக்குற அளவுக்கு பெருசா என்கிட்ட எதுவும் இல்ல சர்… காதம்பரி ஆன்ட்டி எதையோ மனசுல வச்சுட்டு என்னை அவாய்ட் பண்றாங்க போல” என்றான்.

 

“ஆனா அவங்க பொண்ணுக்கு உன்மேல ஓவர் லவ்ஸ் போல, நீ ஒரு வார்த்தை சொன்னா செத்துடுவேன்னு சொல்றாங்க, கொடுத்து வச்சவன் பா நீ”

அவர் கலாய்க்க,

 

“நீங்க வேற சார், இப்ப பிரச்சனையே அதுதான்” என்றவன், அர்ச்சனா உடனான தன் காதல் பற்றியும், அஞ்சலி உடனான தன் மோதல் பற்றியும் சொன்னான்.

 

“அடாபாவி… ஒருத்திய கரெக்ட் பண்ணி கட்டினதுக்கே எனக்கு நாக்கு தள்ளி போச்சு டா, நீ என்ன அசால்டா ரெண்டு குதிரையை ஓட்ற” அவர் கலாய்க்க,

 

“கலாய்க்காதீங்க சார், அஞ்சலி என்னை லவ் பண்ணறது எனக்கு சத்தியமா தெரியாது”

 

“இதென்னடா குதர்க்கமான பதிலா இருக்கு. அப்ப அஞ்சலிக்கு உன்மேல இருக்க லவ் முன்னவே தெரிஞ்சு இருந்தா ஒத்துட்டு இருப்பியா?”

 

“அதில்ல சார், அஞ்சலி என்னை லவ் பண்றது கூட தெரியாத அளவுக்கு நான் அடி முட்டாளா இருந்து இருக்கேன்னு நினைக்கும் போது தான்… எனக்கே அசிங்கமா இருக்கு… அவளுக்கு என்மேல லவ் இருக்கும்னு அந்த பாயிண்ட்ல கூட நான் யோசிச்சு பார்த்தது இல்ல… இப்ப கூட அஞ்சலி சொல்றது பொய்யா இருக்க கூடாதான்ற ஒரு நப்பாசை கூட வருது!”

 

“உன் ஆளு அர்ச்சனா எப்படி? அஞ்சலிய விட அவ்வளவு அழகா என்ன?”

 

இவன் முகம் அழகாய் புன்னகை பூசிக் கொண்டது. “ஆஹான்னு அலட்டலும் இல்லாம, அய்யன்னு அசப்பலும் இல்லாம, பாந்தமான அழகு சார் என் சனா… மழுப்பல் தழுப்பல் இல்லாம தெளிவா பேசுவா, மேலுக்கு திமிரா காட்டிக்குவா உள்ளுக்குள்ள கொஞ்சம்‌ பயந்து தயங்குவா… அவ தான் சண்டைய கிளப்புவா, அவ கோவம் தீராம போனாலும் எனக்காக சமாதானம் ஆகிடுவா… பழகின கொஞ்ச நாள்லயே என் உலகம் பூரா அவளா மாத்திட்டா… செல்ல ராட்சஷி சார் என் சனா…” அரவிந்த் உளறிக் கொண்டே போக,

 

“ஒத்துக்கிறேன் பா, உனக்கு காதல் பைத்தியம் முத்தின நிலைக்கு வந்தாச்சு, இனி தாமதிச்சா ரொம்ப விபரீதமாகிடும். சட்டு புட்டுன்னு மாலைய மாத்திக்கிறது நல்லது” நெடுமாறன் சொல்லி சிரிக்க, இவன் அசடு வழிந்தான்.

 

“உங்களோடதும் லவ் மேரேஜ்ஜா சார், எப்படி போகுது உங்க காதல் வாழ்க்கை?” ஆர்வமாக கேட்க,

 

“நாசமா போகுது நீ வேற வயித்தெரிச்சலை கிளப்பாதப்பா”

 

“ஏன் சார் ஏதாவது பிரச்சனையா?”

 

“இந்த காக்கிச்சட்டை தான் பிரச்சனை, போலிஸ் டிரைனிங்க்ல தான் அவளை சந்திச்சேன், ரெண்டு பேருக்கும் எல்லா விசயத்திலையும் ஒத்து போச்சு, பிடிச்சது லவ் பண்ணோம், வேலை கிடைச்ச அப்புறம் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். அதுக்கப்புறம் தான் தலைவலியே ஆரம்பிச்சது… கோர்ட், கேஸ், விசாரணை, நைட் டீயூட்டின்னு அவ ஒருபக்கம் நான் ஒருபக்கம்னு பொழப்பு ஓடுது, ஹனிமூன் போனதோட சரி, இப்பெல்லாம் சந்தோசமா பேச கூட எங்களுக்கு நேரம் அமையறதில்ல. முன்ன மாதிரி லவ் இல்லன்னு ரெண்டு பேரும் சண்டபோட்டு முறைச்சிக்கிறதான் பெருசா போச்சு” அவர் தன் காதல் கதையை வெறுத்து சொன்னார்.

 

“ரெண்டு பேரும் நாட்டுக்கு கடமை செய்றேன் பேர்வழின்னு வீட்டு கடமைய டீல்ல விட்டீங்களா?”

 

“நீ சொன்னாலும் சொல்லலன்னாலும் அதே தான் அரவிந்த், ரொம்ப ஆசைப்பட்டு இந்த காக்கிச்சட்டைய நான் போட்டேன். குறிஞ்சிக்கும் டிப்பான்ட்மென்ட்ல ரொம்ப நல்ல பேரு”

 

“மேடம் பேரு குறிஞ்சியா? நல்லாயிருக்கு, உங்க ரெண்டு பேரோட கடமை உணர்ச்சிய நினைச்சு நான் வியக்குறேன்” அரவிந்த் தலை தாழ்த்தி சொல்லவும் அவன் தோளை தட்டியவர்,

 

“ரொம்ப வாராத பா, இப்பவாவது கேஸ் பத்தி பேசலாமா” என்றார்.

 

இருவரின் முகமும் யோசனை காட்டியது. “அஞ்சலிய கொலை பண்ண நடந்த ஒவ்வொரு முயற்சியும் யோசிச்சு பார்த்தா உங்களுக்கு என்ன தோனுது சார்?” அரவிந்த் கேட்க,

 

“உனக்கு என்ன தோனுது அதை முதல்ல நீ சொல்லு” என்று கேள்வியை அவனிடமே திருப்பினார் நெடுமாறன்.

 

“அரண்மனைக்குள்ள வந்தவன் அங்கிருந்த சாப்பாடு, தண்ணீ, பழம் வேற எதுலையாவது விஷம் கலந்து இருக்கலாம், ஆனா அஞ்சலி சாப்பாட்டு தட்டுல மட்டும் சரியா தெளிச்சு இருக்கான்னா, அவனோட டார்கெட் அஞ்சலி மட்டும் தான்”

 

“இது தெரிஞ்சது தானே, ஆனா காரணம் தான விளங்கல, குடும்ப பகை, தொழில் பகை, நீங்க படிச்ச காலேஜ், ஸ்கூல் வரை போய் விசாரிச்சு ஆச்சு, சந்தேகபடுற மாதிரி எதுவும் சிக்கல… இன்னும் இந்த கேஸ்‌‌ சிக்கலா தான் இருக்கு”

 

“அந்த கொலைக்காரனுக்கு அஞ்சலிய கொல்றது மட்டும் தான் மோட்டிவ், திரும்ப திரும்ப ரெண்டு தடவ டிரை பண்ணி இருக்கான்…”

 

“இல்ல அரவிந்த், மூனு முறை… லாரி ஆக்ஸிடென்ட், கார் இன்ஸிடென்ட் அன்ட் பாய்சன் அட்டாக்”

 

“லாரி ஆக்ஸிடென்ட் கூட திட்டமிட்டதா?” அரவிந்த் அதிர்ந்து கேட்கவும்,

 

“சிசிடிவி ரெக்கார்டிங் செக் பண்ணுதுல அந்த லாரி அஞ்சலியோட காரை  டார்கெட் பண்ணித்தான் ராங்க் ரூட்ல வந்திருக்கு, எதிர்பாராம அந்த பசங்க கார் ஓவர்டேக் பண்ணதால டைமிங் மிஸ்ஸாயிடுச்சு பிளானும் மிஸ் ஆகிடுச்சு. 

 

லாரிய பார்த்ததும் அஞ்சலி காரை ஸ்லோ டைவுன் பண்ணதால தப்பிச்சிருக்காங்க, இல்ல நிலைமை மோசமாகி இருக்கும்” நெடுமாறன் விளக்கவும் அரவிந்தின் அதிர்ச்சியைக் கூட்டியது.

 

“அந்த லாரி டிரைவர் உயிர் பொழைச்சி இருந்தாலாவது அவன்கிட்ட விசாரிச்சு இருக்கலாம். ப்ச் அவனையும் காப்பாத்த முடியல”

 

“அந்த டிரைவர் குடும்பத்தை சேர்ந்தவங்களை விசாரிச்சா ஏதாவது துப்பு கிடைக்கலாமில்ல சார்”

 

“ம்ம் அவனை சேர்ந்தவங்கள தான் தேடிட்டு இருக்கோம். நீ மேல சொல்லு”

 

“எப்படியும் அந்த கொலக்காரன் தான் மாட்டிக்க கூடாதுன்றதுல மட்டும் கவனமா இருக்கான்… கார் பிரேக் கட் பண்ணது கம்பெனி சிசிடிவி கேமரா எதுலையும் கேட்ச் ஆகல, இப்பவரைக்கும் அரண்மனைக்குள்ள விஷம் எப்படி வந்ததுன்னு தெரியல” அரவிந்த் சொல்ல யோசனையோடு தலையாட்டிக் கொண்டவர், 

 

“இப்ப அந்த கொலகாரன் நேரம் பார்த்துட்டு இருக்கான்… நாம ஏமாந்த நேரம் பாத்து அடிக்க” என்ற நெடுமாறனின் குழப்பம் இப்போது தெளிந்தது. அவர் மூளை பரபரப்பாக வேலை செய்ய தொடங்கியது.

 

“இன்னொரு விசயமும் இருக்கு சார், அது கொலைக்காரனா மட்டும் இருக்கனும்னு இல்லயே, ஏன் கொலைக்காரியா இருக்கக் கூடாது?” அரவிந்த் கேட்கவும் நெடுமாறனின் கண்கள் மின்னின.

 

“வாய்ப்பு இருக்கு, இந்த கோணத்திலையும் விசாரிக்கனும்” என்றவர் மனதில் திட்டம் ஒன்று உருவாகி இருந்தது. ஆனால் அதை அரவிந்திடம் அவர் காட்டிக்கொள்ளவில்லை. 

 

****

 

நிஜம் தேடி நகரும்…