நீயில்லை நிஜமில்லை 15(2)

நீயில்லை நிஜமில்லை 15(2)

 

அமுத கலசத்தில் 

ஒற்றை துளி விஷம் நீ!

விஷ குப்பியில் 

நிறை அமுதம் நான்!

 

‘இன்னைக்கு தான் உன்னோட கடைசி நாள்… நாளைக்கு நீ உயிரோட இருக்க மாட்ட…’

 

அந்த மிரட்டல் குரலே அஞ்சலியின் காதில் மறுபடி‌ மறுபடி ஒலித்து அவளை மிரள வைத்துக் கொண்டு இருந்தது.

 

இந்த நடு இரவில் உறக்கம் மறந்து, தன் அறையை வித்தியாசமாக மிரட்சியுடன் பார்த்து இருந்தாள் அஞ்சலி. இன்று ஏதோ புதிதாய் அமானுஷ்யம் அவள் அறையில் சூழ்ந்து இருப்பது போன்ற பிரம்மை அவளுக்குள்!

 

மனம் படபடத்தவளாக அறையின் கதவு‌, சன்னல், கட்டர்ன் என அனைத்தையும் திறந்து வைத்து, அனைத்து விளக்குகளையும் ஒளிர செய்து விட்டு, கட்டிலில் ஒடுங்கி, போர்வைக்குள் அடங்கி உட்கார்ந்துக் கொண்டாள்.

 

என்ன தான் தைரியமாக இருக்க முயன்றும் அந்த குரலில் ஒலித்த ஏதோ வன்மம் இவளை பயப்பட வைப்பதாய்.

 

அஞ்சலி சாதாரணமாக பயந்த சுபாவம் கொண்டவள் அல்ல. அவள் பயம் கொள்ளும் சந்தர்ப்பங்களும் இதுவரை அமைந்ததில்லை.

 

ஆனால் இன்று… அவன் மிரட்டலை விட, அந்த குரலில் தெரிந்த பழிவெறி… அத்தனை தீவிரம்… அவன் பேச்சில் இருந்த உறுதி… அவன் வெறும் மிரட்டலோடு விடுபவனல்ல… செய்து முடிப்பவன் என்பதை இவளுக்குள் ஆழமாய் பதித்தது.

 

ஒரு நிறுவனத்தின் முடிவினை எடுக்கும் தலைமை பொறுப்பில் இருப்பவளுக்கு அந்த மர்ம குரல் வெறும் மிரட்டலோடு விடும்‌ குரல் அல்ல என்பது தெள்ளத் தெளிவாக புரிந்து இருந்தது.

 

மறுபடி அவளுக்குள் பதற்றம்… திறந்து கிடந்த கதவு சன்னல்கள் பாதுகாப்பற்ற பதற்றத்தை தர, மறுபடி எழுந்து சென்று, கதவு ஜன்னல்களை எல்லாம் அடைத்துவிட்டாள்.

 

இத்தனை பயம் இருந்தும் அவள் அரவிந்திடம் உதவி நாடவில்லை. முன்பு அவளுக்கு மட்டுமே உரிமையானவன், இன்று வேறொத்தியின் உரிமையாக தெரிந்தான். தன்னை மறுத்தவனிடம் உதவி வேண்டி நிற்பது அவளுக்குள் அவமான உணர்வை ஏற்படுத்தியது. அதைவிட உயிர் விடுவதே மேலென்ற வறட்டு பிடிவாதம் வேறு.

 

பிடிவாதத்தை விட அவனை பார்த்து பேச நேர்ந்தால் வெடித்து சிதறும் இவள் நினைவுகளை மீண்டும் சேர்த்து கட்டி வைப்பது பெரும் வலியான உணர்வு. அதற்காகவே அவனை தவிர்த்து வந்தாள்.

 

‘என் மார்பு கூட்டுக்குள் துடிக்கும் இதயத்தை பிடுங்கி 

மண்ணில் வீசி சென்று விட்டாய்,

நீ என்னை பிரிந்தாலும் 

இதயமற்ற கூடு 

உனை நினையாது இருக்குமா?

துடிப்பை நிறுத்தாத இதயம்

உன்னை சொல்லாமல் அடங்குமா?’

 

அவள் டைரியில் கிறுக்கிவிட்ட வரிகள், இன்னும் இதயத்தில் வலி கூட்டுவதாய். 

 

அரவிந்தை தவிர்த்து குடும்பத்தினர் இடமோ அல்லது இன்ஸ்பெக்டர் இடமோ இவள் தெரிவித்து இருக்கலாம். ஆனால் இவளின் மன உளைச்சல் இவளின் யோசனையையும் செயல்திறனையும் மந்த வைத்திருந்தது.

 

அப்படி என்ன பெரிதாக நடந்துவிடும்? என்ற பிடிப்பற்ற தன்மை. 

 

இத்தனை பாதுகாப்பை தாண்டி அவ்வளவு சுலபமாக கொலை செய்துவிட முடியுமா என்ன? என்ற அலட்சியதன்மை.

 

அவனால் முடிந்தால் எனை கொன்று தான் சாய்க்கட்டுமே! என்ற விரக்தி விஞ்சியநிலை அவளிடம்…

 

****

 

நடு இரவு மட்டும் பிரபாகரின் அறையில் அவரோடு கலந்துரையாடலில் இருந்தான் அரவிந்த். தொழில் வளர்ச்சி பணிகள் பற்றி விவாதித்து, மகளை நினைத்து கவலை கொண்டவரை நம்பிக்கை சொல்லி தேற்றி விட்டு வந்தான்.

 

அரண்மனையே ஆழ்ந்த நிசப்தத்தில் இருக்க, வாயில் காவலர்களை விழிப்பாக இருக்கும்படி அறிவுறுத்தி விட்டு, உறங்கி வழிந்த இரவு காவல் இருப்பவர்களையும் சற்று எச்சரித்து விட்டு தன் அறையை அடைந்தவனுக்கு ஏதோ வித்தியாமாய் தோன்றியது…

 

வழக்கத்திற்கு மாறாக அவன் அறைக்கதவு தாள் திறந்திருக்க, விளக்குகள் ஒளிர்ந்து இருந்தன. இவன் துணுக்குற்று மெதுவாக கதவை திறந்து சற்று எச்சரிக்கையாக உள்ளே வந்தான்.

 

அங்கு அவன் கண்ட காட்சியில், அரவிந்த் கண்களில் வியப்பும், இதழ்களில் புன்னகையும் ஒன்றாய் விரிந்தது.

 

அங்கே சோஃபாவில் அர்ச்சனா அமர்ந்த வாக்கில் சாய்ந்து உறங்கிக் கிடந்தாள்…

 

மாலையில் இருந்து அவனுக்காக காத்திருந்து இந்த நடு இரவில் கண்யர்ந்து இருந்தாள்.

 

அரவிந்த் அர்ச்சனாவின் கன்னத்தை தட்டி எழுப்ப, இமைகள் தட்டி விழித்து எழுந்தவள் அவசரமாய் கடிகாரத்தை பார்க்க, மணி பன்னிரண்டை கடந்து விட்டிருந்தது. இவள் முகமும் வாடி போனது.

 

“ஹேய் சனா, இங்க நீயென்ன செய்ற? அதுவும் மிட் நைட்ல?” அரவிந்த் வியப்பு விலகாமல் கேட்க,

 

முகம் நிமிர்த்தி அவனை சங்கடமாக பார்த்து, “சாரி டைம் கிராஸ் ஆகிடுச்சு…” என்றவள் அவன் கன்னத்தில் மென்மையாக இதழ் ஒற்றி,‌ “ஹேப்பீ பர்த்டே அரவிந்த்” என்றாள்.

 

அவளின் இதழ் ஒற்றலில் மேகம் நோக்கி பறந்தவன், அவளின் வாழ்த்தில் தொப்பென்று கீழே விழுந்தான்.

 

இப்போது தான் மேசையில் வைக்கப்பட்டிருந்த கேக், சாக்லேட், பரிசு பொருள் போன்றவற்றை கவனித்தான்.

 

சிறு தயக்கமாக அவளை ஏறிட்டவன், “என்னோட ஐடில இருக்க டேட் பார்த்து இன்னைக்கு என்னோட பர்த்டேனு நினைச்சிட்டியா?” என்று கேட்க, அர்ச்சனா அவனை புரியாமல் பார்த்தாள்.

 

“அது என்னோட நிஜமான பிறந்த தேதி இல்ல சனா, நான் ஆசிரமத்தில சேர்ந்த தேதி தான் அது… உண்மைய சொல்லனும்னா என் பிறந்த தேதி எனக்கே தெரியாது! ஏன்  யாருக்கும் தெரியாது” என்று நிறுத்தினான்.

 

அர்ச்சனாவின் மனம் அவனுக்காக இளகியது. 

 

“அப்ப நீ பர்த்டே கொண்டாடினது இல்லையா?” அர்ச்சனா கவலையாக கேட்க, அவன் புன்னகை விரிந்தது. 

 

“ம்ம் கொண்டாடுவோமே, ஆனா, இன்னைக்கு இல்ல, அப்பா, அம்மா என்னை தத்தெடுத்த நாளை தான் என்னோட பர்த்டேவா செலிபிரேட் பண்ணுவாங்க” என்றான்.

 

“ஓ அது எப்போ?” அர்ச்சனா ஆர்வமாக கேட்க,

 

“அதுக்கு இன்னும் சிக்ஸ் மன்ந்த்‌ஸ் இருக்கு சனா” என்று சொல்லி அவன் சிரிக்க, இவள்‌ முகம் தோய்ந்தது.

 

“உன்னபத்தி எனக்கு எதுவுமே தெரியல” என்று இவள் வருந்தி சொல்ல,

 

“அதுக்கென்ன இனி வாழ்க்கை ஃபுல்லா நீ என்னைப்பத்தியும், நான் உன்னபத்தியும் தெரிஞ்சிக்கிட்டே இருக்கலாம்” என்றவன் குரலில் காதல் வழிய, இவளும் நெகிழ்ந்து அவன் மார்போடு ஒன்றிக் கொண்டாள்.

 

அவளிடமிருந்து கமழ்ற இதமான பர்ஃபியூம் வாசம் அவன் நாசியில் நுழைய, அவளை தன்னிடமிருந்து விலக்கி நிறுத்தி, ஒற்றை புருவம் உயர அவளை அளவிட்டான்.

 

சிவப்பு, மஞ்சள் வண்ண பூக்கள் நிறைந்த வான நீலநிறச் சேலை வாகாய் உடுத்தி, வழக்கத்திற்கு மாறாக முந்தானையை ஒற்றை இழையாக விரிய விட்டிருந்தாள். அதற்கிணையான  அணிகலன் அணிந்து, முகத்தில் ஒப்பனை ஏற்றி, கண்களில் மைதீட்டி, உதட்டில் சாயம் பூசி, சிறிய ஒட்டுப் பொட்டு, பாதி தூக்கி முடித்து பாதி விரிய விட்டிருந்த நீளக் கூந்தல் என, அவளின் இயல்பான தோற்றத்தை விட புது‌ அழகு கூடி தெரிந்தாள். 

 

அரவிந்த் பார்வையில் மெச்சதலும் மயக்கமும் ஒற்றாக பளிச்சிட, அர்ச்சனா சங்கடமாக, “பார்க்க நல்லா இருக்கேனா அரவிந்த், அந்த ஆஷா தான் நான் வேணான்னு சொல்லியும் கேக்காம, ஒரு மணிநேரம் என்னை உக்காரவச்சு பெயிண்ட் தீட்டி அனுப்பிட்டா” என்று சிணுங்கலோடு சொன்னாள்.

 

“யாரு உன் புது ரூம் மெட்டா?” என்று கேட்டவன், சிரித்தப்படியே விலகி நடக்க,

 

“நான் எப்படி இருக்கேன்னு சொல்லேன் அரவிந்த்” அவனுக்கு தன் அலங்காரம் பிடிக்கவில்லையோ என்று அர்ச்சனா பதறி கேட்க, திரும்பியவன், அதே வேகத்தில் அவளிதழோடு இதழ் பொருத்தினான்…

 

நேரம், காலம் பார்ப்பதில்லை!

காதல், 

இடம், பொருள், ஏவல் கேட்பதில்லை!

 

****

 

டிக்… டிக்… டிக்… 

 

என்ற மணிமுள் நகரும் ஓசை மட்டும் அறையில் கேட்க, அது அவளுக்கான கடைசி மணித்துளிகளாய் அஞ்சலியை நடுங்க செய்வதாக…

 

அஞ்சலியின் தைரியம் எல்லாம் சிறிது சிறிதாக சிதறிக் கொண்டிருந்தது. அவளுள் உயிர் பயம் தோன்றி ஆட்டுவித்தது.

 

தன் உயிர் மேல் தனக்கு இத்தனை பிடித்தமா? என்று அவளே தன்னை வியந்து நினைத்து, விரக்தியான சிரிப்பை உதிர்த்தாள்.

 

இவளுக்காக உயிர் விட்டவர்கள் ஒவ்வொருவராக இவள் நினைவில் வந்து போயினர்… லாரி விபத்தில் தன்னை முந்தி பாய்ந்து உயிர் விட்ட அந்த இளைஞர்கள்! கார் விபத்தில் தப்பித்தும் பிழைக்க வகையின்றி உயிர்விட்ட ஓட்டுநர்! இவளுக்கு வைக்கப்பட்ட விஷ உணவை நன்றியோடு உண்டு விட்டு உயிர்விட்ட இவளின் செல்ல ரூபி…!

 

‘இத்தனை பேர் சாவுக்கு நான் மட்டும் தான் காரணமா?’

 

‘இத்தனை வெறியோடு தன் பின்னால் அலையும் அவன் யார்?’

 

‘என்னை கொல்வதால் அவனுக்கு ஏற்படும் லாபம் தான் என்ன?’

 

‘ஒருவேளை இம்முறை அவன் வென்று விடுவானோ?’

 

‘என் முடிவு அவன் கையில் என்று விதியா?  இதுதான் என் கடைசி நாளா?’

 

‘இங்க எல்லாரும் சாகிறவங்க தானே,‌ என்னைக்கோ ஒருநாள் நானும் சாகத்தானே போறேன்…!’

 

‘எந்த தப்பும் செய்யாம எவனோ ஒருத்தன் கொலைவெறிக்கு நான் பலியாகனுமா?’

 

அலையலையான எண்ணங்கள் அவளுக்குள் ஓயாமல் மோதியபடியே இருக்க, அவள் மேலும் சோர்ந்து போனாள்.

 

சட்டென அந்த அரண்மனை இருளில் மூழ்கி போனது. அவளுள் உச்சக்கட்ட பயம் பரவிட உடல் வியர்த்து விட்டது…

 

****

 

அரவிந்திடமிருந்து அதிர்ந்து விலகி கொண்ட அர்ச்சனா, “டேய் பொறுக்கி, ராஸ்கல், இடியட்… உன்னபோய் நல்லவன்னு நம்பி வந்தேன் பாரு…” அர்ச்சனா அவனை திட்டியபடி அடிக்க தொடங்கினாள்.

 

அவள் கைகளை தடுத்து பிடித்து சுழற்றி இழுத்து அவளை முழுவதுமாக தன்னுடன் அடக்கிக் கொண்டவன், “கட்டிக்க போறவ கிட்டயும் நல்லவனா இருந்து நான் என்னடி சாதிக்க போறேன்?” அவளின் காதோரம் குழைவாய் கிசுகிசுத்தப்படி, அவளின் கழுத்தோரம் வாசம் பிடித்தான்.

 

இந்த தனிமையும் இத்தனை நெருக்கமும் அவளை எச்சரிக்கை செய்ய, அவனிடமிருந்து திமிறி விலக முயன்றாள். அவன் பிடி மேலும் இறுகியது.

 

அரவிந்தின் கண்களில் கிறக்கம் கூடிக்கொண்டே போனது.

 

இந்த மாதம் முழுவதுமான ஓயாத அலைச்சல், ஓட்டம், போராட்டம் எல்லாவற்றுக்கும் சேர்த்து அவன் மனம் காதலை நாட, அவன் இளமை வேகமும் காதல் மயக்கமும் அவனை‌ பித்தேற செய்வதாய்.

 

“அரவிந்த் வேணா…” அர்ச்சனாவிடம் சிணுங்கலான கெஞ்சல்.

 

“எனக்கு வேணுமே சனா…” அவனிடம் காதல் பிடிவாதம். 

 

“இதெல்லாம் தப்பு…” பெண்மையின் எச்சரிக்கை.

 

“சனா… தப்பு பண்ணா தப்பில்ல தானே…” ஆண்மையின் எல்லை மீறல்.

 

“அடாபாவி… நீ ரொம்ப மோசம், இதெல்லாம் பெரிய தப்பு… விடு… அரவிந்த் ப்ளீஸ்…” அவனோடு இணங்கும் மனதை இழுத்து‌ பிடித்து,‌ அவனையும் தடுக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தாள்.

 

அவளின் தயக்கங்களை கழித்தலில் விட்டு, முத்தங்களின் எண்ணிக்கையை கூட்டலில் சேர்ப்பிக்கலானான்.

 

சட்டென மின்சாரம் தடைப்பட்டு அறைக்குள் இருள் சூழ, “அச்சோ, அரவிந்த் கரண்ட் ஆஃப் ஆகிடுச்சு, விடு” என்று அர்ச்சனா பதறி விலக முயல,

 

“காதலுக்கு கரண்ட் போறது தான் நல்ல சகுணம் சனா…” என்றவனின் ஆசை வேகம் கூடியது. அவன் காதல் பாடத்தில் இவள் தான் திக்கு முக்காடி போனாள்…

 

****

 

இருள் சூழ்ந்ததும் அஞ்சலியின் தைரியமும் துணிச்சலும் காற்றாய் கரைந்து போயிருந்தது.

 

ஏதோ வித்தியாசமான சலசலப்பு அவளின் செவிகளை தீண்ட, சத்தம் வந்த பக்கம் நடுக்கத்தோடு பார்வையை கூர்மையாக்கினாள்.

 

கருமை இரவில் ஒரு கருப்பு உருவம் பூ மரத்தின் கிளையில் இருந்து தாவி பால்கனியில் குதித்தது.

 

கையிலிருந்த எதையோ பயன்படுத்தி லாவகமாக மூடியிருந்த கதவை திறந்து,  சிறிதும் சத்தமின்றி அடிமேல் அடிவைத்து வந்து கட்டிலை நெருங்கியது. இருளில் பார்வையை தெளிவாக்கி, தன் கை ஆயுதத்தை மெத்தையில் இருந்த உருவத்தின் மேல் ஆவேசமாக பாய்ச்சியது!

 

“ஆஆஆஆ…” என்ற அலறலில் அந்த அரண்மனையே அதிர,

 

அந்த கருப்பு உருவத்தின் மர்ம முகத்தில் மேலும் குரோதத்தின் இருள் சூழ, வந்த வழியே பாய்ந்து கீழே குதித்தோடியது. 

 

காவல் ஆட்கள் அந்த நிழல் உருவத்தை துரத்தி ஓடினர். காவலர்களின் விசில் சத்தம் எச்சரிக்கை ஒலி எழுப்பியது…

 

அலறல் சத்தத்தில் காதல் மயக்கம் தெளிந்து நிமிர்ந்த அரவிந்த், விசில் சத்தத்தில் ஏதோ ஆபத்தென்று உணர்வு எழ, பதறி அர்ச்சனாவை உதறிவிட்டு வேகமாக ஓடினான் அரண்மனை நோக்கி…

 

****

 

நிஜம் தேடி நகரும்…