நீயில்லை நிஜமில்லை 16
இருளின் பாதையில்
விரல் பற்றி நடந்தாய்!
ஒளிவீசும் வேளையில்
ஏன் கண்களை பறித்து மறைந்தாய்?
இருட்டுக்குள் அங்கிங்குமாக டார்ச் ஒளிகள் வீச, அரண்மனை சுற்றிலும் அந்த மர்ம உருவத்தை தேடி ஆட்கள் ஓடிக் கொண்டிருந்தனர்.
விசில் ஒலிகளின் அலறல் ஒருபுறம், போலீஸ் வாகனத்தின் சைரன் ஒலி மறுபுறம் என அங்கே பரபரப்பு சூழ்ந்தன.
இருளில் தட்டுத்தடுமாறி ஓடி வந்த அரவிந்திற்கு எதுவுமே தெளிவாக விளங்கவில்லை. யாருக்கும் எதுவும் ஆகி இருக்க கூடாது என்ற வேண்டுதல் மட்டுமே அவனுள்.
“முத்து லைட் என்னாச்சுன்னு போய் பாரு” பிரபாகரின் பதற்றமான குரல் ஒலிக்கவும், அஞ்சலி அறைமுன் டார்ச் ஒளி வீசவும், இதயம் நடுங்கியபடி அரவிந்த் அங்கே வந்து நின்றான்.
பிரபாகர் வேலை ஆட்களை ஏவிக் கொண்டிருக்க, காதம்பரி ஒருபுறமும் திரிபுரசுந்தரி மறுபுறமும் அணைத்திருக்க, அவர்கள் கையணைப்பில் ஒடுங்கி நின்றிருந்தாள் அஞ்சலி வெளிறிய முகத்தோடு.
அஞ்சலியை ஆபத்தின்றி பார்த்த பிறகு தான் அவனுக்கு நிம்மதியானது.
அதேநேரம் இன்ஸ்பெக்டர் நெடுமாறன் அங்கே ஓடி வந்தார். “உங்களுக்கு எதுவும் ஆகல இல்ல?” அவரும் பதட்டமாக வினவ, அஞ்சலி கலக்கமாக இல்லையென்று தலையசைத்தாள்.
“என்ன நடந்தது?” அவர் கேட்க,
“கரென்ட் ஆஃப் ஆன உடன ஏதோ சலசலப்பு கேட்டுச்சு, டோர் லாக்கை யாரோ ஓபன் செய்ய டிரை பண்ற மாதிரி தோனுச்சு. நிஜமா? பிரம்மையா?ன்னு புரியல எனக்கு. பயத்துல அம்மம்மா ரூம்க்கு போயிட்டேன்” என்றாள்.
“அப்ப கத்தினது யாரு? நீங்க இல்லையா?” நெடுமாறன் நெற்றி சுருங்க கேட்க,
“அது நான் தான் இன்ஸ்பெக்டர்…” காதம்பரி பதில் தந்தது.
“கரன்ட் போன பிறகும் எமர்ஜென்சி லைட் ஆன் ஆகல, ஏதோ தப்பா தெரிஞ்சது. அஞ்சலி பயப்படுவாள்னு விளக்கு எடுத்துட்டு அவ ரூம்க்கு வந்தேன். கதவு திறந்து பார்த்தா, அங்க ஒரு கருப்பு உருவம். கைல கத்தியோட… பயத்தில கத்திட்டேன்” காதம்பரி சொல்ல அனைவருக்குமே திக்கென்றது.
நெடுமாறன் அறைக்குள் சென்று தன் கைவிளக்கின் வெளிச்சம் பாய்ச்சி ஆராயலானார்.
மெத்தையில் மேடிட்ட உருவத்தின் மீது கத்தி சொருகி இருப்பது தெரிந்தது. அருகே சென்று போர்வையை விலக்கிப் பார்த்தார். அது சற்று பெரிய அளவிலான டெடிபியர் பொம்மை! இருளில் போர்வைக்குள் பார்க்க அது ஆள் படுத்திருப்பது போன்ற தோற்றத்தை தந்து இருந்தது. மேலும் அறைக்குள் யாராவது ஒளிந்து இருக்க வாய்ப்புள்ளதா என்று சுற்றி ஆராயலானார்.
மூச்சு வாங்க அங்கே ஓடிவந்த சப் இன்ஸ்பெக்டர் துரைசாமி, “அக்கியூஸ்ட் தப்பிச்சிட்டான் சார், கிடைக்கல” என்றார்.
“வாட்? எப்படி தப்ப விட்டீங்க? இவ்ளோ ரிஸ்க் எடுத்தும் எல்லாமே வேஸ்ட்டா போச்சு ஷிட்” ஷூ காலால் தரையில் ஓங்கி மிதித்தார்.
“அப்ப கொலைக்காரன் பத்தி உங்களுக்கு முன்னமே தகவல் தெரியுமா இன்ஸ்பெக்டர்?” அரவிந்த் வினவ,
“ப்ச் ஆமா, அஞ்சலி ஃபோன் கால் டிரேஸ் பண்ணும் போது, அந்த கொலைக்காரன் மிரட்டினதை நாங்க தெரிஞ்சுகிட்டோம். யாருக்கும் டவுட் வராத மாதிரி அரண்மனை சுத்தி வாட்ச் பண்ணிட்டு இருந்தோம்… எங்களையும் மீறி எப்படி அவன் உள்ள வந்தான்? இப்ப தப்பிச்சும் போயிட்டான்… எல்லாமே வேஸ்ட் வேஸ்ட்” நெடுமாறன் ஆத்திரமாக தோற்று போன தங்கள் திட்டத்தை விளக்கிச் சொன்னார்.
“அஞ்சலி உனக்கு மிரட்டல் கால் வந்ததா? ஏன் எங்க யார்கிட்டயும் சொல்லல!” பிரபாகர் அதிர்ச்சியாக கேட்க,
“சாரிப்பா, ஏதோ குழப்பத்தில சொல்லாம விட்டுட்டேன்” அஞ்சலி மன்னிப்பு கோரினாள். மகளின் நிலை நினைத்து பெற்றவரின் மனம் துடிதுடித்துக் கொண்டிருந்தது.
“ஈவ்னிங் கூட உங்ககிட்ட பேசிட்டு வந்தேனே சார். இந்த மிரட்டல் கால் பத்தி சொல்லி இருக்கலாமே, முன்னெச்சரிக்கையா இருந்திருக்கலாம்” ஆவேசமாக கேட்க வந்த அரவிந்த் சங்கடமாக கேட்டு முடித்தான்.
அஞ்சலிக்கு காவல் இருக்கிறேன் என்ற பெயரில் இங்கு தங்கிக் கொண்டு, அவன் இன்று பாதுகாத்த லட்சனத்தை எண்ணி!
“கேஸ் சீக்ரெட் பா, அப்படி யாருக்கும் லீக் பண்ண முடியாது” நெடுமாறன் விரைப்பாகச் சொல்லவும், அரவிந்த் அமைதியானான்.
குடும்பத்தினரும் காவலாளர்களும் பதற்றத்தில் குழப்பத்தில் நின்றிருந்தனர்.
சுற்றிலும் காவலை மீறி கொலைக்காரன் எப்படி உள்ளே வந்தான்? இத்தனை ஆட்களிடம் சிக்காமல் எப்படி தப்பித்து போனான்? யோசிக்க யோசிக்க இன்னும் குழப்பம் தான் கூடியது.
இப்போது அரண்மனை விளக்குகள் அனைத்தும் ஒளி பாய்ச்சின.
கேளாமல் கொள்ளாமல் அரவிந்திடம் பதிந்த இருந்த அஞ்சலியின் பார்வையில் அதிர்ந்த மாற்றம். அதை கண்டு கொண்ட நெடுமாறன் அரவிந்தை திரும்பி பார்க்க, அந்த சூழ்நிலையும் மறந்து தலையில் அடித்து கொண்டார் அவர்.
“டேய், நீயும் ஆத்திரத்தை கிளப்பாத டா, உன் மூஞ்சிய முதல்ல துடைச்சு தொலை” என்று தாழ்ந்த குரலில் அவனிடம் கடுகடுத்தார்.
அரவிந்திற்கு விளங்கவில்லை. “என்னது சார்?” தன் கைக்குட்டை எடுத்து முகத்தை அவசரமாக துடைக்க, வெள்ளை கைக்குட்டை முழுதும் சிவப்பு நிற லிப்ஸ்டிக் சாயம்!
அரவிந்தின் முகம் அதிர்ச்சி காட்டியது. முகம் மொத்தமும் வேகமாக துடைத்துக் கொண்டு கலைந்திருந்த கேசத்தையும் கோதிவிட்டுக் கொண்டான்.
நெடுமாறன் அவனை கேவலமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு அறைக்குள் சென்று மீண்டும் துப்பு துலக்கலானார்.
அரவிந்திற்கு மிகுந்த அவமான உணர்வு மேலெழ, இப்போது தான் நினைவு வந்தவனாக, அஞ்சலியைக் கலவரமாக ஏறிட்டான்.
இவனிடமே பதிந்திருந்த அவளின் பார்வையில் அடிப்பட்ட குழந்தையின் சாயல்.
அவனுக்கு ‘அய்யோ’ என்றானது. எங்காவது தலையை முட்டிக் கொள்ள வேண்டும் போலிருந்தது.
அஞ்சலி அவன் சங்கடத்தை உணர்ந்து, தன் அம்மம்மாவின் தோளில் இமைகள் மூடி சாய்ந்து கொண்டாள்.
கன்னம், உதடு, நெற்றி என முகத்தில் லிப்ஸ்டிக் கறை படிந்து, கலைந்த தலையோடு அரவிந்தின் தோற்றம் மீண்டும் நிழலாடியது.
‘இப்படி இவனை காணநேரும் என்று தெரிந்து இருந்தால், அந்த கொலைக்காரனிடம் கத்திக்குத்து பட்டு இறந்து இருக்கலாம், இதைவிட அந்த வலி குறைவானதாக தான் இருந்திருக்கும்…’ அவள் உள்ளம் கதறுவதாய்.
அதேநேரம் திரிபுரசுந்தரி உணர்விழந்து தளர்ந்து சாய்ந்தார். அனைவரின் கவனமும் அவரிடம் திருப்பியது.
கவலையின் தீவிரத்தில் இரத்த அழுத்தம் கூடி இருந்தது அவருக்கு.
மருத்துவர் அழைக்கப்பட்டு அவருக்கான சிகிச்சைகள் தொடங்கின.
அம்மாவின் உடல்நிலைக்கும் மகளை சுற்றி நெருங்கும் ஆபத்திற்கும் நடுவே காதம்பரியும் உடைந்து தான் போனார்.
வீட்டுக்குள் விஷம் வந்ததை கடந்து விட்ட அவருக்கு, கத்தியோடு ஒருவன் வந்ததை கடக்க முடியவில்லை. தாய்மைக்குரிய பித்தான பயங்கள் அவரை சூழ்ந்தன.
ஒரு தந்தையாய் பிரபாகர் மிரண்டு போயிருந்தார். என்ன? ஏது? என்று தலைக்கால் புரியவில்லை. ஆனால் தங்கள் ஒற்றை செல்ல மகளின் உயிருக்கு ஆபத்து என்பது மட்டும் தெளிவாக புரிந்தது. எத்தனையோ இக்கட்டான சூழ்நிலைகளை சமாளித்தவர், இப்போது தன் பெண்ணுக்கு நேர்வதை ஜீரணிக்க முடியாமல் மிரண்டு நின்றார்.
எத்தனை விலைக் கொடுத்தும் தங்கள் பெண்ணை காக்க வேண்டும் என்ற வேகம் பெற்றவர்களுக்கு.
நெடுமாறன், துரைசாமி அறை முழுவதும் அலசி விட்டு, கொலைக் கத்தியை எடுத்து பத்திரப்படுத்தினர். அடுத்து வந்த தடவியலாளர்கள் கைரேகைகள் மற்றும் சிலவற்றை சேகரித்துக் கொண்டு சென்றனர்.
வானம் விடிய தொடங்கியும் அங்கே பரபரப்பு குறையவில்லை. ஆட்கள் அந்த கிராமம் முழுவதும் அலசி தேடியபடி இருந்தனர்.
இருளில் முளைத்தவன் அந்த இருளோடு கரைந்து மறைந்தும் போயிருந்தான் விசித்திரமாய்…
“என்ன நடக்குது? ஏன் இப்படியெல்லாம் நடக்குதுன்னு ஒன்னுமே விளங்கல, இவ்ளோ கொலைவெறியோடு அஞ்சலிய கொல்ல துடிக்கிற அளவுக்கு அவமேல என்ன பழி? இதெல்லாம் செய்யறது யாரு?” பிரபாகர் கலக்கத்தில் கேள்விகளை அடுக்க,
அங்கிருந்த அனைவரின் மனநிலையும் அதேதான்.
“அந்த இருட்டுல, கறுப்பா உயரமா கைல கத்தியோட ஓர் உருவம் மட்டும் தான் எனக்கு தெரிஞ்சது… வேற எந்த அடையாளமும் தெரியல… நான் பார்த்துட்டு இருக்கும் போதே மின்னலா பாஞ்சு கீழே குதிச்சிட்டான்” காதம்பரி தான் பார்த்ததைச் சொன்னார்.
“இப்பவும் உங்களுக்கு அரவிந்த் மேல சந்தேகம் இருக்கா மேடம்? ஏன்னா சம்பவம் நடந்து முடிஞ்ச அப்புறம் தான் அரவிந்த் வந்தது!” துரைசாமி கேட்க,
காதம்பரி தேவி, அரவிந்தை பார்த்துவிட்டு ‘இல்லை’ என்று தலையசைத்தார்.
“இவன் பக்கா சோம்பேறி, அந்த உருவத்தோட ஆட்டிடியூட் எதுவும் இவனுக்கு சுட்டு போட்டாலும் வராது” காதம்பரி தனக்கு தோன்றியதை தான் சொன்னார்.
அந்த இறுக்கமான நேரத்தில் அவர் சொன்னது அனைவரின் முகத்திலும் சிறு சிரிப்பை வரச் செய்தது.
“அந்த அக்யூஸ்ட்ட ரொம்ப தான் பாராட்டுறீங்க ஆன்ட்டி நீங்க?” அரவிந்த் துள்ளவும், “உள்ளதை தான் சொன்னேன், நீ சும்மா துள்ளாத” காதம்பரி அதட்டவும், அங்கே சூழல் இன்னும் சற்று இலகுவானது.
காதம்பரிக்குள் வேறு ஏதோ யோசனை ஓடிக்கொண்டிருந்தது.
“அந்த கத்தியில விஷம் தடவப்பட்டு இருக்கு… கொலையாளி ரொம்ப தீவிரமா இருக்கான்… இனி அஞ்சலியோட புரோடக்ஷனை இன்னும் டைட் ஆக்கனும்” நெடுமாறன் விளக்க,
“இன்ஸ்பெக்டர், ஒரு விசயம் சொல்லனும்” என்ற காதம்பரி, “ஒன்றை வருசம் முன்ன ஒருத்தன் என்னை பார்க்க வந்திருந்தான். என் அப்பாக்கு முதல் மனைவியோட பையன் அவன் தான்னு சொன்னான். ஆனா அவன் மூஞ்சியும் ஆளும் எந்தவிதத்திலயும் எங்க குடும்பத்துக்கு சம்மந்தப்பட்டவனா தோனல…
அவனோட அம்மா பத்தி ஏதேதோ கதை சொன்னான். நான் குறுக்க கேள்வி கேட்கவும் மாத்தி திரிச்சு பேசினான். இந்த அரண்மனை சொத்துக்கு அவன் தான் மூத்த வாரிசுன்னு மிரட்டி பார்த்தான்… நான் தான் கோபத்துல அவனை அடிச்சு துறத்தி விட்டேன்” காதம்பரி விளக்கமாக சொன்னார்.
“அப்ப உங்க அப்பாவுக்கு இன்னொரு குடும்பமும் இருக்கா?” நெடுமாறன் கேட்க, “எனக்கும் அவ்வளவா தெரியாது. அம்மாவுக்கு ஓரளவு தெரிஞ்சிருக்கலாம்.”
இன்ஸ்பெக்டர் திரிபுரசுந்தரியிடம் இதைப்பற்றி விசாரிக்க, இப்போது தான் சற்று தெளிந்திருந்தவர், “அவரோட முதல் சம்சாரம், இவரோட வாழ பிடிக்காம… யாரோடவோ ஓடிபோயிட்டதா பேசிக்கிட்டாங்க… அப்புறம் தான் என்னை கல்யாணம் பண்ணிட்டு வந்தாரு…” திரிபுரசுந்தரி தனக்கு தெரிந்ததை சொன்னார்.
“அவங்கள பத்தி ஏதாவது தெரியுமா? அவங்க சொந்த ஊரு… மத்த விசயம்… இப்படி ஏதாவது?” இன்ஸ்பெக்டர் கேட்க,
“எனக்கு தெரியாது. அவங்கள பத்தி பேச்செடுத்தாலே அவருக்கு ரொம்ப கோபம் வரும், அதால இங்க யாரும் அவங்களை பத்தி பேச்செடுத்தது இல்ல” திரிபுரசுந்தரி சொல்ல,
“வேற யாருக்கு அவங்களை பத்தின விசயம் தெரியும்?”
சற்று யோசித்தவர், “பட்டம்மாவுக்கு தெரிஞ்சிருக்கும். அவங்க ரொம்ப வருஷமா இந்த வீட்டோட வேலை செஞ்சவங்க, அந்த அம்மாகூட ரொம்ப பழக்கம்னு பேசிக்கிட்டாங்க, இப்ப எங்க தோட்டத்தில தான் வேலை செய்றாங்க” என்றார் தோய்வாக.
“அந்த பட்டம்மாவ விசாரிக்கனும், அவங்க வீடு எங்கன்னு சொல்லுங்க?” நெடுமாறன் கேட்க,
“சண்டியா, சாரை பட்டம்மா வீட்டுக்கு கூட்டிட்டு போ” என்று வேலையாள் ஒருவனை துணைக்கு அனுப்பினார் காதம்பரி.
சண்டியனுடன் சப் இன்ஸ்பெக்டர் துரைசாமி விசாரிக்க சென்றுவிட,
“சாரி சார். நான் தான் கவனகுறைவா இருந்துட்டேன். இனி இப்படி தப்பு நடக்காது” அரவிந்த் தயங்கி மன்னிப்பு வேண்டவும்,
அதுவரை மௌனமாக இருந்த அஞ்சலி, “அவசியமில்ல, நீ போயி உன் வாழ்க்கையை பார்த்துக்க, என்னை பார்த்துக்க இங்க நிறைய பேர் இருக்காங்க… ம்மா அவன் வேணா போக சொல்லுங்க…” என்று கிட்டத்தட்ட கத்தினாள்.
அரவிந்த் ஏதோ மறுத்து சொல்ல வரவும், நெடுமாறன் அவன் கைப்பற்றி இழுத்தபடி வெளியே நடந்தார்.
“நீ கிளம்பு அரவிந்த், நாங்க பார்த்துக்கிறோம்” அவன் தோளை ஒருமுறை தட்டிவிட்டு அவர் நகர,
“எப்படி சார் நீங்க பார்த்துப்பீங்க, உங்களோட பத்து கேஸ்ல இது பதினொன்னு உங்களுக்கு, எங்களுக்கு அஞ்சலி முக்கியம் சார்… அவளுக்கு எந்த ஆபத்தும் வராம பார்த்துக்கனும், ஆன்ட்டியும், அங்கிளும் வயசானவங்க. அவங்களால முடியாது. நான் அவங்களுக்கு துணையா இருந்து தான் ஆகனும்”
“உன்னால முடியாது அரவிந்த். நீ காதல் மயக்கத்துல இருக்க, உன்னால வேற எதையும் தெளிவா செய்ய முடியாது”
“இது என் கடமை சார், ஆபத்து இருக்குன்னு தெரிஞ்சும் அஞ்சலிய அப்படியே விட்டு போகற அளவு நான் சுயநலவாதி இல்ல, அவளுக்கு நான் எப்படியோ, எனக்கு அஞ்சலி நல்ல ஃபிரண்ட், அவளுக்காக நான் நிப்பேன்” என்றான் உறுதியாக.
சற்று அவனை கூர்மையாக பார்த்த
நெடுமாறன் ஆமோதிப்பாக தலையசைத்து விட்டு நகர்ந்தார்.
****
அவன் அறையில் அர்ச்சனா இறுகி அமர்ந்து இருந்தாள். அவளின் சிவப்பேறி இருந்த கண்கள் இரவு முழுவதும் அவளுக்கும் உறக்கமில்லை என்றது.
“நீ வந்த வேலை முடிஞ்சதா உனக்கு சந்தோசந்தானே?” அரவிந்தின் ஆத்திர கேள்வி அர்ச்சனாவை அதிர்ந்து எழச் செய்தது.
“என்ன சொல்ற?”
“என்னை மயக்கி உன்கிட்டையே இறுத்தி வச்சிக்கனும் அதான உன் பிளான்? அதுக்காக தான நைட்ல இவ்வளவு அலங்காரம் பண்ணிட்டு என்கிட்ட வந்த?”
தான் கடமை தவறியதால் எழுந்த அவமான உணர்வை கடுமையான வார்த்தைகளால் அவளிடம் கொட்டினான்.
தன் பழியை பெண் மீது திருப்பி, அவளையும் பழித்து தானும் அக்மார்க் ஆணென்று நிறுபித்துக் கொண்டான்.
“ச்சே ரொம்ப கேவலமா பேசுற, இப்படி கூட உனக்கு பேச வருமா!” அவள் முகம் கசங்கியது.
“நீதான் என்னை இப்படி கேவலமா பேச வைக்கிற சனா, நான் என்ன இங்க ஹாலிடேக்கே தங்கி இருக்கேன்? பர்த்டே செல்பரேட் பண்ண வந்துட்ட?
நேத்து வரைக்கும் நான் நெருங்கி வந்தாலே எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்னு சட்டம் பேசினவ, நைட் மட்டும்…”
“போதும் நிறுத்து அரவிந்த்” அவள் காதுகளை பொத்திக் கொண்டாள்.
“நான் எங்க அஞ்சலி பக்கம் சாஞ்சிடுவேனோங்கிற பயம் உனக்கு, அஞ்சலி மேலயும் அனாவசியமா கோபம், அதால தான அர்த்த ராத்திரியில தனியா என் ரூம்க்கு வந்து இவ்ளோ சீப்பா பிளான் பண்ணி…” கோபம் அறிவை மறைக்க, ஆவேச வார்த்தைகளை வரையறையின்றி தூக்கி வீசினான்.
அர்ச்சனா விட்ட அறையில் தான் அரவிந்த் அடங்கி அமைதியானான்.
இப்போது இவள் முறை பேசினாள்.
“நீயொரு முட்டாள் அரவிந்த். அதுவும் வடிகட்டின முட்டாள். எல்லாத்தையும் மனசலவிள மட்டும் யோசிக்கிறவன். கொஞ்சம் அறிவா யோசிச்சு இருந்தா, உங்க கம்பெனி உன்கைல இருந்து இருக்கும். ஆனா அப்பாவோட கடைசி ஆசை தான் முக்கியம் பணம், காசு முக்கியமில்லனு ஃபூலிஷ் போல, எதுக்காக செய்றேனு தெரியாம ஏதோ செஞ்சிட்டு இருக்க…
அதைவிடு, இந்த நிமிசம் வரைக்கும் உனக்கு முக்கியம் அஞ்சலியா? நானா? உறுதியான முடிவை உன்னால எடுக்கவே முடியல. அஞ்சலிகிட்ட போய் ‘சனா தான் என் லைஃப்னு சொன்ன’, என்கிட்ட வந்து, ‘அஞ்சலிகாக நான் எதுவும் செய்வேன்’னு சொல்ற…
உனக்கு நீயே தெளிவா இல்ல, இதுல எங்கிருந்து அஞ்சலிய காப்பாத்த முடியும் உன்னால?”
“…!”
“நாம காதலிக்க ஆரம்பிச்சு உனக்கு வர முதல் பர்த்டேனு ஆசையா சர்ப்ரைஸ் பண்ண வந்தேன் பாரு. என் புத்திய சொல்லனும்… போதும்டா சாமி நீயும் உன் மண்ணாங்கட்டி காதலும்” என்று தலைமேல் கைகூப்பியவள் நிற்காமல் அங்கிருந்து வெளியேறி விட்டாள்.
அரவிந்த் இரு கைகளால் தலையை பிடித்தப்படி அமர்ந்து விட்டான்.
அவனின் இடக் கன்னம் இப்போதும் விறுவிறுத்தது. அவள் தந்த அறையின் பயனாக.
****
முன்புறம் பச்சை ஓலைக்கூரை இட்ட, சிறிய அளவிலான ஓட்டு வீடு அது. பழமையான வீடு தற்போதுதான் செப்பனிடப்பட்டு இருப்பது நன்றாகவே தெரிந்தது. அதைப்பற்றி சப் இன்ஸ்பெக்டர் துரைசாமி வினவ,
“இந்தம்மா பேத்திக்கு ரெண்டு வாரம் முன்ன தான் கண்ணாலம் முடிஞ்சது அதானுங்க” என்று பதில் தந்த சண்டியன், “ஆத்தா… பட்டம்மா ஆத்தா, விரசா வெளிய வா” வீட்டுக்குள் குரல் கொடுத்தான்.
“ஆரு, சண்டியனா? கதவு தொறந்து தான் கிடக்கு, உள்ற வால” பட்டம்மாவின் குரல் மட்டும் வெளியே கேட்டது.
“கிழவிக்கு குசும்பு அதிகம் சார், நீங்க உள்ளாற வாங்க” சண்டியன் முன் செல்ல, துரைசாமி அவனை தொடர்ந்தார்.
தாழ்வாரத்தில் மூட்டை வேர்க்கடலையை விரித்து உரித்துப் பருப்பெடுத்துக் கொண்டிருந்த பட்டம்மா, காக்கிச்சட்டையைப் பார்த்ததும் பதறி எழுந்து விட்டார்.
“போலீசு காரவங்களா, ஐயோ அந்த எடுப்பட்டபய என்ன வம்பு தும்பு இழுத்து வச்சானோ தெரியலையே, ஐயா என்ற பேரன் இங்கில்லிங்க, அரண்மனை வூட்டு ராக்காவலுக்கு போனவன் இன்னும் திரும்பலங்கையா” பட்டம்மா படபடத்தார்.
“ஐய, அவங்க ஏதும் கேக்கறத்துக்கு முன்னால நீயே உளறி வப்பியா, போலீஸ்காரு உன்னத்தான் விசாரிக்க வந்து இருக்காரு. அரண்மனைகாரம்மா உத்தரவு ஒழுங்கா பதில் சொல்லு” என்ற சண்டியன், அங்கு மூலையில் மடித்து வைக்கப்பட்டிருந்த இரும்பு சேரை எடுத்து வந்து விரித்து வைத்தான்.
அவசியமில்லை என்று மறுத்த துரைசாமி, சண்டியனை வெளியேறச் சொல்ல, அவனும் மறுப்பின்றி நகர்ந்து விட்டான்.
“அஞ்சலியோட தாத்தாக்கு இன்னொரு குடும்பம் இருந்ததா? அவங்கெல்லாம் இப்ப எங்க இருக்காங்க தெரியுமா?” நேரடியாக துரைசாமி கேள்வி கேட்க,
“ஆருங்க, பெரிய ஐயாவோட மூத்த சம்சாரத்தைப் பத்தியா கேக்குறீங்க?”
“ஆமா, அவங்களை பத்தி தான் உங்களுக்கு தெரிஞ்சதை சொல்லுங்க”
“அவுக பேரு பெரியநாயகிங்க, மதுர பக்கமா பெரிய வூட்டு பொண்ணு அவக, அஞ்சு வருசம், பெரியய்யாவும் அம்மணியும் நல்லாதான் இருந்தாவுக. அப்புறம் என்னென்னமோ நடந்து போச்சுங்க…” பட்டம்மா வருத்தமாக முடித்தார்.
“அவங்களுக்கு நடுவுல என்ன பிரச்சனைனு உங்களுக்கு ஏதும் தெரியுமா?” அவர் மேலும் கேட்க,
வாசல் பக்கம் ஒருமுறை பார்த்துவிட்டு தன் குரலைத் தாழ்த்திப் பேசினார். “எல்லாம் ஆம்பள புத்தி தாங்க காரணம்! வெளியூரு கண்ணால விருந்துக்கு போன பெரியய்யாவுக்கு, சுந்தரியம்மணிய பார்த்ததும் கட்டிக்கிட ஆசை வந்திடுச்சு. ஜமீன் பரம்பரை இல்லையா, அப்பவே கண்ணாலம் பேச்சு வரைக்கும் வந்துட்டாங்க… அவக குடும்பத்தில ரெண்டு மூனு சம்சாரம் கட்டிக்கிறதெல்லாம் அப்போ சகஜம் வேற,
இந்த விசயம் தெரிஞ்சதும் பெரியநாயகி அம்மணி சாமி ஆடிடுச்சு. அவங்களுக்கு புருசன பங்கு போட்டுக்க துளியும் சம்மதம் இல்ல. ரெண்டு பேருக்கும் வாய் பேச்சு பெருசாகி கைகலப்பு வரை போயிட்டுது… அன்னிக்கு நடு ராத்திரி வரைக்கும் அவங்க அறையில சண்ட ஓயாம கேட்டுகிட்டு இருந்துச்சுங்க…
விடிஞ்சு பார்த்தா பெரியநாயகி அம்மணி அரண்மனையில இல்ல. ஊர்ல ஏதேதோ பேசிக்கிட்டாங்க, ஆனா பெரியய்யா எதுக்கும் மூச்சு வுடல… சத்தமில்லாம ரெண்டாம் கண்ணாலம் முடிச்சுக்கிட்டாருங்க” பட்டம்மா சொல்லி முடித்தார்.
“அவங்க… பெரியநாயகி அவங்க கேரக்டர் எப்படி?”
“நல்ல குணவதிங்க. குத்தங்குறைன்னு ஒன்னும் சொல்ல முடியாது. அப்படி பட்டவங்கள காணோம்னு தெரிஞ்சதும் ஏதேதோ நாக்குமேல பல்ல போட்டு பேச ஆரம்பிச்சுட்டாங்க… நான் தெரியாமதான் கேக்குறேன், ஓடிபோறவக யாராவது பெத்த புள்ளையையுமா கூட்டிட்டு போவாங்க?”
“ஓ அவங்களுக்கு குழந்தைங்க இருக்காங்களா?”
“இங்க இருந்து போகும் போது நாலு வயசு பையன் ஒருத்தன் இருந்தாங்க… ம்ம்” என்று பெருமூச்செறிந்தார்.
“அவங்களோட ஊர் பேரு என்ன?”
“அது மதுர பக்கமுங்க, ஊரு பேரு சரியா நினவுல இல்லிங்க” என்றார்.
மேலும் சில விவரங்களை விசாரித்து கொண்டு அங்கிருந்து புறப்பட்டார் துரைசாமி.
****
நிஜம் தேடி நகரும்…