நீயில்லை நிஜமில்லை 17

IMG-20200630-WA0009

நீயில்லை நிஜமில்லை 17

நீயில்லை நிஜமில்லை 17

 

நீயும் நானும் இணைகையில்

நிழலும் நிஜமானது!

நீ எனை விடுத்து பிரிகையில்

நிஜமும் நிழலானது!

 

பெரியநாயகி குடும்ப வழியில் பகை ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இருந்ததால் விசாரணை அவர்கள் புறம் நகர்ந்தது.

 

அவரைப்பற்றிய தகவல்கள் தீவிரமாக விசாரிக்கப்பட்டன. அரண்மனை குடும்பத்து சொந்த பந்தங்கள், பெரிய தலைகளிடம் இதைப்பற்றி விசாரிக்க, அதிகமான மழுப்பல்களே பதிலாக வந்தன. 

 

ஊரில் விசாரிக்க பாதி பேருக்கு இதைப்பற்றி தெரியாமல் இருந்தது. தெரிந்திருந்தவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு கதைகளை கூறினர். 

 

“அந்தம்மா, அரண்மனை வைர, வைடூரிய நகையெல்லாம் எடுத்துக்கிட்டு ராத்திரியோட ராத்தியா ஓடி போச்சுங்க”

 

“ரெண்டாங் கண்ணால ஆசையில பெரியய்யா தானுங்க மூத்த தாரத்தையும் பெத்த புள்ளையும் கொன்னு தோட்டத்தில போதைச்சுட்டாருங்கலாம்”

 

“யாருகூடவோ ஓடி போயிட்டாங்கலாம்”

 

எல்லாமே ஒருவருக்கு ஒருவர் முரண்பட்ட பதில்களாக வந்தன.

 

நெடுமாறன் இங்கு தலையைப் பிய்த்துக் கொள்ள, பெரியநாயகி பிறந்த ஊரை விசாரித்து அறிந்த கையோடு துரைசாமியுடன் அரவிந்த் பயணமாகி இருந்தான்.

 

அதுவொரு நகரவாசம் முழுதாக படியாத பின்தங்கிய கிராமம். அங்கே விசாரித்து கொண்டு பெரிய வீட்டை அடைந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

 

சுற்றுகட்டு ஓட்டு வீடு அது. பழமையாகவும் சற்று பாழடைந்த‌ நிலையிலும் காட்சி தந்தது.

 

இவர்கள் பெரியநாயகி பற்றி கேட்க, அங்கிருந்த கணவன், மனைவி தெரியாது விழித்தனர்.

 

அவர்கள் குடும்பத்தின் மூத்த பெண்மணி முன் வந்து, “என் சின்ன மாமனாரோட பொண்ணு தான் அவங்க” என்றவர் உறவு முறையை அவர்களுக்கு விளக்கினார்.

 

“என் மாமனாருக்கு மூனு பசங்க, என் வீட்டுகாரரு, ரெண்டு பொண்ணுங்க, அவரோட தம்பிக்கு ஒத்த பொண்ணு பெரியநாயகி மட்டுந்தேன். 

 

அவங்க அப்பா, அம்மா ரெண்டு பேரும் கிணறு வெட்டும் போது மண்ணு சரிஞ்சு புதைஞ்சு போயிட்டாங்களாம். அதுக்கப்புறம் தம்பி பொண்ண எங்க மாமனாரு தான் வளத்து கட்டி கொடுத்தாராம்”

 

“பெரியநாயகி அவங்க இங்க வரவே இல்லயா?” அரவிந்த் கேட்க,

 

“அப்ப ஏதோ புருசன் கூட சண்டைன்னு இங்க வந்தாங்க… நான் அப்ப கல்யாணம் முடிஞ்ச புதுசு, எங்க மாமியாருக்கு அவங்க வந்ததுல இஷ்டமில்ல… 

 

‘ஒழுங்கா புருசன அனுசருச்சு வாழற வழிய பாரு, எங்க சொத்துல பங்குக்கு வந்து நிக்காத, உன்ன வளத்து கண்ணாலம் முடிச்சதோட எங்க கடமை முடிஞ்சது’னு நிறைய சத்தம் போட்டுச்சு… மறுநாளே அவங்க கிளம்பிட்டாங்க” என்று கொஞ்சம் கொஞ்சமாக நினைவுப்படுத்தி சொன்னார்.

 

“அவங்க எங்க போனாங்க?” துரைசாமி விசாரிக்க,

 

“சரியா தெரியல, அவங்க தனியா எங்கோ இருக்காங்கனு எங்க வூட்டுகாரு சொன்னாரு. அதுக்கு அப்புறம் எங்களுக்கும் அவங்களுக்கும் எந்த உறவும் இல்லாம போச்சு” என்று முடித்துக் கொண்டார்.

 

அரவிந்த், துரைசாமி அடுத்தென்ன என்று யோசித்தனர்.

 

“ஏன் இப்ப வந்து அவங்களை பத்தி விசாரிக்கறீங்க? அவக யாரும் உசிரோட இல்லிங்கலே!”

 

“என்ன?” விசாரிக்க வந்த இருவருக்கும் அதிர்ச்சி.

 

“கொள்ள காரங்க ராத்திரியோட ராத்திரியா அவங்க குடும்பத்தை வெட்டி சாச்சிட்டு போயிட்டாங்க, ஒத்த உசுரு கூட தங்கல, என் வீட்டுகாரு தான் முறைக்கு போய் எல்லா ஈம சடங்கும் செஞ்சுட்டு வந்தாரு, அடிக்கடி அவங்க நினப்பு வரும்போது சொல்லி புலம்புவாரு… இப்ப அவரும் எங்ககூட இல்லாம போய் சேந்துட்டாரு” அவர் வருத்தமாக பேசினார்.

 

“கொள்ளக்காரங்களா?” துரைசாமி கேட்க,

 

“ஆமாங்க, அப்போ இந்த பக்கம் நிறைய கொள்ளக்காரங்க தொல்லை இருந்ததுங்க, ராத்திரி வேளையில வூட்டுக்குள்ள புகுந்து எல்லாரையும் அறுத்து போட்டு நகை, பணமெல்லாம் கொள்ள அடிச்சிட்டு போயிடுவாங்க… அப்போ நிறைய குடும்பங்க அப்படி அழிஞ்சு போச்சுங்க”

 

“அவங்க குடும்பத்தை பத்தி தெரிஞ்சவங்க, நெருக்கமானவங்க வேற யாராவது இருக்காங்களா?” 

 

“எங்க குடும்பத்துக்கும் அவங்களுக்கும் ஒட்டுறவு எதுவும் இருந்தது இல்லங்க. அதால எனக்கும் அவிங்களைப் பத்தி அதிகம் தெரியாதுங்க” 

 

“அவங்க எந்த ஊர்ல‌ தங்கி இருந்தாங்கன்னு யோசிச்சு சொல்லுங்க”

 

அவர் யோசித்துவிட்டு நினைவில்லை என்றார்.

 

அரவிந்திற்கு இதெல்லாம் வீண் என்று தோன்றியது. ‘இவர்கள் இல்லை என்றால், வேறு யார் அஞ்சலியை குறி வைப்பது?’ இதே கேள்வி திரும்ப திரும்ப சுற்ற அவனுக்கு தலைவலி தான் மிச்சமானது.

 

****

 

அரவிந்தை விட அதிகமான மண்டை குடைச்சலில் இருந்தாள் அர்ச்சனா. 

 

இதோ இரண்டு வாரங்கள் கடந்து விட்டன அரவிந்தோடு பேசி. அவனில்லாத நாட்களை கடத்துவது பெரும் பாரமாகி போனது அவளுக்கு.

 

காலை ‘குட்மார்னிங்’ முதல் இரவு ‘குட்நைட்’ வரை, அவ்வப்போது ‘சாப்பிட்டியா?’, ‘என்ன செய்ற?’, ‘பத்திரமா போ’, ‘ரூம் போய் சேர்ந்துட்டியா?’ என்று அவனால் பேச முடியாத சூழ்நிலை இருந்தாலும் இப்படியான குறுஞ்செய்திகளில் இவள் மீதான அக்கறையை வெளிப்படுத்தி விடுவான்.

 

இந்த இரண்டு வாரங்களாக, அவன் ‘குட்மார்னிங்’ இன்றி இவள் காலையில் விடியல் இல்லை! ‘சாப்பிட்டியா’ விசாரிப்பு இன்றி, உணவு தொண்டைக்குள் இறங்கவில்லை! ‘பத்திரமா போ’ அக்கறையின்றி இவளின் பயணம் முழுவதும் அவனுக்கான தேடல்! ‘என்ன செய்ற’ வெற்று கேள்விகள் இன்றி ஏதும் செய்ய இயலாத நிலை! அவன் ‘குட்நைட்’ இன்றி இவளுக்கு உறக்கமும் சேரவில்லை!

 

இந்த சில மாதங்களுக்குள் தன்னை இத்தனை ஆக்கிரமித்து இருக்கிறானா அவன்? என்று வியப்பாக எண்ணி வருந்தினாள்.

 

வருட கணக்கில் தனிமை வனவாசம் ஏற்றிருக்கிறாள் தான். அதொன்றும் புதிதில்லை. அவளுக்கு பழகி போனதும் கூட. 

 

ஆனால் இந்த சில‌ மாதங்களில் அவள் தனிமையை முழுமையாக விரட்டி இருந்தான் அரவிந்த்.

 

அறியாத பேச்சுகளோ, தெரியாத வார்த்தைகளோ வெகு சிறிதான நேரத்தில் கூட, எதை எதையோ வளவளத்துக் கொண்டிருப்பான். அதிசயம் என்னவென்றால் அவன் ஓயாத பேச்சு எப்போதும் சலிப்பதில்லை இவளுக்கு.

 

தன் விரலில் இருந்த மோதிரத்தை சுழற்றியப்படி அவன் நினைவில் இவளும் சுழன்றுக் கொண்டிருந்தாள்.

 

அந்த மோதிரம் அரவிந்தின் காதல் பரிசு. ஆங்கில எழுத்தில் இரண்டு A ஒன்றாக சேர்ந்து, ஒருபுறம் இதய வளைவு போல் அமைந்திருந்தது. அவனையும் அவளையும் குறிப்பதாக.

 

ஆனால் அன்று அவன் சிதறவிட்ட வார்த்தைகள்… இப்போது நினைவில் வரவும் இவளின் முகம் கசங்கியது.

 

பெண்மையின் நுட்பமான தனிப்பட்ட உணர்வுகளைக் கொச்சைப்படுத்தினால் எந்த பெண்ணாலும் பொறுத்துக் கொள்ள முடியாது. இவளாலும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அந்த ஆத்திரத்தில் தான் அவனை அறைந்திருந்தாள். 

 

அடித்தப் பிறகே அவனை அறைந்து விட்டதை உணர்ந்தாள். இருந்தும் மனம் பொறுக்கவில்லை. அவனுக்கு பதிலடி தந்துவிட்டே வந்திருந்திருந்தாள்.

 

இப்போது யோசிக்கும் போது, என்ன இருந்தாலும் அரவிந்தை அடித்தது தவறென்று தான் தோன்றியது. அவன் மீதும் தவறு இருக்கிறது தான். அதை உணர்ந்து தன்னிடம் மன்னிப்பு கோரி வருவான் என்று எதிர்ப் பார்த்தாள்.

 

அர்ச்சனாவின் எதிர்பார்ப்பு ஒவ்வொரு நாளும் ஏமாற்றத்திலேயே முடிகிறது! 

 

இதற்கிடையே அஞ்சலி உடனான அவனின் இருப்பு வேறு இவளுக்குள் மரமரத்துக் கொண்டிருந்தது.

 

அவனுக்கான காத்திருப்புகள்! 

அவனுக்கான கோபங்கள்!

அவனுக்கான எதிர்ப்பார்புகள்! அவனுக்கான தேடல்கள்! 

அவனுக்கான பரிதவிப்புகள்! என இவளுக்கான உலகம் அவனுக்காக என மாறிக் கொண்டிருந்தது.

 

ஊடலில் காதல் கூடுமாம் இவளுக்குள்ளும் காதல் கூடத்தான் செய்தது…

 

****

 

விசாரணை என்று வந்தவர்கள் வெறுங்கையோடு ஊர் திரும்பி கொண்டிருந்தனர்.

 

“காரணமே இல்லாம யாராவது இப்படி கொலைவெறி பிடிச்சு அலைவாங்களா? இவன் ஏதாவது சைகோ கொலைக்காரனா இருப்பானோ?” அரவிந்த் புலம்ப,

 

“சைகோ கொலைக்காரனா இருக்க வாய்ப்பில்ல அரவிந்த். அவனுக்கு ஏதோவொரு பலமான காரணம் இருக்கும். கண்டுபிடிச்சிடலாம் டோன்ட் வொர்ரி மேன்” துரைசாமி நம்பிக்கை சொன்னார்.

 

இருவரும் காரில் ஊர் திரும்பி கொண்டிருந்தனர். கூடவே வழக்கை பற்றிய இவர்கள் அலசலும் போய்க் கொண்டிருந்தது.

 

“வொர்ரி பண்ணாம எப்படி இருக்க முடியும்? பயமா இருக்கு சார்… பாவம் அஞ்சலி… கார்ல, சாப்பாட்ல, இப்ப ரூம் வரை வந்துட்டான்… ஆனா அவனை பிடிக்க முடியல, ஏன், அவனை பத்தி ஒரு சின்ன துப்பு கூட கிடைக்கல” அரவிந்த் சோர்ந்து சொல்ல,

 

“எவ்வளவு திறமையான குற்றவாளியா இருந்தாலும் நிச்சயம் ஏதோவொரு தடத்தை அவன் விட்டுட்டு போய் தான் இருப்பான்… அதை நாம கண்டு பிடிக்கிறதல தான் கேஸோட வெற்றி இருக்குனு எங்க டிபார்ட்மெண்ட்ல அடிக்கடி சொல்லுவாங்க” துரைசாமி நேர்மறையாக பேசினார்.

 

“ஒன்னுல்ல நாலு இன்ஸிடன்ட் நடந்திருக்கு இதுவரைக்கும் எந்த துப்பும் கிடைக்கலையே?” 

 

“துப்பு கிடைக்கல தான். ஆனா, அந்த கொலைகாரனோட வீக்னெஸ் தெளிவா தெரியுதில்ல” துரைசாமி சொல்லவும்,

 

“வீக்னெஸா?” அரவிந்த் வியந்து கேட்டான்.

 

அவர் சிறு புன்னகையுடன், “அவன் தொழிலுக்கு புதுசா இருக்கனும், எந்த கூலிப்படை ஆட்களையும் இவன் சேர்த்துக்கல, தனி ஆளா செய்யனும்னு நினைக்கிறான், அதால தான் இத்தனை முறை பிளான் போட்டும் எங்கேயோ மிஸ் பண்ணிறான்” என்றார்.

 

அவர் சொல்வது அரவிந்திற்கு புரிந்தது. அதற்கு மேல் ஏதும் புரியவில்லை.

 

“கடையில போய் ஒரு சிகரெட் வாங்கற மாதிரி இப்பெல்லாம் கொலை செய்யறது அவ்வளவு ஈஸியா நடந்திட்டு இருக்கு. கொலை செய்யறதை குல தொழிலா வச்சிட்டு சுத்தற ஆட்கள் எல்லாம் இருக்காங்க, அதையெல்லாம் விட்டுட்டு இவன் நின்னு செய்யறான்னா இவனுக்குள்ள அத்தனை கோபம்

இருக்கனும்” என்று துரைசாமி மேலும் விளக்க,

 

“நீங்களே அவனுக்கு ஐடியா போட்டு கொடுப்பீங்க போல இருக்கே சார்” அரவிந்த் நொந்தபடி சொல்ல, சத்தமாக சிரித்து விட்டார்.

 

“ஓடியோடி துரத்தி துரத்தி திருடனங்களையும், கொலைக்காரங்களையும் பிடிக்கனும், பெரிய கேஸெல்லாம் இன்வெஸ்டிகேட் பண்ணி பெரிய பேரு வாங்கனும்னு கனவோட தான் இந்த காக்கிச்சட்டைய போட்டேன். ஆனா இந்த மூனு வருசமா பெட்டி கேஸ் தவிர பெருசா எதுவும் மாட்டல. இந்த கேஸ் எனக்கு சவாலா தான் இருக்கு… பாரேன் அரவிந்த் அவனே நம்ம கைல வந்து சிக்குவான்” என்றார் தோரணையாக.

 

“அவன் சிக்கறது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம், அஞ்சலிக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது” என்ற அரவிந்த் நினைவு வந்தவனாக, “பெரியநாயகி, அவங்களோட பையன் இறந்துட்டாங்கன்னா, அவங்களோட பையன்னு பொய் சொல்லி காதம்பரி ஆன்ட்டி கிட்ட பிரச்சனை பண்ணவன் யாரா இருக்கும்?” என்று கேட்டான்.

 

“அவனை புடிச்சா இந்த கேள்விக்கும் பதில் கிடைக்கும்” என்றார் சாதாரணமாக.

 

அரவிந்த் பெருமூச்செறிந்தான்.

இந்த வழக்கின் போக்கு அந்த ஆண்மகனின் பதட்டத்தை கூட்டிக்கொண்டு இருந்தது. தன் பார்வையை ஜன்னல் வழி திருப்பினான். தூர வானில் மேகங்கள் கலந்தும் பிரிந்தும் அழகு காட்டிக் கொண்டிருந்தன.

 

அக்காட்சி அர்ச்சனா உடனான இவன் கூடலையும் இப்போதைய ஊடலையும் நினைவுபடுத்துவதாய்.

 

படபடத்த அவன் மனதிற்குள் மெதுமெதுவாக இதம் பரப்பியது அவன் சனாவின் நினைவுகள்.

 

விளையாட்டு போல இரு வாரங்கள் ஓடி இருந்தன. அர்ச்சனாவை பார்க்கவும் இல்லை பேசவும் இல்லை.

 

அன்றைய நினைவில் அறை வாங்கிய தன் கன்னத்தை தடவிக் கொடுத்துக் கொண்டான். இப்போது இவனுக்கு புரிந்து தான் இருந்தது. அன்று தான் வரைமுறையற்று பேசியது தவறென்று.

 

பிறந்த நாளென்று வாழ்த்த வந்தவளை நோகடித்து அனுப்பி விட்டோம் என்று இவன் மனம் நொந்து போகத்தான் செய்தது.

 

ஆனாலும் அவளிடம் சென்று மன்னிப்பு கேட்கவில்லை இவன். இப்போதைக்கு சனாவை விட்டு தள்ளி இருப்பதே நல்லது என தோன்றியது இவனுக்கு.

 

சனாவின் அருகாமையில் இவனால் வேறெதிலும் கவனம் செலுத்த முடிவதில்லை என்பதை உணர்ந்தவன், அஞ்சலிக்கு இந்த ஆபத்து விலகும் வரை தன் மனதை கட்டுக்குள் கொண்டு வர முயன்றான்.

 

தன் கைக்கடிகாரத்தை ஒருமுறை வருடி தந்தான். தன்னால் சிரித்து கொண்டான்.

 

இது அர்ச்சனாவின் காதல் பரிசு. வாட்சை இவன் கையில் கட்டி விட்டு, ‘இந்த பெரிய முள்ளோட ஒவ்வொரு நகர்விலும் உனக்கு என் நினப்பு மட்டும் தான் வரனும்’ என்று சொல்லி இருந்தாள்.

 

அதற்கு அரவிந்த், ‘அப்ப பேட்டரி காலியாகி வாட்ச் நின்னு போச்சுனா, உன்ன நான் நினைக்க தேவையில்லையா?” என்று வம்பு பேசி, அவளின் முறைப்பை தாராளமாக பெற்றுக் கொண்டிருந்தான்.

 

அந்த நினைவுகள் வர, இப்போதும் சிரித்தபடி கடிகாரத்தை மறுபடி தடவிக் கொடுத்தான்.

 

வாட்சை மறுபடி மறுபடி பார்த்து சிரித்து அதை தடவி வேறு கொடுக்கும் அரவிந்தின் விசித்திரமான நடவடிக்கைகளைக் கவனித்த துரைசாமி, சற்று மிரண்டவராக அவனை விட்டு தள்ளி கதவோரமாக ஒட்டி அமர்ந்துக் கொண்டார்.

 

இவனுக்கு பிடித்திருப்பது காதல் பித்து என்று, அந்த கட்டை பிரம்மச்சாரி துரைசாமிக்கு தெரியவில்லை பாவம்…

 

****

 

நிஜம் தேடி நகரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!