நீயில்லை நிஜமில்லை 18

IMG-20200630-WA0009

நீயில்லை நிஜமில்லை 18

 

உனக்காக நான்

இல்லாமல் போனால்,

நானும்

நிஜமற்று போவேன்!

 

அரண்மனையின் கூடத்தில் வேத மந்திரங்கள் ஒலிக்க, வேள்வி நடைப்பெற்றுக் கொண்டிருந்தன.

 

பேத்தியின் நீண்ட ஆயுளுக்காக திரிபுரசுந்தரி இந்த யாகத்திற்கு ஏற்பாடு செய்து இருந்தார். விடியற்காலை தொடங்கி மதியம் வரை நீண்டன சடங்குகள். ஹோம குண்டம் முன்பு அஞ்சலி பதுமை போல அமர்த்தப் பட்டிருந்தாள்.

 

அஞ்சலியின் உயிர் பயத்தை போக்கவும், அவளின் ஆயுள்‌ நீடிக்க வேண்டியும், எதிரிகளிடமிருந்து அவளை காப்பாற்ற வேண்டியும் குடும்பத்தில் நிம்மதி சேரவும் இந்த யாகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

 

எங்குமே புகை மயம்,‌ எப்போது முடியும் இந்த யாகமும் வேள்வியும் என்று சலிப்பு தட்டியது அரவிந்திற்கு. அங்கிருந்து நகர முயன்றவனையும் இழுத்து பிடித்து தன் பக்கத்தில் அமர வைத்திருந்தார் பிரபாகர்.

 

“இந்த ஹோமம், வேள்வி எல்லாம் நீங்களுமா மாம்ஸ்‌ நம்பறீங்க? இப்படி புரியாத மந்திரம் சொல்லி வீடு முழுக்க புகை போட்டா எல்லா பிரச்சனையும் தீர்ந்திடுமா?” அரவிந்த் அலுத்துக் கொள்ள,

 

“இது அத்தையோட நம்பிக்கை, நீ குறை சொல்லாம அமைதியா உக்காரு” என்று அவனை கடிந்தார் பிரபாகர்.

 

“எவ்வளவு நேரம் மாம்ஸ் இப்படியே உக்கார்ந்து இருக்கிறது செம போர், நான் போறேன் போங்க” என்று எழுந்தவனை அவர் மறுபடி இழுத்து அமர வைத்து, “யாகம்ன்னா அர்பணிக்கிறது. கடவுளுக்கு புனிதமான பொருட்களை அர்பணிச்சா நம்மோட வேண்டுதல்களை இறைவன் நிறைவேத்துவாருன்ற நம்பிக்கை” என்று விளக்கம் தந்தார்.

 

“நாம இதெல்லாம் அர்ப்பணிச்சா தான் அவர் நம்ம கஷ்டத்தை தீர்ப்பார்னா அவருக்கு பேர் கடவுளே இல்ல மாம்ஸ்” என்று வியாக்கியானம் பேசினான் அவன்.

 

அவர்கள் சலசலப்பில் காதம்பரி கவனம் இவனிடம் திரும்பியது. அவரும் பிரபாகர் அருகில் தான் அமர்ந்து இருந்தார்.

 

“அரவிந்த், ஒலியும் ஒளியும் ஒருங்கிணைக்கிற நிகழ்வு தான் யாகம், ஹோமம் எல்லாம். அதனால மனித உள்ளத்துக்கும் உடலுக்கும் நன்மை உண்டாகுது, சுற்றுப்புற சூழ்நிலையிலும் நேர்மறை அலைகளை உருவாக்குது” என்றார்.

 

“ஆன்ட்டி இவ்ளோ புகை போட்டா பொலியூஷன் தான் உருவாகும்” என்று கடுப்படிக்க,

 

“நாம காயத்ரி மந்திரம் உச்சரிக்கும் போது மட்டும் ஒரு நொடிக்கு 1,10,000 ஒலி அலைகள் ஏற்படுவதா, அமெரிக்க அறிவியலாளர் ஹவார்ட் ஸ்டெயின்குல் (Dr.Howard steingull) ஆராய்ந்து சொல்லி இருக்கார். அதை உச்சரிக்கும் போது ஏற்படும் விளைவுகளையும் விவரிச்சு இருக்கார். இது போல ஒவ்வொரு மந்திரமும் தனித்துவமான பாசிட்டிவ் சௌன்ட் வேவ்ஸ்ஸ உருவாக்கும்…” காதம்பரி அவனுக்கு புரியவைக்க முயல,

 

“என்னை தூக்கி வளர்த்த பிரபா மாம்ஸ் சொல்லியே நான் கேக்க மாட்டேன், எங்கேயோ இருக்க அமெரிக்கக்காரன் சொன்னா கேக்கனுமாக்கும், போங்க ஆன்ட்டி” அரவிந்த் வாயடித்தவன்,

 

“கடவுள், யாகம், பூஜை, சடங்கு எல்லாம் நம்பிக்கை சார்ந்த விசயங்கள் அரவிந்தா, யாரோட நம்பிக்கையையும் உதாசீனப்படுத்தறது ரொம்ப தவறான போக்கு. ஒழுங்கா உக்கார்ந்து பூஜையை கவனி, உன் ஃப்ரண்ட் அஞ்சலிக்காக வேண்டிக்க மாட்டியா? தப்பி தவறி கூட அஞ்சுக்கு ஏதாவது ஆச்சுனா… நாங்க உயிரோட இருக்கிறதுல அர்த்தமே இல்ல…” என்று காதம்பரி உடைந்து சொல்ல, 

 

இறும்பு பெண்மணியாக நிமிர்ந்து நிற்கும் அவரின் கலக்கம் இவனையும் வேதனைப்படுத்தியது. 

 

“மாம்ஸ் உங்க காதும்மாக்கு, என்மேல இருந்த கோபமெல்லாம் போச்சு போல” என்று கிசுகிசுத்தான்.

 

“அதெல்லாம் எப்பவோ போயாச்சு” அவர் சொல்ல, “எப்படி போச்சு?” அவன் விடாமல் கேட்டான்.

 

“நீயும் அர்ச்சனாவும் லவ் பண்றத பத்தி சொன்னேன். அதனால காதும்மா கோபம் போச்சு”

 

“ஓஹோ… முன்ன எதுக்காக என்மேல கோபமா இருந்தாங்க?” அரவிந்த் மேலும் கேள்வி கேட்க,

 

“டேய் அஞ்சலிக்காக என்னை பிராத்தனை பண்ண விடுடா” அவர் வேண்ட, இவனும் பேச்சை குறைத்துவிட்டு, ‘அஞ்சலிக்கு எந்த ஆபத்தும் நெருங்கக் கூடாது’ என்று வேண்டிக் கொண்டான்.

 

இவனுக்கும் தெரியும், இந்த அரண்மனையின் உயிர்பு அஞ்சலியிடம் மட்டும் தான் இருக்கிறது என்று. 

 

நடந்த உண்மையை அரவிந்திடம் சொல்லாமல் மறைப்பது பிரபாகருக்கு உறுத்த தான் செய்தது. எனினும் அரவிந்த், அஞ்சலி எதிர்காலம் பொருட்டு அதை தனக்குள்ளே விழுங்கிக் கொண்டார்.

 

****

 

யாகம் முடிந்து வரியவர்களுக்கு உணவும் உடையும் வழங்குதல் நலம் என்று புரோகிதர்கள் கூற, அதன்படி அருகிருந்த முதியோர் இல்லத்தில் இருப்பவர்களுக்கு உணவும் உடையையும் அஞ்சலி கையால் தானம் வழங்கப்பட்டது.

 

அந்த இல்லத்தில் தான் அர்ச்சனாவும் அஞ்சலியைப் பார்த்துவிட்டு வந்து பேசினாள் அடக்கிய கோபத்தோடு.

 

“நீங்க ஜெயிச்சீட்டீங்கல மேடம்…” அர்ச்சனாவின் குரலில் அஞ்சலி திரும்பினாள்.

 

“நீ இங்க என்ன செய்ற அர்ச்சனா?” அஞ்சலி அவளை இங்கு எதிர்பாராது கேட்க,

 

“நான் வழக்கமா வர இல்லம் தான் இது. நீங்க தான் புதுசா வந்து இருக்கீங்க” என்றாள் அர்ச்சனா.

 

“ஓ…” அஞ்சலி தலையசைத்து கொண்டாள்.

 

ஆனால் அர்ச்சனா அவளை விடுவதாக இல்லை. “நீங்க நினச்ச மாதிரியே என்னையும் அரவிந்தையும் பிரிச்சிட்டிங்க இல்ல…” அவள் கேட்க அஞ்சலி புரியாமல் பார்த்தாள்.

 

“என் காதலை பறிச்சுட்டு நீங்க மட்டும் சந்தோசமா வாழுங்க…”

 

“சும்மா உளறாத அர்ச்சனா, உனக்கும் அரவிந்துக்கும் ஏதாவது சண்டையா?”

 

“எதுவும் தெரியாத மாதிரி கேக்காதீங்க மேடம்… அன்னிக்கு என்னை எவ்வளவு கேவலமா பேச முடியுமோ அவ்வளவு மோசமா அவனை பேச வச்சது நீங்க தானே… என்னை மொத்தமா அவாய்ட் பண்ணிட்டான். அவனை பார்த்து கூட எத்தனை நாளாச்சு தெரியுமா?”

 

அஞ்சலிக்கு இதெல்லாம் புதிய‌ விசயங்கள். யோசனையோடு நெற்றி சுருங்க நின்றாள்.

 

“இல்ல அர்ச்சனா, எனக்கு எதுவும் தெரியாது”

 

“ஆனா உங்க பிளான் என்னனு எனக்கு தெரியும் மேடம். உங்க பின்னாடி ஒரு கொலைகாரன் சுத்தரமாதிரி நீங்களே செட்டப் பண்ணிட்டு, அதைசொல்லியே அரவிந்த உங்க கூட இறுத்தி வச்சுட்டு இருக்கீங்க இல்ல… இந்த டிராமா எத்தனை நாள் போகும்னு நினைக்கிறீங்க?”

 

“நீ வீணா என்னை சந்தேகப்படுற அர்ச்சனா”

 

“எப்படி சந்தேகம் வராம இருக்கும்… என் காதலை விலை பேசினவங்க தான நீங்க”

 

“அது என் தப்பு தான்… ஏதோ நினச்சு செஞ்சுட்டேன்… அவனுக்கு எல்லாம் நீதான்னு அரவிந்த் சொன்னதுக்கு அப்புறம்… நான் உங்களுக்கு குறுக்க வரது முறையில்ல. வரவும் மாட்டேன்”

 

அவள் சொல்வதை நம்ப முடியாமல் அர்ச்சனா வியந்து பார்க்க, “அவனுக்கு கோபத்தை எல்லாம் பிடிச்சு வைக்க தெரியாது. சீக்கிரம் உன்னதேடி வந்து பேசிடுவான் பாரு…” என்றாள்.

 

“அரவிந்த் ரொம்ப எமோஷனல் டைப், சின்ன விசயத்துக்கு எல்லாம் சீக்கிரம் உடைஞ்சு போயிடுவான்… அவனை பத்திரமா பார்த்துக்கோ அர்ச்சனா… இனி அவனுக்கு எல்லாம் நீ மட்டும் தான்…” என்று அஞ்சலி மேலும் சொல்ல, அர்ச்சனா அவளை வித்தியாசமாக பார்த்தாள். 

 

“உங்களுக்கு உண்மையிலேயே அரவிந்த் மேல அக்கறை இருந்தா,‌ இப்படி அவன ஆபத்துல சிக்க வச்சு வேடிக்கை பார்ப்பீங்களா மேடம்?”

 

“…”

 

“உங்களை காப்பாத்தறேன்னு அவனுக்கு ஏதாவது ஆபத்தாகிடுமோனு நான் தினம் தினம் தவிச்சிட்டு இருக்கேன்” என்றவள், 

 

“அவனை முழுசா எனக்கு கொடுத்துடுங்க… எனக்கும் அவன் மட்டும் தான் எல்லாம்” என்று அர்ச்சனா தவிப்பாகச் சொல்ல,

 

அஞ்சலிக்கு அவள் சொல்வது புரிந்தது. அரவிந்திடம் பேச வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள்.

 

****

 

அஞ்சலி அறையின் பால்கனி மாடத்தின் அருகே இருந்த மரமல்லி பூமரம் வெட்டி வீழ்த்தப்பட்டது. இந்த மரத்தின் வழியே தான் அந்த மர்ம மனிதன் அஞ்சலி அறைக்குள் நுழைந்திருக்கிறான் என்பதால் அதற்கு ஏற்பட்ட முடிவு இது.

 

தன் மனதுக்கு நெருக்கமான அந்த மரத்தின் வீழ்ச்சியை வெறுமையாக பார்த்து நின்றாள் அஞ்சலி. 

 

அந்த கொலைக்காரன் இவளை குறிவைத்து தப்பிய ஒவ்வொரு முறையும் ஏதோவொரு உயிர் பலியாகிப் போகிறது. இந்த முறை இந்த மரம்… என்று எண்ணும் போதே அவள் மனதின் கனம் கூடியது. 

 

மரமும் உயிர் தானே… பூமிக்கே முதல் உயிரான உயிர்.

 

இந்த மண்ணில் முதலில் உயிர்விட்டவை இந்த தாவர இனம் தானே. எல்லா உயிரினங்களுக்கும் மூத்த முதல் இனம். அதனால் தான் இந்த பாழ்பட்ட மனித இனம் அவற்றை வீழ்த்தி, இயற்கையையும் வீழ்த்தி சுயநலமாக சுகித்துக் கொள்கிறது. ஆதாரத்தை அழித்து தான் மட்டும் வாழ முடியும் என்று மூடதனமான எண்ணத்தில்.

 

மரக்கிளைகளை அப்புறப்படுத்த வேலையாட்களை ஏவி கொண்டு இருந்தவன்,

 

“அரவிந்த்…” என்ற அஞ்சலியின் விளிப்பில் திரும்பினான். வெகு நாட்களுக்கு பிறகான அவளின் விளிப்பு இது.

 

“சொல்லு அஞ்சலி” அவளிடம் வந்து நின்றான்.

 

வேலையாட்களை விட்டு சற்று தள்ளி நடந்தவள், “அர்ச்சனாவுக்கும் உனக்கும் என்ன பிரச்சனை?” என்று நேராக கேட்க,

அரவிந்திடம் பதில் இல்லை. மௌனமாக நின்றான்.

 

“எந்த பிரச்சனையா இருந்தாலும் பேசி தீர்த்துக்க, இப்படி பேசாம, பார்க்காம அவாய்ட் பண்ணாத, நேசிக்கிறவங்க நம்மை விட்டு விலகி போனா ரொம்ப வலிக்கும்… அந்த வலிய உன்ன நேசிக்கிறவங்களுக்கு கொடுக்காத, நீயும் அனுபவிக்காத…” 

 

“நான் அவளை அவாய்ட் பண்றேன்னு யாரு சொன்னது?”

 

“அர்ச்சனா தான் சொன்னா, நான் உங்களை பிரிச்சிடுவேன்னு அவ ரொம்ப பயப்படுறா போல, இதுல நீ வேற சண்டைபோட்டு பேசாம இருக்க, 

அர்ச்சனாகிட்ட போய் சாரி கேளு. அவளை சமாதானப்படுத்து. கிளம்பி போ” என்று சொன்னாள்.

 

அவளை வித்தியாசமாக பார்த்து நின்றவன், “சனாகிட்ட சாரி கேக்கனும் தான், ஆனா இப்ப இல்ல அஞ்சலி. கொஞ்ச நாள் போகட்டும்… முதல்ல இந்த பிரச்சனை எல்லாம் தீரட்டும்” என்றான்.

 

“என்னோட பிரச்சனைக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல… அர்ச்சனா தான் உனக்கு முக்கியம்னா அவளுக்கு உன்ன முழுசா கொடு… எனக்காக உன் காதலை அவாய்ட் பண்றது சுத்த பைத்தியக்காரத்தனம். 

 

இனி எனக்கு எதுவும் ஆகாது. நானும் இங்கிருந்து எங்கியாவது தூர போக முடிவு பண்ணி இருக்கேன். என்னைப்பத்தி கவலைய விட்டு, நீ உன் லைஃப் ஸ்டார்ட் பண்ற வழியைப் பாரு” என்றாள்.

 

“எங்க போக போற அஞ்சலி?”

 

“உங்க யாருக்கும் தெரியாத இடத்துக்கு, யாரும் என்னை நெருங்க முடியாத இடத்துக்கு…” என்றவள், 

 

“அர்ச்சனாவ கஷ்டப்படுத்தாதடா, ரொம்ப நல்ல பொண்ணு, புத்திசாலி, தைரியசாலி… பணம், வீடு, வேலையவிட நீதான் முக்கியம்னு எவ்ளோ போல்டா பேசினா தெரியுமா?  உன்னோட சந்தோசத்தையும் வாழ்க்கையையும் பத்திரமா காப்பாத்திக்கோ… என்னை பத்தின கவலைய விடு… பை அரவிந்த்” என்று திரும்பி நடந்து சென்று விட்டாள்.

 

அரவிந்த் சில நொடிகள் விக்கித்து நின்று விட்டான். 

 

****

 

நிஜம் தேடி நகரும்…