நீயில்லை நிஜமில்லை 19(1)

IMG-20200630-WA0009

நீயில்லை நிஜமில்லை 19(1)

 

நீயாக வேண்டாம்!

நிஜமாகவும் வேண்டாம்!

நாமாக வந்திடு!

என்னுள்ளே உறைந்திடு!

 

“ஒருதடவ சொன்னா புரியாதா பா உனக்கு, இங்க நிக்காம போயிடு…” வீட்டு உரிமையாளரின் குரல் கேட்டு, என்ன பிரச்சனை என்று தன் அறை ஜன்னலில் இருந்து எட்டி பார்த்த அர்ச்சனா, அங்கே அரவிந்த் அவருடன் வாதாடிக் கொண்டு இருப்பதை கவனித்து  வேகமாக கீழே இறங்கி வந்து நின்றாள்.

 

“என்னாச்சு சார்?” அவள் மூச்சிறைத்தபடி கேட்க,

 

“ஏம்மா அர்ச்சனா, இது வீடு, ஓட்டல் இல்ல. உன்னமாதிரி இங்க பத்து பொண்ணுங்க இருக்காங்க. இப்படி ஆம்பள பசங்க வீட்டு முன்ன வந்து நின்னா நல்லாவா இருக்கு…” 

 

“நான் அர்ச்சனாவ கல்யாணம் பண்ணிக்க போறவன்னு சொல்றேன் இல்ல, அதைவிட்டு அனாவசியமா பேசுறீங்க” அரவிந்தும் எதிர்வாதம் செய்ய,

 

“கொஞ்சம் அமைதியா இரு அரவிந்த்” என்றவள், “சாரி சார் இனி இப்படி நடக்காது” என்று உரிமையாளரிடம் கெஞ்ச,

 

“இதான் லாஸ்ட் வார்னிங், மறுபடி இப்படி நடந்தது நீ இங்க தங்க முடியாது சொல்லிட்டேன்” என்று அவர் உள்ளே சென்று விட்டார்.

 

இவள் சற்று ஆசுவாச மூச்செறிந்து, அரவிந்தை முறைத்து வைத்தாள்.

 

அவன் ‘ஈ’என்று இளித்து, “சாரி சனா” என்றான்.

 

“எதுக்கு இந்த சாரி?” கேட்டபடி அவள் விலகி நடக்க, அவனும் தன் வண்டியைத் தள்ளியபடி தொடர்ந்து கொண்டே, “அன்னிக்கு நான்… தப்பா பேசினதுக்கு” என்றான் சங்கடமாக.

 

“இந்த சாரி சொல்ல இத்தனை நாளாச்சா உனக்கு?” அவன் அன்று பேசியதை விடவும், இவ்வளவு நாட்கள் பேசாமல் இருந்தது தான் அவளுக்கு அதிகம் வருத்தம் தந்திருந்தது.

 

“நாம கொஞ்சம் விலகி இருக்கறது நல்லதுன்னு தோனுச்சு சனா… உன் பக்கத்துல நான் எல்லாத்தையும் மறந்து போயிறேன்… அன்னிக்கு ஏதோ நல்லநேரம் அஞ்சலிக்கு ஒன்னும் ஆகல, தப்பி தவறி ஏதாவது ஆகி இருந்தா… நான் எப்பவுமே என்னை மன்னிச்சு இருக்க மாட்டேன்…” அவன் சொல்ல,

 

அவனை ஆத்திரமாக முறைத்து, “என்னை அவாய்ட் பண்றதுக்கு காரணம் தேடுற இல்ல… அஞ்சலிக்கு ஒன்னும் ஆகல, இனிமேலும் எதுவும் ஆகாது. நீங்க தான் சும்மா பூச்சாண்டி காட்டிட்டு‌ இருக்கீங்க” இவள் படபடத்தாள்.

 

“அந்த பிரச்சனையோட தீவிரத்தை உனக்கு சொன்னாலும் புரியாது விடு…” என்றவன் அவளை மேலும் கீழும் பார்த்து, “நைட்டில கூட நீ‌ நல்லா தான் இருக்க டீ” என்று பேச்சை திசை மாற்றினான்.

 

விடுமுறை நாள் என்பதால் இலகுவான ஆடை அணிந்து இருந்தாள். இவனை பார்த்ததும் ஒரு துப்பட்டாவை மேலே போட்டு கொண்டு ஓடி வந்திருந்தாள். 

 

“அச்சோ நீ வெயிட் பண்ணு நான் டிரஸ் மாத்திட்டு வரேன்” என்று திரும்பியவள் நின்று, “வெயிட் பண்ணுவ இல்ல. இதோட விட்டு போயிட மாட்டியே…” அவனைச் சந்தேகமாகப் பார்த்துக் கேட்க, 

 

தன் இரு கைகளையும் தலைமேல் கூப்பியவன், “எம்மா தாயே, உன்கிட்ட பேசாம இருந்தது தப்பு தான். அதுக்காக உன்ன மறந்துட்டேன்னு அர்த்தம் இல்ல, சீக்கிரம் போய் ரெடியாகி வா” என்று சொல்ல, அவள் புன்னகைத்தபடி திரும்பி நடந்தாள்.

 

அர்ச்சனா எப்போதும் போல சேலையில் வர, அரவிந்த் எங்காவது வெளியே போகலாம் என்றான். மறுத்தவள், அரவிந்தின் வீட்டிற்கு போக வேண்டும் என்று பிடிவாதமாக கூற, அவனும் மறுக்கவில்லை. இருவரும் கலையாத மௌனத்தோடு அவன் வீட்டை வந்தடைந்தனர்.

 

அரவிந்த் வீட்டின் பூட்டைத் திறந்து உள்ளே வர, எப்போதும் போல தூய்மையாகவே இருந்தது வீடு.

 

அவள் வியந்த பார்வையைக் கவனித்து வீட்டையும் தோட்டத்தையும் பராமரிக்க ஆள் வைத்திருப்பதாக கூறினான்.

 

அர்ச்சனா தலையசைத்து விட்டு அமைதியாக அமர்ந்து கொண்டாள். அவளின் மனதில் அவனிடம் எப்படி கேட்பது என்ற தயக்கம்!

 

ஆனால் சொல்லாமல் இருக்க முடியாது, கேட்காமலும் விட முடியாது. இது இவளின் வாழ்க்கை. இதில் ஏனோதானோவென்று இருக்கக் கூடாது. 

 

“ஃபிரிட்ஜ்ல சாக்லேட் மட்டும் தான் இருக்கு சனா? உனக்கு ஓகே வா?” என்று ஒரு பெரிய இன்னட்டை(சாக்லேட்) அவளிடம் நீட்டினான். தானும் ஒன்றை எடுத்துக் கொண்டு அவளெதிரில் அமர்ந்துக் கொண்டான்.

 

இருவரும் இன்னட்டை பிரிக்கவில்லை. ருசிக்கவுமில்லை.

 

அர்ச்சனா, “நல்லா யோசிச்சு சொல்லு அரவிந்த்… நிஜமாவே உனக்கு என்னை பிடிச்சு இருக்கா?” என்று கேட்க, 

 

“நினைச்சேன், வீட்டுக்கு தான் போகனும்னு நீ சொல்லும் போதே இப்படி ஏதாவது பஞ்சாயத்து இழுக்கப்போறன்னு தோனுச்சு… இப்ப என்னடி உனக்கு என்மேல சந்தேகம்?” என்று நொந்தபடி அவனும் கேட்டான்.

 

“உனக்கு என்னைவிட அஞ்சலிய அதிகம் பிடிச்சு இருக்கு…”

 

“ஏய்…”

 

“நான் தப்பா சொல்ல வரல… இத்தனை நாள் யோசிச்சு நிதானமா தான் பேசறேன். என்ன இருந்தாலும் நாலு மாசம் பழகின என்மேல இருக்க காதலை விட, சின்ன வயசுல இருந்து பழகின அஞ்சலி மேல உனக்கு இருக்க அக்கறை பெருசா தான் இருக்கும்…‌ என் அறிவுக்கு இது புரியுது… ஆனா மனசுக்கு புரியல… நீ எனக்கு மட்டும் தான் இருக்கனும்னு சுயநலமா அடம்பிடிக்குது…” 

 

“சனா நான்…” அவன் ஏதோ சொல்ல முயல,

 

“என்னை முழுசா பேச விடு அரவிந்த்” என்றவள் தொடர்ந்தாள்.

 

“ஒருவேளை நான் உன் வாழ்க்கையில வராம இருந்தா, நிச்சயமா உன்னால அஞ்சலி காதலை மறுத்திருக்க முடியாதுன்னு இப்ப தோனுது… நான் தான் உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல வந்துட்டேனோன்னு… எனக்கு ஏதோபோல இருக்கு அரவிந்த்”

 

“சனா அப்படியெல்லாம் எதுவும் இல்ல…” அவன் மறுக்க,

 

“அப்படித்தான், இப்ப கூட அஞ்சலி சொல்லி தான் என்னை பார்க்க வந்திருக்க சரிதான?” அவள் கேட்க, இவனுக்கு எப்படி பதில் தருவது என்று தெரியவில்லை. 

 

அஞ்சலி சொல்லி தான் வந்தான் என்றாலும் சனாவை பார்க்க வேண்டும் என்ற அவன் ஆழ்மன உந்துதல் தான் முதற் காரணம். இதை இவளிடம் எப்படி விளக்குவது? அவன் திணறினான்.

 

“இல்ல சனா, நானும் உன்ன ரொம்ப மிஸ் பண்ணேன்”

 

“நீ வேணும்னே தான என்னை மிஸ் பண்ண ப்ச்…காரணம் சொல்ற பாரு, என்கூட இருந்தா நீ எல்லாத்தையும் மறந்து போறேன்னு… அப்படின்னா உனக்கு என்மேல வெறும் உடல் அளவுல தான் ஈர்ப்பு இருக்கா? மனசலவிள இல்லல”

 

“ஏய் என்ன பேச்சு இது?”

 

“உன்னால மட்டுமே, உனக்காக மட்டுமே எனக்குள்ள வர ஃபீலிங்க்ஸ்… அத… அதையும் கொச்சைப்படுத்தி சொல்லிட்ட இல்ல… நான் செத்துட்டேன் தெரியுமா?” அவள் குரல் உடைந்தது.

 

“அச்சோ அதை ஏதோ கோபத்துல பேசிட்டேன்.‌ இனி எப்பவும் அப்படி பேச மாட்டேன். பிராமிஸ் சனா, இந்த முறை மன்னிச்சிடு, மறந்திடு ப்ளீஸ்” என்று அவளருகே வந்தமர்ந்து, கலங்கிய அவள் முகத்தை தன் நெஞ்சோடு சேர்த்து கொண்டான்.

 

“இப்பவும் உன்ன ஹக் பண்ண பயமா இருக்கு, இதையும் நீ தப்பா பேசிடிவியோன்னு…” அவள் மேலும் உடைந்து கலங்க, இவனும் உடைந்து தான் போனான்.

 

“சாரி சாரி சாரி சனா… தப்பெல்லாம் என்னோடது தான்… உன்னயும் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்… எனக்கு உன்னோட ஹக் வேணும், கிஸ் வேணும்… எப்பவும் உன் லவ் வேணும்…” என்றவன் அணைப்பு இன்னும் இன்னும் இறுகியது.

 

சில நிமிடங்களில் தன்னை மீட்டு கொண்ட அர்ச்சனா அவனிடமிருந்து விலகிக் கொண்டாள். இவனுக்கு தான் அவளின் ஒதுக்கம் சஞ்சலம் கூட்டியது.

 

“நான் ஏதோ கோபத்துல முட்டாள்தனமா உளறினதை எல்லாம் சீரியஸா எடுத்துக்காத டி ப்ளீஸ்” அரவிந்த் கெஞ்சலோடு அவளை சமாதானம் செய்ய முயன்றான்.

 

“உன்மேல எப்படி இவ்வளவு காதல் வந்ததுன்னு எனக்கு தெரியல… ஆனா எதுக்காகவும் நான் உன்ன விட்டுதர மாட்டேன் அரவிந்த்… உன்ன விட்டு என்னால இருக்க முடியாது” அவள் தீவிரமாக சொல்லவும்,

 

அவள் மூக்கு நுனியைப் பிடித்து ஆட்டியவன், “உன்ன விட்டு நானும் போகமாட்டேன். கொஞ்சமாவது என்மேல நம்பிக்கை வச்சு தொலையேன் டி” என்றான்.

 

“நம்பிக்கை எல்லாம் நிறைய தான் இருக்கு… எனக்காக உன்கிட்ட ஒன்னு கேப்பேன் செய்வியா அரவிந்த்?” அர்ச்சனா தயங்கி கேட்க,

 

“இதென்ன புதுசா, என்ன செய்யனும்?”

 

“அஞ்சலி மேடம்காக நீ போக வேணாம்… அவங்களை பாதுகாக்க நிறைய பேர் இருக்காங்க. எனக்கு நீ மட்டும் தான் இருக்க. அவங்களை காப்பாத்தறேன்னு உனக்கு ஏதாவது ஆகிடுமோனு ரொம்ப பயமா இருக்கு” 

என்றவளை இவன் ஆழமாக பார்த்தான்.

 

“அஞ்சலியும், அவ ஃபேமிலியும் எனக்கு எவ்வளவு இம்ப்பார்டன்ட்னு மறுபடி மறுபடி சொல்லியும் நீ அதே இடத்துல நிக்கிற சனா… என்னை ஆசிரமத்தில இருந்து தத்தெடுத்தது அம்மா, அப்பா வழி சொந்தங்க யாருக்குமே பிடிக்கல, சொந்தத்துக்குள்ளயே குழந்தையை தத்தெடுக்க சொல்லி வற்புறுத்தி இருக்காங்க, அதுக்கு அம்மா, அப்பா சம்மதிக்கலன்ற கோவம் வேற… அதால மொத்தமா எங்களை ஒதுக்கிட்டாங்க, வெற்றிப்பா, சித்தும்மா எனக்கு சொந்தம்னு கை காட்டினது பிரபா மாம்ஸ், காதம்பரி ஆன்ட்டி, அஞ்சலிய தான். எங்களுக்கு எல்லா நேரத்திலயும் உதவியா இருந்தவங்க அவங்க. இப்ப அவங்க கஷ்டத்தில நான் துணையா நிக்கலனா… நான் மனுசனே கிடையாது”

அரவிந்த் உறுதியோடு பேச,

 

“அதுக்கெல்லாம் சேர்த்து தான் உங்க கம்பெனியில உன்னையே வேலைக்காரனா வச்சிருக்காங்களே போதாதா? உனக்கு அவங்க எவ்வளவு முக்கியமோ அதைவிட அதிகமா எனக்கு நீ முக்கியம் அரவிந்த்… நீ ஆபத்துல இருக்கும் போது என்னால எப்படி நிம்மதியா இருக்க முடியும்? ஏன் புரிஞ்சிக்க மாட்டேன்கிற… அந்த கார் ஆக்ஸிடென்ட்ல நீ உயிர் தப்பிச்சதே பெரிய விசயம்” அர்ச்சனாவும் ஆதங்கமாக பேசினாள்.

 

அரவிந்த் இப்போது இறங்கி வந்தான். “எனக்கு எதுவும் ஆகாது சனா, நான் எச்சரிக்கையா இருந்துப்பேன். அஞ்சலிக்கும் எதுவும் ஆக விடவும் மாட்டேன்… அந்த கொலைக்காரன் பத்தி முக்கியமான குலு கிடைச்சு இருக்கு. சீக்கிரமே போலீஸ் அவனை நெருங்கிடுவாங்க, அதுவரை நான் அவங்களுக்கு சப்போட்டா இருக்கனும்… ப்ளீஸ் நீ மறுக்காத, இதை தவிர நீ எதை கேட்டாலும் நான் உனக்காக செய்றேன்” என்றான்.

 

சற்று நேரம் அவன் சொன்னதை யோசித்தவள், “அப்ப, என் பேரை நீ பச்சக்குத்திப்பிய?” அவள் சொன்னதும் இவன் ஜெர்க்கானான்.

 

“என்னாது பச்சயா? யூ மீன் டேட்டூ…!” அவன் கேட்க, இவள் மேலும் கீழும் தலையாட்டினாள்.

 

‘அடிபாவி… உன்ன லவ் பண்ணது ஒரு குத்தமாடீ… காய்ச்சல் வந்தா கூட இன்ஜெக்ஷன் போட்டுக்க மாட்டேனேடி, மாத்திரை மட்டும் வாங்கி போட்டுக்கிற ஆளு நான்… என்னை போய் பச்ச குத்திக்க சொல்றாளே… காதல்ல இவ்ளோ பெரிய ரிஸ்க் இருக்கும்னு சொல்லாம ஏமாத்திட்டியே வெற்றிப்பா…’ என்று தந்தையின் நிழற்படத்தை குறுகுறுத்து முறைத்து வைத்தான்.

 

“பச்ச குத்திக்கிறது எல்லாம் பாட்டி காலத்து ஃபேஷன் டியர்… அதெல்லாம் எதுக்கு நமக்கு” என்று இவளிடம் மழுப்பினான்.

 

இவள் அசருவதாக இல்லை. “இந்த சின்ன விசயம் கூட எனக்காக செய்ய மாட்டியா அரவிந்த்?” அர்ச்சனா கேட்க,

 

‘எது டீ சின்ன விசயம்!?’ இவன் உள்ளுக்குள் அலற, அவன் மனசாட்சி வெளியே எட்டிப் பார்த்து அவன் முகத்தில் துப்பி விட்டு சென்றது. அதை துடைத்துக் கொண்டவன், “இதென்ன சனா சின்னபுள்ள தனமா இருக்கு… ஏதாவது பழைய படம் பார்த்துட்டு வந்து சும்மா உளறாத, டாபிக்க மாத்துடி” என்றான்.

 

“உனக்காக எதையும் தாங்கிக்க நான் தயாரா இருக்கும் போது, நீயும் எனக்காக தாங்கிக்க மாட்டியா?” 

 

“என்ன? நீயும் பச்ச குத்திக்க போற ஐடியால இருந்தா விட்டுடு சனா”

 

“நான் முன்னவே பச்ச குத்திட்டேன்…” என்றவள் தன் மேலாடையை சற்று விலக்கிக் காட்ட, அவள் நெஞ்சில் இவன் பெயர் ‘அரவிந்த்’ என்று ஒரு இதய வடிவிற்குள் டாட்டூ போடப்பட்டு இருந்தது.

 

அரவிந்திற்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை! ஒருபுறம் நெகிழ்ந்து போனான். மறுபுறம் இறுகி போனான்.

 

“உனக்கென்ன பைத்தியமா அர்ச்சனா? என் பேரை பச்ச குத்திக்கிட்டாதான் நீ என்னை காதலிக்கிறனு அர்த்தமா? ச்சே எவ்ளோ வலிச்சிருக்கும் உனக்கு? ஏன்டி இப்படி எல்லாம் செய்ற? முட்டாள்தனமா இருக்கு” அவளுக்காக தவித்தான்.

 

“அவ்வளோ ஒன்னும் வலிக்கல… நீயும் என் பேரை குத்திக்குவ இல்ல…” அவள் விடாமல் கேட்க, இவன் பார்வை அவள் மீது அழுத்தமாக பதிந்தது.

 

“குத்திக்கிறேன்… என்மேலயும் என் காதல் மேலயும் இல்லாத நம்பிக்கை, நான் உன் பேரை பச்ச குத்திக்கிறதால வரும்னா நானும் குத்திக்கிறேன்” என்றான் இறுக்கமாய்.

 

“அரவிந்த் நான் வெறும் நம்பிக்கைகாக மட்டும் சொல்லல… இது”

 

“நீ எதுவும் சொல்லத் தேவையில்ல சனா, விட்ரு” அவன் எழுந்துக் கொண்டான்.

 

ஏனோ அவனுக்குள் கொதித்தது. ‘பச்ச குத்திக்கொண்டால் மட்டும் தான் உண்மை காதலாகுமா?’

 

அர்ச்சனா தயங்கி நின்றாள். அவன் தனக்கு மட்டுமே சொந்தமாக இருக்க வேண்டும் என்ற சுயநல எண்ணம் அவளுடையது… எதற்காகவும் யாருக்காகவும்‌ அவனை விட்டு கொடுக்க இயலாது என்ற அசையாத நேசம் இவளுடையது.

 

அதீத நேசம் இதுபோன்ற அழகான முட்டாள்தனங்களை செய்ய தூண்டிக் கொண்டே இருக்கும்…

 

****

 

நிஜம் தேடி நகரும்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!