நீயில்லை நிஜமில்லை 19(2)
உன்னில் நான்
நிஜம் தேட மாட்டேன்!
என்னில் நீ
பொய்யாகவே
புதைந்து விடு!
காதம்பரி, பிரபாகர், நெடுமாறன், அஞ்சலி நால்வர் மட்டுமே அங்கிருந்தனர். அஞ்சலி செல்ல போகும் இடத்தை ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்திருந்தனர்.
“இது கொஞ்சம் ரிஸ்க் தான். ஆனா இப்போதைக்கு கொலையாளிய குழப்பி விடனும், அஞ்சலிய நெருங்க முடியாம அவன் திண்டாடும் போது கண்டிப்பா எப்படியும் வெளியே வருவான்… கண்டிப்பா இந்த பிளான் வொர்க் அவுட் ஆகும்” நெடுமாறன் நம்பிக்கையாக சொல்ல,
“இந்த இடம் ஃபுல் சேஃப்டி இன்ஸ்பெக்டர், எனக்கும் காதம்பரிக்கும் தவிர, வேற யாருக்கும் இப்படியொரு இடம் இருக்கிறது தெரியாது. அப்படியே தெரிஞ்சாலும் அத்தனை சுலபமா அங்க போக முடியாது. அந்த அக்மாஸ்பியர் அஞ்சலி மைன்ட்க்கும் ரிலாக்ஸா இருக்கும்” என்று உறுதி தந்தார் பிரபாகர்.
“அஞ்சலி கூட நானும் போறேன் இன்ஸ்பெக்டர். காவலுக்கு கொஞ்சம் ஆட்களையும் அழைச்சிட்டு போனா சேஃப்டியா இருக்கும்” காதம்பரி சற்று கலவரமாக சொல்ல,
“அவசியம் இல்ல மேடம், நீங்களோ ஆட்களோ அஞ்சலி கூட போனா கண்டிப்பா அவங்க போறது வெளியே தெரிஞ்சிடும்… ஒரு வெல் டிரைனட் டிரைவர் மட்டும் அஞ்சலி துணைக்கு போதும்” நெடுமாறன் முடிவாக சொல்ல,
“அப்ப அரவிந்த் கூட போக வேண்டாமா?” பிரபாகர் தான் கேட்டு விட்டார். எதனாலோ அரவிந்த் உடன் இருப்பது அஞ்சலிக்கு பாதுகாப்பு என்ற எண்ணம் பதிந்திருந்தது அவருக்கு.
“நோ கண்டிப்பா அரவிந்த் வேணா… அவனுக்கு இதை பத்தி எதுவும் தெரியவும் வேண்டாம், கிளம்ப ஏற்பாடு பண்ணுங்க, இனி என்ன நடக்கனுமோ நடக்கட்டும்” அஞ்சலி தன் அழுத்தமாக சொல்லிவிட, வேறுவழியின்றி மற்றவர்களும் ஆமோத்தித்தனர்.
அடுத்த வாரம் முழுவதும் அவளின் ரகசிய பயணத்திற்கான ஏற்பாடுகள் மிக கவனமாக மேற்க்கொள்ளப்பட்டன.
அன்று காலை குடும்பத்துடன் கோயிலுக்கு சென்ற அஞ்சலி, எந்த தடமும் இன்றி வேறு காரில் ரகசிய பயணத்தைத் தொடங்கினாள்.
கார் பிரதான சாலையை விடுத்து கிளை சாலைகள் வழியே பயணித்தது. பின் இருக்கையில் அஞ்சலி அமர்ந்திருக்க முன் இருக்கையில் டிரைவர் மட்டுமே.
அவளுக்கென பாதுகாப்பிற்கு பையில் கைத்துப்பாக்கி ஒன்றும் இருந்தது.
அரண்மனையில் நடந்த அடுத்தடுத்த சம்பவங்கள் அங்கே பாதுகாப்பை கேள்விக்குறி ஆக்கி இருந்தது.
இந்த பயணம் குற்றவாளியை இனங்காணும் வரையில் அவளின் உயிர் பாதுகாப்பிற்காக ஏற்பாடானது. ஆனால் அஞ்சலி இதற்கு சம்மதத்திற்கு முக்கிய காரணம் அவள் மட்டுமே அறிந்தது.
அர்ச்சனாவிற்காக!
‘என் அரவிந்தை எனக்கு முழுசா கொடுத்துடுங்க, ப்ளீஸ்’ என்று அவள் கைக்கூப்பி நின்றது. அஞ்சலியை வெகுவாக பாதித்தது.
உணர்வாய் நேசித்தவனையும் அவன் நேசத்தையும் இழப்பது எத்தனை வலியானது என்பதை உணர்வுபூர்வமாக உணர்பவள். தன் வலியை வேறு பெண்ணுக்கும் கொடுக்க மனமில்லை இவளுக்கு.
எத்தனை முறை சொல்லியும் அரவிந்த் இவளை விட்டு விலகுவதாக இல்லை. தனக்கு ஏதேனும் ஆபத்து நேருமோ என்ற அரவிந்தின் பயம் தான் காரணம் என்பதையும் அறிவாள்.
அவன் அம்மா, அப்பாவிற்கு பிறகான இடத்தில் இவளையும் வைத்திருந்தவன்…! இப்போதும் இவளிடம் தோழமையை எதிர்பார்ப்பவன், ஆனால் இவளால் தான் அவனிடம் இயல்பாக பழக முடிவதில்லை…
சுற்றி சுழன்று அரவிந்தைப் பற்றிய நினைவுகள் மட்டுமே அவளிடத்தில்.
அஞ்சலிக்கு ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது. அரவிந்தை விட்டு எத்தனை தூரம் விலகி சென்றாலும் அவன் நினைவுகளை மட்டும் தன்னிடம் இருந்து விலக்க முடியாது என்று.
தனக்கு தானே சிரித்துக் கொண்டாள். பல சாலைகள் பல ஊர்கள் கடந்து கார் பயணித்து கொண்டிருந்தது.
“டிரைவர் டைம் என்னாச்சு?” அஞ்சலி வினவ, அவனிடமிருந்து பதில் வரவில்லை.
இன்ஸ்பெக்டரின் அறிவுரைப்படி, தன் கைப்பேசியையும் எடுத்து வந்திருக்கவில்லை. இதில் டிரைவரும் பதில் தராமல் இருப்பது இவளுக்கு எரிச்சலானது.
இப்போது தான் அவனை உற்று கவனித்தாள். இவள் மனம் திக்கென்றானது.
முழு ஓட்டுனர் சீருடையில், தொப்பி அணிந்து, என்ன தான் தன் அடையாளத்தை மறைத்து இருந்தாலும், அவனை அவளால் தெரிந்துக்கொள்ள முடியாமல் போய்விடுமா என்ன?
“அரவிந்தா… நீயா?” அஞ்சலி கேட்கும் போதே அவள் கண்களில் நீர் கோர்த்தது.
ஒரு கையால் தொப்பியை கழற்றி விட்டு இவள்புறம் திரும்பியவன், “டூ லேட் ஜெல்லி, நீ என்னை சீக்கிரமே கண்டு பிடிச்சிடுவன்னு நினச்சேன்” என்று சிரித்தான்.
இவளால் முடியவில்லை. யாரை விட்டு விலக, மறைந்தோடி வந்தாளோ, அவனே வழித் துணையாய்.
இருகைகளாலும் சோர்வாக முகத்தை மூடிக் கொண்டாள். இப்போது தான் அவளுக்குள் அதிக பயம் கூடியது.
‘உங்களுக்கு துணையா இருக்கேன்னு அரவிந்துக்கு ஏதாவது ஆபத்து வந்திடுமோனு தினம் தினம் பயத்துல நான் தவிச்சிட்டு இருக்கேன்’ அர்ச்சனா சொன்னது இவள் மனதை அறுத்தது.
அவன் தன்னுடன் இருப்பது அவனுக்கும் ஆபத்தாகவே முடியும் என்ற உண்மை இவளையும் கலங்க வைப்பதாய்.
“ஸ்டாப் த கார்… எங்கேயும் போக வேணாம், காரை திருப்பு” என்று உத்தரவிட்டாள்.
“ரிலாக்ஸ் ஜெல்லி, ஏன் இவ்வளவு கோபம்?” அரவிந்த் சமாதானம் பேச,
“இப்ப காரை நிறுத்த போறயா? இல்லயா?” என்று சத்தமிட்டவள், வண்டி நின்றதும் கீழே இறங்கிக் கொண்டாள்.
வழக்கத்திற்கு மாறாக, முழுநீள அங்கியும், முகத்தை மறைத்தாற் போல் ஸ்கார்ப் அணிந்து இருந்தாள்.
“யாரோ டிரைவர் கூட வருவ, என்கூட வர மாட்டியா?” அரவிந்தும் கீழே இறங்கி அவளிடம் ஆதங்கமாக கேட்க,
“மாட்டேன்… இனி நானே டிரைவ் பண்ணிக்கிறேன், நீ வந்த வழியே திரும்பி போ” என்று முன் நடந்தவளை தடுத்தவன், “அப்படி எல்லாம் உன்ன தனியா விட முடியாது. மாம்ஸ், ஆன்ட்டி என்மேல நம்பிக்கை வச்சு அனுப்பி வச்சிருக்காங்க” என்றான்.
“அவங்களுக்கு எதுவும் தெரியாது. உனக்கு தெரியும் இல்ல…”
“என்ன தெரியனும் எனக்கு?”
“என்னால உன்ன ஃபேஸ் பண்ண முடியல, இப்ப கூட உன்ன மறக்க முடியுமானு தான் தப்பிச்சு தூரமா போறேன்… அங்கேயும் நீயே வந்தா எப்படி டா?”
“எனக்கு இப்ப உன்னோட சேஃப்டி தான் முக்கியம் அஞ்சலி… வேறெதுவும் முக்கியமில்ல”
“என் மனச முழுசா சிதைச்சிட்டு, உயிரை மட்டும் காப்பாத்தி என்ன சாதிக்க போற?”
அவனிடம் பதில் இல்லை. இறுகி நின்றான். இவளும் மேலும் பேசவில்லை.
அது ஒருவழிச்சாலை, நடைப்பாதையை ஒட்டி கார் நின்றிருக்க, அதன் அருகில் இருவரும் முகத்தை திருப்பி நின்றிருந்தனர்.
சற்று பொறுத்து,
“உனக்கு அர்ச்சனாவை எவ்வளவு பிடிக்கும் அரவிந்த்?” அஞ்சலி கேட்க,
“அளந்து சொல்ல முடியாத அளவுக்கு அவ்வளவு பிடிக்கும் என் சனாவ… அதுக்காக காதலிக்காக ஃபிரண்ட்ட விட்டுட்டு போற சுயநலவாதி எல்லாம் இல்ல நான்” அரவிந்த் பதில் தெளிவாக வந்தது.
“நான் உன் ஃப்ரண்டா இருந்தேன்… இப்ப இல்ல… இனிமே இருக்கவும் முடியாது”
“அது உனக்கு… இப்பவும் எப்பவும் எனக்கு நீ பெஸ்ட் ஃப்ரண்ட் தான்… நான் மாறல. மாறவும் மாட்டேன்”
அஞ்சலி பேச்சற்று நிற்க, அவர்களிடம் வந்த முதியவர் ஒருவர், “கிளி ஜோசியம் பார்க்கிறீர்களா ம்மா, நடந்தது, நடக்கப்போறது எல்லாத்தையும் துள்ளியமா சொல்லும்… கிளி ஜோசியம் பார்க்கிறீர்களா மா” அவர் கேட்க,
“அதெல்லாம் வேணாங்க, நேரமாச்சு நாங்க கிளம்பனும்” அரவிந்த் மறுக்கவும்,
“எனக்கு கிளி ஜோசியம் பார்க்கனும்… பாருங்க ஐயா” என்று வீம்பாக சொன்னாள் அஞ்சலி.
அந்த முதியவர் முகம் மலர, நடைப்பாதை ஓரமாகவே கடை விரிக்கலானார்.
“இதெல்லாம் தேவையா அஞ்சலி?” அரவிந்த் சலித்துக் கொள்ள,
“எனக்கு தேவை தான்” இவள் வீம்புக்கு நின்றாள். உண்மையை சொல்லப்போனால் இவளுக்கும் இதிலெல்லாம் அத்தனை நம்பிக்கை இல்லை.
சீட்டு அட்டைகளைக் கலைத்து வரிசையில் வைத்தவர், சிறிய கூண்டின் கதவை திறந்து விட, பச்சைக்கிளி அலகை அசைத்துக் கொண்டு தயங்கி தயங்கி வெளியே வந்தது. அந்த முதியவர் அஞ்சலியின் பேரை சொல்லி, ஓர் அட்டையை தேர்ந்து எடுத்து கொடுக்குமாறு கேட்க, அந்த கிளி ஒவ்வொரு அட்டைகளாக அலகால் கவ்வி தூர வைத்துவிட்டு கடைசி அட்டையை அவரின் கையில் கொடுத்தது. அவர் அதற்கு சில நெல் மணிகளை தந்து விட்டு மறுபடி கூண்டிற்குள் அடைத்து வைத்தார்.
பிறகு கைக்கூப்பி கடவுளை வேண்டி கொண்டு, அந்த அட்டையைப் பிரித்தவர் முகம் மாறியது.
“சேத்துல முளைச்ச செந்தாமரை ம்மா நீயி, குத்தங்குறை அனுகாம மகராசியா வளர்ந்தவங்க, இப்ப உங்க நேரம் மாறி போச்சு மா, பாவத்தோட நிழலு உங்கள பாடாபடுத்தி எடுக்கும், நினச்சதெல்லாம் கைநழுவி போயிடும்… வாழ்வா, சாவா நிலம உங்களுக்கு…
தாயி உங்க பேருக்கு பாச கயிறு வந்திருக்கு மா, உங்க உசுர ருசி பாக்க பாச கயிறு நீண்டு இருக்குது மா… உங்க பொறப்பு பலனுக்கு இப்ப நடக்குறது மரண கண்டம்… இந்த கண்டத்துல இருந்து நீங்க தப்பிச்சிட்டீங்கன்னா, ஆத்தா உங்களுக்கு ஆயுசு நூறு…”
அவர் சொல்லவும் அரவிந்த், அஞ்சலி இருவரின் முகங்களும் வெளுத்து போயின.
அந்த முதியவர் மேலும் தொடர்ந்தார். “இதுக்கு பரிகாரம்ன்னா, சிவபெருமான் எமனை காலால உதைச்ச திருக்கடவூர் சன்னிதி, எமனை விரட்டி அடிச்ச திருவையாறு ஆட்கொண்டீஸ்வரர் சன்னதி, பரமகுடி பக்கத்துல எமனேஸ்வரம் ஊருல இருக்க, முக்கண்ணன் எமனேஸ்வுடையார் சன்னதி… இதெல்லாம் மிருத்யுஜ் ஜெய தலங்கள் தாயி. இந்த தலங்களுக்கு போனா நல்லது நடக்கும் மா. ஆண்டவன் காப்பாத்துவான் நம்பிக்கையா போங்க தாயி” என்றார்.
அரவிந்த் அவருக்கான பணத்தை தந்துவிட்டு கிளம்ப முற்பட, “அரவிந்த் பேருக்கும் கிளி ஜோசியம் பாருங்க” என்றாள் அஞ்சலி. அவன் இவளை முறைக்க, இவள் அவனை கண்டு கொள்வதாக இல்லை.
அட்டைகளை அலகால் கவ்வி எடுத்து கொடுக்கும் அந்த கிளியை பார்த்தபடி இருந்தாள்.
முன் போலவே வேண்டிக் கொண்டு அட்டையை பிரித்த பெரியவர், “கஷ்ட பொறப்பா பொறந்து, சுக போகமா வளர்ந்தவங்க ஐயா… ஒத்த புள்ளியில நிக்காம உலகத்தையே அளந்து சுத்தி வரும் யோகம் உங்களுக்கு. உங்களை சுத்தி எது மாறினாலும், உங்க நிலை மாறாம திடமா நிக்கிறவங்க…
ஐயா உங்களுக்கு மஹாபாரத போர்ல தேரோட்டுற கிருஷ்ணரோட படம் வந்திருக்கு… இப்ப உங்களுக்கு வாழ்க்கையே போர்களமா இருக்கும். எந்த பக்கம் திரும்பினாலும் முட்டுக்கட்டை முட்டி நிக்கும். உங்களுக்கானவங்களை காப்பாத்தனும்னு போராட்டிட்டு இருக்கீங்க, உங்க போராட்டத்தில வெற்றி, தோல்வி எது கிடைச்சாலும் எந்த போர்களத்திலயும் உயிர் சேதம் இல்லாம போகாதுங்க… விதிச்சதை மாத்துற சக்தி நம்ம படைச்ச ஆண்டவனுக்கும் கிடையாதுங்க, ஏத்துக்க தான் வேணும்… உங்களுக்கு பரிகாரம்னா…”
“போதும்” என்று தடுத்த அரவிந்த், அவரிடம் பணத்தாளைக் கொடுத்துவிட்டு அஞ்சலியை இழுத்து கொண்டு வந்து காரில் அமர வைத்தான்.
காரில் அமர்ந்த பிறகும் கூட இவன் மனம் படபடத்தது. அந்த ஜோசியர் சொன்னவை அவன் மனதில் மறுபடி மறுபடி எதிரோலித்து இவனை பயமுறுத்தியது.
“ஜோசியம் அவ்வளவு பொய்யில்லை போல, அவர் சொன்னதுல நைன்ட்டி பெர்சன்ட் உண்மை” அஞ்சலி விரக்தியாக சொல்ல,
“இதையெல்லாம் நம்புறீயா நீ? அவன் ஏதோ வயித்து பொழப்புகாக வாயிக்கு வந்ததை உளறி வக்கிறான்” அரவிந்த் கடுகடுக்க,
“அவர் உளறின விசயமெல்லாம் நமக்கு சரியா ஒத்து வருதே இதுக்கு பேரென்ன?” அஞ்சலியின் கேள்விக்கு, “சுத்த நான்சென்ஸ். இதுக்கு தான் இந்த ஜோசியம் எல்லாம் பார்க்க வேணாம்னு சொன்னேன். நம்மள குழப்பி விட்டுடுவாங்க” என்றவன் வேகமாக காரை இயக்கி உதகை மலையின் கொண்டை ஊசி வளைவுகள் வழி மேலேறினான்.
அதற்குமேல் வேறுவழி திரும்பி காடுமேடு, அடர்ந்த மரங்கள், ஒட்டு உடைச்சல் பாதைகள் என அவர்கள் பயணம் நீண்டது. உதகையில் சாரல் மழை பருவம் வேறு குளிரில் அவர்கள் உடலை நடுங்கச் செய்தது.
இதுவரை கணக்கில் வைத்து கொள்ளாத அளவிற்கு பலமுறை உதகையை சுற்றி திரிந்திருக்கிறாள் அஞ்சலி. ஆனால் இந்த பாதையை இதுவரை கவனித்த நினைவு இல்லை. அரவிந்த் வழியை நினைவில் வைத்தப்படி கவனமாகவே வந்தான். காலை தொடங்கிய பயணம் மதியம் தாண்டியும் நீள, இருவருக்கும் சோர்வும் அலுப்பும் தட்டியது. மழை வேறு வலுக்க தொடங்கி இருந்தது. பல இடங்களில் கார் செல்வது கடினமாக இருந்தது.
“அதோ இந்த இடம் தான” என்று அஞ்சலி பெயர் பலகையைக் காட்ட, இருவருக்கும் சற்று நிம்மதி.
மதுரூரனன் குன்றம்… உதகையின் உட்புறமாக அமையப்பட்டிருந்த சிறிய மலைக்கிராமம் அது. மேடும் பள்ளமும் மழையும் வெள்ளமும் சேரும் சகதியுமாக சென்ற பாதையில் முதுகுடைய ஊர்ந்து வந்தனர்.
மலை கிராமம் என்ற பெயர் தான் எங்கெங்கோ ஓரிரு வீடுகள் தான் தென்பட்டன. அடர்ந்த மரங்களும் செறிந்த பலவகை தோட்டங்களும் தான் அதிகம் அடைத்திருந்தன.
மழையாலோ அல்லது மரங்களின் அடர்த்தியாலோ இந்த பகல் வேளையிலும் இருள் போர்த்தி காட்சி தந்தது அந்த இடம்.
“இதுக்கும் மேல கார் நகராது என்னாலையும் முடியாது. இந்த காட்டு பகுதியில கெஸ்ட் ஹவுஸ் எங்க இருக்கோ?” அரவிந்த் கடுப்பாக சொல்ல, அஞ்சலிக்கும் அப்படித்தான் தோன்றியது.
“ஆனா நாம வந்த வழி கரெக்ட் தான, இன்னும் கொஞ்சம் உள்ள போய் பார்க்கலாமா” என்றாள்.
“வேறவழி” அவன் சலித்துக் கொண்டு காரை நகர்த்திச் சென்றான். வழியில் யாரோ கையாட்டி காரை நிறுத்தினர்.
“அஞ்சலி பாப்பாங்களா, இன்னும் வரலையேன்னு உங்களை தான் பாத்துட்டு இருந்தேனுங்க, காரு இதுக்கு மேல போகாதுங்க. இங்கயே பூட்டிட்டு வாங்க, மழை விட்டதும் தள்ளிக்கலாம்” என்றவர், அவர்களுக்கு குடை தந்து, அவர்கள் பொதிகளை தூக்கிக்கொண்டு முன்னே நடந்தார். இவர்கள் பின் தொடர்ந்தனர்.
பத்து நிமிட நடைக்கு பிறகு, கெஸ்ட் ஹவுஸ் தெரிந்தது. “இதானுங்க கெஸ்ட் ஹவுசு. உள்ளார வாங்க” அவர் வரவேற்க, அதை ஒரு பார்வை பார்த்த அரவிந்த், அடக்க முடியாமல் விழுந்து விழுந்து சிரித்து கொண்டிருந்தான்.
அஞ்சலி முறைத்து நிற்க, “இந்த இத்துபோன வீட்டுக்கு பேரு தான், கெஸ்ட் ஹவுஸா” என்று சொல்லி காட்டி இன்னும் சத்தமாக நகைத்தான்.
“அந்த காலத்துல வெள்ளக்காரன் கட்டிவுட்ட மாளிகை இது. இந்த அம்மணியோட தாத்தாவுக்கு அப்பா சலிசா கிடைச்சிச்சுன்னு வாங்கி போட்டாரு. இந்த பக்கம் பாதை சரியில்லாததால அவங்க குடும்பத்துல யாரும் வந்து தங்கறதில்ல… என் தாத்தன் காலத்துல இருந்து இந்த இடத்த சுத்தப்படுத்தி காவல் காத்துட்டு வரமுங்க” என்று விளக்கினார் அவர்.
இரண்டு மாடிகள் உயர்ந்து, தடித்த சுண்ணாம்பு சுவர்களாலான பரந்த கட்டிடம். கதவு, ஜன்னல்கள் அனைத்தும் கண்ணாடிகளால் பிணையப்பட்டு இருந்தது. சுற்றிலும் இருந்த மரங்களின் உயரம் கட்டிடத்தைக் குறுக்கிக் காட்டியது.
“என் பேரு மருதாண்டி, இது என் பொஞ்ஞாதி பேரு தங்கம்மா” என்று அறிமுகப்படுத்திக் கொண்டவர் வயது அறுபதை தொட்டிருந்தது. அவரின் மனைவி ஐம்பதின் தொடக்கத்தில் தெரிந்தார்.
அரவிந்த், அஞ்சலிக்கு அவர்கள் அறைகளைக் காண்பித்துவிட்டு, அவர்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டுக்கொண்டு சென்றார்.
உடல்வலி போக இதமான சுடுநீரில் குளித்து உடை மாற்றி வந்த அரவிந்த், அஞ்சலி உடை மாற்றாமல் சோர்ந்து அமர்ந்திருப்பதைப் பார்த்து அவளிடம் வந்தான்.
“நிம்மதியா இருக்க தான இங்க வந்திருக்க, இப்பவும் தேவை இல்லாததெல்லாம் நினைச்சிட்டு இருந்தா நல்லா இருக்கா” என்று கேட்க, அவளிடம் எதிர்வினை இல்லை.
“இங்க பாரு அஞ்சலி, இந்த நிமிசம் நீ புதுசா பிறந்ததா நினைச்சுக்கோ, பழைய நினப்பு, பயம், கவலை எல்லாத்தையும் தூக்கி போட்டு புதுசா மாறி வா…”
“நாளைக்கு நம்ம இல்லாம போறோமோ இல்லயோ… இன்னைக்கு கிடைச்ச வாழ்க்கைய சந்தோசமா வாழ்ந்துக்கலாம்… எனக்கு கொல்ல பசி, நீ சாப்பிட வரீயா இல்ல மொத்தத்தையும் நானே காலி பண்ணட்டுமா?” என்க அவள் சிறிதாக சிரிக்க முயன்று, எழுந்து சென்று தயாராகி வந்தாள்.
சோர்வையும் பசியையும் விட, அந்த ஜோசியர் கணித்து சொன்னவை இருவரையும் அதிகம் பாதித்து இருந்தது. அஞ்சலிக்காக அரவிந்தும் அவனுக்காக இவளும் தங்களை முயன்று இயல்பாகக் காட்டிக் கொண்டனர்.
மழைக்கும் குளிருக்கும் சூடான சுவையான உணவுகள் படைக்கப்பட்டன. உணவை உண்ணும்போது தான் அவர்களின் பசி புரிந்தது. சாப்பிட்டு முடித்தவுடன் அஞ்சலி தன் அறைக்குள் சென்று முடங்கிக் கொண்டாள்.
அரவிந்த் அந்த மாளிகை முழுவதும் ஒருமுறை சுற்றி பார்த்து விட்டு வந்தான். ‘இந்த இடம் எதிரிக்கு தெரியாமல் இருக்கும் வரை தான் பாதுகாப்பு, ஒருவேளை தெரிந்து விட்டால், அத்தனை பாதுகாப்பானது இல்லை’ என்ற எண்ணம் தான் தோன்றியது.
எப்படியும் இந்த இடத்தை அறிந்து கொண்டு வருவது அத்தனை சுலபமன்று என்ற நம்பிக்கையில், பயண களைப்பில் வந்து படுத்ததும் உறங்கிப் போனான்.
அஞ்சலிக்கு உறக்கம் சேரவில்லை. கனபோர்வைக்குள் முடங்கியபடி, தரிக்கெட்டோடும் நினைவுகளின் பின்னால் அலைபாய்ந்த மனதை இழுத்து கட்ட முயன்றிருந்தாள்.
‘நாளைக்கு நாம இல்லாம போறோமோ இல்லையோ… இன்னைக்கு சந்தோசமா வாழ்ந்துக்கலாம்’
அரவிந்த் சொன்ன வார்த்தைகள் வெதும்பி இருந்த அவள் மனதில் தாக்கத்தை உண்டாக்கின.
இந்த சில மாதங்களாக எதிர்பாராமல் அடுத்தடுத்த அடிகள் அவளுக்கு. அவளின் இயல்பை முற்றிலுமாக தொலைக்கச் செய்திருந்தது.
வெறுமைகள், தோல்விகள், பயங்கள் அனைத்தையும் உதறிவிட்டு, இனி வாழும் நாட்களை இனிதாக, தன் விருப்பப்படி வாழ்ந்து முடித்துக் கொள்ள வேண்டும் என்ற உறுதி அவளுக்குள்.
விரக்தி மனப்பான்மையின் அடுத்தக் கட்டம் இது…
எண்ணங்களே செயல்களை தீர்மானிக்கின்றன. செயல்களின் நேர்வினைகள் எண்ணங்களை உறுதியாக்குகின்றன. அதன் எதிர் வினைகள் நம் எண்ணங்களைப் புரட்டி போட்டு விடுகின்றன…
****
நிஜம் தேடி நகரும்…