நீயில்லை! நிஜமில்லை! 2

நீயில்லை நிஜமில்லை! 2

 

என் தேடல் நீயாக!

உன் தேடல் நானாக!

நீ எப்போது வேறாகி போனாய்?

என் ஆழ்மன பிம்பத்தில்

நீ நிஜமற்று போனாய்!

 

புத்தம் புது காலையின் புத்துணர்வோடு அவசரமாக தயாராகி தன் அறையை பூட்டி விட்டு வெளி வந்தாள் அவள்! 

 

வீட்டு வாசலில் பன்னீர் ரோஜா சிரிப்புடன் பள்ளி சீருடையில் ஓடிவந்த சிறுமி அவளின் கால்களை கட்டிக் கொள்ள,

 

“ஹே ரோஸ் பேபி, என்னாச்சு?” பெரியவள் குனிந்து அவளை நிமிர்த்தி கேட்க,

 

“அச்சு க்கா, அம்மா வரா நீ சொல்லாத” என்று குட்டி கண்களை உருட்டினாள்.

 

இந்த வீட்டு உரிமையாளரின் பேத்தி அவள் ரோஜா. அவர்கள் குடும்பம் கீழே தங்கி இருக்க, மேல் தளத்தை தனி தனி அறைகளாக பெண்களுக்கு வாடகை விடுத்துள்ளனர். மொத்தம் ஐந்து அறைகள், ஒரு அறையில் இரண்டு, மூன்று பெண்கள் மட்டும் தங்கிக் கொள்ள வசதியாக அமைக்கப்பட்டு இருந்தது. அதில் இவளும் ஒருத்தி. இவள் அறையில் இவள் மட்டும் தான், வேறு யாரும் இன்னும் வந்து சேரவில்லை. இந்த வீடு நகரத்தை விட்டு தள்ளி இருப்பதால் வாடகை குறைவு, குடும்ப பாதுகாப்பு கூட. ஆறு மாதங்களாக இங்கே தங்கி தனக்கான  வேலையை தேடி அலைந்து கொண்டிருக்கிறாள். தற்போது பகுதிநேர வேலைகளையும் பார்த்தப்படி.

 

இன்றும் ஒரு நேர்முகத் தேர்விற்காக தான் அவசரமாக புறப்பட்டிருந்தாள். எதிரில் இந்த பூக்குவியல் தரிசனம் அவளின் தடதடப்பை குறைத்து, நன்னம்பிக்கை தருவதாய்.

 

உருட்டிய குட்டி கண்களையும் அவள் இருந்த கோலத்தையும் கவனிக்க, பள்ளி சீருடை அணிந்து, தலை வாராமல் கலைந்திருக்க, உயிர் பெற்ற குறும்பு ஓவியமாய் எதிரே நின்றிருந்தாள் ரோஜா.

 

“ஏய் வாலு, டைம் ஆச்சு ஸ்கூல் வேன் வந்திடும் இல்ல, நீ இன்னும் தயாராகாம இருக்க?” பெரியவள் சற்று முறைப்பாக கேட்க,

 

அதில் முகம் சுருக்கியவள், “சேரி எல்லாம் கட்டிட்டு நீ எங்க போற அச்சு?” என்று எதிர் கேள்வி கேட்டாள் சின்னவள்.

 

அவள் உயர்த்திற்கு அமர்ந்து, “இன்னைக்கு எனக்கு இன்டர்வியூ இருக்கு ரோஸ் பேபி… அதான் சீக்கிரம் கிளம்பறேன், கொஞ்சம் டென்சனா இருக்கு” என்றாள் சிறுத்த முகமாக.

 

அவளின் கன்னத்தில் தன் செப்பு இதழ் பதித்து, “யூ டோன்ட் வொர்ரி அச்சு, எப்பவும் போல இந்த வேலையும் உனக்கு கிடைக்காது சரியா?”

 

சின்னவள் வாழ்த்தை கேட்டு இவள் தடுமாறி விழித்து, “ஏன் டி இப்படி சொல்ற?” அழுவது போல வினவ,

 

“நீ வேலைக்கு போகாம இருந்தா தான, என்னோட விளாட வருவ, என் ஹோம் ஹொர்க் எல்லாம் சீக்கிரம் முடிக்க ஹெல்ப் பண்ணுவ” என்று கொஞ்சி சொன்னவளை, கைகளில் ஏந்தி கொண்டாள்.

 

“ம்ம் உன் கவலை உனக்கு, எனக்கு வேலை கிடைச்சா தான் அடுத்த மாசம் நான் இங்க தங்க முடியும் ரோஸ் பேபி, அதால எனக்கு இந்த ஜாப் கிடைக்கனும்னு நீங்க சொல்லுவீங்களாம்” என்று வாயடித்தபடி, சிறுமியை கீழ் வீட்டில் விட்டுவிட்டு பேருந்து நிறுத்தம் நோக்கி விரைந்து நடந்தாள்.

 

இவள் அர்ச்சனா!

 

கடந்த ஒரு வருடமாக பார்த்த  வேலையை சில குடும்ப சூழலால் விடுத்து, தனக்கான மற்றொரு வேலை தேடலில் தீவிரமாக ஈடுபட்டு இருப்பவள். 

 

இன்றைய நேர்முக தேர்வுக்காக தன்னை கவனம் எடுத்து தயார்படுத்தி இருந்தாள்.

 

இள ஊதா நிறத்தில் நீலம், சிவப்பு கோடுகளிட்ட சேலையை கச்சிதமாக உடுத்தி, இடை தாண்டி வழிந்த கருங்கூந்தலை ஒற்றை பின்னலில் அடக்கி விட்டிருக்க, ஒற்றை கருமணி அசையும் ஊதா நிறத் தோடு, அதே வடிவ டாலர் அமைந்த கழுத்து சங்கிலி. வலக்கையில் ஊதா நிற ஒற்றை வளை, மறுகையில் வாட்ச். அவளின் சேலைக்கட்டும், ஹீல்ஸ் காலணியும் வளையாத நேர் வேகநடையும் அவளின் சாதாரண உயரத்தை கொஞ்சம் தூக்கி காட்டியது.

 

‘இந்த வேலை நிச்சயம் கிடைக்கனும்’ என்று மனதில் மறுபடி மறுபடி உரு ஏற்றியபடி, பேருந்தின் கூட்ட நெரிசலில் தன்னை சொருகிக் கொண்டாள் அர்ச்சனா.

 

****

 

தனது அலுவலக அறையில் பிரபாகர் தீவிர யோசனையில் இருந்தார். என்ன முயன்றாலும் அரவிந்த் இங்கு வருவதை அவர் மனம் ஒப்பவில்லை. ஏதோ தவறிழைப்பது போன்ற உணர்வு அவரிடம்.

 

அதேநேரம், கதவை தட்டி, அனுமதி பெற்று உள்ளே வந்தான் அரவிந்த்.

 

“ஹாய் மாம்ஸ். ஹேப்பி மார்னிங்” என்று புன்னகையை முகத்தில் நிறுத்தி அவன் இயல்பாக சொல்ல, பல ஆண்டுகளுக்கு பிறகு நேரில் பார்க்கும் நண்பனின் மகனை பார்வையில் நிரப்பிக் கொண்டவர், அவன் அருகே வந்து ஆர தழுவிக் கொண்டார்.

 

அன்றைய கனத்த சூழ்நிலையில் அரவிந்தை சரியாக‌ கூட கவனித்திருக்கவில்லை அவர். இன்னும் தன் உயிர் தோழனின் இழப்பில் இருந்து அவராலும் முழுமையாக மீள முடியவில்லை. கேளாமல் கண்ணோரம் ஈரம் துளிர்த்தது அவருக்கு.

 

“ஈஸி மாம்ஸ், ஐ’ம் பேக்” என்று சொன்னவன் அவரை ஆறுதலாக அணைத்து விடுவித்தான்.

 

தன்னை சமன்படுத்திக் கொண்டவர், “அரவிந்த், உன் மேலையும் உன் திறமை மேலையும் எனக்கு நிறையவே நம்பிக்கை இருக்கு. அதனால தான் சொல்றேன். இங்க நீ வேலை பார்க்க வேணாம்” அவர் தன் கருத்தை வலியுறுத்த, அரவிந்த் பதில் பேசவில்லை அமைதியாக நின்றான்.

 

“டேய், இப்ப நீ உன் கம்பெனிக்கு பாஸா எம்டி சீட்ல உக்கார்ந்து இருக்க வேண்டியவன் டா, இப்படி எனக்கு கீழ உன்ன வேலை பார்க்க வைக்க எனக்கு மனசு வரல. புரிஞ்சிக்கடா” தான் தோளில் தூக்கி வளர்த்த பிள்ளையிடம் ஒருவித குற்றவுணர்வோடு சொன்னார்.

 

“மாம்ஸ் அதெல்லாம் முன்ன, இப்ப எங்க கம்பெனி ஷேர்ஸ்ஸ வித்தாச்சு, என்னோட வேலையையையும் விட்டாச்சு… ரொம்ப கஷ்டத்தில இருக்கேன், நீங்க மட்டும் வேலை கொடுக்கலைன்னா என் எதிர்காலம் என்னாகும்? கொஞ்சம் யோசிங்க மாம்ஸ்” கைகளை நீட்டி, நெஞ்சில் வைத்து, முகத்தில் பாவனை கூட்டி, வசனம் பேசியவனைப் பார்த்து அவருக்கு சிரிப்பு வரும் போல இருந்தது.

 

“அவ்வளவு கஷ்டத்திலையா இருக்க? அப்ப இத்தனை வருசம் வெளிநாட்டில சம்பாரிச்சதெல்லாம் என்னடா செஞ்ச?” அவர் சந்தேகம் போலவே கேட்க,

 

“மாம்ஸ், நம்ம நாட்டுல சம்பளமும் குறைவு, அதோட செலவும் குறைவு, அதே ஃபாரின்ல சம்பளமும்‌ அதிகம், அதைவிட செலவு இன்னும் அதிகம், யோசிங்க எப்படி என்கிட்ட சம்பாத்தியம் இருக்கும்?” விவரமாய் விளக்கியவனை விவகாரமாய் பார்த்தப்படி நின்றிருந்தார் பிரபாகர்.

 

இவன் மேலும் குரலை சற்று தாழ்த்தி, “அதோட என்னோட கேர்ள் ஃபிரண்ஸ்ஸ மெயின்டெய்ன் பண்ணனும் இல்ல. அதுக்கெல்லாம் செலவு பார்த்தா வேலைக்கு ஆகுமா?” என்று அலட்டாமல் அலுத்தும் கொண்டான்.

 

“ஓ இதுவேறயா! அப்ப ஏன் டா உன் கேர்ள் ஃபிரண்ஸ்ஸ எல்லாம் தவிக்கவிட்டு இங்க ஓடி வந்துட்ட?”

 

“தவிக்கவிட்டா… அதுங்ககிட்ட இருந்து தப்பிச்சு ஓடி வந்து இருக்கேன் மாம்ஸ், அதுங்கள எல்லாம் என்னால கட்டி மேய்க்க முடியல, ப்ப்பா”‌ என்று அலுப்பு தட்டியவனின் முதுகில் பலமாக‌ தட்டியவர்,

 

“படவா, உன் வாய் மட்டும் குறையவே இல்லடா, உன்னோட டிரீம் ஜாபை விட்டு வந்ததுக்கு இதானா காரணம்?” இவர் நம்பாமல் கேட்கவும்,

 

“எஸ் அஃப்கோர்ஸ் மாம்ஸ், அதோட ஒரு லட்சியத்தோட தமிழ்நாட்டுல மறுபடி காலடி எடுத்து வச்சிருக்கேன் நான்” என்று நெஞ்சை நிமிர்த்திக் காட்டி, வலது காலை தூக்கி மறுபடி தரையில் ஊன்றி, வெற்று தோரணை காட்டினான்.

 

“அப்படி என்ன லட்சியம்?” இதற்கு மேல் அவன் அலும்பை தாங்க முடியாமல், தன் இருக்கையில் அமர்ந்து, அவனையும் எதிரில் அமர கைக்காட்டினார்.

 

அமர்ந்தவன், “அலைஞ்சு திரிஞ்சு தேடி பிடிச்சு சலிச்சு எடுத்து ஒரு தாவணி போட்ட… ம்ம் இல்ல இல்ல, சேலை கட்டின தேவதைய கரைட் பண்ணி, லவ் பண்ணி, கல்யாணம் பண்ணிக்கனும்” முகத்தை தீவிரமாக வைத்துக்கொண்டு அரவிந்த் வசனம் பேச,

 

“எத்தனை பண்ணிடா?” என்று சலிப்பாக தலையசைத்தவர், “என்னால முடியல விட்டுடு, உனக்கெல்லாம் ‌அஞ்சு பேபி தான் சரி, அவகிட்ட போய் வாங்கி கட்டிக்க போ” என்று துரத்துவது போலவே சொன்னார்.

 

“ஓஹ் மேடம் ரொம்ப கோவமா இருக்காங்களோ?” 

 

“அதை நீயே போய் பார்த்துக்க”

 

“அப்ப என் அப்பாய்ன்மென்ட் ஆர்டர்?”

 

“ப்ச் டேய் சொன்னா புரிஞ்சிக்க அரவிந்த், இப்ப உனக்கு ஏத்தமாதிரி இங்க வேக்கன்ட் எதுவும் இல்ல. நார்மல் செகரட்டரி போஸ்ட்ல உன்ன எப்படி…?” அவர் சங்கடம் காட்ட,

 

“இப்ப நான் இருக்க மைண்ட் செட்டுக்கு என்னால வேறெங்கேயும் வேலை தேடி போக முடியாது மாம்ஸ், கொஞ்ச நாள் உங்க கூட இருக்கனும்னு தோனுது அதான்” அவன் தன்னிலை விளக்கம் தர,

 

பெருமூச்செறிந்தவர், “ஓகே மை பாய், பட், என் டாட்டர் கிட்ட நீ பர்மிஷன் வாங்கனும், அவளும் இப்ப எங்க கம்பெனியோட ஒன் ஆஃப் தி மேனேஜிங் டைரக்டர்” என்று அவர் முடிவாக சொல்ல, இவன் யோசனையோடு தலையசைத்து விட்டு நகர்ந்தான்.

 

பிரபாகரன் இடவலமாக தலையை அசைத்துவிட்டு,‌ நண்பனின் நினைவில் மனம் நொந்தவர், முயன்று தன் வேலையில் கவனத்தை செலுத்தலானார்.

 

****

 

‘அஞ்சலி பிரபாகரன்’ என்று மின்னிய பெயர்பலகையை ஒரு நொடி பார்த்து விட்டு, கதவை ஒற்றை விரல் மடக்கி தட்டி, “மே ஐ கம்மின்” என்ற அனுமதியோடு உள்ளே நுழைந்தான் அரவிந்த்.

 

அந்த அலுவலக அறையின் இருக்கையில் அமர்ந்திருந்தவள் இவனை நிமிர்ந்தும்‌ பார்க்கவில்லை. தன் கணினி திரையில் பார்வையை மேயவிட்டபடி இருந்தாள். 

 

அரவிந்த் சிறு‌ தயக்கத்துடன் அவள்முன் வந்து நிற்க, அவள் நிமிர்வதாக இல்லை.

 

அவளின் அடர் காஜலிட்ட விழிகளின் கருமணிகள் திரையில் அப்புறமும் இப்புறமும் நகர்ந்து ஜாலம் காட்டின. பிங்க் நிற உதட்டு சாயம் ஊறியிருந்த இதழ்கள் அழுத்தமாக மூடி இருந்தன. ஃபௌவுண்டேஷன் அரிதாரம் அவளின் தந்த நிற கன்னங்களை மேலும் மெருகூட்டி காட்டியது. கட்டுக்களின்றி விரித்துவிட்டிருந்த தோள் தொட்டு வழிந்த கூந்தல் கருமை நிறமாறி செயற்கை வண்ணக்கலவை காட்டியது. வெள்ளை சிவப்பு கோடுகளிட்ட அடர் சாம்பல் நிற சட்டை அணிந்து, சட்டையின் முழுக்கையை சற்று மடித்து விட்டு ஆளுமை தோரணையோடு அமர்ந்திருந்தாள்.

 

அவளை ஒரு பார்வையில் அளவிட்ட இவன் புருவங்கள் உயர்ந்தன. முன்பு கல்லூரி செல்லும் துறுதுறுப் பெண்ணாய் அவன் நினைவில் இருந்தவள், இன்று மொத்தமாக மாறி மிடுக்கான தோற்றத்துடன் முழு பெண்ணாக அவன் முன் அமர்ந்து இருந்தாள்.

 

அவளிடம் தெரிந்த ஆளுமையையும்

அவள் தன்னிடம் காட்டும் அலட்சியத்தையும் உள்வாங்கியபடி, “குட் மார்னிங் மேம்” என்றான் குரலில் மரியாதை தேக்கி.

 

அவளின் மைவிழிகள் இவனை ஏறிட்டு, “யார் மேன் நீ?” அவள் குரலில் கசப்பாக கேள்வி விழுந்தன.

 

“நியூ ஜாய்னி, பிரபாகர் சாரோட ரிகமண்ட் மேம்” அவன் சொல்ல, “நான்சென்ஸ்” அவளின் லிப்ஸ்டிக் உதடுகள் அப்பட்டமாக வெறுப்பை உமிழ்ந்தன.

 

“யூ… உடனே இந்த வேலைய விட்டு போ, இங்க உனக்கு வேலை கிடையாது, மைண்ட் இட்” காட்டமாக ஒலித்தது அவள் குரல்.

 

அரவிந்த் அவளை பார்த்தபடி அமைதியாக நின்றான்.

 

“ஒருதடவை சொன்னா புரியாதா உனக்கு? நான் டேட்கிட்ட பேசிக்கிறேன் நீ முதல்ல கிளம்பு” என்றாள் அவனை முறைத்து.

 

அப்போதும் அவன் அசையாமல் நிற்க, “இன்னும் உன் மரியாதைய கெடுத்துக்காத அரவிந்த். கெட் லாஸ்ட்” கோபமாக குரலுயர்த்தி கதவை கைக்காட்டினாள்.

 

“என்னால போக முடியாது. என்னை அப்பாய்ன்ட் பண்ணது பிரபா சர். அவர் சொல்லட்டும். அப்போ போறேன்” என்றான் பிடிவாதமாய்.

 

“ஓகே அவரையே உன்கிட்ட சொல்ல சொல்றேன்” என்று அவள் ரிசீவரை எடுக்க, இவன் அவளின் கையை தடுத்து பிடிக்க,

 

அவள் முறைக்கவும், “ப்ளிஸ் ஜெல்லி வேணாம், எனக்காக” அவளிடம் பார்வையால் கெஞ்சலானான்.

 

“நீ செய்யறதெல்லாம் உனக்கே முட்டாள்தனமா தெரியலையா டா?” அஞ்சலி இவன்மேல் இன்னும் காய்ந்தாள்.

 

“ஆசபட்டு பார்த்த வேலையை ஏனோதானோன்னு தூக்கி போட்டு வந்திருக்க, இப்ப என்னடான்னா நம்ம கம்பெனில வந்து வேலை பார்க்கிறேன்னு சொல்ற, அங்கிள் விட்டுட்டு போனாதால உனக்கு மூளை குழம்பி கிடக்குடா” தன் மென்னுடல் நடுங்க அவனிடம் கத்தினாள்.

 

தான் பிடித்திருந்த அவளின் கரத்தை தன் இரு கைகளுக்குள் வைத்து அழுத்தியவன், “என்னை நீயாவது புரிஞ்சிக்கடி… அம்மா, அப்பா ரெண்டு பேரும் என்னை விட்டு போயிட்டாங்க, நான் வேலை செஞ்சாலும் அது என் சொந்தநாடு இல்ல… என்னவோ இத்தனை வருஷம் கழிச்சு மறுபடி நான்… அனாதை ஆகிட்ட மாதிரி தோனுது… நிஜமா எனக்கு ரொம்ப பயமாயிருக்கு…” என்றவன் தலைக்கவிழ்ந்து கொண்டான்.

 

என்ன தான் உயிர் தோழியாக இருந்தாலும் அவள் முன் ஒரு ஆண்மகனாய் தான் உடைந்துபோவது, அவனுக்கே அசிங்கமாக இருந்தது.

 

அஞ்சலிக்கு அவனின் மனநிலை நன்றாகவே புரிந்தது. “லூசு, நாங்க இருக்கும் போது நீ எப்படி டா இப்படி எல்லாம் யோசிக்கலாம்?” என்று அவன் தலையை தட்டியவள், “அங்கிள், ஆன்ட்டிய நினச்சு நீ இப்ப டிப்ரஷன்ல இருக்க டா, அதான் உன்ன கவுன்சிலிங் போக சொன்னேன். மைண்ட்ட ரிலாக்ஸா வச்சுக்க சொன்னேன்… இங்க வந்தா பழசை எல்லாம் யோசிச்சு நீ கஷ்டபடுவன்னு தான் உன்ன அங்கேயே இருக்க சொன்னேன், நான் சொன்ன ஏதாவது ஒன்னையாவது கேட்டியா நீ” என்று மீண்டும் கடுகடுத்தாள்.

 

“அதான் இப்ப உன் பக்கத்திலேயே வந்துட்டேன் இல்ல, இனி நீ என்ன சொன்னாலும் தட்டாம கேப்பேனாம்” அரவிந்த் சொல்ல,

 

“இதை நான் நம்பனும்?”

 

“நம்பலைன்னா உன்‌ இஷ்டம்” அவன் தோள் குலுக்கவும், மேலாளர் அழைக்கவும் சரியாக இருந்தது.

 

“மேம் இன்டர்வியூக்கு எல்லாம் அசெம்பிள் பண்ணியாச்சு, கேன்டிடேட்ஸ் வெயிட் பண்றாங்க” என்க. “ஓகே ஐ’ல் கம்’ என்று அழைப்பை துண்டித்தவள் எழுந்து நடந்தாள்.

 

“எங்க?” அவன் வினவ,

 

“இன்டர்வியூ…”

 

“ஓய் நான் ஆல்ரெடி அம்பாய்ன்டட்”

 

“குறுக்கு வழியில் அம்பாய்ன்ட் ஆனன்னு சொல்லு, நேர்மையானவனா இருந்தா, இன்ட்ர்வியூ அன்டர்ன் செஞ்சு, வேலை வாங்கி இருக்கனும்”

 

“நான் என்ன மாட்டேனா சொன்னேன். அப்பாவும் பொண்ணும் தான் என்னை விரட்டுறதுலயே குறியா இருந்தீங்களே அதான் அவசரப்பட்டேன்… இப்ப கூட நான் தயார். எங்க இன்டர்வியூ அட்டர்ன் பண்ணனும்?” அவன் மிடுக்காக கேட்க,

 

“ம்ம் குட், போய் முதல்ல அம்பாய்ன்மென்ட் ஆர்டர் கேன்சல் பண்ணிட்டு வா, நான் உன்ன இன்டர்வியூ எடுக்குறேன்” அஞ்சலி சொல்ல,

 

“என்ன மறுபடி முதல்ல இருந்தா… போடி நீயும் உன் வேலையும்” என்று கடுப்பானான். ‘தெரிந்தவர்களிடம் ஒரு வேலை கேட்டது குத்தமாடா!’ தன் நெற்றியை தானே அடித்துக் கொள்ள, அஞ்சலி அவனை பார்த்து மெலிதாக சிரித்து விட்டாள்.

 

தனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே அரவிந்தை அஞ்சலிக்கு நன்றாகவே தெரியும். நட்பு என்பதை தாண்டி இருவருக்கிடையே நல்ல புரிதல் உண்டு.

 

குடும்ப நண்பர்கள் என்பதாலும், இருவரும் ஒரே பள்ளி, கல்லூரி என பயின்றதாலும், இருவருக்கும் இடையேயான வயது வித்தியாசமும் இரண்டு வருடம் தான் என்பதாலும் நிறைய விசயங்கள் இவர்களுக்கு ஒத்துப்போகும்.

 

நான்கு வருடங்கள் இருவரும் பிரிந்து இருந்த போதும் கூட, இருவரும் பேசிக் கொள்ளாத நாள் ஒன்று இதுவரை இருந்ததில்லை. 

 

“போதும் போதும், என்னோட பர்சனல் அஸிஸ்டன்ட் போஸ்ட்க்கு தான் இந்த இன்டர்வியூ” அஞ்சலி விளக்க, அவன் ‘அப்பாடா’ என்று அமர்ந்து விட்டான். 

 

“சரி வா என்னோட ஜாய்ன் பண்ணிக்க” அஞ்சலி அழைக்க, “ஹலோ மேடம், நான் சார்க்கு தான் செகரட்டரி உங்களுக்கு இல்ல” அவன் சட்டம் பேச, “அப்ப நீ வரமாட்ட?” அவள் நெற்றி சுருக்கி கேட்டாள்.

 

அவன் மறுப்பாக தலையசைக்க, 

“கேன்டிடேட்ஸ் ஒன்லி லேடிஸ்” என்றதும் இவன் முகம் பளிச்சிட்டது.

 

“ஏய் இதையேன் இவ்ளோ லேட்டா சொல்ற? இன்டர்வியூ ஹால் எந்த பக்கம்?” என்று அரவிந்த் பிய்த்துக் கொண்டு பறக்க,

 

“டேய் பார்த்து ஜொல்லு விடுடா, கம்பெனி தாங்காது” அஞ்சலியின் கேலி குரலில், தன் ஆத்திரத்தை அடக்கி, அவள் பின்னால் மரிதையாக நடந்தான்.

 

அரவிந்த் தன்னிடம் பணிவாக நடந்து கொள்வது அஞ்சலிக்கு சகிக்கவில்லை.

 

“இதெல்லாம் தேவையா உனக்கு?” என்று முறைத்து விட்டு, எதையும் முகத்தில் காட்டாமல், நேர்முகத்தேர்வு பகுதிக்கு சென்று அமர்ந்தாள். அருகிருந்த இருக்கையில் அரவிந்தை அமரும் படி கைக்காட்ட, அவனும் அமர்ந்து கொண்டான்.

 

மேலாளர் அருளாளன், நெற்றி சுருங்க அரவிந்தை ஒருமுறை பார்த்துவிட்டு அமைதியானார்.

 

அஞ்சலி உத்தரவிட, தேர்வர்கள் ஒவ்வொருவராக உள்ளே வந்தனர். அஞ்சலி, மேலாளர் அருளாளன் தான் வழக்கமான கேள்விகளை கேட்டனர். அரவிந்த் அவர்களின் கல்வி, பயிற்சி சான்றிதழ் தகுதிகளை மேலோட்டமாக ஆராய்ந்து பார்த்து கொண்டான்.

 

முதற்கட்ட எழுத்து தேர்வில் தேறியவர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். கிட்டத்தட்ட முப்பது பேர். அனைவருமே இளம்வயது பெண்களாக தான் இருந்தனர். அழகு பதுமைகளாகவும் கூட. 

 

அங்கு வந்த ஒவ்வொரு பெண்ணின் முகத்திலும் பிரதிபலித்த பாவனைகளை அரவிந்த் கவனித்திருக்க, நிர்மலமான முகத்துடன் திடமாய் வந்து அமர்ந்தாள் அவள்.

 

இவன் பார்வை அலசி தேடியதில் அவளின் பதற்றத்தை வெகுவாக மறைத்து, தெளிவாக காட்டி அமர்ந்து இருப்பது தெரிந்தது. வாய்க்குள் சிரித்துப்படி அவளை கவனிக்கலானான்.

 

“மிஸ் அர்ச்சனா, உங்களை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க (What do you think of yourself?)” அஞ்சலி முதல் கேள்வி எழுப்ப,

 

“எந்த மாதிரியான சூழ்நிலையா இருந்தாலும் என்னால பதறாம கையால முடியும் மேம்” அர்ச்சனா வித்தியாசமாய் பதில் தர,

 

“மிட் நைட்ல உங்க தூக்கம் கலையும் போது உங்க அறை தீ பிடிச்சு எரியுது, அப்பவும் பதறாம இருப்பீங்களா?” இந்த கேள்வி அரவிந்த் இடமிருந்து வந்தது.

 

அர்ச்சனாவின் பார்வை அவனிடம் திரும்ப, “முதல்ல ஒரு ஷாக் வரும் தான் சர். அடுத்து அங்க இருந்து எப்படி தப்பிச்சு வெளியே போறதுன்னு யோசிச்சு செயல்படுவேன். அய்யோ தீ பிடிச்சிடுச்சுனு ஓலமிட்டுட்டு இருக்க மாட்டேன்” நேராக பதில் தந்தாள்.

 

“இதுபோல உங்க வாழ்க்கையில ஏதாவது இக்கட்டான சூழ்நிலையை சமாளிச்சு இருக்கீங்களா?” மேலாளர் அருளாளன் கேட்க,

 

அர்ச்சனா முகம் சற்றே வாடி, சில நொடிகளில் நேரானது. “எங்க அப்பா ஒரு ஆக்ஸிடென்ட்ல தவறிட்டாங்க,  என்னோட பதினாலு வயசுல, எங்களுக்கு கொஞ்சம் கடன் இருந்தது. அம்மாவால தனியா அடைக்க முடியல,  கடங்காரங்க சத்தம் போட ஆரம்பிச்சாங்க. வேற வழி தெரியல. எனக்கும் தம்பிக்கும் விஷம் தந்துட்டு அவங்களும் சாகலாம்ற முடிவுக்கு வந்துட்டாங்க. தம்பி சின்ன பையன் அவனுக்கு தெரியல, எனக்கு தெரிஞ்சது. கடவுள் கொடுத்த உயிரை அழிச்சுக்க எனக்கு உடன்பாடு இல்ல.‌ எங்களுக்கு இருந்த உடமை எங்க வீடு, கொஞ்சம் நிலபுலன் தான். கடனுக்கு ஈடா இதையெல்லாம் அவங்களுக்கு கொடுத்துட்டு நாம வேற இடம் போகலாம்னு சொன்னேன். நாங்க வந்துட்டோம்… சாவ தாண்டி வந்துட்டோம்”

 

அர்ச்சனாவின் பதிலில் எதிரிருந்த மூவரின் முகத்திலும் அதிர்ச்சி மற்றும் பிரமிப்பு ரேகைகள்.

 

“வெல் டன், உங்க மனோ தைரியத்தை பாராட்டறேன். உங்க பலம், பலவீனமா நீங்க எதை நினைக்கிறீங்க?” அஞ்சலியின் அடுத்த கேள்வி.

 

“என்னோட வாழ்க்கையில எல்லா முடிவையும் நான் தான் எடுப்பேன். இது என்னோட பலம். அன்பா, அக்கறையா எனக்காக யாராவது ஏதாவது ஒரு சின்ன விசயம் செய்ய மாட்டாங்களான்னு ஒரு நப்பாசை தோனும், இது என்னோட பலவீனம்”

 

“எங்க கம்பெனி பத்தி, இந்த வேலை பத்தி உங்களுக்கு தெரிஞ்சதை சொல்லுங்க?” மேலாளர் அருளாளன் கேள்வி.

 

“மேடமோட பாட்டனாருக்கு அப்பா மார்கண்டேய பூபதி ஏற்படுத்தின கம்பெனி இது. இப்போ வளர்ந்து, பெரிய அளவில் எல்லாவிதமான வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி, இருசக்கர வாகனங்கள் உற்பத்தி, விற்பனையில தனி இடம் பிடிச்சு இருக்கு. சந்தையில உங்க கம்பெனி பொருட்களுக்கு தனித்தரமும், நம்பிக்கையும் நிறையவே இருக்கு. இந்த நிறுவனத்தோட நான்காம் தலைமுறை முதலாளி மிஸ் அஞ்சலி பிரபாகரன் மேடமோட உத்தரவுகளை செயல்படுத்தறது என்னோட வேலை…” 

 

அர்ச்சனா நிதானமாக ஒவ்வொன்றையும் சொல்லி செல்ல, அரவிந்த் அவளை மெச்சுதலாக பார்த்து இருந்தான். இவனுக்கும் கூட இந்த கம்பெனி பற்றி இந்தளவு தகவல்கள் தெரியாது. இனி தெரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணிக் கொண்டான்.

 

“உங்க பதிலெல்லாம் விரைப்பா இருக்கு. இதையே காரணமா சொல்லி உங்களுக்கு வேலை இல்லனு நாங்க சொன்னா?” அரவிந்த் கேள்வியை முடிக்காமல் நிறுத்தினான். 

 

மற்ற பெண்களில் இருந்து மாறுபட்டு, ஏதோ புதுவிதமாக தெரிந்த அவளின் பரிமாணம் இவனை கவர தான் செய்தது.

 

“என்னோட பதில் உங்களுக்கு விரைப்பா, திமிரா தெரியலாம் சர், ஆனா, இது என்னோட தன்னம்பிக்கை, நிமிர்வு. பரவால்ல சர், உங்க கம்பெனியில வேலை இல்லனா, வேற கம்பெனி இன்டர்வியூக்கு ப்ரேப்பேர் பண்ண போவேன்” சற்றும் சளைக்காமல் பதில் தந்தாள் அர்ச்சனா.

 

அஞ்சலி தலையசைத்து, “ஓகே அர்ச்சனா, நீங்க வெளியே வெயிட் பண்ணுங்க, நாங்க முடிவை சொல்வோம். பெஸ்ட் ஆஃப் லக்” என்க. அர்ச்சனாவும் சிறு மரியாதை தலையசைப்போடு எழுந்து சென்றாள்.

 

மீதமிருந்த தேர்வர்களை நேர்காணல் செய்து முடிக்கவும் முழுதாக அரை நாள் முடிந்து இருந்தது.

 

*****

 

நிஜம் தேடி நகரும்…