நீயில்லை நிஜமில்லை 21

images (6)

நீயில்லை நிஜமில்லை 21

 

விரலிடுக்கில் வெப்பம் 

யாசித்தேன்!

வாய் முத்தம் ஈரம்

யாசித்தேன்!

நீ என் காதல் உதறி

விலகுகையில்,

என் உயிர் நிஜத்தை

வெறுத்து உதறிவிட்டேன்!

 

மயங்கும் மாலையில், மேகத்துள் ஒளிந்து குளிருக்கு இதம் நாடும் வானம்… பச்சை கம்பளம் விரித்து வைத்த புல்வெளி… வளைந்து நெளிந்து செல்லும் ஒற்றையடி பாதை… அதில் அஞ்சலியும்‌ அரவிந்தும் முன்னும் பின்னுமாக நடை பயின்றனர். வழக்கம் போல அவன் கைப்பேசி உடனும், இவள் இயற்கையில் லயித்தும் வந்தனர்.

 

“ஷிட்… சுத்தமா சிக்னல் கிடைக்கில, இரிட்டேடிங்” அரவிந்திற்கு கைப்பேசியைத் தூக்கி போட்டு உடைக்க வேண்டும் போல் கடுப்பானது.

 

“ஹேய் ஹேய் அதோ அங்க மலை குரங்கு இருக்கு பாரு” அஞ்சலி தூர தெரிந்த பாறை மீது கைக்காட்ட,

 

“ம்க்கும் என் பக்கத்துல கூடத்தான் ஒன்னு இருக்கு” அரவிந்த் அதே கடுப்போடு சொல்லவும், “எங்க?” அவள் சுற்றும் முற்றும் ஆர்வமாக தேடி பார்த்தாள்.

 

அவன் கண்டு கொள்ளாமல் விலகி நடக்க, அஞ்சலிக்கு இப்போது தான் புரிந்தது. “டேய் என்னை பார்த்தா மலை கொரங்கு மாதிரியாடா இருக்கு…” அவன் பின் சட்டையைப் பிடித்து இழுத்து இரண்டு அடிகள் மொத்தவும், அவளிடம் இருந்து விலகியவன்,

 

“ரொம்ப ஓவரா தான் போற ஜெல்லி, நானும் ஏதோ ஜாலியா இருக்கியேன்னு விட்டா, ரொம்ப சைல்டிஷா பிஹேவ் பண்ற” அரவிந்த் கடிந்துக் கொண்டான்.

 

“ப்ச் எனக்கு என்ன தோனுதோ அதை தான் செய்வேன். உனக்கு பிடிக்கலன்னா போ” என்றவள் பட்டாம்பூச்சியின் பின்னோடு ஓட, இவன் தலையில் அடித்து கொண்டு நடந்தான்.

 

சற்று நேரத்தில் இருகைகளையும் குவித்து மூடி அஞ்சலி அவன் முன் நீட்ட, அரவிந்த் என்னவென்று நின்றான். அவள் கைகளை திறக்கவும் ஒரு வண்ணத்துப்பூச்சி தன் வண்ண சிறகுகளை அடித்து பறந்து அவன் முகத்தை மோதிச் செல்ல, அவன் முகம் புன்னகை பூசிக் கொண்டது.

 

“உனக்கு பொழுது போலன்னு என்னல்லாம் செய்ற ஜெல்லி நீ” அவன் சிரித்தபடி அலுத்துக் கொள்ள, “சும்மா தான்” என்று கண் சிமிட்டியவள்,

“வாழ்க்கை ரொம்ப சின்னதுன்னு தெரிஞ்சிக்கிட்டேன். அதான் என்ன பிடிச்சிருக்கோ அதை அப்பவே அனுபவிச்சுறேன்” என்று சொல்லி அவள் முன் நடக்க, அரவிந்தின் முகம் வாடி போனது. அவளின் நிலை குறித்து கவலையோடு பின் நடந்தான்.

 

காற்றில் ஈரப்பதம் கூடியது. வானில் மாற்றங்கள் தென்பட, சடசடவென குளிர் சாரலாய் மழை அவர்களை நனைத்தது. 

 

அரவிந்த் கையில் எடுத்து வந்திருந்த குடையை விரித்து,  திரவ பூக்களை தங்கள் மீது விழாது தடுத்திட்டான்.

 

“மழை வரும்னு மருது தாத்தா சரியா தான் சொல்லி இருக்கார், வேகமா நட” அரவிந்த் நடை வேகத்தை கூட்ட,

 

“எப்படியும் நனைய தானே போறோம், மெதுவாவே போலாம், இந்த சாரல் மழை எவ்ளோ அழகா இருக்கு பாரேன்” என்றவள் குடைக்கு வெளியே கை நீட்டி மழையோடு விளையாடலானாள்.

 

குளிர் காற்றில் உடலில் வெடவெடப்பு கூட, “நான் உன் கைய பிடிச்சிக்கவா?” அஞ்சலி கேட்க,

 

“இதென்ன பர்மிஷன் கொடுக்கனுமா?” அரவிந்த் கிண்டலாக சொல்ல, அவள்

அவன் கை வளைவில் தன் இரு கைகளை கோர்த்து கொண்டு நடந்தாள்.

 

“அரவிந்த்… நான் உன் தோள் சாஞ்சிக்கவா?” அஞ்சலி மறுபடி தயங்கி கேட்க, நின்று திரும்பி அவளை வித்தியாசமாக பார்த்தவன், “என்ன ஆச்சு உனக்கு, உன்ன புரிஞ்சுக்கவே முடியல, ம்ம்” என்று ஆமோதித்து தலையசைக்க, அவன் தோளில் தலை சாய்த்து, அவனோடு ஒடுங்கி நடந்தாள்.

 

மழை சாரலில் ஒற்றை குடைக்குள் அவனோடு சேர்ந்து கடக்கும் இந்த  தருணங்களைப் பொக்கிஷமாக சேமித்துக் கொள்ள முயன்றது அவளின் காதல் மனது.

 

அரவிந்திடம் எந்த சஞ்சலமும் தோன்றவில்லை. அவளோடு வேகமாக நடக்க இயலாமல் சற்று தாமதித்து நடந்தான். 

 

இணையாத இதயங்களின் இதமான நிமிடங்கள் பாரம் கூட்டுவதாய்.

 

ஒரு நொடியும் விலகாமல் அவனை மட்டுமே எண்ணத்தில் ஏந்தி நிற்பவள், இந்த மழையும் குடையும் அவனும் இவளின் நேசம் சுமந்த இதயத்தை சுகமாய் நழுவ செய்வதாய்.

 

கடந்ததை எல்லாம் மறந்துவிட்டு இந்த நிமிடங்களை மட்டுமே சுகிக்க மனது பேராசைக் கொண்டது. 

 

“அரவிந்த் எனக்கு மழையில நனையனும் போல இருக்கு. நனைஞ்சக்கவா” அவள் சிணுங்கி நிற்க, அவன் ‘நீயென்ன லூசா?’ என்பது போல் முறைத்து வைத்தான்.

 

அவன் முறைப்பை உதறி, குடையை விட்டு வெளி வந்தவள், பரவசமாக குளிர் மழைத் தூறலில் முகம் நிமிர்த்தி நின்று கொண்டாள்.

 

“ஏய் லூசு, இந்த மழையில நனைஞ்சா உடம்பு விரைச்சு போகும்” அரவிந்த் அவளை எச்சரிக்க, அவள் அவன் சொல்வதை சட்டை செய்வதாக இல்லை.

 

குளிர் ஏந்தி வந்த ஊசி முனைகளாக அவள் தேகத்தை துளைத்த ஒவ்வொரு மழைத்துளியும், உடலின் செல்களை எல்லாம் வெடவெடக்க செய்வதாக.

 

மழையின் வேகம் கொஞ்ச கொஞ்சமாக கூடிக் கொண்டே போக,‌ சொல்பேச்சு கேட்காது நனைந்து நின்றவளை குடைக்குள் இழுத்து கொண்டான். அவளின் உடல் மொத்தமாக குளிரில் வெடவெடத்தது.

 

“பைத்தியமா உனக்கு? நான் சொல்ல சொல்ல கேக்காம இப்படி அடம்பிடிக்கற” என்று அவன் திட்டிட, “ஸ்பூ ரொம்ப குளுருதுடா” பற்கள் தந்தியடிக்க

 சொன்னவளை தோளோடு அணைத்தபடி வேகமாக கெஸ்ட் ஹவுஸ் வந்து சேர்ந்தான்.

 

அவர்கள் நனைந்து வந்த கோலத்தை பார்த்த, மருதாண்டி, தங்கம்மா இருவருக்கும் தூண்டை எடுத்து கொண்டு விரைந்து வந்தனர்.

 

“என்ன இது சின்ன புள்ளங்க மாதிரி இந்த மழையில போய் நனைஞ்சு வந்திருக்கீங்க, சீக்கிரம் போய் ஈர உடையை மாத்துங்க, உடம்புக்கு வந்திட போகுது” என்று தங்கம்மா பதறினார்.

 

மருதாண்டி விறகு‌ கட்டைகளை இட்டு அறைக்குள் இருந்த குளிர் விரட்டும் கணப்படுப்பை(fireplace) எரியூட்டினார்.

 

உடை மாற்றி வந்த இருவரும் குளிருக்கு இதமாக நெருப்பின் முன்பு அமர்ந்து கொண்டனர்.

 

அஞ்சலி வெடவெடத்தபடியே இரு உள்ளங்கைகளையும் அனலில் காட்டி சூடேற்றி தன் கன்னங்களில் ஒற்றிக் கொள்ள, அப்போதும் கூட அவள்‌ உடல் குளிரில் நடுங்க தான் செய்தது. 

 

“கொஞ்சமாவது அறிவிருக்கா உனக்கு… இதையும் நம்மூர் மழைனு நினச்சுட்டியா? உடம்பு சரியில்லாம போச்சுன்னா, ஹாஸ்பிடல் எதுவும் கூட பக்கத்துல இல்ல, மறுபடி இப்படி பண்ண எனக்கு கெட்ட கோபம் வந்திடும்” அரவிந்த் அவளிடம் படபடவென பொறிந்து தள்ளினான்.

 

“இப்ப நனையாம எப்போ நனைய போறேன் அதான்” என்று அஞ்சலி கண்சிமிட்டி சிரித்து, இரண்டு கைகளால் தேநீர் கோப்பையை பற்றியபடி, ருசித்து பருகலானாள்.

 

காரணமே இல்லாமல் அவளுக்குள் உற்சாகம் குமிழிட்டபடி இருந்தது.

 

“இங்க வந்ததுல இருந்து ஒரு மார்க்கமா தான் பண்ற நீ” அவனும் தேநீரை பருகியபடி சொல்ல, அதற்கும் இவள் சிரித்து வைத்தாள். 

 

நேரமாக ஆக வெளியே மழை நன்றாக வலுத்து கொட்டியது. மின்சாரமும் துண்டிக்கப்பட, அந்த மாளிகையை இருள் சூழ்ந்து கொண்டது. 

 

“தாத்தா இன்வெர்ட்டர் இல்லயா இங்க?” அரவிந்த் கத்தி குரல் கொடுக்க, 

 

“அது சரியா வேலை செய்யலங்க தம்பி…” மருதாண்டி தலையை சொரிந்தபடி வந்தார்.

 

“இதையெல்லாம் செக் பண்ணி வைக்கமாட்டீங்களா? மழையில, நைட் டைம்ல கரெண்ட் இல்லாம எப்படி?” அரவிந்த் கோபமாக கேட்க, அவர் முகம் விழுந்து போனது.

 

“விடு அரவிந்த், இப்ப கோப படுறதால எதுவும் ஆக போறதில்லை” அஞ்சலி சமாதானத்திற்கு வந்தாள். இங்கு வந்த ஒருவாரமாக தங்களை அன்பாக கவனித்து கொள்ளும் அந்த பெரியவர்களை இவளுக்கு மிகவும் பிடித்து இருந்தது.

 

வேறுவழியின்றி அரவிந்த் சலித்தப்படி அமைதியானான். பெரியவர், அவர்கள் அறையில் பெரிய மெழுகுவர்த்தி ஒன்றை ஏற்றி வைத்துவிட்டு சென்றார்.

 

அடைமழையின் சத்தமும், தீயில் விறகுகள் முறியும் சத்தம் மட்டுமே அங்கே ஒலிப்பதாய்.

 

அரவிந்த் பார்வை எரியும் நெருப்பிலேயே நிலைத்திருந்தது. 

 

நெடுமாறன் சொல்படி இங்கே அஞ்சலியை அழைத்து வந்து ஒருவாரம் கடந்திருந்தது. இன்னும் எத்தனை நாட்கள் இங்கேயே தங்க வேண்டும் என்பதும் தெரியவில்லை. பெரியநாயகி குடும்பத்தைப் பற்றி இன்னும் விசாரிக்க துரைசாமி ஒருபுறம் சென்றிருந்தார். நெடுமாறன் ஒருபுறம் வேறு வகையில் அந்த மர்ம மனிதனை தேடி கொண்டிருந்தார்.

 

‘கிட்டத்தட்ட இரண்டு மாத போராட்டம், இதுவரை அந்த மர்மமானவனைப் பற்றி ஒரு சிறு துப்பும் கிடைத்தப்பாடில்லை. அவன் அத்தனை புத்திசாலியா? அல்லது தாங்கள் தான் அத்தனை முட்டாள்களா?’ அரவிந்த் யோசனை ஓடிக் கொண்டிருந்தது.

 

‘நீ வடிகட்டின முட்டாள் அரவிந்த், எதையுமே மனசால யோசிக்கிறவன்…’ அர்ச்சனா அன்று திட்டியது சரியாக இப்போது நினைவு வந்தது.

 

‘சனா சொன்னது உண்மைதான? மனசால இல்ல மூளையால சிந்திச்சா தான உண்மை தெரிய வரும்! ஆனா ஏன் அந்த கொலைகாரன் என் கூடவே இருக்க மாதிரி தோனுது? இது நிஜமா? இல்ல என்னோட கற்பனையா?’ அரவிந்த் தன் சுய ஆய்வில் இருந்தான்.

 

கணப்படுப்பின்(fireplace) வலப்புறம் அமைந்த நீள சோஃபாவின் ஓரத்தில் அஞ்சலி கால்கள் மடக்கி உடலை குறுக்கி, போர்வைக்குள் அடங்கி அமர்ந்திருக்க, எதிரில் ஒற்றை நாற்காலியில் அரவிந்த் அமர்ந்திருந்தான். இருவருக்கும் நடுவே சிறிய அளவிலான மேசை.

 

அறையின் மறுபுறம் அமைந்த உயர்ந்த மேசையில் மெழுகுவர்த்தி ஒளிவீசிக் கொண்டிருக்க, மற்ற இடங்கள் எல்லாம் இருளுக்குள் ஒளிந்து கொண்டதாய்.

 

அஞ்சலியின் பார்வை அரவிந்த் மீது பதிந்திருந்தது.

 

காதல் கூடவில்லையானாலும், மனம் கொண்ட நேசம் மாறி போகாதல்லவா!

 

இந்த குளிரும் வெப்பமும், ஒளியும் இருளும், மழையும் இரவும், அவனும் தனிமையும் இவளுள் உதிர்ந்த நேச சருகுகளை துளிர்தெழ செய்வதாய்.

 

“அரவிந்த்…”

 

அவளின் ஆழமான அழைப்பில் கலைந்து நிமிர்ந்தான். 

 

“என்னவோ, இப்ப ரொம்ப ஹேப்பியா ஃபீல் பண்றேன்… ஏன்னு‌ கூட தெரியல” அவள் பிதற்ற,

 

“ரீசன்‌ எனக்கு நல்லாவே தெரியுது உனக்கு மர கழன்டு கிடக்கு” அவன் கேலி பேசவும், இவள் சிரித்து வைத்தாள். 

 

“ஆமா எனக்கு மர கழன்டு ரொம்ம்ம்ப வருசமாச்சு… எப்ப உன்மேல ஆசப்பட்டேனோ அப்பவே நான் லூசாயிட்டேன்… இல்லனா, என் ஃபீலிங்க்ஸ் எதையும் உன்கிட்ட ஷேர் பண்ணாம எனக்குள்ளேயே புதைச்சு வச்சு இருப்பேனா?” அவள் உணர்ச்சிவசப்பட்டு பேச,

 

“நீ கொஞ்ச நேரம் படுத்து ரெஸ்ட் எடு ஜெல்லி… நான் டின்னர் ரெடி ஆகிடுச்சான்னு பார்த்துட்டு வரேன், இருட்டுல எதை கலந்து வைக்கிறாங்களோ?” அரவிந்த் அங்கிருந்து தப்பித்து கொள்ளத்தான் முயன்றான்.

 

“இப்ப என் ஃபீலிங்க்ஸ உன்கிட்ட சொல்லனும் போல தோனுது… ஆனா நீ கேக்க மாட்டல்ல…” என்றவள் முகம் வாடி துவண்டு போக, எழுந்தவன் மறுபடி அமர்ந்து விட்டான். 

 

“ப்ச் ஜெல்லி, இப்பெல்லாம் நீ ஓவர் எமோஷ்னல் ஆகுற, அது உன் ஹெல்த்க்கு நல்லதில்ல” அவன் அக்கறையாக சொல்ல, இவள்  தலையாட்டிக் கொண்டாள்.

 

“எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும் அரவிந்த். இன்னும் சொல்ல போனா உன்ன மட்டும் தான் பிடிக்கும்… உனக்கு அப்புறம் தான் அம்மா, அப்பா, அம்மம்மா எல்லாரும்…” அவள் நேற்றுவரை சொல்லாத நேசத்தை இன்று சொல்லில் கூட்டினாள்.

 

இதை முன்னமும் அவள் சொல்லி இருக்கிறாள் தான். அப்போது அவனுக்கு காதலை பற்றி எண்ணம் தோன்றாததால், அவள் அன்பை சாதாரணமாக எடுத்து கொண்டிருந்தான்.

 

“உனக்கும் என்னை அத்தனை பிடிக்கும்னு நானே முட்டாள்தனமா நினைச்சுகிட்டேன்… உனக்கு நான் அவ்வளவு பிடிச்சவளா இல்லல?” அவள் விரக்தியாக கேட்க,

 

‘நான் தான் அஞ்சலிய புரிஞ்சுக்காம இருந்திட்டேனோ?!’ அவன் ஆண் மனம் சஞ்சலப்படலானது. அஞ்சலி இதமாய் முகம் இளக, ஆழ்ந்த குரலில் கனவில் பேசுபவளை போல பேசிச் சென்றாள்.

 

“ஒருநாள், நீ எனக்காக ஓடி வருவ… நான் தான் உனக்கு எல்லாம்னு சொல்லுவ… என்னை அள்ளி எடுத்துக்கவ… அன்னிக்கு இந்த உலகத்திலயே நாம தான் ரொம்ப சந்தோஷமானவங்களா இருப்போம்னு… அந்த ஒருநாளுக்காக எத்தனையோ நாள் காத்திருந்தேன் தெரியுமா? அப்படியொரு நாள் என் வாழ்நாள்ல வரவே வராதுன்ற உண்மை கூட தெரியாம…!”

 

“…!”

 

“நாம திகட்ட திகட்ட காதலிக்கனும்… நம்ம ஜோடிய பார்க்கிற எல்லாரும் வாய்பிளக்கனும்… மணமேடையில நான் உன் கை சேரனும்… என்னோட தனிமை இரவுகள் எல்லாம் உன்னோட முடிஞ்சி போகனும்… எல்லை கடந்து நாம சேர்ந்து வாழனும்னு…”

 

“…!”

 

“நமக்கு ஆணோன்னு பொண்ணொன்னுனு குழந்தைங்க பிறக்கனும்… அவங்கள வளர்க்கனும்… ஆளாக்கனும்… நமக்கு வயசாகனும்… அப்பவும் நம்மோட நேசம் இளமையா சிலிர்க்கனும்… அப்பவும் நான் உன்ன மடிதாங்கனும்…!” அவளால் மேலும் சொல்ல இயலவில்லை. மூச்சு முட்டியது. மூச்சு வாங்கியபடி, கண்களை இறுக மூடி பின்புறம் தலைசாய்த்து கொண்டாள்.

 

அவளின் மூடிய இமையோரம் கண்ணீர் கசிய, இவன் தான் சிதறிப் போனான்.

 

“ராத்திரி வானத்து நட்சத்திர கூட்டம் போல… என் மனசு முழுக்க உன்னோட கனவு கூட்டம் தான் சூழ்ந்திருக்கு, எண்ணி எண்ணி அழிச்சும்… முடியல”

 

“…!”

 

“சேர்த்து வைக்கும் போது தெரியாம போச்சு… இந்த கனவெல்லாம் எப்பவும் கனவா மட்டுந்தான் இருக்கும்னு…” அவள் கண்கள் திறக்காமலே உடைந்து பேச,

 

“அஞ்சலி…” இவன் குரலும் மனதும் ஒன்றாய் உடைந்து போனது அவளுக்காக.

 

அவன் அழைப்பில் நிமிர்ந்தவள் முயன்று புன்னகைத்தாள்.

 

“அரவிந்த்… இப்படியொரு நாள், என் கற்பனையில வந்தது தெரியுமா?”

 

“…?”

 

“இந்த ராத்திரி மழை… அந்த கேன்டில் லைட் வெளிச்சம் எல்லாம்… நான் புதைச்சு வைக்கிற உணர்வுகளை கிளறி பார்க்குது…”

 

“…!”

 

“இதே மாதிரி இரவு மழையில, இதே போல கேன்டில் வெளிச்சத்தில… நீயும் நானும்… முதல் முத்தம் பகிர்ந்துக்கனும்னு ஆசை வளர்த்து வச்சிருந்தேன்… நமக்கு வயசாகி வாழ்ந்து முடிச்ச பின்னும் அதோட தித்திப்பு மனசோரத்தில இதம் சேர்க்கனுமெல்லாம்…” அஞ்சலி நிறுத்திக் கொண்டாள். அரவிந்த் தடுமாறிக் கொண்டிருந்தான்.

 

“நீ சொன்னது சரிதான், நான் அதிகமா எமோஷனல் ஆகுறேன்! உன்னால ரொம்ப டிஸ்டர்ப் ஆகுறேன்!” அவள் வறட்சியாக சொல்லி சோர்ந்தாள்.

 

நெருப்பில் உறுக்கி வார்க்கப்பட்ட தங்க சிற்பம் போல் எந்த குற்றம் குறையும் காண இயலாத பேரழகு பதுமை அவள்.

அவளின் வெதும்பலுக்கும் வாட்டத்திற்கும் தான் மட்டுமே காரணம் என்ற குற்ற குறுகுறுப்பு மேலோங்கியது இவனிடம்.

 

அரவிந்த் எழுந்து, குறுக்கே இருந்த சிறு மேசையை சுற்றி அவளருகே வர, அஞ்சலியின் அகன்ற விழிகள் அவன் முகம் நோக்கி தயங்கி நிமிர்ந்தன. அவன் கண்களில் சிவப்பேறி இருந்தது. அவன் முகமும் பரிதவிப்பை பறைசாற்றியது.

 

அவளிடம் அமர்ந்தவன், தணலில் தகித்த அவளின் முகத்தை கைகளில் ஏந்திக் கொள்ள, இவளின் விழிகளில் நீர் திரண்டது.

 

அவன் செயல் உணர்ந்து, இவள் மறுத்து தலையசைத்தாள். “வேணா அரவிந்த்… நான் உன்னோட காதல் இல்ல…” அவள் இமைகளில் தேங்கிய கண்ணீர் கன்னங்களில் வழிந்து அவன் கரங்களையும் ஈரமாக்கியது.

 

அவன் நெகிழ்ந்திருந்தான். அவளை நெருங்கி இருந்தான் தான். ஆனால், அவளிதழை நெருங்கும் துணிவில்லை. அவனுக்குள் மிரண்டு தாமதித்தான். தன் சனாவிற்கு துரோகம் செய்யும் அளவு துணிவில்லை அவனுக்கு.  அஞ்சலி அவன் தோளில் முகம் புதைத்து கதறி விட்டாள். 

 

இவள் காதலின் வலி போக்கவென, தன் காதலுக்கு துரோகம் நேர்வதை விரும்பாது அவன் கண்ணியம் இங்கே ஒத்துழைக்க மறுத்தது.

 

“சாரி அஞ்சலி… என்னால முடியல… முடியாது…” அரவிந்த் தவிப்போடு சொல்ல,

 

“உன்னால முடியாதுன்னு தெரியும் டா… எனக்கு தான் மரகழன்டு இருக்குனு சொன்னல்ல… உனக்கும் தான்” என்றவள் அவனிடம் இருந்து விலகி கண்ணீரை துடைத்துக் கொண்டு, தன்னை மீட்டுக் கொள்ள முயன்றாள்.

 

அரவிந்த் தன்நிலை புரியாது இறுகி அமர்ந்து இருந்தான். தன்னை குற்றம் சொல்வதா? இல்லை அவளை குற்றம் சொல்வதா? இல்லை தங்களை சிக்க வைத்து வேடிக்கை காட்டும் விதியை  நொந்து கொள்வதா? என்று மனம் பேதலித்தது.

 

அவன் மன இறுக்கம் உணர்ந்தவள், “அரவிந்தா, என்னை பத்தி ரொம்ப யோசிக்காத, உன்கிட்ட எல்லாத்தையும் உளறி கொட்டிட்டேன் இல்ல. இப்ப பாரு நான் தெளிவாகிட்டேன்” என்க. அவனும் அவளைப் பார்த்தான். அவள் முகம் தெளிந்து தான் தெரிந்தது.

 

அவளிடம் ஏதோ தேறுதல் வார்த்தை சொல்ல வேண்டும், ஆனால் என்ன சொல்ல இவனுக்கு தெரியவில்லை. அவன் முகத்தில் வேதனை கூடியது.

 

“நீ கீதை படிச்சிருக்கியா அரவிந்த்… எது நடந்ததோ? அது நன்மைக்கே நடந்தது! எது நடக்கிறதோ? அது நன்மைக்கே நடக்கிறது! எது நடக்க இருக்கிறதோ? அதுவும் நன்மைக்கே நடக்கும்!”

 

“என்னது கீதை உபதேசமா?” அவன் கசந்து கேட்க,

 

“ஆமா, உனக்கு என்மேல காதல் இல்ல, அர்ச்சனாவ தான் விரும்புறேன்னு நீ சொன்னப்ப. எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? கோபம், ஆத்திரம், நீ எனக்கு மட்டும் தான்ற பிடிவாதம்… அதால தான் அர்ச்சனாவ உன்கிட்ட இருந்து பிரிக்க கூட பார்த்தேன்… ஆனா, இப்பெல்லாம் உனக்கு என்மேல காதல் வராம போனதும் நல்லதுக்கு தான்னு தோனுது…

 

தேங்க் காட், உனக்கு என்மேல லவ் வரல…! ஒருவேளை வந்திருந்தா, என் ஒருத்தியால உன் எதிர்காலமே கேள்வி குறியாகி இருக்கும்… நீ என்கூட இருந்தா மட்டும் தான் சந்தோசமா இருப்பன்னு நினச்சு இருந்தேன்… லேட்டா தான் புரிஞ்சது, அது உண்மையில்ல…

 

“நான் உன்கூட இல்லன்னாலும், நீ சந்தோசமா‌ இருப்ப, எதிர்காலம் உங்களுக்கு எல்லா சந்தோசத்தையும் தரும்… அரவிந்த் ஹேப்பீனா, அஞ்சலியும் ஹேப்பீ தான்” அவள் உணர்ந்து சொல்ல,

 

“நூத்து கிழவி மாதிரி பேசாத, கடுப்பாகுது எனக்கு” அரவிந்த் பற்களை கடித்து கொண்டான். அவள் பேச்சின் பொருள் அவனுக்கும் புரியாமல் இல்லை.

 

“எனக்கு என்னடா, பிறந்ததுல இருந்து எந்த கஷ்டமும் இல்லாம, நிறைய நிறைய சந்தோசத்தை அனுபவிச்சுட்டேன். இப்ப கூட என் ஒருத்திக்காக நீங்க எல்லாருமே என்கூட நிக்கிறீங்க… நிஜமா இதெல்லாம் எனக்கு நிறைவா ஃபீலாகுது தெரியுமா?” என்று ஆழ மூச்செடுத்து கொண்டாள்.

 

“ஏய் போதும் ஜெல்லி, ப்ளீஸ்” அரவிந்த் நொந்து போய் அவளிடம் கெஞ்ச, அவள் சிரித்து விட்டாள்.

 

“உனக்கு தெரியுமா நீ ரொம்ப இன்னோசென்ட்… சனாவ நினச்சா தான் கொஞ்சம் பரிதாபமா இருக்கு ச்சு” அவன் மனநிலையை மாற்ற கேலியில்‌ இறங்கினாள்.

 

“ப்ச் சனா என்னை நம்பவே இல்ல தெரியுமா? நானும் அவ சொன்ன மாதிரி முட்டாள்தனமா தான் இருக்கேன்” அரவிந்த் நொந்து சொல்ல,

 

“உன்ன முட்டாள்னு சொன்னாளா?” அஞ்சலி போலியாக வியந்து கேட்க,

 

“இல்ல, வடிகட்டின முட்டாள்னு சொன்னா” அரவிந்த் சலித்து சொல்லவும், அஞ்சலி அவனை பார்த்து பெரிதாகவே சிரித்து விட்டாள்.

 

“சரியா தான் சொல்லி இருக்கா… ‘இந்த அடி முட்டாள் எத்தனை அஞ்சலி வந்தாலும் அவனோட சனாக்கு துரோகம் செய்ய மாட்டான்’னு நான் சொன்னதா அர்ச்சனா கிட்ட சொல்லிடு” என்றாள் இதமாய்.

 

“நீ இப்படியே இருக்காத அஞ்சலி… பழைய மாதிரி தைரியமா, உன்ன மீட்டுக்கோ…” அரவிந்த் அவளுக்காக பேச,

 

“முயற்சி பண்ணிட்டேன் முடியல டா… அளவுக்கு அதிகமா நேசம் வைக்கிறது கூட, ரொம்ப பெரிய தப்புன்னு இப்ப புரிஞ்சிக்கிட்டேன்…” அவள் இயல்பாகவே சொல்ல, அவன் முகம் தோய்ந்தது.

 

“உன்ன ரொம்ப கஷ்டப்படுத்துறேன் இல்ல… இதுக்காக தான் உன்ன அவாய்ட் பண்ணேன். நீதான் கேக்கல…” 

அஞ்சலி பேசும் போதே, தடதடவென்ற கதவடிக்கும் சத்தம் கேட்க, இருவரும் திரும்பினர்.

 

மறுபடி அதே தடதடவென்ற சத்தம்!

 

“இந்த நேரத்தில யாரது? கதவ இடிக்கிறது?” கையில் டார்ச் லைட் உடன் மருதாண்டி சென்று பார்க்க, “தாத்தா, நில்லுங்க” அரவிந்த் குரல் அவரை நிறுத்தியது.

 

டார்ச் லைட்டை இவன்‌ வாங்கிக் கொண்டு வாசல் கதவை நோக்கி வந்தான். இன்னும் வேகமாக தடதடத்தது கதவு.

 

சற்று எச்சரிக்கையாக அவன் கதவை திறக்க, வெளியே அர்ச்சனா நின்றிருந்தாள்.

 

அரவிந்திற்கு ஒருநொடி அது கனவாக தோன்ற, தலையைக் குலுக்கிக் கொண்டு பார்த்தான். அர்ச்சனா அனல் தெறிக்கும் பார்வையோடு உள்ளே வந்தாள். 

 

****

 

நிஜம் தேடி நகரும்…