நீயில்லை! நிஜமில்லை! 22

IMG-20200630-WA0009

நீயில்லை நிஜமில்லை 22

என்னில் நான் நிஜமில்லை!உன்னோடு இருந்த ஒவ்வொரு தருணமும் நான் நிஜமாக மட்டுமே இருந்தேன் என்பதை அறிவாயா?!

அர்ச்சனா அங்கு வந்த அதிர்ச்சியை விட,  சிறு நிம்மதி தான் அரவிந்திற்குள் பரவியது.

“ஹோ காட், என்னங்கடா கெஸ்ட் ஹவுஸ்னு சொன்னீங்க, இதை பார்த்தா பேய் பங்களா மாதிரி இருக்கு” என்ற கேலியோடு நெடுமாறனும் உள்ளே வந்தார்.

“இன்ஸ்பெக்டர் நீங்க வரபோறதா இன்ஃபார்ம் பண்ணவே இல்லயே” என்று அரவிந்த் திகைத்து கேட்க,

“ம்ம் அதுக்கு உன் மொபைல் எடுக்கனும் டா” அவர் கடுப்பாகச் சொல்ல, “இங்க சிக்னல் கிடைக்கல சார் நான் என்ன செய்ய” என்று அவர்களை உள்ளே அழைத்து வந்தான்.

நெடுமாறன் உடன் இரண்டு காவலர்கள் அவர்களோடு அர்ச்சனாவும் வந்திருந்தாள்.

“தாத்தா, இவங்க எல்லாரும் நனைஞ்சு வந்திருக்காங்க, டவல் கொடுங்க, குடிக்க சூடா எதாவது சீக்கிரம் எடுத்துட்டு வாங்க, எல்லாருக்கும் சேர்த்து‌‌ டின்னர் ரெடி பண்ணிடுங்க” அரவிந்த் உத்தரவிட மருதாண்டி காக்கிச்சட்டை காவலர்களை சற்று மிரட்சியோடு கவனித்து, தலையசைத்து நகர்ந்தார்.

அங்கே வந்த அஞ்சலியும் அர்ச்சனாவையும் காவலர்களையும் பார்த்து திகைத்து நிற்க, “சனா நீயும் போய் தலை துவட்டி வேற டிரஸ் மாத்திக்கோ” என்று அக்கறையாக சொன்னவன், “அஞ்சலி சனாக்கு ட்ரஸ் எடுத்து கொடு” என்று ஆணைப் போல சொல்ல, பெண்கள் இருவரும் அவனை வித்தியாசமாக பார்த்தனர்.

“உள்ள வா அர்ச்சனா” அஞ்சலி அழைக்க, குளிரில் நடுங்கிய படியே அர்ச்சனா தயங்கி நின்றிருந்தாள். “போ சனா” அரவிந்த் உந்தவும் தான் சங்கடத்தோடு அவளுடன் நடந்தாள்.

சில நிமிடங்களில் அனைவருக்கும் சூடான சுவையான சூப் பரிமாறப்பட்டது. அதிக தூரம் கடந்து வந்தவர்களுக்கு சற்று தெம்பைக் கூட்டியது.

“என்னாச்சு சார் திடீர்னு வந்திருக்கீங்க, ஏதாவது ப்ராப்ளமா?” அரவிந்த் விசாரிக்க, காதம்பரி தேவிக்கு வந்த மர்மமான மிரட்டல் அழைப்பைப் பற்றி சொன்னார்.

“இந்த இடம் அவனுக்கு தெரிஞ்சு இருக்க வாய்ப்பில்ல சார், இங்க அஞ்சலி சேஃபிடியா இருக்கா” என்று உறுதி கூறினான் அரவிந்த்.

“ம்ம் அவனுக்கு அஞ்சலி அரண்மனையில இல்லனு டவுட் வந்திருக்கும் அதான் போட்டு வாங்க கால் பண்ணி மிரட்டி இருக்கான். உன் மொபைல் பிக்கப் ஆகாததால அஞ்சலி பேரண்ஸ் ரொம்ப நர்வஸ்‌ ஆயிட்டாங்க. அதான் நானும் இங்க வர வேண்டியதா போச்சு” என்றார்‌ நெடுமாறன்.

“நீங்க வந்தது ஓகே, ஆனா அர்ச்சனா எப்படி உங்க கூட?” அரவிந்த் நம்பமுடியாமல் கேட்க, அவர் சிரித்தார்.

“என்ன சொல்றது? நீ இல்லைனு பிரபாகர் சார் கிட்ட உன்னபத்தி விசாரிச்சு இருப்பா போல, அவர் சரியா பதில் தரலன்னு, நேரா எங்கிட்ட வந்து, ‘என் அரவிந்தை காணோம் கண்டுபிடிச்சு தாங்க’னு கம்பிளைன்ட் நீட்டினா பா…” 

“என்ன கம்ப்ளைன்ட்டா?” அரவிந்த் அதிர,

அவன் தோள் தட்டியவர், “நீ பத்திரமா தான் இருக்கன்னு நான் எடுத்து‌ சொல்லியும் அந்த பொண்ணு எதையும் கேக்கவே இல்ல. அப்படியொரு பிடிவாதம். வேறவழி‌ இல்லாம எங்களோடவே அழைச்சிட்டு வந்திட்டேன்” என்றார்.

அரவிந்த் அவரை நம்பாமல் பார்த்தான். “அர்ச்சனா பிடிவாதத்துக்காக மட்டும் இவ்வளவு தூரம் கூட்டிட்டு வர ஆளில்லயே நீங்க… வேற ஏதோ ப்ளான் பண்ணி இருக்கீங்க போல” அவன் சரியாக கணித்துச் சொல்ல, நெடுமாறன் சத்தமாகவே சிரித்து விட்டார்.

“பரவால்ல அரவிந்த், நீயும் புத்திசாலிதனமா யோசிக்க ஆரம்பிச்சிட்ட போல” என்றவர், “சும்மா ஒரு என்டர்டெயின்மென்ட்காக தான், ரெண்டு பொண்ணுங்க நடுவுல நீ சிக்கிட்டு சின்னாபின்னமாகறதை கண்குளிர பார்க்கலாம்ற ஒரு ஆர்வம் தான்” என்று மேலும் கிண்டல் செய்ய, அரவிந்த் அவரை வெளிப்படையாகவே முறைத்தான்.

அர்ச்சனா சங்கடத்தோடு அஞ்சலி கொடுத்த உடையை மாற்றிக்கொண்டு வெளியே வந்தாள். புத்தாடை என்று சொல்லி தான் அஞ்சலி கொடுத்து இருந்தாலும் ஏனோ இவளுக்கு ஒப்பவில்லை. வேறுவழியின்றி தான் அணிந்து வந்தாள்.

கணப்படுப்பின் முன் அஞ்சலி ஒற்றை நாற்காலியில் அமர்ந்து இருக்க, அர்ச்சனா குளிருக்கு இதமாக, நெருப்பின் அருகில் சோஃபாவின் ஓரத்தில் அமர்ந்து கொண்டாள். இருவரும் பேசிக் கொள்ளவதாக இல்லை. தங்கள் யோசனையில் இருந்தனர்.

அரவிந்த் அறைக்குள் நுழைய, இருவரும் ஒரே வேகத்தில் எழுந்து நின்றனர். அவன் திகைத்த பார்வை இரு பெண்களிடமும் அலையாடி, அர்ச்சனாவிடம் பதிந்து நின்றது.

பாதி இருள் போர்த்திய அந்த அறை வெளிச்சத்தில், டைட் ஜீன்ஸ், குர்தி வகை டாப்ஸில், நீளக் கூந்தல் விரிந்து இருக்க, இவன் பார்வைக்கு அவள் புதுமையாக தெரிந்தாள். அதுவும் அஞ்சலியின் உடை அவளுக்கு கச்சிதமாக பொறுந்தி இருப்பதை வியப்பாகவே அளவிட்டு கொண்டான்.

முன்பே மனக்கலக்கத்தில் இருந்தவனுக்கு இருளும் அந்த இரு பெண்களின் உருவங்களும் மாறி மாறி காட்சி பிழையாய் தோன்றி சுழன்றிட, அவன் தலையில் விண்ணென்று வலி தெறித்தது. தனக்கு என்ன நேர்கிறது என்று தலையைக் குலுக்கிக் கொண்டான். 

மின்சாரம் திரும்பிவிட, அந்த அறை‌ இப்போது முழு ஒளி காட்டியது. இப்போது தான் அவனுக்கும் சற்று ஆசுவாசமானது.

“இன்ஸ்பெக்டர் ஏன் இங்க வந்திருக்கார் அரவிந்த்? மறுபடி ஏதாவது பிரச்சனையா?” அஞ்சலி துணுக்குற்று வினவ,

“அதையெல்லாம் பத்தி அப்புறம் விளக்கமா பேசலாம். எங்களுக்கு கொலை பசி, முதல்ல வாங்க சாப்பிடலாம்” நெடுமாறன் அங்கே வந்து சொன்ன விதத்தில், அரவிந்த், அஞ்சலி முகத்தில் புன்னகை பரவியது. அர்ச்சனா இன்னும் அவன் மேல் கோபம் விலகாமலேயே இறுக்கமாக நின்றிருந்தாள்.

“அதானே சார், நமக்கு சோறு தான முதல்ல, மத்ததெல்லாம் அப்புறம் தானே” என்றவன், “வாங்க சார், ஜெல்லி, சனா நீங்களும் வாங்க” என்று அவர்கள் இருவருடனும்‌‌ சேர்ந்து முன் நடக்க, 

அவன் கரத்தை பற்றி நிறுத்திய அஞ்சலி, குதிகாலூன்றி எக்கி, அரவிந்த் கன்னத்தில் இதழ் பதித்து விலகிக் கொண்டாள்.

“ஃபர்ஸ்ட் அன் லாஸ்ட் டா, இனி என்னால உனக்கு எந்த டிஸ்டபன்ஸும் வராது” என்று உறுதி தந்த அஞ்சலி அவனை கடந்து சென்றாள்.

அவளின் இதழ் தீண்டலின் அதிர்ச்சியை விட, அர்ச்சனா பார்த்து விட்டாளோ என்ற பயம் தான் அதிகமானது அவனுக்கு. மிரண்டு திரும்பி பார்த்தான். 

இவன் மீது இருக்கும் தீரா கோபத்தில் அர்ச்சனா இவனை கண்டுகொள்ளாது வேகமாக முன் சென்று விட்டிருந்தாள். அரவிந்த் அதுவரை இழுத்து பிடித்திருந்த மூச்சை வெளிவிட்டான்.

இந்த இரு பெண்களுக்கிடையே மாட்டிக் கொண்டு தலையைப் பிய்த்துக் கொள்ளும் நிலைமை அவனுக்கு. இக்கணம், காதலென்ற மூன்றெழுத்து சொல்லை மொத்தமாக வெறுத்து, சபித்துக் கொண்டான்.

அனைவரும் இரவு உணவை முடித்து, கணப்படுப்பின் எதிரே அமர்ந்தனர். மழை சற்று மட்டுப்பட்டிருந்தது.

நெடுமாறனும் அரவிந்தும் தான் வழக்கைப்பற்றிய அலசலில் இருந்தனர். அஞ்சலி, அர்ச்சனா அவர்கள் பேசுவதை கவனித்தப்படி அமைதியாகவே உட்கார்ந்து இருந்தனர்.

அர்ச்சனாவிற்கு இவர்கள் பேச்சு எப்போது முடியும் என்றிருந்தது. இங்கு வந்ததில் இருந்து அரவிந்திடம் பேச முடியவில்லை. அவன் சொல்லாமல் கொள்ளாமல் ஒடிவந்திருக்க, உச்சந்தலை வரைக்கும் அவன்மீது கோபம் கொப்பளித்து கொண்டிருந்தது இவளுக்கு. ஆனால் அதற்கான தனிமை தான் அவளுக்கு அமையவில்லை. அரவிந்த் பார்வை இவளிடம் பதிந்து மீளும் போதும் ஆத்திரமான எதிர் பார்வையை தான் பார்த்து வைத்தாள். ஆனால் அவன் தான் அதை பெரிதாக கண்டு கொண்டதாக தெரியவில்லை. அதற்கும் அவன் மீது ஆத்திரம் கூடியது இவளுக்கு.

வெளியே ஏதோ பலத்த சத்தம் கேட்க, அதனோடு மறுபடி மின்சாரமும் தடைப்பட, அனைவரும் மிரண்டு எழுந்துக் கொண்டனர். கணப்படுப்பின் ஒளி மட்டுமே அந்த அறையில்.

“சனா அந்த டேபிள் மேல கேண்டில் இருக்கு ஏத்தி விடு” என்றவன். அறையின் வெளியே வந்து,‌ “மருது தாத்தா… என்ன சத்தம் அது? என்னாச்சு?” என்று குரல் கொடுக்க,

“தெரியலங்க தம்பி, நான் போய் பார்த்துட்டு வாரேன்” அவர் பதில் குரல்‌ கேட்டு இவன் திரும்பினான்.

“அர்ச்சனா ஸ்டாப்” நெடுமாறன் வேக உத்தரவில், ஏற்றிய மெழுகுவர்த்தியை கையில் பிடித்தபடி நகராது அவரை மிரண்டு பார்த்தாள்.

நெடுமாறனின் பார்வையில் தெரிந்த கூர்மையில் அரவிந்தும் அவளைப் பார்க்க, அர்ச்சனாவின் மீது சிவப்பு வண்ண ஒளி புள்ளி குறி பட்டு நகர்ந்தது.

“டௌன் அர்ச்சனா… எவ்ரீபடி கெட் டௌன்” நெடுமாறன் கத்த, புரியாது தாமத்தித்து நின்ற அர்ச்சனாவை கீழே தள்ளி, அரவிந்தும் அவளுடன் தரையில் படுத்துக் கொண்டான். அஞ்சலியும், நெடுமாறனும் தரையோடு‌ ஒட்டி படுத்துக் கொண்டனர்.

அடுத்த நொடி பெரிதாக சத்தமின்றி கண்ணாடி ஜன்னலை துளையிட்டு பாய்ந்த இரு துப்பாக்கி குண்டுகள் எதிர்புறம் சுவற்றில் புதைந்து கொண்டன.

அடுத்த சில நிமிடங்கள் எங்கும் திக்திக் அமைதி நிலவ, நெடுமாறன் தன் கைத்துப்பாக்கி எடுத்து கொண்டு, “அரவிந்த் பின் பக்கம் போக எந்த வழி? கமான் ஃபாஸ்ட்” என்று எழுந்து வெளியே ஓட, “ரெண்டு பேரும் ஜாக்கிரதையா இருங்க” என்று அரவிந்தும் அவரோடு வெளியே ஓடினான்.

“அரவிந்த் போகாத, அவன்கிட்ட துப்பாக்கி இருக்கு” அர்ச்சனா பதறி அவனை தடுக்க போக, “நில்லு அர்ச்சனா…” அஞ்சலி அவளை தடுத்து பிடித்து கூடத்திற்கு இழுத்து வந்தாள்.

****

மாளிகையின் பின்புறம் அதிகமான மரங்களும் செறிந்து வளர்ந்த புற்களும் செடிகளும் மண்டிக் கிடந்தன. மழை விட்டும் ஊசி தூறல்கள் தூறி கொண்டிருக்க, ஈரமான மண் தரை வழுக்க வேறு செய்தது.

ஒரு கையில் டார்ச்,‌ மறுகையில் துப்பாக்கியோடு நெடுமாறன் கவனமாக நடந்தார். அரவிந்த் கையில் டார்ச்‌ மட்டுமே.

இவர்கள் இருவரும் கண்களை விட காதுகளை அதிகம் தீட்டி முன்னேறினர். மறைவான இடங்களில் டார்ச் வெளிச்சம் அங்கும் இங்கும் பாய்ந்து மீண்டது.

செடிகள் அசையும் சரசரப்பு கேட்க, அந்த திசையில் குத்து மதிப்பாக நெடுமாறன் குண்டுகளைப்‌ பாய்ச்சினார். இரண்டு குண்டுகள் பாய்ந்த பிறகு அவ்விடத்தில் எந்த அசைவும் இல்லை. அரவிந்தை அங்கேயே நிற்கும் படி சைகை காட்டி விட்டு அவர் அவ்விடம் சென்று பார்க்கலானார்.

ஈர மண்ணில் ஓடும் தப் தப் என்ற சத்தம்… அரவிந்தின் இடப்புறம் கேட்க, சட்டென திரும்பியவன் அங்கே ஓர் இருட்டு உருவம் தெரிய, வேகமெடுத்து அதை துறத்தி ஓடினான்.

அந்த உருவமும்‌ ஓடியது. ஆனால் சேற்று மண்ணில் வேகம் பிடித்து ஓட முடியவில்லை. அரவிந்த் அந்த உருவத்தை பின்னிருந்து பிடித்து கொண்டான். அந்த உருவம்‌ அவன் அழுத்த பிடியிலிருந்து லாவகமாக விலகி, அவனை கீழே தள்ளி விட்டு ஓடியது. 

நெடுமாறன் சுட்ட இடத்தில் மரநாய் ஒன்று குண்டடிப்பட்டு செத்து கிடக்க, அவருக்கு ஏமாற்றமானது. அவர்கள் சண்டையிடும் சத்தம் கேட்டு அங்கே இவரும் விரைந்தார்.

கீழே விழுந்து எழுந்த அரவிந்த் அதே வேகத்தில் அவன் மீது பாய்ந்து அவனை கீழே சாய்த்து, அவன் முகத்தை மறைத்திருந்த துணியை விலக்க முயன்றான். அதை தடுக்க அவனும்‌ முயன்றான். இருவரும் சண்டையிட்டு புரண்டனர்.

நெடுமாறன் இவர்களை நெருக்கி வருவது அந்த உருவத்தின் பார்வை வட்டத்தில் விழ, தப்பித்தாக வேண்டிய கட்டாயம் அவனுக்கு. அரவிந்த் கையை வாட்டமாக கடித்து வைக்க, வலியில் இவன் பிடி தளர்ந்தது. அவனை தள்ளிவிட்டு, ஒரே பாய்ச்சலில் பாய்ந்து குதித்து புதரில் மறைந்து போனது அந்த நெடு உருவம்.

அந்த புதரை நோக்கி நெடுமாறனின் அடுத்தடுத்த துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. 

கடிப்பட்ட கையை வலியில் உதறியபடி எழுந்த அரவிந்த், சண்டையில் கீழே விழுந்து கிடந்த டார்ச்சை தேடி எடுத்து கொண்டு அந்த‌ புதரை சுற்றி தேடலானான். நெடுமாறன் தேடலும் தொடர்ந்தது. இருவருக்கும் பூச்சி காட்டி விட்டு, அந்த உருவம்‌ மறுபடி மாயமாகி இருந்தது!

****

அஞ்சலியின் பிடியை ஆவேசமாக உதறிவிட்ட அர்ச்சனா, “என்னை ஏன் தடுக்கறீங்க? அரவிந்த்க்கு ஏதாவது ஆனா உங்களுக்கு சந்தோசமா?” என்று பதறினாள்.

“அவனுக்கு எதுவும் ஆகாது அர்ச்சனா, நீ அவங்க கூட போன உனக்கு தான் ஆபத்து” அஞ்சலி அவளுக்கு புரிய வைக்க முயல,

“எதிரி கைல துப்பாக்கி இருக்கு, அங்க எத்தனை பேர் இருக்காங்கனு கூட தெரியல, இந்த மழையில, அதுவும் இருட்டுல, தெரியாத இடத்தில, எப்படி அவனுக்கு ஆபத்தில்லாம போகும்?” அர்ச்சனாவின் பதற்றம், பயம் அஞ்சலிக்கும் புரிந்ததால் அமைதியாக இருந்தாள்.

“உங்களுக்கு நீங்க முக்கியம், உங்க உயிர் மட்டும் தான் முக்கியம், மத்தவங்களுக்கு என்ன ஆனாலும் பரவாயில்ல அதான?”

“…”

“உங்களுக்கு கிடைக்காத அரவிந்த் செத்து தொலைஞ்சாலும் உங்களுக்கு பாதகமில்லல?” கோபத்திலும் பதற்றத்திலும் அர்ச்சனா ஆவேசமாக பேசி செல்ல,

“என்ன பேசற அர்ச்சனா நான் அப்படி நினைக்கல” அஞ்சலி துவண்டு பதில் சொன்னாள். 

அவர்களுக்கு பாதுகாப்பாக இரண்டு கான்ஸ்டபிள் மற்றும் மருதாண்டி தம்பதியரும் அங்கு தான் இருந்தனர். அவர்களுக்கு முன் தான் அர்ச்சனா ஆத்திரமாக பேசிக் கொண்டிருந்தாள்.

அரவிந்த் மீதிருந்த அக்கறையில் வரும் வார்த்தைகள் தான் என்றாலும் அஞ்சலியை காயப்படுத்த தவறவில்லை.

வெளியே துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்க இருபெண்களும் பதறி பின் பக்கம் ஓட, கான்ஸ்டபிள் அவர்களை தடுத்து நின்றனர்.

செய்வது ஒன்றுமில்லாது போக, இரு பெண்களும் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டனர். இருவரின் கண்களும் பரிதவிப்பில் கலங்கி இருந்தன. அவர்கள் மனங்களும் தான்.

கிட்டத்தட்ட முக்கால் மணிநேரம் கழித்து, அரவிந்த், நெடுமாறன் வெறுங்கையோடு திரும்பி வந்தனர். 

அர்ச்சனா பதற்றத்தோடு முன்வந்து அரவிந்தைப் பார்க்க, உடல் முழுவதும் சேற்றை பூசிக்கொண்டு வந்திருந்தான் அவன். “என்ன இப்படி வந்திருக்க, ஏதாவது அடிப்பட்டு இருக்கா?” அவள் பரிதவிப்போடு அவனை நெருங்க, அரவிந்த் விலகி நின்றான்.

“எனக்கு ஒன்னுல்ல சனா, சேறா இருக்கேன், இரு வாஷ் பண்ணிட்டு வந்து பேசலாம்” என்று நெடுமாறனிடம் தலையசைத்து விட்டு உள்ளே சென்றான்.

“அந்த கொலகாரன் செத்துட்டானா… துப்பாக்கி சத்தம் கேட்டுச்சே” மருதாண்டி தான் ஆர்வமாக கேட்டார்.

“ப்ச் இல்ல, தப்பிச்சுட்டான்” என்று தோய்வாக சொன்னவர், அஞ்சலியைப் பார்க்க, அவள் ஏதோ போல கலங்கி அமர்ந்து இருந்தாள்.

“அந்த கொலைகாரன் எப்படி இங்க வந்தான்? சரியா வழி தெரியாம இங்க யாரும் வரமுடியாது சார்?” மருதாண்டி மேலும் சந்தேகமாக வினவ, அங்கிருந்த மற்றவர்கள் யோசனையிலும் அதே சந்தேகம் தான் ஓடிக் கொண்டிருந்தது.

ஒருவனுக்கு மட்டும் உண்மை பளிச்சிட்டது. 

அன்றைய இரவு எப்படியோ கழிந்திருந்தது அவர்களுக்கு. விடிந்ததுமே அனைவரும் கிளம்பி விட்டனர். இனி அஞ்சலி இங்கிருப்பதில் எவ்வித பாதுகாப்பும் இல்லை என்றானதால் இந்த முடிவு.

இக்கட்டான மனநிலைக்கு நடுவே இந்த ஒருவாரம் இதம் தந்த, இயற்கை தோழியிடம் விடைபெறவும் யோசனை இன்றி அஞ்சலி கிளம்பி விட்டாள். மனமே இல்லாமல் வழி அனுப்பிய மருதாண்டி, தங்கம்மா பெரியவர்களிடம் கூட அவள் எதுவும் பேசவில்லை. விடைபெறவும் இல்லை. 

அவள் மறுபடி தனக்குள் ஒடுங்கி விட்ட நிலை அரவிந்தை கவலை கொள்ள செய்வதாய். 

மறுபுறம் அர்ச்சனாவும் கலக்கத்தில் இருந்தாள். நேற்றிரவு நேர்ந்த சம்பவத்தின் தாக்கத்தில் அரவிந்த் மீதிருந்த கோபமும் ஆத்திரமும் முழுதாக வடிந்து போயிருந்தது அவளுக்கு. பதற்றமும் பயமும் அதிகரித்து இருந்தது.

காவலர் வாகனம் முன்னே செல்ல, இவர்கள் மகிழுந்து பின் ஊர்ந்தது. காரின் பின்னிருக்கையில் அஞ்சலி‌ கண்கள் மூடி அமர்ந்திருக்க, முன்னிருக்கையில் அரவிந்த் உடன் அர்ச்சனா அமர்ந்திருந்தாள். இரு பெண்களின் மனநிலையை கணிக்க முயலாத அரவிந்தும் தன் திண்டாட்டத்தில் அமைதியாகவே காரோட்டி வந்தான்.

நிஜம்‌ எப்போதுமே மாறுவதில்லை,‌ நிழல்கள் மட்டுமே தெரிந்தும்‌ மறைந்தும்‌ மாயம் காட்டக் கூடியன!

****

நிஜம் தேடி நகரும்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!