நீயில்லை நிஜமில்லை 23(1)
நீயில்லை நிஜமில்லை 23(1)
நீயில்லை நிஜமில்லை 23(1)
மூச்சடக்கி முக்தி எய்திட
துணிகிறேன்,
நீயின்றி போன நிஜத்தை
மீட்டு வர…!
“என்னைவிட உயரம், உடம்பு இரும்பு மாதிரி அவ்வளோ ஸ்ராங்கா இருந்தது. முப்பதுல இருந்து நாற்பதுக்குள்ள வயசு இருக்கும்னு நினைக்கிறேன்… ஆனா, எனக்கு வேறொரு டவுட் இருக்கு…” தான் சண்டையிட்ட மனிதனை பற்றிய அடையாளங்களை முயன்றவரை விளக்கிக் கொண்டிருந்தான் அரவிந்த்.
“என்ன டவுட்?” நெடுமாறன் கேட்க,
“அவனோட பாடி லேங்குவேஜ் சம்திங் டிஃபிரன்ட்… அது டிரான்ஸ்ஜென்டரா இருக்குமோனு… ஐ’ம் நாட் ஷுவர்”
அரவிந்த் சொல்லவதை வைத்து எந்த முடிவுக்கும் வர முடியாமல் நெடுமாறன் குழம்பினார்.
“தொரை நீ போன விசயம் என்னாச்சு?” அவரின் கேள்வி துரைசாமியிடம் திரும்பியது.
“பெரியநாயகி குடும்பம் தங்கி இருந்த ஊரை கண்டுபிடிச்சு விசாரிச்சேன். அந்த அம்மாவுக்கு பையன் மட்டுமில்ல ஒரு பொண்ணும் இருந்திருக்காங்க, பெரியநாயகி, அவரோட பையன், பொண்ணு, மருமகன் நாலு பேருமே அந்த தாக்குதல்ல கொடூரமா கொலை செய்யப்பட்டு இருக்காங்க…”
துரைசாமி தான் விசாரித்ததை சொல்ல,
“பெரியநாயகிக்கு பெண் குழந்தை கூட இருந்ததா?” நெடுமாறன் அதை குறித்துக் கொண்டார்.
“ஆமா சார், அதோட வீட்ல இருந்த குழந்தையை கூட விடாம, கிணத்தில் வீசிட்டு போயிருக்காங்க… கேள்வி படும்போதே கஷ்டமா இருக்கு சார்… ரொம்ப கொடூரம்” துரைசாமி வருத்தமாக சொல்லி முடித்தார். கேட்டு கொண்டிருந்த இரு ஆண்களுக்கும் கூட இதயம் கனக்கத்தான் செய்தது.
“ம்ம் அஞ்சலியை டார்கெட் பண்ணி இறந்து போன லாரி டிரைவர் பத்தி தகவல் கிடைச்சிருக்கு. இதுல சுவாரஸ்யமான தகவல் என்னனா?
செத்துபோன பெரியநாயகியோட பையன் தான்தான்னு பொய் சொல்லி அரண்மனையில தகராறு செஞ்சவன் அந்த டிரைவர் தான்னு, காதம்பரி மேடம் அவனோட ஃபோட்டோ பார்த்து அடையாளம் காட்டி இருக்காங்க…” தான் சேகரித்த தகவல்களை சொன்னார் நெடுமாறன்.
“அப்ப அந்த டிரைவர் சம்மந்தப்பட்டவங்கள விசாரிச்சா முழு உண்மை தெரிய வரும் சார்” துரைசாமி உற்சாகமானார்.
குழம்பி கிடந்த வழக்கில் ஒவ்வொரு முடிச்சுகளாக அவிழ்வது அவருக்கு உற்சாகத்தைக் கூட்டியது.
“ம்ம் அந்த டிரைவருக்கு கிளோஸ் ஃப்ரண்ட்டு ஒருத்தன் இருந்தானாம், அவனை பிடிச்சு விசாரிக்கனும்” நெடுமாறன் ஆணையிட, “அவன் எங்க இருந்தாலும் கையோட கொண்டு வரேன் சார்” துரைசாமி விரைப்பாக சல்யூட் வைத்தார்.
“எனக்கும் ஒருத்தர் மேல சந்தேகம் சார்…” அதுவரை அமைதியாக இருந்த அரவிந்த் சொல்ல, இருவரின் பார்வையும் அவனிடம் திரும்பியது.
அரவிந்த் தான் சந்தேகிக்கும் நபரை பற்றி சொல்ல, மற்ற இருவர் முகத்திலும் அதிர்ச்சி!
“வெறும் சந்தேகத்தை மட்டும் வச்சிட்டு ஒன்னும் பண்ண முடியாது. உன்னால நிருபிக்க முடியுதான்னு பாரு” என்ற நெடுமாறன் அரவிந்தை ஆதங்கமாக உசுப்பிவிட்டார்.
அவனும் ஒரு முடிவுடன் அவர்களிடமிருந்து விடைப்பெற்று கிளம்பினான்.
நேற்றைய சம்பவம் அரவிந்தை வெகுவாக பாதித்து இருந்தது. தன் கையில் மாட்டிய கொலைக்காரனை தவற விட்டதை இழுக்காக கருதினான்.
அவன் யோசிக்க யோசிக்க மர்மங்கள் எல்லாம் ஏதோவொரு நூலில் கோர்த்து இருப்பதாக தோன்றியது. அவன் கண்முன்னே எக்கச்சக்க நூல்கள் ஒன்றோடொன்று சிக்கலாக பின்னியிருக்க, பிரச்சனைக்கான அந்த ஒற்றை நூலை மட்டும் தேர்ந்து கண்டறிவது சவாலான செயல்.
இதுவரை அவன் அறிவை மறைத்திருந்த ஒவ்வொரு மாயையும் விலக விலக, அவனுக்குள் யாரை நம்புவது என்ற அதிர்ச்சியும் உண்மையைக் கண்டறிந்தே ஆக வேண்டும் என்ற வேகமும்.
நெடுமாறன், துரைசாமி விசாரனை தலையைச் சுற்றி மூக்கை பிடிக்கும் வேலை என்று தோன்றியது. தன் சந்தேகம் மட்டும் உண்மையானால்…?!
அதற்கு மேல் இப்போது சிந்தித்து குழப்பி கொள்ள விரும்பவில்லை அவன்.
ஒன்றை ஆராய்ந்து உண்மை கண்டறிய, அதன் தொடக்கத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும். அவனுக்கு தொடக்கப்புள்ளியாக தோன்றியது அரண்மனையில் எடுபிடி வேலை செய்யும் பொண்ணுக்குட்டியின் வாக்குமூலம் தான்.
பொண்ணுக்குட்டியை தனியாக அழைத்து அரண்மனைக்குள் விஷம் வந்த அன்றைய நாளில் நிகழ்ந்தவற்றை ஒவ்வொன்றாக நினைவுபடுத்திச் சொல்ல சொன்னான்.
அரவிந்திடம் சொல்ல பொண்ணுக்குட்டிக்கு பயமோ தயக்கமோ இருக்கவில்லை. அன்றைய நாளில் நடந்தவற்றை விரிவாகவே சைகையில் சொன்னாள். அவளின் சைகை மொழியை புரிந்து கொள்வது சற்று சிரமமாக இருந்தாலும், இவனுக்கு புரிந்ததை திருப்பி அவளிடமே சொல்லி சரிதானா என்று தெளிவுப்படுத்திக் கொண்டான்.
அவள் சொன்ன ஒரு விசயம் அவன் சந்தேகத்தை உறுதிபடுத்துவதாகவே அமைந்தது.
அரவிந்தின் அலைபேசி சிணுங்க, எடுத்து பார்த்தான். திரையில் ‘சனா’ பெயர் ஒளிர்ந்தது.
இவன் அழைப்பை எடுக்கவில்லை. அர்ச்சனாவை சமாதானப்படுத்த இப்போதைக்கு அவனுக்கு நேரமில்லை. ‘கால் யூ லேட்டர்’ என்ற குறுஞ்செய்தியைத் தட்டிவிட்டு, அடுத்த ஆளை தேடிச் சென்றான்.
****
பூஜை அறையில் அம்பிகை விக்ரகம் முன்பு அமர்ந்து நெக்குருகி இறைவன் திருநாமத்தை ஜபித்தபடி இருந்தார் திரிபுரசுந்தரி. இப்போதெல்லாம் அதிகநேரம் அவர் பூஜை அறையில் தான் கழிக்கிறார். தன் பேத்தி நீண்ட ஆயுளோடு வாழ.
அரவிந்த் அவரின் எதிரில் வந்து அமர்ந்தான். கைகூப்பி இறைவியை வணங்கிவிட்டு இவரிடம் திரும்பினான்.
இந்த சில மாதங்களில் அவரின் மூப்பு அதிகம் கூடி தெரிந்தது.
“பாட்டிம்மா” அவன் அழைப்பில் நிமிர்ந்தார்.
“உங்ககிட்ட ஒரு விசயம் தெரிஞ்சிக்க வந்தேன், நீங்க எதையும் மறைக்காம உண்மைய மட்டும் சொல்லனும்” அரவிந்த் கேட்க, அவர் முகம் தோய்ந்தது. தலையசைத்தார்.
“பெரியநாயகி அம்மா குடும்பத்தை பத்தி சொல்லுங்க, உங்களுக்கு தெரிஞ்ச சின்ன விசயமா இருந்தாலும் ஒதுக்காம சொல்லுங்க.”
அதனை நினைத்தே உடலளவிலும் மனதளவில் தளர்ந்து குமுறிக் கொட்டிக்கிடக்கும் திரிபுரசுந்தரி சோர்வாகவே பேசினார்.
“நிசமா அந்தம்மா பத்தி எனக்கு எதுவுமே தெரியாது பா… அவங்கள நான் பாத்தது கூட இல்ல. அவங்க கருப்பா, சிவப்பா, நெட்டையா, குட்டையானு கூட தெரியாது. அவருக்கு அந்தம்மா பேரெடுத்தாலே புடிக்காது. அதால நானும் கேட்டுகிட்டதில்ல.
ஆனா ஒருநாள் அவரே அந்தம்மா பத்தி என்கிட்ட சொன்னாரு…
அஞ்சலி தாத்தா முதல்ல ஆரம்பிச்ச எந்த தொழிலும் துலங்கி வரக்காணோம். அப்போ தான் யாரோ பெரியவரு, குடும்பத்து மகாலட்சுமி பேருல தொழில் தொடங்கினா துலங்கும்னு சொல்லி இருக்காரு. அப்படி தான் அவங்க புது பொஞ்சாதி பெரியநாயகி பேர்ல இப்போ இருக்க தொழில தொடங்கி இருக்காங்க… அந்தம்மாவும் இவரு கேட்ட பத்திரத்துல எல்லாம் கையெழுத்து போட்டு கொடுத்து விட்டிருக்கும் போல. தொழிலும் அமோகமா துலங்கி நல்ல லாபம் தந்திருக்கு. அப்புறம் ஏதேதோ நடந்து அவங்க பிரிஞ்சு என்னையும் கட்டிகிட்டாங்க… அதை பத்தி அவங்களே மறந்துட்டாங்க போல…
காதம்பரிக்கு வீட்டோட மாப்புள்ள தான் வேணுமுன்னு பிரபாகர் மாப்பிள்ளைய தேடி புடிச்சு தான் கட்டிவச்சாரு. ஆனா, நாள் போக்குல வீட்டோட மாப்புளன்னு இளப்பம் வந்துடுச்சு. அவருக்கு மருமகன்னு இவரு மரியாதை எதையும் கொடுக்கறதில்ல. இதனால மாமனாருக்கும் மாப்பிள்ளைக்கும் அடிக்கடி முட்டிக்கும்… கம்பெனிலயும் மாப்பிள்ளைக்கு உரிய மரியாதை கிடைக்காம போச்சு போல. இதை காதம்பரி பொறுத்துக்கல, அவங்க அப்பாருகிட்ட சண்டைக்கு நின்னுச்சு, எங்களுக்கும் சமமான மரியாதை வேணும், கம்பேனில சம அங்கிகாரம் வேணும்முன்னு கேட்டுச்சு…
மக பேச்சை அவங்களாலும் மறுக்க முடியல, மருமகன் பேர்ல கம்பெனிய சேக்கவும் மனசில்ல, அதனால கப்பேனி முழு உரிமையும் பேத்தி அஞ்சலி மேல எழுதறதா சொன்னாரு. இதுல காதம்பரிக்கும் சம்மதம். கம்பேனி உரிமைய தாத்தன் பேருல இருந்து பேத்தி பேருக்கு மாத்தி எழுத சொன்னபோது தான் கண்டிப்பா பெரியநாயகி கையெழுத்து வேணும்னு சொல்லிட்டாங்க. அவங்க கையெழுத்து இல்லனா சட்ட சிக்கலாகிடும்கிற நிலைம… முப்பது முப்பத்தஞ்சு வருசம் கழிச்சு அந்தம்மா பத்தி விசாரிக்க இவக ஆளுனுப்புனாக… மாச கணக்கா எந்த சரியான தகவலும் வரவேயில்ல…
அடுத்த வருசமே கம்பேனிய அஞ்சலி பேருக்கு மாத்தி எழுதி வச்சுட்டாங்க… நான் ‘எப்படி? அந்தம்மா கிடைச்சதா? கையெழுத்து போட்டுச்சானு கேட்டேன்?’ அதுக்கு அவரு… ‘செத்து போனவ வந்து கையெழுத்து போட வேண்டிய அவசியமில்ல’னு சொல்லிட்டாரு.
அவரு அப்ப சொன்ன விதமே எனக்கு சரியா படல அரவிந்தா… அவரு குணங்கெட்டவரு. எதுலையும் மூர்க்கதனமா தான் நடந்துக்குவாரு. அப்படி அந்தம்மாவ ஏதாவது பண்ணிட்டாரோ? அந்த பாவத்தோட மிச்சம் தான் என் பேத்திய சுத்துதோனு பயமா இருக்கு பா” என்றவர் கண்கள் கலங்கி, சுருக்கம் விழுந்த கன்னத்தில் கண்ணீர் பெருகியது.
“இந்த விசயத்தை நீங்க அன்னிக்கு போலீஸ்கிட்டயும் சொல்லி இருக்கலாம் பாட்டிம்மா?” அரவிந்த் சொல்ல,
“எதுவும் தெரியாம நான் என்னத்த சொல்றது… இப்பதான் கடந்தது எல்லாம் நினப்புல வந்து மருகிட்டு கிடக்கேன். ஆண்டவன தவிர வேற கதியில்ல… என் புருசன் எந்த பழிபாவம் செஞ்சு இருந்தாலும் பலியா என் உசுரை எடுத்துக்கிட்டு என் பேத்தி உசுரை காப்பாத்தி கொடுனு தான் தினம் தினம் வேண்டிட்டு இருக்கேன்” என்று கலங்கினார் அவர்.
அரவிந்த் அதற்கு மேல் எதுவும் கேட்கவில்லை. அதிர்ந்த யோசனையோடு அங்கிருந்து நேராக அவர்கள் நிறுவனத்திற்கு விரைந்தான். அங்கே சேகரிக்க வேண்டிய தகவல்கள் மிச்சம் இருந்தன.
****
கையில் இருந்த கடைசி மாத்திரையையும் விழுங்கி முடித்திருந்தாள் அஞ்சலி.
ஒருபுறம் நிறைவும் மறுபுறம் பாரமும் சேர்ந்த நிலை…
தன்னைவிட்டு தன்னை பிரித்துக் கொண்டாள்…
யாரோ ஒருவன் கையால் கொடூரமாக உயிர் துறக்க வேண்டயதில்லை. தனக்கான இறப்பை சுலபமான வகையில் ஏற்றுக் கொள்ள துணிந்தாள்.
தொழிலில் இவளுக்கு பெரிதாக ஆர்வமிருந்தது இல்லை. அம்மா, அப்பாவின் உந்துதலில் தான் செயலாற்றிக் கொண்டிருந்தாள். அலைபுறுதலான இந்த மனநிலையில் அவள் பற்றி கொள்ள எந்த பிடிப்பும் அற்று போனது பரிதாபம் தான்.
இனி தான் வாழ்வதில் அர்த்தமில்லை என்ற விரக்தியின் இறுதி நிலை இது…
கலையாத அவன் நினைவுகளில் தன் நேசத்தை குழைத்து இவள் ஏற்றி வைத்த மாளிகை சரிந்திட்ட, அவன் கைவிட்டு போன அந்த நொடியே, அவளுக்கு வாழ்க்கையின் மீதிருந்த பிடிப்பும் அற்று போயிருந்தது.
அவனுக்காக மட்டுமே நேசம் வளர்த்தவள், அவனோடு கலந்தாடவே கனவுகள் சேமித்தவள், இவள் நேசத்தை அவன் தூக்கி எறிந்த நொடியே இவளும் வீழ்ந்து விட்டிருந்தாள்.
காலம் நீளும் மட்டும் தன்னவனுடன் கவிதையாய் வாழ பேராசை கொண்டிருந்தவள், இனி அவனற்ற வெறுமையான தன் வாழ்க்கை பக்கங்களை புறட்டவும் துணிவின்றி மொத்தமாய் மூடி வைத்து விட்டாள்.
சற்று சோர்வு தட்டியது அவளுக்கு. உடலின் புழுக்கம் கூடுவதாக தோன்றியது.
மெதுவாக எழுந்து சென்று பால்கனியில் நின்றாள். பூமரக்கிளை கைகள் வருடாத பால்கனி மாடம் அவளை மேலும் வெறுமை ஆக்குவதாய்.
போர்டிகோவில் அரவிந்த் தன் வண்டியை உயிர்ப்பித்து வெளியே விரைந்து செல்வது இவள் பார்வையில் பட்டது. அவனை பார்க்க வேண்டும் என்று எண்ணவில்லை. ஆனாலும் பார்த்து விட்டாள். மகிழ்வதா? கலங்குவதா? புரியவில்லை!
உடல் தள்ளாடியது. உள்ளே வந்து கட்டிலில் படுத்துக் கொண்டாள். நேற்றிலிருந்து அரவிந்திடம் ஒரு தீவிரத்தை கவனித்து கொண்டு தான் இருக்கிறாள். அந்த கொலையாளி பற்றி ஏதோ துப்பு கிடைத்திருக்கிறது போல என்று எண்ணிக் கொண்டாள். இனி அவனை தேட வேண்டிய அவசியமில்லை என்று சோர்வாக சிரித்துக் கொண்டாள்.
அன்றைய மழை இரவில் தான் உளறி கொட்டியதும், அவன் தன்னை நெருங்கி வந்தததும் நினைத்து பார்க்க, இப்போதும் மனம் சுட்டது. மனதை பகிர்ந்து கொள்ளாமல் வெறும் இதழ் முத்தம் பகிர்ந்தால் மட்டும் காதலாகுமா என்ன? ‘அவனுக்கு அத்தனை புரிதல் இல்லை’ தலையாட்டிக் கொண்டாள்.
‘தானும் நிலைபிழன்று அப்படி உளறி கொட்டி அவனை பலவீனமாக்கி இருக்க கூடாது’ என்று தன்னையும் நொந்து கொண்டாள்.
இனி எந்த நோவும் இல்லை. எந்த வாழ்வும் இல்லை. அவளின் கண் இமைகள் தன்னால் சொருகி அமிழ்ந்தன. முடிவற்ற ஆழத்திற்குள் மெதுமெதுவாய் நழுவிக் கொண்டிருந்தாள்…
****
நிஜம் தேடி நகரும்…